Friday, May 06, 2005

கூத்துக்கள்.

பிறை - ஐந்துஇந்தக் கிழம முழுக்க நானொரு கூத்தாடி.
எனக்குக் கூத்துக்கள் எண்டா கொள்ளை ஆசை. சின்ன வயசிலயிருந்தே என்னோட தொத்திக் கொண்ட பழக்கம். அது என்ர கிராமத்தோட சம்பந்தப்பட்டது. என்ர வீடிருந்த அயலில கூத்துக்கள் பழகிறது வழமை. நான் ஞாபகமறிஞ்சு முதன்முதல் பாத்த கூத்து சங்கிலியன் கூத்து தான். ஆனா அதுக்கு முதலே ஏறக்குறைய முழுக்கூத்தும் பழகேக்கயே பாத்திட்டன். ஒவ்வொரு நாளும் இரவில அந்தக் கூத்தப் பழகுவினம். அதுவும் எங்கட வீட்டுக்குப் பக்கத்திலதான். வீட்டிலயிருந்தாலே பாடுறது கேக்கும். ஆனா நேரில போனாத்தான் சுவாரசியமாயிருக்கும். அங்க என்னப் போலவே சிலபேர் பாக்க வந்திருப்பினம். அதில பொம்பிளயள் ஒருத்தரும் நடிக்கேல. பொம்பிள வேசத்துக்கும் ஆப்பிளயளே தான் நடிப்பினம். ஆ.. ஒண்டு சொல்ல மறந்திட்டன். அவயள் நடிக்கிறது எண்ட சொல் பாவிக்கிறேல. ஆடுறது எண்டுதான் பாவிக்கிறவை. உண்மை தான். கூத்தெண்டா ஆடத்தான் வேணும்.

அங்க கூத்து ஆட வாறவை கூடுதலாக் குடிமகன்களாத்தான் இருக்கும். அண்ணாவியார் (இவர்தான் நெறியாள்கை. டைரக்டர் எணடாத் தான் சிலருக்கு விளங்கும்) குடிக்க மாட்டார். மற்றாக்கள ஒரு மட்டுக்க வச்சிருக்க சரியாக் கஸ்டப்படுவார். இடைக்கிடை நடக்கிற முசுப்பாத்திகளப் பாத்துக்கொண்டு இருக்கலாம். நானறிய கூத்துப் பழகேக்க ஒருத்தரும் பிழையில்லாம பாட்டுக்களப் பாடமாட்டினம். அண்ணாவியார் பேசுவார்தான். ஆனா கடுமையா இருக்காது. கடசி ஒத்திகையில கூட பாட்டுக்கள பிழையாப் பாடுவினம் அல்லது மறந்து போய் தானானே தந்தனா தானே எண்டு இழுத்துச் சமாளிப்பினம். எனக்கு இது பெரிய ஆச்சரியம்தான். ஏனெண்டாக் கூத்து மேடையேறேக்க எல்லாம் கச்சிதமா நடந்திடும். அதவிட பெரிய ஆச்சரியம், எப்பிடி அவயளால இப்பிடி பாடமுடியுது எண்டது தான். குரலெண்டா அப்பிடி குரல். பாடுற பாட்டு ஞாமான தூரத்துக்குக் கேக்கும். அதுவும் தொடர்ச்சியா ஒவ்வொரு நாளும் ஒத்திகையளில இப்பிடி பெரிய குரலெடுத்துப் பாடினாலும் என்னெண்டு குரலடைக்காமல் பாடுகினம்? மேடையில மைக் செற் எல்லாம் சும்மா வைக்கோணுமெண்டதுக்காகத் தான் வைக்கிறது போல. அவயள் பாடினா எல்லாருக்கும் கேக்கும்.

பிற்பாட்டுப் பாடுற ஆக்களின்ர பாடும் சுவாரசியமாத் தானிருக்கும். உண்மையில முதல் பாடின பாட்டின்ர கடசி அடியத்தான் பிற்பாட்டுக்காரர் பாடவேணும். ஆனா அதே மெட்டு வரும். ஆனா பாட்டு மாறிவரும். அந்த நேரம் வாயில வாற வசனத்த வச்சு பிற்பாட்டு ஒப்பேத்துப்படும். முதலே கூத்து ஒத்திகைகளப் பாத்ததால நிறையப் பாட்டுக்கள் எனக்கும் பாடமாயிருக்கும். அது மேடையேறேக்க கொஞ்சம் வித்தியாசங்களோட தான் வரும். என்ன நடக்கிறதெண்டா ஆடுறவர் ஏதாவது மறந்து போய் அல்லது உடன வாயில வராம இருந்தா அதே மெட்டில புதுசா சொல்லுகளப் போட்டு மெட்டுக் குலையாமல் கருத்தும் மாறாமல் பாட்ட முடிச்சிடுவார். கூத்து ஆடுற ஆக்களெல்லாம் ஒவ்வொரு கவிஞர்மார் தான்.

எங்கயேன் திருவிழா எண்டா கூத்துப் போடுறது வழக்கம். அந்தக்காலத்துல இரவு எட்டு மணிக்கு கூத்துத் துவங்கினா விடியத்தான் முடியும். மங்களம் பாடேக்க கோயில் பூசை மணி அடிக்கும். எண்டாலும் முழுக்கூத்தும் பாக்கிற சனம் நிறைய இருக்கு. ஏற்கெனவே எனக்கு கூத்தின்ர கதையோட்டம் தெரியுமெண்ட படியா இன்ன இன்ன கட்டம் வரேக்க என்ன எழுப்புங்கோ எண்டு வீட்டுக்காரரிட்ட சொல்லிப்போட்டுப் படுத்திடுவன். சங்கிலியன், பண்டார வன்னியன் கூத்துகளில நிறைய விறுவிறுப்பான சம்பவங்கள் வரும். போர் நடக்கிற நேரம் வாற பாட்டுக்கள் கேக்க வேணும். இப்பத்தயான் 'மன்மதராசா', 'ஜெமினி ஜெமினி' எல்லாம் பிச்ச வாங்கோணும். சும்மா உடம்பு புல்லரிக்கும். அப்பிடித்தான் அந்தப் பாட்டுக்களும் அதப் பாடுற ஆக்களும்.

அவயள் உடுத்திற உடுப்புகளும் வித்தியாசமானதுதான். பள்ளிக்கூட அரச நாடகத்தில நான் நடிச்சிருக்கிறதால அங்க நாங்கள் பாவிக்கிற அட்டைக் கத்தியும் பிறிஸ்டில் போட் முடியும் (தலையில வைக்கிறது), கடதாசிக் கவசங்களும் தான் இந்தக் கூத்துக்களிலயும் பாவிக்கிறதெண்டு நினைச்சேன். ஆனா அதுகளத் தூக்கிப் பாக்கேக்கதான் தெரிஞ்சுது அதுகள் கிட்டத்தட்ட அசல் மாதிரித்தானெண்டு. அவ்வளவு பாரம். இதுகளயெல்லாம் தூக்கிக்கொண்டு என்னெண்டு தான் இந்த ஆட்டம் ஆடுறாங்களெண்டு யோசிச்சு இருக்கிறன்.

ஒரு முறை சங்கிலியன் கூத்து நடந்துகொண்டிருக்கு. சிம்மாசனத்திலயிருந்து சங்கிலியன் எழும்பேக்க கையில இருக்கிற செங்கோல (சிலர் கொடுங்கோல் எண்டும் சொல்லுகின) விட்டுட்டுத்தான் எழும்பி பிறகு இடுப்பில கைய வச்சுக்கொண்டு மிச்சப் பாட்டுக்கள் நடக்கும். அப்பிடி இவர் செங்கோல கோபமா விட்டிட்டு எழும்பேக்க மேடைக்குப் பின்னாலயிருந்து ஒருவர் அதப் பிடிப்பார். பிறகு சங்கிலியன் இருக்கேக்க அந்தக் கோலை இவர் நீட்ட அவர் பிடிப்பார். அந்தநேரத்தில சங்கிலியன் கோபமா தலையச் சிலுப்பிக்கொண்டு எழும்பேக்க தலைமுடி (கிரீடம்) கழண்டு பின்னால செங்கோல் பிடிக்கிறரிண்ட தலையில விழுந்து ஆள் மயங்கீட்டுது. அவ்வளவு பாரம்போல அந்த முடி. பிறகு வேறயொராள் தான் அந்த வேலயச் செய்தது.

முதலில இப்பிடி அரசர் மாரிண்ட கூத்துக்கள் தானாக்கும் இருக்கெண்டு நினைச்சுக்கொண்டிருந்தன். பிறகுதான் ஒருக்கா யாழ்.திருமறைக் கலா மன்றக் கண்காட்சியொண்டில அறிஞ்சன் நம்மட சனத்தின்ர கூத்த்த்த்த்த்துக்களப் பற்றி. கிட்டத்தட்ட பாவனையில இருக்கிற புனிதர் மாரில அரவாசிப் பேருக்கு மேல ஆளுக்கொரு கூத்தெல்லே வச்சிருக்கினம். செபஸ்தியார் கூத்து (நாங்கள் இவர செவத்தியார் எண்டுதான் சொல்லுறது) அந்தோணியார் கூத்து, சூசையப்பர் கூத்து, தொம்மையப்பர் கூத்து, யாகப்பர் கூத்து எண்டு ஊருப்பட்ட கூத்துக்கள். இதவிட சைவக் கூத்துக்கள் எண்டு அது ஒரு பக்கம். பகிடி என்னெண்டா இதில சில கூத்துக்கள எழுதினது ஆர் எண்ட தகவல்கள் கிடைக்கேலயாம். வாய்வழியா கடத்தப்பட்டு பிறகு ஒரு நேரத்தில தொகுத்திருக்கினமாம். ம்… எவ்வளவு பெரிய ஒரு கலை. ஆனா புனிதர் மாரிண்ட கூத்துக்களில எனக்கு அலுப்புத்தட்டிற மாதிரி ஓர் உணர்வு.

கொஞ்ச நாளுக்கு முதல் பி.பி.சி. இல மலையகக் காமன் கூத்தப் பற்றி ஒரு பெட்டக நிகழ்ச்சி போட்டினம். இப்பிடி பிரதேசத்துக்குப் பிரதேசம் ஒவ்வொரு சிறப்பான கூத்து வடிவங்களிருக்கு. எல்லாத்தையும் அறிய ஆவல்தான். மட்டக்களப்பு வசந்தன் பாட்டுக்கள (அட என்ர பேர் எப்பிடி அங்க போச்செண்டு தெரியேலயே) கேக்க வேணுமெண்டு சின்ன வயசிலயிருந்தே ஒரு தீராத ஆவல். பிறகு வன்னியில முத்த மட்டக்களப்புப் போராளி ஒருவர் பாடிக்காட்டேக்க மெய் மறந்து போயிட்டன். அவர் பாடினது சிலதுதான் (அவரே சொன்னார் அதில நிறையப் பிழையளெண்டு) எண்டாலும் இன்னுமின்னும் ஆவல் வந்ததுதான் மிச்சம்.

இப்பெல்லாம் கூத்துக்கள் அழிஞ்சுகொண்டு போகுது எண்டதுதான் என்ர அவதானிப்பு.
போன வருசம் யாழில் என் கிராமத்துக்குப் போனன். நான் போற நேரம் பக்கத்து ஊரில ஒரு திருவிழா.
டேய் இண்டைக்கு அங்க கூத்து. வாறியே போவம்
எண்டு நண்பன் ஒருத்தன் கேட்டான். எனக்குக் கேக்கவே வேணும். உடன அண்டைக்கு நான் போட்டிருந்த திட்டத்தையெல்லாம் விட்டிட்டு வெளிக்கிட்டன். என்ர கணிப்பில கூத்தெண்டா விடியத்தானே முடியோணும். அந்த எண்ணத்திலதான் இருந்தன்.
தனித்தனிச் சைக்கிளில போவம். நான் அப்பிடியே விடிய வேறயொரு வேலயுமிருக்கு முடிச்சிட்டு வந்திடுறன்.
எண்டு அவனிட்டச் சொல்லி வச்சன்.
அப்ப இரவு எங்க படுக்கப் போறாய்?
"ஏன்ராப்பா கூத்துப்பாத்திட்டு விடிய அப்பிடியோ போறது தானே?”
உனக்கென்ன விசரே? கூத்து இரவு பத்துக்கெல்லாம் முடிஞ்சிடும். பிறகென்ன செய்யிறது?
பிறகு விசாரிச்சதிலதான் தெரிஞ்சுது அது ஒண்டர மணித்தியாலக் கூத்தாம்.
நான் விடியவிடிய நடக்குமெண்டெல்லோ நினைச்சனான். ஏன் அப்பிடித்தானே முதல் நடக்கிறது எண்டு அப்பாவியாக் கேட்டன்.

சேச்சே… இது கொமாண்டோக் கூத்தெல்லோ
எண்டானே பாக்கோணும். எங்கட சனம் சின்னதா என்னத்தையும் கொமாண்டோ அல்லது மினி எண்ட சொல்லால சொல்லுறது தொடங்கீட்டுது. போர் தந்த அறிவுகளில இதுவுமொண்டு. கொமாண்டோ பாக் எண்டா சின்னப் பை. இப்ப கூத்தையும் கொமாண்டோக் கூத்து எண்டு கொண்டத்திட்டாங்கள் போல. பேர மட்டுமில்ல கூத்தையே ஒண்டர மணித்தியாலத்துக்குக் கொண்டந்திட்டாங்கள். நான் அந்தக் கூத்துக்குப் போகேல. நான் ரசிச்ச, விடியவிடிய நடக்கிற கூத்தே என்னோட இருக்கட்டுமெண்டு விட்டிட்டன். அதுக்கவன் விளக்கமொண்டு குடுத்தான் பாருங்கோ. டெஸ்ட் மச் போய் ஒருநாள் கிறிக்கற் போட்டிகள் தானாம் இப்ப களை கட்டுது. அப்பிடித்தானாம் இது. ஆர் கண்டது. மிக முக்கியமான சுவாரசியமான கட்டங்களை மட்டும் எடுத்து மிக விறுவிறுப்பா ஒரு கூத்தை வடிவமைச்சிருக்கலாம் தான். பாக்கிறதுக்கு நல்லாயிருக்கும்தான். இன்னுமொரு அஞ்சு வருசத்தில நீண்ட கூத்துக்கள் இல்லாமல் போயிடும் போலதான் கிடக்கு. நினைக்க மனசுக்கு சரியான கஸ்டமாயிருக்கு.

நேற்றுத்தான் இதப்பற்றி இஞ்ச ஒராளோட கதைக்கேக்க அறிஞ்சன், போன வருசம் ஆறாம் மாதம் சிட்னியில் 'யுக்றேனியன்' மண்டபத்தில காத்தவராயன் கூத்துப் போட்டவையாம். அதுவும் இளம்பெடியள்தானாம் ஆடினவை. கேட்க வியப்பாத்தான் இருந்தீச்சு. அலுத்துப்போற அளவுக்கு எத்தினையோதரம் இந்தக் காத்தவராயனப் பாத்திருந்தாலும் என்ர மனசில இந்தக்கூத்து ஒட்டேல. ஏனோ தெரியேல.


உண்மையில நான் விரும்பிய, காதலித்த அளவுக்கு திருப்தியாக கூத்துக்களைப் பாக்கேல. அதுகளப் பாக்காமலேயே போய் விடுவேனோ எண்ட கவலைதான் இப்ப. இந்தக் கூத்துக்கலை அழிவுக்கு, மாறிவரும் ரசனையும் உலக ஒழுங்கும் ஒரு காரணமெண்டா இன்னொரு காரணமும் இருக்கு. அத இன்னும் கொஞ்ச நேரத்தில ஒரு பதிவாப் போடுறன்.

------------------------------------------------------

செத்த பாம்பைக்கண்டு மிக்க மகிழ்ச்சி கொண்டு

மெத்தப் பெரியபொல்லால் மேனி அடித்து நின்று

சுண்டு விரலைக்காட்டி சூரக்கதைகள் பேசும்

தந்த தனனதானா தந்த தனனதானா....

சூரர் வீரர் நாமையா -வெற்றி மிகும்

சூரர் வீரர் நாமையா....


ஞாபகமிருக்கா? ஞானசவுந்தரிக் கூத்து.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"கூத்துக்கள்." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (06 May, 2005 20:48) : 

வசந்தன் கூத்து என்றும் ஒன்று உள்ளதே அது என்ன?

 

said ... (06 May, 2005 22:39) : 

அது வசந்தன் கூத்து இல்லை வசந்தன் பள்ளு

 

said ... (07 May, 2005 00:36) : 

வசந்தன் மேடை நாடகங்கள் போல் கூத்துக்கள் கனடாவில் அதிகம் பிரபல்யமாகவில்லை. இருப்பினும் சில பாடசாலைக் கலைவிழாக்களில் போடுகின்றார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுத்தாளர் முத்துலிங்கம் கனடாவில் தான் சிறந்த ஒரு காத்தவராயன் கூத்தைப் பார்த்ததாக எங்கோ எழுதி நான் படித்தது ஞாபகத்தில் இருக்கின்றது. நான் நினைக்கின்றேன். விளம்பரங்கள் இல்லாததால் பலருக்குத் தெரிவதில்லை என்று.
அடுத்து இந்தக் கறுப்பியும் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு கூத்தில் கலந்து கொண்டுள்ளேன். கறுப்பியின் கூத்து ஞானம் தமிழ் திரைப்படங்களில் வடிவேலு ஆடும் கூத்து லெவலில்தான் இருந்தது. இருந்தும் முயன்று பார்ப்போம் என்று துணிந்து முயன்றேன். அந்த நிகழ்வு உலகமயமாக்கல் பற்றி பல்கலாச்சார மக்களால் நாடத்தப்பட்டது. அதில் பல்கலாச்சார நிகழ்வுகள் இடம் பெற்றன. உலகமயமாக்கலை மையமாக வைத்து கவிஞர் செழியனால் எழுதப்பட்ட புதிய முயற்சி அது. தாங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் ஆண்கள் பெண் வேடத்தில் ஆடுவதாக. இங்கு மாறாக கறுப்பி ஐயார் வேடத்தில் ஆண் போல் வந்தேன். (கறுப்பு ஐயர் ஹ ஹ) மிகவும் சிரமப்பட்டு ஆட்ட நுணுக்கங்களையும் பாடல்களையும் செய்ய வேண்டிய அவசியம். நன்றாகச் செய்தேன் என்று கூறமாட்டேன். காரணம் மிகவும் சிரமமானது. இருந்து ஓரளவுக்குச் செய்தேன். பார்த்தவர்ளில் பலர் வேற்று இன மக்கள். உடைகள் எல்லோரும் ஒரே மாதிரி அணிந்து குறியீடாக சில வேற்றுமைகளைக் காட்டினோம். கூத்தில் கை தேர்ந்த பழமை வாதிகள் இந்த முயற்சியை ஏற்கவில்லை. கூத்து என்ற எமது பழைய பாரம் பரியத்தைச் சிதைத்து விட்டோம் என்றார்கள். புதிய முயற்சிகளை நான் எப்போதும் வரவேற்பேன்.

 

said ... (07 May, 2005 00:40) : 

மிகவும் நல்ல பதிவு வசந்தன்.

கூத்து என்றால் எப்படியென்றே தெரியாத என் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு.

ஒரு குறை:
கூத்தைப்பற்றி ஒரு குரல் பதிவு இட்டிருக்கலாம்.

கூத்துக்களை குறுவட்டுகளில் யாராவது வைத்திருக்கிறீர்காளா?

-மதி

 

said ... (07 May, 2005 00:41) : 

அரிச்சந்திரன்/சந்திரமதி கூத்து எண்டு ஏதேனும் இருக்கோ? இல்ல... வசந்தன் பள்ளு இருக்கெண்டா உப்பிடி ஏதேனும் இருக்கோணுமே எண்ட எண்ணந்தான்

-மதி

 

said ... (07 May, 2005 00:43) : 

கூத்தைப்பொறுத்தவரை இப்போது புதிய முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். ஆனால் புதியவர்கள் மனமுவந்து அதைச் செய்ய வேணும். கறுப்பி! 'கூத்தாடினதுக்கு' நன்றிகள். நிறையக் கூத்துக்களப் பாத்தாலே போதும் ஒருத்தரும் பழக்காமலே அது தானா வரும். இது என்ர அனுபவம்.
பின்னூட்டமிட்ட மற்றாக்களுக்கும் நன்றி.

மட்டக்களப்பு வசந்தன் பாட்டுக்கள் என்ற அளவில்தான் நானும் கேட்டிருக்கிறன். ஆரும் இதுபற்றித் தெரிஞ்ச ஆக்கள் தான் சொல்ல வேணும்.

 

said ... (07 May, 2005 00:46) : 

அரிச்சந்திர மயான காண்டம் யாழ்ப்பாணத்தில பயங்கர பிரபல்யம். 93,94 காலப்பகுதியில வைரமுத்துக் குழு, எங்கட பாடகர் சாந்தன் குழு எண்டு எங்க பாத்தாலும் அரிச்சந்திர மயான காண்டம் தான். ஆச தீர பாத்து அனுபவிச்சன்.

 

said ... (07 May, 2005 00:47) : 

மதி!
வசந்தன் பள்ளு உண்மைதான்.
ஆனா வசந்தன் பாட்டுக்கள் எண்டுதான் நான் கேள்விப்ப்டனான். ஆரும் விதயம் தெரிஞ்ச ஆக்கள்தான் சொல்லவேணும். கன்னியாவுக்கு விளக்கம் வந்த மாதிரி ஆரேன் வந்து தந்தா நல்லம்.

 

said ... (07 May, 2005 01:24) : 

எங்கள் தமிழகத்திலும் கூத்து உண்டு தெரியுமா?., நாடகம் என்று சொல்லுவோம், எங்க அப்பாவின் கிராமத்தில் ஒவ்வொரு கோவில் திருவிழாக்களிலும் நடக்கும், 'அர்ச்சுனன் தவசு', 'வள்ளி திருமணம்', 'நல்ல தங்கா', 'பொன்னர் சங்கர்' இப்படி பல உண்டு. இன்றும் இரவு முழுவதும் சில நாடகங்கள் நடந்தாலும், நாடகங்களில் மன்மத ராசாவும் உண்டு (சினிமாப் பாட்டுதான் ராசா!). என் பாட்டனின் அம்மா காலத்தில்(அவர் ஒருவர்தான் படித்தவர்), நாடகத்தில் ஒர் சின்ன பிறழ்வென்றாலும் "டேய்!., நிறுத்துடா! என்னா நாடகம் போடற? கத தெரியாமன்னு!, சத்தம்போட்டு, எல்லாரும் எந்திருச்சு வாங்கன்னு! மத்தவர்களையும் கூட்டிக்கொண்டு போய்விடுவார்களாம். அவரைப் பார்த்தால் நடிப்பவர்கள் நடுங்கிவிடுவர் என்று ஊரில் இன்னமும் சொல்வார்கள்.மற்றபடி, இப்போது "அர்சுனன் தவசு' மாறித்தான் போனது "எஜமான்" ஆக, "நட்டாமை" ஆக!.

 

said ... (07 May, 2005 10:37) : 

ம்.. ஒரு பாட்டில இப்பிடி வருது..
அம்மானை வசந்தன் பாக்கலையா.. நீங்க
அழகா மகுடி கேட்கலையா..

காசி ஆனந்தனின் மீன் மகள் பாடுகிறாள் பாட்டு என்று நினைக்கிறன்

 

said ... (07 May, 2005 11:25) : 

மீன்மகள் பாடுகிறாள் வாவிமகள் ஆடுகிறாள் மட்டுநகர் அழகான மேடையம்மா பாடலை நினைவூட்டியதற்கு நன்றி சயந்தன்.
அரிச்சந்திர மயான காண்டம் கேள்விப்பட்டிருக்கிறேன் பார்த்ததில்லை.நல்ல பதிவு வசந்தன் நிறைய ஞாபகங்களைக் கிளறி விட்டதோடு.செய்யவேண்டிய கடமைகளையும் நினைவூட்டியதற்கு நன்றி

 

post a comment

© 2006  Thur Broeders

________________