Sunday, May 08, 2005

சாதீஈஈயம்

பிறை ஆறு.


இதை ஒரு ‘இயம்’ ஆக்கிக் கதைப்பதே சரியா தெரியாது. ஆனால் அவ்வளவு தூரத்துக்கு முக்கியமானதுதான் இது. இங்கே சாதி பற்றிய என் அனுபவங்களைப் பகிர்கிறேன் அவ்வளவே. இது ஆராய்ச்சியோ அறிவுரையோ அன்று என்பதை முதலிற் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஏற்கெனவே தமிழோடு பட்டபாடு போதும். என் அனுபவங்கள் என்று சொல்லிவிட்டதால் நான் சார்ந்த தளத்தை மட்டுமே என்னாற் சொல்ல முடியும். எனவே அந்தத்தளம் இங்கே பலருக்குப் பிடிக்காததாயிருக்கலாம் என்பது எனக்குத் தெரியும்.

யாழ்ப்பாணத்தின் கிராமமொன்றுதான் என் சொந்த ஊர். எனது காலத்தில் சாதி ஒடுக்குமுறையென்பது என் கிராமத்தில் இருந்ததாக நினைவிலில்லை. ஆனால் வேறுபாடுகள் நன்றாகவே இருந்தன. மேல் சாதியென்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் எந்தச் சாதியும் இருந்ததில்லை. (இது என் கிராமத்துக்கு மட்டுமே பொருந்தும். வேறு இடங்கள் பற்றி அந்தச் சின்ன வயசில் எனக்குத் தெரியாது) ஆனால் குறிப்பிட்ட ஆக்கள் வீதியால் வரும்போது காவோலை கட்டி இழுத்து வரவேணும் என்ற நடைமுறை முன்பு இருந்ததாக என் பாட்டன் பரம்பரை சொல்லிக் கேள்விப்பட்டதுண்டு. என் காலத்தில் அது அறவே இருந்ததில்லை. ஏன் தந்தை காலத்திலும் அது இருந்ததில்லையாம்.

எங்கள் கிராமத்தில் எல்லாக் கிணறுமே குடிப்பதற்குப் பாவிப்பதில்லை. சமைப்பதற்குப் பாவித்தாலும், குடிப்பதற்குச் சில குறிப்பிட்ட கிணறுகளையே பாவித்தார்கள். (ஆனால் உண்மையில் எல்லாக் கிணறுமே குடிக்கக் கூடிய தண்ணீருள்ள கிணறுகள் தான். சுவைக்காகத்தான் இப்படி கிணறுக்கு அலைவது. தண்ணீருக்குச் சுவையில்லையென்று விஞ்ஞானம் பேசாதீர்கள். சுவையிருக்கிறது. இது எந்தக் கிணத்துத் தண்ணீரென்று என்னாற் சுவைத்துப்பார்த்துச் சொல்ல முடியும்.) முந்தி தண்ணீர் எடுப்பதில் சாதிச் சண்டைகள் வந்ததாம். ஆனால் என் காலத்தில் எல்லாருமே தண்ணீர் அள்ளினார்கள். குறிப்பாகக் கோயில் கிணறுகள் எந்த நேரமும் எல்லாருக்காகவும் இருக்கும். கோயில் வளவுக் கதவுகள் இரவிற்கூடப் பூட்டப்படுவதில்லை, தண்ணீர் அள்ளுவதற்காக. ஆனால் திருமணங்கள் என்று வரும்போது சாதி நிச்சயமாய்ச் சம்பந்தப்படும்.

தொழில் முறைமூலம் பிரிக்கப்பட்ட சாதி தொடர்ந்து வருவதற்கு மதங்களின் பங்கு அளப்பரியது. இன்னும் சாதியம் வேரூன்றி இருப்பதற்கும் மதங்களின் பங்களிப்பு முக்கியமானது என்பது என் கருத்து. நான் என் ஊரில் சாதி பற்றி அறிந்த கதை இதுதான்:

கரையார், பள்ளர், வேளாளர் என்று சனம் கதைப்பதைக் கேட்டிருக்கிறேன். ஒருநாள் என் தாயிடம் கேட்கிறேன்:
“அம்மா! கரையார், பள்ளர் எண்டா ஆரம்மா?”
என் தாய் எனக்களித்த பதில் இதுதான்.
“செவத்தியார் கோயில்காரர் பள்ளர், தொம்மையப்பர் கோயில்காரர் கரையார், அந்தோனியார் கோயில்காரர் வெள்ளாளர். இப்ப விளங்கீட்டுதோ?”
ஓமெண்டு தலையாட்டினன். தொழில்களைக் குறித்து எனக்கு சாதி சொல்லப்படவில்லை. அப்படிச் சொல்லியிருந்தால், ‘அப்ப உதில எந்தத் தொழிலும் செய்யாமல் அரசாங்க வேல மட்டும் பாக்கிற நாங்கள் என்ன சாதி?’ என்று கேட்டிருப்பேன் என்று என்தாய் நினைத்தாளோ தெரியாது.

இப்படித்தான் இந்து மதத்திலுமிருந்தது. சாதிக்கொரு கோவிலை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். நல்ல வேளை சாதிக்கொரு புனிதரை அல்லது கடவுளை வைக்கவில்லை. எங்களுரில் வெள்ளாளருக்கு இருக்கும் அந்தோனியார் பக்கத்து ஊரில் கரையாருக்கு. புனிதர்கள் தப்பித்தார்கள். தொழில்கள் மாறி எல்லாரும் தமக்கு வசதிப்பட்ட தொழில்களைச் செய்யத்தொடங்கிய பின்னும், ஏராளமானோர் அரசாங்க வேலையும் தனியார் வியாபார நிறுவனங்களிலும் வேலை செய்யத் தொடங்கிய பின்னும், இன்னும் அந்தத் தொழில்முறைச் சாதி பலமாக உயிரோடிருப்பதற்கு மதங்கள் முக்கிய காரணம்தான். நேரடியாகச் சாதி பற்றிப் பேச முடியாமல் இப்பிடித்தான் எங்களுரில் பேசிக்கொள்வார்கள். எடுத்துக்காட்டாக வேறோரு ஊரிலிருக்கும் ஒரு கரையாரைப் பற்றிப் பேசும்போது,
“அவயள் தொம்மையப்பர் கோயில் ஆக்களெல்லோ.”
எண்டு சொல்லுவினம். ஆனா அந்த ஊரில அப்பிடியொரு கோயிலே இருக்காது. எங்கட ஊர்க் கோயில வச்சே எல்லா இடத்து ஆக்களையும் குறிப்பினம்.

சொந்த ஊரிலயிருந்து 1992 இல இடம்பெயர்ந்து மானிப்பாயில வந்து இருந்தம். ஏராளமான சனம் மானிப்பாய்க்குத்தான் வந்தது. முதல் பள்ளிக்கூடங்களில எல்லாரும் கலந்து ஒண்டாத்தான் ஒரு பிரச்சினையுமில்லாம இருந்தவை. பிறகு அகதி முகாம்கள் அமைக்கப்பட்டன. பிரதானமா மூன்று முகாம்கள். இவற்றில் இரண்டு பெரிய முகாம்கள். அவற்றில் சாதி மதப்பிரச்சினையில்லாமல் எல்லாரும் ஒன்றாகவே இருந்தார்கள். அதில் தனியே ஓர் ஊரைச் சேர்ந்தவர்கள் என்றில்லாமல் எல்லாரையும் குடியமர்த்தினார்கள். இறுதிவரை பிரச்சினையில்லாமலிருந்தது. ஆனால் மூன்றாவதாக அமைக்கப்பட்ட முகாம் தான் சிக்கலைத் தந்தது. அதில் ஆக முப்பது வரையான குடிசைகள்தான். மிகச் சிறிய முகாம். ஆனால் அவ்வளவு பேரும் ஒரே ஊர் அக்கள். அதாவது என் கிராமத்தவர்கள். அதுவும் ஓரே மதத்தவர், ஆனால் இரு சாதிக்காரர். குடிசைகள் அமைக்கும்போதே பிரச்சினை தொடங்கி விட்டது. குடிசை ஒழுங்குகளை மாற்றித் தருமாறு பிரச்சினை. என்னவென்றால் தாங்கள் எல்லாரும் ஒன்றாக இருக்கப் போவதாக இரு தரப்புமே சொன்னார்கள்.

அந்த முன்று முகாம்களுமே மானிப்பாய் அந்தோனியார் கோவில் பங்கு நிர்வாகத்தின்கீழ்தான் இருந்தன. பங்குத்தந்தை இதை ஒப்பிவில்லை. எல்லாரும் கலந்துதான் இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாயிருந்தார். ஆனால் சில ‘பெரியவர்கள்’
“சுவாமி! உங்களுக்கேன் பிரச்சின. நாளைக்கு இதுகள் தங்களுக்க ஏதும் பிரச்சினப் பட்டா அது உங்களுக்குத்தானே இடைஞ்சல். பேசாம அவயள் சொல்லிற மாதிரியே விட்டிடலாம்.”
என்று சொல்லி சம்மதிக்க வைத்தாயிற்று. குடிசை ஒழுங்குகள் மாறின. ஒரே பாதை ஒரே ஒழுங்குமுறை என்று இருந்தும் முகாம் இரண்டாகவே இயங்கியது. திடீரென இடையில் வேலி முளைத்தது. இரண்டு பாதைகள் வந்தன. முகாமுக்கு இரண்டு நிர்வாகம் வந்தது. வெறும் முப்பது குடிசைகளுக்குள் ஊரில் நடந்த அத்தை கூத்துக்களும் நடந்தன. நல்ல வேளை பெரியளவு பிரச்சினைகள் வரவில்லை. மனத்தளவில்தான் அந்தப் பிரச்சனை.

ஆனால் யாழ் இடப்பெயர்வின் பின் வன்னிவந்தபின் இந்த நிலைமைகளில் மாற்றம் வந்தது உண்மை. தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் அவர்களை மாற்றிவிட்டதோ என்னவோ. இங்கே சாதிப்பிரச்சினை, வேறுபாடு முற்றாகக் களையப்பட்டதாக நான் சொல்ல வரவில்லை. யாழில் இருந்த நிலைமை நிரம்பவே மாறிவிட்டது. வன்னிக்குள்ளே கூட நிறைய இடப்பெயர்வுகள். இதிலே எதைச் சொந்தம் கொண்டாட முடியும்? அகதிகள் சம்பந்தமாக வேலை செய்தவன் என்ற முறையில் இந்த மாற்றங்களை என்னால் உறுதியாகப் பதிவு செய்ய முடியும். அகதிமுகாம்களில் பல காதல் திருமணங்கள் கூட நடந்ததுண்டு. எதிர்ப்புகள் இருந்தாலும் அதைப்பற்றிக் காதலர்கள் கவலைப்படவில்லை. தமிழீழக் காவல்துறை தான் அவர்களின் நம்பிக்கை. குடும்பம் நடத்தும் பொருளாதார பலம் இருக்கும் பட்சத்திலும் வயது சரியாக இருக்கும் பட்சத்திலும் காதல் கைகூடும். தமிழகத்திலும் இங்கேயும் காவல்துறைக்கு இது ஒரு முக்கிய பணிபோலும்.

ஒருவர் சொன்னார்:
"உவங்கள் ஒரே சாதிக்குள்ள அல்லது மதத்துக்குள்ள காதலெண்டா ஏனோ தானோவெண்டு இருப்பாங்கள். ஆனா சாதிமதம் மாறியெண்டா விழுந்தடிச்சு தலையில தூக்கிவச்சு ஆடுவாங்கள்.”
எனக்கு இந்தக் குற்றச்சாட்டு உண்மையாகப் படவில்லை. அவர்கள் காதலை ஆதரிக்கிறார்களா வரவேற்கிறார்களா என்பதைத் தாண்டி அதை அவர்கள் சாதி மதங்களை கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகப் பார்க்கிறார்கள் என்பது தெளிவு. பல போராளிகளின் திருமண பந்தம் இவற்றைத்தாண்டி நடந்ததால் சொந்த தாய் தந்தையரின் உறவுகூட இல்லாமல் இருப்பதும் நான் கண்டுள்ளேன். புலிகளின் திருமண முறைகூட (திருமணச் சடங்கு) இன்னும் பலரால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. தவிர்க்க முடியாமல்தான் அவற்றிற் கலந்து கொள்கிறார்கள்.

மதங்களின் ஆதிக்கத்தை மக்களிடத்திற் குறைப்பது முக்கியமானது. ஆனால் புலிகளாற்கூட அதைச் சரிவர செய்யமுடியவில்லை. 'இம்' என முன் பிரச்சனை வந்துவிடும். (ஆனால் மாவீரரின் வித்துடல் விதைப்பு விடயத்தில் மட்டும் எந்த சமரசத்துக்கும் இடங்கொடாமல் அவர்களால் இருக்க முடிகிறது.) சாதிப்பிரச்சினையும் மதங்களோடு பின்னிப்பிணைந்திருப்பதால் அவைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டிய தேவையுள்ளது என்பது என் அவதானம்.

வன்னியில் வெளிப்படையாக சாதி பற்றிக் கதைத்தாலோ இன்னொருவரைச் சாதிப்பேர் கொண்டு திட்டினாலோ அது பிரச்சினைக்குரிய விசயம்தான். மனத்தில் என்ன இருந்தாலும் வெளிப்படையாகப் பேச முடியாது. இது எந்தளவுக்குப் பயனளிக்கும் என்று தெரியவில்லை. ஆனால் குழந்தைகள் சிறுவர்கள் சாதிப்பெயர்களைக் கேட்டும் அதன் வசவுகளைக் கேட்டும் வளரும் சந்தர்ப்பங்கள் குறையும். வன்னியில் இளைய சமுதாயம் எப்படியும் களத்தில் பங்களிப்புச் செய்திருக்க வேண்டும். எல்லைப் படையாகப் போயிருக்கிறோம். பெரிய தாக்குதல் நேரங்களில் ஆயுதங்கள் கைப்பற்றல், இராணுவ உடல்களை அப்புறப்படுத்தல், காயக்காரரை அப்புறப்படுத்தல், வழங்கல்களைச் செய்தல், உணவுப்பொதிகளை வினியோகித்தல் என நிறையக் களப்பணிகளைச் செய்திருக்கிறோம். இரத்ததானம் நிறைய. இவற்றிலெல்லாம் இளைய சமுதாயத்திடம் வழமையைவிடப் புரிந்துணர்வொன்று அதிகமாய் ஏற்பட்டிருந்தது, குறிப்பாக எல்லைப் படையாகக் கடமைக்குச் செல்லும்போது. நண்பர்கள் வட்டமென்பது மிகமிக விசாலமானது. சாதியைக் கருத்திற்கொள்ளாதது. யாழ்ப்பாணத்தில் இன்றும்கூட நண்பர்கள் வட்டம் சாதியைக் கருத்திற்கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

எம்மக்கள் மத்தியில் மதவேறுபாட்டைப் பிரச்சினையாகக் கொள்வதிலும்விட சாதிவேறுபாட்டைப் பிரச்சனையாய்க் கொள்வது சற்று அதிகம்போல் நான் உணர்கிறேன். ஆனால் காலப்போக்கில் இந்தப்பிரச்சனை ஒழியலாம் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. என் நம்பிக்கை வன்னிதான். அங்கு ஓரளவுக்கு எல்லாருக்கும் சமமான சமூக அங்கீகாரம் வழங்கப்படுவதைக் காணலாம். ஏதோ தம்மாலியன்றவரை புலிகள் சமூகக் கட்டமைப்பைப் பேணுகிறார்கள். முன்பு வன்னியில் பிச்சையெடுக்கும் சிறுவர் சிறுமிகளைக் கண்டிருப்பீர்கள். அது ஒரு கட்டத்தில் பெருகத்தொடங்கியது. ஆனால் இன்று அறவே அந்த நிலையில்லையென்பதை உறுதியாக் கூறுவேன். ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிட்டு நான் வன்னிபற்றிப் பெருமைப்படும் விசயங்களில் இதுவுமொன்று.

அத்தோடு அனைத்துத் தொழில்களுக்கும் இயன்றவரை உரிய அங்கீகாரம் கொடுத்துள்ளார்கள். சீவல் தொழில் செய்பவர்களுக்கு சங்கம் அமைக்கப் பட்டுள்ளது. அவர்களின் வருமானம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 55 வயதுக்கு மேல் ஒரு சீவல் தொழிலாளிக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தொழிலின்போதான இறப்புக்கு அக்குடும்பத்துக்கு நட்ட ஈடு வழங்கப்படுகிறது. தனிப்பட யாருக்கும் கள் விற்க முடியாது. அது சட்ட விரோதமானது.

இதேபோலவே சிகை அலங்கரிப்புத் தொழிலும். (இந்தப் பெயரில்தான் அவர்கள் இயங்குகிறார்கள்). தனிப்பட யாருக்கும் அவர்களின் வீட்டிற்குப் போய் முடி வெட்ட முடியாது. எந்தக் கொம்பனென்றாலும் சிகை அலங்கரிப்பு நிலையத்துக்குத்தான் (சலூனுக்கு) வந்து வெட்ட வேண்டும். சரியான மருத்துவக் காரணங்களின்றி யாரும் வீட்டிற்குச் சென்று முடிவெட்ட முடியாது. இவை ஓரளவுக்கு ஆண்டான் அடிமை மனோபாவத்தை அல்லது முறையை ஒழிக்கும்.

இன்னும் அவர்கள் செய்ய வேண்டியவை நிறைய. ஆனால் அவர்களால் செய்ய முடியாதவை என்றும் நிறைய உண்டு. எடுத்துக்காட்டாக யாழ்ப்பாணத்தில் ‘மணக்கொடைத் தடைச் சட்டம்’ என்ற பெயரில் தமது நீதித்துறையில் சீதனத் தடைச் சட்டத்தையே கொண்டுவந்தார்கள். அச்சட்டத்தின் கீழ் சில வழக்குகளும் நடந்ததாக அறிகிறேன். இச்சட்டம் பற்றி எங்கள் தமிழர்கள் எந்தவித பிரதிபலிப்பையும் காட்டவில்லை. (அன்ரன் பாலசிங்கம் இச்சட்டத்தை ஆதரித்து எழுதி, பின் அவரே வேறொரு பேரில் விமர்சித்து எழுதி மீண்டும் அதற்கு தன் பெயரில் விளக்கம் கொடுத்து கொஞ்சக்காலம் மினக்கிட்டார். ஆனால் ஒருத்தரும் அந்த விவாதத்தில கலந்துகொள்ளேல.) ஆதரவுமில்லை எதிர்ப்புமில்லை. யாழ் இடப்பெயர்வுடன் வன்னிக்கு வந்த நேரத்தில் புலிகளின் நிர்வாகத் தழம்பல்களுக்கிடையில் இச்சட்டம் செயலிழந்துவிட்டது. இன்றும் செயலிழந்த ஒரு சட்டமாகத்தான் அது இருக்கிறது. இவ்விசயத்தில் அவசரப்பட்டார்களோ என்று தோன்றுகிறது.

இப்போது போர் ஓய்ந்துவிட்ட இந்த நேரத்தில் வன்னியில் மீண்டும் பழய பிரச்சினைகள் தலை தூக்கலாம். அவை எப்படிக் கையாளப்படுகின்றனவோ தெரியவில்லை. நானிருக்கும்வரை பெரிதாக எந்த மாற்றமுமில்லை. சுனாமியின்பின் நிலைமை எப்படியிருக்கிறதென்றும் தெரியவில்லை.

என்பதிவில் யாழ்ப்பாணத்தைத் தாக்கியெழுதியதாக ஒரு பார்வை தென்படலாம். அப்படியன்று. என் அனுபவங்களும் பார்வைகளும்தான் அவை. சில விசயங்கள் எனக்குத் தீராத ஆத்திரத்தை வரவழைப்பவை. சென்ற வருடம் யாழ் போனபோது என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி (என்னைப் புலியாக அல்லது வால்பிடியாக நினைத்து, – வன்னியிலிருந்தவனையெல்லாம் அப்பிடித்தான் பார்ப்பார்களோ தெரியாது.)
டேய் நீதானே அவங்களோட திரிஞ்சனி. உனக்குத் தெரிஞ்சிருக்கும். பொடியளில கரையாரோ வெள்ளாளரோ கூட இருக்கினம்?”
இது. இதுதான் நான் கண்ட யாழ்ப்பாணம். இந்த ஒரு சம்பவத்தை வைத்து நான் யாழ்ப்பாணத்தை எடை போடுவது தவறுதான். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

குறிப்பு: சாதி பற்றிய விடயங்கள் தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் பொதுவாக இருந்தாலும் அடிப்படையில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இன்னும் ஈழத்தில் அரசுமுறை அங்கீகாரம் சாதிக்குக் கிடைக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் விரும்பியோ விரும்பாமலோ ஒருவன் தன்னைச் சாதிரீதியில் வெளிப்படுத்தியே ஆகவேண்டும்.
'தலித்' என்ற சொல் நான் தமிழகம் சம்பந்தப்பட்டு மட்டுமே கேள்விப்பட்டுள்ளேன். ஈழத்தில் இச்சொற்பாவனை நானறியவில்லை. ஆனால் சிறிரங்கன் பாவிப்பதைப் பார்த்தால் அங்கேயும் இச்சொல் பாவனையிலிருந்திருக்கிறது போலுள்ளது. தெரிந்தவர்கள் சொல்லவும்.

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"சாதீஈஈயம்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (08 May, 2005 12:21) : 

வசந்தன்,

//புலிகளின் திருமண முறைகூட (திருமணச் சடங்கு) இன்னும் பலரால்
ஏற்றுக்கொள்ளப் படவில்லை. தவிர்க்க முடியாமல்தான் அவற்றிற்
கலந்து கொள்கிறார்கள்//

இது என்ன? எனக்குப் புரியவில்லை. என்ன வேறுபாடு இதற்கும்,
சாதாரண மக்களுடைய சடங்குகளுக்கும்?

//'தலித்' என்ற சொல் நான் தமிழகம் சம்பந்தப்பட்டு மட்டுமே கேள்விப்பட்டுள்ளேன்//

உண்மையைச் சொன்னால் இந்தச் சொல்லை சமீபகாலத்தில்தான் கேள்விப்பட்டேன்.
அப்புறம்தான் தெரிந்தது 'ஹரிஜன்' என்ற வார்த்தைக்கு இது மாற்று என்று.

அது சரி, இந்த 'தலீத்' என்னும் சொல் தமிழா? எப்போது, யாரால் இந்த வார்த்தை அறிமுகமானது?

 

said ... (08 May, 2005 12:36) : 

//இந்த 'தலீத்' என்னும் சொல் தமிழா?//

மராத்தி.

 

said ... (08 May, 2005 13:19) : 

//இது என்ன? எனக்குப் புரியவில்லை. என்ன வேறுபாடு இதற்கும்,
சாதாரண மக்களுடைய சடங்குகளுக்கும்?
//

பெரிய வித்தியாசங்களில்லை.
கோயிலுக்குப்போய் திருமணம் செய்ய முடியாது.
எந்த மதச்சடங்குகளும் இருக்க முடியாது. (ஐயர் மந்திரம் என்று எதுவுமில்லை)
இதற்கென்று இருக்கும் பொறுப்பாளர் முன் உறுதியுரை சொல்லி பதிவு செய்வார்கள் அவ்வளவே. சிலவற்றில் பிரபாகரன் கலந்துகொள்வதுண்டு. தாலி கட்டலாம் கட்டாமலும் விடலாம். (தாலி கட்டாமல் கல்யாணமா என்பதே பெரும்பாலானோரின் பிரச்சினை) ஆனால் தாலியில்லாத திருமணத்தை வரவேற்பதாக அறிவுறுத்தப்படுகிறது. கட்டாயப்படுத்தவில்லை. பெரும்பான்மைத் திருமணங்கள் தாலிகட்டியே நடத்தப்படுகிறது. சாதாரண மஞ்சள் கயிற்றில் புலிச்சின்னம் கோர்த்து இத்தாலி கட்டப்படும்.

 

said ... (08 May, 2005 14:21) : 

தலித் இலக்கியம் இந்தியா முழுவதும் வெவ்வேறு மொழிகளில் உள்ளது.

\\ஒழுங்குகள் மாறின. ஒரே பாதை ஒரே ஒழுங்குமுறை என்று இருந்தும் முகாம் இரண்டாகவே இயங்கியது. திடீரென இடையில் வேலி முளைத்தது. இரண்டு பாதைகள் வந்தன. முகாமுக்கு இரண்டு நிர்வாகம் வந்தது\\

கெளம்பிருவாங்கலே! காதல் தருகின்ற ரசாயன மாற்றத்த விட, இந்த சாதி, மதம் தருகின்ற மாற்றம் இருக்கே!... அப்பப்பா... சாதிக்காக கை போனாலும் பரவாயில்லை, கால் போனாலும் பரவாயில்லை!. எல்லாரும் 'தியாகத் தீயா' அலைவானுக சாதிப் பிரச்சனை வந்தால்!. என்னமோ ஒரு சக்தியிருக்கப்பா சாதி, மதத்துகிட்ட!.

 

said ... (08 May, 2005 14:43) : 

வசந்தன் உண்மையிலேயே நன்றாகப் பதிவு செய்துள்ளீர்கள்.இலங்கையில் தலித் என்று யாரும் அழைக்கப்படவில்லை.பஞ்சமர் என்ற சொற்பிரயோகமே வழக்கத்தில் இருந்திருக்கிறது அல்லது குடிமக்கள் குடி என்று சொல்வார்கள்.மார்க்சியத்தையும் சாதியத்தையும் இந்தியாவிலிருந்து பிரதி பண்ணியபோது வந்தது தலித் என்பதும்.வெளிநாட்டில் இருப்பவர்கள் தவிர்ந்து இலங்கையில் யாருமே இதை உபயோகப்படுத்துவதில்லை

 

said ... (08 May, 2005 19:14) : 

எழுதிக்கொள்வது: kulakaddan

வசந்தன் உங்கள் பதிவு உள்ளதை பேசுகிறது. தலீத் எனும் சொற்பதம் இலங்கை அல்லது ஈழத்தில் எனக்கு தெரிந்தளவில் அறவே இல்லை. நீங்கள் குறிப்பிடட்வரது ஆக்கங்கள் இந்திய கட்டுரைகளின் வாசிப்பு மூலம் செல்வாக்கு செலுத்தப்பட்டிருக்கலாம்.

சாதீயம் காலப்போக்கில் இல்லாது போகும் என நம்புகிறேன் எனது வாழ்கையில் நடந்த அனுபவம் மூலம். நாம் பாலர் பிரிவில் படித்த காலத்தில் சாதி குறைவென கருதப்பட்ட மாணவர்களி கொண்டு வரும் தண்ணீரை குடித்ததற்கு பேசிய பெற்றார்கள் எல்லாம் 10 வருடகாலத்தில் அதே மணவர்களை தமது மகன் வீட்டுக்கு கூட்டிசெல்லும் போது வரவேற்று பேசி உபசரித்ததும் தமது மகன் அவர்களது வீடுகளுக்கு போய் வருவதை அனுமதிக்கும் அளவுக்கு மன மாற்றம் அடைந்திருந்தார்கள். இப்போதய சந்ததி மேலும் அதை ஒதுக்க தலைப்பட்டு வருவது கலப்போக்கில் சாதியம் இல்லது போகும் என ஒரு நம்பிக்கையை தருகிறது.
நம்முர் கொயில்களில் சாதி பாகுபாடு பார்ப்பது எனக்கு தெரிந்தளவில் இருக்கவில்லை. அனைவரும் போய் வரக்கூடியதாக இருந்தது.


11.16 8.5.2005

 

said ... (09 May, 2005 00:01) : 

//ஈழத்தில் அரசுமுறை அங்கீகாரம் சாதிக்குக் கிடைக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் விரும்பியோ விரும்பாமலோ ஒருவன் தன்னைச் சாதிரீதியில் வெளிப்படுத்தியே ஆகவேண்டும்.//

 

said ... (09 May, 2005 00:21) : 

'குழைக்காட்டான்' தலித்துவம் -தலித்து என்பதெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களின்(எமது) அரசியல் முன்னெடுப்பை-ஒடுக்கப்பட்டோரின் ஒருங்கிணைந்த பொதுக் குறியீடாகும்.இதை ஈழத்திலிருக்கா இல்லையாவென்பதல்லப் பிரச்சனை.இந்தக் குறியீடானது எமது விடுதலையை நாம் சாதிப்பதற்கான போராட்டத் தோழமையையும் கூட்டுணர்வையும் தரும் பொதுக் காரணி.இது மராத்தியப் போராட்ட முறைமைகளால் உருவானவொரு அரசியல் கருத்தாக்கம்.அங்கு தாழ்தப்பட்ட எம்மை குறித்துரைக்கும் கருத்துருவாக்கமாகும்.இன்று இந்திய இலங்கைச் சூழலில் இத்தகையக் கூட்டுணர்வுமிக்கக் குறியீடு அவசியமானது.அடுத்து சாதியென்பதை வேரறுக்க முனையும் மனிதர்கள்,தாழ்தப்பட்ட மனிதர்களிலிருந்து(எம்மிலிருந்து) தம்மை விலத்தி வைத்துக் கருத்தாடுவதில்லை.ஏனெனில் இத்தகைய கருத்தாடல் மறைமுகமாகத் தன் சாதிய-வர்க்க நலனைப் பேசுவதாகும்.அம்மா என்ற சஞ்சிகையில் இதே குழைக்காட்டான் பாணி விளக்கமானதை >>>>'நாம் பாலர் பிரிவில் படித்த காலத்தில் சாதி குறைவென கருதப்பட்ட மாணவர்களி கொண்டு வரும் தண்ணீரை குடித்ததற்கு பேசிய பெற்றார்கள் எல்லாம் 10 வருடகாலத்தில் அதே மணவர்களை தமது மகன் வீட்டுக்கு கூட்டிசெல்லும் போது வரவேற்று பேசி உபசரித்ததும் தமது மகன் அவர்களது வீடுகளுக்கு போய் வருவதை அனுமதிக்கும் அளவுக்கு மன மாற்றம் அடைந்திருந்தார்கள்'<<<< எழுத்தாளர் கருணாகரமூர்த்தி வைத்துத் தனது சாதியத் தடிப்பைக் காட்டியிருந்தார்(அப்போதே அதை நமது தோழர்கள் கருத்தினால் எதிர்கொண்டார்கள);.அவ்வண்ணமே இங்கும் குழைக்காட்டானின் மனமும் முனைகிறது.எமக்குத் தேவை உங்கள் மனமாற்மல்ல.மக்கள் யாவரும் ஒரே மனிதக் கூட்டமெனும் முற்போக்கான அரசியற் சமூக-பண்பாட்டு மாற்றங்களும்,கௌரவத்துடனான பொருளியல் முன்னெடுப்புகளே.இதை விட்டு உங்குள் மனமாற்றம்... என்ன பிச்சையிடுகிறீர்களோ?நீங்கள் யாரடா நம்மை சாதிகுறைவென்றுரைக்க?எந்த நாய்கள் உங்களுக்கு இந்தவுரிமையைத் தந்தது? நீங்கள் ஏதோ கொம்பு முளைத்த மனிதர்கள் உங்கள் பெற்றோர்கள் மனமாறியது பெரும் செயலாக உங்களுக்கிருக்கலாம்.எமக்கோ அருவருக்கிறது, உங்கள் புத்தியைப் பார்த்து.இதுதாண்டா நவீனச் சாதியத் தடிப்பு.

 

said ... (09 May, 2005 03:33) : 

உங்களுடைய அதீத உணாச்சி வசப்படல் போல் என்னால் உணர்ச்சிவசமுடியாது. இங்கு நான் நான் கண்ட அனுபவத்தை சொன்னேன் அதில் நானும் ஒரு பாத்திரமா அல்லது நான் எப்பக்கம் இருந்தேன் என்றோ சொல்லவில்லை. எனது மனம் அனைவரையும் மனிதராக தான் சிறுவயதிலிருந்து பழக்கப்பட்டது. கருணாகர முர்த்தியையோ அவரது கதையேயோ தெரியாது.
நான் இங்கு சொல்ல வந்தது உயர் சாதியினர் என்று சொல்லி மற்றவர்களை ஒதுக்குவோரது மனதில் அவர்களை அங்கிகரித்து உபசரிக்கும் மனப்பாங்கு வந்தால் காலப்போக்கில் இல்லாது பொகுமென்பதே. ஆனால் அதற்காக சாதி குறைவென ஒதுக்கப்பட்டோருக்கு கிடைத்த வெற்றி என அதை கூறவில்லை.

 

said ... (09 May, 2005 06:01) : 

எழுதிக்கொள்வது: kulakaddan

ஒன்று தெளிவாக தெரிகிறது தாங்கள் அடிமனதில் சாதியம் நீங்கவில்லை. உயர் சாதியை சேர்ந்தவர் எனப்படுபவர் தான் உயர்ந்தவர் என மனதளவில் எண்ணுவதும் தாழ்ந்தவர்கள் என சொல்லப்படுபவர்கள் தாங்கள் தாள்ந்தவர்கள் என எண்ணத்தை வளர்த்து அதை அடையளப்படுத்த முற்படுவதும் அதை நீக்க வழி சமைக்காது. அவ்வெண்ணப்பாட்டை இருபக்கத்திலிருந்தும் களைவது தான் அதை நீக்க வழி சமைக்கும்.

22.23 8.5.2005

 

said ... (09 May, 2005 17:26) : 

பின்னூட்டமிட்ட துளசி, மாண்ட்ரீசர், குளக்காட்டான், ஈழநாதன், சிறிரங்கன், மரம் ஆகியோருக்கு நன்றிகள். இப்பதிவு என் பார்வைதான். இதுவே முடிந்த முடிவாகிவிடாது.

 

said ... (09 May, 2005 20:12) : 

மனிதர்கள் உங்களுக்குள் எதுவாகினும் அடிபட்டு கொள்ளுங்கள். வேண்டுமானால் உங்கள் சாதிப் பெயரை கொண்டு திட்டுங்கள். எங்களை ஏன் இழுக்கிறீர்கள். ஒருவனை கீழ்த்தரமாக பேச நீங்கள் நாய் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறீர்கள்.. சிலர் சாதிப் பெயரை பயன்படுத்துகிறார்கள். அடிப்படையில் நீங்கள் இருவருமே ஒரே மனநிலையுடையவர் தாம்.
நீங்கள் யாரடா எம்மை கீழானவர் என கருதி எமது பெயரை சுட்டி திட்டுவதற்கு? எந்த பூனைகளடா உங்களுக்கு அந்த உரிமையை தந்தது?

 

said ... (09 May, 2005 22:39) : 

நாயே,வணக்கம்!உனக்கு நாயென்ற பெயரை மனிதர்கள்தாம் வைத்தார்கள்.உனக்கோ அதுதாம் உனது அழைப்புக் குறியீடெனத் தெரியாது.ஒன்று மனிதர்கள்'பப்பி அல்லது வீமா' என்றழைக்கும் போது உன்னால் உணரமுடியுமேயொழிய நாயாகிய உனக்கு நாயென்பது தெரியாது.அனைத்தும் மனிதர்கள் இட்ட பெயர்தாம்!இதைப்போலத் தாம்'நளவன்,பறையன்,வண்ணான்,அம்பட்டன்,பள்ளன் ,வேளாளன்,பிராமணன் என்றும் தம்மைத்தாம் மனிதர்கள் அழைத்துக் கொள்கிறார்கள்.உனக்கு உன் பெயரைச் சொல்லவே வலிக்கும்போது மனிதர்களாகிய பேசும் உயிரிக்கி நளவன்-பறையனெனக் கேவலப்படுத்தும்போது வலிக்காதோ நாயே?நீயே சொல்லு? நீ நன்றியுள்ள உயிரியல்லவா! சொல்.

 

said ... (09 May, 2005 23:17) : 

வார இறுதி முடிந்து மீண்டும் ஒரு வேலை நாள் மின்கணனி முன்னால் வந்து தமிழ்மணத்தைப் பார்த்தால் பல படைப்புக்கள் எதை வாசிப்பது எதை விடுவது. நட்சத்திரத்திற்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்தல் வேண்டும். போயிட்டு வாறன் எண்டு கூடச் சொல்லீட்டார்.
சாதீயம் பற்றி கட்டுரை. பலரால் பலவிதமாகப் பார்க்கப்பட்டது. என் பார்வையில் சாதியம் பற்றிய படைப்புக்கள் பலவற்றைப் பார்த்து வருகின்றேன். “நான் சாதி பார்ப்பதில்லை நான் தாழ்ந்த சாதிக்காறரை குறைத்து நடத்துவதில்லை. நான் குறைந்த சாதிக்காரருக்காகக் குரல் கொடுக்கிறனான்.” இப்படி ஏதாவதுதான் அனேகமானவர்களின் எழுத்தில் தொக்கி நிற்கிறது. இதன் மூலம் தம்மை முற்போக்குவாதியாகப் பிரகடணப்படுத்தல் நடக்கின்றது. இதன் மூலம் மறைமுகமாக இவர்கள் என்ன சொல்ல வருகின்றார்கள். நாங்கள் மிகவும் நல்ல மனம் படைத்தவர்கள், நாங்கள் உயர்ந்த சாதிக்காறர்கள், நாங்கள் மேலானவர்கள். தேவைதானா இது. இதே பாணியைத்தான் நான் பெண்ணியம் பேசும் ஆண்களிலும் பார்க்கின்றேன். நான் என் மனைவிக்கு முழுச்சுதந்திரம் கொடுத்திருக்கின்றேன். நான் எப்பவுமே பெண்களுக்காகக் குரல் கொடுப்பேன். பெண்கள் எதுசெய்தாலும் தட்டிக் கொடுத்து ஊக்கிவிச்சு அவர்களை முன்னுக்குக் கொண்டு வர நான் முயல்வேன். சிறிரங்கனின் சொன்னது போல் ஆண் நாய் சிலதுகளின் குரைத்தல் கனடாவிலும் செவி சாய்க்க முடியாமல் இருக்கிறது. பெண்கள் அங்கவீனம் உற்றவர்கள் போலவும் ஆணாகிய நான் முழுமனிதன் அவர்களை ஊக்குவித்து ஒருமாதிரிக் கஷ்டப்பட்டு ஆண்கள் போல் முழுமையா ஆக்கி விடப்போறன்.
எல்லாரும் உங்கட உங்கட அலுவலைப் பாத்துக்கொண்டு இருக்கிறீங்களா? வேலைக்குப் போனமா சாப்பிட்டமா சொத்துச் சேத்தமா எண்டில்லாமல் உந்தப் பொதுத்தொண்டு எண்டு வெளிக்கிட்டு உதை வாங்கப் போறீங்கள். வருகுது வாயில

 

said ... (09 May, 2005 23:36) : 

//எந்த பூனைகளடா உங்களுக்கு அந்த உரிமையை தந்தது? //

என்ன என்ன பூனையெண்டாப் போல வாய்க்கு வந்த படி போட்டு தாக்குவியளோ.. நாயே உன்னை மனிதர்கள் திட்ட நீ என்னை திட்டுகிறாய்.. அடக்கப்படுகின்றவர்கள் அடக்குகிறார்கள்.

நீங்கள் யாரடா எம்மை கீழானவர் என கருதி எமது பெயரை சுட்டி திட்டுவதற்கு? எந்த எலிகளடா உங்களுக்கு அந்த உரிமையை தந்தது?

 

said ... (10 May, 2005 00:14) : 

நாயாருக்குப் பதில் எழுதிவிட்ட கையோடு கடைக்குப் போனேன்.போகும் வழியில் இனியெந்தப் பூனை எலியைச் சொல்லி வருமோ தெரியாதென ஆதங்கப் பட்டேன்.அப்படியே இப்போ பூனையும் வந்து விட்டது.இனி எலிதாம் பாக்கி!

 

said ... (28 August, 2005 20:32) : 

ஒன்

 

said ... (30 August, 2005 01:06) : 

Real Eve என்று ஒரு டிஸ்கவரி விவரணப்படம் பார்த்தன். அவங்கள்
ஐரோப்பியர்,ஆபிரிக்கர், சீனாக்காரர், இந்தியர் எண்டு எல்லாரும் ஒரே தாயின்(Real Eve) வழிவந்த மக்கள் கூட்டம் எண்டு நிரூபிக்கிறாங்கள். அதின்படி பார்த்தால் பறையர் பள்ளர் வெள்ளாளர் எல்லாரும் ஒரு தாய் வழி வந்தவர்களே.

நாங்கள் இப்பவும்.........

சுத்திச் சுத்தி சுப்பற்ற கொல்லேக்கை தான்

 

post a comment

© 2006  Thur Broeders

________________