Tuesday, January 23, 2007

கதைத்தல் - பேசுதல்

'கதைத்தல்' தொடர்பில் எனக்கு அண்மையில் ஒரு குழப்பம் வந்தது.
இச்சொல்லை 'பேசுதல்' என்ற பொருளில் ஈழத்தில் பயன்படுத்துகிறோம்.
பேசுதல் என்பதற்கு எம்மிடையே 'திட்டுதல்' என்ற ஒரு பொருளுமுண்டு.

இந்த 'கதைத்தல்' என்பதை 'பேசுதல்' என்ற பொருளில் ஈழத்தில் மட்டும்தான் பயன்படுத்துகிறோம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அண்மையில் கேட்ட ஒருபாடல் அக்கருத்தைக் குழப்பிவிட்டது.
வேட்டையாடு விளையாடு என்ற திரைப்படத்தில் ஒரு பாடல்வருகிறது.
'பார்த்த முதல்நாளே' என்று தொடங்கும் அப்பாடலில் இரண்டாவது சரணத்தில் ஒருவரி வருகிறது இப்படி:

கண்பார்த்துக் கதைக்க முடியாமல் நானும்
தவிக்கின்ற ஒருபெண்ணும் நீதான்
கண்கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும்
சலிக்காத ஒருபெண்ணும் நீதான்"

இதில், 'கண்பார்த்துக் கதைக்க முடியாமல் நானும்' என்று வரும் வரியில் நாங்கள் பயன்படுத்தும் பொருளில் 'கதைத்தல்' வருகிறது.
இது தமிழகத்திலும் இருக்கும் வழக்கா? குறைந்தபட்சம் சில ஊர்களிலாவது பயன்பாட்டிலிருக்கும் சாத்தியமுண்டா? அல்லது ஈழத்தமிழ் வழக்குத்தான் பாடலிற் புகுந்ததா?

பாடலை எழுதியவர் தாமரை என்று நான் கருதுவதால் இரண்டாவது சாத்தியமென்று நம்ப இடமுண்டு.
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"கதைத்தல் - பேசுதல்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (23 January, 2007 12:44) : 

எழுதிக்கொள்வது: இலவசக்கொத்தனார்

அது சரியாகத் தெரியவில்லை வசந்தன். ஆனால் பேசுதல் என்பது திட்டுதல் என்ற பொருளில் நெல்லை மாவட்டத்திலும் பாவிக்கப் படுகிறது. சற்றே மருவி "யேசுதல்" என்றும் பாவிக்கப் படு்கிறது.

20.39 22.1.2007

 

said ... (24 January, 2007 06:30) : 

ஈழத்தில் பேசுதல் ஏசுதல் இரண்டும் வைதல்.. திட்டுதல்.. கண்டித்தல் என்ற பொருளில் வரும்.

கதைத்தல் என்பது சம்பாசனை.. உரையாடுதல்.. என்ற பொருளில் வரும்

வே.வி பாடலில் கதைக்க ஈழ வழக்கில் உரையாடுதல் பொருளில் தான் வருகிறது போலும். தமிழகத்திலும் கதைத்தல் உள்ளதோ..

 

said ... (24 January, 2007 07:27) : 

எழுதிக்கொள்வது: இராவணன்

அண்ணை வணக்கம்,
எனக்கு செமஸ்டர் எக்ஸாம் போய்க்கொண்டிருந்திச்சா, கொஞ்ச நாளா இந்தப்பக்கம் வரமுடியேல்லை.

பாட்டை எழுதினது தாமரைதான்,
அதை வச்சு எப்பிடி ஈழத்தமிழ்தான் வந்திருக்கும் எண்டு சொல்லுறியள்?
தாமரைக்கும் ஈழத்துக்கும் என்ன தொடர்பு?
2.18 24.1.2007

 

said ... (24 January, 2007 07:48) : 

வசந்தன்!
பேசுதல் என்பது ஈழத்தில் பொதுவாக திட்டுதல்;வைதல் என்பவற்றைக் குறிப்பது வழக்கமாக இருந்தபோதும் ; இப்பேசுதல் உரையாடல் எனும் கருத்திலும் பாவிக்கும் பழக்கமும் உண்டு.
வைதலென்பது பாவனையில் இல்லாத சொல்லெனில் மிகையில்லை.எழுத்துப் பாவனையுடன் சரி.
உ-ம்: பெரியாக்கள் பேசிக்கொண்டிருக்கினம் ;நீ இடையில பூராத...
அந்தப் பிள்ளைக்கு; உந்தப் பொடியனை பேசித்தான் செய்தவையாம்
அவர் பேசிக்கொண்டிருக்கும் போது மேடையில் கல் விழுந்தது.
இந்த இடங்களில் பேசுதலென்பது கருத்துப் பரிமாற்றம் எனும் பொருளிலேயே வருகிறது.
ஆனால் கதைத்தலை ஒரே கருத்துடனே தான் பாவிக்கிறோம் போல் உள்ளது.
தமிழகத்தில் கதைத்தல் என்பது மிகக் குறைவாகவே ;உபயோகத்திலுள்ளது. என நினைக்கிறேன்.

 

said ... (24 January, 2007 10:54) : 

கொத்தனார், சயந்தன், இராவணன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இராவணன்,
தாமரைக்கும் ஈழத்துக்கும் நேரடியாக எந்தத் தொடர்புமில்லை. அரசியல்ரீதியில் ஈழப்போராட்டத்தின் தீவிர ஆதரவாளர்.
அதைவிட ஈழத்தில் பயன்படுத்தப்படும் சொற்களைக்கொண்டு பாட்டெழுதும் முயற்சியை ஏற்கனவே செய்துள்ளார். ஈழச்சொற்களோடு அவருக்குப் பரிச்சயமுண்டு.

 

said ... (24 January, 2007 20:27) : 

//அந்தப் பிள்ளைக்கு; உந்தப் பொடியனை பேசித்தான் செய்தவையாம்//

பெடியன் வேண்டாம் வேண்டாம் மாட்டன் எண்ட அவனை திட்டித்தான் கல்யாணம் கட்ட வைச்சதாம்.

 

said ... (24 January, 2007 22:03) : 

//பெடியன் வேண்டாம் வேண்டாம் மாட்டன் எண்ட அவனை திட்டித்தான் கல்யாணம் கட்ட வைச்சதாம்.//

ஜயோ பாவமே.....

 

said ... (25 January, 2007 00:20) : 

வசந்தன்,
சரியாகத் தெரியவில்லை.

கதைத்தல் என்பதை இங்கே பேச்சுவழக்கில் பயன்படுத்திப் பார்த்ததில்லை. ஆனால் தாமரை வழக்கில் இல்லாத பல சொற்களை மீண்டும் பாடல்களில் கொண்டுவர முடிவெடுத்தே செயல்படுவதாகக் கேள்விப்பட்டேன். (இந்தப் பாடல் தொடக்கத்தில் உள்ள "பதாகையை"க் கூட அப்படித் தான் சேர்த்தார்களாம்)

ஆக, இது எங்காவது பழைய இலக்கியங்களில் இருக்கும் சொல்லாகவும் இருக்கலாம். இல்லாமல், ஈழத்தமிழின் அழகுக்காகவும் பொருத்தத்திற்காகவும் பயன்படுத்தி இருக்கலாம்.

ஆனால், எப்படியோ, நல்ல பாட்டு :))

 

said ... (25 January, 2007 02:39) : 

இஃது இப்பதிவினைப் பற்றிய பின்னூட்டமில்லை. அதனால், விடுவதும் விடாததும் உங்கள் விருப்பம்.

உணர்வுகள் பதிவு குறித்த பின்னூட்டம். உணர்வுகள் பதிவின் "பிராமணர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவளிப்பதைத் தடுத்தவர் தி.க. தலைவர் வீரமணி?" இடுகையிலே, மிதிலன் என்பவருக்கு நான் இரண்டு நாட்களுக்கு முன்னால் என்னைப் பற்றி அவர் எழுதியிருப்பதற்குக் கொடுத்த பதிலும் கேட்டிருந்த கேள்விகளும் இரு பின்னூட்டங்கள் அன்றே இட்டேன். அவற்றினை அவர் அனுமதிக்கவில்லை. குறைந்தபட்சம், உணர்வுகளின் அக்குறித்த இடுகைக்குமுன்னால், அவர் பற்றி "முன்னர் உணர்வுகள் கருத்துக்களத்தைத் தமிழ்தேசியத்திற்கு எதிரானதாகச் சித்தரிக்க முயன்றனர்" என்று எங்காவது சொல்லியிருக்கிறேனா என்று சுட்டியிருக்கலாம்; சாதியை வைத்து ஈழப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறேன் என்று வேறு அறளை பெயர்ந்தோ அல்லது வேண்டுமென்றோ அரற்றல் வேறு. உணர்வுகள் எழுதும் பதிவினை வைத்துத்தானே பதிலைச் சொல்லலாம். ஒரு முறை மிதிலன் என்றும் அடுத்த முறை மிதிளன் என்றும் பதிவுக்கணக்கே இல்லாமல் உணர்வுகள் பதிவிலே மட்டும் எழுதுகின்றவர் பதிவுள்ள, -/பெயரிலியைப் பகிடி செய்வது விந்தை. இப்போது, திவ்யா என்றொருவரும் உணர்வுகளுக்கு ஆதரவாக முளைத்திருக்கிறாரே, பார்க்கவில்லையா? ;-) மாற்றுக்கருத்துகளை எதிர்கொள்ளமுடியாதவர்களெல்லாம் இப்படியாகத்தான் சுருங்கமுடியும். அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு விரலைச் சூப்ப வேண்டிய குழந்தைகளின் வீட்டுக்கணணிக்கெல்லாம், cybernanny செருகாமல்விட்டால், இதுதான் வினை :-(

 

said ... (25 January, 2007 09:04) : 

வசந்தன்,
நல்ல பதிவு. நீங்களும் எனது ஊரென்ற படியால் சிலவேளைகளில் அறிந்திருப்பீர்கள். யாராவது காதலித்தால் எங்கடை ஊரில, "உவன் வசந்தன் எங்கடை மாணிக்கத்தின்ரை பெட்டையோடை கதைச்சுப் பேசுறானாம்" என்று சொல்லிறவையல்லோ? கேள்விப்பட்டிருக்கிறிங்களோ?

நீங்கள் சொன்னது போல் தமிழகத்தவர்கள், தமிழக அச்சு ஊடகங்களிலோ, அல்லது கதைக்கும் போதோ இந்த கதைத்தல் என்ற சொல்லைப் பேசுதல் என்ற சொல்லுக்காகப் புழங்குவதாக நான் இதுவரை அறியவில்லை. நீங்கள் குறிப்பிடும் பாடலை இதுவரை கேட்கவில்லை.

வசந்தன்,ஆட்சேபனை இல்லையெனின் ஒரு சின்னக் கருத்து. உங்கடை பதிவின் தலைப்பை தமிழகத்தமிழர்களுக்கு ஒரு கேள்வி: கதைத்தல் - பேசுதல் என்று மாற்றினால் பல தமிழகத்தவர்களும் ஏதோ இவர் தம்மிடம் கேட்பதாக அறிந்து உங்கள் பதிவைப் படித்துக் கருத்துக் கூறுவர் என்றே நினைக்கிறேன்.
பதிவின் தலைப்பிலேயே யாரிடம் கேட்கிறீர்கள் என்று சொன்னால் நல்லது, இல்லையா?

 

said ... (25 January, 2007 13:21) : 

\\நீங்கள் குறிப்பிடும் பாடலை இதுவரை கேட்கவில்லை.\\

எப்பிடி இந்தப்பாட்டை மிஸ் பண்ணினீங்கள்? கமலும் கமலினியும் சும்மா அந்தமாதிரி பைக்ல போவினம்.
வேட்டையாடு விளையாடு படத்தில் இடம்பெற்ற " பார்த்த முதல்நாளே " என்ற பாடல்.

\\இந்தப் பாடல் தொடக்கத்தில் உள்ள "பதாகையை"க் கூட அப்படித் தான் சேர்த்தார்களாம்\\

நானும் உந்தப்பாட்டு கேட்ட நாளில இருந்து யோசிக்கிறன் "பதாகை தாங்கிய உன் முகம் " என்றால் என்ன அர்த்ம் என்று யாராவது சொல்லுங்கோ எனக்கு.

 

said ... (25 January, 2007 16:50) : 

//நானும் உந்தப்பாட்டு கேட்ட நாளில இருந்து யோசிக்கிறன் "பதாகை தாங்கிய உன் முகம் " என்றால் என்ன அர்த்ம் என்று யாராவது சொல்லுங்கோ எனக்கு. //

சிநேகிதி,
பதாகை என்றால் கொடி.

இந்த இடத்தில் அதன் பயன்பாடு தான் எனக்கும் புரியவில்லை.

"என் கொடியில் உள்ள உன் முகம்" என்பது மாதிரி பொருள் என்று நினைக்கிறேன். அதாவது நம்ம கமலினி ஒரு நாட்டின் அரசி என்றால், அவரின் நாட்டுக் கொடியில் கமல் முகம்.. ?

கஷ்டம். தாமரையிடம் தான் கேட்கணும் :)

 

said ... (25 January, 2007 17:00) : 

பதாகை என்றால் Board.விளம்பரப் பதாகை. விளம்பரப் பலகை.

விளம்பரப் பலகையில் உள்ளது முகம் மறக்க முடியாது. அது போலவே உன் முகம்.

;)

 

said ... (25 January, 2007 18:34) : 

இராவணன்:
"என் பதாகை தாங்கிய உன் முகம்" எண்டுதான் வருகுது,
நானும் பாட்டு வந்த நாளில தொடங்கி யோசிக்கிறன், அர்த்தம்தான் விளங்குதில்லை

 

said ... (25 January, 2007 20:26) : 

ஈழத்தமிழர்கள் பால் அனுதாபம் உள்ளவர் தாமரை என்றே நானும் அறிந்திருக்கிறேன். அதனால் ஈழத்தமிழர்களோடு அவருக்கு நட்பிருக்கலாம். அதன் விளைவாக 'கதைத்தலை'பயன்படுத்தியிருப்பா என்றே நான் நினைக்கிறேன். எது எவ்விதமிருப்பினும் 'டேக் இட் ஈஸி பாலிஸி'என்பது போன்ற ஆங்கிலப்பாடல்களை எழுதாமல் தமிழிலேயே எழுதும் தாமரை மீது எனக்கு மிகுந்த மரியாதையும் மனதளவில் நெருக்கமும் உண்டு.

 

said ... (25 January, 2007 21:02) : 

நமக்கெல்லாம் பாதுகை வாங்கிய முகம் ;-)

 

said ... (25 January, 2007 23:01) : 

அகராதியில் பதாகைக்கு என்ன போட்டு இருக்கு பாருங்க.

2 பதாகை 1. ensign, banner, standard; 2. large flag; 3. gesture with one hand in which the thumb is bent while the other fingers are held close and upright; 4. gesture with one hand in which the fingers are stretched directly forward

இதுல நாலாவது பொருள் பாத்தீங்கன்னா கையை நேரா நீட்டுவது போல ஒரு பொருள் இருக்கு. அந்த மாதிரி நீட்டிய கை தாங்கிய உன் முகம் என இருக்கும் என நினைக்கிறேன்.

என் இரண்டு அணாக்கள்.

 

said ... (25 January, 2007 23:17) : 

சயந்தன், கொத்தனார், நன்றி :)

இனிமேல் தாமரை அறிமுகப்படுத்தும் இது போன்ற சொற்களுக்கு விளக்கமும் சேர்த்துக் கொடுத்தாங்கன்னா நல்லா இருக்கும்..

வசீகராவின் 'முடிவிலி'யே புரியாமல் நிறைய நண்பர்கள் ஹம்மிங்கில் விடுவதுண்டு :)))

 

said ... (26 January, 2007 10:15) : 

பதுவு நல்லாக்கீது நைனா!

நரீயா பேரு நரீயா மேட்டர அவுத்து உட்றாங்க...

டாங்க்ஸ்பா

 

said ... (26 January, 2007 11:33) : 

/* \நீங்கள் குறிப்பிடும் பாடலை இதுவரை கேட்கவில்லை.\\

எப்பிடி இந்தப்பாட்டை மிஸ் பண்ணினீங்கள்? கமலும் கமலினியும் சும்மா அந்தமாதிரி பைக்ல போவினம்.
வேட்டையாடு விளையாடு படத்தில் இடம்பெற்ற " பார்த்த முதல்நாளே " என்ற பாடல். */

எனக்குத் திரைப்படங்கள் பார்க்கும் ஆர்வம் இல்லை. கடைசியாக திரையில் பார்த்த ஆங்கிலப்படம், 7 days in Tibet. கடைசியாகப் பார்த்த தமிழ்ப்படம் இருவர். படங்கள் பார்ப்பதற்கு ஆர்வம் இல்லை மட்டுமல்ல நேரமும் கிடைப்பதில்லை.
நண்பர்களுடன் சேர்ந்து விளையாட்டுகள் [Basket ball, Ice hockey] பார்ப்பதில் தான் ஆர்வம்.

பாடல்களும் எப்போதாவது இருந்துவிட்டுத்தான் கேட்பேன். அப்படிக் கேட்கிலும் Music India on line ல் அல்பம் create பண்ணி வைச்சிருக்கிறேன். அதைக் கேட்பதுதான் . என் அல்பத்தில் எல்லாம் பழைய பாடல்களும் கர்நாடக சங்கீதமும் தான். அதனால் புதிய பாடல்களை உடன் கேட்பது குறைவு. அப்படித்தான் இப்பாடலையும் இதுவரை கேட்கவில்லை.:))

 

said ... (27 January, 2007 17:54) : 

யோகன்,
பேசுதல் என்பது உரையாலைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறதுதான்.
அதனால்தான் "பேசுவதற்கு திட்டுவது என்ற பொருளுமுண்டு" என்று எழுதினேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சயந்தன், சின்னக்குட்டி,
வருகைக்கு நன்றி.

பொன்ஸ்,
வருகைக்கு நன்றி.

வெற்றி,
உவன் வசந்தன் எங்கடை மாணிக்கத்தின்ரை பெட்டையோடை கதைச்சுப் பேசுறானாம்
எண்டு கேள்விப்படலே. வசந்தன் எண்ட பேரைக்கொண்ட எவரும் உப்பிடி ஊத்தவாளி வேலையள் பாக்கிறேல எண்டது காரணமாக இருக்கலாம். ஆனா வேற பேருள்ள ஆக்களுக்கு இப்பிடிச் சொல்லிறதுண்டு.

வெற்றி, நீங்கள் சொன்ன தலைப்பு நல்ல விசயம் தான். ஆனா இலவசக்கொத்தனாருக்கு எதிர்ப்பாட்டு மாதிரிக்கிடக்கே?

 

said ... (29 January, 2007 01:38) : 

பெயரிலி,

பதிவுக்குத் தொடர்புடையதில்லையாயினும் அது வெளியிடப்பட வேண்டிய பின்னூட்டம்தான்.

மிதிளன் - மிதிலன் குழப்பம் பற்றி நானும் அங்குக் கேட்டிருந்தேன்.
அதுமட்டுமன்றி வேறும் பெயர்கள் வரும்.
முன்பு 'தமிழ்மணத்தில் முதுகு சொறிதல்' பதிவுக்கு வன்னியன் பின்னூட்டமிட்டபோதும் 'தமிழ்நாட்டான்' எண்ட பேரில ஒருத்தர் கம்பு சுத்திக்கொண்டிருந்தார்.
இதில நாங்கள் என்னண்ணை சொல்லக்கிடக்கு? பாம்பின் கால் பாம்பறியும் எண்டு சொல்லிறதா? அல்லது வினை விதைத்தவன் வினையறுப்பான் எண்டு பேசாமலிருக்கிறதா?
;-) ;-(

இடையில் வேறொரு பதிவில் நானிடாத பின்னூட்டமொன்றை மேற்கோள் காட்டிவிட்டு அதையெழுதியது வசந்தன், சயந்தன், கொழுவி, கழுவி, கிழவி எண்டு ஒரு கயிறு திரிச்சிருக்கிறார். அதுக்கு விளக்கம் கேட்டுப் போட்ட பின்னூட்டத்துக்கும் பதிலில்லை.
இவரும் சயந்தன்-வசந்தன் சாம்பாறு சமைக்கிறவர் போலகிடக்கு.
{இதில கொழுவியோட என்னைக் கொழுவிவிட்டது நீர்தான்.}
இதுக்குள்ள ஜேர்மனியிலருந்து வந்த கோமாளியொண்டு கானா பிரபாவையும் கொழுவிவிட்டிருக்கு. ரெண்டு பேருக்கும் பூர்வஜென்மப் பிரச்சினைபோல.
எல்லாம் ஒரே குட்டையில ஊறின மட்டையள் போலதான் கிடக்கு.


உங்கட பின்னூட்டம் மட்டும் மறுக்கப்படவில்லை. வேறு சிலரதும் மறுக்கப்பட்டதாகவே தெரிகிறது.
அங்கு ஒரு பதிவுக்கு நானெழுதிய நீண்ட பின்னூட்டம் ஒரு கிழமைக்கு மேலாகியும். வெளியிடப்படவேயில்லை. அதற்குப்பின் பத்துப்பதினைந்து பதிவு போட்டுவிட்டார். நீங்கள் சொன்னதுபோல் கருத்தை எதிர்கொள்ள முடியாதவர்களின் வேலையே அது. அப்பின்னூட்டம் தணிக்கை செய்யப்பட எந்த நியாயமான காரணத்தையும் அவர்களால் கூறமுடியாது.

அம்பது வருசத்துக்கு முந்தியிருந்த சாதியை இப்ப சிலர் தூக்கிப்பிடிக்கினம் எண்டு கடைசியா ஒரு அறிக்கை வந்திருக்கு. "முந்தியிருந்தது" எண்டது மூலம் இப்ப இல்லையெண்டதையும் சாடைமாடையாச் சொல்லினமாம். எங்களுக்குத்தான் ஒரு வளாயும் விளங்கேலயோ எண்டிட்டு இப்பவும் நடந்துகொண்டிருக்கிற விசயங்களைச் சொல்லி விளக்கம் கேட்டா அந்தப் பின்னூட்டங்களை வெளியிடாயினமாம்.
வெளியிட்டா அது ஈழத்தவரைக் கொச்சைப்படுத்தினதாப் போயிடுமெண்டு வெளியிடேலயோ தெரியேல.

வலைப்பதிவுகளில் எழுதப்படுவதை 'தமிழ்மணத்தில்' எழுதப்படுவதாகச் சொல்லுமளவுக்கு இருக்கும் புரிதலின் தொடர்ச்சி, அப்பிடியே தமிழ்மணம் = பெயரிலி எண்டு வந்து முடியுது எண்டு நினைக்கிறன். அதாலதான் நீங்கள் சொல்லாத விசயங்களையும் உங்களில தூக்கிப் போடுப்படுது.

 

said ... (04 February, 2007 17:20) : 

எழுதிக்கொள்வது: Kannan

நாங்கள் இப்ப அவையோட கதை போக்குவரத்து இல்லை எண்டும் சொல்லிறவையெல்லே

17.45 4.2.2007

 

said ... (28 September, 2007 13:52) : 

கானா பிரபா,
ஆரிட்ட பாதுகை(யால அடி) வாங்கினியள்?
அண்ணியிட்ட தானோ?

 

said ... (28 September, 2007 16:02) : 

கதைத்தல்- ப்ளொக் படித்துத் தான் தெரிந்துக் கொண்டேன், கதைத்தல் என்றால் பேசுதல் என்று. தமிழகத்தில் பேசு, பேசிக்கிட்டு (பேசிக்கொண்டு), பேசுவோம், பேசினாயா? இப்படி தான் பயன்படுத்துவோம்.

 

said ... (29 September, 2007 10:33) : 

"பறைதல்" - பேசுதல், கதைத்தல்

 

post a comment

© 2006  Thur Broeders

________________