Friday, November 09, 2007

வை.கோ உலகத்தமிழர்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமா?

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் 'உதயன்' செய்தியேடு, வை.கோ இன்னமும் ஜெயலிதாவுடனான அரசியற்கூட்டணியில் தொடர்வது பற்றி உலகத்தமிழர்களுக்கு விளக்கம் தரவேண்டுமென ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது.

வை.கோ ஜெயலலிதாவுடன் அரசியற்கூட்டணி வைத்திருப்பது தவறாம்; அதன் காரணத்தால் உலகத் தமிழர்களுக்கு அவர் பதில் தரவேண்டுமாம். ஜெயலிதாவுடன் கூட்டணி வைத்தது ஏன் தவறென்றால் அவர் (ஜெயலலிதா) ஈழத்தமிழர்களுக்கு எதிரானவராம். உதயனின் ஆசிரியர் தலையங்கத்தின் இறுதிப் பந்தி இங்குத் தரப்படுகிறது.

ஈழத் தமிழர்களுக்கும், அவர்தம் நியாயம் மிக்க போராட்டத்துக்கும் முழு ஆதரவாளர் என உலகுக்குத் தம்மை அடையாளப்படுத்தி, வெளிப்படுத்தி நிற்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ போன்றோர், இத்தகைய ஈழத் தமிழர் விரோதப் போக்குடைய ஜெயலலிதாவுடன் அணி சேர்ந்து அவருக்கு வால் பிடிப்பதாகக் காட்டிக் கொள்வது என்ன நியாயம்? உலகத் தமிழர் சமூகத்துக்கு அவர் உரிய பதில் தருவது இன்றைய நிலையில் தவிர்க்க முடியாத கட்டாயமாகும்.


வை.கோ மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள், நையாண்டிகள் வைக்கப்படுகின்றன. யாரும் என்னவும் செய்துவிட்டுப் போகட்டும். வை.கோ தொடர்பில் அவரவருக்குப் பல பிரச்சினைகள். ஆனால் நான் கொண்டிருக்கும் அரசியல் நிலைப்பாடுடைய, தன்னைத் தமிழ்த்தேசிய ஊடகமாகக் காட்டிக்கொள்ளுமோர் ஊடகம் இதை எழுதியபோது என்னுணர்வையும் பதிந்து வைக்கும் தேவையுள்ளதாக நினைக்கிறேன். உதயன் எழுதியதாலேயே அது ஈழத்தவர்களின் நிலைப்பாடாகக் கருதப்படக்கூடிய ஏதுநிலைகள் தென்படுவது ஒரு காரணமாகிறது.
போதாததற்கு, அங்கிங்குப் பொறுக்கி ஒட்டுவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்ட - 'டமில்' தேசிய ஊடகங்களாகத் தம்மைக் கட்டமைத்துக்கொண்டவை, உதயனின் இவ்வாசிரியர் தலையங்கத்தைத் தமது இணையத்தளங்களில் ஒட்டிக்கொண்டிருப்பதாலும், அவ்வூடகங்களில் வரும் அனைத்தையும் ஒட்டிக்கொண்டிருக்கும் வலைப்பதிவுகள் சிலவற்றிலும் அத்தலையங்கம் வெளியிடப்பட்டதாலும் தனிப்பட்ட என்னுணர்வைப் பதிவாக்குவது அவசியமாகிறது; அது எவனுக்குமே தேவைப்படாதென்றபோதும்கூட.

உதயன் இப்படியொரு தலையங்கம் எழுதவேண்டிய வந்ததன் முதற்காரணம், அண்மையில் தமிழக முதல்வர் மு.கருணாநிதி எழுதிய "இரங்கற் பதிவொன்றுக்கு" ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம்தானெனக் கருதமுடிகிறது. அதை முதன்மைப்படுத்தி ஜெயலலிதா, சோ, சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட கும்பலுக்குத் திட்டு விழுகிறது. முதல்வருக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்படுகிறது. இறுதியில் ஜெயலலிதாவோடு அரசியற்கூட்டணி வைத்துக்கொண்டு அவருக்கு 'வால்பிடித்து'க்கொண்டிருக்கம் வை.கோ.வுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு அவர் "உலகத்தமிழர்களுக்கு" விளக்கம் கொடுக்க வேண்டுமென முடிகிறது.

[முதலில், உதயன் உலகத்தமிழர்கள் சார்பாகக் கதைக்கிறதா ஈழத்தமிழர்கள் சார்பாகக் கதைக்கிறதா எனக் குழப்பம் வந்தது. 'உலகத் தமிழர்கள்' அனைவருமே வை.கோ பதில்சொல்ல வேண்டுமென எதிர்பார்க்கிறார்களா என்ற கேள்வியும் வந்தது. "ஈழம் என் வீடு, தெற்காசியா என் முற்றம், உலகம் என் கிராமம்" என்றெழுதிய கவிஞர் ஜெயபாலன் உதயனுக்குள் ஊடுருவிவிட்டாரா, அல்லது கனியன் பூங்குன்றன் சொன்ன 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எண்டநோக்கிலதான் உதயன் சொல்ல வருதோ - அப்பிடிச் சொன்னாலும் ஏன் தமிழரைமட்டும் சொல்லுறாங்கள் எண்டெல்லாம் நிறைய வழிகளில் இதைக் 'கட்டுடைக்க'ப் புறப்பட்டு, அதற்கெல்லாம் நேரமில்லாத காரணத்தால், தட்டச்சும்போது போகிறபோக்கில் உலகத்தமிழர்களென்று தட்டிவிட்டார்களென நினைத்துக்கொண்டேன். ஈழத்தமிழர்களை - குறிப்பாக புலிகளை அரசியற்றலைமையாக ஏற்றுக்கொண்டவர்களையே உதயன் குறிப்பிடுகிறது எனக் கருதிக்கொண்டு எனது கருத்தைத் தெரிவிக்கிறேன்.]

இங்கு எனக்கொரு குழப்பம் வந்துவிட்டது.
வை.கோ எந்தக் கட்சியோடு கூட்டணி வைக்கவேண்டும், எப்படி அரசியல் நடத்த வேண்டுமெனச் சொல்வதற்கு ஈழத்தவர்கள் யார்? உதயன் யார்? அது முழுவதும் தமிழக அரசியலோடு தொடர்புடையது. நீங்களா போய் வை.கோ. வின் கட்சிக்கு வாக்களிக்கப்போகிறீர்கள்? தமிழக அரசியலில் ஒருவரோ ஒரு கட்சியோ எடுக்கும் முடிவுக்கும் செயன்முறைக்குக்கும் கட்டளையிட நீங்கள் யார்? உங்களுக்கு என்ன அருகதையிருக்கிறது? தமது 'தமிழக அரசியல்' செயற்பாடுகளுக்கெல்லாம் ஈழத்தவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய தேவை அவர்களுக்கெங்கே இருக்கிறது?

சரி, இவ்வளவு கதைக்கும் நீங்கள் வை.கோ. வுக்கு இருந்த - இருக்கும் தெரிவுகளை யோசித்தீர்களா? கூட்டணி தொடர்பில் வை.கோ என்ன செய்திருக்க வேண்டுமேனக் கருதுகிறீர்கள்?
தனித்துப் போட்டியிடுவதையா? அல்லது சுந்தரமூர்த்தி போன்ற பதிவர்கள் சொன்ன இன்னொரு தெரிவான கட்சியைக் கலைத்துவிட்டு வாக்கு அரசியலில் இருந்து விலகிக் கொள்வதையா? ஈழத்தவர்களுக்கு வை.கோ மூலம் கிடைக்கும் நன்மையே அவர் வாக்கரசியலில் முக்கிய புள்ளியாக இருப்பது மட்டும்தான். வாக்கரசியலை விட்டு வெளியிலே ஈழத்துக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்த ஏராளம் திராவிட, பெரியாரிய, இவற்றிலே சேராத தொண்டர்கள் இருக்கிறார்கள்.

தமிழக அரசியலில் ஒருவரின் செயற்பாட்டையும் அவரின் ஈழம் தொடர்பான நிலைப்பாட்டையும் ஒன்றாகக் குழப்பக்கூடாதென்பதே எனது கருத்து. இதை வலுப்படுத்த, நாங்களெல்லாம் தலையில் தூக்கிவைத்தாடும் ஒருவரைக் கொண்டே விபரிக்கலாம்.
மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரை, புலிகளும் சரி, புலிகளின் ஆதரவாளர்களும் சரி, எப்படிக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்களென்பது அனைவருக்கும் தெரியும். மிக முக்கிய காலகட்டத்தில் செயற்கரிய உதவிகளைச் செய்து புலிகளை வளர்த்ததற்காகவும் அதன்மூலம் ஈழப்போராட்டத்திற்கு உதவியளித்ததற்காகவும் "மட்டுமே" - ஆம் அதற்காக மட்டுமே - நாம் எம்.ஜி.ஆரை நன்றியோடு நினைவுகூர்கிறோம்.
யாராவது அவரின் தமிழக அரசியல் நிலைப்பாடு, செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டுள்ளோமா? அவரின் ஊழல்கள், மோசடிகள், அடாவடிகள், தனிப்பட்ட வாழ்க்கை என எதையாவது இதற்குள் கலந்தோமா? அப்படிக் கருதப்புறப்பட்டால் அவர் மீதான எமது நிலைப்பாடு மாறக்கூடுமல்லவா? அவையெல்லாவற்றையும் புறந்தள்ளி தனியே எம்மோடு தொடர்புடைய விடயத்தை மட்டும் கருத்திற்கொண்டுதான் இன்றுவரை எம்.ஜி.ஆரை அணுகிவருகிறோம்.

ஆனால் எம்.ஜி.ஆர் அளவுக்குக்கூட எந்தவொரு குற்றச்சாட்டையும் சுமத்தமுடியாத, தனிப்பட்ட வாழ்விலும்சரி, அரசியல்வாழ்விலும் சரி அப்பழுக்கற்ற வை.கோ. மீது, அவரின் அரசியற்கூட்டணி நிலைப்பாடு தொடர்பாக விமர்சனம் வைத்து அதற்குரிய விளக்கத்தைச் சொல்ல வேண்டுமெனக் கேட்குமளவுக்கு நீங்கள் வந்துவிட்டது எவ்வாறு?

இந்தப்பிரச்சினையில் வை.கோ. கேட்கும் எதிர்க்கேள்விகள் மிகமிக நியாயமானவை. பலசந்தர்ப்பங்களில் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாது; ஆனால் எதிர்க்கேள்விகள் மூலம் எதிராளிக்கான பதிலைக் கொடுக்கலாம். இப்போது வை.கோ செய்வதும் ஒருவகையில் அப்படித்தான் தெரிகிறது. வை.கோ. வால் நிச்சயமாக தகுந்த விளக்கத்தைக் கொடுக்க முடியாத சூழ்நிலைதான் இப்போதுள்ளதாகப் படுகிறது. ஆனால் அவரின் எதிர்க்கேள்விகள் பல நியாயமானவை.

வை.கோ பாணியிலேயே நானும் உதயனைப் பார்த்துச் சில எதிர்க்கேள்விகள் கேட்க முடியும்.
ஓர் இரங்கற்பதிவெழுதியதற்காக தற்போது திடீரென தலையில் தூக்கிவைத்தாடும் தமிழக முதல்வர் இப்போதும் காங்கிரஸ் கட்சியோடுதான் கூட்டணி வைத்துள்ளார். அது பிரச்சினையில்லை. ஆனால் தமிழ்ச்செல்வனின் படுகொலைக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடிய காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளார். (கவனிக்க: காங்கிரஸ் தலைவர் ஒருவர் இனிப்பு வழங்கிக் கொண்டாடியது புகைப்படத்துடன் தினக்குரலில் செய்தியாக வந்துள்ளது. இச்செய்தி பிழையானதென சரியான முறையில் மறுத்தால் நான் இப்பத்தியை நீக்கிவிடுவேன்). அதைவிட, முதல்வரின் இரங்கற்பதிவுக்கு ஜெயந்தி உட்பட வேறும் சில காங்கிரஸ் பிரமுகர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். இவர்களோடுதான் கருணாநிதி இன்னமும் கூட்டணி வைத்துள்ளார். முதல்வரின் இரங்கற் பதிவு பற்றி ஜெயலலிதா சொன்னதற்கும் காங்கிரஸ் பிரமுகர்கள் சொன்னதற்குமுள்ள வித்தியாசத்தை உதயன் விளக்குமா? ஜெயலலிதாவாவது இனிப்பு வழங்கிக் கொண்டாடாமல் விட்டார்.
இப்போது என் கேள்வியென்னவென்றால், இரங்கற்பதிவைப் பழித்த காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்திருக்கும் முதல்வர், உலகத்தமிழரெல்லாம் வேண்டாம், ஈழத்தமிழர்களுக்கு ( வேண்டாம் யாழ்ப்பாணத்தமிழர் - அதுவும் வேண்டாம், சங்கானை, சித்தங்கேணி, சண்டிலிப்பாய் எண்டு ஏதாவது ஓர் ஊர்த்தமிழர்களுக்கு) விளக்கமளிக்கக் கடமைப்பட்டுள்ளாரென அடுத்த ஆசிரியர் தலையங்கம் எழுதுவீர்களா?

** கவனிக்க: முதல்வர் காங்கிரசோடு கூட்டணி வைத்திருப்பது தவறென்றோ, அவர் அதற்கான விளக்கத்தை ஈழத்தவர்களுக்கு அளிக்க வேண்டுமென்றோ நான் கேட்கவில்லை. உதயன் நாளிதழுக்கான ஓர் எதிர்க்கேள்வியே அது. இது தொடர்பில் எனது நிலைப்பாட்டை இறுதியில் ஓரிரு வரியில் எழுதுகிறேன்.

ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்ததற்கோ வால்பிடிப்பதற்கோ ஈழத்தவர்கள் கவலை கொள்ளவும் உணர்ச்சிவசப்படவும் எதுவுமில்லையென்பதே என்கருத்து. அது அந்த மாநில அரசியல் சார்ந்தது. அந்தக் கூட்டணிக்குப் போனதாலேயே வை.கோ. ஈழத்தமிழரின் போராட்டம் தொடர்பாக ஏதாவது சமரசம் செய்துகொண்டாரா, மாறுபாடான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளாரா என்பதே நாம் கனிக்க வேண்டியது. வை.கோ மாறவேயில்லை. முன்பு போலவே அதே தீவிரத்துடன்தான் இயங்குகிறார். இந்நிலையில் அவரின் அரசியற்கூட்டணி தொடர்பாக நாம் கவலைகொள்ளவோ கரிசனை கொள்ளவோ தேவையில்லை. அதையும்விட அதற்கான உரிமை எமக்கில்லை.
இதை இன்னும் உறைக்கும்படி வேறொரு முறையில் சொல்கிறேன்.

வை.கோ. வோ அல்லது தமிழகத்தைச் சேர்ந்த தீவிர ஈழவிடுதலை ஆதரவாளர்களோ புலிகளைப் பார்த்து,
'நீங்கள் ஏன் சமாதானப் பேச்சுக்குப் போனீர்கள்? நீங்கள் ஏன் சண்டையைத் தொடக்கினீர்கள்? நீங்கள் ஏன் யுத்தநிறுத்தம் அறிவித்தீர்கள்? நீங்கள் ஏன் ரணிலை வெல்லவைப்பதை விட்டுவிட்டு ராஜபக்ஷவை வெல்ல வைத்தீர்கள்? நீங்கள் ஏன் நோர்வேயோடு பேசுகிறீர்கள்?'
இதற்குரிய விளக்கத்தை எமக்குச் சொல்லக் கடமைப்பட்டுள்ளீர்கள்"
என உளறிக்கொண்டிருந்தால் நாம் என்ன நிலையிலிருப்போம்?
அப்படித்தான் இருக்கிறது, தமிழகத்தில் எடுக்கும் அரசியற்கூட்டணி நிலைப்பாட்டுக்காக எமக்கு விளக்கம் சொல்லவேண்டுமென வை.கோ.வைப் பார்த்துக் கேட்பது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முதல்வரின் இரங்கற்பதிவு தொடர்பானது:
அவரின் இரங்கற்பதிவு பெரியளவில் என்னைப் பாதிக்கவில்லை. அவர் எழுதியதால் மகிழ்ந்து துள்ளவில்லை; அவர் எழுதியிராவிட்டால் அதைக்குறித்துக் கவலைப்பட்டிருக்கப் போவதுமில்லை. பிறகு நடப்பவைகளைப் பார்த்தால் அவர் அதை எழுதியிருக்காமலே விட்டிருக்கலாம் எனப்படுகிறது.

இயக்குநர் சீமான் சொன்னதைப்போல, ஈழஆதரவென்பது தமிழக வாக்கரசியலைப் பாதிக்கும் நிலைவரும்வரை இவை வெறும் சலசலப்புக்களாகவே இருக்குமென்பது எனது தனிப்பட்ட கருத்து.

சங்கரபாண்டி சொல்வதைப்போல தமிழகத்தில் ஒரு நியாயமான கருத்துக்கணிப்பை நடத்தினால் நல்லதென்று படுகிறது. பூவா தலையா போல ஒரு முடிபு வெளிப்படையாகத் தெரிந்துவிடும். நாங்களும் மேற்கொண்டு செல்லலாம். இது மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமலிருக்கும் நிலைதான்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வை.கோ, ஈழம் தொடர்பாக வலைப்பதிவுச்சூழலில் பொதுவாகச் சில விடயங்களைப் பார்க்கலாம். வை.கோ என்றதுமே ஏதோவொரு விதத்தில் ஈழப்போராட்டத்தையும், புலிகளையும் முடிச்சுப்போட்டுத்தான் அணுகப்படுகிறது. இந்திய அரசியலில் இருக்கும் வேறெவருக்கும் இந்நிலையில்லை. அந்தளவுக்கு ஈழம் பற்றியும் புலிகள் பற்றியும் வை.கோ பேசியவை, பாடுபட்டவை ஏராளம் என்பதே உண்மை. மிக வெளிப்படையாகவும், ஆணித்தரமாகவும் என்றைக்கும் ஒன்றையே சொல்லிக்கொண்டிருப்பவர் அவர்.

வை.கோ, தி.மு.க தலைமையிலான கூட்டணியை விட்டு ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்தபோது வலைப்பதிவுலகில் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்நேரத்தில் வை.கோ.வுக்கு ஆதரவாக வந்தவை மிகமிகச் சில குரல்கள் மட்டுமே (டோண்டுவுடையதைச் சேர்த்தும்கூட;-)) அதுபோல் நடுநிலையாக விமர்சித்து வந்தவையும் மிகச்சில (சுந்தரமூர்த்தி போன்றவர்களது, அது பிரிவுக்கு முன்பே எழுதியிருந்தாலும்கூட)
ஆனால் வை.கோ.வைத் திட்டி வந்த குரல்களே அதிகம். அவற்றின் பின்னணி நோக்கங்கள் வேறுபட்ட தளங்களைக் கொண்டவை.

தீவிர கருணாநிதி ஆதரவாளர்களாக இருந்தவர்களிடமிருந்து (சிலருக்கு வை.கோ மீது பழைய கறளொன்று இருந்தது எனக்கருதுமளவுக்கு மிகத்தீவிரமாக இருந்தது;-)) வை.கோ. மீது வைக்கப்பட்ட கடுமையான தாக்குதல்கள் ஒருவகை.

கருணாநிதிக்கு எதிரான அரசியற்பார்வை கொண்டவர்களாகக் கருதப்பட்டவர்கள், - ஏன் வை.கோ வுக்கும் எதிரான அரசியற்பார்வை கொண்டவர்கள்கூட இவ்விடத்தில் வை.கோ.வின் வெளியேற்றத்தை நையாண்டி பண்ணிக்கொண்டிருந்தார்கள் (முகமூடி, பி.கே.சிவகுமார் போன்றோரின் எழுத்துக்கள்). இது இன்னொரு வகை. இவர்களைப் பொறுத்தவரை, வை.கோ மீது தமது தாக்குதலை நடத்த இதையொரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்டார்களேயன்றி மற்றும்படி நியாயமான எந்த அரசியற்பார்வைகளும் இருந்ததாகத் தெரியவில்லை.

தனிப்பட்டளவில் வை.கோவின் ஜெயலலிதாவுடனான இணைவானது எனக்கு வருத்தத்தையளித்தாலும், இது தவிர்க்க முடியாததே என்பதோடு வை.கோ எடுத்தது சரியான முடிபே என்ற நிலையிலேயே நானிருந்தேன். (பேசியளவில் வேறும்சில ஈழத்துப்பதிவர்கள் இதேநிலைப்பாடோடு இருந்ததை அறிந்தேன்). ஆனால் நாங்கள் எல்லோரும் இந்தப்பிரச்சினையில் ஒதுங்கியிருந்தோம். கொழுவி மாத்திரம் கற்பகம் அம்மையாரோடு சண்டைபிடித்ததாக ஞாபகம்;-)

எனக்கு வருத்தமளித்த நிகழ்வு என்னவென்றால், இவர்கள் வை.கோ.வை வசைபாட ஈழத்தமிழர்களைப் பயன்படுத்திக்கொண்டமைதான். நான் மேற்குறிப்பிட்ட இருதரப்புமே வை.கோ. மீது தமது வசைமாரியைப் பொழிய பயன்படுத்திய முதல் ஆயுதம் ஈழத்தமிழர்கள்தான்.
அட! பி.கே. சிவகுமார், முகமூடி போன்றோர்கூட, ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் கரிசனை கொண்டவர்கள்போல, வை.கோ. ஈழத்தமிழர்களுக்குத் துரோகமிழைத்துவிட்டார் எனப் புலம்பினார்கள். வை.கோ ஈழத்தவர்களின் தலையில் மிளகாய் அரைத்தவிட்டாரென ஒப்பாரி வைத்தார்கள்.

ஆனால் சம்பந்தப்பட்ட ஈழத்தவர்களோ வை.கோ செய்தது தவறென்று எங்குமே ஒப்பாரி வைக்கவில்லை. மாறாக அம்முடிவை ஏற்றுக்கொண்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். வை.கோ.வை உயிராய் நினைத்த அவரின் சீடர்கள் மாறியபோதுகூட ஈழத்தவர் மனங்களில் வை.கோ.வின் இடம் தளம்பலடையவில்லை. உதயனின் பாணியிற்சொன்னால், ஜெயலலிதாவுக்கு வால்பிடித்துக்கொண்டிருக்கும் இந்நேரத்திற்கூட அது தளம்பலடையவில்லை. அந்நேரத்தில் வை.கோ.வைச் சரியாகப் புரிந்தவர்கள் ஈழத்தவர்கள் தானோ? ;-)

இப்படி மற்றவர்கள் ஈழத்தவரை வைத்து வை.கோ மீது விளையாடிக்கொண்டிருந்தது ஒருபுறமென்றால் இப்போது ஈழத்துச் செய்தியேடு ஒன்று விளையாட்டில் குதித்திருப்பது வருத்தமளிக்கிறது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எழுதி முடித்தபோது மிகமிக நீண்டிருந்தது இடுகை. இடையிடையே வெட்டிக்கொத்திச் சுருக்கி (ஆம். இதுவே சுருக்கம்தான். வலைப்பதிவுச்சூழல் தொடர்பான நிறைய விடயங்கள் அலட்டல்களாக விளங்கியதால் வெட்டியாயிற்று.) இது வெளியிடப்படுகிறது.
மேலும் ஏதாவது சொல்ல வேண்டி வந்தால் பின்னூட்டங்களில் சொல்லலாமென நினைக்கிறேன்.

** இது உதயன் செய்தியேட்டுக்கு அனுப்பப்படவில்லை. அது எனது நோக்கமுமன்று.

** இதுவெனது தனிப்பட்ட கருத்து. இதற்குரிய எதிர்ப்புக்கள் ஈழத்தவர்களிடமிருந்தால் தெரிவிக்கவும்.

** இன்னொரு குறிப்பு:
இவ்விடுகையின் நோக்கம் உதயன் செய்தியேட்டின் நற்பெயரையோ அதன் சேவையையோ களங்கப்படுத்துவதன்று. எச்சந்தர்ப்பத்திலும் நாம் உதயனை புலம்பெயர் ஊடகங்களோடு வைத்துக் கருதுவதில்லை. அப்படி ஒப்பிடவும் முடியாது. தனக்குரிய வரலாற்றுப் பணியை உதயன் மிகுந்த தியாகங்களினூடு தொடர்ந்து செய்து வருகிறது. சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இயங்கும் இச்செய்தியேடு, இராணுவத்தினதும் ஒட்டுக்குழுக்களினதும் தொடர் அச்சுறுத்தலுக்கு மத்தியில்தான் இயங்கிவருகிறது. தனது பணியாளர்களை ஆக்கிரமிப்பாளரின் துப்பாக்கிக் குண்டுக்குக் காவு கொடுத்துள்ளது. அதன்பின்னும் அது வீச்சோடு இயங்கிவருகிறது. விடுதலைப்போராட்டப் பயணத்தில் உதயன் செய்தியேட்டுக்கான பங்களிப்பை நாம் அறிவோம்.
ஆனால் இக்குறிப்பிட்ட சிக்கல் தொடர்பில் நாம் கடுமையான முறையில் உதயனோடு முரண்படுகிறோம்.

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"வை.கோ உலகத்தமிழர்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமா?" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (09 November, 2007 12:30) : 

do not my previous lengthy comment was sent.

வை.கோ எந்தக் கட்சியோடு கூட்டணி வைக்கவேண்டும், எப்படி அரசியல் நடத்த வேண்டுமெனச் சொல்வதற்கு ஈழத்தவர்கள் யார்? உதயன் யார்? அது முழுவதும் தமிழக அரசியலோடு தொடர்புடையது. நீங்களா போய் வை.கோ. வின் கட்சிக்கு வாக்களிக்கப்போகிறீர்கள்? தமிழக அரசியலில் ஒருவரோ ஒரு கட்சியோ எடுக்கும் முடிவுக்கும் செயன்முறைக்குக்கும் கட்டளையிட நீங்கள் யார்? உங்களுக்கு என்ன அருகதையிருக்கிறது? தமது 'தமிழக அரசியல்' செயற்பாடுகளுக்கெல்லாம் ஈழத்தவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய தேவை அவர்களுக்கெங்கே இருக்கிறது?

1000000% agreed

 

said ... (09 November, 2007 12:39) : 

ஏற்றுக்கொள்ளக் கூடிய வாதம் .வைக்கோவின் தமிழக அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லையெனினும் ,ஈழ்த்தமிழர் விடயத்தில் அவரது உறுதி பாராட்டத்தக்கது.

 

said ... (09 November, 2007 13:50) : 

வசந்தன் நீண்ட நாட்களின் பின் பதிவு எழுதியிருக்கிறீர்.

நான் உதயன் வாசிச்சு கன நாள். அதாலை உந்த தலைப்பை காணவில்லை.

சொன்ன விசயத்துடன் ஒத்து போகிறேன்.

 

said ... (09 November, 2007 14:05) : 

நீங்கள் கூறுவது சரியென்றுதான் தெரிகிறது. தமிழ்செல்வன் இறந்த கவலையிலிருந்து ஈழத்தவர்கள் ஓருவரும் இன்னும் விடுபடவில்லை. அதனால்தான் இப்படி எழுதிக்கொண்டிருக்கின்றார்கள்\றோம். தமிழகத்திடம் இருந்து எதிர்பார்ப்பது என்னவென்றால் இலங்கை ராணுவதத்திற்கு இந்தியா உதவி செய்வதை தடுப்பதுதான். அதையும் தடுக்காமல் இருப்பதால்தான் கொஞ்சம் கடுப்பாய் இருக்கிறம். கொஞ்சநாளில் அதுவும் இவர்களால் செய்ய முடியாது என்று தெரிந்துவிடும், அதுவரைக்கும் இப்படி ஏதாவது எழுதிக்கொண்டே இருப்பம், கொஞ்சம் பொறுமையாக இருந்தால் சரி.

 

said ... (09 November, 2007 20:19) : 

அண்ணை

உதெல்லாமே மாறி மாறி நடக்கிற அரசியல் தான். தமிழ் நாட்டில் அரசியல்கட்சிகளினூடான ஆதரவு பகிரங்கப்படுத்த வேண்டிய தேவை எங்கடை ஆட்களுக்கு இருக்கிற காரணம் சிங்களவனுக்கு, நாங்கள் தனிச்ச ஆட்கள் இல்லை, பக்கத்து நாட்டு தமிழன் இருக்கிறான் எண்டு பிலிம் காட்டவே.

சிங்களவனையும் பாருங்கோவன், விழுந்தடிச்சு இந்து ராம் என்ன சொன்னவர், இந்தியா டுடே இந்துமதி என்ன சொன்னவ எண்டு புலியெதிர்ப்பு கட் அண்ட் பேஸ்ட் சிங்களப் பத்திரிகையில் போடுவதற்கு காரணம், ஈழத்தமிழன் உரிமைப் போராட்டத்துக்கு இந்தியாவில் ஆதரவில்லை எண்டு காட்டவே.

சைக்கிள் கேப்பில "நெருப்பு" போல சுடுதண்ணித் தளங்களை எடுத்து பாபா பிளாக் சிப் பாடுறவையின்ர நோக்கமும் அதுதான்.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

 

said ... (09 November, 2007 21:08) : 

//தனிப்பட்டளவில் வை.கோவின் ஜெயலலிதாவுடனான இணைவானது எனக்கு வருத்தத்தையளித்தாலும், இது தவிர்க்க முடியாததே என்பதோடு வை.கோ எடுத்தது சரியான முடிபே //

முற்றிலும் உடன்படுகின்றேன்.

நல்ல பார்வை, எள்ளல், இடுகை. :)

நன்றி

 

said ... (09 November, 2007 22:48) : 

அட, நீங்களும் எழுதியிருக்கிறீர்களா? இப்பொழுதுதான் கவனித்தேன். நானும் இதைப் பற்றி சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.

ஆனால் நீங்கள் எழுதியதைத்தான் நானும் எழுதியிருக்கிறேன்.

நீங்கள் விரிவாக நன்றாக எழுதியிருக்கிறீர்கள்

 

said ... (09 November, 2007 23:26) : 

எல்லாரும் எரியிற வீட்டில
பீடிக்கு நெருப்புக் கேக்கிற சாதியல் தான்.

 

said ... (09 November, 2007 23:52) : 

//ஆனால் இக்குறிப்பிட்ட சிக்கல் தொடர்பில் நாம் கடுமையான முறையில் உதயனோடு முரண்படுகிறோம்.//

நாமெண்டால்... :)

பயமாக்கிடக்கு இதே மாதிரி நாம் தாம் தூம் எண்டு எழுத வெளிக்கிட்டு ஜனநாயகப் புரட்சியேதாவதை செய்யப் போறீரோ எண்டு..

எழுதினது யாரெண்டு தெரியும்தானே - பிறகு பெயரெதற்கு :)

 

said ... (10 November, 2007 00:06) : 

அப்படிப் போடல்லலே அரிவாளை!
ஒரு கேனைக்கிறுக்கன் அம்பிட்டால் அவனுக்கு போட்டு ஆப்பு இழுக்கிறது
உதயனின் ஆதரவால்தான் அவர் அங்கு அரசியல் செய்கிறதாக நினைக்கிறதோ!
ஒருத்தன் எங்களுக்கு ஆதரவுதாறன்
அதுக்காக அவனை அடிமையாக்க முயற்சிப்பது அயோக்கியத்தனம்

 

said ... (10 November, 2007 01:05) : 

வை கோ அவர்களிடம் பகிரங்க மன்னிப்புக்கேட்க வேண்டும்....

இது உதயனின் எல்லை கடந்த முட்டாள்தனம். வை கோ அவர்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும் ஈழத்தமிழருக்காக குரல்கொடுக்கத் தவறியதில்லை. தமிழகத்தில் உள்ள அரசியல் நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைக்கவேண்டிய தேவையை ஈழத்தமிழர்களாகிய நாம் கூறமுடியாது. அவர்களூடைய உட்கட்சி அரசியலில் ஈழத்தமிழர்கள் தலையிட நினைப்பது மன்னிக்க முடியாதது. பொறுப்பற்றதனம் மட்டும்ல்ல சிந்திக்கத் தெரியாத அவசர எண்ணம்படைத்த கருத்துக்களை அடக்கியுள்ள இந்தக் கட்டுரையை ஒரு ஈழத் தமிழனாக வன்மையாக கண்டிக்கின்றேன்.

ஒரு ஈழத்தமிழன்

 

said ... (10 November, 2007 13:51) : 

we pay VaiKo and other koolikku maaraddikkum koodam like Veeramani..and Thol.Thirumavalavan..
so we (Eelam Tamils) have all the right to "Ask" anything from them..they have to answer us..
;)

 

said ... (12 November, 2007 00:44) : 

பெயரிலி, வருக.
பெயரிலியெண்ட பேருக்கால போட்டால் நாங்களதைப் பெயரிலிப்பின்னூட்டமாத்தான் கருதுவம்.

என்ன நானெழுதினதை ஒட்டிப்போட்டுப் போயிட்டியள்?
உங்கட கருத்தையறிய எவ்வளவுபேர் ஆவலாயிருக்கினம்?
துலைஞ்சு போனாலும் திரும்ப எழுதிறதுதானே? இல்லாட்டி "அந்த ரெண்டு பேரின்ர" பேரைப்பாத்த உடன உங்களுக்குப் பயம் வந்து ஒடிப்போட்டியள் எண்டு வருங்கால வரலாறு உங்களைப் பழிக்கும் கண்டியளோ?

சரி, அதென்ன ஒருமில்லியன் வீதம் ஒத்துப்போறனெண்டு சொல்லிப்போட்டியள்?
எங்களுக்குத்தான் உந்த வீதக்கணக்குகள் எண்டா அலர்ஜியெண்டு தெரியாதோ?

சொன்னதுதான் சொன்னியள், அப்பிடியே ரெண்டு மில்லியன் வீதம் வை.கோ. வை ஆதரிக்கிறன் எண்டிருக்கலாம்.
அப்பிடியே, ஒரு மில்லியன் வீதம் உதயனை எதிர்க்கிறன், ரெண்டு மில்லியன் வீதம் ஜெயலலிதாவை எதிர்க்கிறன் எண்டும் சொல்லியிருக்கலாம்.
அப்பதானே ஒரு 'இது' இருக்கும்?

 

said ... (12 November, 2007 09:32) : 

சொந்தக்கருத்தை நீட்டி எழுதிப்போடத்தான் புளொக்கர் உழக்கிப்போட்டுத்தே. பின்னைத்தான் சோர்வுதாளாமல் "ஒன்றே சொன்னீர்; நன்றே சொன்னீர்; அதுவும் இன்றே சொன்னீர்" எண்ட மாதிரியா, 1000000% ஓட விட்டுப்போட்டன்.

பதிவுகளிலை கருத்துச் சொல்லியோ கத்தியோ எங்கட முதுகிலை நாங்களே தட்டிக்கொள்ளமாதிரியும் கூடியிருந்து கட்டிப்பிடிச்சு ஒப்பாரி வைக்கிற மாதிரியுமேதான் படுகுது. அதுக்குப் பிறகு என்ன? ஒரு கிழமையில தமிழ்ச்செல்வனிலையிருந்து சனம் அழகிய தமிழ்மகனுக்குத் தாவியிடும். என்ன பிரியோசனம்? உதுக்கு மேலையும் ஏதாச்சும் இணையத்தை, வலைப்பதிவைப் பாவிச்சுச் செய்ய ஏலுமெண்டால் அதுதான் முக்கியமும் தேவையும். ஸ்ரீரங்கனின் 'ஈ'-தலைப்பு கேவலமாயிருந்தாலும், ஆள் சொன்ன கருத்தொண்டு உண்மை; இரயாகரனோடையும் அந்தளவிலை அதுக்குப் பிறகு வந்த பதிவிலை ஒத்துக்கொள்ளவேண்டியிருக்கு. உணர்ச்சி வசப்பட்டதுக்குப் பிறகு என்ன பிரியோசனம். சொன்னால், சனம் ஒரு மாதிரியா சுயநலமாகவோ கேவலம் கெட்டவனாகவோ பாக்குமெண்டாலுங்கூடச் சொல்ல வேண்டியது ஒண்டிருக்கு; "யானை இருந்தாலும் [மரம் தூக்கி] ஆயிரம் பொன்; இறந்தாலும் [தந்தம்] ஆயிரம் பொன்" எண்டதைத் தமிழ்ச்செல்வனுக்கும் பயன்படுத்தவேண்டியதுதான். பொஸ்டன் பாலா போன்றோருடன் போய் வாளை உருவிக்கொண்டிருக்கிறதிலையும் பயனில்லை. "எருதின் புண்ணிலை காகம் கொத்தும் வேலையைக் கண்ணியமாகச் செய்கிறார்" என்று தெரிகிறது. அதுக்கு முகமூடி வால் வந்து நக்கல் மாதிரி தன்ரை ஆமோதிப்பைச் சொல்லிப்போட்டுப் போகுதெண்டும் தெரியுது. அவையைத் திருத்தி எடுக்கப்போறம் எண்டோ தமிழ்ச்செல்வன் செத்துப்போனார் எண்ட ஆத்திரத்தை அவரோட காட்டப்போறம் எண்டோ நிண்டு மல்லாடுறதிலை என்ன பயன்? முடிஞ்சால் இதைப் பாவிச்சு, அவயின்ரை முகமூடியைக் கழட்டி இவையின்ரை நோக்கம் இதுதான் எண்டு நடுவிலை நிக்கிறவைக்குக் காட்டுறதோட முடிச்சுப்போடோணும். அதுக்குமேலை "புரியவைக்கிறம்" எண்டு மினக்கெடுறது பிரியோசனமில்லை.

 

said ... (14 November, 2007 18:21) : 

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

தனித்தனிய கதைக்க விரும்பந்தான்.
எங்க நிலைமை விட்டால்தானே?

 

said ... (17 November, 2007 01:55) : 

ஒரு கிறுக்குப் பயல் எழுதிய தலையங்கம். சந்திரனைப் பார்த்து ஏதோ குரைக்கின்றது.


சுண்ணாக‌த்தான்

 

post a comment

© 2006  Thur Broeders

________________