Wednesday, May 04, 2005

நல்ல தமிழ் 2

பிறை மூன்று.
(மூன்றாம்பிறை பாத்தா முழுச்சிறப்பு)

சீன மெய்யியலறிஞர் (தத்துவஞானி) கன்பூசியசிடம் அவருடைய மாணவரொருவர், ''தேச ஆற்றுகையை ஒப்படைத்தால் தாங்கள் செய்யும் முதல் வேலை என்ன?"" என்றார்.

''நிச்சயமாக மொழியைச் சீர்திருத்துவதுதான்"

என்றார் கன்பூசியசு. அங்குக்குழுமி இருந்தோர் மிக்க வியப்படைந்து, ''மொழிக்கும் ஆற்றுகைக்கும் தொடர்பு என்னவோ? " எனக்கேட்டனர்.'

' மொழி, செம்மை பெறாவிடில் ஒருவர் எதைச்சொல்ல விரும்புகிறாரோ அதைக் கேட்கிறவர் தெளிவுற - ஐயந்திரிபற அறிந்துகொள்ளும் முறையிற் சொல்லமுடியாது. எண்ணப்பட்டது சொல்லப்படவில்லையானால் எது செய்யப்படவேண்டுமோ அது செய்யப்படமாட்டாது; நிறைவேற வேண்டுவது நிறைவேறாது போகும். ஒழுக்கமும் பண்பும் குறையும்; நீதியும் நெறிமுறையுந் திரியும்; மயக்கமும் குழப்பமும் உண்டாகும். எனவே, சொல்லப்படுவதில் ஐயம் எதுவும் இல்லாமல் தெளிவாக இருக்கவேண்டும். ஆகவே, மொழி செம்மையுற வேண்டுவது, எல்லாச் செயலுக்கும் முன் நிற்கிறது" என்றார் கன்பூசியசு.


வணக்கம்!
தமிழை நடைமுறைப்படுத்துகையில் ஏற்படும் சிக்கல்களைப்பற்றிச் சொல்வதாகச் சொன்னேன்.
வன்னியில், சரியான ஆராய்ச்சிகளின்றி ஒரு சொல்லை அவர்கள் முன்மொழிகிறார்களோ என்ற ஐயம் உண்டு. உண்மையில் அவர்களுக்கு வெளியுலகத்தோடு இப்போதுதான் தொடர்பு எற்பட்டுள்ளது. தமிழ்நாட்டு அறிஞர்களிடம் கலந்தாலோசிக்காமல் அதிகாரபூர்வமாய் வெளியிடப்பட்ட சில சொற்களைப் பற்றி அறியாமல் இப்படி தாங்கள் உருவாக்கிய அல்லது சரியென தாங்கள் நினைத்த ஒரு சொல்லை நடைமுறைப்படுத்தும் சந்தர்ப்பங்கள் உள்ளதாகப் படுகிறது.

எடுத்துக்காட்டாக, 'பாண்' என்று நாம் அழைக்கும் (பலர், இதைப் பாண் என்றே வைத்துக்கொள்வோம். ஏன் புதிதாக ஒரு சொல் உருவாக்குவான் என்று கேட்கிறார்கள்) Bread ஐ 'வெதுப்பி' என்ற பெயரால் அவர்கள் தமிழ்ப்படுத்துகிறார்கள். ஆனால் சிறிதுகாலத்தின்பின்,
“வெதுப்பி என்பது தவறு, இன்னொன்றை வேக வைப்பதுதான் வெதுப்பி. பாணை வேக வைக்கும் போறணையைத்தான் வெதுப்பி என்று சொல்லலாம். பாணை வெதும்பி என்றுதான் சொல்வது சிறந்தது”
என்று ஒரு கருத்து வந்தது. எனக்கும் அக்கருத்து சரிபோலவே தெரிகிறது. ஆனாலும் எந்த மாற்றமுமின்றி வெதுப்பி என்பதே பாவனையிலிருந்து வருகிறது. அதுபோலவே, போக்கு வரவுக் கழகமா அல்லது போக்கு வரத்துக் கழகமா என்ற விவாதத்துக்குபின் இன்று போக்குவரவுக் கழகம் என்ற பேரே நிலைத்து விட்டது.

ஆகவே இனிமேல் நடைமுறைப்படுத்தும் சொற்களையாவது உரியபடி ஆராயந்து அங்கீகாரத்தோடு செய்ய வேண்டும். முனைவர் கு. அரசேந்தினோடும் ஏனைய மொழி வல்லுநர்களோடும் தமிழேந்திக்கு இருக்கும் உறவு இவ்விடயம் நிச்சயம் நல்ல ஒரு திசையிலேயே போகவைக்கும் என நம்பலாம்.

அடுத்து, மக்களுக்கு இப்புதிய பெயர்கள் போய்ச்சேரும் வழிவகைகளை ஊக்குவித்தல். இன்று கொழும்பிலிருந்து வன்னிக்குட் போகும் பயணிகளுக்குத் திடீரென நிறையப் புதுச்சொற்களை எதிர்கொள்ளும் அனுபவம் ஏற்படும். அவர்களின் படிவங்கள் தூயதமிழ்ப் பெயர்களைக்கொண்டே இருக்கும். வரிசம்பந்தப்பட்ட பதிவுகளில் இருக்கும் பெயர்கள் அம்மக்கள் முன்னொருபோதும் கேட்டிராத சொற்கள். அவற்றை நிரப்புகையில் மிகுந்த சிரமத்தினை எதிர்நோக்குவதாகச் சொல்கிறார்கள். பிறகு அங்கிங்கு விசாரித்துத்தான் அவற்றை நிரப்புவதாகச் சொன்னார்கள். ஆனால் முன்னர் கேள்விப்படாத சொல்லாயினும் முக்கால்வாசியாவது அனுமானிக்கக் கூடியதாகவே இருக்கும். அவ்வளவுக்கு தமிழறிவு பின்தங்கியிருந்தால் என்ன செய்ய முடியும்? எனினும் அவர்களுக்கு அவற்றை விளங்கக் கூடியவாறு ஒரு பொதுஇடத்தில் பெரிதாக ஆங்கிலப்பெயர்களை எழுதிவிடலாம். படிவம் நிச்சயம் தமிழில்தான் இருக்க வேண்டும்.

கொழும்பிலிருக்கும் என் உறவுக்காரப் பெண்ணொருத்தி (11 வயது) முதன்முதல் வவுனியா கடந்து யாழ்ப்பாணம் போய் வந்திருந்தாள். அவளை நான் கொழும்பிற் சந்தித்தபோது சில சொற்களைச் சொல்லி அதன் பொருளைக் கேட்டாள். நானும் சொன்னேன். பிறகுதான் தெரிந்தது, அவள் ஏறத்தாள 20 சொற்களை எழுதி வைத்திருந்தாள். அனைத்தும் யாழ். பயணத்தின்போது அவள் ஓமந்தையில் அறிந்த புதிய தமிழ்ச் சொற்கள். இப்போது அவளுக்கு அந்தச் சொற்களின் அர்த்தம் புரியும். ஆக பயன்படுத்துகிறார்களோ இல்லையோ சில சொற்கள் மக்களைச் சென்றடைகிறது. இதற்காகவே அவர்களைக் கொஞ்சம் சிரமப்பட வைத்தால் என்ன? கஸ்டப்பட்டுப் படிக்கிறதுகள் மனசில நீண்ட நான் நிக்குமெல்லோ?

தமிழை நடைமுறைப்படுத்துவதற்கு அதிகாரம் கையில் வேண்டும். சும்மா அறவழிப்போராட்டம் ஜனநாயக ரீதியான போராட்டம் என்பதிலெல்லாம் இந்தவிடயத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. எம்.ஜி.ஆர். தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டுவந்தது நல்ல எடுத்துக்காட்டு. தமிழில்தான் பிள்ளைக்குப் பெயர் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் நீ பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் பெற முடியாது என்று சொல்லத்தக்க ஆட்சியதிகாரம் வேண்டும். அதைவிட்டு பலமாக வேருன்றிய மதங்களையும் எதிர்த்துக்கொண்டு மக்கள் திருந்துவார்கள் புரிந்து கொள்வார்கள் என்றெல்லாம் காத்திருக்கக் காலமில்லை. ஐம்பதாயிரம் தமிழ்ப்பெயர்கள் கொண்ட புத்தகத்தை வெளியிட்டார்கள். அதுமட்டுமே போதுமா என்ன? (பெயர் விடயத்தில் மதங்கள் சம்பந்தப்பட்டுள்ளன.)

பழகத்தொடங்குகையில் கடினமாக இருப்பதாகத் தெரியும். எதிர்ப்புகள் வரும். அவ்வளவுதான். பின் எல்லாமே இயல்புக்கு வந்துவிடும். அதுவே சரியாகியும்விடும். விவிலியத்தை வைத்தே நாம் இந்த உண்மையை அறியலாம்.
ஜீசஸ் என்பது இயேசு என்றும்,
ஜோசப் என்பது சூசை என்றும்,
மேரி என்பது மரியாள் என்றும்,
ஜோன் என்பது அருளப்பன் என்றும்,
போல் என்பது சின்னப்பன் என்றும்,
அன்ரனி என்பது அந்தோணி என்றும்,
தோமஸ் என்பது தோமையார் அல்லது தொம்மை என்றும்
இன்னுமின்னும் பல சொற்கள் தமிழ்வடிவத்துக்கு ஏற்றாற்போல் விவிலியத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
இன்று அவ்வளவு சொற்களையும் கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளவில்லையா? இன்றும் அந்தோணியாரும் தோமையாரும் மரியாளும் சூசையப்பரும் தானே எம்மிடையே பாவனையிலிருக்கும் சொற்கள்.

பாப்பரசரின் கொழும்பு வருகை வரைக்கும் அவரது பெயர் ஜோன் போல் என்பது எனக்குத் தெரியாது. இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் என்பது மட்டுமே நான் அறிந்து வைத்திருந்த பேர். எப்படி வெளிநாட்டுக்காரர் ஒருவர் தமிழ்ப்பேர் வைத்திருக்கலாம் என்ற அளவுகூட நான் சிந்திக்கவில்லை. கால ஓட்டத்தில் நாம் பழகிவிட்டோம். முற்றிலும் சம்பந்தமேயில்லாத ஒலிவடிவங்களைக்கூட எமக்குச் சொல்லித்தந்தபடி கிரகித்துக்கொள்ளப் பழகிவிட்டோம். ஆக மாற்றம் என்பது சாத்தியமே. எமக்கான சொல்லைப் புகுத்தல், நடைமுறைப்படுத்தல் என்பதும் சாத்தியமே. இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இதற்குமேல், ஏன் தூயதமிழில் பேச வேண்டும்? எழுத வேண்டும்? பெயர் வைக்க வேண்டும்? என்று கேட்பவர்களுக்கு என்னாற் பதில் சொல்ல முடியாது. பதில் தெரியாது என்றே வைத்துக்கொள்ளுங்கள். (பொடிச்சி பெயர்வைத்தல் சம்பந்தமாகத் தன்பதிவில் தன் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளா.)
---------------------------------------------------------------
அதிகம் கதைத்துவிட்டேன் போலுள்ளது. இத்தோடு முடிக்கிறேன். அதற்கு முதல் சம்பந்தமில்லாத ஒரு சுவையான சம்பவத்தைக்கூறி முடிக்கிறேன்.

என் தூரத்து உறவுக் குடும்பமொன்று யாழ் போயிருக்கிறது. ஏறத்தாள 15 வருடங்களாகக் கொழும்பிலேயே வசித்த குடும்பம் முதன்முதல் யாழ்ப்பாணம் போயினம். அந்த மனுசிக்கு வயது 50 வரும். போற நேரத்தில ஓமந்தைச் சோதனைச் சாவடியில வரிசம்பந்தமான விடயங்கள் கையாளுற இடத்தில (இதை ஆயப்பகுதி எண்டு புலிகள் சொல்லுவின) இவ படிவம் நிரப்பிறா. அது தமிழில கேள்வியளிருக்கிற படிவம். ஆனா இவ ஆங்கிலத்திலதான் நிரப்பிறா. அதப் பாத்த ஒருத்தர் இவவிட்ட தமிழிலயே நிரப்பச் சொல்லிக் கேட்டிருக்கிறார். இவ ஏலாது எண்டிருக்கிறா.
" தமிழ் வாசிச்சு விளங்கிறியள். ஏன் தமிழில நிரப்ப ஏலாது?"
எண்டு கேக்க, அவ சொன்னாவாம்:
"ஐசே! எனக்கு தமிழ் வாசிக்கத் தெரியும். ஆனா எழுத வராது. அதுதான் இங்கிலீசில எழுதிறன்"
எண்டிருக்கிறா.அவரும் சரியெண்டு போட்டு அங்கிலப் படிவமொண்டக் குடுத்து இதில நிரப்புங்கோ எண்டு சொல்ல, இவவும் அந்தப் படிவத்திலயே நிரப்பிக் குடுத்திட்டு வந்திட்டா.

வந்தவ சும்மா வந்திருக்கலாம். இஞ்சால வந்து நிண்ட மச்சாள்க்காரியிட்ட,
அவங்கள் என்ன தமிழில எழுதட்டாம் எண்டு நிக்கினம். நான் ஏலாதெண்டிட்டன்.”
பிறகென்னண்டு வந்தனியள். தமிழில எழுதிப்போட்டோ?
ச்சா… நானேன் எழுதப்போறன். நான் எழுதத்தெரியாதெண்டே நிண்டன். பிறகு அவங்களா இங்கிலீஸ் போமொண்டு தந்து இங்கிலீசிலயே எழுதுங்கோ எண்டு விட்டுட்டாங்கள். சேட்ட தானே அவைக்கு?”
எண்டு பெரிய வீறாப்பாச் சொல்லிக்கொண்டு இஞ்சால வந்து வாகனத்தில ஏற வெளிக்கிட, திரும்ப ஒரு பெடியன் வந்து அவவக் கூப்பிட்டுக்கொண்டு போயிருக்கிறான்.

போய் ஒரு 20 நிமிசம் கழிச்சு மனுசி வந்திருக்கு. என்ன நடந்து திருப்பி அவவக்கூட்டிக்கொண்டு போனாங்களோ தெரியாது. ஆனா அங்க இவவ தமிழிலயே படிவத்த நிரப்பித் தரச்சொல்லிப் போட்டாங்கள். அப்பிடியில்லயெண்டா நீங்கள் உங்கால போகேலாது எண்டு காட்டமாச் சொல்லிப்போட்டாங்கள். பத்து நிமிசம் இருந்து பாத்தவ பிறகு சரியெண்டு தமிழிலயே நிரப்பிக் குடுத்திட்டு வந்திட்டா. எனக்கும் உது விளங்காத புதிராத்தான் இருக்கு. அவ கதைச்சத ஆரோ கேட்டிருக்க வேணும்.

யாழ்ப்பாணத்திலயிருந்து அவ வன்னியால திரும்பி வரேல. நேரா விமானத்தில கொழும்பு வந்திட்டா. இப்ப அவ வாற போற ஆக்களுக்கு ஒரு விசயத்தச் சொல்லிக்கொண்டிருக்கிறா.
நீங்கள் புலியளிட்ட சரியான கவனமா இருக்கோணும். அவங்கள் மரங்களிலயெல்லாம் ஒட்டுக்கேக்கிற கருவியள் வச்சிருக்கிறாங்கள்.”

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"நல்ல தமிழ் 2" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (04 May, 2005 21:25) : 

வசந்தன். புதிதாக அறிமுகமாகின்ற சொற்களும் மிக இயல்பாக தமிழில் வழக்கில் இருக்கின்றன. உதாரணமாக மாவீரர் துயிலும் இல்லம்.
இதனை யாரும் மயானம் என்றோ வேறு பெயர்களிலோ சொல்வதில்லை. மிக நீண்டதான ஒரு பெயராக இருப்பினும் மாவீரர் துயிலும் இல்லம் என்றே சொல்லப்படுகிறது.

நிற்க.. எரிக்கின்ற விறகு விற்கின்ற இடத்திற்கு நான் சிறுவனாயிருந்த போது யாழ்ப்பாணத்தில் பார்த்த ஒரு பெயர்.. இப்படி இருந்தது

விரிசுடர் எரிதரு விற்பனை நிலையம்

 

said ... (04 May, 2005 22:34) : 

அண்மையில் இங்கு கனடாவில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பேராசிரியர் சந்திரகாந்தன் தெரிவித்தார்.
இதுவரையில் 200 புதிய தனித் தமிழ்
வார்த்தைகளை புலிகள் தமிழுக்கு
கொண்டுவந்திருப்பதாக.பி.பி.சி வானொலி தான் இது தொடர்பான
தகவல்களை திரட்டியிருப்பதாக.

நானும் இலங்கையில் இருக்குமட்டும்
தேத்தண்ணிதான்.என்று இந்தியாவில்
கால் பதித்தேனோ அன்றுடன் ரீ யாக மாறிவிட்டது.இலங்கையில் கோப்பி
என்பது இந்தியாவில் காப்பி என்று
சொல்வார்கள்.உண்மையில் காப்பி/கோப்பிக்கான இலகுவான தமிழ்
சொல் என்ன?

தமிழ் நாட்டில் ஆங்கிலத்தினை கலந்து
பேசினாலும் சில சுத்த தமிழ் வார்த்தைகளையும் காணமுடியும்
வண்டி(கார்,இருசக்கர வாகனம்)
,திருப்புளி(ஸ்குரூறைவர்) போன்றன.

எதையும் ஊடகங்களில் கொண்டுவந்தால்
மக்களின் வாயில் கொண்டு வந்துவிடலாம்.ஆரம்பத்தில் வீரமரணம்
மற்றும் மரண அறிவித்தல் என்று குறிப்பிட்டவை புலிகளால் முறையே
வீரச்சாவு,சாவு அறிவித்தல் என வானொலியிலும் பத்திரிகையிலும் குறிப்பிடத்தொடங்கிய பின்பு சகல
ஊடகங்களும் அதனையே பின்பற்ற
தொடங்கி விட்டன.

அதனை விட ,இங்கு கனடாவில் பொதுவாக தமிழர்கள் தொலைபேசி எடுத்தால்
ஹலோ என்பது போல வணக்கம் என்பார்கள்.சிலர் ஹலோ வணக்கம் என்று இரண்டையும் சொல்வார்கள்.இங்கிருந்து இலங்கைக்கோ ,தமிழ்நாட்டுக்கோ தொலபேசி பேசும் போது வணக்கம் என்றால் அங்கிருந்து பேசுபவர்கள் ஒரு
நிமிடம் திகைத்து பின்னர் இரண்டு வணக்கம் போடுவார்கள்.கனடாவில் இப்படி வணக்கம் என்ற சொல் எல்லோர் வாயிலும் சரளமாக புழங்க
காரணியாக அமைந்தவை இங்கு இயங்கி
வரும் தமிழ் வானொலிகளே.

 

said ... (04 May, 2005 23:56) : 

மொழி வழக்கங்களை நாமே உருவாக்கிகொள்கின்றோம். நீதியான அதிகாரம் தமிழுக்கு துணை போகையில் தமிழ் நிச்சியம் பலம் பெறுகின்றது.

அரசுக்கும் மொழி வழத்துக்கும் நிச்சியம் இறுகிய தொடர்பு உண்டு. உதாரணம் கனடா. கனடா பினேன்சு மொழியை உத்தியோக பூர்வ மொழியாக்கியது, கியுபெக் மாகன அரசின் மொழிக்கொழ்கைகள் (பெயர்பலகை தொடக்கம், கல்வி, குடிவரவு கொள்கைகள், என விரியும்) அம்மொழியையின் கனேடிய இருப்பை உறிதி செய்து பலப்படுத்தியுள்ளது. இதற்க்கு அம்மக்கள் ஒரு பொருளாதார விலை குடுக்க வேண்டியதாகவும் இருந்தது. பல ஆங்கில வர்த்தகங்கள் அம்மாகனத்தை விட்டு வெளியேறின. ஆனால் இன்று அவர்கள் மீண்டுவிட்டார்கள். இன்று அவர்களது கலாச்சாரம் அவர்களது உல்லாச பொருளாதார துறைக்கு அத்திவாரம். அதேவேளை அவர்கள் ஆங்கிலத்தின் தேவையை உணர்ந்து அனுசரித்து செல்கின்றார்கள். இன்று மொழியை பற்றி முன்னர்போல் அதிகம் அலட்டி கொள்வதில்லை.

அரசின் அனுசரிப்பு மொழிக்கு அவசியம் என்று நான் கூற வரும் பொருள் தமிழ்நாட்டுகே, ஈழத்தில் இதை நன்கு புரிந்து வைத்துள்ளனர் என்றே நினைக்கின்றேன்.

 

said ... (05 May, 2005 00:18) : 

வசந்தன்!

தமிழீழத்தில் உள்ள தமிழ்ப்பாவனை குறித்து பல விமர்சனங்கள் உள்ளன.அவற்றை கேட்கும்போதெல்லாம் இது பற்றி எழுதவேணும் எண்டு நினைச்சனான்.உம்மட பதிவு குறை தீர்த்திருக்குது.அதில நீர் கடைசியா குறிப்பிட்ட சம்பவம் குறித்து சில கருத்துகள்.

இஞ்ச கொஞ்சப்பேர் உந்த நினைப்பிலதான் திரியினம்.புலம்பெயர்ந்து வாழும் சீனர்களோ வேறுநாட்டவர்களோ பொதுத்தொடர்பாடலுக்கு ஆங்கிலத்தைப்பயன்படுத்தினாலும் தமது மொழியைவிட்டுக்கொடுப்பதில்லை.அதேபோல சீக்கிய இனத்தவர்கள் எந்த வெட்கமும் இன்றி தமது மதத்துக்குரிய தலைப்பாகையை உரிய முறையில் சுற்றிக்கொண்டுதான் வேலைக்குச்செல்கிறார்கள் சகல இடங்களுக்கும் போய்வருகிறார்கள்.எங்கட ஆக்களிண்ட பிள்ளையளில எத்தினைபேர் கோயிலுக்கு வேட்யோட வரீனம்.விரல் விட்டு எண்ணலாம்.

எங்கட தமிழ் வித்துவான்களுக்குத்தான் தங்களை தமிழ் என்று இனங்காட்டுவதில கொஞசம் கஸ்டமாக்கிடக்கு.ஆனா சுனாமி அடித்த நேரத்தில தாங்கள் சீறிலங்கன்ஸ் எண்டும் தங்கட பீப்பிள் சரியாப்பாதிக்கப்படவை எண்டும் வெள்ளைக்காரிடமே வலிந்துபோய் சொல்லி பணம் சேர்த்தார்கள்.இதில நான் அவர்களின் உதவும் சிந்தனையை தூஷிக்கவில்லை.தம்மை வெள்ளையள் மதிக்கவேணும் திரும்பிப்பாக்கவேணும் எண்டதுக்காக தமது கலாசாரத்தை கைத்தடியாக தூக்கும் எங்கட ஆக்கள் அந்தக்கலாசாரத்தை உரிமையுடன் வளர்க்கவோ அல்லது பின்பற்றவோ சுயஉணர்வுடன் முன்வருவது மிகக்குறைவு.

வெள்ளைக்கார கலாசாரத்தை பின்பற்றி ஆகவேண்டிய காரியங்களையும் அவர்களது மொழி மூலம் கல்வியை பெறுவதிலும் எந்தத்தப்பும் இல்லை.இங்கு தமிழ் தெரியாது என்றால் அதைப் பெருமையாக தம்பட்டமடிக்கும் ஆக்கள நினைக்கத்தான் சிரிப்பாக்கிடக்கு.

இஞ்ச காட்டிற அதே வீம்பை அங்க போய்க்காட்டி அதைப்பெருமையா நினைக்க ஆசைப்படுகிற ஆக்களுக்கு ஓமந்தை சம்பவம் சரியான நெத்தியடி

 

said ... (05 May, 2005 01:23) : 

எழுதிக்கொள்வது: kulakaddan

இப்ப மரக்காலை எனும் சொல்லுக்கு மரமடுவம் எனும் பெயர் தான் பாவிக்கள்படுகிறது.

17.47 4.5.2005

 

said ... (05 May, 2005 08:24) : 

உங்கள் பதிவுகள் நன்றாயிருக்கிறது. பல புதிய தகவல்களைத் தந்துள்ளீர்கள். அதுவும் விவிலியத்தை வைத்து நீங்கள் சொல்லும் கருத்துக்கள் நன்றாயுள்ளது.
விவிலியம் என்பது பைபிளைத்தானே.
அன்புடன்
-மகிழன்-.

 

said ... (05 May, 2005 10:05) : 

தமிழ் பற்றிய உங்கள் இரு பதிவுகளையும் படித்தேன். நல்ல விதயங்களை எழுதி இருக்கிறீர்கள். சர்வாதிகார முறையில் தமிழைப் புகுத்த வேண்டும் என்ற உங்கள் கருத்தோடு முழுதாய் ஒத்துப் போகமுடியவில்லை எனினும் உங்கள் ஆதங்கம் புரிகிறது. அது போல் நடைமுறைப்படுத்துவதன் சாத்தியங்கள் பற்றிய ஐயப்பாடு இருந்தாலும், இது போல் தமிழின் பால் பற்றோடு முடிந்த வரையில் பாவிக்க வேண்டும். இப்படிப் பல பேர் பல இடங்களில் (குறிப்பாய் வலைப்பதிவுகளில்) சொல்ல ஆரம்பித்திருப்பது நல்லதுக்கு என்று படுகிறது. நாளடைவில் ஒரு முக்கியப் பொருண்மையை (critical mass) இது அடைய வேண்டும்.

 

post a comment

© 2006  Thur Broeders

________________