கூத்தழிவு
பிறை ஐந்து. கூத்தழிவு சின்ன வயசில கூத்துப் பாத்திருந்தாலும் அதின்ர நிறைய விசயங்கள் பிறகுதான் எனக்கு விளங்கீச்சு. இடம் பெயர்ந்து மானிப்பாயில இருக்கேக்க, நாங்கள் ஒரு வீட்டில வாடகைக்கு இருந்தோம். எங்கட ஊர்ச்சனம் நிறையப்பேர் பக்கத்திலயே அகதிமுகாமொண்டில இருந்தீச்சினம். அவயள் மானிப்பாய் இந்துக் கல்லூரியில பெரியளவில கூத்து ஒண்டு போட வெளிக்கிட்டீச்சினம். பிறகென்ன எனக்குக் கொண்டாட்டம் தான். ஒவ்வொருநாள் இரவும் பாக்கப் போயிடுவன். ஆனா அது ஆரோ ஒரு புனிதரிண்ர கூத்து எண்டபடியா நான் எதிர்பாத்த அளவுக்கு அது எனக்கு விறுவிறுப்பா இருக்கேல. எண்டாலும் பாத்தன். அப்பதான் ஒருவிசயம் விளங்கினது. அது என்னெண்டா, கூத்து நடிக்கிற ஆக்களெல்லாரும் காசு கட்ட வேணுமாம். ஒரு பெடியன் தான் கூத்து நடிக்க வேணுமெண்டு அடம்பிடிக்க தாய்க்காறி தன்னட்டக் காசில்லயெண்டு சொல்ல அவன் இன்னும் அடம்பிடிக்க பொறுக்கேலாத அந்த விதவைத்தாய் அவனுக்கு அடியடியெண்டு அடிச்சா. பிறகு அத்தான்காரன் தான் தான் காசு கட்டுறன் எண்டு சொல்லி அந்தப் பெடியன் கூத்து நடிச்சான். இவ்வளவுக்கும் அந்தச் சனத்துக்கு இருக்க ஒழுங்கான கொட்டிலில்ல. நிவாரணத்த நம்பித்தான் பெரும்பாலான சனம். ஊரில கடற்தொழில் செய்ததால மானிப்பாயில தொழில் வாய்ப்புக்களும் குறைவு. சிலர் பருத்தித்துறை, மணற்காடு எண்டு வேற இடங்களுக்குப் போய் தொழில் செய்தினம். இந்தக் கஸ்டத்துக்கையும் காசு கட்டி கூத்துப் பழகுதுகள் சனம். அப்ப தான் எனக்கு அந்த விசயம் விளங்கீச்சு. ஏன் கூத்து நடிக்கிற ஆக்கள் காசு கட்ட வேணுமெண்டு கேட்டா, நாடகச் சோடின மேடச் செலவு, லைற் செலவு, எண்டு எல்லாம் அந்தக் காசிலதான் செய்யோணுமாம். ஆக மொத்தம் தாங்களே காசு போட்டு முழுச் செலவையும் ஏற்றுக்கொண்டு மக்களுக்கு இலவசமாகக் கூத்துக் காட்டுறதுதான் நடக்குது. “அப்ப எங்கட ஊரில முந்தி சங்கிலியன் கூத்து எண்டெல்லாம் போட்டனியளெல்லோ. அதுக்கும் நடிக்கிற ஆக்களேதான் காசு போட்டுச் செய்தனியளோ?” “பின்ன? வேற ஆர் காசு தாறது. நாங்கள் தானே போட்டுச் செய்ய வேணும்?” இதுதான் நிலை. யாழ். திருமறைக் கலாமன்றம் போன்றன ஒரு நிறுவனமாகவும் மத அனுசரணையும் இருப்பவை. அவை தப்பித்துக் கொள்ளும். ஆனால் தனிமனிதர்களின் இப்பிடியான முயற்சிகளை நினைத்து என்ன சொல்வது? ஓரு மக்கள் கலையின் நிலை இதுதான். பெரிய சங்கீத சபாக்களுக்கு (அதில அரவாசிப் பாட்டுக்கள் விளங்காது) கொட்டும் பணங்களில் சிறிதளவாவது சிந்தினாலே பரவாயில்லை. உண்மையில் கலைகளிலும் பணக்கார – ஏழை, மேற்தட்டு - அடித்தட்டு என வித்தியாசங்களுண்டு போலும். வன்னியில் 'வெற்றி உறுதி' என்று ஆரம்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் பின் ஒரு கலை மிக வேகமாகவும் அற்புதமாகவும் வளர்ச்சியடைந்தது. அதுதான் தெருக்கூத்து என்று நாமழைக்கும் வீதி நாடகம். மைக் செற் கூட இல்லாது எந்த இலத்திரனியற் கருவிகளும் இல்லாது ஓர் ஆர்மோனியப் பெட்டியும் மேளமடிக்க ஏதாவதொன்றும் கொண்டுவரும் இக்குழு போடும் நாடகங்கள்தான் அந்த நேரத்தில் போராட்டத்தின் முக்கிய பாத்திரம். வன்னியின் மூலை முடுக்கெல்லாம் திரியும் அக்குழு பாவிப்பது துவிற்சக்கர வண்டிகள்தான். அதிலேயே அவர்களின் வாழ்க்கை போகும். வீடு திரும்ப எத்தினை கிழமை எடுக்குமோ தெரியாது. கிடைத்த இடத்தில உண்பார்கள். பொதுமக்கள் தான் அவர்களுக்கு உணவு கொடுப்பார்கள். எங்காவது பாடசாலையில் பொது மண்டபங்களில் படுப்பார்கள். ஓயாத அவர்களின் பணி முக்கியமானது. மக்களுக்குக் கருத்தைச் சொல்வதில் அவர்களின் பங்கு முக்கியமானது. படைக்கான ஆட்சேர்ப்பில் மிகமிக முக்கிய பங்காற்றியது அந்த வீதிநாடகங்களே. மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கும்கூட. வீதி நாடகக் காரரின் மேளச்சத்தம் கேட்டாலே அனைத்தையும் போட்டுவிட்டு ஓடிவரும் சனம். என்னைப் பொறுத்தவரை இந்த வீதிநாடகத்துக்கு இணையாக கருத்தூட்டத்துக்கு மிகச்சிறந்த கலை ஊடகம் என்று ஒன்றைச் சொல்ல முடியாது. சினிமா கூட இதன் பின்னேதான். அந்தக் கலைவடிவத்தையும் கலைஞர்களையும் நான் வாழ்த்துகிறேன். அவர்கள் தான் கலைப் போராளிகள். அதுதான் மக்கள்கலை. தம்மை வருத்திக் கலை தந்தவர்கள். எந்த எதிர்பார்ப்புமின்றி கலைஞர்களாகவே வாழ்ந்தவர்கள். இன்று அந்தக் கலையும் என்ன பாடோ தெரியாது. சரியான ஊட்டமில்லாவிட்டால் அதுவும் அழிந்துவிடும். இவற்றையெல்லாம் ஒரு கலையாக கலையுலக மேதாவிகள் பார்ப்பார்களோ தெரியாது. ஆராய்ச்சிகள் செய்வார்களோ தெரியாது. புத்தகங்கள் எழுதுவார்களோ தெரியாது. ஆனால் ஒரு காலத்தில் மிகமிகச் சக்தி மிக்கவையாக இருந்தவைதாம் இக்கலைகள். அவற்றின் மிகத் தீவிர ரசிகனாக இருந்த, இருக்கின்ற ஒருவன் என்ற வகையில் இவற்றின் இன்றைய நிலையிட்டுக் கவலைப்படுகிறேன். Labels: கலை, தமிழ், நட்சத்திரக் கிழமை, விவாதம் |
"கூத்தழிவு" இற்குரிய பின்னூட்டங்கள்
எழுதிக்கொள்வது: மகிழன்
கூத்துக்களின் நிலை உண்மையில் கவலைக்குரியதாகவே இருக்கிறது. அவர்களே காசுபோட்டு கூத்துக்காட்டுவது என்பது இப்பொதுதான் அறிகிறேன்.
9.30 7.5.2005