நாங்கள் பொம்பிளை பார்க்கும் முறை
சயந்தனின் பதிவுக்குரிய பின்னூட்டம் நீண்டதால் அலட்டலைச் சொந்த வலைப்பதிவிலேயே வைக்கலாமென்று நினைத்ததால் இவ்விடுகை. நானறியவும் உப்பிடி பெண்பார்க்கும் படலம், பஜ்ஜி இன்னபிற, என்பன நடக்கவில்லை. (டி.சே சொன்னமாதிரி பஜ்ஜி செய்யத் தெரியாததும் காரணமா இருக்கலாம்). புகைப்படத்தோடே தொடங்கி ஓரளவு சரிவரும் நிலையில் எங்காவது பொது இடத்தில் இருவரையும் பார்க்க வைப்பது தான் பெரும்பாலும் நடக்கிறது. அப்படிப் பார்ப்பதில்கூட நிறைய நுட்பங்கள் கடைப்பிடிக்க வேண்டும். பொதுவாக கோயில்களில்தான் இச்சந்திப்பு நடைபெறுவதால் - அதுவும் ஏதாவது திருநாள் பெருநாளுக்கு நடைபெறுவதால் இருக்கக்கூடிய நனநெரிசலுக்குள், பார்க்க வேண்டியவர்கள் சரியாகப் பார்த்துக்கொள்வதற்கு ஏற்றாற்போல் இயலுமானவைகளைச் செய்ய வேணும். நான்கூட இதைச் செய்திருக்கிறேன். அப்போது எனக்குப் பதினொரு வயது இருக்கும். எங்கள் ஊர் தேவாலயத்திருநாள் ஒன்றில் இது நடந்தது. திருநாள் திருப்பலி முடிந்ததும் ஒருவர் என்னிடம் ஒரு திட்டம் விளக்கினார். கோயில் முற்றத்தில் நிற்கும் மலைவேம்பின் கீழே நான் இடம்பிடித்து வைத்திருக்க வேண்டும். என்னோடு சேர்ந்த சிறுவர்கள் சிலரைக் கூட்டிக்கொண்டு போய் அம்மரத்தின்கீழ் நின்றுகொண்டு குறிப்பிட்ட பெரியவர் வரும்வரை நேரத்தைப் போக்காட்ட வேண்டும். இதுமட்டும்தான் எனக்குச் சொல்லப்பட்டது. சொன்னவர் ஊரில் நல்லது கெட்டது எதற்கும் முன்னின்று நடத்தும் பெரியவர். எல்லா இடத்திலும் திறப்பை இவர்தான் வைத்திருப்பார். (திறப்பு என்ற சொற்பயன்பாடு யாருக்காவது ஞாபகம் வருகிறதா?). அதனால் மறுபேச்சில்லாமல் ஒத்துக்கொண்டாயிற்று. அப்போது, ஏன் என்று கேட்காமல் வரக்கூடிய கூட்டமும் என்னோடு இருந்தது. திட்டப்படி பூசை முடிந்தவுடன் நாலைந்து பேரைக்கூட்டிக்கொண்டு குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றுவிட்டேன். ஒருவனை விட்டு நாலு கச்சான் சரைகளையும் வாங்கியாச்சு. ஏராளமான சனம். பூசை முடிந்ததும் கோயில்வளவில் நின்று கதைத்துக்கொண்டிருந்தார்கள். அனேகம்பேர் மரத்தைநோக்கித்தான் வருகிறார்கள். ஆனால் இருக்கும் கூட்டத்தை வைத்து அந்த இடத்தைத் தக்க வைக்க வேணும். என்னைத்தவிர வேறெவருக்கும் கட்டளை தெரியாது. அங்கிருந்து வெளிக்கிட்ட என் கூட்டத்தவரைத் தக்கவைக்க புதுப்புது முயற்சிகள் செய்தேன். வள்ளக்காச்சி அடித்து விளையாட்டு விளையாடினோம். குறிப்பிட்டவர் வந்தபாடில்லை. பிறகு நின்ற இடத்தில் இருந்து ரெண்டு காலையும் சேத்துவைச்சு ஆர் கனதூரம் பாயிறது எண்டு எங்களுக்குள்ள ஒரு போட்டி வைச்சன். அது கொஞ்சம் புழுதியும் கிளப்ப, பக்கத்தில நிண்டவை விலத்தினதால இன்னும் கொஞ்சம் பெரிய இடம் பிடிச்சம். இப்ப குறிப்பிட்ட பெரியவர் வந்து சேர்ந்தார். 'சரிசரி தம்பியவை, புழுதியைக் கிழப்பாமல் அங்கால போய் விளையாடுங்கோ' எண்டு சொல்லி அனுப்பினார். அவரோட இன்னொரு குழு வந்திருந்தது. தெரியாத முகங்கள்; வேற ஊர்க்காரர் எண்டது விளங்கிச்சு. சொன்னதைச் செய்துகாட்டின வெற்றிக்களிப்போட இஞ்சாலவந்து எங்கட பிராக்கைப் பாத்துக்கொண்டிருந்தம். அப்பதான் ஒருவிசயத்தைக் கவனிச்சன். நாங்கள் இடம்பிடிச்சு வைச்சிருந்த இடத்தில நிண்ட கூட்டத்திலயிருந்து ஒவ்வொருத்தரும் பக்கத்திலயிருக்கிற ஆக்கள் பாத்திடக்கூடாதெண்ட எச்சரிக்கையோட நைசா கடைக்கண்ணால அங்கால ஓரிடத்தை இடைக்கிடை பாத்துக்கொண்டிருந்திச்சினம். அதுக்குள்ள நல்லா வெளிக்கிட்டு நிண்ட அக்காவும் ரெண்டொருதரம் நைசா கண்ணைத் திருப்பிறதும் பிறகு ஒளிக்கிறதும் எண்டு விளையாட்டு நடக்குது. அவையள் பாக்கிற இடத்தில இன்னொரு கூட்டம். அது ஒரு பிட்டி. முந்தி என்னத்துக்கோ மண்கொட்டி பிறகு பாவிக்காமல் இறுகி பிட்டியா வந்திட்டுது. இவையள் நிக்கிற மரத்திலயிருந்து இருபது, இருபந்தைஞ்சு யார் தூரத்தில அந்தப்பிட்டி இருக்கு. என்ன நடக்குதெண்டு எனக்கு இன்னமும் விளங்கேல. பிட்டிக்குப் பக்கத்தில போனன். நம்மட ஊர்க்காரர்தான். ஒருநாளும் வேட்டி கட்டிப் பாத்திராதவர் ஒருத்தர் அதுக்குள்ள பட்டுவேட்டி கட்டிக்கொண்டு கலாதியா நிக்கிறார். மரத்தடியில நடக்கிற கூத்துத்தான் இஞ்சயும் நடந்துகொண்டிருக்கு. அண்ணருக்குப் பொம்பிளை பாக்கினமாம் எண்டதை அரசல்புரசலா வீட்டில கதைக்கிறதை ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தன். எல்லாத்தையும் கூட்டிக்கழிச்சுப் பாத்துக் கண்டுபிடிச்சிட்டன். இவர் பொம்பிளை பாக்கக் கோயிலுக்கு வந்திருக்கிறார்; அவ மாப்பிள்ளை பாக்கக் கோயிலுக்கு வந்திருக்கிறா. அந்தக் கலியாணத்துக்கு என்ர உதவியா பொம்பிளை வீட்டாருக்கு இடம்பிடிச்சுக் குடுத்த திருப்தியோட கலியாண வீட்டுச்சாப்பாடும் சாப்பிட்டன். இதில என்ன சொல்ல வாறன் எண்டா, பொம்பிளை பாக்கிற, மாப்பிள்ளை பாக்கிற சடங்கை நடத்திறவர் எவ்வளவு நுட்பமாச் செய்தார் எண்டதை. இருதரப்புமே மற்றத்தரப்பை வடிவாகப் பார்க்கக்கூடியமாதிரி இடங்களைத் தெரிவு செய்யிறதும், அந்த இடங்கள் சனநெரிசலில் பறிபோயிடக் கூடாதெண்டதுக்காக முற்கூட்டியே அணிகள் ஒழுங்கமைத்து அவ்விடங்களைக் கைப்பற்றிக் கொள்வதும் ஒரு தேர்ந்த செயற்பாடு. அந்தப் பிட்டியைக் கைப்பற்ற அவர் என்ன செய்தார் என்று தெரியாது. மரத்தடியைவிட அதற்குத்தான் போட்டி அதிகம். சுழட்டலுக்கு வந்துநிற்கும் மைனர் மச்சான்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட இடம் அது. அதில நிண்டு கூட்டத்தை ஒரு சுழட்டுச் சுழட்டலாம். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ பொம்பிளை பாக்கக் கோயிலுக்குப் போறது தொடர்பா இன்னொரு சுவாரசியமான சம்பவம் இடம்பெயர்ந்து இருக்கேக்க எங்கட ஊர்க்காரருக்கு நடந்தது. எங்கள் ஊராள் ஒருத்தருக்குக் கலியாணம் பேசி, சீதனம் உட்பட்ட பிறவிசயங்கள் ஓரளவு சரிவந்து, பொம்பிளையை பார்க்க வைக்க ஏற்பாடாகியது. பக்கத்து ஊர் மாதாகோயில் திருநாளுக்குப் பொம்பிளை வீட்டாரை வரச்சொல்லியாச்சு. மாப்பிள்ளை வீட்டார் திருநாளுக்குக் கார்பிடிச்சுப் போக ஏற்பாடாகிவிட்டது. காரில போறவங்கள வேற்றுக்கிரகத்து ஆக்களாப் பாக்கிற நிலையிலதான் அப்ப யாழ்ப்பாணம் இருந்தது. திருநாளுக்கு முதல்நாள்தான் பொடிப்பிள்ளைக்குச் சொல்லப்பட்டது. அந்தநேரத்தில யாழ்ப்பாணத்தில பகல்-இரவு உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி நடந்துகொண்டிருந்தது. 3 நாட்களில முழுச்சுற்றுப்போட்டியும் முடிஞ்சிடும். மாப்பிள்ளை கழக விளையாட்டு வீரன். திருநாள் அண்டைக்கு பகல் அவர் விளையாடவேண்டியிருந்தது. இந்தநிலையில மாப்பிள்ளை திருநாளைக்கு வர ஏலாது எண்டிட்டார். வீட்டில குழப்பம். 'டேய்! என்ன சொல்லிறாய்? உன்னை நம்பி பெட்டைய வரச்சொல்லிப் போட்டம். இந்தநேரம்போய் இப்பிடி சொல்லிக்கொண்டிருக்கிறாய்? வேற ஒருத்தனை விளையாட விட்டிட்டு மரியாதையா பூசைக்கு வா. பிறகு விளையாடப் போ' எண்டு அர்ச்சனை நடக்குது. மாப்பிள்ளை மசியிற பாடில்லை. ஆள் ஒரு விறுமன்தான். இரவுவரைக்கும் ஆள் முடிவு சொல்லேல. விடிய வெளிக்கிட்டுப் போறதுக்காக கார்க்காரனை இரவே வரச்சொன்னதால காரும் வந்திட்டுது. 'பொடிப்பிள்ளை கொஞ்சம் முறுக்கிக்கொண்டு நிக்கிறார். விடிய எல்லாம் சரிவந்திடும். பெட்டையப் பாக்க வராமல் உவரெங்க விளையாடப் போறது?' எண்டு பெரிசுகள் தங்களுக்குள் சமாதானம் சொல்லிக்கொண்டு பிரச்சினையை முடிச்சுக்கொண்டு படுத்தாலும் அதையெல்லாம் பொய்யாக்கி, சொன்னமாதிரி விடியவெள்ளன மாப்பிள்ளை விளையாடப் போட்டார். குடும்பம் அல்லோலகல்லோலப்பட்டது. ஆளாளுக்குச் சத்தம்போட்டார்கள். 'எளிய நாய், நாய்ப்புத்தியக் காட்டிப்போட்டான்' எண்டது தொடக்கம் வரையறையின்றி மாப்பிள்ளைக்கு வசவுகள் விழுந்தன. சும்மாநிண்டு பிரியோசினமில்லை எண்டு விளக்கி வெளிக்கிட்டவயளோட காரில ஏறி கோயிலுக்குப் புறப்பட்டார் எல்லாத்தையும் ஒழுங்கு செய்தவர். மாப்பிள்ளை இல்லாமல் கார் போனது. காருக்குள்ளயே சண்டை. தங்கட குடும்ப மானம் கப்பலேறியதாய் மாப்பிள்ளை குடும்பம் அலட்டிக்கொண்டிருக்க, 'என்ர மானத்தை வாங்கிப்போட்டியள், பிள்ளையச் சமாளிச்சு வரவைக்கத் தெரியேல உங்களுக்கு. இனி என்னை எவன் மதிப்பான்? அதுகளின்ர முகத்தில நான் எப்பிடி முழிக்கிறது?' எண்டு ஒழுங்கு செய்தவர் தாய்தேப்பனோட ஏறிப்பாய கார் கோயிலுக்குப் போய்ச்சேர்ந்தது. அங்கபோய் சடையப்பாத்து, ஏலாமல் ஒழுங்கு செய்தவரே நடந்ததைச் சொல்லி, 'பிள்ளை! உனக்கு அவன் சரிப்பட்டு வரான். காவாலிப் புத்தியக் காட்டிப்போட்டான். நல்லவேளை நீ தப்பிச்சாய்' எண்டு உண்மையைச் சொல்லி முற்றுப்புள்ளி வைத்தார். மாப்பிள்ளைத்தரப்பு, பொம்பிளை தரப்பு, இடைத்தரப்பு எண்டு மூண்டு தரப்புக்கும் மனஸ்தாபத்தோட அந்தப் பேச்சும் திருவிழாவும் முடிந்தது. கொழுத்த சீதனச் சம்பந்தம் தொலைந்ததோடு மூவாயிரம் ரூபா கொடுத்து அயலூர்க்கோயில் திருவிழாவுக்குச் சவாரி போய்வந்த எரிச்சலும் சேர மாப்பிள்ளை வீட்டில் பிரளயமே நடந்த்து. அதுமட்டுமில்லை, விளையாட்டுக் கழகத்தோடயும் சண்டை. அவங்கள் தங்களுக்கு உப்பிடி ஒருவிசயமும் தெரியாது; தெரிஞ்சிருந்தா நாங்களே அவனை இழுத்துக்கொண்டு வந்து கோயிலில விட்டிருப்பம் எண்டிட்டாங்கள். ஆனாலும் அதிசயம் நடந்தது. குடும்பங்களுக்குள்ளதான் பிரச்சினை வந்ததேயொழிய, தொடர்புடைய ரெண்டு பேருக்கும் ஏதோ எங்கயோ பத்தி, சந்திப்பை டெவலப்பாக்கி, இன்னும் அட்வான்சாப் போய், திரும்பவும் ரெண்டு குடும்பத்துக்கயும் சண்டை சச்சரவுகளோட ஒருவாறு கலியாணம் முடிந்தது. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ தனிய புகைப்படத்தில மட்டும் பார்த்தே கலியாணம் முற்றாகின நிறையக் கலியாணங்களைக் கண்டிருக்கிறம். வெளிநாட்டுக்கான கலியாணம் எண்டா அப்பிடித்தான். ரெண்டுபேருமே தனிய புகைப்படத்தை மட்டும் பார்த்தே கலியாணத்துக்குச் சம்மதிக்க வேண்டிய நிலை. சில இடங்களில் மாப்பிள்ளை இல்லாமலே கலியாணம் மாதிரி ஒரு கொண்டாட்டம் கொண்டாடுவார்கள். பொம்பிளையை கொழும்புக்கு அனுப்ப முதல், வழமையான கலியாணக் கொண்டாட்டம் மாதிரி தடல்புடலாக் கொண்டாடித்தான் அனுப்பி வைப்பினம். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ தன்னார்வத் தொண்டாக கலியாணம் பேசுபவர்கள் எங்கள் தமிழ்ச்சமுதாயத்தில் நிறையப்பேர் இருக்கிறார்கள். சிலர் இதையொரு தவமாகவே செய்வார்கள். பெரும்பாலும் முதியவர்கள் (என்புரிதலின்படி குறிப்பாகப் பெண்கள்) இதில் மிகஈடுபாட்டுடன் இருப்பார்கள். கண்ணிலே தென்படும் பெடி பெட்டைகளை எல்லாம் கலியாணக் கண்கொண்டுதான் பார்ப்பார்கள். யாரை யாரோட கொழுவி விடலாம் (இது வேற கொழுவி;-) எண்டுதான் யோசித்துக்கொள்வார்கள். யாரும் கேட்காமலே வலியப்போய் சேவையில் இறங்கிவிடுவார்கள். ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ முள்முருக்கு நடுவது பற்றி சயந்தனின் பதிவில்தான் முதன்முதல் கேள்விப்படுகிறேன். இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அறிய விரும்புவது, நட்ட கதியால் முளைக்காவிட்டாலோ ஆடு காந்தியதால் பட்டாலோ ஏதாவது அபசகுணமாக நினைக்கும் வழக்கமுண்டா? |
"நாங்கள் பொம்பிளை பார்க்கும் முறை" இற்குரிய பின்னூட்டங்கள்
அதெப்படி என்ர பின்னூட்டத்தை உமது பதிவில நீர் இடலாம்?..
//முள்முருக்கு நடுவது பற்றி சயந்தனின் பதிவில்தான் முதன்முதல் கேள்விப்படுகிறேன். இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அறிய விரும்புவது, நட்ட கதியால் முளைக்காவிட்டாலோ ஆடு காந்தியதால் பட்டாலோ ஏதாவது அபசகுணமாக நினைக்கும் வழக்கமுண்டா?//
என்னண்ணை நீங்கள்??
கன்னிகால் நடமல் யாழ்பணத்தில
திருமணம் நடக்குதே??
சில பேர் மாடு வாங்க பொறம் எண்டு அல்லது எதோ ஒரு சாட்டு சொல்லி விடிய வெள்ளன பொம்பள வீட்டு படலைய தட்டி ஆள பார்த்திடுவினம்..
நித்திர பாயல எழும்பின கெற்றப்பு தான் உண்மையனது. அத தானே பிறகு வாழ்நாள் முழுக்க பாக்கோணும் !!!
என்ன வசந்தன்..
பாக்கிற வயசு வந்திட்டுது போல..
வசந்தன்
முள்முருக்கு நடுறது தெரியாதெண்டால் எந்தக் காலத்தில யாழ்ப்பாணத்தில இருந்தனீர்?
நன்றி
This comment has been removed by the author.
வசந்தன்
இன்று (11.3.07)எனது ஈமெயில் address உள்ள என்னுடைய பின்னூட்டத்தை delete பண்ணிவிட்டேன்
அறியத் தருகிறேன்.
Good bye!
நன்றி
This comment has been removed by a blog administrator.