Tuesday, January 02, 2007

கிளாலிக் கடனீரேரி - சில நினைவுகள்

************
படகுகள் ஒவ்வொன்றாக நகர்கின்றன. ஒவ்வொன்றிலும் பதினெட்டுப் பேர் என்றளவில் நிரப்பப்பட்டு பயணம் தொடங்குகிறது. எல்லாமே தனித்தனிப் படகுகளாகப் பயணிக்கின்றன. பெரும்பாலானோர் கரையிலிருந்தே தமது விருப்பத்துக்குரிய தெய்வங்களை மன்றாடத் தொடங்கிவிட்டார்கள். அனேகமாக அக்கரை சென்று சேரும்வரை இப்படித்தான் மன்றாடிக்கொண்டிருப்பார்கள். மன்றாட்டை முணுமுணுக்கும் அளவுக்குக்கூட மெதுவாக வாய்விட்டுச் சொல்லவில்லை. மற்றவர்களைக் குழப்புமென்ற நோக்கமில்லை, மாறாக குரலெழுப்ப முடியாப் பயம். இரண்டுநாட்களின் முன்புதான் இதேபோல் பயணம் செய்தவர்களில் ஐம்பது வரையானவர்கள் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டிருந்தார்கள். அவர்களும் இப்படி செபித்துக்கொண்டுதான் பயணித்திருப்பார்கள். யாருக்கும் செத்தவர்களின் சரியான கணக்குக்கூடத் தெரியாது. எங்கும் கடல் பரந்திருக்கிறது, கடுமையான இருட்டு, படகியந்திரத்தின் சத்தத்தையும் படகு அலையுடன் மோதும் சத்தத்தையும் தவிர வேறு ஒலிகளில்லை. அப்படியேதாவது ஒலி வருகிறதா என்று காதைக் கூர்மையாக்கிக் கொண்டே பயணம் தொடர்கிறது. நீண்டதாகவும் நெடியதாகவும் தோன்றிய மரணவேதனையான பதினெட்டுக் கடல்மைல் பயணத்தில் தூரத்தில் சில வெளிச்சங்கள் தெரிகின்றன. அவை ஆலங்கேணி, நல்லூர் கரைகள். பயணிகள் சேரவேண்டிய கரை. கரையில் எரியும் அரிக்கன் லாம்புகளின் வெளிச்சத்தில் போன உயிர் எல்லோருக்கும் திரும்பி வந்தது. ஆழம்குறைந்த கடற்கரையில் வாய்க்கால்போல் வெட்டி ஆழமாக்கப்பட்ட பகுதியூடாக படகுகள் நகர்ந்து கரையை அடைகின்றன.

ஓளியை, வாழ்க்கையின் வெற்றியாகவும் நம்பிக்கையாகவும் பிரச்சினையொன்றின் விடிவாகவும் சித்தரிக்கும் சொற்றொடர்களின் வெளிப்பாட்டை, சிக்கலான காலப்பகுதியில் கிளாலிக் கடனீரேரியில் பயணித்தவர்கள் அனுபவித்திருப்பார்கள். கரையில் எரியும் நாலைந்து அரிக்கன் லாம்பு வெளிச்சம், ஆயிரம் பேருக்கு தாம் இன்னும் சிலகாலம் உயிரோடிருப்போமென்ற நம்பிக்கையைத் தந்தது.
***********

ஈழத்தைச் சேர்ந்த எவருக்கும் இப்பெயர் தெரிந்திருக்கும். இவ்விடத்தை அறியாதோரும் பெயரைக் கேள்விப்படாமலிருந்திருக்க முடியாது. தொன்னூறுகளில் யாழ்ப்பாணத்தவருக்கு இரத்தமும் சதையுமாக வாழ்க்கையோடு ஒன்றித்திருந்தது இந்நீரேரி. வாழ வைத்ததும் இவ்வேரிதான்; வாழ்க்கையைக் குடித்ததும் இவ்வேரிதான்.


முதலில் ஆனையிறவுக்கு கிழக்குப் பக்கமாக கொம்படி-ஊரியான் பாதையை மக்கள் பயன்படுத்தினர். இடுப்பளவு உயரத்தில் தேங்கிநிற்கும் நீருக்குள்ளால் சிறுபடகுகளில் கிட்டத்தட்ட ஐந்து மைல் தூரம் பயணித்து வன்னி சென்றடையவேண்டும். பின் தாண்டிக்குளம் வழியாக வவுனியா செல்ல வேண்டும். இந்தப்பாதை பறறித் தனியே சொல்லலாம். இரண்டுமுறை பயணித்திருந்தாலும் 'உயிர்போகும்' அனுபவமேதும் இல்லாமல் சுவாரசியமாகவே அவ்விரு சந்தர்ப்பங்களும் அமைந்திருந்தன.

இராணுவத்தினர் ஆனையிறவிலிருந்து மேற்கொண்ட ஒரு முன்னேற்ற முயற்சியுடன் கொம்படி-ஊரியான் போக்குவரத்துப் பாதையும் மூடப்பட்டது. மாற்றுப்பாதையாக கிடைத்ததுதான் கிளாலிக் கடனீரேரிப் பாதை.
நான் நினைக்கிறேன், இப்பயணம் தொடங்கப்பட்ட பின்தான் அக்கடனீரேரி 'கிளாலிக் கடனீரேரி' என அழைக்கப்பட்டது; அதற்கு முன் வெறும் 'யாழ்ப்பாணக் கடனீரேரி'. சரிதானா?

கிளாலிப் பாதையும் அதனோடு சம்பந்தப்பட்டவை பற்றியும் பூராயத்தில் படத்துடன் எழுதப்பட்ட பதிவு சிலவேளை பலனளிக்கலாம்.

தொடக்கத்தில் அடிக்கடி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இரவு புறப்படும் படகுகள் விடியும்போது மறுகரையை அடையுமா அடையாதாவென்று யாருக்கும் தெரியாது. இடையில் கொல்லப்படுவதற்கும் தப்பிப் பிழைப்பதுக்குமான சாத்தியக்கூறு ஒரேயளவுதான். விடியும்போது வெட்டிக்கொல்லப்பட்ட அல்லது சுட்டுக்கொல்லப்பட்ட உடல்களோடு படகுகள் வந்துசேரும். அல்லது மூழ்கடிக்கப்பட்ட படகிலிருந்தவர்களின் சடலங்கள் மிதந்து வரும். ஆனாலும் யாழ்ப்பாணத்தாரின் பயணங்கள் தொடர்ந்துகொண்டிருதானிருந்தன. பதின்மூன்றாண்டுகள் கழித்து இன்று நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது, கடலில் படுகொலையொன்று நடந்த இரண்டாம் நாளே எதுவும் நடவாததுபோல் சாதாரணமாக அதேவழியிற் பயணிப்பர் மக்கள்.
__________________________________

அப்போது யாழ்ப்பாணத்திற்கும் வெளியிலும் தகவற்றொடர்பென்பது மிகமிக மோசமாக இருந்தது. தொலைபேசிச் சேவை அறவே இல்லை. கடிதப் போக்குவரத்து மாதக்கணக்கில் செல்லும். யாழ்ப்பாணத்துக்கு உணவுப்பொருட்கள் கொண்டுவரும் கப்பலில்தான் தபாலும் வரும், போகும். கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையில் ஒரு கடிதம் பயணிக்க இரண்டோ மூன்றோ மாதங்கள் வரை செல்லும். அந்நேரத்தில் அரச தபாற்சேவையை விடவும் கடினமாக உழைத்தது போக்குவரத்துச் செய்பவர்கள்தாம்.
ஒருவர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு - ஏன் வவுனியாவுக்குப் புறப்பட்டாலே அவரிடம் நிறையக் கடிதங்கள் சேரும். அவர் அவற்றைக் காவிச்சென்று வவுனியாவில் தபாற்பெட்டியில் போட்டுவிட வேண்டும். கொழும்பிலிருந்து வருபவர்களிடமும் அப்படித்தான். அவர்கள் யாழ்ப்பாணத்துக்கான கடிதங்களைக் காவிவருவார்கள். இச்சேவை யாராவது தெரிந்தவர்களுக்குத்தான் செய்யவேண்டுமென்பதில்லை. கடிதத்தைத் தூக்கிக்கொண்டு பயணிகள் குவிந்திருக்கும் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று அங்கிருப்பவர்களில் முகவெட்டைப் பார்த்து யாராவது நம்பகத்தன்மையுள்ளவராக இனங்கண்டு அவரிடம் 'அண்ணை/அக்கா/அம்மா/ஐயா, இதையொருக்கா வவுனியாவில போஸ்ட் பண்ணிவிடுங்கோ" என்று சொல்லிக் கொடுத்துவிடலாம்.

ஒருவர் கொழும்பிலிருந்து புறப்படுகிறாரென்றால் அதற்குமுன் யாரிடமாவது கடிதம் கொடுத்துவிடப்படும், 'இன்ன திகதியில் வெளிக்கிடுறன்' என்று. அதன்பின் இங்குள்ளவர்கள் கணக்குப்பார்த்து இன்ன திகதியில் யாழ்ப்பாணம் வந்து சேருவார் என்று தீர்மானித்துக்கொள்வர். குறிப்பிட்டவர் பயணத்தைப் பின்போட்டால் இங்கு யாருக்கும் தெரியாது. அது அடுத்த கடிதத்தில்தான் வரவேண்டும்.
எனது அம்மம்மா ஒருமுறை கொழும்புசென்று வந்தபோது ஏற்கனவே கிடைத்த கடிதத்தின்படி இப்படித்தான் நாங்கள் ஒருநாளை எதிர்பார்த்திருந்தோம். அம்மம்மா கிளாலிக் கடல் கடப்பதாக நாங்கள் கணக்குப்பார்த்த நாளில் அதில் பயணம் செய்த படகுகள் சிங்களக் கடற்படையால் தாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டார்கள். எத்தனை படகுகள் தாக்குதலுக்குள்ளாயின என்று யாருக்கும் சரியாகத் தெரியாது. பல படகுகள் எதிர்க்கரைக்கே திரும்பிவிட்டன, சில படகுகள் இக்கரைக்கு வந்துவிட்டன. அதிகாலை செய்தியறிந்து பதைத்துப்போனோம். அம்மம்மா இந்தநாளில் பயணித்தாவா இல்லையா என்றே தெரியாது. எங்கள் நாட்கணிப்பின்படி இந்தப்பயணத்தில் வந்திருக்கவேண்டும். நூறுவீதமும் இதைத்தான் நாங்கள் நம்பவேண்டும். கிளாலிக் கரையில் வந்துசேர்ந்த படகுகளில் அம்மம்மா வரவில்லை. எங்களைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் தங்கள் உறவினர் தப்பினார்களா செத்தார்களா என்று தேடியலைந்துகொண்டிருந்தனர்.

சடலங்களும் தாக்கப்பட்ட படகொன்றும் கரைக்கு அடைந்தது. சில சடலங்கள் உடனடியாக அடையாளம் காணப்பட்டன. அதற்குள் அம்மம்மா இல்லை. காலை பத்துமணிக்குள், இரண்டு படகுகள் மட்டும் தாக்கப்பட்டன, மற்றவை பத்திரமாக இருகரையில் ஏதோவொன்றுக்குத் திரும்பிவிட்டன என்ற உறுதிப்படுத்தினார்கள். கிளாலிக் கரைக்கு அம்மம்மா வரவில்லை. அம்மம்மா வந்தது தாக்கப்பட்ட மற்றொரு படகா, இல்லை எதிர்க்கரைக்கே திரும்பிவிட்ட படகொன்றிலா என்று தெரியவில்லை. மற்றவர்களைப்போலவே நாங்களும் 'உண்மை'யுணர அலைந்துகொண்டிருந்தோம். அன்றுமுழுவதும் எந்த முடிபும் தெரியவில்லை. பணங்கள் நிறுத்தப்பட்டாலும் அன்றிரவு அக்கரையிலிருந்து பெயர் விவரங்களோடு ஓர் ஓட்டி கிளாலிக்கு வந்துசேர்ந்ததோடு பலரின் பிரச்சினை ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது. பிரச்சினையென்பது யார் செத்தார்கள், யார் தப்பினார்கள் என்ற விவரம் தான். கொல்லப்பட்டதாக இனங்காணப்பட்டவர்களின் உறவினர்கள் ஒப்பாரி வைக்க, தப்பியதாக விவரம் கிடைத்தோரின் உறவினர் ஒருவித ஆசுவாசத்தோடு திரும்பினர்.
நாங்கள் சிலர் இரண்டு குழுவிலுமில்லை. எங்களுக்கு வேறொரு சிக்கல். இரண்டிலும் அம்மம்மா பெயரில்லை. எஙகளோடு இன்னும் சிலருக்கு இதேபிரச்சினை. தேடிவந்தவர்கள் கொல்லப்பட்டவர்களிலுமில்லை, தப்பியோரிலுமில்லை.

விவரங்களில் பிழையிருக்குமோவென்று சந்தேகப்பட்டால், ஓட்டி அது சரியானதென்று சாதித்தார். தொன்னூற்றொன்பது வீதம் விவரம் பிழைக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் பயணம் செய்வோர் அனைவரும் பதிவுசெய்யப்பட்டுத்தான் பயணிக்கின்றனர். படகுகளில் மாறிச்சாறி ஏறியிருந்தாலும் ஆட்தொகை பிழைக்க வாய்ப்பில்லை. கொல்லப்பட்டோர், தப்பியோர் தொகை சரியாகப் பொருந்துகிறது.

இப்போது ஒரே குழப்பம். ஒரேசாத்தியம், நாங்கள் தேடுவோர் ஆலங்கேணிக்கு இன்னும் வந்துசேரவில்லையென்பதுதான். இரண்டுநாட்கள் மிகக் கொடுமையாகவே கழிந்தன. இறுதியில் அம்மம்மா வந்து சேர்ந்தா. எங்களுக்குச் சொல்லப்பட்டதிலிருந்து இரண்டுநாட்கள் பிந்தித்தான் கொழும்பிலிருந்து புறப்பட்டிருந்தா.

கிளாலிப் பயணம், கடலிற் பயணிப்பவர்களுக்கு மட்டுமன்றி அவர்கள் வருகைக்காகவும் வழியனுப்பிவிட்டும் காத்திருக்கும் உறவுகளுக்கும் மிகக்கொடிய அனுபவங்களைத் தந்தது. கிளாலியைத் தவிர வேறெந்தத் தெரிவுமின்றி அதன்வழியால்தான் சகலதும் நடந்துவந்தன.
அடிக்கடி சிங்களக் கடற்படையினரின் வெறியாட்டம் நடந்தது. சிலநாட்களின் விடியல்கள் கிளாலிக் கரையில் சடலங்களோடு விடிந்தன.
_____________________________
*********************
1996 மாசிமாதத்தில் ஒருநாள். யாழ்ப்பாணத்திலிருந்து நான் முற்றாக வெளியேறியநாள். அதுவும் இதே கிளாலியால்தான். இம்முறை தனித்தனிப் படகுகளில்லை, இயந்திரம் பூட்டப்பட்ட ஒருபடகில் பத்துப் படகுகள் தொடராக இணைக்கப்பட்டிருந்தது. முதற்படகுமட்டும் இயந்திரத்தில் பயணிக்க ஏனையவை பின்தொடந்தன. பயமற்ற, மகிழ்ச்சியான -கிட்டத்தட்ட ஓர் உல்லாசப் படகுப்பயணம். முன்பு பயத்தில் உடல் விறைத்தது, இப்போது மாசிப்பனியில் விறைத்தது. (யாழ்ப்பாணத்தை விட்டு நீங்குவது எப்படி மகிழ்ச்சியென்று கேட்காதீர்கள். எனக்கும் தெரியவில்லை. முடிந்தால், ஞாபகமிருந்தால் மாசியில் அதையொரு பதிவாக்குகிறேன்)
*********************

கிளாலிக் கடலில் நடந்த பல படுகொலைகளின்பின் அக்கடலில் கடற்படையினரின் வெறியாட்டத்துக்கு கடற்புலிகளால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கடற்புலிகளின் பாதுகாப்பில் தொந்தரவின்றி பயணங்கள் தொடர்ந்தன. யாழ்ப்பாணக் குடாநாடு முற்றாகப் படையினரின் வசம் வந்தபின் அப்பாதைக்கு வேலையில்லாமற்போயிற்று.
_____________________________

காலங்கள் ஓடி 2000 ஆம் ஆண்டு வந்தது. ஆனையிறவுப் படைத்தள மீட்புக்கான இறுதிச்சண்டை கடுமையாக நடக்கிறது. சுற்றிவளைக்கப்பட்டு, குடிநீர்கூட இல்லாத நிலைக்கு ஆனையிறவுப்படைத்தளம் முடக்க்பபடுகிறது. இனிமேல் தப்பியோடுவதைத்தவிர வேறுவழியில்லையென்ற நிலையில் படையினர் ஓடத்தொடங்குகின்றனர். இப்போது அவர்களுக்கிருந்த ஒரேபாதை கிளாலிக்கடற்கரைதான். எல்லாவற்றையும் போட்டுவிட்டு கடற்கரை வழியாக ஓடுகிறார்கள். விடுதலைப்புலிகளால் வெளியிடப்பட்ட சில வீடியோக்களில் பார்த்தவர்ளுக்குத் தெரிந்திருக்கும். கும்பல் கும்பலாக கடற்கரைவழியாக இராணுவத்தினர் ஓடுகிறார்கள். கும்பல் கும்பலாகவே செத்துக்கொண்டிருந்தார்கள். மிகக்கிட்டத்தில் அவை படம்பிடிக்கப்பட்டன. பல கோப்புக்கள் வெளியிடப்படவில்லை. தாக்குதலைச் சமாளிக்க முடியாது பலர் கடலுள் இறங்கி நீருக்குள்ளால் தப்ப முயற்சிக்கின்றனர்.

ஆனையிறவு முற்றாக வீழ்ந்த மறுகணமே வன்னிமக்கள் அனைவரும் அங்குச் சென்று கூத்தாடினர். கிளாலிக் கடற்கரையையும் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. முந்தி பார்த்ததைவிடவும் மோசமாக இருந்தது. முந்தி கரையில் அடைந்ததை விடவும் அதிகளவு பிணங்கள். முன்பு எம்மக்கள் கொல்லப்பட்டபோது, 'கடல்நீர் இரத்தத்தால் சிவந்தது' என்று சிலர் எழுதியது கவிதைக்குச் சரியென்றாலும் நடைமுறையில் அப்படித் தோன்றியதில்லை. ஆனால் இம்முறை உண்மையில் கரையிலிருந்த நீர் சிவப்பாகவே தெரிந்தது.
ஆனால் பிணங்களும் இரத்தமும் நிச்சயமாக தமிழனுடையதாக இருக்கவில்லை.

__________________________________
__________________________________
இன்று கிளாலிப்படுகொலைகளுள் பெரியதான ஒரு படுகொலையின் பதினான்காம் ஆண்டு நினைவுநாள். 1993 ஜனவரி இரண்டாம் திகதி ஐம்பது வரையான பொதுமக்கள் கிளாலியில் பயணிதத்துக்கொண்டிருந்தபோது சிறிலங்காக் கடற்படையால் கோரமாகக் கொல்லப்பட்டார்கள்.

அந்த நினைவில் இப்பதிவை எழுதிப் பதிவேற்றும்போது இன்னொரு படுகொலை வன்னியில் நடந்துள்ளது.
சிறிலங்கா அரசின் வான்படை ஒரு கிராமத்தை முற்றாக அழித்துள்ளது. பதினைந்து பேராவது கொல்லப்பட்டுள்ளார்கள், பலர் காயமடைந்துள்ளார்கள். வழமைபோல அது புலிகளின் கடற்படைத்தளம்தான் என்று அரசாங்கம் சொல்லியுள்ளது. மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் நேரிற்சென்று பார்வையிட்டு படுகொலையை உறுதி செய்துள்ளார்.




_____________________________________________

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"கிளாலிக் கடனீரேரி - சில நினைவுகள்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (03 January, 2007 01:10) : 

//கிளாலிப் பயணம், கடலிற் பயணிப்பவர்களுக்கு மட்டுமன்றி அவர்கள் வருகைக்காகவும் வழியனுப்பிவிட்டும் காத்திருக்கும் உறவுகளுக்கும் மிகக்கொடிய அனுபவங்களைத் தந்தது//

புலத்திலிருந்த போது கூட இந்த வேதனையை அனுபவித்திருக்கின்றேன். பதிவை வாசித்த போது நெஞ்சு கனத்தது. வேறுசில சில நினைவுகளும் வந்தன..

 

said ... (03 January, 2007 12:49) : 

மலைநாடான்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அந்தக் காலத்தையும் பயணத்தையும் நினைத்துப் பார்த்தால் இப்போது ஆச்சரியமாக இருக்கிறது.

 

said ... (03 January, 2007 13:05) : 

நான் மறக்க நினைக்கும் வடுக்களில் கிளாலி, ஊரியான் கொம்படிப் பாதைப் பயணங்களும் அடங்கும். உம்மைப் போலப் பக்கம் பக்கமா எழுதுமளவுக்கு அனுபவம் உண்டு. இந்தப் பதிவை மீண்டும் ஒரு தடவை படிக்க ஆசை.

 

said ... (03 January, 2007 13:18) : 

கானா பிரபா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//நான் மறக்க நினைக்கும் வடுக்களில் கிளாலி, ஊரியான் கொம்படிப் பாதைப் பயணங்களும் அடங்கும். உம்மைப் போலப் பக்கம் பக்கமா எழுதுமளவுக்கு அனுபவம் உண்டு. இந்தப் பதிவை மீண்டும் ஒரு தடவை படிக்க ஆசை. //

மறக்க நினைக்கிற பதிவை திரும்பவும் படிக்க ஏன் ஆசைப்படுறீர்?
மறக்கக்கூடாதெண்டு நினைச்சா நீரும் எழுதும்.

 

said ... (03 January, 2007 13:30) : 

//ஒரு படுகொலையின் பதினான்காம் ஆண்டு நினைவுநாள். 1993 ஜனவரி இரண்டாம் திகதி ஐம்பது வரையான பொதுமக்கள்//

இதிலே என்றுதான் நினைக்கிறேன்.. சரியாக ஞாபகமில்லை. அம்மா யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு வருகிறா. அடுத்த நாள், தாக்குதல் பற்றித் தகவலறிந்து தேடிச்சென்ற உறவினருக்கு செய்தி கிடைக்கிறது இன்ன பெயருடைய ஆள் இறந்துவிட்டாரென்று. பெரியம்மா வீட்டிற்கு துக்கம் விசாரிக்கவும் ஆள் போயிற்றாம். (அப்பாவின் பெயர் இரண்டு பெயர்களைச் சேர்த்தமாதிரி இருக்கும்) பிறகுதான் தெரிய வந்து இரண்டு தனித்தனி ஆட்களின் பெயர்களை சேர்த்துச் சொன்னதில் அது அம்மாவினது போலவே இருந்திருக்கிறது என்று. அம்மா இரவிரவாய் இன்னும் கன பேரோட சேர்ந்து பற்றை/புதர்களுக்கிடையில் மறைந்திருந்து பாதுகாப்பாய் கொழும்பு திரும்பினா.

எனக்கு 1994 இறுதிப்பகுதியில் கிளாலிப் பயணம் வாய்த்தது. கம்பங்கள் நட்டு அதற்கிடையால் படகுகள் போகும். முழுப்பயணமுமில்லாவிட்டாலும் ஓரளவுக்கு ஞாபகமிருக்கிறது.

 

said ... (03 January, 2007 17:41) : 

ஷ்ரேயா,
உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்ததுக்கு நன்றி.
இதுபோல் பல படுகொலைகள் கிளாலிக் கடற்பரப்பில் நடந்தன. அவற்றில் எதிலாவது உங்கள் சம்பவம் இருக்கலாம்.

94 இல் வந்த பயணம் ஓரளவுக்குத்தான் ஞாபகமிருக்கா?
அந்தக்காலம் ஆபத்தற்ற பயணக்காலம். எனவே குறிப்பாக ஞாபகமிருக்க வாய்ப்பில்லைத்தான்.

 

said ... (03 January, 2007 21:33) : 

எழுதிக்கொள்வது: இராவணன்

இராவணன்
அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தபோதும், கிளாலிக்கரைக்கு வழியனுப்ப மட்டுமே செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது..
ஆரம்பத்தில் படிக்கும்போது நெஞ்சு கனத்த போதும் இறுதி வரிகளைப்படித்த போது சற்று ஆறுதலாக இருந்தது..
இத்தகைய மனநிலை யுத்தத்தின் வடுக்களால் ஏற்பட்டிருக்குமோ என்று எண்ணிய போதும் இது தவிர்க்க முடியாததாகவேபடுகிறது..
என்ன செய்வது., வினை விதைப்பவர்கள் அறுத்துத்தானே ஆக வேண்டும்..

16.7 3.1.2007

 

said ... (03 January, 2007 23:44) : 

எழுதிக்கொள்வது: johan-paris

வசந்தன்!
சுயானுபவம் இல்லை;ஆனால் உறவினர்; நண்பர்கள் பட்ட தொல்லைகள் சொல்லக் கேட்டுள்ளேன்.மிகத் துயர் தோய்ந்த அனுபவங்கள். இன்னும் ஏதோ வகையில் அவர்களை அது ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கிறது.
யோகன் பாரிஸ்

14.9 3.1.2007

 

said ... (05 January, 2007 02:47) : 

இராவணன், யோகன்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 

said ... (05 January, 2007 19:52) : 

உங்களுடய மின்மடல் முகவரியைத்தந்துதவ முடியுமா?
உங்களுடன் பகிர்ந்துகொள்ள சில முக்கிய விடயங்கள் உள்ளன.. ஒருவேளை உங்கள் தொடரும் பதிவுகளுக்கு உதவக்கூடும்..
இராவணன்

 

said ... (06 January, 2007 01:19) : 

இராவணன்,
எனது Profile சென்றால் அங்கு என் மின்னஞ்சல் முகவரி கிடைக்கும்.
என்றாலும் இங்கு ஒரு முகவரி தருகிறேன், தொடர்பு கொள்ளுங்கள்.
maathahal@gmail.com

 

said ... (06 January, 2007 02:34) : 

வாழ்க்கையில் மறக்கமுடியாத பல
நினைவுக்களை தந்த இடமே கிளாலி.
எத்தனையோ உறவினர்கள் நண்பர்களின்
வாழ்க்கைப் பாதைக்கு முடிவுகட்டிய
இடம்.எங்களுக்கு வேதனையை ,மரணத்தினை பரிசாக
தந்தவர்களே கடைசியில் அந்த மண்ணில் கூட்டம் கூட்டமாக மடிந்த
காட்சியினை பார்த்தபோது யானைக்கு
ஒரு காலம் என்றால் பூனைக்கு ஒரு காலம் வரும் என்று சும்மாவா
சொன்னார்கள்.

 

said ... (07 January, 2007 10:09) : 

கரிகாலன்,
வருகைக்கு நன்றி.

 

post a comment

© 2006  Thur Broeders

________________