Wednesday, December 10, 2008

மரங்கள் - 3 - தேன்தூக்கி -

==============================
நான் இவ்வலைப்பதிவில் எழுதத் தொடங்கி
நான்காண்டுகள் நிறைவடைகின்றன.
இதற்காக ஓரிடுகை. ;-)

==============================

மரங்கள் - 1 - வெடுக்குநாறி
மரங்கள் -2- விண்ணாங்கு



கடந்த ஈரிடுகைகளிலும் முறையே வெடுக்குநாறி, விண்ணாங்கு ஆகிய மரங்கள் பற்றிப் பார்த்திருந்தோம். இப்போது 'தேன் தூக்கி' என்றொரு மரம் பற்றி கொஞ்சம் அலசலாம்.

இதன் பெயர்க்காரணம் சரியாகத் தெரியவில்லை. தேனுக்கும் இம்மரத்துக்கும் ஏதும் தொடர்பிருப்பதாகவும் தெரியவில்லை. வேறேதேனும் பெயரிலிருந்து மருவி 'தேன் தூக்கி' என்று வந்திருக்கலாம். வேறிடங்களில் இம்மரம் வேறு பெயர்களில் அழைக்கப்படவும் கூடும்.

உருவம், பயன்பாடு:
வன்னிக் காடுகளில் இம்மரம் மிக அதிகளவில் வளர்கிறது. மிகப்பெரிய மரமாக வளராது; அதேநேரம் சிறியதாகவும் இல்லாமல் இடைப்பட்ட அளவில் வளரும். சுமார் முப்பது தொடக்கம் நாற்பது அடி உயரத்துக்கு வளரும். இளம் பருவத்தில் இதன் பட்டை மஞ்சள் கலந்த மண்ணிறமாக இருக்கும். மரத்தின் உட்பாகமும் மஞ்சளாகவே இருக்கும். முற்றிய மரமாயின் தண்டின் நடுவே கோறையாக இருக்கும். காய்ந்த நிலையில் சோத்தியான மரமாகவே இருக்கும்.

பச்சையாகவே வெட்டினால் குறிப்பிட்ட காலத்துக்கு இம்மரத்தைப் பயன்படுத்தலாம். கப்புகளுக்கு இம்மரம் பயன்படுத்தப்படுவதுண்டு.
விறகுத் தேவைக்கு இது பயன்படுத்தப்படுவதில்லை.

தேன்தூக்கி மரத்தின் சிறப்பியல்பு ஒன்றுண்டு. இது தனக்குக் கீழ் எதையும் வளரவிடாது. வெயில் கிடைக்கும் இடமாயிருந்தால் புற்கள் மட்டும் பசுமையாக வளரும், மற்றும்படி வேறெந்தத் தாவர வகைகளும் இம்மரத்தின் கீழ் வளரா. இது அனுபவத்தில் கண்டது தானேயொழிய விஞ்ஞானபூர்வமான முடிபு அன்று.

வன்னியில் 'வெட்டைக்காடு' என்ற சொல்லாடல் உண்டு. வெட்டையும் காடும் எதிர்மறையான பொருளுடைய இரு சொற்கள். வெட்டை என்பது மரஞ்செடிகளற்ற வெறும் வெளியைக் குறிக்கும். பிறகெப்படி இரண்டும் சேர்ந்து ஒரு சொல்லானது?

இங்கு 'வெட்டைக் காடு' என்பது உயரிய மரங்களைக் கொண்ட அடர்ந்த காடாகவுள்ள அதேநேரத்தில் பற்றைகளையோ உயரம் குறைந்த சிறு மரஞ்செடிகளையோ -அதாவது கீழ்வளரிகளைக் கொண்டிராத காடுகளைக் குறிக்கும்.

பெரிய மரங்களைக் கொண்டிருந்தாலும் நிலப்பகுதியில் அடர்த்தியான பற்றைகளைக் கொண்ட காடுகளுமுண்டு. இக்காடுகளில் இருபது யார் தூரத்துக்கப்பால் எதையும் அவதானிக்க முடியாதிருக்கும். இவற்றில் மனித நகர்திறன் மிக மோசமாக இருக்கும். அவ்வாறன்றி, நிலமட்டத்தில் பற்றைகளின்றி வெளியாக இருக்கும் அடர்ந்த காடுகளுமுள்ளன. நூறு யார் தூரத்துக்கும் அப்பாற்கூட நன்றாக அவதானிக்கலாம். தெருவில் நடப்பதைப் போல கைவீசிக் கொண்டு நடந்து போகலாம். அதேவேளையில் வெயில் நிலத்தில் விழாதபடி மிக அடர்ந்த காடாகவும் அது இருக்கும். இப்படியான காடுகளையே 'வெட்டைக் காடு' என்ற சொல்லால் அழைப்பதுண்டு.

தேன் தூக்கி பற்றிக் கதைக்க வந்து வெட்டைக்காடு பற்றி கதைக்கத் தேவையென்ன?
தேன்தூக்கி மரங்கள் அதிகமுள்ள காடுகள் அனேகமாக வெட்டைக் காடுகளாக இருக்கும். ஏனென்றால் தேன்தூக்கியின் கீழ் பற்றைகளோ வேறு தாவரங்களோ வளரா.

வன்னியில் முத்தையன்கட்டுப் பகுதிக் காடுகள் - குறிப்பாக முத்தையன்கட்டுக் குளத்தைச் சுற்றியுள்ள காடுகள் அடர்ந்த வெட்டைக் காடுகள்.

தமக்குக் கீழுள்ளவர்களின் வளர்ச்சியைப் பாழாக்கும் அதிகாரிகளை 'தேன்தூக்கி' என்று அழைக்கலாம். ;-)

தேன்தூக்கி தொடர்பில் இன்னொரு குறிப்புண்டு.
இம்மரத்தில் ஒருவகை உண்ணி இருக்கும். (அல்லது இவ்வகை உண்ணி இம்மரத்தில்தான் அதிகமாக இருக்கும்). தனியொரு உண்ணியை வெற்றுக்கண்ணால் உடனடியாகப் பார்த்துக் கண்டுபிடிக்க முடியாதபடி மிகமிகச் சிறிய உண்ணி. கூட்டமாக ஊர்ந்தால்தான் உடனடியாகக் கண்ணுக்குத் தட்டுப்படும். தேன்தூக்கி இலைகளில் கும்பலாகக் குடியிருக்கும் இக்கூட்டம் அவ்வழியே நகரும் மனிதர் மீது ஒட்டிக்கொள்ளும். பின் உரோமங்கள் அதிகமுள்ள இடங்கள் தேடி அமர்ந்துகொள்ளும். தேவையான நேரத்தில் அவ்வப்போது கடித்துக்கொள்ளும். ஒருவர் முழுமையாக உண்ணி பொறுக்கி முடிய இரண்டு மூன்று நாட்கள் கூட ஆகலாம்.

ஆனால் தேன்தூக்கி உண்ணியின் தாக்குதலுக்கு உள்ளாவது மிக அருந்தலாகவே நடைபெறும். ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் அந்த அதிஷ்டம் கிடைக்கும்.

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, May 20, 2008

நினைவுப்பயணம்-2 (சித்தங்கேணி, சண்டிலிப்பாயூடாக மானிப்பாய்) - ஒலிப்பதிவு

'நினைவுப்பயணம்' என்ற பெயரில் ஒலிப்பதிவுத் தொகுப்பொன்றை நான் தொடங்கியது சிலருக்கு ஞாபகமிருக்கலாம். (எனக்கே இடையிடையேதான் ஞாபகம் வரும்). கடந்தவருடம் ஜூன் முதலாம் திகதி இத்தொடரின் முதலாவது ஒலிப்பதிவை இட்டேன். சரியாக ஒருவருடம் முடிவதற்கு இன்னும் பத்துநாட்கள் உள்ள நிலையில் (இதன்மூலம் ஒருவருடம் இழுத்தடித்தான் என எவரும் சொல்ல முடியாதபடி செய்துவிட்டேன்.)இரண்டாவது ஒலிப்பதிவை வெளியிடுகிறேன்.

இப்போது சயந்தனும் என்னோடு கூட்டுச் சேர்ந்துள்ளார்.
எனவே இனி நிறையக் கதைப்போமென்று நினைக்கிறேன். அவசர அவசரமாகச் செய்யப்பட்ட ஒலிப்பதிவிது. சிறிதளவும் திருத்தங்களின்றி அப்படியே தருகிறோம்.

யாழ்ப்பாண நினைவலைகள விரைவில் முடித்து, வன்னிபற்றி நிறையக் கதைப்பதாகத் திட்டம்.

இனி, ஒலிப்பதிவைக் கேளுங்கள்.







ஒலிப்பதிவின் அடிப்படையில் காலவழுவொன்று இடம்பெறுகிறது. கண்டுபிடித்தால் சொல்லுங்கள்.

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, January 21, 2008

மரங்கள் - 1 - வெடுக்குநாறி

தெரிந்த மரங்களின் பெயர்கள் சிலவற்றைத் தொகுத்து வைக்கும் நோக்கத்தோடு இது எழுதப்படுகிறது.

மரங்கள் பற்றிய அறிவு, அனுபவம் என்பன வித்தியாசமானவை. பாடப் புத்தகங்களிலும், வேறு வழிகளிலும் மரங்கள் பற்றிய அறிவைப் பெறுவது ஒருமுறை. ஆனால் மரங்களை நேரிற்பார்த்து பழகி அனுபவம் பெறுவது வேறொரு முறை. நாம் அறிபவற்றில் அனுபவிக்கக் கிடைப்பவை சிலவே. அது நாம் வாழும் அமைவிடங்களைப் பொறுத்தது.

சிலமரங்கள், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுவதைக் கண்டிருக்கிறோம். பூக்களின் பெயர்கள் தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் வேறுபடுவதை வலைப்பதிவுகளில் கண்டிருக்கிறோம்.

இங்கே, மரங்களை அறிமுகப்படுத்த முடியாது. அவைபற்றிய முழுமையாக தரவுகள், படங்களுடன் இடுகையெழுத முடியாது. ஆனால் நான் பழகிய மரங்களின் பெயர்களைப் பதிந்து வைப்பது என்பதே இவ்விடுகையின் நோக்கம். இன்னும் ஈராண்டுகள் கழித்து, எனக்கே சில மரங்களின் பெயர்களை ஞாபகப்படுத்திக்கொள்வதுதான் இதன் முதன்மை நோக்கம்; மற்றவர்களுக்குப் பயன்படுமென்று நினைக்கவில்லை.

இப்படிச் செய்யவேண்டி வந்ததற்கு தலைப்பிலுள்ள 'வெடுக்குநாறி' தான் காரணம்.
இம்மரம் பற்றிய சம்பவமொன்றை அசைபோட்ட பொழுதில், அம்மரத்தின் பெயர் உடனடியாக நினைவுவர மறுத்துவிட்டது. இதென்ன கொடுமை? மிக அதிகளவில் பழகிய மரத்தின் பெயரொன்று வெறும் மூன்று வருடத்துக்குள், சடாரென்று நினைவு வராமற் போகுமளவுக்கு மங்கிவிட்டது திகைப்பாக இருந்தது. கொஞ்சம் யோசித்து பெயரை நினைவுபடுத்திக்கொண்டேன்.

சரி, இப்பிடியே போனா இன்னும் ரெண்டு வருசத்தில் மூளை மக்கிப்போன நேரத்தில இன்னும் பிரச்சினையாக இருக்குமே எண்டு நினைச்சு, அந்த நேரத்தில் உதவக்கூடிய மாதிரி எழுதி வைக்கிறதெண்டு முடிவெடுத்ததன் விளைவுதான் இவ்விடுகை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

யாழ்ப்பாணத்தில் இருந்தபோது அறிந்த மரங்களின் தொகை மட்டுப்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்திற் காணக்கிடைக்காத மரங்களில் நான் கேள்விப்பட்டிருந்த பெயர்கள்: பாலை, முதிரை, கருங்காலி போன்றன. இவைகள் தளபாடங்கள் மூலம் அறிந்த பெயர்கள். இவற்றில் பாலையைத் தவிர ஏனையவற்றை வன்னிக்கு நிரந்தரமாக இடம்பெயரும்வரை நேரிற் கண்ட ஞாபகமில்லை. இரண்டொருமுறை யாழ்ப்பாணத்திலிருந்து மடுத் திருநாளுக்காக வந்து போனதில் பாலைமரம் நல்ல பரிச்சயம். அவற்றைவிட வீரை, சூரை என்பவற்றைக் கேள்விப்பட்டதன்றி நேரிற் பார்த்ததில்லை.

1996 இன் தொடக்கத்தில் வன்னிக்கு வந்தபின்பு புதுப்புது மரங்கள் பலவற்றை அறியக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அவற்றிலொன்றுதான் இவ்விடுகைக்குரிய தலைப்பான 'வெடுக்கு நாறி'.

இந்தப் பெயர்வர என்ன காரணமென்று தெரியவில்லை. இம்மரத்தை வெட்டினால் ஒரு மணம் வரும், எல்லா மரத்துக்கும் வருவதைப் போலவே. ஆனால் அருவருக்கத்தக்கதாக அது இருக்காது. வெடுக்கு, நாறுதல் போன்ற சொற்களுக்கு தற்காலத்தில் நாம் கொண்டிருக்கும் பொருட்படி பார்த்தால் அது கொஞ்சம் அருவருக்கத்தக்க மணத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அப்படியில்லை.

இது நெடுநெடுவென்று நேராக உயர்ந்து வளரும், கிட்டத்தட்ட தேக்குப் போல. இளம் வெடுக்குநாறிகளைப் பார்த்தால் மின்கம்பங்களாக நடக்கூடிய மாதிரித்தான் நேராக உயர்ந்து வளர்ந்திருக்கும். பின்னர் முற்றிப் பருக்கும். நாலைந்து பேர் சுற்றிநின்று கட்டிப்பிடிக்கக் கூடியளவுக்குப் பருமனான வெடுக்குநாறிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படிப் பருத்த மரங்கள் எண்ணிக்கையில் குறைவாகவே காணப்படுகின்றன. அந்த நிலைக்கு வருவதற்கு முன்பே ஏதோவொரு வகையில் இம்மரங்கள் தமது வாழ்நாளை முடித்துக்கொள்வதாகக் கருதுகிறேன்.

இதன் இலைகள் கரும்பச்சை நிறத்திலிருக்கும். இதன் பட்டை கறுப்பாக இருக்கும். கொஞ்சம் தூரத்திலிருந்து பார்த்தால் கருங்காலி மரத்துக்கும் வெடுக்குநாறி மரத்துக்கும் உடனடியாக வித்தியாசம் பிடிக்க முடியாதபடி இருக்கும். கருங்காலிக்கு பட்டை தனிக்கறுப்பாக இருக்கும். அத்தோடு சிறிய செதில்கள் போல பட்டைத் துண்டுகள் மேற்கிளம்பியிருக்கும்.
ஆனால் வெடுக்குநாறிக்கு பட்டை மேற்பரப்பு மிகமிக அழுத்தமாக இருக்கும். அத்தோடு கறுப்பினிடையே (உண்மையில் வெடுக்குநாறியின் பட்டையின் நிறத்தைக் கறுப்பென்று சொல்லமுடியாது. கறுப்பும் கடும்பச்சையும் கலந்தவொரு நிறம்) வெளிர்நிறக் கோடுகள் நெடுக்காகத் தெரியும்.

அதைவிட மரத்தின் கிளையமைப்பு வெடுக்குநாறிக்கு வித்தியாசம். நெட்டையாக நிற்கும் இள வெடுக்குநாறிகளின் கிளைகள் கற்தேக்குப் போல ஓரளவு குடைவடிவக் கிளையமைப்பைக் கொண்டிருக்கும். (ஆனால் நன்கு முற்றிப் பருத்த வெடுக்குநாறி மரம் முற்றிலும் மாறுபட்டு சாதாரண மரங்கள் போன்று காட்சிதரும்.)

சரி, வெடுக்குநாறியின் பயனென்ன எனக் கேட்டால் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஒன்றுமில்லை. இதிலிருந்து தளபாடங்கள் எவையும் செய்ய முடியாது. வைரமான மரமன்று. விறகுக்குக்கூட இதைப் பயன்படுத்துவதில்லை. காய்ந்தபின், அடர்த்திகுறைவாகத் தெரியும்.
ஆனால் குறுகிய கால நோக்கில் இம்மரம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. நேராக நெடுத்து வளருவதால், அவ்வாறான கம்பங்களின் தேவையை இம்மரங்கள் நிறைவேற்றுகின்றன. அண்ணளவாக ஓராண்டு காலம்வரை இம்மரத்தைக் கொண்டு குறிப்பிட்ட பயனைப் பெறலாம். காய்ந்த பின் நிறை மிகக்குறைவாக இருப்பது இன்னொரு சிறப்பு.

அவசரமாக பதுங்கு - குழியமைக்க, கிணற்றுக்குக் குறுக்காக வளையொன்று (கப்பி கட்ட) போட, குறுகியகால வதிவிடம் அமைக்க வளையாக, தீராந்தியாக, கப்பாக என இம்மரம் பயன்படுத்தப்படுகிறது.

இவ்வின மரங்கள் வன்னிக் காடுகளில் மிகமிகச் செறிவாகக் காணப்படுகின்றன.
~~~~~~~~~~~~~~~~~~~~~
இம்மரத்தைப் பற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள், அல்லது எனது தகவல்களில் முரண்படுகிறவர்கள் பின்னூட்டங்களில் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.

இன்னொரு மரத்தோட அடுத்த இடுகையிற் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுகிறேன்.

நன்றி.

~~~~~~~~~~~~~~~~~~~~~

இடுகைக்குத் தொடர்பில்லாதது; டி.சேயின் பின்னூட்டத்தைத் தொடர்ந்து இப்படம் இங்கு இணைக்கப்படுகிறது.
நாயுண்ணிப் பூவின் படம். (பீநாறியும் நாயுண்ணியும் வெவ்வேறு செடிகள்)



படம்: அருச்சுனா

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, November 21, 2007

பாமரன் பேட்டையும் இராஜராஜனும்

நான்கு மாதங்களின்முன்பு தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்க்க நேரிட்டது. நிகழ்ச்சி தொடங்கி ஓரிரு நிமிடங்கள் தாமதமாகத்தான் பார்க்கத் தொடங்கினேன்.
நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்த முகத்தை எங்கோ பார்த்திருக்கிறேனே என்று யோசித்து, பின் கண்டுபிடித்துவிட்டேன். அவர் எழுத்தாளர் பாமரன்.

நிகழ்ச்சியின் பெயர் 'பாமரன் பேட்டை'.

அன்றைய நிகழ்ச்சியில் பாமரனுடனான நேர்காணலுக்கு வந்திருந்தவர் 'பெயர் மாற்றல் நிபுணர்' இராஜராஜன். (அவர் சோழன் என்ற ஒட்டைச் சேர்த்துள்ளதாக நான் அறியவில்லை. பின் எப்படி சயந்தனின் இடுகையில் அவர் இராஜராஜ சோழன் ஆனார் என்பது விளங்கவில்லை. பெயர் மாற்ற நிபுணரின் பெயரையே மாற்றிய நிபுணர் சயந்தன்.)

முன்பு 'சிகரம்' தொலைக்காட்சி இங்கு ஒளிபரப்பாகியபோது, இராஜராஜனின் நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டன. தமிழகத் தொலைக்காட்சியொன்றில் அவர் செய்யும் பெயர்மாற்ற நிகழ்ச்சியே இங்கு மறுஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. எங்காவது இந்நிகழ்ச்சி பார்க்க நேரிட்டால் பொழுதுபோக்காக அவ்வப்போது பார்த்திருக்கிறேன். ரி. ராஜேந்தருக்கு இவர்தான் பெயர்மாற்றினார் என்ற தகவல் அறிந்தபோது மனிதரில் ஒரு சுவாரசியமான ஈர்ப்பு ஏற்பட்டது. (கவனத்துக்குரிய கலைஞர் ஒருவரையே மடக்கிப்போட்டாரே என்ற ஆச்சரியத்தால் இருக்கலாம்). அதன்பின் சிகரம் நின்றுபோனது. தரிசனம் வந்தது. நல்லவேளையாக இந்தக் கோமாளி நிகழ்ச்சிகள் தரிசனத்தில் ஒளிபரப்பாகவில்லை.

இனி பாமரன் பேட்டைக்கு வருவோம்.
தொடக்கத்தில் தனது துறையைப் பற்றிச் சிறு அறிமுகத்தை அளித்தார் இராஜராஜன். பெயர்தான் உலகத்தில் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறதென்பது அவரின் அடிப்படை வாதம். பின்னர் நடந்தது சுவாரசியமான உரையாடல்.

** இந்தியச் சிறைகளிலிருக்கும் அனைத்துக் கைதிகளையும் தன்பொறுப்பில் விடுமாறும், அவர்களை தான் பொறுப்பெடுத்து அவர்களின் பெயர்களை மாற்றி, அவர்களை நல்லவர்களாக, வல்லவர்களாக மாற்றிக் காட்டுவதாகச் சொன்னார்.
சிறையிலிருந்து விடுதலை செய்து கையளிப்பதா அல்லது சிறையிலிருக்கும் நிலையிலேயே கையளிப்பதா என பாமரன் கேட்க, விடுதலை தேவையில்லை; சிறையில் வைத்தே பொறுப்பளிக்கும்படி இராஜராஜன் கேட்டுக்கொண்டார்.

** தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் பற்றி பாமரன் கேட்க, அவர்தான் உலகப்பயங்கரவாதத்தின் தலைவர் என்பதை இராஜராஜன் தெளிவாகச் சொன்னார். அவரின் பெயரை மாற்றிவிட்டால் அவர் நல்லவராகிவிடுவார், அமெரிக்காவும் உலகமும் நிம்மதியாக இருக்கலாமென்பதையும் இராஜராஜன் சுட்டிக்காட்டினார். அவரின் தந்தைக்கும் புஷ் என்ற பெயர் இருப்பதையும், அவரும் பயங்கரவாதத் தலைவராக இருந்ததையும் சுட்டிக்காட்டி, பெயர்தான் இந்த மனப்பான்மைக்குக் காரணமென்ற தனது வாதத்தை இன்னும் வலுவாக்கினார்.

*சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பற்றி பாமரன் கேட்க, அவருக்கும் அந்தப் பெயர்தான் பிரச்சினையாக இருந்ததென்றும் பெயரை மாற்றினால் அவர்கள் நல்லவர்களாக மாறி நாட்டுப்பிரச்சினை தீர்ந்துவிடுமென்றும் இராஜராஜன் கூறினார்.

** இடங்களுக்கு, நாடுகளுக்குப் பெயர்மாற்றுவது தொடர்பாக நேர்காணல் திரும்பியது.
'பம்பாய்' என்பதை 'மும்பை' என்று மாற்றியது தவறு என்றார் இராஜராஜன். அப்படி மும்பாயாக மாறியபின்புதான் அங்குக் குண்டுவெடிப்புக்கள் வன்முறைகள் என்பன தலைதூக்கின; அதற்குமுன்பு அது அமைதியான நகரமாக இருந்தது என்றார்.
இடையில் குறுக்கிட்ட பாமரன், பெயர் மாற்றத்துக்கு முன்பு நடந்த பல குண்டுவெடிப்புக்கள், அசம்பாவிதங்களைச் சொல்லிக் காட்டினார். அதற்கு, முன்பு குறைவாக இருந்தன, பெயர்மாற்றத்தின் பின்னர்தான் அவை அதிகரித்தன என்றார் இராஜராஜன். பாமரன் மேலும் சில விவரங்களைச் சொல்லப் புறப்பட்டபோது, 'நான் இதுபற்றி நீண்ட ஆராய்ச்சிகள் செய்துள்ளேன். தகவல்களைச் சேகரித்து வைத்துள்ளேன். இதுதொடர்பாக நான் உங்களுக்கு அவற்றைத் தரமுடியும்' என்று கூறினார். பாமரன் அத்தோடு மும்பாய் விடயத்தைக் கைவிட்டார்.

டில்லியை 'நியு டில்லி' என மாற்றியபின்பு அங்கு அமைதி நிலவுவதாகவும் அதற்குமுன் அங்கும் குண்டுவெடிப்புக்கள், வன்முறைகள் தலைவிரித்தாடின என அடுத்த விடயத்தைத் தொடங்கினார் இராஜராஜன். பாமரன் அதற்கும் சில விவரங்களைக் கொடுத்து, நியுடில்லி எனப் பெயர்மாற்றிய பின்னர்தான் அதிக வன்முறைகள் நடந்தன எனச் சொன்னார். பாராளுமன்றக் கட்டடத் தொடர் மீதான தாக்குதல் உட்பட சிலவற்றைச் சொன்னார் பாமரன். வழமைபோல 'நான் இதுபற்றி நீண்ட ஆராய்ச்சி செய்துள்ளேன்' என்ற பஞ்சாங்கத்தைப்பாடி அதிலிருந்தும் நழுவினார் இராஜராஜன்.

இலங்கைச் சிக்கல் பற்றியும் பேச்சு வந்தது. அது சிலோன் எனப் பெயர் இருந்தவரைக்கும் ஆசியாவின் பூந்தோட்டமாகத் திகழ்ந்ததாகவும், சிறிலங்கா எனப்பெயர் மாற்றியபின்புதான் அங்குப் பிரச்சினை தோன்றியதாகவும் இராஜராஜன் குறிப்பிட்டார்.
பா.: எப்போ இந்தப் பெயர் மாற்றம் நிகழ்ந்தது?
இரா: கொஞ்ச வருசத்துக்கு முன்னாடிதான்.
பா. அது சிலோனாக இந்தப்பவே 56 ஆம் ஆண்டுக் கலவரம் உட்பட பல பிரச்சினைகள் நடந்தன, தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்...
இரா: ஆமா, ஆனா பெயர் மாத்துறதுக்கு முன்னாடி பெரிசா பிரச்சினை இல்ல. அதுக்குப்பின்னாடிதான் ஒருத்தனை ஒருத்தன் அடிச்சிக்கிட்டு சண்டை போட ஆரம்பிச்சாங்க...

** இந்தியாவில் சில முக்கிய புள்ளிகளின் பெயர்களை மாற்றியது இந்த இராஜராஜன் தான். அதுபற்றியும், அப்படிப் பெயர்மாற்றப்பட்டவர்களில் இருவரின் தற்போதைய நிலைபற்றியும் பாமரன் கேள்வியெழுப்பினார்.
ஒருவர், தற்போது விஜய ரி. ராஜேந்தர் எனப் பெயர்மாற்றிக்கொண்டிருப்பவர்.
பெயர் மாற்றத்தின்பின்னான அவரின் தோல்வி குறித்துக் கேட்கப்பட்டபோது,
அவர் தன்னிடம் பெயர்மாற்ற வந்தபோது அரசியல் அனாதையாகத்தான் இருந்தாரென்பதைக் குறிப்பிட்டார் இராஜராஜன். இன்னும் சிலவற்றைச் சொல்லியவர், 2011 இல் ரி.ராஜேந்தர் தமிழகத்தின் மிகமுக்கிய அரசியற்புள்ளியாக வருவார் என்பதை தான் எதிர்வுகூறியதாகவும், அது கட்டாயம் நடக்குமென்றும் உறுதியளித்தார்.

இவரால் பெயர் மாற்றப்பட்ட இன்னொருவர் பா.ஜ.க. திருநாவுக்கரசு.
"அரசராக இருந்தவரை அரசுவாக பெயர் மாற்றினீர்களே, (நான் சொல்வது சரிதானே? அல்லது மறுவளமாகவா?) அந்தப் பெயர் மாற்றத்தின்பின்னர்தான் அவரின் அரசியலில் மிகப்பெரும் வீழ்ச்சியேற்பட்டது. மத்திய அரசில் முக்கியமான அரசியற்புள்ளியாக (அமைச்சராக?) இருந்தவர், பெயர் மாற்றத்தின்பின்னர் சொந்த மண்ணிலேயே போட்டிபோட முடியாத நிலைக்கு ஆளாகவிட்டாரே" என்று பாமரன் கேட்டார்.
அதற்கு இராஜராஜன் அளித்த பதில்தான் சிறப்பானது.

தனது பெயர்மாற்றத்தின்படி அவர் மிகவுயர்ந்த இடத்துக்கு வந்திருக்க வேண்டியவர். ஆனால் அவரின் தவறான அணுகுமுறையால்தான் இப்படியாகப் போனார். தவறான அணுகுமுறையென்ன என்பதை அவர் விளங்கப்படுத்தினார். அதாவது கட்சியைவிட்டு காங்கிரஸ் பக்கம் தாவியிருக்க வேண்டுமாம். சரியான நேரத்தில் தாவாதபடியால் அவரால் முக்கியமான புள்ளியாக வரமுடியவில்லையாம். அவர் சொந்தக் கட்சிக்கு விசுவாசமாக இருக்க நினைத்தார்; அதனால்தான் இப்படி ஆனார். திருநாவுக்கரசுவுக்கு அரசியல் சாணக்கியத்தனம் இல்லை. அதுதான் பிரச்சினையே ஒழிய தனது பெயர்மாற்றத்தில் எந்தப் பிரச்சினையுமில்லை என்றார்.
[இவ்விடத்தில் பாமரன் முகத்தில் தெரிந்தது நையாண்டித்தனமான சிரிப்பா அல்லது அதிர்ச்சியா என்பது தெரியவில்லை. ஆனால் மனிதர் ஆடிப்போய்விட்டார்.]

'அப்போ, அவர் வெல்லும் கட்சிக்குத் தாவியிருக்க வேண்டுமென்பதையா சொல்கிறீர்கள்?' என பாமரன் ஒரு தெளிவுக்காகக் கேட்டார்.
இராஜராஜன் அதைத்தான் தெளிவாகத் திருப்பச் சொன்னார். (அதைத்தானையா எல்லா அரசியல்வாதியும் செய்யிறான், இதுக்கெதுக்குப் பெயர் மாற்றம்?)

** தந்தை பெரியாரைப் பற்றியும் பேச்சு வந்தது. அவருக்குப் பெரியார் என்ற பெயர் வந்தபிறகுதான் அவர் பிலபலமானார் என்று இராஜராஜன் கூறினார். பெரியார் என்ற பெயர்பற்றி பாமரன் ஏதோ குறுக்கிட, 'மக்கள்தான் அந்தப் பெயரை அவருக்குக் கொடுத்தார்கள், அதன்பின்னர்தான் அவர் பிரபலமானார்' என்று இராஜராஜன் கூறினார்.
பாமரன்: அப்போ நீங்களும் பெரியார் என்ற பெயரை வைத்திருக்கலாமே? பிரபலமாவதோடு சமூகத்துக்கும் நல்லது செய்திருக்கலாம். ஏன் இராஜராஜன் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தீர்கள்?
அதற்கு இராஜராஜன் பெரிதாகச் சிரித்தபடி பாமரனுக்கு நக்கல் தொனியில் பதிலளிக்கிறார்,
"அட என்னங்க நீங்க?... இந்த ஒட்டுமொத்த உலகத்தையே ஒரு புரட்டுப் புரட்டப் போகிறேன் என்கிறேன், என்னைப்போய் பெரியார் என்று பெயர் வைக்கச் சொல்கிறீர்கள்? ராஜராஜன் என்ற பெயர்தான் இதற்குச் சரி."

அத்தோடு பாமரன் அடுத்த விடயத்துக்குத் தாவிவிட்டார்.;-).

** நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில் இராஜராஜனைப் பார்த்து,
'முன்பு கூட்டங்களில்தான் பேசிக்கொண்டிருந்தீர்கள், இப்போது தொலைக்காட்சியிலும் இடையறாது வருகிறீர்களே?' என்று கேட்டதற்கு அதைப் பெருமைபொங்க ஒப்புக்கொண்டார் இராஜராஜன். தனது நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேர அட்டவணையைச் சொன்னார்.

பாமரன்: முன்பெல்லாம் சின்னக்குழந்தைகளுக்கு உணவூட்ட உம்மாண்டி வருது என்று பயங்காட்டிச் சோறூட்டுவார்கள் தாய்மார், இப்போது இராஜராஜன் ரீவியில் வரப்போறார் என்று சொல்லித்தான் உணவூட்டுகிறார்களாம், உண்மையா?
[பாமரனின் இந்தக் கேள்வி எனக்கு பண்பற்றதாகவே தோன்றியது. என்னதான் ஒரு கோமாளியை முன்னிருத்திவைத்து நேர்காணல் செய்தாலும் இப்படி அவமதிக்கக்கூடாது. அதுவும் நாமே நேர்காணலுக்கு அழைத்துவிட்டு இப்படிச் செய்யக்கூடாதென்பது என் கருத்து.]

ஆனால் எந்தச் சலனமுமில்லாமல் சிரித்துக்கொண்டே, ஆஆ... அப்படியா? என்று கேட்டார் இராஜராஜன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் பார்த்த நிகழ்ச்சி. இன்னும் சில சுவாரசியமான சம்பவங்கள் விடுபட்டிருக்கின்றன என நினைக்கிறேன்.

இவ்விடுகையெழுதத்தூண்டிய சயந்தனுக்கு நன்றி.

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, June 01, 2007

நினைவுப்பயணம்-1 (பண்டத்தரிப்பு) - ஒலிப்பதிவு

இதுவொரு வித்தியாசமான ஒலிப்பதிவு முயற்சி. ஓடியாடித் திரிந்த இடங்களைப் பற்றிய நினைவுமீட்டலாக இருக்கும். முதற்கட்டமாக வீதியொன்றினூடான பயணமாக இது இருக்கும். பலவருடங்களின் முன் அவ்வீதியால் பயணம் செய்த நினைவை மீட்டுப் பார்க்கிறேன்.

முதற்கட்டமாக பண்டத்தரிப்புச் சந்தியிலிருந்து யாழ்ப்பாண நகர்ப்பகுதி நோக்கிய பயணம் தொடங்குகிறது. யாராவது ஒருவருக்கு இது சுவாரசியமாக இருக்கக்கூடும். பலருக்கு இது சலிப்பான ஒலிப்பதிவாக இருக்கும். ஏராளமானோருக்கு கதைக்கப்படும் இடங்களே தெரியாமலிருக்கும் சூழ்நிலையில் எப்படி சுவாரசியமிருக்கும்?
அப்படிப்பட்டவர்கள் என்வலைப்பதிவில் 'நினைவுப்பயணம்' என்ற தலைப்புடன் வரும் இடுகைகளைத் தவிர்த்துவிட்டால் போயிற்று.

இனி ஒலிப்பதிவைக் கேளுங்கள். நகர்ப்பகுதிக்குள் போவதற்குள் யாராவது துணையாக வந்து சேராமலா போய்விடுவார்கள்?



_____________________________
அனைவருக்கும் இலகுவாக ஒலிக்கோப்பின் கொள்ளளவு நன்றாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஒலிப்பதிவு: சிஞ்சாமனுசிக் கலையக பரீட்சார்த்தக்கிளை (அவுஸ்திரேலியா)

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, March 13, 2007

வன்னிக்குட் புகுந்த நினைவு

நாள்: 01.03.1996
இடம்: கிளாலிக் கடனீரேரி
நேரம்: மாலை

படகுகள் மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கின்றன. அவை யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து வன்னிப் பெருநிலப்பரப்பு நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றன. இனிமேல் யாழ்ப்பாணம் திரும்புவோமா இல்லையா என்பதே தெளிவில்லாமல் எல்லோரும் பயணிக்கிறார்கள். நிறையப் பேருக்கு அது யாழ்ப்பாணத்தினின்று நிரந்தர இடப்பெயர்வு.

மிகுதிக் கதைக்கு முன் ஒரு சுருக்கம்:
1995 ஒக்ரோபர் 17ஆம்நாள் சூரியக்கதிர்-1 என்ற நடவடிக்கையை இலங்கை அரசபடைகள் தொடங்கியிருந்தன. யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமத்தைக் கைப்பற்றும் நோக்கில் இந்நடவடிக்கை நடந்தது. ஒக்ரோபரின் இறுதிப்பகுதியில் வலிகாமத்திலிருந்து அனைத்து மக்களும் இடம்பெயர்ந்து தென்மராட்சிக்கு வந்திருந்தனர். முன்னேறும் இராணுவத்தை எதிர்த்து கடும் சண்டை நடைபெற்றது. இறுதியில் நவம்பர் இறுதியில் - மாவீரர் நாளுக்குப் பின்பாக யாழ்ப்பாணக் கோட்டையை இராணுவம் கைப்பற்றியதோடு அந்நடவடிக்கை முடிவுக்கு வந்தது. பின்னர் சில மாதங்கள் எதுவுமில்லை. இந்நேரத்தில் பல குடும்பங்கள் வன்னிக்கு இடம்பெயர்ந்தனர். வன்னிக்கு வரும்படி புலிகள் மக்களை அறிவுறுத்தினர். சூரியக்கதிர் -2, 3 என்ற பெயர்களில் தொடர் நடவடிக்கைகள் செய்து ஏப்ரலில் யாழ். குடாநாடு முழுவதையும் சிறிலங்காப் படைகள் ஆக்கிரமித்தன.

எமது பயணம் யாழ்.குடாநாடு முழுமையாக ஆக்கிரமிக்கப்பட முதல் நிகழ்கிறது.

கிளாலிக் கடனீரேலியில் முன்பு பயணம் செய்வதிலுள்ள பேராபத்தையும் கோரத்தையும் பலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதுபற்றி முன்பொரு இடுகையும் இட்டிருந்தேன். ஆனால் இப்பயணம் அப்படியான பயமேதுமற்ற பயணம். முன்பெல்லாம் இரவில் மட்டுமே பயணம். ஆனால் இப்போது பகலிலேயே படகுப்பயணம். மாலை நேரத்தில் நல்ல வெளிச்சத்தில் கிளாலிக்கரையிலிருந்து படகுகள் புறப்படுகின்றன. இப்போது தொடுவையாகவே படகுகள் பயணிக்கின்றன. அதாவது பலபடகுகள் ஒன்றன்பின் ஒன்றாக கயிற்றால் பிணைக்கப்பட்டிருக்கும். முதலாவது படகில் மட்டும் இயந்திரம் தொழிற்படும். மிகுதிப்படகுகள் அதன்பின்னால் இழுபட்டுக்கொண்டு போகும்.

நான் இயந்திரம் பொருத்தப்பட்ட முதலாவது படகில் இருக்கிறேன். மொத்தமாக பன்னிரண்டு படகுகள் பிணைக்கப்பட்டுப் பயணப்பட்டதாக ஞாபகம். இடப்பெயர்வு என்பதைத் தாண்டி எனக்கு அதுவொரு இரசிப்புக்குரிய பயணமாகவே இருந்தது. சூரியன் மேற்கே விழுந்துகொண்டிருக்கும் நேரத்தில், எதிரிகளாற் கொல்லப்படுவோமென்ற பயமற்ற, அமைதியான கடற்பயணம்.

அப்போது எனக்கு நீச்சல் அறவே தெரியாது. கடற்கரைக் கிராமமொன்றையே சொந்த ஊராகக் கொண்டிருந்தாலும், கடற்கரையோடே வாழ்ந்திருந்தாலும் நீச்சல் தெரியாது. வருடத்துக்கொருமுறை கடற்கரையில் நடக்கும் மாதா திருநாளின்போது மட்டும் கடற்குளிக்க அனுமதி. அதுவும் இடுப்பளவு நீரில் முக்கிமுக்கி எழும்புவதுதான் குளிப்பு. அப்பர் கண்காணித்துக்கொண்டிருப்பார். இவ்வளவுக்கும் அப்பருக்கு நன்றாக நீச்சல் தெரியுமென்பதும் - அதுவும் சிறுவயதிலிருந்தே நீந்துவாரென்பதும் ஒரு முரண். கடற்கரையிலேயே வளர்ந்த எங்களுக்கே இப்படியென்றால் யாழ்ப்பாணத்தின் மற்றக் கிராமங்களையும் பட்டினங்களையும் யோசித்துப் பாருங்கள். பரம்பரையாகக் கடற்றொழில் செய்பவர்களை விட்டுப்பார்த்தால் மற்றவர்கள் யாராவது வீட்டில் முரண்டுபிடித்து, பெற்றோருக்குத் தெரியாமல் எங்காவது நண்பர்களோடு சேர்ந்து நீச்சல் பழகினால்தான் உண்டு. வன்னி - யாழ்ப்பாணச் சமூகங்கங்களை ஒப்பிடுகையில் இந்த நீச்சலும் வித்தியாசக் காரணியாக இருக்கும். நானும் வன்னிக்கு வந்துதான் நீந்தப் பழகிக்கொண்டேன்.

படகுப்பயணத்துக்கு வருவோம். அந்தப்பயணத்தில் நீந்தத் தெரியாமை எனக்குப் பயத்தைத் தரவில்லை. தற்செயலாக விழுந்தாலும் பக்கத்திலிருக்கும் யாரோ காப்பாற்றுவார்கள்; ஓட்டியாவது காப்பாற்றிவிடுவார் என்ற நம்பிக்கையிருந்தது. கடற்பயணத்தில் நிறையப்பேர் சத்தி எடுப்பார்கள். அந்தப் பயணத்திலும் சிலர் எடுத்தார்கள். ஆனால் எனக்குச் சத்தி வரவில்லை. அது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. ஏனென்றால் வாகனப் பயணங்களில் கட்டாயம் சத்தி எடுத்தே தீருவேன். எங்கள் கிராமத்திலிருந்து யாழப்பாண நகருக்கு பேருந்தில் வந்தால் குறைந்தது இரண்டு தடவையாவது சத்தி எடுக்காமல் வந்து சேர்ந்ததில்லை. அதுகூட கையில்வைத்துக் கசக்கும் தேசிக்காயின் உபயத்தில்தான் மட்டுப்படுத்தபட்டிருக்கும். இதனாலேயே என் பன்னிரண்டாவது வயதின்பின் யாழ்ப்பாணத்துள் எங்குச் செல்வதென்றாலும் சைக்கிள் பயணம்தான். மானிப்பாயிலிருந்து பளைக்குச் செல்வதென்றால் 'ஐயோ சைக்கிளிலயோ?' என்று மற்றவர்கள் வாய்பிளக்கும் நேரத்தில் நான் சைக்கிளில் மட்டுமே பளைக்கு வந்து செல்வேன். கொம்படி - ஊரியான் பாதை நடைமுறையிலிருந்த போது (எனக்குப் பன்னிரண்டு வயதுகூட நிறைவடையவில்லை) புலோப்பளையில் சொந்தக்காரர் வீட்டுக்குச் சென்று ஒருகிழமை தங்கிவிட்டு வருவதாக வீட்டில் சொல்லிவிட்டு நானும் அம்மம்மாவும் மூன்றுவயது மூத்தவரான ஒன்றுவிட்ட அண்ணாவும் இரண்டு சைக்கிள்களில் வன்னி வந்து மூன்றுநாள் ஊர்சுற்றிவிட்டுத் திரும்பினோம். குஞ்சுப் பரந்தன் அடையும்வரை ஒரு குவளை பச்சைத்தண்ணீர்கூட குடிக்கமுடியாமல் இயங்கவேண்டியிருந்த - தண்ணீரின் அருமையை வாழ்க்கையில் முதன்முதல் உணர்ந்த அவ்வனுபவத்தை விட்டுப்பார்த்தால் அப்பயணம் மிகுந்த உல்லாசமாகவே எனக்கு இருந்தது. அந்தக் கள்ளப் பயணத்திலேயே வன்னி மீது எனக்கொரு அதீத பிடிப்பு வந்துவிட்டது. சைக்கிளில் வன்னி சென்று சுற்றி வந்ததை என் நெருங்கிய நண்பர்களிடம் சொன்னபோது யாருமே நம்பவில்லை. அப்பயணம் பற்றி பிறகொருக்கால் பேசலாம்.
வாகனப் பயணங்களில் தவறாமல் சத்தி எடுத்தே தீரும் நான், அனுபவமற்ற கடற்பயணத்தில் சத்தியெடுக்காமல் வந்தது ஆச்சரியம்தானே?

படகுகள் மெதுவாகப் பயணி்த்துக்கொண்டிருந்தன. நேவி வருவானோ? அடிவிழுமோ என்று முன்புபோல் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பயணம் செய்யவேண்டிய தேவையில்லை. இப்போதெல்லாம் நேவி இக்கடலில் வருவதேயில்லை.
படகுகள் ஆலங்கேணியை அண்மிக்கின்றபோது பொழுதுபட்டுக்கொண்டிருந்தது. இருள் சூழத்தொடங்கியது. கரையில் அரிக்கன் விளக்குகள் எரியத் தொடங்கிவிட்டன. படகுகள் கரையை அண்டின. தரையில் இறங்கினோம். வன்னிமண் நிரந்தரக் குடிமக்களாக எங்களை ஏற்றுக்கொண்டது. கரையிலிருந்து குறிப்பிட்ட தூரம் உழவு இயந்திரத்தில் மட்டும்தான் பயணிக்கலாம். பிறகுதான் ஏனைய வாகனங்களில் போகலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வாகனம் ஓரிடத்தில் நின்றது. இது என்ன இடம் என்று கேட்டேன். 'விசுவமடு றெட்பானா' என்றார்கள். பின்னர் இன்னொரு சந்தியில் நின்றது. வாகனத்தில் ஏதோ பிரச்சினை என்று சொல்லி எங்களை இறக்கிவிட்டு ஒரு திருத்தகம் தேடிப்போனார்கள். அது என்ன சந்தி என்று கேட்டேன். 'புதுக்குடியிருப்புச் சந்தி' என்றார்கள். "இந்தப்பாதை எங்க போகுது, அது எங்க போகுது" என்று விவரம் கேட்டுக்கொண்டிருந்தேன். அதில் ஒருபாதை முல்லைத்தீவு போகிறது.
'உப்பிடியே போனா நேர முல்லைத்தீவுக் காம்புக்குப் போகலாம்'
'கனதூரமோ?'
'சீச்சி!. ஒரு பத்துமைல் வரும்'.
இவ்வுரையாடல் நடந்து மூன்றுமாதங்களில் முல்லைத்தீவுப் படைத்தளம் தமிழர்களின் வசமாகியது. வன்னிப்பெருநிலப் பரப்புக்குள் தனித்துத் துருத்திக்கொண்டிருந்த ஒரே இராணுவப் படைத்தளம் இதுதான்.

நாங்கள் வன்னி வந்தபோது புதுக்குடியிருப்புச் சந்தியில் நாலோ ஐந்து கடைகள் மட்டுமே இருந்தன. இரவு எட்டு, ஒன்பது மணியோடு அவை பூட்டப்பட்டுவிடும். சந்தியில் மாடுகள் படுத்திருந்தன. சிலநாட்களிலேயே அச்சந்தி மாறத்தொடங்கி, பின் வன்னியின் மிகமுக்கியமான பட்டினமாகவே மாறிவிட்டது.

அன்றைய பயணம் புதுக்குடியிருப்பிலிருந்து முத்தையன்கட்டு நோக்கி உழவியந்திரமொன்றில் தொடங்கியது. விடிகின்ற நேரமாகிவிட்டது என்றாலும் பாதையை மூடி வளர்ந்திருந்த அடர்ந்தகாடு இன்னும் முழுமையான வெளிச்சத்தை விடவில்லை. மன்னாகண்டல் சந்திக்கு வருமுன்பே இருமுறை யானைகளைச் சந்தித்துவிட்டோம். எனது ஐந்தாவது வயதில் மடுவுக்கு நடந்துவந்தபோது காட்டுயானைகளைப் பார்த்தபின் இப்போதுதான் பார்க்கிறேன். அவை எதுவுமே செய்யவில்லை. தம்பாட்டுக்கு வீதியைக்கடந்து காட்டுக்குள் இறங்கின. முத்தையன்கட்டுக்கு வரும்வழியில் நீர்த்தேக்கங்கள் சில வந்தன. யாழ்ப்பாணத்து ஆரியகுளம் அளவுக்கு - சில அவற்றைவிடப் பெரிதாகவும் இருந்தன. அந்தக் குளங்களுக்கு என்ன பேர் என்று கேட்டபோது அவை குளங்களல்ல; மோட்டைகள் என்று விளக்கம் தரப்பட்டது.

முத்தையன்கட்டுக்கு வந்தாயிற்று. ஆனால் முத்தையன்கட்டுக் குளத்தைப் பார்க்கவில்லை. அடுத்தநாளே இரணைமடுவுக்குப் போகவேண்டி வந்தது. அந்த அதிகாலையில்தான் நான் முதன்முதல் இரணைமடுவைப் பார்க்கிறேன். எதிர்ப்பக்கத்துக் கரை தெரியவில்லை. முதலில் நான் இதை ஏதோ ஒரு கடனீரேரி என்றுதான் நினைத்திருந்தேன். பிறகுதான் சொன்னார்கள் இதுதான் இரணைமடுக்குளமென்று. பெரியகுளமென்று கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இவ்வளவு பெரிதாயிருக்குமென்று நினைக்கவேயில்லை. அந்த ஆச்சரியத்தோடே முத்தையன்கட்டு வந்தேன். அந்தக்குளமும் அப்படியேதான்.

பங்குனி மாசம் மிகக்கடுமையான பனி. அதுவும் முத்தையன்கட்டுக் குளத்தின் சுற்றுப்புறங்கள் மிகக்கடுமையான பனியாக இருக்கும். பல நேரங்களில் இருபதடியில் ஒருவர் நிற்கிறார் என்பதே தெரியாதளவுக்குப் பனிப்புகார் மூடியிருக்கும். மிக மகிழ்ச்சியாகவும் புதுமையாகவும் அந்த அனுபவம் இருந்தது.

நாங்கள் வன்னி வந்தபோது வன்னி வன்னியாகவே அதன் இயல்போடு இருந்தது. யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள் 'முகம்' என்று ஒரு திரைப்படம் வெளியிட்டிருந்தார்கள். அதில் வன்னியை வளங்கொழிக்கும் பூமியாகவும் அங்குக் குடிபெயர்வது நன்மை பயக்குமென்றும் ஒரு கருத்து இடம்பெறும். புதுவை இரத்தினதுரை வன்னிப் பெருநிலம் பற்றி எழுதிய "வன்னி அள்ளியள்ளி வழங்குகிறார் கொள்ளை வளம்" என்ற வரிவரும் அருமையான பாட்டொன்றும் அப்படத்தில் இடம்பெற்றது. பாடலிற்சொல்லப்பட்டது போல்தான் அப்போது வன்னியிருந்தது. பொதுவாக எல்லாப் பொருட்களும் யாழ்ப்பாணத்தோடு ஒப்பீட்டளவில் மிகமிக மலிவாக இருந்தன. பழவகைகளோ மீன், இறைச்சி வகைகளோ மிகமிக மலிவு. அப்போது வன்னியில் கிலோ மாட்டிறைச்சி வெறும் இருபது ரூபாய்கள் மாத்திரமே. யாழ்ப்பாணத்தில் இது எண்பது ரூபாவாக இருந்தது. நல்ல தேங்காய்கள் நாலு, ஐந்து ரூபாயாக இருந்தன. கொஞ்சநாட்களில் வன்னியிலும் எல்லாம் மாறத்தொடங்கியது. புதிய குடியிருப்புக்கள் வந்தன. நிறையக் கடைகள் முளைத்தன. விலைகள் அதிகரித்தன.

நான் முத்தையன்கட்டு வந்த முதல்அதிகாலை மறக்கமுடியாதது. விடிந்தபோது எங்கும் வண்ணத்துப்பூச்சிகள். அருகிலிருந்த தோட்டமொன்றிலிருந்து காட்டுப் புதர்நோக்கி போவதும் வருவதுமாக மஞ்சள் நிறத்தில் ஆயிரக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகள். அதற்குப்பின்னான வருடங்களில் அப்படியொரு வண்ணத்துப்பூச்சிப் பவனியை நான் பார்க்கவில்லை.
வந்த முதற்சில நாட்களில் மரங்கள், தாவரங்களை அறிவதில் சுவாரசியமாகப் போனது. வன்னி மரங்களில் பாலை மட்டுமே உடனடியாகக் கண்டுபிடிக்கக்கூடியவாறு முன்பே அறிமுகமாக இருந்தது. மற்றும்படி பெயரளவில் மட்டுமே கேள்விப்பட்டிருந்த முதிரை, கருங்காலி போன்ற வைர மரங்களுட்பட அதுவரை கேள்விப்படாத பலவற்றையும் அறிந்தேன். எல்லாப் பாலைமரங்களும் காய்ப்பன என்று அதுவரை நினைத்திருந்த நான் பெருமளவான பாலைமரங்கள் தம் வாழ்நாளில் காய்ப்பதேயில்லை என்பதை அறிந்துகொண்டேன்.
"தேவாங்கு" என்று மனிதரைத் திட்டப் பயன்படும் அந்த விலங்கு பலஇரவுகள் உரத்து அழுதுகொண்டிருக்கும். எங்களுக்கு அழுவதுபோல் இருந்தாலும் அதுதான் அவ்விலங்கின் உண்மையான ஒலி. அதைப்பார்க்க வேண்டுமென்ற என் விருப்பம் ஒருவருடம் தாண்டியபின்தான் நிறைவேறியது. யானைகள், மயில்கள், குரங்குகள் என்று மிகச்சாதாரணமாகப் பார்க்க முடிந்த விலங்குகள் நிறைய.

மேலும் சில விசயங்கள் சொல்லப் போனால் இடுகை நீள்வது மட்டுமன்றி முதன்மைத் தொனியிலிருந்து மாறுபட்டுவிடுமென்பதால் அவற்றை வேறோர் இடுகையில் வைத்துக் கொள்ளலாம்.

பிறகு எல்லாம் தலைகீழ். யானை பார்ப்பதென்றால் தவமிருக்கவேண்டிய நிலை. மயில்களும் வெகுவாகக் குறைந்து போயின. குரங்குகள் மட்டும் எப்போதும்போல இருந்தன.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிய அந்தப் படகுப்பணயத்தை மீள நினைக்கிறேன். யாழ்.குடாநாடு முழுமையாக அரசபடையால் ஆக்கிரமிக்கப்படப் போகிறதென்பதிலோ, ஆக்கிரமித்த இராணுவம் அடித்துவிரட்டப்படும்வரை மீளவும் யாழ்ப்பாணம் திரும்புவதில்லையென்பதிலோ எந்தச் சந்தேகமுமின்றி தெளிவாக இருந்தேன். நிறைய மக்கள் அப்படித்தான் இருந்தார்கள். கிட்டத்தட்ட எல்லோருக்கும் அப்பயணம் யாழ்ப்பாணத்துக்கான 'பிரியாவிடை' நிகழ்வு. சிலருக்கு நிரந்தரமான பிரிவு. கண்ணீரும் கம்பலையுமாகத்தான் பலர் பிரிந்தார்கள், இடப்பெயர்வில் எதிர்கொள்ளப் போகும் அவலங்களை நினைத்துமட்டுமன்று, யாழ்ப்பாணம் என்ற நிலப்பகுதியை விட்டுப் பிரிவதாலும்தான்.
அன்றைய நாளில் நான் இப்படியான உணர்ச்சிகளுக்கு ஆட்படாமலிருந்தேன் என்றுதான் நினைக்கிறேன். இனிமேல் வன்னிதான் நிரந்தரம் என்று அன்றே முடிவாகியிருந்தேன் என்றுதான் உணர்கிறேன். வன்னிமீது எனக்கிருந்த மயக்கமும் அந்தநேரத்தில் பொறுப்புணர்ச்சியற்றவனாய் இருந்த சூழ்நிலையும் புதிய அனுபவங்களையும் வாழ்க்கைச் சூழலையும் எதிர்கொள்ளும் ஆர்வமும் சேர, அப்பயணம் ஓர் உல்லாசப்பயணம் போன்றிருந்ததைச் சொல்லித்தான் ஆகவேண்டும்.

பிரதேசங்களைக் கொண்டு அடையாளப்படுத்துவது என்வரையில் தவறேயன்று. பிரதேச அடையாளங்களைத் தொலைத்துவிட்டோ மறைத்துவிட்டோ வாழ்வது அத்தனை சுலபமில்லையென்பதோடு அவசியமுமற்றது. என்னதான் இருந்தாலும் சொந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிமுகமாகும் நபர்களில் இயல்பாக ஏதோவோர் ஈர்ப்பு வந்துவிடுகிறது. [ஆனால் சொந்த மாவட்டக்காரன் (யாழ்ப்பாணம்) என்று வரும்போது எனக்கு எள்ளளவும் இந்த ஈர்ப்பு வருவதேயில்லை.] புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகி ஒருவருடத்தின் பின்புதான் நான் யாழ்ப்பாணம் போனேன். அங்குச் செல்ல வைத்தது சொந்தக் கிராமத்தில் நடந்த ஒரு கோயில் திருநாள்தான். ஊரைப் பார்க்கும் ஆவலோடு, இலங்கைக்குள் மட்டுமன்றி உலகத்தில் சிதறி வாழ்ந்த ஊர்க்காரரையும் உறவினரையும் ஒன்றிணைத்த அத்திருநாளில் எல்லோரையும் காணலாம் என்ற அவாவுமே என்னை அங்குப் போகவைத்தது. கிராமத்தின் எல்லா இடமும் திரிய முடியாதபடி தடையிருந்தாலும் சில இடங்களிலாவது காலாற நடந்து சிறுவயது ஞாபகங்களின் நினைவை மீட்டி இன்புற முடிந்தது. நிறையப் பேரை நீண்டகாலத்தின் பின் கண்டு அளவளாவ முடிந்த திருப்தியோடும், ஆயிரக்கணக்கான பனைகள் தறிக்கப்பட்டு ஓ வென்று வெட்டையாத் தெரிந்த இடங்களைப் பார்த்த பொருமலோடும், இன்னமும் கோயில் திருவிழாக்கள் முன்புபோலவே சண்டை சச்சரவுகளோடுதான் நடக்கின்றன என்ற புரிதலோடும், எங்கள் சொந்த வீட்டிலும் காணியிலும் முகாம் அமைத்து இருந்துகொண்டு அந்தச் சுற்றாடலையே உயர்பாதுகாப்பு வலயமாக்கி, கிட்டப் போயல்ல - எட்டத்திலிருந்தே வீட்டைப் பார்க்கும் விருப்பத்தையும் அனுமதிக்காமல் விரட்டிவிட்ட இராணுவத்தைச் சபித்துக்கொண்டும் "மூன்றுநாள் சூராவளிச் சுற்றுப்பயணத்தை" முடித்துக்கொண்டு யாழ்ப்பணத்தை விட்டு வெளியேறினேன்.

பிரதேச அடையாளத்தைப் பொறுத்தவரை, இன்னொரு பிரதேசத்தையோ அதன் குடிமக்களையோ தாழ்வாகக் கருதுவதும் ஒடுக்குதலுக்குள்ளாக்குவதும், தான்மட்டுமே உயர்ந்தவனென்ற இறுமாப்பும்தான் பிரச்சினைக்குரியது. அவ்வகையில் பிரதேசப்பெருமை கூடக் கவனமாகக் கையாளப்பட வேண்டியது. பலநேரங்களில் பிரதேசப்பெருமையையும் அடையாளத்தையும் ஓர் எதிர்வன்முறையாகவே பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகியபின் குறிப்பிட்ட படிப்பொன்றுக்காக யாழ்ப்பாணம் போன தங்கைகூட ராஜபக்ச பதவிக்கு வந்ததும் ஓடிவந்துவிட்டாள். யாழ்ப்பாணத்தில் வீடும் காணியும் பதிவில் மட்டுமே சொந்தமாக இருக்கிறது. வன்னியில் காணியும் வீடும் சொந்தமாச் சம்பாதித்தாயிற்று.

நினைவு தெரிந்தபின் என் வாழ்க்கையில் யாழ்ப்பாணத்தில் நான் வாழ்ந்த காலமும் வன்னியில் வாழ்ந்த காலமும் ஒரேயளவானவை. யாழ்ப்பாணத்தில் சிறுபராயம், வன்னியில் வளர்பராயம்.
இடத்தைக் கொண்டு அடையாளப்படுத்தவோ பெருமைப்படவோ வேண்டுமென்றால் நான் எந்த இடத்துக்குரியவனாக வெளிப்படுவேன் என்பது என்னைப்போலவே உங்களுக்கும் தெளிவாகத் தெரியும் (என்று நினைக்கிறேன் ;-)).
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தொடர்புடைய பழைய இடுகைகள்:
1. முத்தையன்கட்டு-சில நினைவுகள்-1
2. முத்தையன்கட்டு-சில நினைவுகள்-2

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, March 06, 2007

நாங்கள் பொம்பிளை பார்க்கும் முறை

சயந்தனின் பதிவுக்குரிய பின்னூட்டம் நீண்டதால் அலட்டலைச் சொந்த வலைப்பதிவிலேயே வைக்கலாமென்று நினைத்ததால் இவ்விடுகை.

நானறியவும் உப்பிடி பெண்பார்க்கும் படலம், பஜ்ஜி இன்னபிற, என்பன நடக்கவில்லை. (டி.சே சொன்னமாதிரி பஜ்ஜி செய்யத் தெரியாததும் காரணமா இருக்கலாம்). புகைப்படத்தோடே தொடங்கி ஓரளவு சரிவரும் நிலையில் எங்காவது பொது இடத்தில் இருவரையும் பார்க்க வைப்பது தான் பெரும்பாலும் நடக்கிறது. அப்படிப் பார்ப்பதில்கூட நிறைய நுட்பங்கள் கடைப்பிடிக்க வேண்டும். பொதுவாக கோயில்களில்தான் இச்சந்திப்பு நடைபெறுவதால் - அதுவும் ஏதாவது திருநாள் பெருநாளுக்கு நடைபெறுவதால் இருக்கக்கூடிய நனநெரிசலுக்குள், பார்க்க வேண்டியவர்கள் சரியாகப் பார்த்துக்கொள்வதற்கு ஏற்றாற்போல் இயலுமானவைகளைச் செய்ய வேணும்.

நான்கூட இதைச் செய்திருக்கிறேன். அப்போது எனக்குப் பதினொரு வயது இருக்கும். எங்கள் ஊர் தேவாலயத்திருநாள் ஒன்றில் இது நடந்தது. திருநாள் திருப்பலி முடிந்ததும் ஒருவர் என்னிடம் ஒரு திட்டம் விளக்கினார். கோயில் முற்றத்தில் நிற்கும் மலைவேம்பின் கீழே நான் இடம்பிடித்து வைத்திருக்க வேண்டும். என்னோடு சேர்ந்த சிறுவர்கள் சிலரைக் கூட்டிக்கொண்டு போய் அம்மரத்தின்கீழ் நின்றுகொண்டு குறிப்பிட்ட பெரியவர் வரும்வரை நேரத்தைப் போக்காட்ட வேண்டும். இதுமட்டும்தான் எனக்குச் சொல்லப்பட்டது. சொன்னவர் ஊரில் நல்லது கெட்டது எதற்கும் முன்னின்று நடத்தும் பெரியவர். எல்லா இடத்திலும் திறப்பை இவர்தான் வைத்திருப்பார். (திறப்பு என்ற சொற்பயன்பாடு யாருக்காவது ஞாபகம் வருகிறதா?). அதனால் மறுபேச்சில்லாமல் ஒத்துக்கொண்டாயிற்று. அப்போது, ஏன் என்று கேட்காமல் வரக்கூடிய கூட்டமும் என்னோடு இருந்தது.

திட்டப்படி பூசை முடிந்தவுடன் நாலைந்து பேரைக்கூட்டிக்கொண்டு குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றுவிட்டேன். ஒருவனை விட்டு நாலு கச்சான் சரைகளையும் வாங்கியாச்சு. ஏராளமான சனம். பூசை முடிந்ததும் கோயில்வளவில் நின்று கதைத்துக்கொண்டிருந்தார்கள். அனேகம்பேர் மரத்தைநோக்கித்தான் வருகிறார்கள். ஆனால் இருக்கும் கூட்டத்தை வைத்து அந்த இடத்தைத் தக்க வைக்க வேணும். என்னைத்தவிர வேறெவருக்கும் கட்டளை தெரியாது. அங்கிருந்து வெளிக்கிட்ட என் கூட்டத்தவரைத் தக்கவைக்க புதுப்புது முயற்சிகள் செய்தேன். வள்ளக்காச்சி அடித்து விளையாட்டு விளையாடினோம். குறிப்பிட்டவர் வந்தபாடில்லை. பிறகு நின்ற இடத்தில் இருந்து ரெண்டு காலையும் சேத்துவைச்சு ஆர் கனதூரம் பாயிறது எண்டு எங்களுக்குள்ள ஒரு போட்டி வைச்சன். அது கொஞ்சம் புழுதியும் கிளப்ப, பக்கத்தில நிண்டவை விலத்தினதால இன்னும் கொஞ்சம் பெரிய இடம் பிடிச்சம்.

இப்ப குறிப்பிட்ட பெரியவர் வந்து சேர்ந்தார்.

'சரிசரி தம்பியவை, புழுதியைக் கிழப்பாமல் அங்கால போய் விளையாடுங்கோ'
எண்டு சொல்லி அனுப்பினார். அவரோட இன்னொரு குழு வந்திருந்தது. தெரியாத முகங்கள்; வேற ஊர்க்காரர் எண்டது விளங்கிச்சு. சொன்னதைச் செய்துகாட்டின வெற்றிக்களிப்போட இஞ்சாலவந்து எங்கட பிராக்கைப் பாத்துக்கொண்டிருந்தம். அப்பதான் ஒருவிசயத்தைக் கவனிச்சன். நாங்கள் இடம்பிடிச்சு வைச்சிருந்த இடத்தில நிண்ட கூட்டத்திலயிருந்து ஒவ்வொருத்தரும் பக்கத்திலயிருக்கிற ஆக்கள் பாத்திடக்கூடாதெண்ட எச்சரிக்கையோட நைசா கடைக்கண்ணால அங்கால ஓரிடத்தை இடைக்கிடை பாத்துக்கொண்டிருந்திச்சினம். அதுக்குள்ள நல்லா வெளிக்கிட்டு நிண்ட அக்காவும் ரெண்டொருதரம் நைசா கண்ணைத் திருப்பிறதும் பிறகு ஒளிக்கிறதும் எண்டு விளையாட்டு நடக்குது. அவையள் பாக்கிற இடத்தில இன்னொரு கூட்டம். அது ஒரு பிட்டி. முந்தி என்னத்துக்கோ மண்கொட்டி பிறகு பாவிக்காமல் இறுகி பிட்டியா வந்திட்டுது. இவையள் நிக்கிற மரத்திலயிருந்து இருபது, இருபந்தைஞ்சு யார் தூரத்தில அந்தப்பிட்டி இருக்கு. என்ன நடக்குதெண்டு எனக்கு இன்னமும் விளங்கேல.

பிட்டிக்குப் பக்கத்தில போனன். நம்மட ஊர்க்காரர்தான். ஒருநாளும் வேட்டி கட்டிப் பாத்திராதவர் ஒருத்தர் அதுக்குள்ள பட்டுவேட்டி கட்டிக்கொண்டு கலாதியா நிக்கிறார். மரத்தடியில நடக்கிற கூத்துத்தான் இஞ்சயும் நடந்துகொண்டிருக்கு. அண்ணருக்குப் பொம்பிளை பாக்கினமாம் எண்டதை அரசல்புரசலா வீட்டில கதைக்கிறதை ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தன். எல்லாத்தையும் கூட்டிக்கழிச்சுப் பாத்துக் கண்டுபிடிச்சிட்டன். இவர் பொம்பிளை பாக்கக் கோயிலுக்கு வந்திருக்கிறார்; அவ மாப்பிள்ளை பாக்கக் கோயிலுக்கு வந்திருக்கிறா.
அந்தக் கலியாணத்துக்கு என்ர உதவியா பொம்பிளை வீட்டாருக்கு இடம்பிடிச்சுக் குடுத்த திருப்தியோட கலியாண வீட்டுச்சாப்பாடும் சாப்பிட்டன்.

இதில என்ன சொல்ல வாறன் எண்டா, பொம்பிளை பாக்கிற, மாப்பிள்ளை பாக்கிற சடங்கை நடத்திறவர் எவ்வளவு நுட்பமாச் செய்தார் எண்டதை. இருதரப்புமே மற்றத்தரப்பை வடிவாகப் பார்க்கக்கூடியமாதிரி இடங்களைத் தெரிவு செய்யிறதும், அந்த இடங்கள் சனநெரிசலில் பறிபோயிடக் கூடாதெண்டதுக்காக முற்கூட்டியே அணிகள் ஒழுங்கமைத்து அவ்விடங்களைக் கைப்பற்றிக் கொள்வதும் ஒரு தேர்ந்த செயற்பாடு. அந்தப் பிட்டியைக் கைப்பற்ற அவர் என்ன செய்தார் என்று தெரியாது. மரத்தடியைவிட அதற்குத்தான் போட்டி அதிகம். சுழட்டலுக்கு வந்துநிற்கும் மைனர் மச்சான்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட இடம் அது. அதில நிண்டு கூட்டத்தை ஒரு சுழட்டுச் சுழட்டலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பொம்பிளை பாக்கக் கோயிலுக்குப் போறது தொடர்பா இன்னொரு சுவாரசியமான சம்பவம் இடம்பெயர்ந்து இருக்கேக்க எங்கட ஊர்க்காரருக்கு நடந்தது.

எங்கள் ஊராள் ஒருத்தருக்குக் கலியாணம் பேசி, சீதனம் உட்பட்ட பிறவிசயங்கள் ஓரளவு சரிவந்து, பொம்பிளையை பார்க்க வைக்க ஏற்பாடாகியது. பக்கத்து ஊர் மாதாகோயில் திருநாளுக்குப் பொம்பிளை வீட்டாரை வரச்சொல்லியாச்சு. மாப்பிள்ளை வீட்டார் திருநாளுக்குக் கார்பிடிச்சுப் போக ஏற்பாடாகிவிட்டது. காரில போறவங்கள வேற்றுக்கிரகத்து ஆக்களாப் பாக்கிற நிலையிலதான் அப்ப யாழ்ப்பாணம் இருந்தது. திருநாளுக்கு முதல்நாள்தான் பொடிப்பிள்ளைக்குச் சொல்லப்பட்டது. அந்தநேரத்தில யாழ்ப்பாணத்தில பகல்-இரவு உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி நடந்துகொண்டிருந்தது. 3 நாட்களில முழுச்சுற்றுப்போட்டியும் முடிஞ்சிடும். மாப்பிள்ளை கழக விளையாட்டு வீரன். திருநாள் அண்டைக்கு பகல் அவர் விளையாடவேண்டியிருந்தது.
இந்தநிலையில மாப்பிள்ளை திருநாளைக்கு வர ஏலாது எண்டிட்டார். வீட்டில குழப்பம்.

'டேய்! என்ன சொல்லிறாய்? உன்னை நம்பி பெட்டைய வரச்சொல்லிப் போட்டம். இந்தநேரம்போய் இப்பிடி சொல்லிக்கொண்டிருக்கிறாய்? வேற ஒருத்தனை விளையாட விட்டிட்டு மரியாதையா பூசைக்கு வா. பிறகு விளையாடப் போ'
எண்டு அர்ச்சனை நடக்குது. மாப்பிள்ளை மசியிற பாடில்லை. ஆள் ஒரு விறுமன்தான். இரவுவரைக்கும் ஆள் முடிவு சொல்லேல. விடிய வெளிக்கிட்டுப் போறதுக்காக கார்க்காரனை இரவே வரச்சொன்னதால காரும் வந்திட்டுது.

'பொடிப்பிள்ளை கொஞ்சம் முறுக்கிக்கொண்டு நிக்கிறார். விடிய எல்லாம் சரிவந்திடும். பெட்டையப் பாக்க வராமல் உவரெங்க விளையாடப் போறது?' எண்டு பெரிசுகள் தங்களுக்குள் சமாதானம் சொல்லிக்கொண்டு பிரச்சினையை முடிச்சுக்கொண்டு படுத்தாலும் அதையெல்லாம் பொய்யாக்கி, சொன்னமாதிரி விடியவெள்ளன மாப்பிள்ளை விளையாடப் போட்டார்.

குடும்பம் அல்லோலகல்லோலப்பட்டது. ஆளாளுக்குச் சத்தம்போட்டார்கள். 'எளிய நாய், நாய்ப்புத்தியக் காட்டிப்போட்டான்' எண்டது தொடக்கம் வரையறையின்றி மாப்பிள்ளைக்கு வசவுகள் விழுந்தன. சும்மாநிண்டு பிரியோசினமில்லை எண்டு விளக்கி வெளிக்கிட்டவயளோட காரில ஏறி கோயிலுக்குப் புறப்பட்டார் எல்லாத்தையும் ஒழுங்கு செய்தவர்.

மாப்பிள்ளை இல்லாமல் கார் போனது. காருக்குள்ளயே சண்டை. தங்கட குடும்ப மானம் கப்பலேறியதாய் மாப்பிள்ளை குடும்பம் அலட்டிக்கொண்டிருக்க, 'என்ர மானத்தை வாங்கிப்போட்டியள், பிள்ளையச் சமாளிச்சு வரவைக்கத் தெரியேல உங்களுக்கு. இனி என்னை எவன் மதிப்பான்? அதுகளின்ர முகத்தில நான் எப்பிடி முழிக்கிறது?' எண்டு ஒழுங்கு செய்தவர் தாய்தேப்பனோட ஏறிப்பாய கார் கோயிலுக்குப் போய்ச்சேர்ந்தது. அங்கபோய் சடையப்பாத்து, ஏலாமல் ஒழுங்கு செய்தவரே நடந்ததைச் சொல்லி, 'பிள்ளை! உனக்கு அவன் சரிப்பட்டு வரான். காவாலிப் புத்தியக் காட்டிப்போட்டான். நல்லவேளை நீ தப்பிச்சாய்' எண்டு உண்மையைச் சொல்லி முற்றுப்புள்ளி வைத்தார். மாப்பிள்ளைத்தரப்பு, பொம்பிளை தரப்பு, இடைத்தரப்பு எண்டு மூண்டு தரப்புக்கும் மனஸ்தாபத்தோட அந்தப் பேச்சும் திருவிழாவும் முடிந்தது.

கொழுத்த சீதனச் சம்பந்தம் தொலைந்ததோடு மூவாயிரம் ரூபா கொடுத்து அயலூர்க்கோயில் திருவிழாவுக்குச் சவாரி போய்வந்த எரிச்சலும் சேர மாப்பிள்ளை வீட்டில் பிரளயமே நடந்த்து. அதுமட்டுமில்லை, விளையாட்டுக் கழகத்தோடயும் சண்டை. அவங்கள் தங்களுக்கு உப்பிடி ஒருவிசயமும் தெரியாது; தெரிஞ்சிருந்தா நாங்களே அவனை இழுத்துக்கொண்டு வந்து கோயிலில விட்டிருப்பம் எண்டிட்டாங்கள்.

ஆனாலும் அதிசயம் நடந்தது. குடும்பங்களுக்குள்ளதான் பிரச்சினை வந்ததேயொழிய, தொடர்புடைய ரெண்டு பேருக்கும் ஏதோ எங்கயோ பத்தி, சந்திப்பை டெவலப்பாக்கி, இன்னும் அட்வான்சாப் போய், திரும்பவும் ரெண்டு குடும்பத்துக்கயும் சண்டை சச்சரவுகளோட ஒருவாறு கலியாணம் முடிந்தது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தனிய புகைப்படத்தில மட்டும் பார்த்தே கலியாணம் முற்றாகின நிறையக் கலியாணங்களைக் கண்டிருக்கிறம். வெளிநாட்டுக்கான கலியாணம் எண்டா அப்பிடித்தான். ரெண்டுபேருமே தனிய புகைப்படத்தை மட்டும் பார்த்தே கலியாணத்துக்குச் சம்மதிக்க வேண்டிய நிலை. சில இடங்களில் மாப்பிள்ளை இல்லாமலே கலியாணம் மாதிரி ஒரு கொண்டாட்டம் கொண்டாடுவார்கள். பொம்பிளையை கொழும்புக்கு அனுப்ப முதல், வழமையான கலியாணக் கொண்டாட்டம் மாதிரி தடல்புடலாக் கொண்டாடித்தான் அனுப்பி வைப்பினம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தன்னார்வத் தொண்டாக கலியாணம் பேசுபவர்கள் எங்கள் தமிழ்ச்சமுதாயத்தில் நிறையப்பேர் இருக்கிறார்கள். சிலர் இதையொரு தவமாகவே செய்வார்கள். பெரும்பாலும் முதியவர்கள் (என்புரிதலின்படி குறிப்பாகப் பெண்கள்) இதில் மிகஈடுபாட்டுடன் இருப்பார்கள். கண்ணிலே தென்படும் பெடி பெட்டைகளை எல்லாம் கலியாணக் கண்கொண்டுதான் பார்ப்பார்கள். யாரை யாரோட கொழுவி விடலாம் (இது வேற கொழுவி;-) எண்டுதான் யோசித்துக்கொள்வார்கள். யாரும் கேட்காமலே வலியப்போய் சேவையில் இறங்கிவிடுவார்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முள்முருக்கு நடுவது பற்றி சயந்தனின் பதிவில்தான் முதன்முதல் கேள்விப்படுகிறேன். இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அறிய விரும்புவது, நட்ட கதியால் முளைக்காவிட்டாலோ ஆடு காந்தியதால் பட்டாலோ ஏதாவது அபசகுணமாக நினைக்கும் வழக்கமுண்டா?

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, February 13, 2007

வன்னி ->முத்தையன்கட்டு - சில நினைவுகள் -2

முந்திய நினைவு:
வன்னி ->முத்தையன்கட்டு - சில நினைவுகள் -1


[படத்திலிருப்பது முத்தையன்கட்டு குளக்கட்டுப்பாதையிலுள்ள வீரை மரம். மலைநாடானின் பதிவில் வீரை பற்றிக் கதைக்கப்பட்டது.]


முத்தையன்கட்டில் குறிப்பிடத்தக்க தொழில்களிலொன்று நன்னீர் மீன்பிடி. முத்தையன்கட்டுக்குளத்தில் வாடியமைத்து வள்ளம் வைத்து நன்னீர் மீன்பிடி நடக்கும். வலையில் 'ஜப்பான்' (பேச்சுவழக்கில் 'யப்பான்' என்பதால் இனி அப்படியே வரும்) எனப்படும் மீன்வகைதான் பிடிபடும். இது உருவத்தில் கிட்டத்தட்ட விளைமீன் போலிருக்கும். கறுப்பு நிறம் அதிகமாக இருக்கும். பொழுதுபடும் நேரத்தில் வலைபடுத்தால் விடியும்போது இழுத்துத் தெரிவார்கள். சிலர் பொழுதுபடும்போது தெரிவதுமுண்டு. பிற்காலத்தில் முத்தையன்கட்டுக்குளத்தில் பின்னேரச் சந்தை இருந்ததாக ஞாபகம்.


தூண்டில் போட்டு மீன்பிடிப்பவருமுண்டு. இதில் விரால், விலாங்கு என்பனவும் மாட்டுப்படும். தூண்டில் போடுவதைப் பலர் தொழிலாகச் செய்தாலும் சிலர் அதைப் பொழுதுபோக்காகச் செய்வதுண்டு. எங்கள் தரவளியள் அந்தவகைதான்.

யாழ்ப்பாணத்தாருக்கு குளத்துமீன் எண்டா அருவருப்புத்தான். வன்னியில வந்திருந்தவையும் தொடக்கத்தில அப்பிடித்தான். அதைப்பற்றிக் கதைச்சாலே சிலர் சத்தி வாறமாதிரி ஓங்காளிச்சுக் காட்டுவினம். பிறகு கொஞ்சப்பேருக்குப் பழகிப்போக, மிச்சாக்கள் இப்பவும் அப்பிடியேதான் இருக்கினம்.

வன்னி வந்த உடனயே நான் சூழலோட இயல்பாயிட்டன். எனக்குக் கிடைச்ச நண்பர்களும் சூழலும் அப்படி வாய்த்தது. குளத்துமீன் எனக்கொரு பிரச்சினையில்லை. கடல்மீனளவுக்கு உருசியில்லைத்தான் எண்டாலும் ஒதுக்கிற அளவுக்கு அதில எதுவுமில்லை.
கறிவைக்கும்போதுதான் சிக்கல் வரும். யப்பான்மீன் வெகுவேகமாகக் கரைந்துவிடும். வெட்டியமாதிரியே முறிகளுடன் சாப்பிடக்கூடியமாதிரி கறிவைச்சு முடிப்பது தனிக்கலை.


[இவர்கள் உண்மையில் வயிற்றுப்பாட்டுக்காகத் தூண்டில் போடுகிறார்கள்]
நாங்கள் அப்பப்ப குணங்கொள்ளேக்க தூண்டிலைத் தூக்கிக்கொண்டு மீன்பிடிக்கப் போவோம். வெளிநாட்டில தூண்டில் போடுறதை பெரிய பொழுதுபோக்கா செய்யிறதைப் பாக்கேக்க 'அட! இவங்களும் எங்கள மாதிரித்தான்' எண்டு நினைச்சுக் கொண்டேன்.
தூண்டில் கொண்டுபோறோமோ இல்லையோ றேடியோ கொண்டு போகவேணும். ஏனெண்டா அதுதான் பொழுதைப் போக்கும். நான் ஏதாவதொரு புத்தகத்தையும் கொண்டு போவன்.
துண்டிலுக்குரிய புழுப்பிடிக்கிறது பெரிய வேலை. மண்புழு தான் நாங்கள் பிடிக்கிறது. நினைச்சமாதிரி புழுப்பிடிக்கிறது சின்ன வேலையில்ல. அதைத் தேடிப்போனா எதுவும் கிடைக்காது. ஆளாளுக்கு சின்ன டப்பாவோட கல்லுப்பிரட்டிக் கொண்டிருப்பம் புழுக்களைத் தேடி. எனக்குக் கடைசிவரை புழுப்பிடிக்கிற கலை கைவரேல. அதுவழிய திரியிற சின்னப் பெடிபெட்டையள் பிடிச்சுத் தருவாங்கள். எனக்கு ரெண்டுமூண்டு வட்டனுகள் கிடைச்சாங்கள். பத்து போளைக்கு ஒரு டப்பா புழு எண்ட கணக்கில புழுக்கள் வரும்.

புழுப்பிடிக்கிறது மாதிரித்தான் மீன்பிடிக்கிறதும். எனக்குத் தூண்டில் போட்டுப் பழக்கினவர் சொன்னார்:
"தக்கயப் பாத்துக்கொண்டிரு; அது அங்க இஞ்சயெண்டு சாதுவா ஓடத்தொடங்கினா சடாரெண்டு கம்பை ஒரு வெட்டு வெட்டு; மீன் மாட்டுப்பட்டிடும்" எண்டு.
முதல்நாள் அவரோடயே இருந்து ஒருமணித்தியால் தூண்டில்போட்டன். ரெண்டோ மூண்டுதரம் தக்கை ஆடிச்சு. ஆனா மீன் மாட்டுப்படேல. நான் தூண்டில வெட்டுறது சரியில்லையெண்டார். மூண்டுநாள் மினக்கெட்டன். ஒருமீனும் மாட்டுப்படேல. நல்ல தெளிவான தண்ணியில எல்லாம் வடிவாத் தெரியும். தூண்டிலுக்கு நேர மீன்கள் வரும். அதுவும் கூட்டமா வரும். தூண்டிலிலயிருந்து ரெண்டிஞ்சி தூரத்தில வந்து மணந்துபாக்கிற மாதிரிப் பாத்துக்கொண்டிருந்திட்டுப் போயிடும்.
நான் ஒருவிசயத்தை யோசிச்சன். நான் கரையில இருக்கிறது மீன்களுக்குத் தெரியுது; அதாலதான் அலேட் ஆகி ஓடுது எண்டு நினைச்சன். உடம்பை மறைக்க படுத்திருந்து தூண்டில்போட்டன். நானிருந்தது ஒரு பிட்டியெண்டபடியா அது இலகுவாக இருந்தது.
சொன்னா நம்ப மாட்டியள்! நான் பிடிச்ச முதலாவது மீன் படுத்திருந்து பிடிச்சதுதான்.

அதுக்குப்பிறகு மீன்பிடிக்கிறது கொஞ்சம் பழகீட்டுது. நண்பர்கள் எல்லாரும் கொஞ்ச கொஞ்ச இடைவெளி விட்டு ஒவ்வொரு மூலையிலயோ பிட்டியிலயோ நிண்டு தூண்டில் எறிவம். ஒருத்தனுக்கு மீன் பிடிபட்டா எல்லாரும் அங்கபோய் போடுவம். மீன்பிடிக்கிறமோ இல்லையோ நல்லாப் பொழுது போகும்.

தூண்டிலை நோக்கி மீன்களை வரவைக்க சாப்பாடு போடுவம். பாண்துண்டுகள், சோறு, தோசைத்துண்டுகள் எண்டு சிலதுகளை தூண்டில் முள்ளடியில எறிவம். மீன்கள் நிறைய வரும். ஆனா தூண்டிலில இருக்கிற புழுவைமட்டும் விட்டிட்டு நாங்கள் போட்ட சாப்பாட்டைத் திண்டிட்டு 'தண்ணி' காட்டீட்டுப் போயிடுங்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கனநாளைக்குப்பிறகுதான் சுகமா மீன்பிடிக்கிற இன்னொரு வழிமுறை தெரியவந்தது. அது வாய்க்காலில மீன்பிடிக்கிறது. போகச்செய்கைக்கு தண்ணீர் திறந்துவிட்டா அதோட நிறைய மீன்களும் வரும். சிலர் என்ன செய்வினமெண்டா வாய்க்கால் ஒடுங்கிப்பாயிற இடத்தில சின்னதா ஒரு வலைவைச்சு அதால பிடிப்பினம். போக் ஒண்டுக்கால தண்ணி வந்து பாயிற இடத்தில நாங்களும் அப்பிடிப் பிடிக்க வெளிக்கிட்டு வலைகிடைக்காததால சாறத்தைப் பாவிச்சம். எங்களில ஒருத்தனின்ர சாறத்தை விரிச்சுவைச்சு ஒருக்கா கோலி எடுத்ததில நாலோ அஞ்சோ வந்துது.
'இஞ்ச தண்ணி அகண்டுபோகுது; போக்குக்குக் கிட்டவாப் போய் போடுவம்' எண்டு ஒருத்தன் சொல்ல ரெண்டாம்தரம் குழாய்க்குக்கிட்டவாய்ப் போய் சாறத்தை விரிச்சம். தண்ணி சாறத்தைக் கிழிச்சுக் கொண்டு போட்டுது.

[இது படத்தை வலப்பக்கம் தள்ள]


இரவு நேரத்தில தண்ணிபாயிற மதகில அரிக்கன் லாம்போட சிலர் இருப்பினம். தண்ணிவெளியேறிற பக்கத்தில லாம்பை தண்ணிக்குக் கிட்டவாப் பிடிக்க வேணும். மதகு தாண்டிவாற மீனெல்லாம் தண்ணியை எதிர்த்தபடி லாம்புவெளிச்சத்தில குமிஞ்சு நிப்பினம். இதைப்பற்றிக்கூட ஆராய்ச்சி செய்திருக்கிறம். மீன்கள் இயல்பாகவே மதகுதாண்டிவந்து தண்ணியை எதிர்த்து குமியுமா? அல்லது லாம்பு வெளிச்சத்துக்காகத்தான் அப்பிடிக் குமியுதா எண்டு வாதிச்சிருக்கிறம். மதகடியில லாம்பில்லாமல் ரோச்லைட் அடிச்சு, மதகில்லாத சாதாரண வாய்க்காலி்ல் லாம்பு வைச்சு, பகலில அதே இடங்களில மீன்கள் குமியுதா இல்லையா எண்டெல்லாம் சில பரிசோதனைகள் செய்திருக்கிறம். [நாயாத்தில வேற நண்பர்களோட இறால் பிடிக்கப்போகேக்கயும் இப்பிடி வாதம் வந்தபோது அவைக்கு விளங்கப்படுத்த எனது முந்திய பரிசோதனைகள் கைகுடுத்தன.]

வெளிச்சத்தில குமிஞ்சிருக்கிற மீன்களை அடிச்சுப்பிடிப்பினம். ஒரேயடியில நாலைஞ்சு மீன்கள் கிடைச்சாலும் கிடைக்கும். அடிபட்ட மீன் தண்ணியோட போகாமல் அங்கால ஒருத்தர் நிண்டு பிடிக்கவேணும். அனேகமா தடியாலதான் அடிப்பினம். ஓரிடத்தில தென்னம்பாளை பாவிக்கிறதைப் பார்த்திருக்கிறன். கற்சிலைமடுவில சிலர் வாளால வெட்டிறதைப் பாத்திருக்கிறன். கொஞ்சம் பெரிய மீனா வந்திட்டா வாளால ஒரே வெட்டுத்தான். அது சிலநேரம் ரெண்டுதுண்டாக்கூடப் போகும். 'உதென்ன விசர்வேலை பாக்கிறாங்கள்?' எண்டு நினைச்சதுண்டு.

[முத்தையன்கட்டுக்குளத்தின் கிளைவாய்க்காலொன்று]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எல்லாத்தையும்விட சுகமான மீன்பிடிக்கிற முறையொண்டிருக்கு. அதுதான் வத்தின குளத்தில மீன்பிடிக்கிறது. 'குழம்பிய குட்டையில் மீன்பிடித்தல்' எண்டு இதைத்தான் சொல்லிறவை போல.
தண்ணி வத்திக்கொண்டுபோற நேரத்தில குளத்திலயோ மோட்டையிலயோ மீன்பிடிக்கிறது லேசான வேலை. அதுவும் எருமைகள் இறங்கி சேறடிச்சு வைச்சா அந்தமாதிரியிருக்கும். வெயில் நேரத்தில சேத்துக்கு மேல்மடத்தில விரால், விலாங்கு எல்லாம் மினுங்கிக்கொண்டிருக்கும். தண்ணியில ஓடுறமாதிரி அவையால தப்பியோடவும் முடியாது.
அப்பிடி வத்தின குளத்தில மீன்பிடிச்ச ஒரு சுவாரசியமான சம்பவம் இனி வருகிறது.

முத்தையன்கட்டுக்குப் பக்கத்தில புளியங்குளம் எண்டு ஓரிடம் இருக்கு. இது 'ஜெயசிக்குறு' புகழ் புளியங்குளமில்லை. அது கண்டிவீதியில இருக்கு. இது ஒட்டுசுட்டானிலயிருந்து முள்ளியவளை வாற றோட்டில கொஞ்சத் தூரத்தில வரும். புளியங்குளம் எண்ட குளத்தை மையமாக வைச்சுத்தான் அந்தக் கிராமத்துக்கு இந்தப்பேர். இதுவும் முத்தையன்கட்டுக் குளத்துக்குரிய நீர்ப்பாசனப் பகுதிதான்.
அந்தக்குளத்தில நிறைய மீன்கள் இருக்கும். 1997 இல தண்ணிவத்தின கோடையில அந்தக் குளத்துமேல ஒரு தாக்குதல் நடத்தினோம். வேறென்ன? மீன்பிடிக்கிற தாக்குதல்தான்.

வழமையாகவே அந்தக்குளம் எருமைகளின் குளம். அந்தச் சுற்றுவட்டார எருமைகளெல்லாம் அந்தக்குளத்திலதான் பிரண்டெழும்புங்கள். தண்ணிவத்திக்கொண்டு போற காலத்தில சொல்லத் தேவையில்லை. தண்ணிதேங்கி நிண்ட சிறுபகுதி முழுவதையும் சேறடிச்சு வைச்சிருந்துதுகள். வெயில்நேரத்தில சேத்துக்கு மேல மினுமினுத்துக்கொண்டிருக்கிற விலாங்குகள் வேற ஆசையை இன்னும் தூண்டிவிட்டுதுகள். அந்தக்குளத்தில முதலை இல்லை எண்டதை ஏற்கனவே கனபேரிட்ட கேட்டு உறுதிப்படுத்தியிருந்தம். இனி இறங்கவேண்டியதுதான் மிச்சம்.

'விலாங்கு லேசில கையில அம்பிடாது. வழுக்கிக்கொண்டு போகும்; அதைப்பிடிக்கேக்க பாம்பைப் பிடிக்கிறமாதிரியொரு உணர்வு வரும்; பயப்பிடக்கூடாது; அரியண்டப்படக்கூடாது; பிடிச்சுப்பிடிச்சு கரைக்கு எறியவேண்டியதுதான்'
எண்டு திட்டங்கள் விளங்கப்படுத்தி அணி தயாராயிட்டுது. அந்த அணியில நான்தான் இளையவன். எண்டாலும் வளத்தி எண்டபடியா கூட்டத்தில சேத்திருந்தாங்கள். கரையில நாலுபேர் நிக்க நாங்கள் நாலுபேர் சேத்துக்க இறங்கிறதெண்டு முடிவாயிட்டுது. தூரத்திலயிருந்து பாக்க எதுவும் தெரியேல. ஆனா கிட்டவரேக்கதான் குளத்தின்ர நாத்தம் மூக்கை அடிச்சுது. ஏற்கனவே மீ்னகள் செத்துக்கிடந்தது தெரிஞ்சுது. குளத்தில தண்ணியே இல்லை, வெறும் சேறுதான். சேறடிச்ச வயல்மாதிரி கறுத்த நிறத்தில கிடந்தது.
நடுவில கொஞ்ச இடத்தைவிட்டு சுத்திவர எருமைகள் படுத்துக்கிடந்தன. ஒருபக்கத்தில கிடந்த எருமைகளை கஸ்டப்பட்டு எழுப்பிக் கலைச்சம். எழுப்பிக்கலைச்சதில ஏற்கனவே சேறாக்கிடந்த இடம் இன்னும் நல்லாப் பதப்பட்டிருந்திச்சு;-).
அந்தப்பாதையாலதான் உள்ள இறங்கவேணும்.

சேறையும் நாத்தத்தையும் நினைச்சா ஒருமாதிரியிருந்திச்சு. உதைப்பாத்தா முடியுமோ? நாலுபேரும் சேந்து இறங்கினம். முழங்காலளவு சேத்திலயே கையால துலாவி ரெண்டு மூண்டு விலாங்கு பிடிச்சாச்சு. எண்டாலும் நடுவிலதான் நிறைய விலாங்குகள் மினுங்கிக் கொண்டிருந்தன. இன்னும் முன்னேறினோம். ஆனா நினைச்சமாதிரியில்லை. ஒரு காலடி எடுத்துவைக்கவே நிறைய கஸ்டப்பட வேண்டியிருந்தது. அடியில் அப்படியான சதுப்பு. புதைந்த காலை மேலே இழுக்க உன்னினால் மற்றக்கால் இன்னும் அதிகம் புதையும்.
இப்போது இடுப்பளவு சேத்தில் நிக்கிறோம். மீன்கள் மாட்டுப்பட்டன. ஆனால் ஓரடிதானும் எடுத்துவைக்க முடியாது. பிடித்தமீனை கரைக்கு எறியிறதுக்குக்கூட முடியாத நிலை. ஒருகாலை எடுத்துவைச்சு பின்பக்கம் திரும்ப முடியாது. ஏற்கனவே அப்பிடி திரும்பின நிலையில நிக்கிற ஒருத்தனிட்ட குடுக்க அவன் கரைக்கு எறிவான். ஆனா அவனின்ர எறி கரைக்குப் போகாது. ரெண்டுகாலும் வேர் விட்டமாதிரி நிண்டுகொண்டு என்னெண்டு கனதூரம் எறியிறது? எறியிறதெல்லாம் கரையிலயிருந்து பத்தடி பதினைஞ்சடி தூரத்தில விழுந்துது. சின்னமீன்கள் மட்டும்தான் கரைக்குப் போயின.

கரையில நிண்டவங்கள் நாலுபேரும் நல்ல நோனாக்கள். எறிஞ்சமீனுகளை சேத்துக்க இறங்கி எடுக்கமாட்டாங்களாம்.
'இன்னும் கொஞ்சம் வீச்சா எறி' எண்டு கொமாண்ட் வேற. நாங்கள் படுற பாட்டைப்பாத்துச் சிரிச்சுக்கொண்டும் நிக்கிறாங்கள். நடுவில நிண்ட நாலுபேருக்கும் ஆத்திரம் ஒருபக்கம்; எப்பிடித் திரும்பிப் போறதெண்ட யோசினை ஒருபக்கம். கால்கள் சோர்ந்து போச்சு. நாரி கடுத்தது. நாலுபேரும் ஒண்டாச் சேந்து திரும்பினம். ஒருவரையொருவர் மாறிமாறி இழுத்தெடுத்து கரைக்கு வந்து சேர்ந்தாச்சு. நோனாக்கள் நாலுபேரையும் பிடிச்சு சேத்துக்குள்ள உருட்டிப்பிரட்டிப் போட்டுத்தான் கூட்டியந்தம். இப்ப நாத்தமொண்டும் அடிக்கேல. கிட்டத்தட்ட ஒரு உரைப்பை விலாங்கு பிடிச்சிருந்தம். தடியில கொழுவிக் காவிக்கொண்டு வந்தம்.

மீன்கறியில சேத்துநாத்தம் வருதெண்டீச்சினம். முழுமீனும் குப்பைக்குத்தான் போனது. எங்களிலயும் நாறுது எண்டினம். நல்லவேளை குப்பையில போடேல. ஆனா அதைவிட கொடுமை நடந்தது. மூண்டுநாளா யாருமே எங்களை அண்டேல. அந்தளவுக்கு நாறினோமாம். ஆனா எங்களுக்கு எந்த நாத்தமும் தெரியேல.
சவுக்காரம் நெருப்பு விலை விக்கேக்க டெற்றோல் போட்டுக் குளிச்சம். பிரியோசினமில்லை.
ஒரு மனுசன்ர கதையக்கேட்டு சாம்பல் போட்டு பொச்சுமட்டையால உரஞ்சிக் குளிச்சம். ஓரளவு பயனிருந்தது.
நானெண்டாலும் பரவாயில்லை. எங்களில ஒருத்தனை வீட்டுக்குள்ளயே விடேல. அவன்ர வீட்டுப் பின்பத்தியிலயே உடுப்பெல்லாம் தூக்கிப்போட்டு அங்கயே சிங்கனுக்குச் சாப்பாடெல்லாம் வச்சுவிட்ட கொடுமை நடந்தது.

எங்களுக்கு இண்டைவரைக்கும் விளங்காத விசயமென்னெண்டா, அதே குளத்துச்சேத்தில நாள்முழுக்கக் கிடக்கிற எருமைகளை அண்டிற சனம், அதுகளிலயிருந்தே பாலெடுத்துப் பாவிக்கிற சனம், எங்களுக்கு மட்டும் ஏன் இப்பிடி கொடுமை செய்தது எண்டதுதான். அந்த மூண்டுநாளா கவட்டுக்கயும் காலிலயும் சொறிசொறியெண்டு சொறிஞ்சு வந்த வேதனையை விட இதுதான் அதிக வேதனை.


[பதிவுக்கும் இந்தப்படத்துக்கும் நேரடியாத் தொடர்பில்லை. ஆனா முத்தையன்கட்டுப் பற்றிச் சொல்ல வந்திட்டதால இப்படம் பொருத்தம்தான். இது முத்தையன்கட்டுத் தவறணைகளில ஒண்டு.]
(பிளா பற்றித் தெரியாத அம்மணியள் பாத்துத் தெரிஞ்சு கொள்ளுங்கோ)
_______________________________
படங்களுக்கு நன்றி: அருச்சுனா

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Sunday, January 14, 2007

கலந்துரையாடல் ஒலிப்பதிவு -தைப்பொங்கல் சிறப்புப் பதிவு

வலைப்பதிவு அனுபவங்கள் பற்றி வலைப்பதிவாளர் இருவர் கலந்துரையாடிய ஒலிப்பதிவை இங்குப் பதிவாக்குகிறோம்.
தைப்பொங்கலை முன்னிட்டு நாம் தரும் சிறப்புப் பதிவு இது.

நானும் சயந்தனும் மூன்று மாதங்கள் இடைவெளியில் வலைப்பதிய வந்தவர்கள். இரண்டு வருடங்கள் நிறைவாகிவிட்டன.
இந்நிலையில் நாங்கள் வந்த காலப்பகுதி பற்றிய சில மீளும் நினைவுகளோடு குறுகியநேர கலந்துரையாடலொன்றை கணினி-தொலைபேசி வழித் தொடர்புமூலமாகச் செய்தோம். இதுவரை கட்டிக்காத்த சில இரகசியங்கள் இதில் கசியவிடப்பட்டுள்ளன.

எதுவித ஆயத்தமுமின்றி திடீரென கதைத்ததில் இருபத்தைந்து நிமிடங்கள் வரை நீண்ட கலந்துரையாடலை வெட்டிச் சுருக்கித் தொகுத்தவர் சயந்தன். கலந்துரையாடலின் தொடக்கப்பகுதியும் முடிவுப்பகுதியும் தெளிவற்றுப் பதிவாகியதால் அவையும் வெட்டப்பட்டன. எனவே சிலருக்கு தொகுப்பு மொட்டையாகத் தொடங்கி மொட்டையாகவே முடிவதுபோல் தோன்றலாம். மீண்டும் ஒலிப்பதிவு செய்ய நாங்களெடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனவே அப்படியே தருகிறோம்.

ஒலிப்பதிவைக் கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.




Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, January 02, 2007

கிளாலிக் கடனீரேரி - சில நினைவுகள்

************
படகுகள் ஒவ்வொன்றாக நகர்கின்றன. ஒவ்வொன்றிலும் பதினெட்டுப் பேர் என்றளவில் நிரப்பப்பட்டு பயணம் தொடங்குகிறது. எல்லாமே தனித்தனிப் படகுகளாகப் பயணிக்கின்றன. பெரும்பாலானோர் கரையிலிருந்தே தமது விருப்பத்துக்குரிய தெய்வங்களை மன்றாடத் தொடங்கிவிட்டார்கள். அனேகமாக அக்கரை சென்று சேரும்வரை இப்படித்தான் மன்றாடிக்கொண்டிருப்பார்கள். மன்றாட்டை முணுமுணுக்கும் அளவுக்குக்கூட மெதுவாக வாய்விட்டுச் சொல்லவில்லை. மற்றவர்களைக் குழப்புமென்ற நோக்கமில்லை, மாறாக குரலெழுப்ப முடியாப் பயம். இரண்டுநாட்களின் முன்புதான் இதேபோல் பயணம் செய்தவர்களில் ஐம்பது வரையானவர்கள் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டிருந்தார்கள். அவர்களும் இப்படி செபித்துக்கொண்டுதான் பயணித்திருப்பார்கள். யாருக்கும் செத்தவர்களின் சரியான கணக்குக்கூடத் தெரியாது. எங்கும் கடல் பரந்திருக்கிறது, கடுமையான இருட்டு, படகியந்திரத்தின் சத்தத்தையும் படகு அலையுடன் மோதும் சத்தத்தையும் தவிர வேறு ஒலிகளில்லை. அப்படியேதாவது ஒலி வருகிறதா என்று காதைக் கூர்மையாக்கிக் கொண்டே பயணம் தொடர்கிறது. நீண்டதாகவும் நெடியதாகவும் தோன்றிய மரணவேதனையான பதினெட்டுக் கடல்மைல் பயணத்தில் தூரத்தில் சில வெளிச்சங்கள் தெரிகின்றன. அவை ஆலங்கேணி, நல்லூர் கரைகள். பயணிகள் சேரவேண்டிய கரை. கரையில் எரியும் அரிக்கன் லாம்புகளின் வெளிச்சத்தில் போன உயிர் எல்லோருக்கும் திரும்பி வந்தது. ஆழம்குறைந்த கடற்கரையில் வாய்க்கால்போல் வெட்டி ஆழமாக்கப்பட்ட பகுதியூடாக படகுகள் நகர்ந்து கரையை அடைகின்றன.

ஓளியை, வாழ்க்கையின் வெற்றியாகவும் நம்பிக்கையாகவும் பிரச்சினையொன்றின் விடிவாகவும் சித்தரிக்கும் சொற்றொடர்களின் வெளிப்பாட்டை, சிக்கலான காலப்பகுதியில் கிளாலிக் கடனீரேரியில் பயணித்தவர்கள் அனுபவித்திருப்பார்கள். கரையில் எரியும் நாலைந்து அரிக்கன் லாம்பு வெளிச்சம், ஆயிரம் பேருக்கு தாம் இன்னும் சிலகாலம் உயிரோடிருப்போமென்ற நம்பிக்கையைத் தந்தது.
***********

ஈழத்தைச் சேர்ந்த எவருக்கும் இப்பெயர் தெரிந்திருக்கும். இவ்விடத்தை அறியாதோரும் பெயரைக் கேள்விப்படாமலிருந்திருக்க முடியாது. தொன்னூறுகளில் யாழ்ப்பாணத்தவருக்கு இரத்தமும் சதையுமாக வாழ்க்கையோடு ஒன்றித்திருந்தது இந்நீரேரி. வாழ வைத்ததும் இவ்வேரிதான்; வாழ்க்கையைக் குடித்ததும் இவ்வேரிதான்.


முதலில் ஆனையிறவுக்கு கிழக்குப் பக்கமாக கொம்படி-ஊரியான் பாதையை மக்கள் பயன்படுத்தினர். இடுப்பளவு உயரத்தில் தேங்கிநிற்கும் நீருக்குள்ளால் சிறுபடகுகளில் கிட்டத்தட்ட ஐந்து மைல் தூரம் பயணித்து வன்னி சென்றடையவேண்டும். பின் தாண்டிக்குளம் வழியாக வவுனியா செல்ல வேண்டும். இந்தப்பாதை பறறித் தனியே சொல்லலாம். இரண்டுமுறை பயணித்திருந்தாலும் 'உயிர்போகும்' அனுபவமேதும் இல்லாமல் சுவாரசியமாகவே அவ்விரு சந்தர்ப்பங்களும் அமைந்திருந்தன.

இராணுவத்தினர் ஆனையிறவிலிருந்து மேற்கொண்ட ஒரு முன்னேற்ற முயற்சியுடன் கொம்படி-ஊரியான் போக்குவரத்துப் பாதையும் மூடப்பட்டது. மாற்றுப்பாதையாக கிடைத்ததுதான் கிளாலிக் கடனீரேரிப் பாதை.
நான் நினைக்கிறேன், இப்பயணம் தொடங்கப்பட்ட பின்தான் அக்கடனீரேரி 'கிளாலிக் கடனீரேரி' என அழைக்கப்பட்டது; அதற்கு முன் வெறும் 'யாழ்ப்பாணக் கடனீரேரி'. சரிதானா?

கிளாலிப் பாதையும் அதனோடு சம்பந்தப்பட்டவை பற்றியும் பூராயத்தில் படத்துடன் எழுதப்பட்ட பதிவு சிலவேளை பலனளிக்கலாம்.

தொடக்கத்தில் அடிக்கடி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இரவு புறப்படும் படகுகள் விடியும்போது மறுகரையை அடையுமா அடையாதாவென்று யாருக்கும் தெரியாது. இடையில் கொல்லப்படுவதற்கும் தப்பிப் பிழைப்பதுக்குமான சாத்தியக்கூறு ஒரேயளவுதான். விடியும்போது வெட்டிக்கொல்லப்பட்ட அல்லது சுட்டுக்கொல்லப்பட்ட உடல்களோடு படகுகள் வந்துசேரும். அல்லது மூழ்கடிக்கப்பட்ட படகிலிருந்தவர்களின் சடலங்கள் மிதந்து வரும். ஆனாலும் யாழ்ப்பாணத்தாரின் பயணங்கள் தொடர்ந்துகொண்டிருதானிருந்தன. பதின்மூன்றாண்டுகள் கழித்து இன்று நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது, கடலில் படுகொலையொன்று நடந்த இரண்டாம் நாளே எதுவும் நடவாததுபோல் சாதாரணமாக அதேவழியிற் பயணிப்பர் மக்கள்.
__________________________________

அப்போது யாழ்ப்பாணத்திற்கும் வெளியிலும் தகவற்றொடர்பென்பது மிகமிக மோசமாக இருந்தது. தொலைபேசிச் சேவை அறவே இல்லை. கடிதப் போக்குவரத்து மாதக்கணக்கில் செல்லும். யாழ்ப்பாணத்துக்கு உணவுப்பொருட்கள் கொண்டுவரும் கப்பலில்தான் தபாலும் வரும், போகும். கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையில் ஒரு கடிதம் பயணிக்க இரண்டோ மூன்றோ மாதங்கள் வரை செல்லும். அந்நேரத்தில் அரச தபாற்சேவையை விடவும் கடினமாக உழைத்தது போக்குவரத்துச் செய்பவர்கள்தாம்.
ஒருவர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு - ஏன் வவுனியாவுக்குப் புறப்பட்டாலே அவரிடம் நிறையக் கடிதங்கள் சேரும். அவர் அவற்றைக் காவிச்சென்று வவுனியாவில் தபாற்பெட்டியில் போட்டுவிட வேண்டும். கொழும்பிலிருந்து வருபவர்களிடமும் அப்படித்தான். அவர்கள் யாழ்ப்பாணத்துக்கான கடிதங்களைக் காவிவருவார்கள். இச்சேவை யாராவது தெரிந்தவர்களுக்குத்தான் செய்யவேண்டுமென்பதில்லை. கடிதத்தைத் தூக்கிக்கொண்டு பயணிகள் குவிந்திருக்கும் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று அங்கிருப்பவர்களில் முகவெட்டைப் பார்த்து யாராவது நம்பகத்தன்மையுள்ளவராக இனங்கண்டு அவரிடம் 'அண்ணை/அக்கா/அம்மா/ஐயா, இதையொருக்கா வவுனியாவில போஸ்ட் பண்ணிவிடுங்கோ" என்று சொல்லிக் கொடுத்துவிடலாம்.

ஒருவர் கொழும்பிலிருந்து புறப்படுகிறாரென்றால் அதற்குமுன் யாரிடமாவது கடிதம் கொடுத்துவிடப்படும், 'இன்ன திகதியில் வெளிக்கிடுறன்' என்று. அதன்பின் இங்குள்ளவர்கள் கணக்குப்பார்த்து இன்ன திகதியில் யாழ்ப்பாணம் வந்து சேருவார் என்று தீர்மானித்துக்கொள்வர். குறிப்பிட்டவர் பயணத்தைப் பின்போட்டால் இங்கு யாருக்கும் தெரியாது. அது அடுத்த கடிதத்தில்தான் வரவேண்டும்.
எனது அம்மம்மா ஒருமுறை கொழும்புசென்று வந்தபோது ஏற்கனவே கிடைத்த கடிதத்தின்படி இப்படித்தான் நாங்கள் ஒருநாளை எதிர்பார்த்திருந்தோம். அம்மம்மா கிளாலிக் கடல் கடப்பதாக நாங்கள் கணக்குப்பார்த்த நாளில் அதில் பயணம் செய்த படகுகள் சிங்களக் கடற்படையால் தாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டார்கள். எத்தனை படகுகள் தாக்குதலுக்குள்ளாயின என்று யாருக்கும் சரியாகத் தெரியாது. பல படகுகள் எதிர்க்கரைக்கே திரும்பிவிட்டன, சில படகுகள் இக்கரைக்கு வந்துவிட்டன. அதிகாலை செய்தியறிந்து பதைத்துப்போனோம். அம்மம்மா இந்தநாளில் பயணித்தாவா இல்லையா என்றே தெரியாது. எங்கள் நாட்கணிப்பின்படி இந்தப்பயணத்தில் வந்திருக்கவேண்டும். நூறுவீதமும் இதைத்தான் நாங்கள் நம்பவேண்டும். கிளாலிக் கரையில் வந்துசேர்ந்த படகுகளில் அம்மம்மா வரவில்லை. எங்களைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் உறவினர் தப்பினார்களா செத்தார்களா என்று தேடியலைந்துகொண்டிருந்தனர்.

சடலங்களும் தாக்கப்பட்ட படகொன்றும் கரைக்கு அடைந்தது. சில சடலங்கள் உடனடியாக அடையாளம் காணப்பட்டன. அதற்குள் அம்மம்மா இல்லை. காலை பத்துமணிக்குள், இரண்டு படகுகள் மட்டும் தாக்கப்பட்டன, மற்றவை பத்திரமாக இருகரையில் ஏதோவொன்றுக்குத் திரும்பிவிட்டன என்ற உறுதிப்படுத்தினார்கள். கிளாலிக் கரைக்கு அம்மம்மா வரவில்லை. அம்மம்மா வந்தது தாக்கப்பட்ட மற்றொரு படகா, இல்லை எதிர்க்கரைக்கே திரும்பிவிட்ட படகொன்றிலா என்று தெரியவில்லை. மற்றவர்களைப்போலவே நாங்களும் 'உண்மை'யுணர அலைந்துகொண்டிருந்தோம். அன்றுமுழுவதும் எந்த முடிபும் தெரியவில்லை. பணங்கள் நிறுத்தப்பட்டாலும் அன்றிரவு அக்கரையிலிருந்து பெயர் விவரங்களோடு ஓர் ஓட்டி கிளாலிக்கு வந்துசேர்ந்ததோடு பலரின் பிரச்சினை ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது. பிரச்சினையென்பது யார் செத்தார்கள், யார் தப்பினார்கள் என்ற விவரம் தான். கொல்லப்பட்டதாக இனங்காணப்பட்டவர்களின் உறவினர்கள் ஒப்பாரி வைக்க, தப்பியதாக விவரம் கிடைத்தோரின் உறவினர் ஒருவித ஆசுவாசத்தோடு திரும்பினர்.
நாங்கள் சிலர் இரண்டு குழுவிலுமில்லை. எங்களுக்கு வேறொரு சிக்கல். இரண்டிலும் அம்மம்மா பெயரில்லை. எஙகளோடு இன்னும் சிலருக்கு இதேபிரச்சினை. தேடிவந்தவர்கள் கொல்லப்பட்டவர்களிலுமில்லை, தப்பியோரிலுமில்லை.

விவரங்களில் பிழையிருக்குமோவென்று சந்தேகப்பட்டால், ஓட்டி அது சரியானதென்று சாதித்தார். தொன்னூற்றொன்பது வீதம் விவரம் பிழைக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் பயணம் செய்வோர் அனைவரும் பதிவுசெய்யப்பட்டுத்தான் பயணிக்கின்றனர். படகுகளில் மாறிச்சாறி ஏறியிருந்தாலும் ஆட்தொகை பிழைக்க வாய்ப்பில்லை. கொல்லப்பட்டோர், தப்பியோர் தொகை சரியாகப் பொருந்துகிறது.

இப்போது ஒரே குழப்பம். ஒரேசாத்தியம், நாங்கள் தேடுவோர் ஆலங்கேணிக்கு இன்னும் வந்துசேரவில்லையென்பதுதான். இரண்டுநாட்கள் மிகக் கொடுமையாகவே கழிந்தன. இறுதியில் அம்மம்மா வந்து சேர்ந்தா. எங்களுக்குச் சொல்லப்பட்டதிலிருந்து இரண்டுநாட்கள் பிந்தித்தான் கொழும்பிலிருந்து புறப்பட்டிருந்தா.

கிளாலிப் பயணம், கடலிற் பயணிப்பவர்களுக்கு மட்டுமன்றி அவர்கள் வருகைக்காகவும் வழியனுப்பிவிட்டும் காத்திருக்கும் உறவுகளுக்கும் மிகக்கொடிய அனுபவங்களைத் தந்தது. கிளாலியைத் தவிர வேறெந்தத் தெரிவுமின்றி அதன்வழியால்தான் சகலதும் நடந்துவந்தன.
அடிக்கடி சிங்களக் கடற்படையினரின் வெறியாட்டம் நடந்தது. சிலநாட்களின் விடியல்கள் கிளாலிக் கரையில் சடலங்களோடு விடிந்தன.
_____________________________
*********************
1996 மாசிமாதத்தில் ஒருநாள். யாழ்ப்பாணத்திலிருந்து நான் முற்றாக வெளியேறியநாள். அதுவும் இதே கிளாலியால்தான். இம்முறை தனித்தனிப் படகுகளில்லை, இயந்திரம் பூட்டப்பட்ட ஒருபடகில் பத்துப் படகுகள் தொடராக இணைக்கப்பட்டிருந்தது. முதற்படகுமட்டும் இயந்திரத்தில் பயணிக்க ஏனையவை பின்தொடந்தன. பயமற்ற, மகிழ்ச்சியான -கிட்டத்தட்ட ஓர் உல்லாசப் படகுப்பயணம். முன்பு பயத்தில் உடல் விறைத்தது, இப்போது மாசிப்பனியில் விறைத்தது. (யாழ்ப்பாணத்தை விட்டு நீங்குவது எப்படி மகிழ்ச்சியென்று கேட்காதீர்கள். எனக்கும் தெரியவில்லை. முடிந்தால், ஞாபகமிருந்தால் மாசியில் அதையொரு பதிவாக்குகிறேன்)
*********************

கிளாலிக் கடலில் நடந்த பல படுகொலைகளின்பின் அக்கடலில் கடற்படையினரின் வெறியாட்டத்துக்கு கடற்புலிகளால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கடற்புலிகளின் பாதுகாப்பில் தொந்தரவின்றி பயணங்கள் தொடர்ந்தன. யாழ்ப்பாணக் குடாநாடு முற்றாகப் படையினரின் வசம் வந்தபின் அப்பாதைக்கு வேலையில்லாமற்போயிற்று.
_____________________________

காலங்கள் ஓடி 2000 ஆம் ஆண்டு வந்தது. ஆனையிறவுப் படைத்தள மீட்புக்கான இறுதிச்சண்டை கடுமையாக நடக்கிறது. சுற்றிவளைக்கப்பட்டு, குடிநீர்கூட இல்லாத நிலைக்கு ஆனையிறவுப்படைத்தளம் முடக்க்பபடுகிறது. இனிமேல் தப்பியோடுவதைத்தவிர வேறுவழியில்லையென்ற நிலையில் படையினர் ஓடத்தொடங்குகின்றனர். இப்போது அவர்களுக்கிருந்த ஒரேபாதை கிளாலிக்கடற்கரைதான். எல்லாவற்றையும் போட்டுவிட்டு கடற்கரை வழியாக ஓடுகிறார்கள். விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்ட சில வீடியோக்களில் பார்த்தவர்ளுக்குத் தெரிந்திருக்கும். கும்பல் கும்பலாக கடற்கரைவழியாக இராணுவத்தினர் ஓடுகிறார்கள். கும்பல் கும்பலாகவே செத்துக்கொண்டிருந்தார்கள். மிகக்கிட்டத்தில் அவை படம்பிடிக்கப்பட்டன. பல கோப்புக்கள் வெளியிடப்படவில்லை. தாக்குதலைச் சமாளிக்க முடியாது பலர் கடலுள் இறங்கி நீருக்குள்ளால் தப்ப முயற்சிக்கின்றனர்.

ஆனையிறவு முற்றாக வீழ்ந்த மறுகணமே வன்னிமக்கள் அனைவரும் அங்குச் சென்று கூத்தாடினர். கிளாலிக் கடற்கரையையும் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. முந்தி பார்த்ததைவிடவும் மோசமாக இருந்தது. முந்தி கரையில் அடைந்ததை விடவும் அதிகளவு பிணங்கள். முன்பு எம்மக்கள் கொல்லப்பட்டபோது, 'கடல்நீர் இரத்தத்தால் சிவந்தது' என்று சிலர் எழுதியது கவிதைக்குச் சரியென்றாலும் நடைமுறையில் அப்படித் தோன்றியதில்லை. ஆனால் இம்முறை உண்மையில் கரையிலிருந்த நீர் சிவப்பாகவே தெரிந்தது.
ஆனால் பிணங்களும் இரத்தமும் நிச்சயமாக தமிழனுடையதாக இருக்கவில்லை.

__________________________________
__________________________________
இன்று கிளாலிப்படுகொலைகளுள் பெரியதான ஒரு படுகொலையின் பதினான்காம் ஆண்டு நினைவுநாள். 1993 ஜனவரி இரண்டாம் திகதி ஐம்பது வரையான பொதுமக்கள் கிளாலியில் பயணிதத்துக்கொண்டிருந்தபோது சிறிலங்காக் கடற்படையால் கோரமாகக் கொல்லப்பட்டார்கள்.

அந்த நினைவில் இப்பதிவை எழுதிப் பதிவேற்றும்போது இன்னொரு படுகொலை வன்னியில் நடந்துள்ளது.
சிறிலங்கா அரசின் வான்படை ஒரு கிராமத்தை முற்றாக அழித்துள்ளது. பதினைந்து பேராவது கொல்லப்பட்டுள்ளார்கள், பலர் காயமடைந்துள்ளார்கள். வழமைபோல அது புலிகளின் கடற்படைத்தளம்தான் என்று அரசாங்கம் சொல்லியுள்ளது. மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் நேரிற்சென்று பார்வையிட்டு படுகொலையை உறுதி செய்துள்ளார்.




_____________________________________________

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Thursday, December 07, 2006

மிதிவெடி செய்வது எப்படி?

எல்லாரும் அதுசெய்வது எப்படி? இது செய்வது எப்படி? எண்டு தொடர்ச்சியாகப் பதிவுபோட்டு இப்பதான் ஓய்ஞ்சுபோய் கிடக்கினம்.
மணிமேகலைப் பிரசுரத்துக்கே உரிய இந்தத் தலைப்புக்களைக் களவெடுத்துப் பதிவெழுதியதன்மூலம் அப்பிரசுரக்காரருக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவென்று சரியாத்தெரியேல.

இப்ப நீங்கள் எழுதிறதுக்கு முன்பே நானும் "எப்படி?" எண்ட தலைப்பில பதிவுகள் எழுதியிருக்கிறன்.
நான் முந்தி இப்படி எழுதின பதிவொண்டை இப்ப மீள்பதிவாக்கலாம் எண்டு நினைக்கிறன்.
'வெற்றித் திரைப்படம் எடுப்பது எப்படி?' எண்டு போன பதிவில எழுதினன்.
இப்ப வேற ஒரு 'எப்படி?ப்' பதிவு.

பதிவில் புதிதாக ஏதுமில்லை. "எப்படி?" என்ற தலைப்பில் ஒரு பதிவுபோட வேண்டுமென்பதால் மீள்பதிவுமட்டுமே.
_____________________________________

உங்களுக்கு மிதிவெடியைத் தெரியுமா?
அதைப் பார்த்திருக்கிறீர்களா?
மதிவெடிகளுடனான எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

எனக்கு மிதிவெடி முதன்முதல் அறிமுகமானது யாழ்ப்பாணத்தில் 1993 இன் இறுதிப்பகுதியில். மானிப்பாயிலிருந்து யாழ்நகர் நோக்கி வரும்போது, ஆனைக்கோட்டை முடிவில், உயரப்புலச் சந்தியில் ஒரு சாப்பாட்டுக்கடை இருந்தது ஞாபகமிருக்கிறதா? அதன் பெயரை யாரும் மறந்துவிட முடியாது. 'சும்மா ரீ ரூம்' (SUMMA TEA ROOM) என்பதுதான் அவ்வுணவகத்தின் பெயர். அதன் பெயரே ஒரு கவர்ச்சியான விசயம்தான். நானறிந்ததிலிருந்து என் அப்பா அம்மா காலத்திலேயே அது பிரபலமான பெயர்தான். மிகச்சிறிய கடைதான். வீதிக்கரையிலிருந்ததால் அதன்வழியால் போய்வரும் எவரையும் வாயூற வைத்துவிடும். யாழ்பபாணத்திலுள்ள மற்ற எந்த உணவகங்களையும்விட அது வித்தியாசமானது. அதிகமான கடலுணவுகள் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். இறால், கணவாய், சிங்கிறால், நண்டு என்று விதம்விதமான கடலுணவுப் பொரியல்களும் கறிகளும் கண்ணாடிப் பெட்டிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். நாவாந்துறையும் காக்கைதீவும் அருகிலிருந்தது அதற்கு வசதியாக இருந்தது. பின்னேரத்தில அந்தக்கடை வலுகலாதியா இருக்கும். கடையோட சேத்தே ஒரு 'பார்' இருந்ததும், கொஞ்சம் தள்ளி பிரபலாமான 2 தவறணைகள் இருந்ததும் அதுக்குக்காரணம்.

சரி. கதைக்கு வருவோம். எனக்கு மிதிவெடி அறிமுகமானதும் இந்த 'சும்மா ரீ ரூமில்' தான். என்ன குழப்புகிறேனா? மதிவெடி எண்டா ஒருவகைச் சாப்பாடு. அதைத்தான் சொல்ல வந்தேன். நாங்கள் வழமையாகச் சாப்பிடும் 'றோல்' வகையைச் சேர்ந்தது. சற்றுப்பெரியது. உள்ளே கூடுதலான கலவைகள் இருக்கும். கட்டாயம் அவித்த முட்டையின் கால்வாசியோ, அதைவிடச் சற்றுப் பெரிய துண்டோ இருக்கும். இரண்டு வாங்கிச் சாப்பிட்டுவிட்டாலே ஒரு நேரச் சாப்பாடு நிறைந்துவிடும். இதுதான் மிதிவெடி.

ஒருநாள் உதைபந்தாட்டப் போட்டியொன்றைப் பார்த்துவிட்டு வரும்போது நண்பனொருவன் (இவன் உயரப்புலத்தில் அந்த சும்மா ரீ ரூமுக்கு அருகில்தான் வசிப்பவன்) சொன்னான் இந்த மதிவெடியைப் பற்றி. அப்போது நாங்களறிந்த மிதிவெடியென்பது கால்நடைகளின் (மனிதர்களும் இதற்குள் அடக்கம்) கால்களைப் கழற்றும் சிறுகண்ணிவெடிகள்தான். அப்போது மிதிவெடி என்ற சிற்றுண்டியைப் பற்றிக் கதைத்தபோது எல்லோரும் சிரித்தோம். இப்படி நாலைந்துமுறை அவன் சொல்லிவிட்டான். ஒருநாள் நக்கல் தாங்காமல் அவனே தான் மதிவெடி வாங்கித்தருவதாகச் சொல்லிக் கூட்டிச்சென்றான். காசைத்தந்து 3 மிதிவெடி வாங்கச்சொல்லி எங்களக் கேட்டான். மிதிவெடி எண்டு கடையில கேட்டு அடிவாங்க வைக்கத்தான் இவன் பிளான் போடுறான் எண்டு நினைச்சு அவனையே வாங்க வைச்சோம். உவன் மிதிவெடி எண்டுதான் கேக்கிறானோ எண்டத உறுதிப்படுத்த நான்தான் கூடப்போனன். என்ன ஆச்சரியம்! மிதிவெடி எண்டுதான் கேட்டான். அவங்களும் தந்தாங்கள். அண்டைக்கே அதின்ர சுவைக்கு அடிமையாயிட்டம். பொருளாதார அடிப்படையிலயும் மலிவாகத்தான் இருந்திச்சு. அப்ப ஒரு மதிவெடி 10 ரூபா. ஏறத்தாள 12 வருசத்துக்குப்பிறகு 5 அல்லது 7 ரூபாதான் அதிகரிச்சிருக்கு. இந்த மிதிவெடிக் கதையை நாங்கள் ஏலுமான அளவுக்குப் பரப்பினம். அப்பிடியும் கனபேர் நம்பேல.
----------------------------------------------------
ஒரு முக்கியமான 'எதிரி'ப்பாடசாலையுடனான உதைபந்தாட்டப்போட்டி அன்று நடந்தது. அதில் வென்றால் 500 ரூபா தருவதாக எங்கள் பாடசாலையின் பரமவிசிறியொருவர் சொல்லியிருந்ததால் ஒருமாதிரிக் கஸ்டப்பட்டு வெண்டாச்சு. 500 ரூபாயும் கிடைச்சிட்டுது. வழமையா இப்பிடிக் காசு கிடைச்சா யாழ்நகருக்குள்ளயே ஏதோ ஒரு கூல்பாருக்க பூந்து காசைக்கரைக்கிறதுதான் வழமை. அண்டைக்கு ஒருத்தன் சொன்னான் உந்த மதிவெடிப்பிரச்சினையை இண்டைக்குத் தீர்ப்பமெண்டு. சரியெண்டு வாயையும் வயித்தையும் கட்டிக்கொண்டு சும்மா ரீ ரூம் வந்தாச்சு. 25 மதிவெடி தரச்சொல்லிச் சொன்னம். ஆனா அங்க இருந்தது வெறும் 10 தான். சரியெண்டு அவ்வளவத்தையும் வாங்கி பங்குபோட்டுச் சாப்பிட்டம். விசாரிச்சதில வழமையா 20 அல்லது 25 மதிவெடிதான் ஒருநாளைக்குப் போடுறது எண்டார் கடைக்காரர். அதாவது அந்தநேரத்தில் மதிவெடிக்கான வாடிக்கையாளர் அவ்வளவுதான். அது பிரபலமாகாத காலம்.

நானறிய யாழ் நகருக்குள்ள இந்த மிதிவெடிக்கலாச்சாரம் வரவே நீண்டகாலம் எடுத்திச்சு. பிறகு இடப்பெயர்வோட வன்னிக்கும் வந்திட்டுது. வன்னி தாண்டியும் அது போயிருக்கும் எண்டதில ஐயமில்லை. ஆனா கடைக்குக் கடை அதின்ர தரம், சுவை, விலை எல்லாம் மாறத்தொடங்கீட்டுது. அதின்ர பெயர்தான் மாறேலயே ஒழிய அடிப்படைக் கட்டமைப்பு ஆளாளுக்கு மாறிப்போச்சு.
------------------------------------------------------
சரி. ஏன் இந்தப் பேர் வந்தது? எனக்குச் சரியாத் தெரியேல. இது சம்பந்தமா பெடியளுக்குள் அடிக்கடி கதைச்ச ஞாபகம் வருது. அப்பவே 'சும்மா ரீ ரூம்' முதலாளி அன்ரனிட்டயே கேட்டிருக்கலாம். அவர்எங்கயிருந்து இதை அறிஞ்சார் எண்ட விவரங்கள் சேகரிச்சிருக்கலாம். எல்லாம் தவற விட்டாச்சு. ஒரு கவர்ச்சிக்காகத்தான் அந்தப்பேர் வந்திருக்கலாம். சனங்களுக்குப் போர் சம்பந்தமான சொற்களை தங்கட வாழ்க்கையில பாவிக்கிறது வழமையாயிருந்திச்சு. தங்கட சைக்கிளுக்கோ, மோட்டச்சைக்கிளுக்கோ குண்டுவீச்சு விமானங்களின்ர பேரை வைக்கிறது, ஆக்களுக்குப் பட்டப்பேர் வைக்கேக்ககூட ஆயுதங்களின்ர கடற்கல, வான்கலப் பெயர்களை வைக்கிறது எண்டு வழமை இருந்திச்சு. அதின்ர ஒரு தொடர்ச்சியா இந்த மதிவெடியும் வந்திருக்கலாம். சந்திரிக்கா சாறி, ரம்பா ரொட்டி, நதியா சாறி போல, குமரப்பா குண்டு, கடாபி ரொபி எண்டும் எங்கட சனத்திட்ட பெயர்கள் உலாவினது.

இன்னொண்டும் ஞாபகம் வருது. வெளியிற் கழிக்கப்பட் மலத்தையும் மிதிவெடி எண்டு சொல்லிற வழக்கம் இப்பவும் இருக்கு. ஆனா அதுக்கு வலுவான காரணமிருக்கு. ஆனா இந்தச் சிற்றுண்டிக்கு???
ஆருக்காவது தெரிஞ்சாச் சொல்லுங்கோ.
***************
மூலப்பதிவு
***************


Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Saturday, October 21, 2006

வன்னி ->முத்தையன்கட்டு - சில நினைவுகள் -1

வன்னியில் நான் வாழ்ந்த இடங்களில் ஒன்று. என்னை அதிகம் கவர்ந்த இடம். ஏற்கனவே சில இடங்களில் முத்தையன்கட்டைச் சிலாகித்துச் சொல்லியிருக்கிறேன். கிராமம் என்றும் சொல்ல முடியாது. பட்டினம் என்றும் சொல்ல முடியாது. ஆனால் மிகப்பரந்த நிலப்பரப்பைக் கொண்டது. முத்தையன்கட்டுக்குளம் என்ற வன்னியின் - ஏன் வட இலங்கையின் மிகப்பெரும் நீர்வளமொன்றை மையப்படுத்தியே அவ்விடம் பிரசித்தம்.

சில நாட்களுக்கு முன் (13.10.2006) அன்று இந்நிலபரப்பின்மீது சிறிலங்கா வான்படை மிகக்கோரமான வான்தாக்குதலைச் செய்துள்ளது. காலை ஏழு மணிதொடக்கம் ஒன்பது மணிவரையான இரண்டு மணித்தியால இடைவெளிக்குள் 48 குண்டுகளை வீசியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு குண்டும் குறைந்தபட்சம் 250 கிலோகிராம் கொண்டவை.
முழுப்போர்க்காலத்திலும் ஈழத்தில் வாழ்ந்தவன் என்றவகையில் இப்படியான அகோர வான்தாக்குதல் நடத்தப்பட்டது இதுவே முதன்முறை என்று நினைக்கிறேன்.
ஒன்றுமட்டும் விளங்கிக்கொள்ள முடிந்தது, கடந்த பதினோராம் திகதி முகமாலை - கிளாலியில் சிங்களப் படைகளுக்கு நடந்தது எவ்வளவு தாக்கம் நிறைந்ததென்று.

முதற்கட்டத் தகவலின்படி இத்தாக்குதலில் பல மாடுகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. போராளிகளுக்கோ மக்களுக்கோ ஏதும் சேதங்களிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நிறைய வயல், தோட்ட நிலங்கள் தாக்குதலுக்குள்ளானதாகத் தெரிய வருகிறது.
செய்தி கேட்டதும் ஒருமாதிரித்தான் இருந்தது. உடனடியாக ஏதாவது எழுதத் தோன்றினாலும் சற்று ஆறப்போட்டு அவ்விடம் பற்றி சிலவற்றைப் பதியலாம் என்று நினைக்கிறேன்.

பொதுவாக வன்னி என்றாலே மாடுகள் அதிகமுள்ள இடம்தான். அதிலும் முத்தையன்கட்டு இன்னுமதிகம். பெரும்பாலும் வீடுகளிலோ பட்டிகளிலோ அவை இருப்பதில்லை. வீதிகளில் நூற்றுக்கணக்கில் திரியும், வீதிகளிலேயே படுத்தெழும்பும். வன்னி வந்த தொடக்கத்தில் அதிகாலையில் வீதியால் போவது பெரிய கரைச்சல். சிலவேளைகளில் சுவாரசியமாகவும் இருந்தது. சைக்கிளில் போபவர்கள் ஒருவாறு சமாளித்துப் போய்விடலாம். வாகனக்காரரின் பாடு பெரும்பாடு. காலை ஏழுமணிவரைக்கும் மாடுகள் வீதியை விட்டு நகரா. அந்தந்த நிலையிலேயே படுத்திருக்கும். வாகனத்தை எவ்வளவுதான் உறுமி, சத்தம் போட்டாலும் அவை நகரா. அதிலும் எருமைகள் இன்னும் சுத்தம். எழும்பக்கூட மாட்டா. யாராவது இறங்கிப்போய் எழுப்பிக் கலைத்தால்தான் உண்டு. பின்பு போகப்போக, சனத்தொகையும் அடர்த்தியாக மாடுகளும் கொஞ்சம் திருந்திவிட்டன.


ஓரிருவர் ஐநூறு, அறுநூறு மாடுகள் என்றுகூட வைத்திருந்தார்கள். அண்ணளவாகத்தான மாடுகளின் கணக்குச் சொல்வார்கள். நூறு மாடுகள்வரை வீட்டில் வைத்திருப்பார்கள், மிகுதியை முத்தையன்கட்டுக் குளத்தின் அக்கரைக்கு அனுப்பிவிடுவார்களாம். அவை பல்கிப்பெருகும், சிலதுகள் வேட்டைக்குச் சுடுபடும். சில மாதங்களின்பின் அந்தக் கூட்டத்தை வரவழைத்து புதிதான அங்கத்தவர்களுக்குக் குறிசுட்டுவிடுவார்கள். நாங்கள் 'குழுவன்' என்று சொல்லும் மாடுகள் இப்படியானவற்றிலிருந்து பிரிந்து காட்டிலேயே வளர்ந்துவிடுபவைதாம். காட்டெருமை என்றும் சொல்வார்கள், ஆனால் பேச்சுவழக்கில் குழுவன்தான்.

வேட்டையில் ஒரு நடைமுறை பின்பற்றப்படும். குறிசுடப்படாத மாடுகள் எல்லாம் குழுவன்கள்தாம். பிரச்சினை ஏதும் வராது. மிக ஆபத்தானவை என்று செவிவழியாகக் கேள்விப்பட்டாலும் இவற்றால் தாக்கப்பட்டு காயமடைந்ததாக நான் கேள்விப்படவில்லை. ஆனால் ஒருமுறை இப்படியான மாட்டுக்கூட்டத்தால் நாக்குத் தொங்கத் துரத்தப்பட்ட அனுபவமுண்டு.

யாழ்ப்பாண நடைமுறைகளுக்கும் வன்னி நடைமுறைகளுக்கும் பல விசயங்களில் நிறைய வித்தியாசங்களுண்டு. முதன்முதல் இவற்றை எதிர்கொள்ளும்போது ஆச்சரியப்பட்டதுண்டு. ஆடுமாடுகள் விசயத்திலும் அப்படித்தான்.
யாழ்ப்பாணத்தில் ஓர் ஆடு குட்டி போடுவதென்றாலோ அல்லது ஒரு மாடு கன்று போடுவதென்றாலோ பெரிய விசயம். அக்கம்பக்கத்துக்குச் சொல்வதுண்டு. மற்ற வீட்டாரும் ஒருமுறை வந்து எட்டிப்பார்த்துவிட்டுப் போவர்.
ஆனால் வன்னியில் அதை யாரும் கணக்கெடுப்பதில்லை. பெரும்பாலான ஆடுமாடுகள் தாஙகள் மேய்ச்சலுக்குப் போன இடங்களிலேயே குட்டியையோ கன்றையோ ஈன்றுவிட்டு அவற்றை பத்திரமாக வீட்டுக்கும் கூட்டிவந்துவிடுங்கள். உண்மையில் முதலில் இது பெரிய ஆச்சரியமாகத்தான் இருந்தது.
கற்சிலைமடுவில் எங்களுக்கு எதிர்வீட்டில் பத்துப்பதினைந்து ஆடுகள் இருந்தன. ஓர் அழகான செவியாடு நிறைமாசமா இருந்தது. இரணைக்குட்டி போடுமென்றார்கள். ஏற்கனவே அதேவீட்டில் இன்னோர் ஆடு ஒரேதடவையில் மூன்றுகுட்டி போட்டு, அதிலொன்றுக்குக் குறிப்பிட்ட காலம் 'போச்சி'யில் பால்பருக்கிய சுவாரசியமான சம்பவம் நடந்ததாலோ என்னவோ இந்த ஆட்டின் பிரசவத்திலும் எனக்கு ஆர்வம் இருந்தது. கடைசி இரண்டுமூன்று நாட்கள், ஆடு குட்டி போட்டிட்டுதா எண்டு விசாரித்திருந்தேன். ஒருமாதிரியாகப் பார்ததார்கள்.
அண்டைக்குப் பொழுதுபட பேப்பர் வாங்கப்போனபோது பார்த்தால் அந்த ஆட்டைக்காணேல. விசாரிச்சா அது வீட்டுக்கு வந்துசேரேலயாம். மற்றதுகள் எல்லாம் வந்திட்டுதுகள்.
'ஆரேன் தேடப்போனதோ?' எண்டு கேட்டால், இல்லயாம். 'அது ஈண்டிருக்கும்போல. விடிய வந்து சேர்ந்திடும்' எண்டு அலட்சியமான பதில்வேற. குழப்பமாகத்தான் இருந்தது எண்டாலும் கிட்டத்தட்ட பெரும்பாலான ஆக்கள் இப்பிடித்தான் எண்டதால பேசாமல் இருந்திட்டன்..
அடுத்தநாள் காலம ஒரு பத்துமணிபோல ரெண்டுகுட்டிகளோட செவியாடு வீட்டுக்கு வந்திட்டுது.

யாழ்ப்பாணத்தில குட்டியோ கண்டோ ஈண்ட பிறகு சீம்பால் ('கடும்பு' எண்டுதான் எங்கட வீட்டுப்பக்கம் சொல்லிறதா ஞாபகம். சரிதானே?)எடுத்துக்காய்ச்சிறது முக்கியமான விசயம். 'எள்ளெண்டாலும் ஏழாப்பகிர்' எண்டமாதிரி சொட்டுச் சொட்டா எண்டாலும் சண்டைபோட்டு பங்கிடுவம். வன்னியில பெரும்பாலும் அந்தக் கதையே இல்லை. இருந்தாலும் விடுவமே? அக்கம்பக்கத்தில குட்டியோ கண்டோ போட்டால் சொல்லிவைச்சு கடும்பு காய்ச்சிப்போடுவம். அவையள் என்ன நினைச்சிருப்பினம எண்டு தெரியேல.
குட்டிகளுக்கோ கண்டுகளுக்கோ அந்தப்பாலை விட்டா அதுகளுக்கு வருததம் வந்திடும் எண்டு சின்ன வயசில எனக்கு (எனக்கென்ன - மற்றவர்களுக்கும் இப்பிடித்தான் கிடைச்சிருக்கும்) விளக்கம் தரப்பட்டதாக நினைவு.

யாழ்ப்பாணத்தில் குழைகட்டியே ஆடு வளத்துப்போடுவம். பொழுதுபட்டா குழைமுறிக்கிறது ஒரு கடமை. ஊரான்வீட்டு வேலியில குழைமுறிச்சு பேச்சு வாங்கிறதும் கலைபடுறதும் இடைக்கிடை நடக்கும். எங்கட வீட்டு ஆட்டுக்கு வாதனாராணிக்குழை குடுத்துப் பழக்கினப்பிறகு அதுக்குப் பூவரசங்குழை பிடிக்காமல் போட்டுது. யாழ்ப்பாணததில பூவரசை விட்டா வேற நாதி? கொஞ்சநாள் பட்டினி கிடந்திட்டு பூவரசுக்கே வந்திட்டுது எங்கட ஆடு.
வன்னியில குழைகட்டி வளக்கிறது எண்ட கதைக்கே இடமில்லை.
_______________________________________________

முத்தையன்கட்டு என்று எடுத்துக்கொண்டால் சிறிய இடத்தைத் தவிர மக்கள் நெருக்கமென்பது குறைவு. ஒரு வீதியை மையமாக வைத்து இரண்டொரு கோவில்கள், சில கடைகள், அத்தோடு இணைந்த சில வீடுகள் என்று சனம் நெருக்கமாயுள்ள சிறிய பகுதியுண்டு. மற்றும்படி வயல்களையும் தோட்டங்களையும் வாய்க்கால்களையும் மையமாக வைத்து மிகமிக ஐதான சனப்பரம்பலுடைய இடம் அது. யுத்தநிறுத்த ஒப்பந்தம் வந்தபின் கணிசமான யாழ்ப்பாணத்தவர்கள் ஊர் திரும்பியதால் இன்னுமின்னும் ஐதாகிக்கொண்டு வந்தது அவ்விடம்.

முத்தையன்கட்டுக் குளத்தின் துலுசுக் கதவுகள் பழுதடைந்து பெருமளவு நீர் ஆண்டுமுழுவதும் வீணாக வெளியேறிக்கொண்டிருந்தாலும் சிறுபோக நெல்விளைச்சலுக்கோ தோட்டப் பயிர்ச்செய்கைக்கோ வஞ்சகம் இல்லாமல் நீர் வழங்கிக்கொண்டிருந்தது முத்தையன்கட்டுக்குளம். அக்குளத்தின் கீழான நூறுவீத விவசாய நிலங்களும் பயிச்செய்கைக்குப் பயன்படுத்தப்படவில்லையென்பதும் ஒரு காரணம்.

[முத்தையன்கட்டுக் குளத்தின் ஒருபகுதியின் பின்னேரத் தோற்றம்.]

மாரிகாலத்தில் குளம்நிரம்புவதால் நீர் வெளியேற்றப்படும்போதும் சிறுபோகத்தின்போது நீர் வெளியேற்றப்படும்போதும் முத்தையன்கட்டுக்குளத்தின் வாய்க்கால்களில்தான் பெருமளவு மக்களின் குளிப்பு. சிறுவர் சிறுமிகளுக்கு அது பெரும் கொண்டாட்டம். பெரியவர்கள்கூட அவ்வாய்க்காலில் குளிப்பதே வழக்கம். முத்தையன்கட்டுக்குளத்திற்கு இரு பெரும் வாய்க்கால்கள். இடதுகரை, வலதுகரை என்று பெயர்கள்.

[முத்தையன்கட்டு வாய்க்கால்]

அவ்வாய்க்கால்கள் பல கிலோமீற்றர்களுக்கு நீரைக்கொண்டுபோய்ச் சேர்க்கின்றன. இடையிடையே பல சிறுகுளங்களை நிரப்பியபடியே போகின்றன. இக்குளங்களைவிட வாய்க்கால்களின் இடையில் நீர் தேங்கி நிற்கும் அகண்ட பரப்புக்கள் வரும். அவற்றை "மோட்டை" என்றுதான் சொல்வார்கள். யாரும் 'குளம்' என்று சொல்வதில்லை. யாழ்ப்பாணத்திலென்றால் அவையெல்லாம் குளங்கள்தாம். ஆரியகுளம் அளவுக்கு நீர் தேங்கிநின்றாற்கூட அவை மோட்டை என்றுதான் அழைக்கப்படுகின்றன.

பெருமளவு நெற்பயிர்ச்செய்கை நிலங்கள் 'சேறடித்து' விதைக்கப்படுவன. 'சேறடிப்பு' என்றுதான் அச்செயற்பாடு மக்களாற் குறிப்பிடப்படுகிறது. அதாவது வயலில் பலநாட்கள் நீரைத் தேக்கிவைத்து, புற்களை அழுகவிட்டு, பின் உழுது சேறாக்குவார்கள். கறுத்த நிறத்தில் குழாம்பாணியாக இருக்கும். குறைந்தபட்சம் முக்கால் அடி ஆழத்துக்குப் புதையும்வகையில் வயல்நிலம் கறுப்பு நிறத்தில் கூழாக்கப்பட்டிருக்கும். பின் விதைநெல்லைத் தூவிவிடுவார்கள்.

இதற்கு எருமை மாடுகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. சிலர் உழவு இயந்திரத்தைப் பாவிப்பார்கள். எருமையால் உழுவதெல்லாம் எங்களுக்குப் புதிது. (எருமையே எங்களுக்குப் புதுசுதானே?) எருமைகளை நினைத்து ஆச்சரியப்பட்டுவதுண்டு. அந்தச் சேற்றுக்குள் எங்களால் நடக்க முடியாது. உழுபவர் சேறடிக்கும் கலைப்பைக்கு மேல் ஏறிநின்றுகொள்வார். சாதாரண கலப்பையிலிருந்து இது வேறுபட்டது. நல்ல அகலமானது. உழுபவர் கையில் ஒரு வானொலிப்பெட்டியோடு அவர் சங்கமமாகிவிடுவார். எருமைகள் அவைபாட்டுக்குச் சுத்திச்சுத்தி இழுத்துக்கொண்டிருப்பினம்.

புதுக்குடியிருப்பு - ஒட்டுசுட்டான் வீதியில மன்னாகண்டல் சந்தி எண்டு ஒரு சந்தி இருக்கு. அதிலயிருந்து ஒருபாதைமுத்தையன்கட்டுக்கு வருது. அந்தச் சந்தியில இருந்து குளத்துக்கு வரேக்க பாதையின்ர வலப்பக்கம் குளத்தின்ர இடதுகரை வாய்க்கால் வந்துகொண்டிருக்கும். வாய்க்காலை அடுத்து பெருங்காடு. இடைக்கிடை நாலைஞ்சு மோட்டைகளும் இருக்கு. இடப்பக்கம் வயல்வெளிகள். வாற பாதையில பாத்துக்கொண்டுவந்தா பகல் நேரத்தில வலப்பக்கம் இருக்கிற வாய்க்காலுக்க மூக்கை மட்டும் வெளிய நீட்டிக்கொண்டு எருமைகள் கூட்டம்கூட்டமாப் படுத்திருக்கும். இரவில அப்பிடியே ஏறி பாதையில படுத்திருக்கும். எங்க மேயுது, எப்ப மேயுது எண்டு தெரியாது.

முத்தையன்கட்டுக் குளத்தின் கீழான பயிர்ச்செய்கையில் நெல்தான் முதன்மையானது. பெரும்போகம் சிறுபோகம் என இருபோகங்களும் விதைப்பவர்கள் இருக்கிறார்கள். இதைவிட தோட்டப்பயிர்ச்செய்கையுமுண்டு. சில மேட்டுநிலங்களில் நீரிறைப்பு இயந்திரத்தின் உதவியுடன் வாய்க்காலில் இருந்து நீரிறைத்துத் தோட்டம் செய்வார்கள். பெரும்பாலான மரக்கறி வகைகள் செய்கை பண்ணப்படும்.
நெல்லுக்கு அடுத்தபடியாக என்றுபார்த்தால் கச்சான் (வேர்க்கடலை) செய்கையைச் சொல்லலாம். சிறுபோகத்திலேயே பெருமளவு கச்சான் செய்கை பண்ணப்படுகிறது. அடுத்த நிலையில் சோளம், மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்படுகிறது எனலாம்.

ஏற்கனவே சொன்னதுபோல வீதியின் ஒருபுறம் பிரதான வாய்க்காலும் மற்றப்பக்கம் பயிர்ச்செய்கை நிலங்களும் இருக்கின்றன. வீதியின் இடையிடையே குழாய்கள், மதகுகள் மூலம் நீர் வீதியைக்கடந்து பயிரிச்செய்கை நிலப்பக்கம் போகிறது. ஆனால் சில இடங்கிளில் அந்த வசதி சரியான முறையில் இல்லை. அந்த நிலக்காரர்கள் நேரடியா வீதியைக்கடந்து நீரை எடுக்க வேண்டும். வீதியோ வாய்க்காலின் நீர்மட்டத்திலிருந்து சுமார் பத்து அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட்து. குழாயும் வீதியின் மேலாகத்தான் செல்ல வேண்டும்.
ஆனால் வாய்க்காலின் நீர்மட்டம் வயற்பகுதியைவிட உயரமாகவே இருக்கும்.இந்த இடங்களில் இயந்திரமில்லாமல் நீர்ப்பாசனம் செய்வதைப் பார்ப்பது சுவாரசியமானது.

வளையக்கூடிய குழாய்முழுவதும் நீரை நிறைத்துவிட்டு இரு முனைகளையும் பொத்தியபடி ஒருவர் வாய்க்காலிலும் மற்றவர் வீதியின் மறுபக்கம் வயற்பகுதியிலும் நிற்பார்கள். வாய்க்காற்பக்கமுள்ளவர் நீருக்குள் குழாய் முனையை அமிழ்த்தியபின் ஒன்று, இரண்டு, மூன்று என்று கத்தி கையை எடுப்பார். அதேநேரம் மறுபக்கத்தில் இருப்பவரும் கையை எடுக்க வேண்டும். வாய்க்கால் நீர் தொடர்ச்சியாக குழாய்வழியாக வந்துகொண்டிருக்கும். கொஞ்சம் முந்திப்பிந்தினாலும் நீர் தொடர்ச்சியாக வெளியேறாது.
சிலர் இதில் தேர்ச்சியானவர்கள். முதல்முறையிலேயே சரியாகச் செய்துவிடுவர். சிலருக்கு நாலைந்து தடவைகள் எடுக்கும்.

நாங்கள் சிலர் பொழுதுபோக்காக இதைச் செய்து பார்ப்பதுண்டு. ஒருமுறை அரைமணித்தியாலம் முயன்றும் சரிவரவில்லை.
என்ன சிக்கலென்றால் ஒருமுறை பிசகினாலும் பிறகு குழாய் முழுவதும் (கிட்டத்தட்ட இருபத்தைந்துஅடி நீளம்) நீரை நிரப்பித்தான் அடுத்த தடவை முயலவேண்டும்.
___________________________________________
முத்தையன்கட்டில இருக்கிற இன்னொரு தொழில் மீன்பிடிக்கிறது. பலருக்கு அது முழுநேரத் தொழில். எங்களப்போல ஆக்களுக்கு அதுவொரு பொழுதுபோக்கு. அதுபற்றியும் இன்னும் சிலதுகள் பற்றியும் இன்னொருக்கா...
___________________________________________

படங்கள்: அருச்சுனா தளம்.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, September 29, 2006

தாயகப் பயணம் - ஒரு வலைப்பதிவு அறிமுகம்

மெழுகல் பற்றி ஒரு குரற் பதிவு.







Journey to my Motherland என்ற தலைப்போடு வலையில் பதிந்து வருகிறார் Shivi Bala.

ஈழம், விடுதலைப்புலிகள் இயக்கம் என்பன மட்டில் சுவாரசியமற்ற மூன்றாம் நிலையில் ஐரோப்பாவில் வாழ்ந்தவரின் தாயகம் நோக்கிய பயணம் என்று சொல்லலாம்.
கொழும்பு வாழ்க்கை, அங்குள்ள தமிழர்கள், யாழ்ப்பாணத்துக்கான விமானப்பயணம், யாழ்ப்பாண மக்கள், தமிழகத் தொலைக்காட்சிகளின் செல்வாக்கு, வன்னிப் பயணம், வன்னி மக்கள் என்பவை தொடர்பான பார்வை இவராற் பதியப்படுகின்றன.

அதில் வன்னியில் தான் ஒன்றாகத் தங்க நேரிட்ட குடும்பமொன்றைப் பற்றிய பதிவு வருகிறது. கண்ணம்மா என்ற பெண் பற்றி விவரிக்கிறார்.
வலைப்பதிவாளர் மாட்டுச் சாணத்தால் நிலம் மெழுக வேண்டி வந்த சம்பவம் உட்பட பல சுவாரசியங்களைக் கொண்டு செல்கிறது அப்பதிவு.
______________________________________________________________

பதிவை வாசித்தபோது, பதிவாளர் மாட்டுச் சாணத்தால் மெழுகப்பட்ட தரை தொடர்பில் இவ்வளவு தூரம் அரியண்டப்பட வேண்டுமா? என்று என்னுள் ஆச்சரியம் வந்தது. பிறகு யோசித்தபோது புரிந்தது. வெளிநாடொன்றில் வாழ்ந்த, மாட்டுச்சாணத்தால் மெழுகப்பட்ட எந்த இடத்தையும் எதிர்கொள்ளாத ஒருவருக்கு முதல் அனுபவம் எப்படியிருக்கும் என்பது புரிந்தது.
இந்த விசயத்தில் என் அனுபவம் எப்படி இருந்தது என்று யோசித்துப்பார்க்கிறேன்.

யாழ்ப்பாணத்தில், மாட்டுச் சாணத்தால் மெழுகப்பட்ட இடங்களில் வாழ்ந்த ஞாபகம் எனக்கில்லை. எங்கள் ஊர் கிராமம்தான் என்றாலும் எங்கள் பகுதியில் பெரும்பாலும் கல்வீடுகள்தாம். பெரும்பாலும் எல்லாமே காறை பூசப்பட்டவை. காறை பூசப்படாதவைகூட புத்துமண்ணால் மெழுகப்பட்டவை, மாட்டுச்சாணத்தால் அன்று.

ஆனால் அப்படி புத்துமண்ணால் மெழுகப்பட்ட தரை அழுத்தமாக, சீராக இருக்காது. நிறைய வெடிப்புக்கள் வரும். புழுதி கிளம்பும். சொந்த ஊரிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்துக்குள்ளயே தங்கியிருந்த காலத்திலயும் நான் கல்வீட்டிலதான் இருந்திருக்கிறேன்.

மாட்டுச்சாணத்தால் மெழுகப்பட்ட குடிசைகள் எனக்கு அறிமுகமானது 1996 இல் வன்னியிலாகத்தான் இருக்க வேண்டும். பலதடைவைகள் நான் சாணியில் மெழுகியிருக்கிறேன். ஆனால் மாட்டுச்சாணத்தால் மெழுகுதல் பற்றிய எனது முதல் அனுபவம் என்று குறிப்பிட்டுச் சொல்லும்படி என் மனத்தில் ஏதுமில்லை. எனவே எந்த அதிர்ச்சியோ அருவருப்போ இன்றி இயல்பாகவே இசைவாக்கப்பட்டிருக்கிறேன். இப்படி மெழுகப்பட்ட வெறும் நிலத்தில் உருண்டு புரண்டிருக்கிறேன். அவற்றின் மணம்கூட என்னைத் தொந்தரவு செய்த ஞாபகமில்லை.



மாட்டுச் சாணத்தால் மெழுகுவது மிக நேர்த்தியாக இருக்கும். நிலம் நல்ல அழுத்தமாக, சீராக இருக்கும். வெடிப்புக்கள் வந்து அழகைக் குலைக்காது. மெழுகியபின் தரையில் ஓர் அழகு தெரியும். விளக்குமாறால் முற்றம் கூட்டியபின், நாம் கூட்டிய ஒழுங்கில் ஈர்க்குக் கீறல்கள் நிலத்தில் கோலம் போட்டு ஓர் அழகு தெரியுமே, அதேபோல் நாம் மெழுகிய ஒழுங்கில் மெழுகப்பட்ட தரையில் கோலம் தெரியும்.

எனவே மெழுகும்போது ஒரு கலையுணர்ச்சி தேவை. அங்கிங்கென்று ஒழுங்கற்ற முறையில் கைகளை அலைத்து மெழுகலாம். நிலம் சீராக மெழுகப்பட்டிருக்கும். அனால் அழகாக இராது. ஒரே அகலத்தில், ஒரே பக்கமிருந்து (வலமிருந்து இடம் போல) ஒரே ஆரையில் இழுத்துக்கொண்டு வரவேண்டும். ஒவ்வொரு இழுவையும் ஒரே வளைவாக ஒரே அகலத்தில் இருக்கவேண்டும். இப்படி அழகாக மெழுகுவதென்பது உடனடியாக வராது என்றே நினைக்கிறேன்.
நான் பார்த்தளவில் சிலர், மாடு காலையில் போட்ட சாணம், மாலையில் போட்ட சாணம் என்று வேறுபடுத்திக்கூட மெழுகுவார்கள். நிறத்தில், தடிப்பில் மாற்றம் இருக்கும்.
__________________________________________--
அனுபவத்தின் அடிப்படையில் மாட்டுச்சாணம் பூசிய நிலங்கள் தொடர்பில் சொல்லக்கூடியது 'நித்திரை'.
அந்த மாதிரி நித்திரை வரும். நினைத்த நேரத்தில் அமைதியாக நித்திரை கொள்வது எப்போதும் கிடைப்பதில்லை. குறிப்பாக வெளிநாட்டில் என் அனுபவப்படி விருப்பமான நித்திரை இதுவரை கிடைக்கவில்லை. நித்திரை கொள்ள வேண்டுமென்று நினைத்த நேரத்தில் நித்திரை வராது. வரக்கூடாத நேரத்தில் வந்து தொந்தரவு செய்யும்.

மாட்டுச்சாணத்தில் மெழுகப்பட்ட வீட்டு நிலங்களில் நல்ல குளிச்சியை உணர்ந்திருக்கிறேன். நல்ல நித்திரையை அனுபவித்திருக்கிறேன். நல்ல அலாதியான பகல் நித்திரைக்கு நான் பரிந்துரைப்பவை: கடற்குளிப்பு முடிந்ததும் நிழலில் வந்து படுப்பது, மாட்டுச்சாணத்தால் மெழுகப்பட்ட தரையில் படுப்பது.

__________________________________


என்னுடைய பழைய குரற்பதிவுகளை கீழே இணைத்துள்ளேன்.
விரும்பினால் அப்பக்கங்களுக்குச் சென்று கேட்கலாம்.


"படலையும்" பால்ய நினைவும்.

கால் பிரேக்…- “ஒர் அலசலும் அனுபவமும்.”
___________________________________

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, August 11, 2006

கடகம் - பெட்டி - ஓலை - நார் - நான்

யோகனின் கடகம் பற்றிய விகடனுக்கான விளக்கமும் அதைத்தொடர்ந்த பதிவும் பின்னூட்டங்களும் யோகனின் வலைப்பதிவுத் தொடக்கமும் என்று கடந்த நாலைந்து நாட்களாக வலைப்பதிவில் கடகம் பற்றிய கதை கொஞ்சம் பரவலாக இருக்கிறது.
ஏற்கனவே ஒரு பின்னூட்டத்தில் நான் என் கருத்தைச் சொல்லிவிட்டாலும் கடகம் போன்ற ஒன்றைப் படமாக வெளியிடுவதால் தனிப்பதிவொன்று போடலாம் என்று தோன்றியதே இப்பதிவு.
ஏற்கனவே "கடகத்துட் குழந்தை" என்ற தலைப்பில் என்னால் பதியப்பட்டதே இப்படம்.
படத்திலிருப்பது கடகமா பெட்டியா என்று சொல்லுங்கள்.


எனக்குத் தெரிந்த பனம்பொருட்கள் பற்றி சிறுகுறிப்பைத் தரலாமென்று நினைக்கிறேன். பல சொற்களை ஞாபகப்படுத்தலாமென்பதோடு பின்னூட்டங்களில் சில விசயங்களை அறிந்துகொள்ளலாம் என்பதும் காரணம்.

கடகம்:
பதிவிலும் பின்னூட்டங்களிலும் நான் பலவிடயங்களைத் தெரிந்துகொண்டேன். இப்போதும் கடகம் இழைக்கப்படுவது ஓலையாலா நாராலா என்று திட்டவட்டமாக முடிவுக்கு வரமுடியவில்லை. கண்ணை மூடி யோசித்தால் இரண்டுமே சரிபோலத் தெரிகிறது. ஆனால் ஓலையின் பக்கம் தராசு சாய்கிறது.

கடகம் கட்டாயமாக நியம அளவொன்றைக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் அதுவோர் அளவுகருவி. கல், மணல், மண், ஊரி, சல்லிக்கல் என்பன முதற்கொண்டு பலபொருட்கள் இவற்றால் அளக்கப்படுகின்றன. அளவுகள் பற்றி யோகன் அளித்த தகவல்:
// சாதாரண விற்பனைக்குரிய கடகங்கள்;சுமார் 18 அங்குல வாய்விட்டம் ;9 அங்குல உயரம்; அடியின் அமைப்பு 4 மூலை வைத்த சதுரமாக இருக்கும். இதை நார்ச் சிக்கனம் கருதி முதல் சற்று முற்றிய (குருத்திலிருந்து 2ம்;3ம் சுற்றில் வரும் ஓலை)பனையோலையில் ஐதாக இழைத்து விட்டு.பின் வெளிப்பகுதிக்கு பனை நாரால் இழைக்கும் போது; பலம் பெறும்; இறுதியாக வாய்ப்பக்கத்திற்கு சுமார் 2 அங்குல அகலத்தில் சுற்றி சற்றுத் தடிப்பன வாராத நாரை வைத்து பனையீக்கினால் கட்டுவார்கள். 5 கடகங்கள் உள்ள ஒரு கட்டுக் கடகங்களை ஒரு சேர்வை கடகம் எனக் குறிப்பிட்டு விற்பனை செய்வார்கள்; ஒரு வீடுகட்டுமான வேலைக்கு; 2 சேர்வை கடகம் வாங்குவோம்; குளத்துமண் தோட்டத்துக்கு ஏற்றும் போது சுமார் 20 கூலிகள் வேலை செய்யும் போது 4 சேர்வை தேவை.
அந்த நாட்களில் சாதாரணமாக ஒரு வீட்டில் குறைந்தது 3 கடகங்கள் பாவனையில் இருக்கும்! ஒரு பழங் கடகம் குப்பை கூளம் அள்ள; அடுத்தது சந்தைக்குக் கொண்டு செல்வது; 3 வது மிகப் பவுத்திரமானது. சாமியறையில் இருக்கும் சமய சம்பந்தமான காரியங்களுக்காக!கோவில்களுக்கு பொங்கல் வைக்கப் போகும் போது சாமான் காவவும்; பின் பொங்கலுடன் பானை சுமக்கவும்; இந்தப் புனித கடகம் பாவிக்கப்படும். ஆண்டுக்கு ஐந்தாறு தடவை சுவாமியறையை விட்டு வெளியே வரும். அப்பபோ பாவனைக்கு முதல் கழுவிக் காயவைக்கும் பழக்கமும் உண்டு. கட்டாயமும் கூட.
//

நானறிந்த அளவில் கடகங்களின் அளவைப்பொறுத்து இரு வகையானவையுண்டு. சிறிய கடகம், பெரிய கடகம்.
ஒருமுறை எங்கள் ஊர்க் கடற்கரையிலுள்ள கோவிலொன்றில் சுற்றுப்பிரகாரம் கட்டும் வேலை நடந்தது. இரண்டு தொழிலாளிகள் செய்தார்கள். சீமெந்து, மணல், ஊரி கலந்து அச்சுற்றுப்பிரகாரம் செய்யப்பட்டது. அப்போது மணலையும் ஊரியையும் கொண்டுவந்து கொட்டுவதை எங்கள் ஊர் இளைஞர்கள் சிலர் பொறுப்பெடுத்தனர். அதை எண்ணும்படி பங்குத்தந்தையால் நான் பணிக்கப்பட்டேன். (அப்போது பதினொரு வயது) பெரிய கடகத்தில் 30 கடகம் மணலும் சிறிய கடகத்தில் 30 கடகம் ஊரியும் கொண்டுவந்து கொட்ட வேண்டும். மணலில் சிறுகுச்சியால் கோடுபோட்டு எண்ணிக்கொண்டிருந்தேன். தொடக்கத்தில் சரியாகத்தான் இருந்தது. ஒருவர் மணல் கொண்டுவந்து கொட்ட மற்றவர் ஊரி கொண்டுவந்து கொட்டினார். இறுதிவரை ஆட்கள் மாறவில்லை. ஆனால் ஒருகட்டத்தில் அவர்கள் கொண்டுவரும் கடகம் மாறிவிட்டது. சிறியகடகத்தில் மணலும் பெரிய கடகத்தில் ஊரியும் வந்தன. மணல் சற்று எட்டவாகவும் ஊரி பக்கத்திலும் இருந்தது அதற்குக் காரணம். இருபதாவது கடகத்தில் கையும் கடளவுமாகப் பிடித்ததோடு சுவாமியிடமும் சொல்லிவிட்டேன். ஆனால் எத்தனையாவது கடகத்தில் இந்த மாற்றம் நடந்ததென்று தெரியவில்லை.
அதில் இருவர் இரண்டு கடகங்களின் கனவளவுகளைக் கொண்டு கணித்து மிகுதியைச் சரிசெய்து விடப்பார்த்தனர். எத்தனையாவது கடகத்தில் மாற்றம் வந்ததென்று சரியாகத் தெரியாததால் கொட்டியவற்றை மீண்டும் அளந்து பக்கத்தில் குவிக்கவேண்டியாகிவிட்டது.

ஏன் சொல்கிறேனென்றால் கடகங்களில் இரு அளவுகள் இருந்ததாக நான் நினைப்பதற்கு இதுவொரு காரணம். உண்மையில் அப்படித்தானா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும்.

யோகன் சொல்வது போல எங்கள் வீட்டில் கூட்டிய குப்பையை அள்ள பழைய கடகமொன்றுதான் பாவிக்கப்பட்டது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பெட்டிகள்:
இவை முழுக்க முழுக்க பனையோலையாலும் ஈர்க்காலும் செய்யப்படுபவை. பனையோலை என்று சொன்னாலும் 'சார்வு' எனப்படும் முற்றாக விரியாத இளம் ஓலையைக் கொண்டே இவை செய்யப்படுகின்றன. மிகச்சிறிய பெட்டிகள் முதற்கொண்டு பெரிய பெட்டிகள் வரை உள்ளன. கோழிச்சாயத்தால் நிறமூட்டப்பட்ட ஓலைகளால் வண்ண வேலைப்பாடுகள்கூட செய்யப்பட்டிருக்கும். மிகக்கச்சிதமாகப் பொருந்தக் கூடிய மூடிகளோடுகூட ஓலைப்பெட்டிகளுண்டு.
எங்கள் ஊரில் அதிகாலையில் வீடுகளுக்குச் சென்று இடியப்பம், தோசை, அப்பம், சம்பல் விற்கும் ஆச்சி ஒவ்வொன்றுக்கும் விதம்விதமான சிறிய பெட்டிகள் வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
வெத்திலை, பாக்கு, சுண்ணாம்பு, சுருட்டு, புகையிலை போன்றவற்றை வைத்திருப்பதற்கும் பெட்டியுண்டு. (கொட்டைப் பெட்டி : நன்றி ஜெயபால்).
சந்தையில் பணம்போட்டு வைப்பதற்கு சிறிய ஓலைப்பெட்டிகளைப் பாவிப்பதைப் பெருமளவிற் காணலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நீத்துப்பெட்டி:
(எழுதும்போது நீர்த்துப்பெட்டி எனப்தே சரியென்று நினைக்கிறேன்).
இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். பெரும்பாலும் பிட்டவிப்பதற்கும் அவ்வப்போது மா அவிப்பதற்கும் பாவிக்கப்படுகிறது. நீராவியில் அவிக்கும் பண்டங்களை இதில் வைத்து அவிக்கலாம். (இட்லியை வைக்கலாமா என்று கேட்காதீர்கள்;-))
இதுவும் பெரும்பாலும் நியம அளவொன்றைக் கொண்டிருக்கும். கூம்பு வடிவில் இழைக்கப்பட்டிருக்கும். கூம்பின் முனைப்பக்கம் கீழ்நிற்கத்தக்கவாறு நீருள்ள பானையுள் வைத்தால் அரைவாசி நீத்துப்பெட்டி உள்ளேயும் அரைவாசி பானைக்கு வெளியேயும் இருக்கத்தக்கதாக பானையில் விளிம்பில் பெட்டி பொருந்தி நிற்கும். நீத்துப்பெட்டி தொடாதவாறு பானையில் நீர் இருக்க வேண்டும். பிடித்துத் தூக்கத் தக்கதாக இரண்டு செவிகள் வைத்து இழைக்கப்பட்டிருக்கும்.
பத்துப்பேருக்குள் என்றால்தான் நீத்துப்பெட்டி கட்டுப்படியாகும். அதைவிட அதிகமென்றால் வேறுவழிதான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குட்டான்:
இதுபற்றியும் ஏற்கனவே பின்னூட்டங்களில் கதைக்கபட்டுவிட்டது.
பனையோலையால் செய்யப்படும் ஓர் உருளை என்று சொல்லலாம். மிகச்சிறிய அளவிற்கூட குட்டான் செய்வது எனக்கு ஆச்சரியம்.
நாங்கள் குட்டானைப் பாவிக்கும் ஒரே இடம் பனங்கட்டிக்காகத்தான். (வேறு ஏதாவது இருக்கிறதா?)
பனங்கட்டிக்குட்டான் என்று சிறுவயதில் சொல்லத் தொடங்கி இடையில் அதற்காக நக்கலடிபட்டு இப்போது பனங்குட்டான் என்று மட்டுமே சொல்கிறேன். பனங்கட்டி காய்ச்சுவது, குட்டான் இழைப்பது பற்றி தமிழீழப்பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தால் வெளியிடப்படும் சஞ்சிகையான "அதாரத்தில்" ஒரு கட்டுரை வாசித்தேன்.
அதன்படி,
பனங்கட்டி காய்ச்சும் தொழில் அருகிவருகிறது. பனங்கட்டி காய்ச்சுவது சுலபமானதில்லை. எந்த நவீன வசதிகளோ அளவுகருவிகளோ இன்றி குடிசைக்கைத் தொழிலாகவே இருந்துவிட்டது. இதற்கு மிகுந்த கைப்பக்குவம் தேவை.பதம் சற்றுப்பிசகினாற்கூட விற்கமுடியாதபடி வந்துவிடும். இதையொரு குலத்தொழில் என்றே பலர் கருதுகின்றனர். இத்தொழில் நுட்பங்கள் வெளியில் பரவுவதில்லை. கட்டுரையாசிரியர் பனங்கட்டி காய்ச்சுவதை நேரில் பார்ப்பதற்காக மிகுந்த கஸ்டப்பட்டுள்ளார். எல்லோரும் மற்றவர்களை அனுமதிப்பதில்லை.
காய்ச்சும் வெப்பநிலை அளவுகள், நேர அளவுகள், கலவை அளவுகள் என்பன சம்பந்தப்பட்ட தொழிலாளின் பட்டறிவுகள் தானேயன்றி தரவு வடிவில் எவையுமில்லை. காய்ச்சுவதற்கு தேர்ந்தெடுக்கும் விறகு முதற்கொண்டு எல்லாவற்றிலும் நுணுக்கமாக இருக்கிறார்கள்.
சரியான வெப்பத்தில் காய்ச்ச வேண்டும். எல்லாவற்றிலும் உச்சக்கட்டம் இறக்கும் பதம்தான். கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் குட்டானில் ஊற்ற முடியாதது மட்டுமன்றி, அதன் சுவையும் மாறிவிடுமாம்.
இத்தொழில் விரிவுபடுத்தப்படாவிட்டால் இன்னும் இரண்டு சந்ததியுடன் அருகிவிடுமென்று எச்சரிக்கப்படுகிறது.

பனங்கட்டிகளும் அதன் தயாரிப்பிடத்தைப்பொறுத்து மதிப்பு ஏறி இறங்குகிறது.
மடு ஆலயத்திருவிழாவில் பனங்கட்டியும் பெருமளவில் விற்பனை செய்யப்படுகிறது. சிங்களவரின் கித்துல் வெல்லமும் தமிழர்களின் பனங்குட்டான்களும் பரிமாறுகின்றன.

யாழ்ப்பாணத்திலும் சரி, வன்னியிலும் சரி தேனீருக்குக்கூட சீனியில்லாத நிலைமைகள் பலதடவை வந்துள்ளன. அந்நேரத்தில் சிறிதளவு சினியை ஓர் உள்ளங்கையில் வைத்து நக்கிநக்கித் தேனீர் குடிப்போம். அந்தளவுகூட சீனியில்லாத நாட்களில் ஓர் இனிப்பை வாயில் வைத்துக்கொண்டு குடிப்போம். அல்லது சிறு சக்கரைத் துண்டோடு குடிப்போம். இப்படிக்குடிப்பதை "நக்குத்தண்ணி" என்று நாம் அழைப்பதுண்டு. பருவகாலங்கள் மாறிமாறி வருவதைப்போல இப்படியான காலமும் மாறிமாறி வந்துகொண்டிருக்கும்.

வன்னியில் அடிக்கடி இப்படி நிலைமை வரும். எல்லாம் அரசின் கைகளில்தான் இருந்தது. அரசு நினைத்தநேரத்தில் எந்தப்பொருளையும் நிப்பாட்டும். யாழ்ப்பாணத்தில் வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு மட்டும் சீனிபோட்டுத் தேனீர் கொடுக்ப்பது வழக்கமாக இருந்தது. வன்னியில் அதுவும் தகர்ந்தது. நக்குத்தண்ணிக் காலங்களில் வீடுகளுக்குப் போனால் நக்குத்தண்ணியே தரச்சொல்லி விருந்தினரே சொல்லவிடுவார்.

இதை எதிர்கொள்ள புலிகள் உள்நாட்டு உற்பத்தியாக பனஞ்சீனித் தயாரிப்பை ஊக்குவித்து வழங்கினார்கள். தட்டுப்பாடற்ற முறையில் குறைந்த விலையில் பனஞ்சீனி வழங்கினாலும் யாழ்ப்பாணத்தில் எங்கள் மக்கள் நடந்துகொண்ட முறை சுவாரசியமானது. கறுப்புச்சீனி பாவிப்பது கெளரவக்குறைச்சலாகக் கருதிய மேற்தட்டு, நடுத்தட்டு (பெரும்பாலும் மணியோடர் போருளாதார வர்க்கம்) கூடுதல் காசு கொடுத்து வெள்ளைச்சீனி வாங்கும், அல்லது குடித்தால் வெள்ளைச்சீனி அல்லது ஒன்றுமில்லை என்று இருக்கும். படித்த வர்க்கம் தானே, புரிந்துகொள்ளும் என்று நினைத்தோ என்னவோ, கரும்புச்சீனியையும் பனஞ்சீனியையும் ஒப்பிட்டு பனஞ்சீனியின் அதிக பலனை விஞ்ஞான ரீதியாக மக்களிடத்தில் சேர்க்க மருதுத்துவர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள் பிரச்சாரம்கூட செய்தார்கள். பீட்ரூட்டில் சர்க்கரைத் தாயரிப்பில்கூட பெருவெற்றியடைந்தது தமிழீழப்பொருண்மியம். ஆனால் யாழ்ப்பாணத்தில் ஒரு போகத்திலேயே மகத்தான தோல்வியை வழங்கினார்கள் எங்கள் மக்கள். இறுதியில் வன்னியிலிருந்து யாழ்பபாணத்துக்கு விறகு இறக்கிய செலவுகூட எடுக்காமல் பனஞ்சீனித் திட்டம் யாழ்ப்பாணத்தில் தோல்வியில் முடிந்தது. (இதுபற்றி இங்கு அதிகம் தேவையில்லை. திசை மாறிவிடும்)

வன்னியில் சீனிக்கு மாற்று ஏற்பாடாக பனங்கட்டி உற்பத்திபற்றி அதிக கரிசனை எடுக்கப்பட்டது. அப்போதுதான் இத்தொழிலை பெருமெடுப்பில் செய்யமுடியாத நிலை உணரப்பட்டது. இந்நுட்பத்தைப் பெற்றுப் பரவலாக்கி தன்னிறைவடைய முயன்றார்கள். வெற்றியளித்ததா தெரியவில்லை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பாய்கள்:
பனையோலைப் பாய் பற்றித் தெரியாதவர்கள் உண்டா?
தனியே படுப்பதற்கு மட்டுமன்றி பல தேவைகளுக்கும் பனம்பாய் பாவிக்கப்படுகிறது.
எங்கள்வீட்டில் 15 x 25 அடியில் பெரிய பனம்பாயொன்று இருந்தது. இடையில் பனஞ்சிலாகை வைத்துச் சுருட்டி தீராந்தியில் போட்டுவிடுவோம். அக்கம்பக்கத்தில் ஏதும் விசேசமென்றால் அந்தப்பாய்க்கு வேலை வந்துவிடும்.
பாயிலும் இடையிடையே கோழிச்சாயம் போட்ட ஓலைகளால் வண்ண வேலைப்பாடுகள் இருக்கும். ஓர் அங்குல அகலங்கொண்ட சார்வோலைகள் தொடக்கம் கால் அங்குல அகலங்கொண்ட சார்வோலைகள் வரை பல்வேறு அளவுகள் கொண்ட ஓலைகளால் பாய்கள் செய்யப்பட்டிருக்கும்.
வயது போனவர்கள் சிலர் பொழுதுபோக்காக இப்படி பாய் இழைப்பார்கள்.
பினாட்டு (பனாட்டு) போடவென்று நல்ல நெருக்கமாக பாய் இழைப்பார்கள். ஊரில் எங்கள் வீட்டில் தொடர்ந்து பினாட்டுப் போடுவோம். போட்ட பினாட்டை பாயிலிருந்து எடுப்பது ஒரு கலை. கிழியாமல் எடுக்கவேண்டும். ஒரேபாயில் நான்கு, ஐந்து முறைகூட பனாட்டுப் போட்டிருக்கிறோம்.
பின்பொருநாள் நண்பர்களுடன் சேர்ந்திருந்தபோது பனாட்டுப் போட்டோம். இறுதியில் பனாட்டைக் கழற்றும்போது தோல்விதான். பாயோடு சேர்த்து சதுரம் சதுரமாக வெட்டிவைத்துவிட்டோம். சாப்பிடும்போது அவரவரே பாய்த்துண்டை உரித்துச் சாப்பிடவேண்டியதுதான்.

பெரிய சமையல்களில் சோறு பரப்ப பனம்பாய்தான் அதிகம் பாவிக்கப்படுவதைப் பார்த்திருக்கிறேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

திருகணை/திருகணி:
பேச்சுவழக்கில் திருகணி என்றுதான் எங்கள் பக்கம் சொல்வார்கள். சட்டி, பானை, தாச்சி என்பவற்றை இதன்மேல் வைப்போம். தனியே பனை ஈர்க்கால் மட்டும் செய்யப்பட்டவையுள்ளன. தும்புக்கயிறினால் செய்யப்பட்டவையுமுள்ளன.
'உறி' தெரியும்தானே? கள்ளத்தீனி தின்னும் என்னைப்போன்றவர்களுக்கு எப்போதும் பிடித்தது.
இதுவும் பனை ஈர்க்கால் செய்யப்படுவதுதான். என்னுடைய அம்மம்மாவீட்டில் நான் தேடுவது உறியைத்தான். அனேகமாக பொரித்த மீனோ, இறாலோ, கணவாயோ எனக்காகப் பதுக்கப்பட்டிருக்கும்.

ஒரு சந்தையில் திருகணை விற்கும்போது பார்த்தேன். அதற்குக்கூட நிறச்சாயம் போட்ட ஈர்க்கால் அழகுவேலைப்பாடுகள் செய்திருந்தார்கள். எனக்கு ஆச்சரியம். கரிபூசப்படப்போகும் திருகணைக்கு வண்ண அலங்காரம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஓலைத் தொப்பிகள், விசிறிகள்:
பனையோலைத் தொப்பிகளும் விசிறிகளும் நல்ல பிரச்சித்தம். ஆடம்பரப்பொருட்களாகவே இவை மாறிவிட்டன.
யாழ்ப்பாணத்தில் ஒரு நேரத்தில் (93,94) பெண்களின் மிகவிருப்புக்குரிய கவர்ச்சிப்பொருளாக ஓலைத்தொப்பி இருந்தது. துவிற்சக்கர வண்டி வைத்திருப்பவர்கள் இத்தொப்பியைத் தலையில் போட்டுக்கொண்டு போவது அந்நேரத்தில் பெரிய கவர்ச்சி. ஏதோ எங்கள் பெண்கள் வெயிலில் கறுக்காமல் இருக்கிறார்களே என்று பெருமூச்சுவிட்டால் கொஞ்சநாளின்பின் அதை ஹாண்டில் பாரில் முன்பக்கமாக கட்டித் தொங்கவிட்டுக்கொண்டு போவது பெரிய கவர்ச்சிப் பாணியாக மாறிவிட்டது.
யாராவது இளைய வலைப்பதிவாளர்களுக்கு இக்காலம் ஞாபகம் வருகிறதா?
ஆண்பிள்ளைகள் ஓலைத்தொப்பி போடுவதை நினைத்துப்பாருங்கள்.
ஆனால் வெயில்காலத்தில் ஓலைத்தொப்பி மிகஉன்னதமானது.

மன்னார் மாவட்டத்தின் மடுத்திருவிழாவுக்குச் சென்றால் ஓலைத்தொப்பி, ஓலை விசிறி, சுளகு உள்ளிட்ட பனம்பொருட்களின் என்பவற்றின் விற்பனை தெரியும். விதம்விதமான வண்ண வேலைப்பாடுகள் கொண்ட ஓலைத்தொப்பிகள், விசிறிகள் விற்கப்படும். ஒரே மாதிரி வண்ணத்தில் தொப்பி போட்டுக்கொண்டு கூட்டமாகத் திரிவார்கள். ஆனால் விலை கடுமையாகவே இருக்கும். கிட்டத்தட்ட கொழும்பு விலை விற்பார்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சுளகு:
இதை தமிழகத்தில் எப்படிச் சொல்வார்கள்?
பெரும்பாலும் அரிசி பிடைக்கப் பாவிக்கப்படுகிறது.
ஆனால் எங்கள் வீட்டில் புட்டு கொத்துவது தொடக்கம் பல தேவைகளுக்குப் பாவிக்கப்படும்.
குசினி வெளிப்படிகளில் நின்று அரிசி பிடைக்க, முன்னால் கோழிகள் சண்டைபோட்டுக்கொண்டு "ஆ"வென்று காத்திருப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பது சுவாரசியம்தான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பட்டம்:
பனைநார் கொண்டு பட்டங்கள் செய்வோம். கொக்கன், பிராந்தன், பெட்டி, எட்டுமூலை, பாம்பன் என்று பலவிதப் பட்டங்கள். வெளவால் பட்டத்துக்கு தென்னை ஈர்க்குப் போதும். பெரிய பட்டங்களுக்குப் பனைநார் நல்லது.
யாழ்ப்பாணத்துக்குள்ளேயே பட்டமே முக்கிய பொழுதுபோக்காகக் கொண்ட ஊர்களும், பாடப்புத்தகத்தில் அறிந்ததோடு தொடர்பு முடிந்த ஊர்களும் உள்ளன. இடம்பெயர்ந்து வந்திருந்த ஓரிடத்தில் பிராந்தன் பட்டம் ஏற்றியபோது, 'அதெப்படி வாலில்லாமல் பட்டம் பறக்கிறது?' என்று ஆச்சரியப்பட்ட மக்களைப் பார்த்திருக்கிறேன். மின்விளக்குகள் பூட்டி பட்டங்கள் பறக்கிவிடுவதெல்லாம் இப்போது கனவுபோலத்தான் தெரிகிறது. பத்துவயதில் (இந்திய இராணுவ காலம்) வீட்டுக்குத் தெரியாமல் இன்னொருவரோடு பலமைல்கள் சைக்கிளில் போய், அதுவும் காங்கேசன்துறைப் படைமுகாம் கடந்து மயிலிட்டி வந்து பட்டம் வாங்கிச் சென்றது (வீட்டாரைப் பொறுத்தவரை இது உயிரைப் பணயம் வைக்கும் வேலை. இளங்கன்று பயமறியாது என்பது "இந்த" விசயத்தில் உண்மை) உட்பட பல இனிய ஞாபங்களுள்ளன. 89 இல் வல்வெட்டித்துறைக் கடற்கரையில் வானம் தெரியாமல் பறந்துகொண்டிருந்த விதம் விதமான பட்டங்களின் காட்சி இன்றும் பசுமையாகவே உள்ளது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பனையீர்க்கு:
பனையீர்க்கு பலவிதங்களில் பயன்படுகிறது.
தனியே ஈர்க்கு என்று பார்தால் கிடுகு வேய்வதற்கு (பேச்சில் மேய்தல் என்றும் சொல்வதுண்டு) பனையீர்க்குத்தான் அதிகம் பாவிக்கப்படுகிறது. நீரில் ஊறப்போட்டுப் பாவிப்போம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பனையோலையில் செய்யப்படும் முக்கிய பொருள் பிளா.
இதுபற்றிச் சொல்லத்தேவையில்லை;-)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இப்போது உடனே ஞாபகம் வந்தது இவைதாம்.
வேறு என்ன முக்கியபொருட்கள்?

இப்பதிவுக்கான மூலப்பதிவுகள்
யோகன் பாரிஸ் அவர்கள் கவனத்திற்கு -இலவசக் கொத்தனார்
சுஜாதா-நான்-கடகம் -யோகன்.
இப்போதெல்லாம் பதிவு எழுதவே பஞ்சி. அரைகுறையாகவென்றாலும் இந்தப்பதிவை எழுத ஒரு தூண்டுதலாயிருந்தவர்களுக்கு நன்றி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

****உடம்பைக் குறிக்க "மேல்" என்ற சொல்லை நாங்கள் பாவிக்கிறோம். ஈழத்தார் அனைவரும் பாவிப்பதாக நினைக்கிறேன். சரியா?
இச்சொல்லை தமிழத்தார் பாவிக்கிறார்களா?
இது எப்படி வந்தது? 'மெய்'யிலிருந்து வந்திருப்பதாகத் தெரியவில்லை. 'மேனி'யிலிருந்து???


_____________________________________________

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________