Monday, December 18, 2006

சிங்களச் சினிமா எதிர்கொள்ளும் சிக்கல்

பிரச்சினைக்குள்ளாகி இருக்கும் ஹந்தகமவின் 'அக்ஷரய"

-மு. பொ-
_______________________________
எரிமலை இதழில் வெளிவந்த மு.பொ. அவர்கள்
எழுதிய கட்டுரை. எழுதப்பட்டு நான்கு மாதங்கள் ஆகிவிட்டாலும் மிகமுக்கியமான கட்டுரையென்பதால் பயன்கருதிப் பதிவாக்கப்படுகிறது. இந்நேரத்தில் படத்துக்கான தடை
விலக்கப்பட்டிருக்கக் கூடும்.
_______________________________


அண்மைக்காலத்தில் கலை, இலக்கியம், சினிமா அழகியல் என்பவற்றுக்கு அப்பால் பெரும் பிரச்சினைக்குள்ளாகியிருப்பது பிரபல இளம் சிங்கள திரைப்படக் கலைஞர் அசோகா ஹந்தகமவுடைய தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படமான 'அக்ஷரய' (அக்கினி எழுத்து)தமிழ் சினிமாவைப் பார்த்துப் பழகிய நம்மவர்களுக்கு ஹந்தகமவின் 'அக்ஷர'யவை விளங்கிக் கொள்வது கடினம், காரணம், சண்டை, ஆட்டம், பாட்டு,காதல் என்கிற வாய்ப்பாட்டுக்குள் இயங்கும் தமிழ்ச்சினிமாவிலிருந்து முற்றிலும் வேறுபட்ட உயர்ந்த திரைக்கலை ஆக்கமான இது, நம்மவரின் 'ரேஸ்ட்' க்குள் அகப்படப்போவதில்லை.


அப்படியானால் இத்திரைப்படம் எதற்காக பிரச்சினைக்குள்ளாகியிருக்கிறது?
இதை விளக்குவதற்குமுன் சிங்கள சீரியஸ்ஸான சினிமா, இன்று எந்நிலையில் உள்ளது என்பது பற்றித்தெரிந்துகொள்ளுதல் அவசியம். இந்தியச் சினிமா உலகில் சீரியஸ்ஸான திரை ஆக்கங்களுக்கு சத்திய ஜித்ராய் எவ்வாறு வழிகாட்டியாய் இருந்தாரோ அவ்வாறே உயர்ந்த சிங்களச் - சினிமாவுக்கு லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் முக்கியமானவர். அவருக்குப்பின் சிங்களத்திரையுலகில் பல இளங்கலைஞர்கள் தோன்றி பலவகையான பரிசோதனைகளைச் செய்யத் தலைப்பட்டனர். அதனால் சிங்களத் திரையுலகில் உலகத் தரம்மிக்க திரை ஆக்கங்கள் தோன்றவாரம்பித்தன.

லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸின் 'ரேகாவ' 'கம்பெரலிய' ஆகிய (கிராமப் பிறழ்வு) திரைப்படங்களின் வருகை சிங்களச் சினிமாவில் ஒரு உடைப்பை ஏற்படுத்திற்று. அதற்குப்பின் வந்த அவருடைய 'நிதானய' இன்னொரு மைல்கல். இதற்குபின் மளமளவென பல சிறந்த திரை ஆக்கங்கள் வரத்தொடங்கின. அதற்குக் காரணம் இளஞ்சந்ததியினர் மத்தியிலிருந்து துடிப்புள்ள இளங்கலைஞர்கள் தோன்ற ஆரம்பித்ததே. தர்மசிறி பண்டாரநாயக்கா, தர்மசேன பத்திராஜா, வசந்த லுபேசேகர, பிரசன்ன விதானகே, அசோகா ஹந்தகம, சோமரத்ன திசானாயக்க போன்றோரின் திரைப்படங்கள் சிங்களச் சினிமா உலகில் சூறாவளி ரீதியில் மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கின. வசந்த ஒபேசேகராவின் 'தீர்த்த யாத்ரா' தர்மசேனபத்திராஜாவின் மத்துயம் தவச (எதிர்காலத்தில் ஒருநாள்) அசோகா ஹந்தகமவின் சந்தகின்னரி (நிலவுப்பெண்) பிரசன்ன விதானகேயின் 'புரசந்தகலுவற' (ஓர் புரணையில் மரணம்) தர்மசிறிபண்டாநாயக்காவின் 'பவதுக்க' ஆகிய திரைப்படங்கள் பிரபலமானவை மட்டுமல்ல நமது தமிழ்சினிமா உலகத்தவரால் எட்டமுடியாத தரத்தை உடையவை. (மேலே குறிப்பிட்ட அனைத்துப்படங்களும் சென்ற வருடம். தர்மசிறிபண்டாரநாயக்காவின் 'திரிகோண' அமைப்பினால் 'சினியாத்ரா' என்ற பேரில் (திரை உலா) வட கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு திரையிடப்பட்டதோடு இவை பற்றிய கலந்துரையாடல்களும் நிகழ்த்தப்பட்டன) இந்தப் பின்னணியில்தான பிரச்சினைக்குள்ளாகியிருக்கும் அசோக ஹந்தகமவின் 'அக்ஷரய' வைப் பார்க்க வேண்டும். ஹந்தகம இளைஞர், ஒரு கணிதப்பட்டதாரி, வங்கியொன்றில் வேலைபார்க்கும் இவர், ஏற்கனவே தயாரித்த திரைப்படங்கள் மூலம் இலங்கையிலும் வெளியிலும் புகழ்பெற்றவர். உள்நாட்டு போரினால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் சிங்களக்கிராம மக்கள் பற்றியும் தமிழருக்கெதிரான இனவாதத்தில் மூழ்கியுள்ள பௌத்த சிங்களக் கிராமத்தின் தூய்மை பற்றியும் எந்த அச்சமும் இன்றி அலசிச் செல்லும் போக்கையும் இவரது திரைப்படங்கள் பின்னணியாகக் கொண்டுள்ளன. இவர் தயாரித்த 'சந்த கின்னேரி' (நிலவுப்பெண்) 1994ல் பல விருதுகளைப்பெற்றது. 'இது என்னுடைய சந்திரன்' ('மே மகே சந்தாய்) என்ற இரண்டாவது படம், யுத்தகளத்திலிருந்து தப்பியோடிக்கொண்டிருந்த போது, ராணுவவீரனொருவனால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட தமிழ் பெண்ணுக்கும் அந்த ராணுவக்காரனுக்கும் இடையே ஏற்படும் காதல் பற்றியது இக்கதை. இதுவும் இவருக்கு பலவிருதுகளைப் பெற்றுக் கொடுத்ததோடு வெளியுலகிலும் இவர் பிரபலமாகக்காரணமாய் இருந்துள்ளது. இத்திரைப்படம் லண்டன் திரைப்பட விழாவிலும் பரீஸ் சிங்கப+ர் டில்லி, பாங்கொக் போன்ற நகரங்களிலும் காட்டப்பெற்று பெரும் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றது. இவ்வாறே இவரது 'ஒரு சிறகோடு பறத்தல்' என்ற திரைப்படம் 2004ல் பரீசிலும் லண்டனிலும் திரையிடப்பட்டு பெரும் புகழை இவருக்குத் தேடிக் கொடுத்தன.சிங்கள சினிமா உலகில் இத்தனை சிறப்பான இடத்தைப்பெற்ற ஹந்தகமவுக்கு இப்போது ஒரு சோதனைக்காலம் எனலாம். அதற்கு காரணமாய் இருப்பது, 'அக்ஷரய' (அக்கினி எழுத்து) என்ற அவரது புதிய திரைப்படமாகும். இத்திரைப்படம் தணிக்கையாளர்களின் பார்வைக்கு விடப்பட்டு அவர்களாலும் திரையிடுவதற்கு அனுமதிக்கப்பட்ட பின்னரும் இதற்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு காரணம் என்ன?
சினிமாவின் தரம் அதன் நுணுக்கங்கள் பற்றிய எந்த அறிவுமில்லாதோரின் தூண்டுதலினால் கலாசார அமைச்சர் இதில் தலையிட்டுள்ளார். அதனால் இத்திரைப்படம் திரையிடப்படக்கூடாதென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் இப்படம் சிறுவர் துஷ்பிரயோகக் காட்சிகளைக் கொண்டதாக இருப்பது என்பதே கலாசார அமைச்சின்வாதம். இன்றைய பிரதான தேசிய ஊடகங்கள் இத்திரைப்படம் பற்றிய - அது இன்னும் திரையிடப்படாத நிலையிலும் - வாதம் பிரதிவாதங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளன.

இத்திரைப்படத்தில், குளியல் தொட்டியில் ஒரு சிறுவனை நிர்வாணமான நடிகை முன்னே நிற்பாட்டுவதன் மூலம் ஹந்கம சிறுவர் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்பதே கலாசார அமைச்சரதும் சிறுவர் துஷ்பிரயோக திணைக்களத்தின் பொலிசாரும் கண்டுள்ள குற்றமாகும். ஆனால் ஹந்தகமவுக்கு சார்பாக வாதிடுவோர் பின்வரும் கேள்விகளை முன்வைக்கின்றனர்.
1. கலாசார அமைச்சினால் நியமிக்கப்பட்ட தணிக்கை சபை அனுமதித்த பின்னர் அதை ரத்த செய்வதற்கு அமைச்சருக்கு என்ன அதிகாரம் உண்டு? அப்படியானால் அவர் நியமித்த தணிக்கை சபை பிழையானதா? அறிவற்றதா? தமது தீர்ப்பை ரத்து செய்தமைக்குப் பின்னரும் தணிக்கை குழு ஏன் இன்னும் தமது பதவியிலிருந்து விலகாது இந்த அவமரியாதையைத்தாங்கிக் கொண்டிருக்கிறது?
2. ஏற்கனவே சோமரத்ன திசாநாயக்காவினால் தயாரிக்கப்பட்ட 'சமனலதட்டு', 'சூரிய ஆரண்ய' ஆகிய இரண்டு படங்களிலும் ஹந்தகமவின் படத்தில் உள்ள காட்சிக்கு இணையான காட்சிகள் உள்ளன. துஷ்பிரயோகத்திற்கு பின்னர் நிர்வாணமாக ரோட்டில் ஓடும் சிறுவனின் காட்சி 'சமனல தட்டு'வில் இடம் பெறுகிறது. 'சூரிய அரண்ய'வில் சிறுவனான புத்தபிக்கு காவியுடையை களைந்துவிட்டு தனது விளையாட்டுத் தோழனோடு ஓடிப்போகும் காட்சி இடம் பெறுகிறது. ஏன் இக்காட்சிகள் கலாசார அமைச்சுக்கு துஷ்பிரயோகமாகப்படவில்லை? இன்னும் இரண்டாவது படத்திலுள்ள காட்சி, பௌத்த சமயம் போற்றும் 'வினைய' கோட்பாட்டுக்கே எதிரானது. இவற்றையெல்லாம் கலாசார அமைச்சு எவ்வாறு சகித்துக் கொண்டது? இப்படங்களைத் தயாரித்தவர்' தற்போதுள்ள ஆளுங்கட்சியின் பெரும் பிரச்சாரகராக இருந்தார் என்பதாலா?

கடந்தவாரத்திற்கு முதல்வாரம் தர்மசிறிபண்டாரநாயக்காவின்' திரிகோண' நிலையத்தில் நாம் சிலர் ஹந்தகமவைச் சந்தித்து உரையாடியபோது அவர் தனது திரைப்படத்திற்கு, திரைப்படம் பற்றிய அறிவற்ற சமான்யர்களால் ஏற்படுத்தப்பட்ட அபத்தமான விளைவுகளை விளக்கினார்.

சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய விசாரணையை மேற்கொள்ளும் பொலிசார், ஹந்தகமவின்மேல் சுமத்தும் குற்றம், அவர் ஒரு சிறுவனை நிர்வாண நடிகையின் முன்னால் நிறுத்திபடமெடுத்ததோடுஅவளால் தாக்குதலுக்கும் உள்ளாக்கப்பட வைத்தார் என்பதே. இதில் வேடிக்கை என்னவெனில் இன்றைய திரைப்படம் எடுத்தல் தொடர்பாகவுள்ள தொழில்நுட்பம் எதுவும் தெரியாதவர்களின் பாமரத்தனமான குற்றச்சாட்டே இது.

ஹந்தகம பொலிசாருக்கு கொடுத்த தனது வாக்கு மூலத்தின்போது, பிரச்சினைக்குரிய காட்சியானது தனித்தனியே எடுக்கப்பட்டு எடிட்டிங்மூலம் இணைக்கப்பட்டதேயொழிய சிறுவன் நிர்வாணப் பெண்ணெதிரே குளியல் தொட்டியில் நிற்பாட்டப்படவில்லை என்பதை விளக்கினார். பொலிசாருக்கு கொடுத்த வாக்கு மூலத்தில் நடித்த சிறுவனும் இதை உறுதி செய்ததோடு படமெடுக்கப்பட்டபோது அங்கிருந்த சிறுவனின் தாயாரும் நிர்வாணப் பெண்ணின் முன்னால் தன்னுடைய மகன் விடப்படவும் இல்லை அவளால் தாக்கப்படவுமில்லை என்பதையும் உறுதி செய்தார்.
இதை விளங்கிக் கொள்ள முடியாத கலாசார அமைச்சும் சொலிசாரும் தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நிற்பதே வேடிக்கை.

தன்மேல் சுமத்தப்பட்ட குற்றங்கள் பற்றி ஹந்தகம இறுதியாக பின்வருமாறு கூறினார். "ஒருகட்டத்தில், இந்தப் பாமரத்தனமான குற்றங்களைக் கேட்டபோது, எனக்கு அழுகையே வந்துவிட்டது. காரணம் எனக்கும் சிறு பிள்ளைகள் இருக்கிறார்கள்".

மூலப் பதிப்பு.


நன்றி: எரிமலை.

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"சிங்களச் சினிமா எதிர்கொள்ளும் சிக்கல்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (18 December, 2006 11:25) : 

நண்பரே,


**************************
இது உங்களுக்கு எச்சரிக்கை.

**************************
அன்புடன்,
போலியார்
http://doondu.blogspot.com

 

said ... (18 December, 2006 19:32) : 

எழுதிக்கொள்வது: "வானம்பாடி" கலீஸ்

தங்கள் விமர்சனம் வாசித்தேன். நன்று . இலங்கைத் தழிழனென்ற முறையிலும்இ அத்தோடு அசோக கந்தகமவை தனிப்பட்ட ரீதியில் அறிந்தவன் என்ற வகையில் இதை உங்களுக்குக் கூறலாமென நினைக்கிறேன். 2003ம் ஆண்டு இவரால் எழுதி நெறிப்படுத்தப்பட்டு ரூபாவாகினி மற்றும் ஐ அலைவரிசைகளில் ஒளிபரப்பான "மே பாறெங் என்ன" ".வ்வளியால் வாருங்கள்" என்ற தொலைக்காட்சி நாடகத்தில் நடித்த முக்கிய மூன்று கதாபாத்திரங்களுள் நானும் ஒருவன். அநேகமாக இவரது படைப்புக்கள் ஒவ்வொன்றிலும் நிட்சயம் புதுமை இருக்கும் கூடவே சர்ச்சையும் சேர்ந்து வரும். இருப்பினுப் ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு கதை பேசும். மேலதிகமாக என்னோடு தொடர்புகொள்ள விரும்பின் எனது புளொக்கரிலுள்ள மின்னஞ்சல் முகவரி முலம் தொடர்புகொள்ளவும்.
"வானம்பாடி" கலீஸ்

14.20 18.12.2006

 

said ... (18 December, 2006 20:00) : 

போலி டோண்டு என்ற பேரில் வந்த அன்பரே,
உங்கள் கரிசனைக்கும் எச்சரிக்கைக்கும் நன்றி.

"வானம்பாடி" கலீஸ்,
அண்ணை, இது நானெழுதின விமர்சனமில்லை.
தெளிவாகவே பதிவின்ர தொடக்கத்தில போட்டிருக்கிறன்.
உங்கள் விரிவான தகவல்களுக்கு நன்றி.

 

said ... (18 December, 2006 20:14) : 

பதிவுக்கு நன்றி வசந்தன்

 

said ... (19 December, 2006 01:49) : 

கலீஸ்!

'இவ்வழியால் வாருங்களில்' நீங்கள் நடித்திருந்தீர்களா? அதில் ஒரு பகுதியை மட்டுமே என்னால் பார்க்க முடிந்து. அப்படியானால் உங்களுக்கு ஞானதாஸை தெரிந்தி ருக்கும்தானே?
அவர் இங்கே வந்தபோது ஒரு குறும்பட அறிமுக விழாநடந்தது. அதற்குச்செல்ல முடியவில்லை என்பது என்க்கு வருத்தமே.

 

said ... (19 December, 2006 10:39) : 

This comment has been removed by a blog administrator.

 

said ... (19 December, 2006 16:10) : 

கானாபிரபா,
மலைநாடான்,

வருகைக்கும் பின்னூட்டுக்கும் நன்றி.

 

said ... (21 January, 2007 22:56) : 

எழுதிக்கொள்வது: Arafath

நண்றி வசந்தன்,
சின்கல படம் பார்க்கும் தமிழன் நீர்.

15.7 21.1.2007

 

post a comment

© 2006  Thur Broeders

________________