வெற்றித் திரைப்படம் எடுப்பது எப்படி?
எல்லாரும் அதுசெய்வது எப்படி? இது செய்வது எப்படி? எண்டு தொடர்ச்சியாகப் பதிவுபோட்டு இப்பதான் ஓய்ஞ்சுபோய் கிடக்கினம். மணிமேகலைப் பிரசுரத்துக்கே உரிய இந்தத் தலைப்புக்களைக் களவெடுத்துப் பதிவெழுதியதன்மூலம் அப்பிரசுரக்காரருக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவென்று சரியாத்தெரியேல. இப்ப நீங்கள் எழுதிறதுக்கு முன்பே நானும் "எப்படி?" எண்ட தலைப்பில பதிவுகள் எழுதியிருக்கிறன். நான் முந்தி இப்படி எழுதின பதிவொண்டை இப்ப மீள்பதிவாக்கலாம் எண்டு நினைக்கிறன். கிட்டத்தட்ட ரெண்டு வருசத்துக்கு முந்தி எழுதின பதிவிது. பதிவில் புதிதாக ஏதுமில்லை. "எப்படி?" என்ற தலைப்பில் ஒரு பதிவுபோட வேண்டுமென்பதால் மீள்பதிவுமட்டுமே. இன்னுமொரு பதிவும் இருக்கு. அதை அடுத்ததாக மீள்பதிவாக்கிறன். _________________________________________________________ இவ்வலைத்தளத்தில் அன்பே சிவம் பற்றி நானெழுதியதைப் பார்த்த நண்பனொருவன் என்னுடன் கதைக்கும்போது, இது சிறந்த படமாக இருந்தால் தோல்வியடைந்தது ஏன்? (அவன் அதைச் சிறந்த படமாக ஏற்கவில்லை.) என்று வினவினான். “உன்னைப் போல் நிறையப்பேர் நல்ல படமில்லை என்று நினைப்பதால்தான்” என்று கூறி அத்தோடு பேச்சை முடித்து விட்டேன். ஏன் இக்கேள்வியை வலைத்தளத்திற் பதியவில்லை எனக்கேட்டதற்கு, தனக்குத் தமிழில் எழுதும் வழிமுறை தெரியவில்லை எனச் சடையத் தொடங்கினான். உண்மையில் அதற்குக் கிடைக்கும் பின்னூட்டங்களையிட்டுக் கவலைப்படுகிறானென்பதைப் புரிந்து கொண்டேன். என் எழுத்துக்குக் கிடைத்த பின்னூட்டங்கள் என் பார்வையையொட்டியே இருந்தன. சரி, இது அவனது இரசனை. எனக்குப் பிடித்ததற்காக இன்னொருவனுக்கும் இது பிடித்திருக்க வேண்டுமென்று எதிர்பார்க்க் கூடாது தானே? ஆனால் இக்கேள்வி பற்றிப் பின்பு யோசித்தேன். இப்படம் வர்த்தக ரீதியில் வெற்றி பெற என்னென்ன செய்திருக்க வேண்டும் என்ற என் யோசனைகளை எழுதுகிறேன். தவறேதும் இருந்தாலோ மேலதிகமாக இருந்தாலோ தயவு செய்து எழுதவும். கதாநாயகன் அறிமுகமாகும் முதற் காட்சியில் ஒரு குத்தாலங்கடிப் பாட்டுக்கு நூறு பேரோடு சேர்ந்து குதியன் போட்டிருக்க வேண்டும். அப்பாடல் கதாநாயகனைப் புகழ்ந்து தள்ளுவதாயிருந்தால் நன்று. “அன்பும் நாந்தாண்டா…ஆண்டவனும் நாந்தாண்டா சிவனும் நாந்தாண்டா…சிங்கமும் நாந்தாண்டா எமனும் நாந்தாண்டா…. இப்படியே தொடரலாம். வார்த்தைகள் புரியாவிட்டாற்கூடப் பரவாயில்லை. கமலால் அப்படி ஆடமுடியாதென்றால் மாதவனுக்காவது சந்தப்பம் வழங்கியிருக்கலாம். ஐந்தாறு சண்டைக் காட்சிகள் வைத்திருக்க வேண்டும். (படத்தில் ஒரு சண்டைக்காட்சி இருந்தாலும் இது போதாது.) குறிப்பாக, காய்கறிச் சந்தையிலும் பாத்திரக்கடையிலும் சண்டை போட வேண்டும். (குறிப்பிட்டளவு மக்களிடம் வரவேற்பைப் பெறாததற்கு இதுவே காரணமாக இருக்கலாம்) அடிவாங்குவதற்கு ஆட்கள் இல்லாவிட்டால் மாதவனையும் கமலையுமாவது மோத வைத்திருக்கலாம். ஆடிக்கடி பஞ்ச் டயலாக் ஏதாவது சொல்லியிருக்க வேண்டும். ஆகக்குறைந்தது “அன்பே சிவம்…அன்பே சிவம்…அன்வே சிவம்...” என்றாவது எக்கோ (echo) தொனியில் அடிக்கடி சொல்லியிருக்கலாம். 50 ஆண் பெண்கள் அரைகுறை ஆடையிற் புடைசுழ நாலு பாட்டு இருந்திருக்க வேண்டும். வெளிநாட்டுத் தெருக்களில் காட்சிப்படுத்துவது முக்கியம். கமலுக்கும் கிரணுக்குமான பாடற் காட்சியை இப்படிப் படமாக்கியிருக்கக் கூடாது. கிரணின் தொப்பையையாவது காட்டியிருக்கலாம் (திருமலை மாதிரி). பாடல் வரிகளிலும் “சரக்கு” இல்லை. இரசிகர்களைக் கிளுகிளுப்பூட்ட எதுவுமில்லை. சகிலா வகையறாக் காட்சிகள் எதையாவது வைத்திருக்கலாம். ஆகக்குறைந்தது கமலுக்குரிய சர்ச்சையான முத்தக் காட்சியையாவது வைத்திருக்கலாம். நகைச் சுவைக்கென யாரையாவது தனியா வைத்துப் புலம்பச் சொல்லியிருக்க வேண்டும். கதையோடு சம்பந்தப்படாமலிருந்தாலும் பரவாயில்லை. தமிழ்ச் சினிமாவின் தற்போதைய போக்கான இரண்டு கதாநாயகி முறையைக் கைவிட்டது பெரிய தவறு. அதுவும் இரண்டு கதாநாயகர்கள் இருக்கும்போது “முறைப்படி” நான்கு நாயகிகள் இருந்திருக்க வேண்டும். இரண்டு பேரையாவது உரித்துக் காட்டியிருக்கலாம். மாதவனுடன் வெளிநாட்டில் ஒருத்தி லவ்வினதாகக் காட்டினால் உரித்துக் காட்ட இன்னும் வசதி. படத்தைச் சுபமாக முடித்திருக்க வேண்டும். சாத்தியப்படும் சில உச்சக் காட்சிகள் (climax) இதோ:
சினிமாக் காரர்களின் உச்சக் காட்சித் தொல்லை (climax) சில படங்களில் தாங்கமுடியவில்லை. அண்மையில் ஒரு படம் பார்த்தேன். (காதல் சுகமானது என்று நினைக்கிறேன்). அதில் சினேகாவும் தருணும் மனசுக்குள் காதலித்தாலும், இறுதியில் சினேகாவுக்கும் இன்னொருவருக்கும் திருமணம். தருண்கூட திருமணத்திற்கு வந்துவிட்டு தாலிகட்டுவதைப் பார்க்கப் பொறுக்காமல் புறப்படுவார். தாலிகட்டும் போது வாசிக்கும் நாதஸ்வரமும் கெட்டிமேளச் சத்தமும் கூட கேட்டுவிட்டது. அடடா! புதுசா இருக்கே என்று திறந்த வாய் மூடவில்லை,.. வைத்தார்களே ஆப்பு. “ஓடிப் போகும்” தருண் முன் மணப்பெண் கோலத்தில் சினேகா. தொலைக்காட்சிப் பெட்டியில் மாப்பிள்ளையைத் திடீர் மணம் புரிந்த தங்கை சிறிதேவி பேசுகிறார். இருவரையும் சேர்த்து வைக்கிறார். ***************** Labels: திரைப்படம், விமர்சனம் |
"வெற்றித் திரைப்படம் எடுப்பது எப்படி?" இற்குரிய பின்னூட்டங்கள்
படம் வணிகரீதியாக வசூலை குவிக்காவிட்டாலும்,
நடிப்பு மற்றும் சொல்ல வந்த கருத்து ஆகியவற்றில் ஒரு பெரிய வெற்றிதான்.
அநேகமாக ஒரு நடிகர் ஊனமாக நடித்து நான் பார்த்தது இந்த படம்தான் என நினைக்கிறேன்.
நீங்கள் சொன்னபடி வெற்றி திரைப்படம் எடுத்த இயக்குனர்களோ அல்லது நடிகர்களோ நிலைத்திருப்பதில்லை.
எடுத்துக்காட்டாக சில இயக்குனர்கள்;
1. சுந்தர்.சி
2. விக்ரமன்.
---------------
அன்பே சிவத்தில் குறிப்பிட வேண்டிய மற்றுமொன்றூ.
யார் யார் சிவம்? என்ற பாடல் தான்.
அந்த பாடலின் நடுவில் உலக நாயகன் தனது அறுவை சிகிச்சைக்கு பின் கண்னாடியில் முகத்தை பார்த்து வருந்துவதும்,
கண் கோளாருக்காக கண்ணாடி அணிந்து சிரிப்பதும் நடிப்பின் உச்சம்.
சொல்ல வேண்டியதை மறந்துவிட்டேன் பாருங்கள்.
பதிவை நகைச்சுவையாக எழுதினீர்களா அல்லது செய்தியாக எழுதினீர்களா என தெரியாமல் செய்த உங்கள் நடை அருமை.
போற போக்கைப் பார்த்தால் நீரும் கோடம்பாக்கம் போவீர் போல..
படம் எடுக்கமுடியாவிட்டாலும் எழுதியாவது பிழைக்கலாம், நல்லாச் சிந்திச்சிருக்கிறீர்
I don´t understand,but nice blog and grettings from Spain:-)
//அநேகமாக ஒரு நடிகர் ஊனமாக நடித்து நான் பார்த்தது இந்த படம்தான் என நினைக்கிறேன்//
ஏன் ? பாகப்பிரிவினை பார்த்ததில்லியோ?
எழுதிக்கொள்வது: NONO
வெற்றி என்று முன்பே ஒருதிரைப்படம் வந்தது என்று நினைக்கின்றேன்! அதை திருப்பி எடுக்கப்போறீரோ?
9.55 5.12.2006
எழுதிக்கொள்வது: nagore ismail
சுவையான பதிவு, நீங்கள் சொல்வது போல் எடுத்திருந்தால் படம் ஓடியிருக்க வாய்ப்புண்டு, ஆனால் இதே கதையை கொஞ்சம் விறுவிறுப்பாக எடுத்திருந்தால் படம் ஓடியிருக்குமா? தங்களின் மேலான கருத்து என்ன? நாகூர் இஸ்மாயில்
18.56 5.12.2006
எழுதிக்கொள்வது: ரங்கநாதன். R
தங்களின் பதிவு கண்டேன்... நன்றாக இருந்தது... இன்னும் சுவைக்கக் காத்திருக்கிறேன்...
வாழ்த்துக்கள்...
16.36 5.12.2006
வசந்தன்!
அவலை நினைத்து உரலை இடிக்கிறீர்!!!
ஆனாலும்;பிரபா சொன்னது போல் "கிளிச்சு" ப் பெயரெடுக்கலாம்.
நல்ல கற்பனை!
யோகன் பாரிஸ்
நல்ல நகைச்சுவையான பதிவு வசந்தன். :))
This comment has been removed by a blog administrator.
This comment has been removed by a blog administrator.
கார்மேகராஜா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
// பதிவை நகைச்சுவையாக எழுதினீர்களா அல்லது செய்தியாக எழுதினீர்களா என தெரியாமல் செய்த உங்கள் நடை அருமை.//
பாராட்டுக்கு நன்றி.
கானா பிரபா
//போற போக்கைப் பார்த்தால் நீரும் கோடம்பாக்கம் போவீர் போல..
படம் எடுக்கமுடியாவிட்டாலும் எழுதியாவது பிழைக்கலாம், நல்லாச் சிந்திச்சிருக்கிறீர்//
யோசனைக்கு நன்றி.
ஜோ,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
NoNo,
உங்கள் நையாண்டிக்கு நன்றி.