Wednesday, November 21, 2007

பாமரன் பேட்டையும் இராஜராஜனும்

நான்கு மாதங்களின்முன்பு தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்க்க நேரிட்டது. நிகழ்ச்சி தொடங்கி ஓரிரு நிமிடங்கள் தாமதமாகத்தான் பார்க்கத் தொடங்கினேன்.
நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்த முகத்தை எங்கோ பார்த்திருக்கிறேனே என்று யோசித்து, பின் கண்டுபிடித்துவிட்டேன். அவர் எழுத்தாளர் பாமரன்.

நிகழ்ச்சியின் பெயர் 'பாமரன் பேட்டை'.

அன்றைய நிகழ்ச்சியில் பாமரனுடனான நேர்காணலுக்கு வந்திருந்தவர் 'பெயர் மாற்றல் நிபுணர்' இராஜராஜன். (அவர் சோழன் என்ற ஒட்டைச் சேர்த்துள்ளதாக நான் அறியவில்லை. பின் எப்படி சயந்தனின் இடுகையில் அவர் இராஜராஜ சோழன் ஆனார் என்பது விளங்கவில்லை. பெயர் மாற்ற நிபுணரின் பெயரையே மாற்றிய நிபுணர் சயந்தன்.)

முன்பு 'சிகரம்' தொலைக்காட்சி இங்கு ஒளிபரப்பாகியபோது, இராஜராஜனின் நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டன. தமிழகத் தொலைக்காட்சியொன்றில் அவர் செய்யும் பெயர்மாற்ற நிகழ்ச்சியே இங்கு மறுஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. எங்காவது இந்நிகழ்ச்சி பார்க்க நேரிட்டால் பொழுதுபோக்காக அவ்வப்போது பார்த்திருக்கிறேன். ரி. ராஜேந்தருக்கு இவர்தான் பெயர்மாற்றினார் என்ற தகவல் அறிந்தபோது மனிதரில் ஒரு சுவாரசியமான ஈர்ப்பு ஏற்பட்டது. (கவனத்துக்குரிய கலைஞர் ஒருவரையே மடக்கிப்போட்டாரே என்ற ஆச்சரியத்தால் இருக்கலாம்). அதன்பின் சிகரம் நின்றுபோனது. தரிசனம் வந்தது. நல்லவேளையாக இந்தக் கோமாளி நிகழ்ச்சிகள் தரிசனத்தில் ஒளிபரப்பாகவில்லை.

இனி பாமரன் பேட்டைக்கு வருவோம்.
தொடக்கத்தில் தனது துறையைப் பற்றிச் சிறு அறிமுகத்தை அளித்தார் இராஜராஜன். பெயர்தான் உலகத்தில் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறதென்பது அவரின் அடிப்படை வாதம். பின்னர் நடந்தது சுவாரசியமான உரையாடல்.

** இந்தியச் சிறைகளிலிருக்கும் அனைத்துக் கைதிகளையும் தன்பொறுப்பில் விடுமாறும், அவர்களை தான் பொறுப்பெடுத்து அவர்களின் பெயர்களை மாற்றி, அவர்களை நல்லவர்களாக, வல்லவர்களாக மாற்றிக் காட்டுவதாகச் சொன்னார்.
சிறையிலிருந்து விடுதலை செய்து கையளிப்பதா அல்லது சிறையிலிருக்கும் நிலையிலேயே கையளிப்பதா என பாமரன் கேட்க, விடுதலை தேவையில்லை; சிறையில் வைத்தே பொறுப்பளிக்கும்படி இராஜராஜன் கேட்டுக்கொண்டார்.

** தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் பற்றி பாமரன் கேட்க, அவர்தான் உலகப்பயங்கரவாதத்தின் தலைவர் என்பதை இராஜராஜன் தெளிவாகச் சொன்னார். அவரின் பெயரை மாற்றிவிட்டால் அவர் நல்லவராகிவிடுவார், அமெரிக்காவும் உலகமும் நிம்மதியாக இருக்கலாமென்பதையும் இராஜராஜன் சுட்டிக்காட்டினார். அவரின் தந்தைக்கும் புஷ் என்ற பெயர் இருப்பதையும், அவரும் பயங்கரவாதத் தலைவராக இருந்ததையும் சுட்டிக்காட்டி, பெயர்தான் இந்த மனப்பான்மைக்குக் காரணமென்ற தனது வாதத்தை இன்னும் வலுவாக்கினார்.

*சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பற்றி பாமரன் கேட்க, அவருக்கும் அந்தப் பெயர்தான் பிரச்சினையாக இருந்ததென்றும் பெயரை மாற்றினால் அவர்கள் நல்லவர்களாக மாறி நாட்டுப்பிரச்சினை தீர்ந்துவிடுமென்றும் இராஜராஜன் கூறினார்.

** இடங்களுக்கு, நாடுகளுக்குப் பெயர்மாற்றுவது தொடர்பாக நேர்காணல் திரும்பியது.
'பம்பாய்' என்பதை 'மும்பை' என்று மாற்றியது தவறு என்றார் இராஜராஜன். அப்படி மும்பாயாக மாறியபின்புதான் அங்குக் குண்டுவெடிப்புக்கள் வன்முறைகள் என்பன தலைதூக்கின; அதற்குமுன்பு அது அமைதியான நகரமாக இருந்தது என்றார்.
இடையில் குறுக்கிட்ட பாமரன், பெயர் மாற்றத்துக்கு முன்பு நடந்த பல குண்டுவெடிப்புக்கள், அசம்பாவிதங்களைச் சொல்லிக் காட்டினார். அதற்கு, முன்பு குறைவாக இருந்தன, பெயர்மாற்றத்தின் பின்னர்தான் அவை அதிகரித்தன என்றார் இராஜராஜன். பாமரன் மேலும் சில விவரங்களைச் சொல்லப் புறப்பட்டபோது, 'நான் இதுபற்றி நீண்ட ஆராய்ச்சிகள் செய்துள்ளேன். தகவல்களைச் சேகரித்து வைத்துள்ளேன். இதுதொடர்பாக நான் உங்களுக்கு அவற்றைத் தரமுடியும்' என்று கூறினார். பாமரன் அத்தோடு மும்பாய் விடயத்தைக் கைவிட்டார்.

டில்லியை 'நியு டில்லி' என மாற்றியபின்பு அங்கு அமைதி நிலவுவதாகவும் அதற்குமுன் அங்கும் குண்டுவெடிப்புக்கள், வன்முறைகள் தலைவிரித்தாடின என அடுத்த விடயத்தைத் தொடங்கினார் இராஜராஜன். பாமரன் அதற்கும் சில விவரங்களைக் கொடுத்து, நியுடில்லி எனப் பெயர்மாற்றிய பின்னர்தான் அதிக வன்முறைகள் நடந்தன எனச் சொன்னார். பாராளுமன்றக் கட்டடத் தொடர் மீதான தாக்குதல் உட்பட சிலவற்றைச் சொன்னார் பாமரன். வழமைபோல 'நான் இதுபற்றி நீண்ட ஆராய்ச்சி செய்துள்ளேன்' என்ற பஞ்சாங்கத்தைப்பாடி அதிலிருந்தும் நழுவினார் இராஜராஜன்.

இலங்கைச் சிக்கல் பற்றியும் பேச்சு வந்தது. அது சிலோன் எனப் பெயர் இருந்தவரைக்கும் ஆசியாவின் பூந்தோட்டமாகத் திகழ்ந்ததாகவும், சிறிலங்கா எனப்பெயர் மாற்றியபின்புதான் அங்குப் பிரச்சினை தோன்றியதாகவும் இராஜராஜன் குறிப்பிட்டார்.
பா.: எப்போ இந்தப் பெயர் மாற்றம் நிகழ்ந்தது?
இரா: கொஞ்ச வருசத்துக்கு முன்னாடிதான்.
பா. அது சிலோனாக இந்தப்பவே 56 ஆம் ஆண்டுக் கலவரம் உட்பட பல பிரச்சினைகள் நடந்தன, தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்...
இரா: ஆமா, ஆனா பெயர் மாத்துறதுக்கு முன்னாடி பெரிசா பிரச்சினை இல்ல. அதுக்குப்பின்னாடிதான் ஒருத்தனை ஒருத்தன் அடிச்சிக்கிட்டு சண்டை போட ஆரம்பிச்சாங்க...

** இந்தியாவில் சில முக்கிய புள்ளிகளின் பெயர்களை மாற்றியது இந்த இராஜராஜன் தான். அதுபற்றியும், அப்படிப் பெயர்மாற்றப்பட்டவர்களில் இருவரின் தற்போதைய நிலைபற்றியும் பாமரன் கேள்வியெழுப்பினார்.
ஒருவர், தற்போது விஜய ரி. ராஜேந்தர் எனப் பெயர்மாற்றிக்கொண்டிருப்பவர்.
பெயர் மாற்றத்தின்பின்னான அவரின் தோல்வி குறித்துக் கேட்கப்பட்டபோது,
அவர் தன்னிடம் பெயர்மாற்ற வந்தபோது அரசியல் அனாதையாகத்தான் இருந்தாரென்பதைக் குறிப்பிட்டார் இராஜராஜன். இன்னும் சிலவற்றைச் சொல்லியவர், 2011 இல் ரி.ராஜேந்தர் தமிழகத்தின் மிகமுக்கிய அரசியற்புள்ளியாக வருவார் என்பதை தான் எதிர்வுகூறியதாகவும், அது கட்டாயம் நடக்குமென்றும் உறுதியளித்தார்.

இவரால் பெயர் மாற்றப்பட்ட இன்னொருவர் பா.ஜ.க. திருநாவுக்கரசு.
"அரசராக இருந்தவரை அரசுவாக பெயர் மாற்றினீர்களே, (நான் சொல்வது சரிதானே? அல்லது மறுவளமாகவா?) அந்தப் பெயர் மாற்றத்தின்பின்னர்தான் அவரின் அரசியலில் மிகப்பெரும் வீழ்ச்சியேற்பட்டது. மத்திய அரசில் முக்கியமான அரசியற்புள்ளியாக (அமைச்சராக?) இருந்தவர், பெயர் மாற்றத்தின்பின்னர் சொந்த மண்ணிலேயே போட்டிபோட முடியாத நிலைக்கு ஆளாகவிட்டாரே" என்று பாமரன் கேட்டார்.
அதற்கு இராஜராஜன் அளித்த பதில்தான் சிறப்பானது.

தனது பெயர்மாற்றத்தின்படி அவர் மிகவுயர்ந்த இடத்துக்கு வந்திருக்க வேண்டியவர். ஆனால் அவரின் தவறான அணுகுமுறையால்தான் இப்படியாகப் போனார். தவறான அணுகுமுறையென்ன என்பதை அவர் விளங்கப்படுத்தினார். அதாவது கட்சியைவிட்டு காங்கிரஸ் பக்கம் தாவியிருக்க வேண்டுமாம். சரியான நேரத்தில் தாவாதபடியால் அவரால் முக்கியமான புள்ளியாக வரமுடியவில்லையாம். அவர் சொந்தக் கட்சிக்கு விசுவாசமாக இருக்க நினைத்தார்; அதனால்தான் இப்படி ஆனார். திருநாவுக்கரசுவுக்கு அரசியல் சாணக்கியத்தனம் இல்லை. அதுதான் பிரச்சினையே ஒழிய தனது பெயர்மாற்றத்தில் எந்தப் பிரச்சினையுமில்லை என்றார்.
[இவ்விடத்தில் பாமரன் முகத்தில் தெரிந்தது நையாண்டித்தனமான சிரிப்பா அல்லது அதிர்ச்சியா என்பது தெரியவில்லை. ஆனால் மனிதர் ஆடிப்போய்விட்டார்.]

'அப்போ, அவர் வெல்லும் கட்சிக்குத் தாவியிருக்க வேண்டுமென்பதையா சொல்கிறீர்கள்?' என பாமரன் ஒரு தெளிவுக்காகக் கேட்டார்.
இராஜராஜன் அதைத்தான் தெளிவாகத் திருப்பச் சொன்னார். (அதைத்தானையா எல்லா அரசியல்வாதியும் செய்யிறான், இதுக்கெதுக்குப் பெயர் மாற்றம்?)

** தந்தை பெரியாரைப் பற்றியும் பேச்சு வந்தது. அவருக்குப் பெரியார் என்ற பெயர் வந்தபிறகுதான் அவர் பிலபலமானார் என்று இராஜராஜன் கூறினார். பெரியார் என்ற பெயர்பற்றி பாமரன் ஏதோ குறுக்கிட, 'மக்கள்தான் அந்தப் பெயரை அவருக்குக் கொடுத்தார்கள், அதன்பின்னர்தான் அவர் பிரபலமானார்' என்று இராஜராஜன் கூறினார்.
பாமரன்: அப்போ நீங்களும் பெரியார் என்ற பெயரை வைத்திருக்கலாமே? பிரபலமாவதோடு சமூகத்துக்கும் நல்லது செய்திருக்கலாம். ஏன் இராஜராஜன் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தீர்கள்?
அதற்கு இராஜராஜன் பெரிதாகச் சிரித்தபடி பாமரனுக்கு நக்கல் தொனியில் பதிலளிக்கிறார்,
"அட என்னங்க நீங்க?... இந்த ஒட்டுமொத்த உலகத்தையே ஒரு புரட்டுப் புரட்டப் போகிறேன் என்கிறேன், என்னைப்போய் பெரியார் என்று பெயர் வைக்கச் சொல்கிறீர்கள்? ராஜராஜன் என்ற பெயர்தான் இதற்குச் சரி."

அத்தோடு பாமரன் அடுத்த விடயத்துக்குத் தாவிவிட்டார்.;-).

** நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில் இராஜராஜனைப் பார்த்து,
'முன்பு கூட்டங்களில்தான் பேசிக்கொண்டிருந்தீர்கள், இப்போது தொலைக்காட்சியிலும் இடையறாது வருகிறீர்களே?' என்று கேட்டதற்கு அதைப் பெருமைபொங்க ஒப்புக்கொண்டார் இராஜராஜன். தனது நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேர அட்டவணையைச் சொன்னார்.

பாமரன்: முன்பெல்லாம் சின்னக்குழந்தைகளுக்கு உணவூட்ட உம்மாண்டி வருது என்று பயங்காட்டிச் சோறூட்டுவார்கள் தாய்மார், இப்போது இராஜராஜன் ரீவியில் வரப்போறார் என்று சொல்லித்தான் உணவூட்டுகிறார்களாம், உண்மையா?
[பாமரனின் இந்தக் கேள்வி எனக்கு பண்பற்றதாகவே தோன்றியது. என்னதான் ஒரு கோமாளியை முன்னிருத்திவைத்து நேர்காணல் செய்தாலும் இப்படி அவமதிக்கக்கூடாது. அதுவும் நாமே நேர்காணலுக்கு அழைத்துவிட்டு இப்படிச் செய்யக்கூடாதென்பது என் கருத்து.]

ஆனால் எந்தச் சலனமுமில்லாமல் சிரித்துக்கொண்டே, ஆஆ... அப்படியா? என்று கேட்டார் இராஜராஜன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் பார்த்த நிகழ்ச்சி. இன்னும் சில சுவாரசியமான சம்பவங்கள் விடுபட்டிருக்கின்றன என நினைக்கிறேன்.

இவ்விடுகையெழுதத்தூண்டிய சயந்தனுக்கு நன்றி.

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"பாமரன் பேட்டையும் இராஜராஜனும்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (22 November, 2007 05:39) : 

அருமையான பதிவு. பாமரன் இதுபோன்ற கோமாளிகளை ஏன் நேர்காணல் செய்கிறார் என்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. அந்த கோமாளி இப்போதும் விஜய் டிவியில் வந்து கழுத்தறுத்து கொண்டிருக்கிறார். இந்த டுபாக்கூர்களை என்ன செய்யலாம்.?

 

said ... (22 November, 2007 18:01) : 

ஒரு புலனாய்வுப் பத்திரிகையில் பணிபுரிந்தபோது இந்த ராசராசனைத் தோலுரிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பு கிடைத்தால் விரிவாக எழுதலாம். இன்னொரு சுவாரசியமான தகவல், ராசராசன் முன்பு திராவிடர்கழகத்தில் இருந்தவர்.

 

said ... (23 November, 2007 03:10) : 

//பெயர் மாற்ற நிபுணரின் பெயரையே மாற்றிய நிபுணர் சயந்தன்//

பெயர் மாற்ற நிபுணரின் பெயரையே மாற்றிய நிபுணர் சயந்தனின் பெயரையே மாட்டிய நிபுணர் வசந்தன்

//அதைத்தானையா எல்லா அரசியல்வாதியும் செய்யிறான், இதுக்கெதுக்குப் பெயர் மாற்றம்?)//

அதுதானே! சுலபமாக கட்சிமாற்றம் என்று சொல்லிவிட்டுப் போகலாமே?

தருமு சிவராமு மட்டும் இன்றைக்கும் உயிரோடு இருந்திருந்தால், "சபாஷ்! சரியான potty" என்று சொல்லியிருந்திருக்கலாம் :-(

 

said ... (24 November, 2007 12:05) : 

பிரதாம்குமார்,
வரவுக்கு நன்றி.
பாமரன் இதுபோன்றவர்களைச் செவ்வி காணவேண்டும்.
மற்றத் தொலைக்காட்சிகள் இவர்களின் நிகழ்ச்சிகளை இவர்களின் பார்வையிலேயே ஒளிபரப்புகின்றன. ஆனால் இவர்களைத் தோலிக்கும் நிகழ்ச்சிகள் வருவதில்லை. அவ்வகையில் இது கட்டாயம் தேவையான நிகழ்ச்சி.


சுகுணா,
நீங்கள் புலனாய்வுப் பத்திரிகையிற் பணிபுரிந்தீர்களா?
சும்மா மொக்கை போட்டுக்கொண்டிருப்பதைவிட்டு (நீங்கள் கவிதை எழுதுவதைச் சொல்லவில்லை;-) அவற்றை எழுதலாமே?

** நீங்கள் சுகுணாதிவாகர்தான் என்பதில் எனக்கு ஐயமுண்டு.

 

post a comment

© 2006  Thur Broeders

________________