Sunday, May 08, 2005

என் வியாகுலங்கள்...

பிறை - ஏழு.


1994 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் ஒரு நாள்.
இடம் யாழ். மத்திய கல்லூரி மைதானம்.
விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த இரு பாடசாலை அணிகளுக்கிடையான உதை பந்தாட்டப் போட்டியொன்று முடிவுக்கு வருகிறது. இரு அணியுமே சமநிலையில் நின்றதால் மேலதிக நேரம் வழங்கப்பட்டு பின் தண்ட உதைகள் (Penalties) வழங்கப்படும் நிலைக்கு வந்துவிட்டது. அதுதான் மாவட்ட மட்ட இறுதிப்போட்டியென்பதால் விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை. விளையாடிக் கொண்டிருந்தவற்றில் ஒன்று என்னுடைய பாடசாலையணி.

இந்நிலையில் என் பாடசாலை அணித்தலைவன், ஏற்கெனவே நன்றாய்க் களைத்துப்போய் தளம்பியிருந்த பேற்றுக்காப்பாளனை (Goal keeper) மாற்றி, தானே அப்பணியை ஏற்றுக் கொள்கிறான். அருமையாக இரு பந்துகளைத் தடுத்து, தனக்குக் கிடைத்த உதையை சிறப்பாக உதைத்து அன்று வெற்றி தேடித் தந்தான். அவன் தான் “றொபின் பெக்கின்

1991 காலப்பகுதி. இதே பெக்கினுடன் ஜெயராம் என்று இன்னொருவன். இருவருமே 15 வயதுக்குட்பட்ட என் பாடசாலை அணியின் பிற்காப்பு வீரர்கள். அந்த ஆண்டு மாவட்ட மட்டத்தில் இறுதிப்போட்டியில் வென்று முதலிடத்தைப் பெற முடியாவிட்டாலும் அருமையாக விளையாடி பாராட்டுப் பெற்றது அந்த அணி. இந்த பின்வரிசை வீரர்கள் இருவருமே ஏனையோரால் மிகவும் பாராட்டப்பட்டவர்கள். தொழில்முறை வீரர்களைப்போன்று அவர்களின் லாவகமும் பாணியும் இருந்தன. அப்போது பிரபல்யமாகப் பேசப்பட்ட இரு பிற்காப்பு வீரர்கள்.

இருவருமே என் வகுப்புத் தோழர்கள். ஒரே வகுப்பில் படித்தோம். அதுவும் ஜெயராம் என் ஊர்க்காரன் எனபதால் சற்றுக் கூடதலான அன்னியோன்யம் இருந்தது. இருவருமே அமைதியான சுபாவமுள்ளவர்கள். 1992இன் நடுப்பகுதியில் முதலாவது இடப்பெயர்வு நடந்தபோது ஜெயராமுக்கும் எனக்குமிருந்த தொடர்பு முறிந்து போனது.

ஆனால் பெக்கின் என்னோடயே கூடப்படித்தான். யாழ் இறுதி இடப்பெயர்வு வரை ஒரே வகுப்புத்தான். பல நேரங்களில் ஒரே வாங்குதான். (வாங்கு- Bench) நாங்கள் பின்வாங்கார். (பின்வாங்கார் பின்வாங்கார் எண்டு சொல்லுறது ஏன் தெரியுமோ? ஏனெண்டா அதவிட பின்வாங்குறதுக்கு வாங்கு இல்ல.) பாடசாலை நேரத்தை விட அடிக்கடி நாங்கள் பாடசாலையிலோ அல்லது வேறிடத்திலோ சந்திக்கிற சந்தர்ப்பங்கள் நிறைய இருந்திச்சு. உதைபந்து விளையாட்டுப் பயிற்சியின்போது அல்லது உடற்பயிற்சியின்போது இப்படியான சந்தர்ப்பம். ஓய்வு நேரமெண்டா உடன அதில ஒரு பாட்டுக்கோஷ்டி உருவாகும். அப்ப இசைக்குழுக்கள் தான் எங்கட பொழுதுபோக்கு. பெக்கின்தான் மேளமடிப்பான். அவனோட சேந்து 'ட்றம்' வாசிக்கிறது தோமஸ் எண்ட ஒருத்தன். அவனும் எங்கட வகுப்புத்தான் எண்டாலும் எங்களவிட ரெண்டு வகுப்புக் குறைய படிக்க வேணும் போல இருப்பான் (உருவத்தில). நடராஜா கொம்பாஸ், அதோட ரெண்டு சில்வர் கப், வேற ஏதாவது தகரச் சாமான், ரெண்டு பேனையள். இதுகள் தான் ட்றம் வாத்தியக்கருவி. யாராவது பாட்டுப்பாட இவங்கள் இசை குடுக்க அமர்க்களமாத்தான் பொழுது போகும்.

எங்களுக்கு ஒரு வகுப்பு மூத்ததாயும் இப்பிடியொரு கோஷ்டி இருந்திச்சு. கவிஞர் பொன். கணேச மூர்த்தியின் மூத்த மகன் மௌலி தான் அதின்ர தலை. அதவிட கேசவன், றுபன், யோன்போல், சுரேஸ், கண்ணன், ஜெயரட்ணம் எண்டு ஒரு பட்டாளம். அவையள் இருந்தா நாங்கள் அடக்கி வாசிப்பம். அவங்கட கோஷ்டி நிச்சயமா நல்லாயிருந்தீச்சு. அதில றுபன், கேசவன், யோன் போல், ஜெயரட்ணம் நாலு பேரும் இண்டைக்கு இல்ல. நாலு பேருமே “மாவீரர்கள்”.

பெக்கின் சரியான அமைதியான பேர்வழி. யாழ். பல்கலைக்கழக மைதானத்தில்தான் ஒவ்வொருநாளும் பின்னேரம் விளையாடிவிட்டு மானிப்பாய்க்கு வருவோம். அப்ப வாற வழியலில பம்பலடிச்சபடியே வருவோம். எங்கயேன் பெட்டயளோட ராத்த வெளிக்கிட்டா பெக்கின் நைசாக் கழண்டிடுவான். அந்தப் பிரச்சினையில எங்களோட சேர மாட்டான். அதப்போலதான் எங்கயேன் உதைந்தாட்டப் போட்டி முடிஞ்சு வெற்றியோட வரேக்க (எப்பவும் வெற்றிதான். கிட்டத்தட்ட 95 வீதம்) எங்களோட நல்லா பம்பலடிச்சு வருவான் (அவன்தானே அணிக்கு தலை). ஆனா கொஞ்சம் ஓவராப்போனா ரெண்டு தரம் சொல்லுவான். பிறகு சத்தம் போடாமக் கழண்டு தனியப் போயிடுவான்.

றோட்டில கள்ள மாங்காயள் பிடுங்கிறது கள்ள இளநீர் பிடுங்கிறது எண்டு எங்கட விளையாட்டுக்கள் கொஞ்ச நாளில அலுத்துப்போய், பப்பாப் பழம் பிலாப்பழம் எண்டு முத்தேக்க அவன் சரியான எரிச்சல்பட்டான். அந்த ஆட்டத்துக்கு தான் வரேல எண்டு ஒதுங்கிக் கொண்டான். எக்கேடும் கெட்டுப்போ, ஆனா எங்களக் காட்டிக்குடுக்காட்டிச் சரி, எண்டிட்டு விட்டுட்டம்.

அப்ப யாழ்ப்பாணத்தில சைக்கிளில பரலலாப் போறதுக்குக் கடுமையான தடை. தமிழீழக் காவல்துறை அதில கடுமையா நிப்பினம். ஆனாலும் நாங்கள் எங்களையறியாமல் அப்பிடிப் போவோம். அப்பவும் பெக்கின் எச்சரிப்பான். ஆனா நாங்கள் கேக்கிறேல. பிறகு எங்களவிட பிந்தி வருவான். நாங்கள் காவல்துறையிட்ட மாட்டுப் படேக்க அவன் அதுக்குள்ள இருக்கமாட்டான். தண்டம் கட்டுறதுக்கு எங்களிட்ட காசிருக்காது. அப்பிடியில்லாட்டி ரெண்டு மூண்டு மணித்தியாலம் மறிச்சு வச்சிட்டு விட்டுவிடுவினம். ஆனா நாங்கள் அவசரமாப் போகோணும், மச் இருக்கு எண்டு கெஞ்சிக் கூத்தாடி ஒரு மாதிரி வெளிக்கிடுவம். ஆனா பள்ளிக்கூடத்துக்கு அறிக்கை வரும். அத சூட்டோட சூடா அனுப்பினாப் பரவாயில்ல. அந்த போட்டி வெற்றியோட அது அடிபட்டுப்போகும். சிலவேள 10 நாள் கழிச்சுத்தான் பேர் விவரங்களோட அறிக்கை பள்ளிக்கூடத்துக்கு வரும். அப்ப அந்த மச் வெற்றியெல்லாம் மறந்துபோயிருக்கிறதால “நன்றி கெட்டதுகளால” குண்டி பழுத்திடும்.


1997 இன் ஆரம்பம். விடுதலைப்புலிகள் மாதந்தோறும் அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை “ஒளிவீச்சு” எண்டொரு ஒளிநாடாச் சஞ்சிகை வெளியிடுவார்கள். அதில் அம்மாத செய்திகள், சண்டை விவரங்கள், ஒரு குறும்படம், சமகாலப்பார்வை, இயற்கை சார்ந்த விடயங்கள், பொருண்மியத் தகவல்கள் என நிறைய விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கும். அதில் அம்மாதத்தில் வீரச்சாவடைந்த போராளிகளின் பெயர் விவரங்கள் அவர்களின் படத்தோடு வரும்.

அண்டைக்கும் அப்பிடியொரு ஒளிவீச்சு பார்த்துக்கொண்டிருந்தன். மாவீரர்கள் வரிசை வந்து கொண்டிருக்கு. திடீரெண்டு ஜெயராமின்ர மாதிரி ஒரு முகம். நிதானிக்கிறதுக்கிடையில அடுத்த படம். அது என்ன பேர் எண்டது கூட கேக்கேல. உடன படம் போட்டுக்கொண்டிருக்கிற ஆளிட்டப்போய் ஒருமாதிரிக் கேட்டு அந்த இடத்தைத் திருப்பிப் போட வச்சன். ஓமோம். அது என்ர ஜெயராமே தான். யாழ்ப்பாணத்தில வீரச்சாவெண்டு அறிஞ்சன். அவன் இயக்கத்துக்குப் போனது கூட எனக்குத் தெரியாது. பிறகு விசாரிச்சதில கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில படிச்சுக்கொண்டிருந்திட்டுப் போனவனாம்.

1999 நடுப்பகுதி. ஒருநாள் முல்லைத் தீவுக் கடற்கரையில நிக்கிறன். அதால கொஞ்சப் பெடியள் போனாங்கள். “வசந்தன்” எண்டு ஆரோ கூப்பிடுற சத்தம். ஆனா பழகின குரல். திரும்பிப் பாத்த உடன மட்டுக்கட்டீட்டன். அது பெக்கின் தான். தோளில ஏ.கே. ஒண்டோட. அதே அமைதியான கதை. அதே சிரிப்பு. எனக்கு ஆச்சரியம். ஏனெண்டா இந்த 4 வருசமா அவன நான் காணவேயில்ல. கொஞ்ச மாதத்துக்கு முதல்தான் இயக்கத்துக்குப் போனவனாம். என்ன இயக்கப்பேர் எண்டு கேட்டுத் தெரிஞ்சுகொண்டன். கனக்க கதைக்க நேரமில்ல. அதுக்குள்ள அவங்களுக்குரிய வண்டி (கடற்புலிகளின் படகை வண்டி எண்டுதான் சொல்லிறது) வந்திட்டுது.

பிறகொருநாள், ஓயாத அலைகள் -3 நடந்துகொண்டிருக்கேக்க அதே பெக்கின் நிலவரசனாக வெற்றிலைக் கேணிச் சமரில் வீரச்சாவடைந்ததாக பத்திரிகை பார்த்துத் தெரிந்து கொண்டேன். அவனது ட்றம் துணை தோமஸ், கப்டன் வானரசனாக வீரச்சாவடைந்ததை அறிந்துதான் அவனும் இயக்கத்துக்குப் போயிருந்ததை அறிந்து கொண்டேன். வேவு அணியில் இருந்தவனாம். அவனுக்குச் சரியான இடம். ஜெயரட்ணம் சினைப்பர் காரனாக இருந்து கப்டன் பொய்கையனாக வீரச்சாவடைந்ததையும் புலிகளின் குரலில் கேட்டேன். சண்டையில் இரண்டு காலுமில்லாமல் இருந்த எட்மன் என்ற இளங்குயிலனை (இவனும் என் பின்வாங்கான்தான். நானும் இவனும் 'குளப்பவாதிகள்' என்று வகுப்பில் பேரெடுத்தவர்கள். யாழ். இடப்பெயர்வுக்கு முதலே இயக்கத்துக்குப் போய்விட்டான்.) விசுவமடுவில் கண்டேன். பாடசாலையில் 100 மீற்றர் ஓட்டத்தில் பிரசித்தி பெற்ற அந்தக் கால்களை ஒரு கிளைமோர் காவிச்சென்றிருந்தது. கொஞ்ச நாளின்பின் இரண்டு பொய்க்காலுடனும் சைக்கிளில் ஓடிப்போவதைக் கண்டு பிரமித்து நின்றேன். இடைக்கிடை சந்திப்பேன். பின் முல்லைத்தீவில் அடிக்கடி சந்திப்பேன். கடற்புலியில் இருப்பதாகச் சொன்னான். எனக்கு அப்போதே புரிந்துவிட்டது. எதிர்பார்த்தபடியே பின்னொரு நாள் கடற்கரும்புலி மேஜர் இளங்குயிலனாக வெடித்துப் போனதைப் பேப்பரில் பார்த்தேன்.
----------------------------------------------------------------

1995 இடப்பெயர்வின்பின் 2003 இல் முதன்முதல் யாழ். போனேன். என் பாடசாலைக்கும் போனேன். எங்கும் புதுமுகங்கள். நான் படித்த காலத்தில் இருந்த ஆசிரியர் ஒருவரைச் சந்தித்ததால் மகிழ்ச்சி. பாடசாலையின் உதைபந்தாட்டத் திறன் அப்பிடியே இருக்கிறது. அண்மையில் இலங்கை மட்டத்தில் நடந்த போட்டியிற் கூட யாழ்ப்பாணம் சார்பில் அந்தப் பாடசாலை அணியே வந்திருந்தது. அனால் ஏதோ ஒரு போட்டியில் தோற்றுவிட்டது. 15 வயதுக்குட்பட்ட அணியைப் பார்க்க எல்லாம் தவ்வலுகளாகத் தெரிந்தது. நிச்சயமாக அந்த வயதில் என் தலைமுறை நல்ல வளர்த்திதான்.

அங்கிருக்கும் மாணவர்கள் சிலரோடு கதைத்தேன். பெக்கின் பற்றி கேசவன் பற்றி றூபன் பற்றிக் கேட்டேன். எவனுக்கும் எதுவும் தெரியாது. அது அவர்கள் பிழையன்று. யாருடைய பிழையுமன்று. ஆனால் மனம் வருந்தியது. முந்தி ஒவ்வொரு மாவீரர் நாளுக்கும் அந்தந்த பாடசாலையில் படித்து போராளியாகி வீரச்சாவடைந்தவர்கள் நினைவுகூரப்படுவர். அவர்களின் வரலாறு படித்துக் காண்பிக்கப்படும். நான் எழுதுவினைஞரிடம் சென்று மாவீரர்கள் வரலாறைக் கேட்டேன். நான் என்னை உறதிப்படுத்தியதும் தந்தார். சிலரின் விவரங்கள் இருந்தன. 1992 வரை வாசிக்கப்பட்ட அதே பதினொரு பேரின் விவரங்கள்.

வேறெதுவும் இணைக்கப்படவில்லை. என்னோடு படித்தவர்கள் மட்டுமே பதினொரு பேர் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட வேண்டியவர்கள். இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்துகொண்டு எதுவும் இணைக்க முடியாது. ஆனால் இனியும் அந்த விவரங்கள் அடுத்த தலைமுறைக்குப் போகுமா தெரியாது. ஏனென்றால் ஆக ஐந்தே ஐந்து ஆசிரியர்கள் மட்டுமே நான் அறிந்தவர்கள். மிகுதி அனைவரும் புதியவர்கள். அத்தோடு பழைய அதிபரும் மாற்றம். ஒன்றாக படித்த மற்றவர்களும் இல்லை. நிறையப் பேர் வெளிநாட்டில் அல்லது வன்னியில். சிலர் போராளிகளாக.

இன்று, கூட்டமாக எங்காவது ஒரு குழு இருந்து தாளம்தட்டிப் பாட்டுப்பாடினால் பழைய ஞாபகங்கள் வந்து தொலைக்கிறது. கூடவே பெக்கின், தோமஸ், றூபன், கேசவன், ஜெயராம், ஜெயரட்ணம், யோன் போல், எட்மன்… இன்னும் இன்னும்….

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"என் வியாகுலங்கள்..." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (08 May, 2005 19:46) : 

எழுதிக்கொள்வது: kulakaddan

மனத்தை கனக்க வைத்த பதிவு

12.4 8.5.2005

 

said ... (08 May, 2005 20:06) : 

எழுதிக்கொள்வது:

வருத்தமாக இருக்கிறது வசந்தன். :(

6.28 8.5.2005

 

said ... (08 May, 2005 20:06) : 

எழுதிக்கொள்வது:

எழுதிக்கொள்வது:

வருத்தமாக இருக்கிறது வசந்தன். :(

6.28 8.5.2005

6.28 8.5.2005

 

said ... (08 May, 2005 20:07) : 

எழுதிக்கொள்வது: 1

வருத்தமாக இருக்கிறது வசந்தன். :(

6.28 8.5.2005

 

said ... (09 May, 2005 08:07) : 

எழுதிக்கொள்வது: mahilan

நெஞ்சையுருக்கும் பதிவு.

8.35 9.5.2005

 

said ... (09 May, 2005 09:50) : 

கண்ணீரில் காவியங்கள்
செந்நீரில் ஓவியங்கள்
தண்ணீரில் ஓடம்போல்
தமிழீழக் கோலங்கள்

 

said ... (09 May, 2005 12:19) : 

மனம் வேதனையடைகிறது. நான் இது போன்ற கதைகளை ருஷ்ய நாவல்களிலும், சிறு கதைகளிலும் படித்ததுடன் சரி.

போர் எளிமையானதல்ல என்றாலும் இங்குள்ள அரசியல் அதை இன்னும் கொடூரமாக்குகிறது...

 

said ... (09 May, 2005 17:22) : 

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

 

said ... (09 May, 2005 20:41) : 

பள்ளிக்கூடப் பேரச் சொல்லுமன்.

 

said ... (28 August, 2005 12:23) : 

நளாயினி தாமரைச் செல்வன்,
கருத்துக்கு நன்றி.
முயற்சிப்போம்.

 

post a comment

© 2006  Thur Broeders

________________