Sunday, September 14, 2008

கோவணநாட்டின் கொடைவள்ளல்கள்மீதொரு சீட்டுக்கவி

கோவணக் கொடை வள்ளலின் முகமூடி இன்னொருமுறை  கிழிந்திருக்கும் இவ்வேளையில் பொருத்தம் கருதி இக்கவிதை மீள இடப்படுகிறது.

வள்ளல் வாழ்த்து
-------------

வாழ்க நீர் எம்மான்;
கன்னனும் குமணனும் போல்வீர்;
தன்னிலை மறந்தும் அள்ளிக்கொடுத்தீர்
பொன்னையும் பொருளையும்
பிற கோவணத் தும்மவர் செய்கைகட்காய்.

மீதியும் மிதியும்
-------------------

கோவணநாட்டின் கொடைவள்ளல்கள்
கோடித்துணி அள்ளிக்கொடுக்கையில்,
தேசியக்கொடியிலும் தீராத
முடைநாற்ற வீச்சம்.

மேற்குத்திசைக்கொரு வேண்டுதல் விடுக்கும்
மாற்றுக் கோவணம் இல்லான்தெரு வள்ளல்கள்,
அரச ஆவணத்தின் பேரில்
காலொடுங்கு முடுக்கு விடுத்து
கழற்றிக்கொடுத்தார்
தம் கவட்டிடுக்குக் கோவணம்,
வேற்றூர் யாசிப்போனுக்கு,
வெறி மிகுந்து
வீட்டிலிருப்போர்
கழுத்திறுக்கக் கைக்குட்டைகளாய்.

திகம்பரர் தெருவினிலே
அதை மறையா
அம்மணங்கள் அசிங்கமில்லை.
கௌபீனம் தந்தோர் காந்திகள்;
கைவிட்டுப் பெற்றோர் கௌதமபுத்திரர்.

கைப்பிடி துணி கண்டோர் பூமியிலே,
கவட்டுமுடுக்குக்கும் கழுத்துமுடிச்சுக்கும்
இடையில் இருப்பதில்லை,
ஏதும் இடைவெளி;
உள்ளத்தே நொடிந்தார் கழுத்தினிலே
முடித்துக்கொண்டதெல்லாம் பிச்சைக்கௌபீனம்.
உள்ளதில் வலிந்தார் இடையிலே
ஏற்றிக்கொண்டதெல்லாம் எழிற்கைக்குட்டை.

அரைக்கோவணத்தார் தேசத்திலே,
நேர்த்தியற்றதேனும், நெய்த நூற்குட்டை,
கொடுத்தோர் கொடுங்கோலர்;
கொண்டோர் கொலைகாரர்;
குலைந்தோர் கொத்தடிமையர்.

இப்படியாய்,
எல்லாமே வல்லமையாய் உள்ளவர் போல்,
இல்லாதார் நாட்டிலும் உண்டாம், பல்லாயிரம்
கோவணக்கொடுத்தலும் வாங்கலும்;
கூடவே கொழுவி வரும்,
இல்லாமையின் இருப்பின் கருநிழலும்
கையள்ளிச் சொல்லிச் சொரியும்
முள்ளுப்பாத்தி மூச்சு முட்டிக்குத்தும்
இறைமையின் ஏழ்மையும் வறுமையும்.


14/ஜூன்/'00

====================================
படைப்பு என்னுடையதன்று.

Labels: , , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, September 21, 2007

ஒரு குடிகாரன் உருவான கதை

பெரிய குடிகாரனாக என்னைப் புரிந்துகொள்ளும் உங்களிற் பலருக்கு நான் குடிகாரனான கதை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனாலென்ன? கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியளவுக்கு இதுவொன்றும் முக்கியமானதன்று. என் அலட்டல்களை விழுந்துவிழுந்து வாசிக்க நானொன்றும் புரட்சிக்காரனோ கலகக்காரனோ அல்லன். விரல்கள் குறுகுறுத்த விசர்ப் பொழுதொன்றில் எழுதப்பட்ட/தட்டப்பட்ட என் குடிப்புராணத்தைப் படிக்க விரும்புவோர் மேற்கொண்டு படிக்கலாம்.

முதலில ஒண்டைச் சொல்ல வேணும். தொடக்கத்தில, குடி மீது எனக்கு மோகம் இருக்கேல; மாறா குடிகாரர் மேலதான் மோகமிருந்தது, நூற்றுக்குத் தொன்னூற்றொன்பது சதவீதமான குடிகாரரைப்போல.

குடிக்கத் திட்டமிட்ட நாளும் வந்தது. திட்டமிட்டது நானும் என்ர நண்பனொருவனும். எங்களுக்கெல்லாம் கள்ளைவிட்டால் கதியேது?
அரைப்போத்தல் கள்ளைவாங்கி வீட்டில குடிச்சா ஆட்டத்தில் சேர்த்தியில்லை. தவறணையில குடிச்சால் மட்டுமே குடிகாரராக் கணக்கெடுபடும்.
அதால தவறணையில குடிக்கிறதெண்டு முடிவெடுத்தாச்சு.

ஊர்த்தவறணையில குடிக்க வெட்கமா இருந்திச்சு. இது ஒருவிதத்தில் களவாகச் செய்யிற விளையாட்டுத்தான். ஒருநாள் பொழுதுபட அயலூர்த் தவறணைக்குப் போய்க் குடிச்சம். நண்பன் நேர தன்ர வீட்டுக்குப் போயிட்டான். 'சோம்பேறி மடம்' எண்டு செல்லமா அழைக்கப்படுற, இராத்திரியில நண்பர்கள் கூடியிருந்து கடுதாசியோ தாயமோ விளையாடுற இடத்துக்கு நான் போனன். வீட்ட போய் பிரச்சினை கிளப்பிறதைத் தவிர்க்கிறது ஒரு நோக்கமெண்டால், நான் குடிச்சிருக்கிறதை நண்பர்களுக்குக் காட்டிறதும் ஒரு நோக்கம்தான். சைக்கிளோட்டத்தில ஒரு சிக்கலுமில்லை.

அங்கபோனா, என்ர செட் ஆக்களைக் காணேல. ஒருத்தன் மட்டும் நிண்டான். எங்களைவிட மூத்த செட் ஒண்டு நிண்டுது. திரும்புவம் எண்டு வெளிக்கிட்டா மாட்டுப்பட்டுப் போனன்.முன்னூற்றி நாலுக்கு ஒருகை குறைஞ்சதால வலுக்கட்டாயப்படுத்தி என்னையும் இருத்திப்போட்டாங்கள்.

கள்ளடிச்ச வாசம் என்னிலயிருந்த வரப்போகுது... நக்கலடிக்கப்போறாங்கள்... எண்டு யோசிச்சு நெளிஞ்சுகொண்டு நிண்டன். ஆனா அவையளும் ஆளாளுக்கு ஏத்திப்போட்டுத்தான் நிண்டதால என்ர பிரச்சினை கணக்கெடுபடேல.

விளையாட்டில ரெண்டு சுத்துப்போக தலை கிறுகிறுக்கிற மாதிரி ஓருணர்வு. எண்டாலும் விளையாடினன். வந்துசேந்த கலாவரை ஏரை வீறு எண்டு நினைச்சு அடுத்த கன்னையான் கேட்ட இருநூற்றம்பதை மேவிக் கேட்டதும், வலக்கையானின்ர முதலிறக்கமே துரும்பு வீறாய் விழுந்ததைக் கண்டு அதிர்ந்ததும், தோல்வியைச் சமாளிக்க 'அதண்ணை... அடுக்குப் பிழைச்சுப்போட்டுது' எண்டு கதை விட்டதும் கள்ளின் மகத்துவத்தால் நடந்தவை.
இனி உதில இருந்தா சரிவராது எண்டது விளங்கீட்டுது.
'அண்ணை, விடிய ஒரு முக்கிய வேலகிடக்கு, அவசரமாப் போகோணும்' எண்டு சொல்லி நழுவியாச்சு. வீட்ட போறவழியில சைக்கிள் தள்ளாடிச்சு. இடையில ஓரிடத்தில சத்திவேற எடுக்கவேண்டி வந்திட்டுது. தட்டுத்தடுமாறி போய்ச் சேந்து சத்தம்போடாமல் பாயிலபோய் விழுந்திட்டன்.

அடுத்தநாள் மத்தியானம், முந்தினநாள் சோம்பேறிமடத்தில நிண்ட எங்கட செட்காரன் வந்துகேட்டான்.
"என்ன... நேற்று லைட்டா கள்ளடிச்சமாதிரிக் கிடந்துது?"
"ஓ... சும்மா லைட்டா ரெஸ்ட் பண்ணிப் பாத்தது"
"ஆனா வெறிச்சமாதிரித் தெரியேலயே?"
"வெறிச்சது... அதாலதான் விளையாட்ட இடையிலவிட்டிட்டு ஓடியந்திட்டன். வாறவழியில றோட்டில சத்தியும் எடுத்தனான்."
"உதை ஆர் வெறியெண்டு சொன்னது?"
"அப்ப எதை வெறியெண்டுறது?"
"வெறியெண்டா குளறிக் கதைக்க வேணும்... ஒருமாதிரி இழுத்திழுத்துக் கதைக்க வேணும்... தள்ளாடி நடக்க வேணும்... நாலுபேரைத் தூசணத்தால பேசவேணும்... நீ வெறிகாரர் ஒருத்தரையும் பாக்கேலயோ?.."
"பாத்திருக்கிறன்... ஆனா உப்பிடி ஒரு குணமும் எனக்கு வரேலயே?"
"அது வராது... நாங்கள்தான் வரவைக்க வேணும். போகப்போகச் சரியாயிடும்"

இதென்ன கோதாரி? அடிச்சது காணாதுபோல... அடுத்தமுறை இன்னொரு போத்தல் அதிகமா அடிக்க வேணும் எண்டு அப்பாவியா நினைச்சுக்கொண்டன்.

ரெண்டுநாளைக்குப் பிறகு தவறணையால நேரா நண்பர்கள் நிண்ட மைதானத்துக்கு வந்திட்டன். வாயிலயிருந்து நல்லா வாசம் வந்துகொண்டிருந்திச்சு. ஆனால் ஒருத்தன்கூட என்னை ஒரு பொருட்டா மதிக்கேல. குடிச்சனியோடா எண்டு ஒருவார்த்தைகூட கேக்கேல. அவனவன் தன்ர பாட்டுக்குக் கதைச்சுக்கொண்டு நிண்டாங்கள். எனக்குச் சரியான அவமானமாப்போட்டுது. நான் குடிச்சதின்ர நோக்கமே அடிபட்டுப் போச்சு. நான் குடிகாரனாயிட்டன் எண்டதை ஒருநாய்கூடக் கவனிக்கேல.
நண்பன் சொன்னதுகள் ஞாபகத்துக்கு வந்திச்சு. ஒண்டு விளங்கீச்சு.
குடிக்கிறதால ஒருவன் குடிகாரனாகவோ வெறிகாரனாகவோ ஆகமுடியாது.. குடிகாரனாகவும் வெறிகாரனாகவும் காட்டிக்கொள்ள வேணும்.
அதால இனி நானும் அப்பிடிக் காட்டிக்கொள்ளிறதெண்டு முடிவெடுத்தன்.

அடுத்தநாளே குடிச்சுப்போட்டு அதே மைதானத்துக்குப் போனன்; வெறியில தள்ளாடுறமாதிரி சைக்கிளை ஓட்டினன்; சைக்கிளைக் கொண்டுபோய் ஒருத்தனுக்கு இடிச்சன்; எல்லாரையும் ஒருமாதிரிப் பாத்தன்; இடிவாங்கினவனை தூசணத்தால பேசினன்; எல்லாரும் என்னைப்பாத்துத் திகைச்சது வடிவாத் தெரிஞ்சுது. சரி, நாடகம் சரிவந்திட்டுது எண்டது விளங்கீட்டுது. அங்கால நிண்டுகொண்டிருந்த ஒருத்தனோட கொழுவி கண்டபாட்டுக்குத் தூசணத்தால பேசப்பேசினன். சரியோ பிழையோ பிறத்தியான் ஒருத்தன் தங்கட தோழரில கைவைக்க எங்கட செட்காரங்கள் பாத்துக்கொண்டிருக்க மாட்டாங்கள். அந்தத் துணிவிலதான் இந்தளவு விளையாட்டும் விளையாடினன். நினைச்சமாதிரியே அவன் அடிக்கவந்தான், மற்றவங்கள் வந்து பிடிச்சாங்கள்.
"டேய் அவனக்கு வெறி... ஆளை முதல் அங்கால கொண்டுபோ" எண்டு சொல்லி என்னை ரெண்டுபேர் பிடிக்க, அவங்களையும் பேசிக்கொண்டு வெறிகாரன் மாதிரியே இழுபட்டுக்கொண்டு போனன்.

நான் நினைச்சபடி நடந்திட்டுது. அதையே தொடர்ந்தும் செய்யத் தொடங்கினன். நண்பர்களிடத்தில நான் குடிகாரன் எண்ட 'மரியாதை' வந்திட்டுது. இதைச் சாட்டா வைச்சே தனிப்பட்ட கோபம் இருந்தவனையெல்லாம் ஆசைதீர தூசணத்தால திட்டித் தீர்த்தன். ஆனா நான் உண்மையில நிலைமறந்து வெறியிலதான் இப்பிடி நடக்கிறன் எண்டு எல்லாரும் நம்பிக்கொண்டிருந்தாங்கள்.

எவ்வளவுகாலத்துக்கு இதை நம்புவாங்கள்? அவங்கள் குடிக்கத் தொடங்கும்வரைக்கும்தான். அதுக்குப்பிறகு, பாம்பின் கால் பாம்பறியும் எண்டமாதிரி உந்த வெறி பற்றின மாயைகள் கலைஞ்சு போகும். நான் குடிக்க வெளிக்கிட்டபிறகுதான் வெறிக்குட்டிகளின்ர பல திருகுதாளங்களை விளங்கிக்கொண்டன்.

குடிச்சு வெறிவந்தவன் என்ன செய்வான்? பேசாமல் மூலையிலபோய் படுத்திடுவான். அல்லது சத்தியெடுத்துக் களைச்சுப்போவான். கண்டபடி தூசணத்தால பேசிக்கொண்டிருக்கிறவையள் வெறியில தன்னிலைமறந்து சொல்லிறதாத்தான் சனம் நினைச்சுக்கொண்டிருக்கு. ஆனா எந்தவொரு குடிகாரனும் உதை நம்பமாட்டான். ஏனெண்டா அவனுக்குத் தெரியும் உண்மை என்னவெண்டு. அதேபோல எந்தவொரு குடிகாரனும் உது வெறும் நடிப்பெண்டு சொல்லவும் மாட்டான். ஏனெண்டா அவனும் தொடர்ந்து நடிக்க வேணும். ஒருத்தனையொருத்தன் காட்டிக்குடுக்காமல் ஓர் எழுதப்படாத ஒப்பந்தப்படி தோழமையாக இருக்கினம் குடிகாரர்.

நானும் குடிகாரரின்ர உந்த விளையாட்டெல்லாம் நிறையச் செய்தன். என்னோட இருந்த குடிக்கத் தெரியாதவங்கள் அப்பாவியா நம்பிக்கொண்டிருந்தாங்கள்.

சரி, அதை விடுவம். நான் ஏன் குடிக்கத் தொடங்கினன் எண்டு உங்களுக்குச் சொல்லேலயெல்லோ?

எல்லாருக்கும் குடிக்கத் தொடங்கிறதுக்கு காரணங்கள் இருக்கு. நண்பர்களிடத்திலயும் சமூகத்திலயும் ஓர் அதிர்வை ஏற்படுத்திறது, பயத்தை உருவாக்கிறது எண்டு சிலது இருக்கு. குடிச்சா பெரியாளாகக் காட்டிக்கொள்ளலாம் எண்டதும் இருக்கு. புகைபிடிக்கிறதுக்கு உது முக்கியமான ஒரு காரணம். சிகரெட் பத்தினால் தாங்கள் பெரிய கொம்பனுகள் எண்டு சிலருக்கு நினைப்பிருக்கு. பெட்டையள் விரும்புவாளவை எண்டுகூட பிடிக்கத் தொடங்கினவை சிலர் இருக்கினம்.

உதெல்லாத்தையும்விட நான் குடிக்கத் தொடங்கினதுக்கு ஒரு காரணம் இருக்கு. புரட்சிக்காரனாகவும் கலகக்காரனாகவும் உருவாவது அல்லது காட்டிக்கொள்வதுதான் அது.

இளம்வயசில திடீரெண்டு உந்த ஆசை வந்திட்டுது. புரட்சிக்காரனாக, கலகக்காரனாக, தீவிர சிந்தனையாளனாகக் காட்டிக்கொள்ளிற ஆசை வந்திட்டுது. வட்டத் தொப்பியொண்டை சரிச்சுப் போட்டுக்கொண்டு விசரன் மாதிரி றோட்டுவழிய திரிஞ்சிருக்கிறன். சேட்டின்ர மேல் ரெண்டு பட்டினையும் திறந்துவிட்டிட்டு, நெஞ்சில முளைக்காத மயிரைச் சபிச்சுக்கொண்டும் திரிஞ்சிருக்கிறன். எந்தநேரமும் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில இருக்கிற மாதிரி நடிச்சுக்கொண்டு திரிஞ்சிருக்கிறன். உந்த விசயத்துக்கு பெட்டையளிட்ட நல்ல வரவேற்புக் கிடைச்சது. ஒருத்தரும் வாசிக்காத, இலகுவில விளங்கமுடியாதபடி எழுதப்பட்டிருக்கும் ஏதாவது புத்தகத்தை (குறிப்பா ரஸ்யனிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த சில புத்தகங்கள்) எந்தநேரமும் கொண்டு திரியிறது, இடைக்கிடை அதை வாசிக்கிறமாதிரி நடிக்கிறது எண்டெல்லாம் உந்த விளையாட்டுக்கள் தொடந்தது.

உதையேன் கேக்கிறியள்?
ஒருக்கா உப்பிடித்தான், ரியூசன் முடிஞ்சபிறகு மேசைப்பலகையில இருந்து றோட்டுக்கு எதிர்ப்பக்கம் பாத்தபடி யோசிச்சுக்கொண்டிருந்தன். ரியூட்டறியில படிப்பிக்கிற வாத்தியொண்டுக்குக் கலியாண வாழ்த்து அச்சடிக்கிறதுக்கு டிசைன் பற்றி என்னட்ட ஆலோசனை கேக்கவெண்டு (உதெல்லாம் உந்த கலகக்கார, புரட்சிக்கார, போராளி இன்னபிற கோதாரி நடிப்பின்ர உபயம்தான்) வந்த ரெண்டு பெட்டையள் கொஞ்சம் எட்டநிண்டு குசுகுசுத்தினம்.
"என்னடி ஆள் ஏதோ தீவிரமா யோசிச்சுக்கொண்டிருக்கு?"
"இந்த நேரத்தில குழப்பக்கூடாது... வா போயிட்டு நாளைக்குக் காலம கேப்பம்"

ஆனா, எதிர்வளவுக்க இருக்கிற பிலாக்காய எப்பிடிக் கடத்திறதெண்டுதான் நான் யோசிச்சுக்கொண்டிருந்தன் எண்டது அதுகளுக்கு எங்க விளங்கப்போகுது?

இப்பிடியாக நான் நடத்திய சில கூத்துக்களுக்குப்பிறகு, முழுமையான கலகக்காரனாக, புரட்சிக்காரனாக உருவாகிறதுக்கு மிஞ்சியிருந்த ரெண்டு விசயங்களில ஒண்டான குடிக்கிறதைத் தொடங்கினன். இதுதான் நான் குடிகாரனானதுக்கான காரணம்.

புரட்சிக்காரன், கலகக்காரன் எண்டா நல்லாக் குடிக்க வேணும். அரவயசில செத்துப்போக வேணும். சாகிறதும் ஏதோ கொண்ட கொள்கை, லட்சியத்துக்காக சாகிறதெண்டுமில்லை. குடிச்சுக் குடிச்சே தானும் மெல்ல மெல்லச் செத்து சுத்தியிருக்கிறவையையும் சாகடிச்சுச் சாகவேணும்.

நான் புரட்சியாளனாவதற்கு குடிகாரனாகவேண்டியிருந்தது.

"ஒரு புரடசியாளன் உருவான கதை" எண்டு இன்னோர் இடுகை எழுதக்கூடும்.
உண்மையில "புரட்சியாளனொருவன் உருவான கதை" எண்டுதான் தலைப்பு வரவேணும்.
இவ்விடுகைக்குக்கூட "குடிகாரனொருவன் உருவான கதை" எண்டுதான் தலைப்பு வச்சிருக்க வேணும்.

அதனால் என்ன? பிழையாக எழுதுவதுகூட புரட்சி என்றாகிவிட்ட இன்றைய நிலையில் புரட்சியாளனாகிய நான் பிழையாகத்தானே எழுதவேணும்?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
லேபிள்ஸ்: கொழுவி குடிகாரன்
கலகக்காரன் புரட்சிக்காரன்
கள்ளு தூசணம் நடிப்பு கோதாரி

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, February 23, 2007

பின்னவீனத்துவம்: அறிவியல்பூர்வக் கலந்துரையாடல் - ஒலிப்பதிவு

தற்போது வலைப்பதிவுலகில் காரசாரமாக பின்னவீனத்துவம் பற்றிய கட்டுடைப்புக்கள், விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன.
இதன் அடுத்தகட்ட வடிவமாக ஒரு கலந்துரையாடலை ஒழுங்குபண்ணி இங்கு ஒலிப்பதிவாகத் தருகிறோம்.

இக்கலந்துரையாடல் ஆகலும் அடிப்படையாக இல்லாமலிருப்பதால் ஏற்கனவே கொஞ்சமாவது இதுபற்றி அறிவிருப்பவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.
எதற்கும் இப்பதிவைக் கேட்க முன்னர் கீழ்க்கண்ட இணைப்புக்களில் இருக்கும் கட்டுரைகளை வாசித்திருந்தால் நன்று.

அப்படி வாசிக்காத பட்சத்தில், வாசிக்க விருப்பமில்லாத பட்சத்தில் பேசாமல் போய்விடாதீர்கள். ஒலிப்பதிவைக் கேளுங்கள்.
ஆனால் அதன்பின் கட்டுரைகளை நீங்கள் வாசிக்கப்போவதில்லையென்பதே நீங்கள் செலுத்தப்போகும் விலை.

பின் நவீனத்துவம் என்னும் பேக்காட்டல். -அற்புதன்
பின்நவீனத்துவம் ➽ சில குறிப்புகள் -பாலபாரதி
ஒரு நேர்காணல்: சில பின் நவீனத்துவப் புரிதல்கள் -டி.சே
பின்நவீனத்துவம் - ஓர் அறிமுகம் -பெயரற்ற யாத்ரீகன்
என்னுடைய பின்-நவீனத்துவ புரிதல்கள் -டி.சே


கலந்துரையாடலில் பங்கேற்போர்:

ஆய்வாளர் கும்பரோ பூஜே,
சுசிந்தன்















postmodernsm.mp3


அவசரமாக ஒலிப்பதிய வேண்டி வந்ததால் கலந்துகொண்டவர்கள் சரியான ஆயத்தங்களின்றி பங்குபற்ற வேண்டி வந்துவிட்டது. இன்றுவிட்டால் பின் சனி ஞாயிறு என்பதால் அவசரமாக இன்றே அனைத்து வேலைகளையும் முடிக்கவேண்டி வந்தது. இதில் வரும் தொழிநுட்ப வழுக்களுக்கு முன்கூட்டியே மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்.

இதைக் கேட்டு நீங்கள் சொல்லும் கருத்துத்தான் தொடர்ந்து இடம்பெறப்போகும் இவ்வாறான கலந்துரையாடல்களுக்கு ஊக்கமாக அமையுமென்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, February 05, 2007

எஸ்.பொன்னுத்துரை கதைக்கிறார்...

அண்மையில் மெல்பேணில் நடந்த எழுத்தாளர் விழாவில் எஸ்.பொ. அவர்கள் கதைத்தவற்றின் முதற்பகுதியை ஒலிப்பதிவாக இங்கு இணைக்கிறேன்.

அன்றைய விழாவில் தமிழ்ச் சிறுகதைகள் பற்றி கருத்தரங்கில் எஸ்.பொ. அரைமணித்தியாலம் கதைத்தவற்றையே மூன்று பாகங்களாக இங்கு இணைத்துள்ளேன். mp3, rm ஆகிய வடிவங்களில் ஒவ்வொரு கோப்பும் இணைக்கப்பட்டுள்ளன. தேவையான ஒலிப்பதிவைக் கேட்கலாம்.



யாருக்காவது ஒலிக்கோப்பைத் தரவிறக்க வேண்டுமானால் கேட்கவும், இணைப்பைத் தருகிறேன்.

ஈழத்துச் சிறுகதைகள் பற்றிய வரலாற்றுக்குறிப்புகள் சிலவற்றைச் சொல்கிறார். கிழக்கு மாகாண எழுத்தாளர்கள் பற்றிச் சொல்வதில் சில பெயர்கள் தெளிவில்லை. தகவல் தெரிந்தவர்கள் பின்னூட்டமாக இடலாம்.

எஸ்.பொ. அவர்களின் அன்றைய முத்துக்கள் சில:

**ஆறுமுகநாவலரை விடவும் தமிழுக்கு அதிகம் சேவை செய்தது விபுலானந்தர் தான்.

**வடக்கோடு ஒப்பிடும்போது கிழக்கு மாகாணத்தில் கதை இலக்கியம் தேக்கமடைந்துள்ளது.
கிழக்கில் போய் உங்கள் ஆதர்ச எழுத்தாளர் யாரென்று கேட்டால் நா.பார்த்தசாரதி, சாண்டில்யன், கல்கி என்றுதான் பதில்வரும். இவர்களை ஆதர்சமாக வைத்துக்கொண்டிருந்தால் எப்படி உருப்படியான படைப்பை உருவாக்குவது?
(குறிப்பிட்ட எழுத்தாளர்கள் மேலான மயக்கம் யாழ்ப்பாணத்தாரை விடவும் கிழக்கில் அதிகமா???)

**யாழ்ப்பாண மண்வாசனையைச் சரியாக கதைகளில் கொண்டுவந்த முன்னோடி இலங்கையர்கோன்.
(இவரின் வெள்ளிப் பாதரசம் கதையைச் சிலாகித்தார்)

**எட்டாண்டுகளாக நைஜீரியாவில் எழுத்துலக அஞ்ஞாதவாசம் இருந்த தன்னை மீண்டும் எழுத வைத்தது லெ.முருகபூபதி தான்.

**சிறுகதை இலக்கியம் மீள உயிர்ப்புடன் எழுவது புலம்பெயர்ந்தவரால்தான்.

இன்னும் பல சுவாரசியமான தகவல்களுக்கு ஒலிப்பதிவை முழுமையாகக் கேளுங்கள்.
தரமற்ற ஒலிப்பதிவுக்கு மன்னிக்க.

எஸ்.பொ. பேச்சு - பகுதி ஒன்று










எஸ்.பொ. பேச்சு - பகுதி இரண்டு








S.PO.Speech2.mp3





எஸ்.பொ. பேச்சு - பகுதி மூன்று








S.PO.Speech3.mp3




________________________________________________

அன்றைய விழாவில், கருத்தரங்கு முடிந்ததும் கேள்வி - பதில் நேரத்தில் எஸ்.பொ. அவர்கள் கதைத்தவை, பின்னர் விமர்சன அரங்கு முடிந்ததும் அவர் நிகழ்த்திய பதிலுரை, இறுதியில் பவளவிழாப் பாராட்டு நிகழ்வு முடிந்ததும் அவர் நிகழ்த்திய ஏற்புரை என்பவற்றை அடுத்த பதிவில் ஒலிப்பதிவாக இணைக்கிறேன்.

இவற்றில்,
நவீனத்துவம், பின்னவீனத்துவம் போன்ற சொல்லாடல்கள் வாசகனை பேப்பட்டம் கட்ட எழுத்தாளராலும் விமர்சகர்களாலும் பயன்படுத்தபடும் ஓர் உத்தியேயன்றி வேறில்லை என்ற கருத்தைச் சொன்னதோடு இடையில் எழுத்தாளர் சாருவையும் இழுத்தது;
சாகித்திய மண்டலப் பரிசு தனக்கு இதுவரை கிடைக்காததை வருத்தமாகவோ நையாண்டியாகவோ வெளிப்படுத்தியது;

போன்றவை வருகின்றன.

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, January 30, 2007

மெல்பேர்ண் எழுத்தாளர் விழா 2007 - தொகுப்பு

ஆண்டுக்கொருமுறை அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடாத்தும் எழுத்தாளர்விழா இம்முறை மெல்பேணில் நடைபெற்றது.
கடந்த சனிக்கிழமை - 27.01.2007 அன்று காலை பத்துமணியளவில் இவ்விழா தொடங்கியது. இவ்விழாவில் ஈழத்தின் மூத்த படைப்பாளிகள் மூவர் சிறப்பிக்கப்பட்டனர். நாட்டுக்கூத்தொன்றும் இடம்பெற்றது.
எஸ்.பொ, முருகபூபதி, கலைவளன் சிசு. நாகேந்திரன், காவலூர் ராசதுரை, 'சின்னமாமியே' நித்தி கனகரத்தினம், அருண் விஜயராணி, இளைய பத்மநாதன் என்று ஓரளவு பிரபலமானவர்கள் கலந்து கொண்ட விழா இது.

திரு.லெ.முருகபூபதி அவர்களின் தலைமையில் தொடங்கிய இவ்விழாவில் முதலாவதாக கருத்தமர்வு ஒன்று இடம்பெற்றது.
இதில், பவள விழாக்காணும் எழுத்தாளர் எஸ.பொ 'தமிழில் சிறுகதை - தோற்றம் - வளர்ச்சி - மாற்றம்' என்ற தலைப்பில் உரையாற்றினார். உரையின் முடிவில் கேள்விகளுக்கான நேரம் ஒதுக்கப்பட்டது. என்வரையில் அவ்வெழுத்தாளர் விழாவின் முக்கிய அங்கமாக இவ்வுரை இருந்தது. எஸ.பொ மொத்தமாக நான்குமுறை ஒலிவாங்கியடியில் வந்தார். ஒலிப்பதிவையும் இணைக்க நினைப்பதால் அவைபற்றித் தனியப்பதிவு போடலாமென்று நினைக்கிறேன். ஒரிடத்தில், தனக்கேயுரிய பாணியில் "சிறுகதை இலக்கியம் மீளவும் உயிர் பெறுவது புலம்பெயர்ந்தோரிடமிருந்து தான்" என்று சொல்லிவைத்தார்.

அதே கருத்தரங்கில் திருமதி பாமினி பிரதீப், கலாநிதி சந்திரலேகா வாமதேவா (வலைப்பதிந்து வந்த சந்திரலேகா இவரா?) ஆகியோர் 'எழுத்தாளர் விழாக்களில் சமூகப்பங்களிப்பு' என்ற தலைப்பில் கருத்தாடினர். நான்கைந்து வருடங்களின் முன்பு நடந்த விழாவில் அரங்கு நிறைந்த மக்கள் வந்ததாகவும் இப்போது மிகமிகக் குறைந்துவி்ட்டதையும் மையப்படுத்தியே விவாதம் இருந்தது. (அன்றைய காலை அமர்வில் வந்தவர்கள் அனைவரையும் சேர்த்து மொத்தம் அறுபது பேர் மட்டுமே. விழாவுடன் தொடர்பில்லாத எம்மைப்போல் வெளியாட்கள் ஒரு பதினைந்து பேர்தான் வரும்.)

'தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளில் சிறுவர் நாடகம்' என்ற தலைப்பில் திரு. அ.சந்திரகாசன் மாவை நித்தியானந்தன் அவர்கள் உரையாற்றினார்.

பின் 'சின்ன மாமியே புகழ்' நித்தி கனகரத்தினம் 'தமிழர் உணவு நாகரிகம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மரக்கறி, கீரை, கிழங்கு வகைகளுக்கு உலகப்பயன்பாட்டுக்கென தமிழின் வேரிலிருந்தே சொற்கள் பெறப்பட்டன என்பதே அவரின் உரையுடைய அடிப்படை. வல்லாரை, பொன்னாங்காணி, கத்திரி, பசளி, நாரத்தங்காய், இஞ்சி என்பவற்றுக்கான வேற்றுமொழிப் பெயர்கள் எப்படி தமிழில் இருந்து போயின என்ற தொனியில் கதைத்துக்கொண்டிருந்தார். இந்த வரலாறுகளை மூடிமறைத்துக்கொண்டிருக்கும் தாவரவியல் ஆய்வாளரை அடிக்கடி கண்டித்துக்கொண்டும், தான் எப்படி யார் யாருடன் இது தொடர்பாக சண்டைபிடித்தேன் என்பதையும் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார். இன்னும் நீளமான பெயர்ப்பட்டியலொன்றை வைத்திருந்தார், ஆனால் மத்தியானச் சாப்பாட்டு நேரமென்பதால் அவரை விரைவில் முடிக்கச்சொல்லி விட்டார்கள்.
அன்றைய விழாவில் அவுஸ்திரேலியக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பொன்று 'வானவில்' என்ற பேரில் வெளியானது. அதில் நித்தி கனகரத்தினம் அவர்களின் கவிதையொன்றும் இருந்ததைப் பார்த்தேன். 'அம்மாவின் பழஞ்சோற்றுக் குழையலும் பூவரசங்குழையும்' என்ற தலைப்பில் அது இருந்தது. கவிதை தொடங்குகிறது இப்படி:
கீரை கிழங்கு மரவள்ளி கத்திரிக்காய் பால்கறியும் பொரித்த முருங்கைக்காய் ..................................

[நித்தி கனகரத்தினம் பேசுகிறார். பின்னாலிருப்பவர் மருத்துவக் கலாநிதி வேலுப்பிள்ளை கருணாகரன் என்று நினைக்கிறேன்.]

பின் மதிய உணவு. விழா ஏற்பாட்டாளரால் அனைவருக்கும் இலவச மதிய உணவு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. பாயாசமும் இருந்தது.

அடுத்ததாக கவிதைச் சமர் இடம்பெற்றது.
'ஆணாதிக்கமா? அதற்காய் பெண்ணாதிக்கமா??
பெண்ணடிமைத்தனமா? அதனால் ஆணாதிக்கமா??'
என்ற தலைப்பில் மனோ ஜெகேந்திரன், செளந்தரி சிவானந்தன் என்ற பெண்களிருவர் மாறிமாறி கவிதை வாசித்தனர்.

பின்னர் நூல் விமர்சன அரங்கு இடம்பெற்றது.
தலைமை: திருமதி ஜெயந்தி விநோதன்

1.துவிதம் (கவிதை) - ஆழியாள்
விமர்சனம்: திரு. குலம் சண்முகம்
2.ஈடு (நாடகம்) - எஸ்.பொ, அ.சந்திரகாசன்
விமர்சனம்: திரு.எஸ.சூசைராஜா
3. நினைவுக் கோலங்கள் (சிறுகதை) - லெ.முருகபூபதி
விமர்சனம்: செல்வி.ஜெயசக்தி பத்மநாதன்
4.கொஞ்சும் தமிழ் (சிறுவர் இலக்கியம்) -அம்பி
விமர்சனம்: திரு.எட்வர்ட் பிலிப் மரியதாசன்
5.பனிக்குள் நெருப்பு (விமர்சனம்) - எஸ்.பொ
விமர்சனம்: திரு.செ.சிவசம்பு
6.அம்மா என்றொரு சொந்தம் (சிறுகதை) - உஷா ஜவகர்
விமர்சனம்: திரு.கே.எஸ்.சுதாகரன்
7.சிறைப்பட்டிருத்தல் (போட்டிக் கதைத்தொகுப்பு)
விமர்சனம்: ஆவூரான்
8.மொழிபெயர்க்கப்பட்ட மெளனம் (நேர்காணல்) - லதா
விமர்சனம்: திருமதி உதயா சிங்கராசா
9.ஞானம் (சஞ்சிகை)
விமர்சனம்: திரு.எஸ். கிருஷ்ணமூர்த்தி.

விமர்சனங்களுக்கான பதிலுரையை எஸ்.பொ வும் முருகபூபதியும் நிகழ்த்தினர். 'கொஞ்சும் தமிழ்' என்ற சிறுவர் இலக்கிய நூலை எழுதிய கவிஞர் அம்பி அவர்கள் இறுதிநேரத்தில் சுகவீனமுற்றதால் விழாவில் கலந்துகொள்வில்லை. எனவே அந்நூல் உருவாக்கத்தில் கூடநின்று பணியாற்றியவர் என்ற முறையில் எஸ.பொ.வே பதிலுரைத்தார். ஆறுஇலட்சம் இந்திய ரூபாய்கள் செலவழித்து இப்புத்தகம் அச்சிடப்பட்டதாகச் சொன்னார். உண்மையில் மிகமிகத் தரமான வடிவத்தில் புத்தகம் வந்துள்ளது. கண்ணைக்கவரும் நிறப்படங்களும், ஓவியங்களும் உள்ளன.

இத்துடன் பகல் விழா நிறைவு பெற்றது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இரவு நிகழ்ச்சிகள் மாலை ஏழு மணிக்குத் தொடங்கின.

முதலில் ஒரு கவியரங்கம். பாடும்மீன் சு.சிறிகந்தராசா தலைமையில் சில கவிஞர்கள் கவிமழை பொழிந்தனர் (கவியரங்கத் தாக்கம்;-)).
'தங்கத் தாத்தா' சோமசுந்தரப் புலவரின் பேரனார் சோ.இளமுருகனார் பாரதி அவர்களும் இதிற் கலந்துகொண்டார்.

அதைத்தொடர்ந்து அன்றை விழாவின் முக்கிய பகுதியான படைப்பாளிகளுக்கான பாராட்டு நிகழ்வு தொடங்கியது. விருதுபெறும் மூவரில் எஸ.பொ, காவலூர் இராசதுரை ஆகியோர் 75 ஆவது வயதில் பவள விழா காணுகின்றனர். மற்றவரான சிசு.நாகேந்திரன் ('அந்தக் காலத்து யாழ்ப்பாணம்' எழுதியவர். இந்நூல் பற்றி சந்திரவதனா ஒரு பதிவு எழுதியிருந்தார்). 85 வயதை நிறைவு செய்கிறார். எனக்கென்றால் மூவரிலும் சிசு.நாகேந்திரன் அவர்கள்தான் துடிப்பாகத் தெரிந்தார்.



[எஸ்.பொவுக்குச் சான்றிதழ் கொடுப்பவர் சந்திரலேகா வாமதேவா.
பின்னால் இருப்பவர்கள் இடமிருந்து வலமாக:
கலைவளன் சிசு.நாகேந்திரன், சட்டத்தரணி ரவீந்திரன், ஓவியர் ஞானம்.]

விருது பெறும் மூவரில் இருவர் மட்டுமே மேடையில் இருந்தனர். அன்று காலையில் ஓடியாடித் திரிந்த காவலூர் இராசதுரையை மேடையில் காணவில்லை. இடையில் முருகபூபதி அறிவித்தார், சற்றுமுன்னர்தான் திடீரென்று உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று.

மற்ற இருவருக்கும் விருதும் சான்றிதழும் வழங்கப்பட்டன. அவர்களின் கலைச்சேவைகளைக் குறிப்பிட்டு தனித்தனி மடல்கள் வாசிக்கப்பட்டன.
(இம்மூவரைப்பற்றியும் விழாக்குழுவினர் வெளியிட்ட சேவைக் குறிப்புக்களை நேரம் கிடைத்தால் தட்டச்சி வெளியிடுகிறேன். இளைய தலைமுறையினர் பலர் இவர்கள் பற்றி அறிய உதவும்.)


அடுத்ததாக, வானவில் கவிதைத் தொகுதி வெளியிடப்பட்டது. 31 கவிஞர்களின் கவிதைகள் வெளியிடப்பட்டன. இவர்களின் இருவர் அமரராகி விட்டனர். முன்பு எங்களோடு வலைப்பதிந்த தெய்வீகனின் கவிதையொன்றும் இடம்பெற்றுள்ளது.

இறுதி நிகழ்வாக அண்ணாவியார் இளைய பத்மநாதனின் நெறியாள்கையில் சிட்னி கலைஞர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 'யாழ்பாடி' நாட்டுக்கூத்து இடம்பெற்றது.


['யாழ்பாடி' நாட்டுக்கூத்தின் இறுதியில் மங்களம் பாடும் நேரம்.
நடுவில் தாடியுடன் யாழ்பாடி பாத்திர நடிகனாக நிற்பவர்தான் அண்ணாவியார் இளையபத்மநாதன்.]

பின்னர் அருண் விஜயராணி அவர்களின் நன்றியுரையோடு விழா நிறைவுற்றது.

காலை அமர்வைவிட இரவு அமர்வுக்கு அதிகம் பேர் வந்திருந்தனர். வேலை காரணமா? அல்லது கூத்துப்பார்த்தலா?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விழாப்படங்கள் சிலவற்றை எனது வசந்தம் வலைப்பதிவில் இடுகிறேன்.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, January 29, 2007

ஈழத்து முதற் புதுக்கவிதை

தை -2007 'ஞானம்' சஞ்சிகை அண்மையில் மறைந்த ஈழத்து எழுத்து முன்னோடி வரதரின் நினைவுச் சிறப்பிதழாக வந்துள்ளது. அதில் ஈழத்து முதற் புதுக்கவிதை என்ற தகவலோடு வரதரின் கவிதை வெளிவந்துள்ளது. 1943 இல் வரதர் எழுதி ஈழகேசரியில் வெளியான இக்கவிதை தான் ஈழத்தின் முதலாவது புதுக்கவிதையாகும் என்ற குறிப்பு காணப்படுகிறது. மாற்றுப்பார்வையேதுமிருந்தால் அறிய ஆவல். இனி கவிதை.

ஓர் இரவிலே

இருள்! இருள்! இருள்!
இரவினிலே, நடு ஜாமத்திலே,
என்கால்கள் தொடும் பூமிதொடங்கி,
கண்பார்வைக் கெட்டாத மேகமண்டலம் வரை
இருள் இருள்!

பார்த்தேன்.
பேச்சுமூச்சற்று
பிணம்போல் கிடந்தது பூமி
இது பூமிதானா?
மனித சந்தடியே யற்ற,
பயங்கரமான பேய்களின் புதிய உலகமோ?
'ஓவ் ஓவ்' என்றிரைவது
பேயா? காற்றா? பேய்க்காற்றா?

ஹா!

மனிதன் சக்தியற்றுக் கிடக்கும் இந்த வேளையில்,
அவனுடைய சி்ன்னமே அற்றுப் போகும்படி
பூமியை ஹதம் செய்யவோ வந்தது இப்பேய்க்காற்று!
ஹா, ஹா, ஹா!

'பளிச்! பளிச்!'
அதன் ஒளியிலே இன்பம் வளைவிலே இன்பம்.
ஓ!
ஒளியிலே பயங்கரம்! வளைவிலே பயங்கரம்!
மேகத்தின் கோபம்.
அவன் கண்கள்.... கண்கள் ஏது?
உடம்பிலிருந்து பீறிட்டுக் கிளம்பும் கோபாக்கினி!
விளக்கில் விழுகின்ற விட்டிலைப்போல,
மின்னலின் அழகிலே கண் கெட்டுப்போகாதே!
பத்திரம்!
கண்ணை மூடிக்கொள்.
'பளிச்! பளிச்! பளிச்!'

'பட், பட்... படாஹ்........ பட், படப்....
ஓ!...... ஹோ!...'
முழக்கம்!
இடி!
பேய்க்காற்றின் ஹூங்காரத்தோடு
வேதாள முழக்கம்! முழக்கம்!
காது வெடித்துவிடும்!
உன் ஹிருதயத் துடிப்பு நின்றுவிடும்!
காதைப்பொத்திக்கொள், வானம் வெடித்து விடுகிறது!
"டபார்!"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மேற்படிக்கவிதையில் ஜாமம், ஹதம், ஹூங்காரம், ஹிருதயம் போன்ற சொற்கள் வருகின்றன.
அறுபது வருடங்களின்முன் எங்களிடமிருந்த சொற்பயன்பாடு எப்படியிருந்ததென்று புலப்படுகிறது. அண்மையில் மீள் வெளியீடு செய்யப்பட்ட, நூற்றாண்டுக்கு முன் தொகுத்து வெளியிடப்பட்ட 'யாழ்ப்பாண அகராதி' யில் அதன் மூலத்தொகுப்பாளர் உரை படித்தேன். நூறாண்டுகளுக்கு முன் எங்கள் எழுத்துத்தமிழ் இப்படியா இருந்தது என்றுதான் தோன்றியது.
ஒப்பீட்டளவில் இப்போது நன்கு தேறிவிட்டோமென்றுதான் படுகிறது.
இதற்காகப் போராடியோருக்கு நன்றி.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்த 'ஞானம்' இதழில் வரதரின் இறுதி நேர்காணல் இடம்பெற்றுள்ளது. அவரின் 'கற்பு' சிறுகதை மீள வெளியிடப்பட்டுள்ளது.
கவிஞர் வில்வரத்தினம் தொடர்பான நினைவுக்குறிப்புகள் சில இருவரால் எழுதப்பட்டுள்ளன.

"கலை இலக்கியவாதிகள் சிலரும் உதைபந்தாட்டமும்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இருக்கிறது. இதில் யாழ்ப்பாணத்தின் உதைபந்தாட்ட வரலாறின் ஒருபகுதி, முக்கியமாக வடமராட்சியில் உதைபந்தாட்ட நினைவுக்குறிப்புக்கள் பதியப்பட்டுள்ளன. இக்கட்டுரையை எழுதிய வதிரி.சி.ரவீந்திரன், தான் பார்த்த, அறிந்த தகவல்களோடு ஒரு விளையாட்டு வீரனாக தனது அனுபவங்களையும் பதிந்துள்ளார். இன்னும் இக்கட்டுரை படித்துமுடிக்கவில்லை. காலம் பெரும்பாலும் எழுபதுகள் என்பதால் எமக்கு இவை புதுத்தகவல்களாகவே இருக்கும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முந்தநாள் (27.01.2007) மெல்பேணில் எழுத்தாளர் விழா நடந்தது. ஈழத்தின் மூத்தவர்கள் மூவர் சிறப்பிக்கப்பட்டனர். எஸ்.பொன்னுத்துரை, காவலூர் ராசதுரை, கலைவளன் சிசு.நாகேந்திரன் ஆகியோரே அம்மூவர்.
இவ்விழா பற்றிய குறிப்புக்களைப் பின்னர் தருகிறேன். எஸ்.பொ. வின் உரையை ஒலிப்பதிவு செய்தேன். தெளிவாக இருந்தால் அதையும் தரமுயல்கிறேன்.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Thursday, January 18, 2007

நவீன இலக்கிய வரலாற்றின் ஜீவநாடி வல்லிக்கண்ணன்

பனுவல் -பத்மா சோமகாந்தன்-

தினக்குரல் வாரவெளியீட்டில் வெளிவந்த கட்டுரை பயன்கருதி இங்குப் பதிவாக்கப்படுகிறது.

"கோயில்களை மூடுங்கள்" என்ற புரட்சிகரமான தலைப்பில் வெளிவந்த நூலின் ஆசிரியர் பெயர் "கோரநாதன். விஷயத்தின் ஆழத்துக்கேற்ற முறையில் அமைந்த நடையிலான இந்நூல் பெரியார் ஈ.வே.ரா. விடம் கொடுக்கப்பட்டது. அதனை ஆர்வத்தோடு வாசித்து முடித்த ஈ.வே.ரா. பெரியார் இந்நூலின்" சொற்கள் வாணலியில் வறுத்து எடுத்தன போல இருக்கின்றன" என்று சுடச்சுட எழுதப்பட்ட முறையைப் பெரிதும் வரவேற்று மகிழ்ந்து பாராட்டினார்.

பெரியாருடைய பாராட்டைப் பெறக் கூடிய வகையில் புதுமையாகச் சிந்தித்து புரட்சிகரமாக எழுத்து நடையைக் கையாண்டும், கண்டிக்க வேண்டியவற்றை கடுமையாகவும் நையாண்டியாகவும் நகைச்சுவையாகவும் எழுத்தில் வித்தை செய்யக் கூடியவராகவும், சாதாரண விஷயங்களைச் சொல்லும் போது மிகத் தெளிவாகவும் எளிமையாகவும் சிறு சிறு வசனங்களையும் எழுதக் கூடிய வல்லமையைக் கொண்டிருந்தவர் வல்லிக் கண்ணன் என்ற எழுத்துலக ஞானி.

1920 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி இராஜவல்லி புரம் என்ற ஊரில் பிறந்த கிருஷ்ண சாமி என்ற இயற்பெயரைக் கொண்ட வல்லிக் கண்ணனின் தந்தையார் மு.சுப்பிரமணிய பிள்ளை. தாயார் மகமாயி அம்மாள். இரு அண்ணன் மாரையும் ஒரு தம்பியாரையும் உடன் பிறப்புகளாகக் கொண்டிருந்த கிருஷ்ண சாமி 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி ஓரிரு வாரங்கள் சுகயீனமுற்ற வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றும் பூரண சுகமடைய முடியாமல் இயற்கையெய்தினார்.

தனது பதினேழாவது வயதில் "இதய ஒலி" எனும் கையெழுத்துப் பிரதியொன்றை தானாகவே ஆரம்பித்து நடத்தி எழுத்துலகில் காலடியைப் பதிக்கத் தொடங்கிய வல்லிக் கண்ணன் என்ற புனைப் பெயரைச் சுமந்து கொண்ட கிருஷ்ண சாமி இரு வருடங்களின் பின்னர் `பிரசண்ட விகடன்' என்ற பத்திரிகையில் `சந்திர காந்தக்கல்' என்ற தனது முதலாவது சிறு கதையை வெளியிட்டு தனது எழுத்திற்கான அங்கீகாரத்தைப் பதிவு செய்து கொண்டார்.

ஆக்க இலக்கியத்தின் மீதுள்ள ஆர்வம் பிடரியைப் பிடித்துத்தள்ளவும் படைப் பிலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் பத்திரிகை சிறு சஞ்சிகைகள், கதை, கட்டுரை, நாவல், மொழி பெயர்ப்பு, விமர்சனம், திரைக்கதை வசனம், கவிதை எனப் பற்பல அம்சங்களிலும் கூர்மையான பார்வையுடன் பேனாவைச் செலுத்தி தனது அறிவையும் ஆற்றலையும் மேன் மேலும் வளர்த்துக் கொண்டார். இதன் நிமித்தமாகத் தினமணி ஏ.என்.சிவராமன், மஞ்சரி ஆசிரியர் தி.ஐ.ரங்கநாதன், `எழுத்து' ஆசிரியர் சி.சு.செல்லப்பா, தி.க.சி, கண முத்தையா, அகிலன், கு.அழகிரி சாமி டாக்டர் மு.வரதராஜன் தி.ஜானகிராமன், தொ.மு. சிதம்பர ரகுநாதன், சின்னக் குத்தூசி, இந்திரா பார்த்த சாரதி பி.எஸ்.இராமையா, ந.பிச்சமூர்த்தி, சே.கணேஷலிங்கம், ஜெயகாந்தன், திருப்பூர் கிருஷ்ணன், பொன்னீலன், தாமரை மகேந்திரன் போன்ற தலைசிறந்த சிந்தனையாளர்களதும் எழுத்துலகப் பிரம்மாக்களதும் மத்தியில் மிகவும் மதிப்பு வாய்ந்தவராகவும், போற்றப்படுபவராகவும், மிக மிக வேண்டிய வராகவும் விளங்கினார்.

குடும்பச் சுமைகளையோ, லௌகீக வாழ்க்கையையோ மேற்கொண்டிராத வல்லிக் கண்ணன் ஆக்க இலக்கியத்தின் மீதான விடுதலறியாப் பற்றினால் பல இலக்கியச் சுமைகளைத், தனது முதுகிலேயே சுமந்து கொண்டு மகிழ்ந்தார். சஞ்சிகை உலகில் சில காலம் அனுபவம் பெற்ற இவர். சிறுகதை, கவிதை, கட்டுரை ,எழுத்து என்பவற்றில் தனது மனதை முற்று முழுதாக ஈடுபடுத்தி உழைத்துக்கொண்டிருந்த வேளைகளில் ஈழத்து எழுத்தாளர் பலரைச் சந்தித்துப் பேசி ஈழத்து இலக்கியத்தில் பெரும் ஆர்வமும் அக்கறையும் ஈடுபாடும் கொண்டிருந்தார். ஈழத்து இலக்கியத்தை அறியும் ஆவல் ஈழ இலக்கியத்தின் வீச்சையும் போக்கையும் நன்கு அவதானித்து பாராட்டினார். பலருடைய ஆக்கங்களைப் பொறுமையோடும் அவதானிப்போடும் வாசித்து அவற்றை எடை போட்டு மெலெழுந்து நிற்பவற்றைப் புகழ்ந்தும் நசிவானவற்றைச் சுட்டிக் காட்டித் திருத்தியும் உதவுவதில் பெரும் பங்கு கொண்டிருந்த போக்கை அவரது இலக்கியத் தடத்தின் பரிமாணங்களில் சிலவாகக் கொள்ள முடியும். ஆகையினாலன்றோ ஈழத்து ஆக்க இலக்கியக் காரர் பலருடைய நூல்களுக்கு டாக்டர் நந்தியின் `தரிசனம்', பத்மா சோமகாந்தனின் `வேள் விமலர்கள்' நீ.பி.அருளானந்தத்தின் `வாழ்க்கையின் வர்ணங்கள்' என்றநாவல், எனப் பலருடைய ஆக்கங்களை வரவேற்று முன்னுரை வழங்கி வாழ்த்தியுள்ளார்.

கடந்த 1996 ஆம் ஆண்டு ஜூன் மாசக் கடைசி வாரங்களில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கொழும்பில் இரு தினங்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்க மகாநாட்டைச் சரஸ்வதி மண்டபத்தில் நடாத்தியது. இரு நாள் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உரையாற்றும் விசேட விருந்தினராகத் தமிழகத்திலிருந்து பிரபல நாவலாசிரியர், பொன்னீலன் தாமரை ஆசிரியர் மகேந்திரன் ஆகியோருடன் எழுத்தாளர் வல்லிக்கண்ணனும் இலங்கைக்கு முதன் முதலாக வருகை தந்திருந்தார். பல சிரமங்களின் மத்தியிலும் முதன் முதலாகத் தான் இலங்கை வந்துள்ள விபரங்களையும் `வல்லிக் கண்ணன்' என்ற புனைபெயரையே `விசா' கடவுச் சீட்டு எடுப்பதற்காகவும் போடப்பட்ட சங்கடங்களை மாநாடு ஆரம்பித்த பின்னரே கொழும்பு சரஸ் வதி மண்டபத்தை வந்தடைய முடிந்த சிக்கல் நிறைந்த தனது பிரயாணம் பற்றியும், தனது இயற்பெயரை அறவே மறந்து விட்ட உண்மையையும் ஈழத்து இலக்கியச் கலைஞருடைய எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் சுவைபடத் தனது பேச்சின் இடையே திணித்துப் பேசி ஈழத்து மக்களுடைய அன்பையும் இலக்கியதாகத்தையும் தீர்த்துக் கொண்டது இன்று நிகழ்ந்த சங்கதி போல் நினைவில் நிற்கிறது.

ஈழத்தில் வ.க. தங்கியிருந்த வேளைகளில் இங்கு வாழும் இலக்கிய நெஞ்சங்களையும் எழுத்தாளர், அறிஞர், கவிஞர், விமர்சகர், சுவைஞர், கலைஞர், எனப் பலதுறை சார்ந்தவர்களையும் சந்தித்துப் பேசுவதிலும் உரையாடி மகிழ்வதிலும் மிகுந்த நேசம் கொண்டிருந்தார். சாகித்ய இரத்தினம் வரதர் அவர்களுடைய பிறந்த நாளான முதலாம் திகதி ஜூலை மாசத்தன்று "வரத கதைகள்" என்னும் நூலை வெளியிட்டு வைத்து மகிழ்ந்து உரையாற்றினார்.

நவீன இலக்கியத்தின் மீது தீராத காதல் கொண்டிருந்த வல்லிக் கண்ணன் சராசரியான தமிழக மக்கள் உரையாடுவது போலன்றி, மிகச் சுருக்கமாகவும் நறுக்கான இரண்டொரு சொற்களுடனும் மிகக் குறைவாகவே பேசுவார். ஆனாலும், அவை மிக ஆணித்தரமாகவும் வெகு நிதானமாகவுமே இருக்கும். இதுவே அவருடைய உரையாடலின் இயல்பு. அதீதிமான அமைதியும் அடக்கமான மெதுவாகப் பேசும் பாங்கையும் உடையவரே இந்த இலக்கிய யோகி. இலக்கிய சம்பந்தமான விஷயங்களையோ கடந்த கால சிறு சஞ்சிகைகள் பற்றியோ நவீன இலக்கியத்தின் வரலாறு, எழுத்துலகப் பிரம்மாக்கள் பற்றி யெல்லாம் பேசத் தொடங்கினால், காலம், நேரம், ஆண்டுகள், இடங்கள், பெயர்கள், விஷயங்கள் ஆகிய விபரங்கள் கூடச் சற்றும் பிசகாமல் அச் சொட்டாகச் சொல்லி ஆற்றொழுக்கு நடையில் விபரித்துக் கொண்டே போவார்; அவ்வேளையில் `ஜெட் விமானத்தின் வேகம் போல இருக்கும் அவர் பேச்சு.

பெருங்காற்று அடித்தால் எங்கே அள்ளுப்பட்டு வீசப்பட்டு விடுவாரோ என்று எண்ணக் கூடிய மிக மெலிந்த சுள்ளலான உருவம். இந்த மனிதனிடம் இத்தனை ஞாபகசக்தி நிறைந்த விடய அடக்கமும் ஆளுமையும் எப்படி?....! என வியந்து நிற்போரே பலர். அத்தனை தூரம் நவீன இலக்கியப் பரப்பில் தோய்ந்து எழுந்தவர் இந்த இலக்கியத் திருமூலர்.

நாம் தமிழகம் சென்று இவரைச் சந்தித்த வேளைகளிலெல்லாம் வரதர், டொமினிக் ஜீவா, சாந்தன் போன்ற எழுத்தாளர்கள் சிலரது பெயர்களைக் கூறியும் இங்கிருந்து வெளிவரும் இலக்கிய சஞ்சிகைகள், பத்திரிகைகள், அவற்றின் செல் நெறிகள் பற்றியெல்லாம் புகுந்தகத்தில் வாழ்ந்து கொண்டு பிறந்தகத்தின் நிலையைப் பற்றி அறிய அவாவும் மணப் பெண் போல வெகு அக்கறையோடு கேட்டறிந்து கொள்வார்.

கடைசி நாட்களில், சுகவீனமுற்றிருந்த சில நாட்கள் தவிர ஏனைய நாட்களில், எண்பத்தாறு ஆண்டுகள் நிறைந்த இவரது வாழ்வில் இறக்கும் வரை காந்தியடிகளின் கொள்கைகளைச் சார்ந்து தான் உபயோகிக்கும் உடைகளையும், தான் உணவுண்ணும் பாத்திரங்களையும் தனது கரங்களாலேயே சுத்தம் செய்து கொள்ளும் பழக்கமும் பண்பும் கொண்டவர். எளிமையான தோற்றத்தையும், வாழ்க்கையையும் மேற்கொண்டிருந்த இவர் மிக உயர்ந்த சிந்தனைகளுக்கு உரியவராகவே வாழ்வை மேற்கொண்டிருந்தார்.

எழுத்தையே நேசித்து எழுத்தையே காதலித்து எழுத்தையே மணஞ்செய்து எழுத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்த வல்லிக்கண்ணன் தனது பிரமச்சரிய வாழ்வினால் மட்டுமல்ல ஏனைய எழுத்தாளர்களை விட மிகவும் வித்தியாசமான போக்குகள் வரித்துக் கொண்டவர். எவ்வித தீய பழக்கங்களுக்கும் அடிமையாகாத இவர் உயர்ந்த ஒழுக்க சீலராகவே வாழ்ந்தார்.

வ.க, சொனாமுனா, கோரநாதன், இளவல், ஆர். ரத்னம், நையாண்டி பாரதி, மார்பியல், அவதாரம், ரா.சு.கி. ஞானப்பிரகாசம், எஸ். சொக்கலிங்கம், மிவாஸ்கி என ஏகப்பட்ட புனைபெயர்களுள் ஒளிந்து கொண்டு எழுதும் வல்லிக்கண்ணன் வாசிப்பதில் சூரனென்றும் எழுதுவதில் `ராட்சஸன்' என்றும் பலர் கூறி வியந்தாலும் இவ்விரு சூரத்தனமான பெயர்களுக்கும் அவரது இயல்பான சுபாவம் மிகவும் மாறுபட்டது. சிறுகதைகளைப் படிக்கும்போது அவற்றிக்கேற்ப லாவகமான நடையில் இனிமையாக எழுதும் வல்லிக்கண்ணன் புனைபெயர்களுள் மறைந்து கொண்டு அப்பெயர்களுக்கும் தான் எழுதும் விடயத்துக்குமேற்றதாகத் தன் நடையை மாற்றிக் கொள்வதில் விற்பன்னராகவே விளங்கினார். இந்த ரீதியில் வ.க. அவர்களைப் பு. பித்தனுடன் ஒப்பிடலாமெனவும் பொருளுக்கேற்ப நடையை மாற்றிக் கொள்வது ைநயாண்டியாகவும் அரசியல் கட்சி சார்பற்றும் எழுதும் வகையில் வ.க., புதுமைப்பித்தனை முன்னோடியாகக் கொண்டவரென எழுத்தாளர் ம.ந. ராமசாமி குறிப்பிடுவார். குறைவில்லாத பூரண உன்னத இலக்கியமென்பது கிடையாது. அப்படியிருக்கையில் குற்றம் குறைகளைச் சுட்டிக்காட்டி எழுத்தாளனை முடக்குவது இலக்கியத்துக்குச் செய்யும் சேவையல்ல என்பதே வ.க. வின் கருத்தென்பதால் அவர் குறைவான இலக்கியங்கள் மட்டையை இரு கீற்றாகக் கிழித்துத் தலைமாடு கால்மாடாகப் போட்டுக் கழிப்பது போலச் செய்யமாட்டாரென்று இவர் அபிப்பிராயப்படுகிறார். எழுத்தாளர் என்போர் மனிதப்பிறவியில் சிறந்தவர்கள் என்ற நல்லெண்ணமே வ.க. வின் உடம்பெல்லாம் விகசித்து நின்றது.

20 ஆம் நூற்றாண்டின் நவீன தமிழ் இலக்கியத்தை எதிர்கால இளைஞர்களும் ஏனையோரும் நன்கு விளங்கிக் கொள்ளும் வகையில் வ.க. மணிக்கொடிக்காலம், தீபம் யுகம், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், பாரதிக்குப்பின் உரைநடை, சரஸ்வதிகாலம் என்ற தொகுப்பு நூல்களின் மூலம் தற்கால நவீன இலக்கியச் செல்நெறியை எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள் போன்றோரின் படைப்புகளோடு தொகுத்து வெளியிட்டு எதிர்கால சந்ததிக்கு கடந்தகாலம் பற்றிய ஒளியை ஏற்றி வைத்த இந்த மணிக்கொடி சகாப்த எச்சமான இம் மாணிக்கத்தின் புகழ் என்றென்றும் மங்காமல் நவீன இலக்கியம் கொடிவிட்டுப்படர ஒளிவீசிக் கொண்டே இருக்கும் என்பது சத்தியமான உண்மை; வெறும் புகழ்ச்சி*.

*பத்திரிகையில் 'வெறும் புகழ்ச்சி' என்றுதான் பதிவாகியிருக்கிறது. 'வெறும் புகழ்ச்சியன்று' என்று வந்திருக்க வேண்டும்.
___________________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் January 14, 2007

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, December 18, 2006

சிங்களச் சினிமா எதிர்கொள்ளும் சிக்கல்

பிரச்சினைக்குள்ளாகி இருக்கும் ஹந்தகமவின் 'அக்ஷரய"

-மு. பொ-
_______________________________
எரிமலை இதழில் வெளிவந்த மு.பொ. அவர்கள்
எழுதிய கட்டுரை. எழுதப்பட்டு நான்கு மாதங்கள் ஆகிவிட்டாலும் மிகமுக்கியமான கட்டுரையென்பதால் பயன்கருதிப் பதிவாக்கப்படுகிறது. இந்நேரத்தில் படத்துக்கான தடை
விலக்கப்பட்டிருக்கக் கூடும்.
_______________________________


அண்மைக்காலத்தில் கலை, இலக்கியம், சினிமா அழகியல் என்பவற்றுக்கு அப்பால் பெரும் பிரச்சினைக்குள்ளாகியிருப்பது பிரபல இளம் சிங்கள திரைப்படக் கலைஞர் அசோகா ஹந்தகமவுடைய தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படமான 'அக்ஷரய' (அக்கினி எழுத்து)தமிழ் சினிமாவைப் பார்த்துப் பழகிய நம்மவர்களுக்கு ஹந்தகமவின் 'அக்ஷர'யவை விளங்கிக் கொள்வது கடினம், காரணம், சண்டை, ஆட்டம், பாட்டு,காதல் என்கிற வாய்ப்பாட்டுக்குள் இயங்கும் தமிழ்ச்சினிமாவிலிருந்து முற்றிலும் வேறுபட்ட உயர்ந்த திரைக்கலை ஆக்கமான இது, நம்மவரின் 'ரேஸ்ட்' க்குள் அகப்படப்போவதில்லை.


அப்படியானால் இத்திரைப்படம் எதற்காக பிரச்சினைக்குள்ளாகியிருக்கிறது?
இதை விளக்குவதற்குமுன் சிங்கள சீரியஸ்ஸான சினிமா, இன்று எந்நிலையில் உள்ளது என்பது பற்றித்தெரிந்துகொள்ளுதல் அவசியம். இந்தியச் சினிமா உலகில் சீரியஸ்ஸான திரை ஆக்கங்களுக்கு சத்திய ஜித்ராய் எவ்வாறு வழிகாட்டியாய் இருந்தாரோ அவ்வாறே உயர்ந்த சிங்களச் - சினிமாவுக்கு லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் முக்கியமானவர். அவருக்குப்பின் சிங்களத்திரையுலகில் பல இளங்கலைஞர்கள் தோன்றி பலவகையான பரிசோதனைகளைச் செய்யத் தலைப்பட்டனர். அதனால் சிங்களத் திரையுலகில் உலகத் தரம்மிக்க திரை ஆக்கங்கள் தோன்றவாரம்பித்தன.

லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸின் 'ரேகாவ' 'கம்பெரலிய' ஆகிய (கிராமப் பிறழ்வு) திரைப்படங்களின் வருகை சிங்களச் சினிமாவில் ஒரு உடைப்பை ஏற்படுத்திற்று. அதற்குப்பின் வந்த அவருடைய 'நிதானய' இன்னொரு மைல்கல். இதற்குபின் மளமளவென பல சிறந்த திரை ஆக்கங்கள் வரத்தொடங்கின. அதற்குக் காரணம் இளஞ்சந்ததியினர் மத்தியிலிருந்து துடிப்புள்ள இளங்கலைஞர்கள் தோன்ற ஆரம்பித்ததே. தர்மசிறி பண்டாரநாயக்கா, தர்மசேன பத்திராஜா, வசந்த லுபேசேகர, பிரசன்ன விதானகே, அசோகா ஹந்தகம, சோமரத்ன திசானாயக்க போன்றோரின் திரைப்படங்கள் சிங்களச் சினிமா உலகில் சூறாவளி ரீதியில் மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கின. வசந்த ஒபேசேகராவின் 'தீர்த்த யாத்ரா' தர்மசேனபத்திராஜாவின் மத்துயம் தவச (எதிர்காலத்தில் ஒருநாள்) அசோகா ஹந்தகமவின் சந்தகின்னரி (நிலவுப்பெண்) பிரசன்ன விதானகேயின் 'புரசந்தகலுவற' (ஓர் புரணையில் மரணம்) தர்மசிறிபண்டாநாயக்காவின் 'பவதுக்க' ஆகிய திரைப்படங்கள் பிரபலமானவை மட்டுமல்ல நமது தமிழ்சினிமா உலகத்தவரால் எட்டமுடியாத தரத்தை உடையவை. (மேலே குறிப்பிட்ட அனைத்துப்படங்களும் சென்ற வருடம். தர்மசிறிபண்டாரநாயக்காவின் 'திரிகோண' அமைப்பினால் 'சினியாத்ரா' என்ற பேரில் (திரை உலா) வட கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு திரையிடப்பட்டதோடு இவை பற்றிய கலந்துரையாடல்களும் நிகழ்த்தப்பட்டன) இந்தப் பின்னணியில்தான பிரச்சினைக்குள்ளாகியிருக்கும் அசோக ஹந்தகமவின் 'அக்ஷரய' வைப் பார்க்க வேண்டும். ஹந்தகம இளைஞர், ஒரு கணிதப்பட்டதாரி, வங்கியொன்றில் வேலைபார்க்கும் இவர், ஏற்கனவே தயாரித்த திரைப்படங்கள் மூலம் இலங்கையிலும் வெளியிலும் புகழ்பெற்றவர். உள்நாட்டு போரினால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் சிங்களக்கிராம மக்கள் பற்றியும் தமிழருக்கெதிரான இனவாதத்தில் மூழ்கியுள்ள பௌத்த சிங்களக் கிராமத்தின் தூய்மை பற்றியும் எந்த அச்சமும் இன்றி அலசிச் செல்லும் போக்கையும் இவரது திரைப்படங்கள் பின்னணியாகக் கொண்டுள்ளன. இவர் தயாரித்த 'சந்த கின்னேரி' (நிலவுப்பெண்) 1994ல் பல விருதுகளைப்பெற்றது. 'இது என்னுடைய சந்திரன்' ('மே மகே சந்தாய்) என்ற இரண்டாவது படம், யுத்தகளத்திலிருந்து தப்பியோடிக்கொண்டிருந்த போது, ராணுவவீரனொருவனால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட தமிழ் பெண்ணுக்கும் அந்த ராணுவக்காரனுக்கும் இடையே ஏற்படும் காதல் பற்றியது இக்கதை. இதுவும் இவருக்கு பலவிருதுகளைப் பெற்றுக் கொடுத்ததோடு வெளியுலகிலும் இவர் பிரபலமாகக்காரணமாய் இருந்துள்ளது. இத்திரைப்படம் லண்டன் திரைப்பட விழாவிலும் பரீஸ் சிங்கப+ர் டில்லி, பாங்கொக் போன்ற நகரங்களிலும் காட்டப்பெற்று பெரும் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றது. இவ்வாறே இவரது 'ஒரு சிறகோடு பறத்தல்' என்ற திரைப்படம் 2004ல் பரீசிலும் லண்டனிலும் திரையிடப்பட்டு பெரும் புகழை இவருக்குத் தேடிக் கொடுத்தன.



சிங்கள சினிமா உலகில் இத்தனை சிறப்பான இடத்தைப்பெற்ற ஹந்தகமவுக்கு இப்போது ஒரு சோதனைக்காலம் எனலாம். அதற்கு காரணமாய் இருப்பது, 'அக்ஷரய' (அக்கினி எழுத்து) என்ற அவரது புதிய திரைப்படமாகும். இத்திரைப்படம் தணிக்கையாளர்களின் பார்வைக்கு விடப்பட்டு அவர்களாலும் திரையிடுவதற்கு அனுமதிக்கப்பட்ட பின்னரும் இதற்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு காரணம் என்ன?
சினிமாவின் தரம் அதன் நுணுக்கங்கள் பற்றிய எந்த அறிவுமில்லாதோரின் தூண்டுதலினால் கலாசார அமைச்சர் இதில் தலையிட்டுள்ளார். அதனால் இத்திரைப்படம் திரையிடப்படக்கூடாதென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் இப்படம் சிறுவர் துஷ்பிரயோகக் காட்சிகளைக் கொண்டதாக இருப்பது என்பதே கலாசார அமைச்சின்வாதம். இன்றைய பிரதான தேசிய ஊடகங்கள் இத்திரைப்படம் பற்றிய - அது இன்னும் திரையிடப்படாத நிலையிலும் - வாதம் பிரதிவாதங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளன.

இத்திரைப்படத்தில், குளியல் தொட்டியில் ஒரு சிறுவனை நிர்வாணமான நடிகை முன்னே நிற்பாட்டுவதன் மூலம் ஹந்கம சிறுவர் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்பதே கலாசார அமைச்சரதும் சிறுவர் துஷ்பிரயோக திணைக்களத்தின் பொலிசாரும் கண்டுள்ள குற்றமாகும். ஆனால் ஹந்தகமவுக்கு சார்பாக வாதிடுவோர் பின்வரும் கேள்விகளை முன்வைக்கின்றனர்.
1. கலாசார அமைச்சினால் நியமிக்கப்பட்ட தணிக்கை சபை அனுமதித்த பின்னர் அதை ரத்த செய்வதற்கு அமைச்சருக்கு என்ன அதிகாரம் உண்டு? அப்படியானால் அவர் நியமித்த தணிக்கை சபை பிழையானதா? அறிவற்றதா? தமது தீர்ப்பை ரத்து செய்தமைக்குப் பின்னரும் தணிக்கை குழு ஏன் இன்னும் தமது பதவியிலிருந்து விலகாது இந்த அவமரியாதையைத்தாங்கிக் கொண்டிருக்கிறது?
2. ஏற்கனவே சோமரத்ன திசாநாயக்காவினால் தயாரிக்கப்பட்ட 'சமனலதட்டு', 'சூரிய ஆரண்ய' ஆகிய இரண்டு படங்களிலும் ஹந்தகமவின் படத்தில் உள்ள காட்சிக்கு இணையான காட்சிகள் உள்ளன. துஷ்பிரயோகத்திற்கு பின்னர் நிர்வாணமாக ரோட்டில் ஓடும் சிறுவனின் காட்சி 'சமனல தட்டு'வில் இடம் பெறுகிறது. 'சூரிய அரண்ய'வில் சிறுவனான புத்தபிக்கு காவியுடையை களைந்துவிட்டு தனது விளையாட்டுத் தோழனோடு ஓடிப்போகும் காட்சி இடம் பெறுகிறது. ஏன் இக்காட்சிகள் கலாசார அமைச்சுக்கு துஷ்பிரயோகமாகப்படவில்லை? இன்னும் இரண்டாவது படத்திலுள்ள காட்சி, பௌத்த சமயம் போற்றும் 'வினைய' கோட்பாட்டுக்கே எதிரானது. இவற்றையெல்லாம் கலாசார அமைச்சு எவ்வாறு சகித்துக் கொண்டது? இப்படங்களைத் தயாரித்தவர்' தற்போதுள்ள ஆளுங்கட்சியின் பெரும் பிரச்சாரகராக இருந்தார் என்பதாலா?

கடந்தவாரத்திற்கு முதல்வாரம் தர்மசிறிபண்டாரநாயக்காவின்' திரிகோண' நிலையத்தில் நாம் சிலர் ஹந்தகமவைச் சந்தித்து உரையாடியபோது அவர் தனது திரைப்படத்திற்கு, திரைப்படம் பற்றிய அறிவற்ற சமான்யர்களால் ஏற்படுத்தப்பட்ட அபத்தமான விளைவுகளை விளக்கினார்.

சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய விசாரணையை மேற்கொள்ளும் பொலிசார், ஹந்தகமவின்மேல் சுமத்தும் குற்றம், அவர் ஒரு சிறுவனை நிர்வாண நடிகையின் முன்னால் நிறுத்திபடமெடுத்ததோடுஅவளால் தாக்குதலுக்கும் உள்ளாக்கப்பட வைத்தார் என்பதே. இதில் வேடிக்கை என்னவெனில் இன்றைய திரைப்படம் எடுத்தல் தொடர்பாகவுள்ள தொழில்நுட்பம் எதுவும் தெரியாதவர்களின் பாமரத்தனமான குற்றச்சாட்டே இது.

ஹந்தகம பொலிசாருக்கு கொடுத்த தனது வாக்கு மூலத்தின்போது, பிரச்சினைக்குரிய காட்சியானது தனித்தனியே எடுக்கப்பட்டு எடிட்டிங்மூலம் இணைக்கப்பட்டதேயொழிய சிறுவன் நிர்வாணப் பெண்ணெதிரே குளியல் தொட்டியில் நிற்பாட்டப்படவில்லை என்பதை விளக்கினார். பொலிசாருக்கு கொடுத்த வாக்கு மூலத்தில் நடித்த சிறுவனும் இதை உறுதி செய்ததோடு படமெடுக்கப்பட்டபோது அங்கிருந்த சிறுவனின் தாயாரும் நிர்வாணப் பெண்ணின் முன்னால் தன்னுடைய மகன் விடப்படவும் இல்லை அவளால் தாக்கப்படவுமில்லை என்பதையும் உறுதி செய்தார்.
இதை விளங்கிக் கொள்ள முடியாத கலாசார அமைச்சும் சொலிசாரும் தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நிற்பதே வேடிக்கை.

தன்மேல் சுமத்தப்பட்ட குற்றங்கள் பற்றி ஹந்தகம இறுதியாக பின்வருமாறு கூறினார். "ஒருகட்டத்தில், இந்தப் பாமரத்தனமான குற்றங்களைக் கேட்டபோது, எனக்கு அழுகையே வந்துவிட்டது. காரணம் எனக்கும் சிறு பிள்ளைகள் இருக்கிறார்கள்".

மூலப் பதிப்பு.


நன்றி: எரிமலை.

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, December 13, 2006

நேர்காணல்: ஓவியர் விஜிதன்

_____________________________________

இது எரிமலை சஞ்சிகையில் வெளிவந்த நேர்காணல்.
ஈழத்து ஓவியத்துக்குப் புது வரவான விஜிதனுடனான நேர்காணலை இங்குப் பதிகிறேன்.

_____________________________________

கற்கை, ஆர்வம், தேடல் புதுமை நோக்கிய பயணத்துக்கான துடிப்புக்கொண்ட இளம் ஓவியனின் வருகை


சின்ன வயசிலேயே எனக்கு ஓவியத்தில் ஈடுபாடிருந்தது, வீட்டில நான் ஓவியத்துறையில போறது பற்றி வீட்டிலவந்து ஒரு பிரச்சினையும் இல்லை. நானும் என்னுடைய வழியில் ஓவியத்துறையிலேயே சின்னன் சின்னனாக வளர்ந்து வந்து பாடசாலை, பல்கலைகழகம் அந்த வகையில வெளிப்பட்டதுதான் இந்த ஓவியக் கண்காட்சி என்று சொல்லலாம்.

** இந்த விதி முறைகளை தெரிவுசெய்ய அடிப்படைக் காரணம் என்ன?

பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிப் போனவுடன், எண்ணெய் வர்ணத்தை பாவிக்கின்ற முறையை அறிந்து கொண்டேன். அந்த முறையை வைத்துக்கொண்டு ஏதாவது புதிதாகச் செய்யவேண்டும் என்று யோசித்ததால் சில விடயங்களை புதிதாக செய்திருக்கிறேன். படிப்பித்த மாஸ்டர்மார் அவையள் என்னென்னமாதிரி படிப்பிச்சிச்சினம் அதுகளெல்லாம் ஓவியங்களுக்கூடாக வெளிப்பட்டிருக்கு.
ஓவியர் ரமணி வந்து கூடுதலாக கூடப்படிப்பித்தார். கூடுதலான அளவு அவரைப் பின்பற்றிச் செய்திருக்கிறேன். எனக்கு அவற்ற ஸ்ரைல் பிடிக்கும் அதுகள் இந்த ஓவியங்களில வந்திருக்கு அதுகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு நான் என்ன செய்திருக்கிறன் என்பதை இதில பார்க்கக்கூடியதாக இருக்கும்.




** இங்கே உங்களுடைய ஓவியங்கள் எல்லாவற்றையும் பார்க்கின்ற பொழுது பயன்படுத்தின உத்திகள் வித்தியாசங்கள் அதிகமாக இருக்கிறது. பாணி என்று சொல்கின்ற பொழுது தனித்துவமான ஒரு பாணி மிக முக்கியமானது. இங்கே ஒவ்வொன்றும் ஒரு சாயலில் இருக்கின்றன. இதற்கு அடிப்படைக் காரணம் நீங்கள் கற்றுக்கொள்கிற பொழுது எல்லாவற்றையும் அறிந்துகொள்வதாலா?

ஏனென்று சொன்னால் பல்வேறுபட்ட கலைஞர்களை ஆசிரியர்களாகக்கொண்டு வேற வேற பாடங்களை படிச்சிருக்கிறேன். அதில பல உத்திமுறைகள் இருக்கு. அதால ஒவ்வொரு உத்திமுறைகளை பயன்படுத்தி அந்தப்படங்களை செய்திருப்பன். எனக்குப் பாடத்திட்டத்தில இப்படித்தான் செய்யவேண்டும் என்று சொல்லி வரையறைகள் இருக்கு. அப்ப நான் அந்த வரையறைகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு அந்தப் படங்களை செய்திருக்கிறேன். அந்தப் படைப்புகள் கட்டாயம் அப்படி இருக்கும். இன்னொன்றை செய்யும் பொழுது வேறு மாதிரி செய்திருப்பேன். இந்தப் படைப்பு வித்தியாசமாக இருக்கும். இப்ப நான் படிச்சுக்கொண்டிருக்கும் காலத்தில அதில ஒரு தனித்துவத்தை ஏற்படுத்திக்கொள்வதென்பது சாத்தியமில்லா விசயம்;. ஏனென்று சொன்னால் நான் ஒவ்வொரு ஆசிரியர்களையும் பின்பற்றி அவர்களுடைய விருப்பத்துகேற்றமாதிரி படத்தை செய்து முடிக்கிறேன். அப்படி செய்யப்பட்டப் படங்களைத்தான் இன்றைக்கு காட்சிக்கு வைத்திருக்கிறன். அவை தனித்துவத்தை இழந்திருக்கலாம். ஆனால் குறிப்பாக நான் சொல்லப் போனால் பொதுவாக சில ஓவியங்களை தனித்துவமாக வைத்திருக்கிறேன் இருளும் ஒளியும் சம்பந்தமான விசயத்தில நான் கூடுதலாக தனித்துவம் என்று சொல்வதை விட நான் அதை எல்லா ஓவியங்களிலும் பெரும்பாலும் கொண்டுவந்திருக்கிறேன். அதாவது மிகவும் இருட்டான பின்னணியில ஓவியத்தை வரைகின்ற தன்மையைக் கொண்டுவந்திருக்கிறேன். அது நாளடைவில எனது தனித்துவமாக மாறலாம்.



** உங்களுடைய ஓவியங்களில் குறைந்த வெளிச்சத்தை தெரிவு செய்தமைக்கான காரணம் என்ன?

ஒரு ரசிகன் ஓவியத்தைப் பார்க்கும் பொழுது அந்த ஓவியத்தை எப்படி பார்க்கிறான் அந்த ஓவியத்தை மேலோட்டமாக பார்த்துவிட்டுப் போவதை விட இருட்டா இருக்கா என்ன விசயம் இருக்கென்று கிட்டப்போய் பார்க்கிறானா உண்ணிப்பாப் பார்க்கிறானா தூர நின்று பார்க்கிறானா அப்படியான விசயங்கைள தூண்டக் கூடியது மாதிரி ஒளி அமைக்கிறது முக்கியமான ஒரு விசயம். அது ஓவியத்த மிகவும் ஆழமாப் பார்க்கிற சாத்தியப்பாடுகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அந்த வகையில இந்த ஓவியக்கூடத்தில ஒளியை குறைச்சு வைத்திருக்கிறேன். அதற்கும் ஓவியங்களில ஒளி இருள் தன்மைய கொண்டுவந்ததுதான் முக்கியமான காரணம் என்பேன்.

செவ்வியின் தொடர்ச்சி....
___________________________________________
செவ்வியின் தொடர்ச்சியையும் மேலதிக ஓவியத்தையும் எரிமையில் காணலாம். அப்பதிப்பும் ஒருங்குறியிலேயே இருப்பதால் அனைவராலும் வாசிக்க முடியும்.

நன்றி: எரிமலை

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, December 12, 2006

ஈழ எழுத்தாளருள் மார்க்சியப் பரிச்சயம்

________________________________
தினக்குரல் பத்திரிகையில் வந்த கட்டுரையிது.
பயன்கருதிப் பதிவாக்கப்படுகிறது.
தகவல்களைப் பொறுக்கவோ புது விவாதமொன்றை உருவாக்கவோ உதவக்கூடும்.

________________________________

ஈழத்து எழுத்தாளர்கள் மத்தியில் மார்க்சிய இலக்கிய பரிச்சயம்
பனுவல் - நந்தினி சேவியர்

கடந்த நூற்றாண்டின் மத்திய பகுதியிலேயே மார்க்சிய இலக்கிய பரிச்சயம் ஈழத்தவர்கள் மத்தியில் ஏற்பட்டது. இலங்கையின் முதல் இடதுசாரிக் கட்சியான சமசமாஜக் கட்சி ஒரு மார்க்சியக் கட்சியாக 1935 இல் உருவாக்கப்பட்டது. 1935 இல் ஐக்கிய சோஷலிசக் கட்சியாகவும் பின்னர் 1943 இல் இலங்கைக் கம்னியூஸ்ட் கட்சியாகவும் மார்க்சிய இயக்கம் வளர்ந்தது.

பொன்னம்பலம் கந்தையா, அ. வைத்தியலிங்கம், கார்த்திகேசன், வி. பொன்னம்பலம், நா. சண்முகதாசன் போன்றவர்களே மார்க்சிய சிந்தனையை தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்தவர்களாவர்.

1946 இல் கே. கணேஸ், கே. ராமநாதன் போன்றவர்களால் வெளியிடப்பெற்ற "பாரதி" எனும் சஞ்சிகையே தமிழின் முதல் முற்போக்குச் சஞ்சிகை என கருதப்படுகின்றது. இதன் ஆசிரியர்கள் இலங்கைக் கம்னியூஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களாகும். கே. ராமநாதன் இலங்கைக் கம்னியூஸ்ட் கட்சியின் தமிழ் பத்திரிகையான `தேசாபிமானி'யின் ஆசிரியராகவும் விளங்கினார். இலங்கை எழுத்தாளர் சங்கத்தை 1947 இல் உருவாக்கியவர்களும் இவர்களே.

`பாரதி' சஞ்சிகையில் அ.ந. கந்தசாமி, அ.செ. முருகாநந்தன், கே. கணேஸ், மகாகவி போன்றவர்கள் எழுதியுள்ளனர்.

அ.ந. கந்தசாமி இலங்கைக் கம்னியூஸ்ட் கட்சியின் தேசாபிமானிப் பத்திரிகையில் பணியாற்றினார். பின்னர் `சுதந்திரன்', `வீரகேசரி' பத்திரிகையிலும் பணியாற்றினார். மறுமலர்ச்சி கால எழுத்தாளராக கணிக்கப்படும் அ.ந. கந்தசாமி, பாரதியாரின் ஞானகுருவான யாழ்ப்பாணத்துச் சாமியார் அல்வையூர் அருளம்பலம் சுவாமிகள்தான் என்பதை தெளிவுற நிலைநாட்டியவராகும்.

யாழ்ப்பாணத்தில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக எம்.சி. சுப்பிரமணியம் தலைமையில் உருவான சிறுபான்மை தமிழர் மகா சபையில் அங்கத்தவர்களாக இருந்த டானியல், ஜீவா, எஸ். பொன்னுத்துரை, என்.கே. ரகுநாதன், கவிஞர் பசுபதி போன்றவர்களே ஆரம்பகால முற்போக்கு எழுத்தாளர்களாகக் கருதப்பட்டனர். இவர்கள் மார்க்சிய சிந்தனையால் கவரப்பட்டவர்களே.

இவர்களோடு செ. கணேசலிங்கன், முருகையன், சில்லையூர் செல்வராசன், அகஸ்தியர், இளங்கீரன், எச்.எம்.பி. முகைதீன் போன்ற படைப்பாளிகளும் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி போன்றவர்களும் முற்போக்கு அணியைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். இவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கமே இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம். இது 1954 ஜூன் 27 ஆம் திகதி உருவாக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்த அமரர் பா. ஜீவானந்தம் அவர்களின் தொடர்பாடல், டொமினிக் ஜீவா, டானியல் போன்றவர்கள் மார்க்சியத்தின் பால் ஆழமான ஈடுபாடு கொண்டார்கள்.

இவர்களது படைப்புகள் பிற்கால `ஈழகேசரி'யிலும் `சுதந்திரன்' போன்ற பத்திரிகைகளிலும் ஏராளமாக வெளிவந்தன.

1960 ஆம் ஆண்டில் மு.போ.எ. சங்கம் தேசிய இலக்கியம் என்ற கொள்கையைப் பிரகடனம் செய்தது. அதே ஆண்டில் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகமும் ஆரம்பிக்கப்பட்டது.

1961 இல் வெளியான இளங்கீரனின் `மரகதம்' பத்திரிகையில் தேசிய இலக்கியம் பற்றிய முதலாவது கட்டுரையை க. கைலாசபதி எழுதினார். பின்னர் ஏ.ஜே. கனகரட்ணா, அ.ந. கந்தசாமி போன்றவர்கள் தேசிய இலக்கியம் பற்றி எழுதினார்கள்.

தேசிய இலக்கியம் முன்வைக்கப்பட்டு அதற்கு ஆதரவு பெருகி வந்ததனால் ஆத்திரம் கொண்ட இலக்கிய சனாதனிகள், படைப்பிலக்கியவாதிகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தினார்கள். போதிய கல்வியறிவு இல்லாதவர்கள், தமிழ் மரபு தெரியாதவர்கள், மரபை மீறி எழுதும் மட்டமான எழுத்தாளர்கள், இவர்கள் எழுதும் இலக்கியம் இழிசினர் இலக்கியம் என்றெல்லாம் இகழப்பட்டன.

1962 இல் தினகரனில் ஆரம்பிக்கப்பட்ட விவாதத்தில் மரபுவாதிகள் தரப்பில் கலாநிதி அ. சதாசிவம், பண்டிதர் இளமுருகனார், பண்டிதர் வ. நடராஜா போன்றவர்கள் வாதிட எழுத்தாளர் தரப்பில் இளங்கீரன் அ.ந.க. சிவத்தம்பி போன்றோர் வாதிட்டு வென்றனர். க. கைலாசபதி `தினகரன்' ஆசிரியராக இருந்த காலத்தில் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு நிறைய ஊக்கம் வழங்கினார். இளங்கீரன், செ. கணேசலிங்கன், நீர்வை பொன்னையன் போன்ற எழுத்தாளர்கள் மிகவும் உற்சாகமாக தமது படைப்புகளை வெளியிட்ட காலகட்டமும் அதுவே.

கைலாசபதி பல்கலைக்கழக விரிவுரையாளராகிய பின்னர் மார்க்சிசத்தை ஆதரித்த பல எழுத்தாளர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து தோன்றினார்கள். செ. யோகநாதன், செ. கதிர்காமநாதன் போன்றவர்கள் அதில் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். யோ. பென்டிக்ற்பாலன் இவர்களது சமகாலத்தவரே. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பலரும் இருந்துள்ளனர். வ.அ. இராசரத்தினம், அ.ச. அப்துஸ்சமது, மருதூர் கொத்தன் போன்றவர்கள் இதில் முக்கியமானவர்கள்.

சமசமாஜக் கட்சியினைச் சேர்ந்த சு. இராசநாயகன் மார்க்சிய எழுத்தாளராக தம்மை இறுதிவரை காட்டிக்கொள்ளவில்லை. இன்னுமொரு முக்கிய விசேடம் க. கைலாசபதியினால் அறிமுகமான அ. முத்துலிங்கம் ஒரு மார்க்சிய எழுத்தாளராக உருவாகாமல் போனார். இளங்கீரனின் தென்றலும் புயலும், நீதியே நீ கேள், செ. கணேசலிங்கனின் நீண்ட பயணம், ஒரே இனம், நல்லவன், சடங்கு, டானியல் கதைகள், மேடும் பள்ளமும், (நீர்வை பொன்னையன்) குட்டி, (யோ. பெனடிக்ற்பாலன்), ஜீவாவின் தண்ணீரும் கண்ணீரும், பாதுகை சாலையின் திருப்பம், என்.கே. ரகுநாதனின் நிலவிலே பேசுவோம், யோகநாதன் கதைகள், கவிஞர் பசுபதியின் புது உலகம் முதலியன அறுபதுகளில் வெளிவந்தவையாகும். சோசலிச யதார்த்தவாத படைப்புகள் பற்றிய கருத்துகளும் மார்க்சிய விமர்சகர்களால் இக்கால கட்டத்திலேயே வலியுறுத்தப்பட்டன.

கவிதைத் துறையில் முருகையன், சில்லையூர், கவிஞர் பசுபதி போன்றவர்கள் முற்போக்காளர்களாக அறியப்பட்டதுபோல் மகாகவி அறியப்படவில்லை. அவர் மார்க்சியத்தின்பால் ஈடுபாடு கொண்டவராகவும் இருக்கவில்லை. இத்தலைமுறையினைத் தொடர்ந்து சண்முகம் சிவலிங்கம், நுஃமான் போன்றவர்கள் அறிமுகமானார்கள். கவிதை புதுவீச்சுக் கொண்டது. மு. தளையசிங்கம், மு. பொன்னம்பலம் போன்றவர்கள் முற்போக்காளர்களோடு முரண்பட்ட காலகட்டமும் இதுவே. விமர்சன விக்கிரகங்கள், ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி, முற்போக்கு இலக்கியம் ஆகிய கட்டுரைகள் இக்காலகட்டத்தில் மு. தளையசிங்கத்தால் எழுதப்பட்டன.

எஸ்.பொ. முற்போக்கு அணியினரால் வெளியேற்றப்பட்டு, நற்போக்கு இயக்கத்தை ஆரம்பித்து, முற்போக்காளரை எதிர்த்ததும் இக்கால கட்டத்தில்தான்.

தமிழ் நூல்களுக்கு சாகித்திய மண்டல பரிசில்கள் வழங்கப்பட ஆரம்பித்ததும் டொமினிக் ஜீவாவின் தண்ணீரும் கண்ணீரும் பரிசு பெற்றதும் இக்காலகட்டத்தில் தான். இதனை அடுத்து, புகழ் பெற்ற முட்டை எறிவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இழிசினர் வழக்கு மண்வாசனை என்றெல்லாம் பேசப்பட்ட இலக்கிய வகைக்கமைய மரபு வாதிகள் எழுதத் தொடங்கினார்கள். பின்னர் மண்வாசனையின் பிதாமகர்கள் தாமே என மார்தட்டும் நிலைக்கு அவர்கள் வந்தனர். இந்த ஆரோக்கிய நிலைக்கு மார்க்சியத்தை ஏற்றுக்கொண்ட இயக்கத்தினரின் போராட்டமே காரணியெனலாம்.

இலங்கை கம்னியூஸ்ட் கட்சி சீன சார்பு, ரஷ்ய சார்பாக பிளவுபட்ட காலத்தில் க. கைலாசபதியுடன் இளங்கீரன், டானியல், என்.கே. ரகுநாதன், செ. கணேசலிங்கம் போன்ற எழுத்தாளர்களும் யாழ்ப்பாணக் கவிராயர் சுபத்திரன் போன்ற கவிஞர்களும் சீனச்சார்பு எடுத்தார்கள். க. சிவத்தம்பி, ஜீவா, அகஸ்தியர் போன்றோர் ரஷ்ய சார்பு எடுத்தனர்.

"வசந்தம்" பத்திரிகை யாழ்ப்பாணத்தில் இ.செ. கந்தசாமியால் வெளியிடப்பட்டது.

இதன்பிறகு, டொமினிக் ஜீவாவினால் "மல்லிகை" ஆரம்பிக்கப்பட்டது.

ரஷ்ய சார்பு எழுத்தாளர்களின் படைப்புகளின் உத்வேகம் மந்த நிலையை அடைந்திருந்தமையால் மு. போ. எழுத்தாளர் சங்கத்தின் செயற்பாடுகள், 1963 இற்கும் 1973 இற்கும் இடையில் பெரும் தேக்கம் அடைந்திருந்தமை அவதானிக்கத்தக்கதாகவும் பிரேம்ஜி ஆயுள்காலச் செயலாளர் என கிண்டலாகப் பேசப்பட்ட நிலையும் தோன்றியது.

யாழ்ப்பாணத்தில் பாராளுமன்றப் பாதைக்கு எதிரான சக்திகள் வலுப்பெற்று வந்தன. செ. கணேசலிங்கனின் செவ்வானம், தரையும் தாரகையும், யோ. பெனடிக்ற் பாலனின் சொந்தக்காரன் நாவல்களும், நீர்வை பொன்னையனின் உதயம், செ. கதிர்காமநாதனின் கொட்டும் பனி, செ. யோகநாதனின் `ஒளி நமக்கு வேண்டும்' தொகுதிகளும் வெளிவரத் தொடங்கின. தமிழக விமர்சகர்களான க.ந. சுப்பிரமணியம், வெங்கட் சாமிநாதன் போன்றவர்களுக்கு பதிலிறுக்கும் க. கைலாசபதியின் மார்க்சிய விமர்சனக் கட்டுரைகளும் நாவலிலக்கியம் பற்றிய கட்டுரைகளும் வெளிவந்தன.

தீண்டாமை ஒளிப்பு வெகுஜன இயக்கம் போராட்ட இயக்கமாக உருவெடுத்தது. சாதி அமைப்பு தகரட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும் என்ற அறை கூவலுடன் இயக்கம் வளர்ந்தது. புகழ் பெற்ற மாவிட்டபுரப் போராட்டம், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயப் பிரவேசப் போராட்டம், நிச்சாமம், மந்துவில், மட்டுவில், அச்சுவேலி, கன்பொல்லை என்ற சாதி அமைப்புக்கெதிரான அலை கொதித்தெழுந்தது.

போராட்ட இலக்கியங்கள் உருவாகின. சுபத்திரனின் இரத்தக்கடன், என்.கே. ரகுநாதனின் மூலக்கதையுடன் அம்பலத்தாடிகள் அவைக்காற்றிய கந்தன் கருணை, மௌனகுருவின் சங்காரம் என்பன தோன்றின. களனி, தாயகம், சமர் அணு, வாகை என முற்போக்குச் சஞ்சிகைகள் பல ஆரம்பிக்கப்பட்டன. டானியலின் பஞ்சமர், செ. கணேசலிங்கனின் போர்க்கோலம் போன்ற நாவல்கள் வெளிவந்தன.

சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழும் மக்களின் எழுச்சியைக் கூறும் இலக்கியங்கள், மார்க்சிய இலக்கியங்களாக விமர்சகர்களால் அடையாளம் காணப்பட்டன. புதுக்கவிதை முற்போக்காளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டமையும் நிகழ்ந்தது.

மு.போ.எ. சங்க செயற்பாடுகளில் அதிருப்பியுற்றவர்களால் செம்மலர்கள், இலக்கியவட்டம், தேசியகலை, இலக்கியப்பேரவை, திருகோணமலை முன்னோடிகள், சங்கப்பலகை போன்றவை தோற்றுவிக்கப்பட்டன. இவைபோன்ற இயக்கங்கள் கல்முனை, மன்னார் போன்ற பிரதேசங்களில் உருவாகின.

இவர்கள் திருகோணமலையில் மாபெரும் மாநாடு ஒன்றை நடத்தி புதிய ஜனநாயக கலாசாரத்தின் தேவையை வலியுறுத்தினார்கள். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட டானியல், என்.கே. ரகுநாதன், சில்லையூர் செல்வராசன், செ. கணேசலிங்கன் போன்றவர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

மு.போ.எ. சங்கம் 1975 இல் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டை கொழும்பில் நடத்தியது. தேசிய இனப் பிரச்சினைத் தீர்விற்கான 12 அம்சத் திட்டம் முன்வைக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற கவியரங்கில் சண்முகம் சிவலிங்கம் மாநாட்டின் நோக்கத்தை அம்பலப்படுத்தும் கவிதை ஒன்றைப்பாடி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மார்க்சிசத்தை ஏற்றுக்கொண்ட டானியல், அன்ரனி, நந்தினி சேவியர், வ.ஐ.ச. ஜெயபாலன், சாருமதி, சசி, கிருஷ்ணமூர்த்தி, நல்லை அமிழ்தன், தில்லை முகிலன், இராஜ தர்மராஜா, பாலமுனை பாறூக் அன்புடீன், முல்லை வீரக்குட்டி, முருகு கந்தராசா, க. தணிகாசலம், சி. சிவசேகரம் போன்றவர்களும் மு. நித்தியானந்தன், சமுத்திரன் சித்திரலேகா போன்ற விமர்சகர்களும் உருவானார்கள்.

சுந்தரலிங்கம், மௌனகுரு, தாசிசியஸ், பாலேந்திரா, இளைய பத்மநாதன் போன்ற நாடக நெறியாளர்கள் உருவானதும் இக்காலகட்டத்திலேயே நிகழ்ந்தது.

செ. கணேசலிங்கனின் குமரன் சஞ்சிகையில் அ. யேசுராசா ஒரு கவிதையை எழுதியமையும் பின் `அலை' சஞ்சிகையை ஆரம்பித்ததும் இக்காலத்தில்தான். மல்லிகையில் கூட அ. யேசுராசாவின் முற்போக்கான ஒரு கவிதை வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. "ஊரில் பெருமனிதர் எடுத்த விழாவிடை பேருரைகள் ஆற்ற சில பெரிய மனிதர் மேடை அமர்ந்திருந்தார்...." என அக்கவிதை தொடங்குகிறது.

தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தொகுப்பின் காரசார விமர்சனம் அவரை எதிரணிக்கு தள்ளியது என்ற கருத்தும் நிலவியது.

பிரசார இலக்கியங்கள் என அக்காலத்தில் வெளிவந்த இலக்கியங்களை விமர்சிக்கப்பட்டபோது புதிய இளந்தலைமுறை கலைத்துவப்பாங்கான இலக்கியங்களை உருவாக்கும் முனைப்புடன் செயற்பட்டது. பழைய தலைமுறை எழுத்தாளர்கள் விமர்சகர்களின் தொடர்புகளைத் தவிர்த்து சுயமாக இயங்கும் பக்குவம் இத்தலைமுறைக்கு இருந்தது.

மா.ஓ. வின் யெனான் கருத்தரங்கு உரை அவர்களுக்கு ஆதர்சமாக இருந்தது.

செ. கணேசலிங்கன், டானியல் போன்றோரின் படைப்புகளை தோழமையுணர்வுடன் கடுமையான விமர்சனத்துக்கு இவர்கள் உள்ளாக்கினார்கள்.

பஞ்சமர் நாவல் வெளியீட்டு விழாவில் அன்றைய தினம் தினகரனில் க. கைலாசபதி தாம் எழுதிய விமர்சனத்திற்கு முற்றிலும் மாறான ஒரு விமர்சனத்தை முன்வைக்கும் ஒரு நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகும் அளவிற்கு விமர்சனம் மிகவும் காத்திரமான முறையில் வளர்ச்சி கண்டது.

சீனாவில் நடைபெற்ற கலாசாரப் புரட்சியின் தாக்கம் இலங்கை விமர்சனத்துறையிலும் படைப்பிலக்கியத் துறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

. ஏ.ஜே. கனகரட்ணா போன்றவர்களே கலாசாரப் புரட்சியை வரவேற்று கருத்துக் கூறும் நிலை இருந்தது. சீனாவில் இருந்து நாடு திரும்பிய மாதகல் வ. கந்தசாமி, பாரதியார் கவிதைகளை விமர்சிக்கும் தீவிர போக்கு எடுத்தார். காலக்கிரமத்தில் அவர் தனது கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டி ஏற்பட்டது.
திக்வெல்லை, நீர்கொழும்பு, அநுராதபுரம், மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், கல்முனை, அக்கரைப்பற்று என்று முற்போக்கு சிந்தனைகளை அங்கீகரித்தவர்கள் பரஸ்பரம் இணைந்து கொள்ளும் சூழ்நிலைகள் உருவாகின.

டானியல் பஞ்சமர் வரிசை நாவல்களை முனைப்புடன் எழுதத் தொடங்கினார். இன்று தலித்திலக்கிய முன்னோடியாக கணிக்கப்படும் டானியல் தன்னை ஒரு மார்க்சிய எழுத்தாளராகவே இறுதிவரை கூறி வந்துள்ளார் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.

1983 க்குப் பின்னர் ஈழத்தில் ஏற்பட்ட மாற்றம் மிக முக்கியமானது. தேசிய ஐக்கியத்தை வலியுறுத்திய முற்போக்கு எழுத்தாளர்கள் தவிர்க்க முடியாதபடி தமிழர் பிரச்சினைகளை எழுதத் தலைப்பட்டனர்.

1986 செப்டெம்பர் 17 இல் இனப்பிரச்சினையில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிலைப்பாட்டை வலியுறுத்தும் மாநாடு ஒன்று யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றதும் குறிப்பிடப்பட வேண்டியது.

வானம் சிவக்கிறது எழுதிய புதுவை இரத்தினதுரை, தமிழரின் ஆஸ்தான கவிஞராக மாறினார். இரவல் தாய்நாடு போன்ற செ. யோகநாதன், செ. கணேசலிங்கன் ஆகியோரின் நாவல்கள் வெளிவரத் தொடங்கின.

இது சிலரால் முற்போக்கு எழுத்தாளர்களின் பின்னடைவாக கருதப்பட்டது. ஆனாலும், இதுவும் மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டவர்களின் ஒரு முற்போக்கான நிலைப்பாடாகவே கருதப்பட வேண்டும். பேராசிரியர் சிவத்தம்பியின் மறுபரிசீலனை விமர்சனங்கள் வெளிப்பாடடைந்தது இந்தக் காலகட்டத்தில்தான்.

மார்க்சிய விமர்சனத்தை அங்கீகரிக்காது இருந்த ந. சுப்பிரமணியம் போன்றவர்கள் மார்க்சிய விமர்சகர்களாக மாறியதும் இக்காலத்தில்தான்.

ஈழத்தின் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிக முக்கிய விடயம் மார்க்சிய எழுத்தாளர்களையும் மார்க்சிய இலக்கியத்தையும் எதிர்த்தவர்கள், மார்க்சியத்தை எதிர்க்கவில்லை என்பதுதான்.

இதற்கு சில உதாரணங்களைக் குறிப்பிடலாம். எஸ். பொ. சுபமங்களா பேட்டியில் தன்னை ஒரு மார்க்சியத்து உடன்பாட்டுக்காரராக குறிப்பிடுகிறார். அதேபோல், மு. பொன்னம்பலம் மூன்றாவது மனிதன் பேட்டியில் தன்னை மார்க்சிய விரோதியாகக் காட்டவே இல்லை. அத்தோடு, தீவிரமாக கவனிக்க வேண்டிய விடயம் மு.பொ. 50 இக்குப் பின் ஈழத்து இலக்கியம் பற்றிய பார்வை என்ன என்ற மூன்றாவது மனிதன் கேள்விக்கு.

50 க்குப் பின் ஈழத்து தமிழ் இலக்கியம் வளர்ச்சியுற்றுத்தான் வந்திருக்கிறது என ஆரம்பித்து.....

முற்போக்கு எழுத்தாளர்கள் டானியல், டொமினிக் ஜீவா, எஸ். பொன்னுத்துரை, காவலூர் ராசதுரை, அ.ந. கந்தசாமி, சில்லையூர் செல்வராசன் போன்றவர்களின் பணியைக் குறிப்பிட்டுச் சொல்லி `கைலாசபதி' தினகரன் ஆசிரியராக இருந்ததும் முக்கிய பங்களிப்பு என்றும் கூறிவிட்டுத்தான் கைலாசபதி போன்றவர்கள் தங்களுக்குப் பிடித்தவர்களையே தூக்கிப்பிடித்து நின்றார்கள் என்று கூறுகிறார்.

எம்.ஏ. நுஃமான் `ஞானம்' சஞ்சிகைப் பேட்டியில் பின்வருமாறு ஒரு கருத்தை வைத்துள்ளார்.

குழு விமர்சனம் நமது மார்க்சிய விமர்சகர்களைக் குற்றக் கூண்டில் நிறுத்துவதற்கு மற்றவர்களால் உருவாக்கப்பட்டது. இவர்கள் யாவரும் வெவ்வேறு குழுக்களாக இயங்கினார்கள். ஆயினும், மார்க்சிய விமர்சகர்களின் சாதனையை இவர்கள் எட்டவில்லை. மார்க்சிய விமர்சகர்களை மட்டும் குழு விமர்சகர்கள் என்று குற்றம் சாட்டுவதற்கு இவர்களில் யாருக்கும் தார்மீக உரிமையில்லை. மார்க்சிய விமர்சகர்களை விட மற்றவர்களே வசை விமர்சனத்திற்கு அதிக பங்களிப்புச் செய்துள்ளார்கள் என்ற பொருள்பட சில விடயங்களைக் கூறியுள்ளார். இதே பேட்டியில் இன்னோரிடத்தில், நான் ஒருபோதும் எந்த ஒரு மார்க்சிய இயக்கத்துடனும் என்னை இணைத்துக்கொண்டு செயற்பட்டவனில்லை. தத்துவார்த்த ரீதியில் மார்க்சியத்துடன் எனக்கு உடன்பாடு இருந்தது என்றும் பல அம்சங்களில் அந்த உடன்பாடு தொடர்கிறது என்று கூறியிருக்கிறார்.

செங்கையாழியான் `ஈழகேசரி'க் கதைகள் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "கலைக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் சிறுகதை படைக்கின்ற காலச்சூழலை நாம் கடந்த இந்த மண்ணில் ஏற்றத்தாழ்வற்ற சகல சுதந்திரங்களையும் அனுபவிக்கும் மானிட இருப்பினை நிலைநாட்டுவதற்கான தத்துவப் புரிதலோடு புனைகதைகளைப் படைக்க வேண்டிய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிரபஞ்ச முன்னேற்றத்திற்கும், உலக சமூகத்தின் ஒருங்கிணைந்த விடுதலைக்கும், உயர் மானிடன் எதிர்பார்க்கும் சமூக மாற்றங்களுக்கும் உகந்த தத்துவப்புரிதலை மார்க்சியம் ஒன்றுதான் இன்றும் கொண்டிருக்கின்றது."

இக்கருத்துகள் சமீபத்தில் வெளிவந்தவையே. எனவே, மார்க்சிய இலக்கியத்தையோ விமர்சனத்தையோ எவரும் நிராகரிக்கவில்லை. மார்க்சிய விமர்சகர்களை மட்டுமே எதிர்த்தார்கள் என்பது தெளிவு.

இன்றைய நிலையில் தமிழர் பிரச்சினையை விட்டு விட்டு இலக்கியம் படைப்பது என்பது சாத்தியமற்றதாகிவிட்டது.

இயக்கம் சார்ந்த படைப்புகளாக நிராகரிக்கப்பட்ட முற்போக்கு இலக்கியங்களை விஞ்சுமளவுக்கு, தமிழ்ப் போராளிகள் குழுக்களை ஆதரித்த, எதிர்த்த படைப்புகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இவை புலம்பெயர்ந்தோர் சஞ்சிகைகளில்தான் வெளி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வு.

இது சென்ற நூற்றாண்டின் மார்க்சிய இலக்கியத்தின் வெற்றியென்றே கருதப்பட வேண்டும்.

நமது ஈழத்து நிலைமை தமிழக நிலைமையை விட வித்தியாசமானது. எமது சூழலை நிகர்த்த வேறு பல நாடுகளின் இலக்கியங்களோடு எமது இலக்கியங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் ஒரு இலக்கிய விமர்சன முறைமையை நாம் செய்வதுதான் தற்போதைய கடப்பாடாக நாம் கருத வேண்டும். அதுவே இந்த நூற்றாண்டின் மார்க்சிய இலக்கியவாதிகளின் முக்கிய பணியாகவும் இருக்க வேண்டும்.

உசாத்துணை

1. புதுமை இலக்கியம் 2. சிறுபான்மை தமிழர் மகாசபை மலர் 3. இளங்கீரனின் தேசிய இலக்கியமும் மரபுப் போராட்டமும் 4. புதுமை இலக்கியம் பேரரங்கு- 96 5. மூன்றாவது மனிதன் இதழ்- (04) 6. மூன்றாவது மனிதன் இதழ்- (05) 7. ஞானம் இதழ்- 02 8. ஞானம் இதழ்- 03 9. சுபமங்களா நேர்காணல் 10. ஈழகேசரிக் கதைகள் முன்னுரை

பின் இணைப்பாக சில குறிப்புகள்

மார்க்சியத்தை அங்கீகரிக்கும் கே.ஆர். டேவிட், ந. ரவீந்திரன் (வாசீகன்), எம்.வை. ராஜ்கபூர் போன்றவர்களும் எழுபதுகளில் முன்பின்னாக அறிமுகமாகியவர்களே. ந. ரவீந்திரனின் விமர்சனக் கட்டுரைகள் மார்க்சிய நோக்கிலானவை. லெனின் மதிவாணம் ஒரு மார்க்சிய விமர்சகராக 90 களில் அறிமுகமாகியுள்ளார்.

தனது 25 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடிய தேசிய கலை இலக்கியப் பேரவை கடந்த நூற்றாண்டில் வெளியீட்டுத் துறையில் மிகக் காத்திரமான பங்கினைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மார்க்சிய இலக்கியவாதிகள் அல்லாதவர்களினதும் படைப்புகளையும் தே.க.இ. பேரவை வெளியிட்டுள்ளது. கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் என பல்துறை சார்ந்த நூல்களை வெளியிட்டு வருவது ஈழத்து மார்க்சிய இலக்கியத்துக்கு பெருமை சேர்க்கும் ஒரு முக்கிய விடயமாகும். `தாயகம்', பத்திரிகையை மிகுந்த நெருக்கடிகள் மத்தியில் யாழ்ப்பாணத்திலேயே வெளியிட்டு வருவது பாராட்டப்பட வேண்டிய நிகழ்வாகும்.

______________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் December 10, 2006

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Sunday, December 10, 2006

கவிஞர் சு.வில்வரத்தினம் காலமானார்

ஈழத்தின் புகழ்மிக்க கவிஞர்களில் ஒருவரான கவிஞர் சு.வில்வரத்தினம் இன்று சனிக்கிழமை (09.12.06) கொழும்பில் காலமானார்.
புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் சு.வில்வரத்தினம், இடம்பெயர்ந்து 1991 ஆம் ஆண்டு முதல் திருகோணமலையில் வாழ்ந்து வந்தார்.

இவரது மொத்தக் கவிதைகளும் "உயிர்த்தெழும் காலத்திற்காக" என்னும் ஒரே தொகுப்பாக வெளிவந்திருந்தது.

இவரது "காற்றுவழிக் கிராமம்" என்னும் கவிதைத் தொகுதி விபபி சுந்திர இலக்கிய அமைப்பின் 1995 ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதை நூலுக்கான விருதினை பெற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

56 வயதான இவர், 2 பிள்ளைகளின் தந்தை ஆவார்.



மயூரன் போன்றோர் மேலதிக தகவல்களைப் பதிவார்கள் என்று நினைக்கிறேன்.
செய்தி: புதினம்.
________________________________
கவிஞர் சு.வில்வரத்தினம் அவர்கள் தன் குரலிலேயே பாடிய பாடல்களின் ஒலிவடிவங்களடங்கிய மதி கந்தசாமியின் முன்யை பதிவை இஙகுக் காணலாம்.

சு.வில்வரத்தினம் குரல்பதிவு

பெயரிலியின் பதிவு -சு. வில்வரத்தினம் மறைவு

சோமிதரனின் பதிவு - சு. வில்வரத்தினம். . .

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, December 08, 2006

படைப்பாளிகளின் பட்டியல்: படைப்புலக அடக்குமுறை

"ஈழத்து இலக்கியத்தில் பரிசோதனை முயற்சிகள்" என்ற தலைப்பில் தினக்குரல் வாரமலரில் வந்த கட்டுரையொன்றை ஏற்கனவே பதிவாக்கியிருந்தேன்.
இம்முறை அக்கட்டுரையை விமர்சித்து ஒரு கட்டுரை தினக்குரலில் வந்துள்ளது.
எதிர்வினைக் கட்டுரையில் பெரியளவில் குறிப்பிடக்கூடியவையில்லையென்று நான் கருதினாலும் அதையும் இங்குப் பதிவாக்குகிறேன்.


இங்கும் சொந்தப்பேரில் எழுதும் பிரச்சினை வருகிறது. ;-)

ஏற்கனவே "பட்டியலிடுதல்" தொடர்பாக பெயரிலியுட்பட சிலரால் வலைப்பதிவுகளில் கதைக்கப்பட்டதென்பதையும் நினைவுபடுத்துகிறேன்.
_________________________________________________


படைப்பாளிகளின் பட்டியல் படைப்புலக அடக்குமுறை!
-எம்.நவாஸ்சௌபி-

படைப்பாளர்களை பட்டியல் படுத்தும் ஒரு நடைமுறை இலக்கிய உலகில் காணப்பட்டு வருகிறது. இதற்காக சரியான மதிப்பீடுகள் அல்லது அளவுகோல் பற்றிய ஒரு வரையறையை முன்வைக்காமல் இவ்வாறு பட்டியல் படுத்தும் முயற்சிகள் இன்னும் இடம் பெறுவது தான் பலவீனமான ஒரு விடயமாக இருக்கிறது.

`தினக்குரல்' பனுவல் பகுதியில் `ஈழத்து இலக்கியத்தில் பரிசோதனை முயற்சிகள்' எனும் தலைப்பில் தாவிது கிறிஸ்ரோ - என்பவர் படைப்பு சார்ந்த பட்டியலுடன், பின் நவீனத்துவத்திற்கான பெருத்த கண்டனத்தையும் எழுதியிருந்தார்.

அவரிட்ட பட்டியலும் புதியதல்ல. இதற்கு முன்னும் பட்டியலிட்டவர்களினால் காட்டப்பட்டுள்ள அனேக பெயர்கள் இதில் இடம் பெற்றிருப்பதையும் அறிய முடிகிறது. அவர்களது பெயர்களை நானும் சொல்வது மீண்டும் ஒரு பட்டியலை நானும் இடுவதாய் ஆகி விடும் என்பதால் அதிலிருந்து தவிர்ந்து கொள்கிறேன்.

படைப்புலகில் பரிசோதனை முயற்சிகள் என்று எதுவுமில்லை அவை படைப்புகளின் `வித்தியாசம்' என்று தான் பார்க்கப்பட வேண்டும். ஒரு படைப்பின் வாசிப்பை ஒரு சார்பாக கொண்டு ஏனைய படைப்புகளை புறம் தள்ளுவது என்பது படைப்புலக அடக்கு முறையாகும்.

தாவிது கிறிஸ்ரோ எழுதிய பரிசோதனை முயற்சிகள் என்ற கதையாடல் படைப்புலகின் வித்தியாசங்கள் என்று திருத்தப்பட வேண்டியது. இவ்வாறு ஒரு பட்டியலுக்குள் உள்வாங்கப்படுகிறவர்கள் ஒரு வரையறைக்குள்ளானவர்களாக ஆளாக்கப்படுகிறார்கள் என்பது ஒரு மறைமுகமான உளவியல் பார்வையாகும். இது அவர்களின் விசாலமான படைப்புச் செயற்பாட்டை குறுகியதாக்கி ஒரு முகப்பட்ட பார்வையை அவர்களது படைப்புகளுக்கு கொடுத்து விடுகிறது.

ஆனால் படைப்பு என்பது பன்முகப்படுத்தப்பட்ட பார்வையினைக் கொண்டது. அதனை வாசகர்கள் தங்களது வாசிப்பு பிரதி மூலம் அப்படைப்பின் வேறுபட்ட கூறுகளையும் தங்களது ஆளுமைகளுக்கேற்ப ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக உணர்ந்து கொள்வார்கள்.இந்த வகையில் விமர்சனம் என்பதும் ஒரு படைப்பிற்கு போலித்தன்மையை உருவாக்கி விடுகிறது. அப்படைப்பின் பன்முகத் தன்மையை அது அழித்து விடுகிறது என்பது எனது அபிப்பிராயம்.

ஒரு படைப்பின் பரிசோதனை முயற்சியை அளவிட வித்தியாசமான உருவ அமைப்பை அடிப்படையாகக் கொள்வது தவறான ஒரு புரிதலாகும். ஒரு படைப்பிற்கு உருவ அமைப்பு என்பது கூட நிலையான ஒரு விடயமல்ல. அது மாறிக் கொண்டு வந்த வரலாறு நம்மிடமுண்டு மரபை உடைத்துக் கொண்டு புதிய கவிதை அமைப்பு உருவானது. புதியதை உடைத்துக் கொண்டு நவீன கவிதை அமைப்பு உருவானது என்ற கதைகள் இதற்கு சான்று பகிர்கின்றன.

படைப்பியலைப் பொறுத்தவரை மரபு, புதியது, நவீனம், பின் நவீனம் என்ற எந்த சித்தாந்தங்களுமில்லை என்பதே எனது கருத்து. இவை குறிப்பிட்ட ஒரு காலத்தின் தேவையை மட்டும் திருப்திப்படுத்துகின்ற கதையாடல்களாக இருப்பவை. இந்த சித்தாந்தங்கள் எதுவும் நிலையான இருப்புக் கொள்ள முடியாமல் காலத்தால் புறம் தள்ளப்பட்டிருப்பதை சங்க காலத்திலிருந்து எம்மால் பார்க்க முடிகிறது. இது தவிர்க்க முடியாததுமாகும்.

இத்தகைய கருத்துச் சமர்களுக்கு அப்பால் உணர்வுகளை மொழிப்படுத்தும் படைப்புலகம் தன் பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கிறது. கவிதை எல்லாக் காலத்திலும் கவிதையாகவே இருக்கிறது. இவர்களுடைய மதிப்பீடும் அளவுகோலுமே அவற்றை தப்பான திசைக்கு அழைத்துச் செல்கின்றது.

ஒரு படைப்பை மதிப்பிடும் பணி இன்னொரு படைப்பாளியினுடையது அல்ல. அவ்வாறான மதிப்பீட்டில் தன் படைப்பு சார் பண்புகளையே அவர் நிறுவ முனைவது குறிப்பிட்ட படைப்பின் பன்முகத்தை இல்லாது செய்கிறது. அது வாசகர்களின் வாசிப்பு மதிப்பீடாக முன்வைக்கப்படும்போதுதான் படைப்பாளியினுடைய உழைப்பிற்கான உண்மையான ஒரு வெகுமதியை கொடுப்பதாக காண முடிகிறது. எனவே, படைப்புகளுக்கும் சித்தாந்தங்களுக்குமிடையில் ஓர் தடை கல்லாக வாசகர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

படைப்புலக கருத்தியல் இவ்வாறிருக்க, பின் நவீனத்துவம் பற்றிய எதிர்வினைகள் இப்போது ஆங்காங்கே மின்னுகின்றன. இது `பெரு வெளி' எனும் சஞ்சிகையின் வருகைக்கு பின்புதான் என்பதையும் தாவிது கிறிஸ்ரோவின் கட்டுரையில் நன்றாக அறிய முடிகிறது. இவ்வாறு பின் நவீனத்துவ எதிர்வினையை செய்பவர்கள், தங்களது சொந்த பெயரில் எழுதிய கட்டுரைகள் எதனையும் காண முடியாமலிருக்கிறது. எந்த கருத்தையும் தனது சொந்தப் பெயரில் சொல்வதற்கான முதுகெலும்புடைய பேனையை வைத்துக் கொண்டு அவர்கள் எழுதிக் கொண்டால் அதன் பின்புலத்தையும் அவர்களுடைய எழுத்துக்கப்பால் அறிய உதவுமே என்பது எனது நப்பாசை.

____________________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் December 03, 2006

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, November 06, 2006

ஈழத்தின் இலக்கியத்தில் பரிசோதனை முயற்சிகள்

பனுவல் -தாவீது கிறிஸ்ரோ-

___________________________
தினக்குரல் வாரப்பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையிது. பயன்கருதி இங்குப் பதிவாக்கப்படுகிறது.
___________________________

மேலைத்தேய முன் முயற்சிகளின் ஆகர்சனத்தினால்தான் தமிழிலும் இலக்கியப் பரிசோதனைகள் நிகழ்த்தப்பட்டன. சிறுகதை, நாவல், புதுக்கவிதை எனத் தமிழில் இன்று இலக்கியம் என அங்கீகரிக்கப்பட்ட வடிவங்கள் அனைத்தினதும் நதிமூலங்கள் மேலைத்தேயங்களே.

தமிழ் புதுக்கவிதை வளர்ச்சியை ஒரு இயக்கமாக முன்னெடுத்த சி.சு.செல்லப்பாவின் ` எழுத்து'விலும் அதற்கு முன்னர் ந.பிச்சமூர்த்தி தொடக்கி வைத்த புதுக்கவிதையின் தொடர்வரவாளர்களில் ஒருவராக நம் நாட்டின் தருமு சிவராமு குறிப்பிடப்பட வேண்டியவர். அவருக்குப் பின்னரான பரிசோதனையாளர்களாக தமிழகத்தில் பலர் இருந்த போதும் நமது நாட்டைப் பொறுத்தவரையில் மறுமலர்ச்சிக்கால வரதர் ந. பிச்சமூர்த்தியைத் தொடர முயன்று பின்னர் அம்முயற்சியிலிருந்து விலகியவர். தா. இராமலிங்கம் அவர்களின் கவிதைகளில் இவ்வகைப் பரிசோதனைகளை நாம் அவதானித்தோம். பின்னரான காலங்களில் வானம்பாடிகளின் பாணியை ஒட்டிச் சற்று வித்தியாசமாக திக்குவல்லை கமால் ,அன்பு ஜவகர்ஷா போன்ற முஸ்லிம் கவிஞர்களும் பூனகரி மரியதாஸ், ஈழவாணன் போன்றவர்களும் புதுக்கவிதைகைளை எழுதினர்.

சண்முகம் சிவலிங்கம் மார்க்சியத்தை அங்கீகரித்தவர். அவரது கவிதைகள மிகவும் வித்தியாசமான ஒரு வெளிப்பாட்டைக் கொண்டிருந்தன. அலையில் வெளிவந்த `வெளியார் வருகை' போன்ற கவிதைகளை இங்கு எடுத்துக்காட்டலாம். இதேபோல், மல்லிகையில் இவரது கவிதைகள் உருவப் பரிசோதனையோடு ஆக்கப்பட்டு வெளிவந்தன.

இதேகாலம் முற்றிலும் வித்தியாசமான மு.கனகராஜனின் `முட்கள் முறியும் ஒசையும்' வெளிவந்தது. சோலைக்கிளியின் ஆரம்பம் கூட (இன்றுவரை அது தொடர்கிறது) ஒரு பரிசோதனையின் வெளிப்பாடே.

பாலமுனை பாறுக், அன்புடீன்,மேமன்கவி போன்றோரும் பின்னரான சேரன்,ஜெயபாலன் போன்றோரும் வானம்பாடியினரின் பாணியில் வந்தோரே. தருமு சிவராமு பாணியில் பரிசோதனை செய்தவர்களில் சபா ஜெயராஜா குறிப்பிடத்தக்கவர். இவரது கவிதைகள் தொகுப்பாகவராவிட்டாலும் பத்திரிகைகளில் பிரசுரமான காலத்தில் வித்தியாசமான உருவ அமைப்பைக் கொண்டிருந்தன.

வட்டம் என்பதை .எனவும், சதுரம் என்பதை எனவும் எழுத்துகளால் கோலம் போட்ட கவிதைகள் அவருடையவை.

எம்.ஏ.நுஃமான் தம்மை ஒரு போதும் புதுக்கவிதைக்காரராகக் கூறிக் கொள்வதில்லை. இவரோடு மு.பொ. ,அ. யேசுராசா , சு.வி. என ஒரு வரிசையே இங்கே அடையாளப்படுத்த முடியும்.

சிறுகதைத்துறையில் பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவந்த ஒரு சில முன் முயற்சிப் பரிசோதனைகளைக் கூற முடியும். மு.தளையசிங்கம், காசிநாதர் போன்றவர்களின் சிறுகதைகள் சிலவற்றை இதற்குரியதாக உதாரணப்படுத்தலாம். ஜோர்ஜ் சந்திரசேகரனும் இவ்வகை முயற்சியில் ஈடுபட்டவராவார்.

இவர்களுக்கு முன்னதாக எஸ். பொ.வின் முயற்சிகளையும் இங்கு குறிப்பிடலாம். முற்றுத்தரிப்பு இல்லாமல் ஒரே வசனத்தில் ஒரு கதையை அவர் எழுதியிருந்தார். அணி, குளிர் போன்ற கதைகளும் இதில் அடக்கம்.

நீர்வை பொன்னையனின் 70 இற்குப் பின்னரான கதைகளும், எஸ். அகஸ்தியரின் உணர்வூற்றுருவாக்க சிறுகதைகளும் இதற்குள் அடக்கம்.

90 களில் சரிநிகரில் ` அருள் சின்னையா' எழுதிய ஒரு சிறுகதை பரிசோதனை முயற்சியின் வெளிப்பாடாக வெளிவந்தது. இதற்கு முன்னர் கோணைத்தென்றல் என வெளிவந்த ரோணியோ சஞ்சிகையில் தேஸ்விலோமன், ரிசிப்பிரப்ஞன்( இப்போது சித்தார்த்த சேகுவரா) எழுதிய கதைகளும் பரிசோதனைச் சிறுகதைகளே. இன்று வெளிவரும் பலபடைப்புக்களை பின் நவீனத்தும் எனும் சட்டகத்துக்குள் பொருத்திப் பார்க்கும் போது இத்தகு முன்முயற்சிகள் ( முன் நவீனத்துவம் என பெயர் சூட்டலாம்) ஏலவே, இங்கு நிகழ்த்தப்பட்டுள்ளன.சட்டகத்துக்குள் அடங்காதவையே பின் நவீனத்துவப் படைப்புகள் என்பதும் இங்கு அவதானிக்கத்தக்கது.

அருள் சின்னையாவைத் தொடர்ந்து `திருக்கோவில் கவியுவன்-( ஒரு விதத்தில் உமா வரதராஜனின் அரசனின் வருகை, கள்ளிச்சொட்டு என்பவற்றையும் இங்கு குறிப்பிடலாம்) அம்ரிதா.ஏ.எம்., ஓட்டமாவடி அறபாத், வி.கௌரிபாலன், திசேரா, மலர்ச்செல்வன் ஆகியோரை நாம் வரிசைப்படுத்த முடியும். ஷோபாசக்தி, சக்கரவர்த்தி போன்றோரின் படைப்புகள் பின் நவீனத்துவ வகை மாதிரிக்குள் அடக்கப்படாவிட்டாலும் அம் முயற்சிகளுக்கு சற்று நெருக்கமானவை எனக் கூறலாம். சமீபத்தில் மஜீத் எழுதிய ` கதையாண்டி' எனும் புதினம் வரிந்தெழுதப்பட்ட ஒரு பின் நவீனத்துவ முயற்சியாகும்.(இக்கதை பற்றிமிகவும் காட்டமான விமர்சனம் எனக்குள்ளது. அதனைப் பிறிதொரு பத்தியில் எழுதவிருப்பதால் இப்போது தவிர்த்துக் கொள்கிறேன்). புதுக்கவிதைத்துறையின் முன்முயற்சிகளுக்கு உற்சாகம் தந்த சஞ்சிகைகளாக பூரணி, அலை, களனி, அக்னி, புதுசு போன்றவற்றை கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும். 80 களில் திசை பின்னர் சரிநிகர் போன்ற பத்திரிகைகளும் இவ்வகை முயற்சிகளுக்கு ஆதரவு நல்கியுள்ளன.

ஒரு விதத்தில் இங்கு எழும் பிரச்சினை உருவ, உள்ளடக்கம் சார்ந்த பிரச்சினையாகவே இனங்காணப்படல் வேண்டும். சுத்த கலைவாதம் அல்லது முற்றிலும் பிரசாரம் எனும் அந்தக்காலவாதப் பிரதிவாதங்களுடன் இப்பிரச்சினையைப் பொருத்திப்பார்க்கலாம்.

மரபுப்பாணியில் சமூக உள்ளடக்கம் சார்ந்து முற்போக்கு கவிஞர்கள் பலர் எழுதிய காலத்தில் சுத்த இலக்கியவாதிகள் அவர்களை எதிர்த்தனர். நிராகரித்தனர். இம்முற்போக்கு அணியில் தான்தோன்றிக்கவிராயர், முருகையன், யாழ்ப்பாணக்கவிராயர், சுபத்திரன் போன்றோரும் எதிர் அணியில், இ.நாகராஜன்,வி.கந்தவனம், அம்பி, காசி ஆனந்தன் போன்றோரும் இருந்தனர். முன்னவர் அணியில் பின்னர் வந்த எஸ்.ஜி. கணேசவேல், புதுவை இரத்தினதுரை, முருகு கந்தராசாவைக் குறிப்பிடலாம். எதிரணிக்கு உதாரணம் காட்ட பின்னர் எவரும் கிட்டவில்லை .ஆயினும், பின்னர் வந்த முற்போக்கு அணியில் சற்று வித்தியாசமானவராக சாருமதி முகிழ்ந்தார். அவரைவிடவும் வித்தியாசமாக சிவசேகரம் பல குறிப்பிடத்தக்க கவிதைகளைத் தந்திருக்கிறார். போரின் முகங்கள், வடலி எனும் தொகுப்புகளின் கவிதைகள் இதற்கு நல்ல உதாரணங்களும்.

நமது போர்க்கால சூழலில் இப்போது ஏராளம் தமிழ், முஸ்லிம் கவிஞர்கள் தங்களது கவிதைத் தொகுதிகளுடன் நமக்கு அறிமுகமாகியிருக்கிறார்கள். இவர்களின் கவிதைத் தொகுதிகளுக்கான தலைப்புகளும், கவிதைத் தலைப்புகளுமே வாசகனை தலை கிறுகிறுக்கச் செய்கின்றன.எழுதியவரது பெயரைத் தவிர்த்து கவிதைகளையும்,கவிதைத் தலைப்புகளையும் வாசித்தால் ஒருவரே சகல கவிதைகளையும் திரும்பத் திரும்ப எழுதுவதான ஒரு மயக்கத்தை ஏற்படுத்தும் ஆபத்தான சூழலில் நமது கவிஞர்களும் தள்ளப்பட்டுள்ளனர்.இது கவிதைத் தொழிற்சாலையில் இருந்து தயாரித்து வெளியிடப்படும் உற்பத்திப் பொருட்களில் ஒன்றாக கவிதைத்துறை மாறிவிட்டதன் அவலநிலையெனக் கொள்ள வேண்டும்.புதிய கவிஞர்கள் பலர் நவீனத்துவத்தை ஏற்றுக் கொண்டாலும் தம்முள் ஏதோ வகையில் ஒத்து ஓடும் வெளிப்பாட்டு முறைச் சமரசத்தைக் கொண்டுள்ளார்கள். இதேநேரம், கிழக்கிலிருந்து தீவிரத்துடனும் பின் நவீனத்துவ கதையாடலுடனும் தமது அடையாளங்களைக் காட்டும் வகையில் இப்போது பெருவெளிக்குச் சிலர் வந்துள்ளனர்.

இவர்களினால் வலிந்துரைக்கப்படும் பின் நவீனத்துவப் படைப்புகள், ஏன் தேவைப்படுகின்றன என்ற கேள்விக்குப் பின்னால் பொதிந்துள்ள அர்த்தப்பாடு மிக முக்கியமானது. அவை பல்வேறு விதத்தில் விரித்துரைக்கப்பட்டாலும், மக்கள் திரளின் விடிவு நோக்கிய பணியை முன்னெடுப்பவர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு அர்த்தப்பாடு. அது மக்கள் நலன் சார்ந்த ஒன்றாக இருக்க வேண்டும் என்பதேயாகும்.

_____________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் October 29, 2006

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Saturday, October 28, 2006

இலக்கிய உலகில் மு.த.வின் சிந்தனை ஒரு திருப்புமுனையா?

பனுவல் -தீவிரன்-
-------------------------------------
தினக்குரல் வாரப்பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையிது.
பயன்கருதி வெளியிடப்படுகிறது.
-------------------------------------
ஈழத்து தமிழ் இலக்கிய உலகு பற்றிப் பேசும்போது, ஈழகேசரிக்காலம், மறுமலர்ச்சிக்காலம், `முற்போக்கு' காலம் என்று ஒவ்வொரு காலகட்டங்கள் பிரிக்கப்பட்டு பேசப்படுவது வழமை. கலை இலக்கிய மாற்றங்கள் பற்றிப் பேசப்படுவதற்கு இப்பகுப்புகள் வசதியானதும் கூட. ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒரு தேவை இருக்கிறது. அந்தத்தேவை அக்காலகட்டத்திற்கு தலைமைதாங்கும் ஆளுமைகளால் வெளிக்கொணரப்படுகின்றன.

ஈழகேசரி காலகட்டத்து எழுத்தாளர்களின் (சம்பந்தன், வைத்தியலிங்கம், இலங்கையர்கோன்) ஆளுமை என்பது இந்தியச் செல்வாக்கிலிருந்து ஈழத்தமிழ் ஆக்க இலக்கியத்தை ஓரளவு விடுவிக்க முயன்ற பங்களிப்பைத் தந்ததெனலாம். இவர்கள் காலத்தில் இலக்கிய விமர்சனம் என்பது பின்தள்ளப்பட்டே இருந்தது. அடுத்து வந்த மறுமலர்ச்சி எழுத்தாளர்களின் ஆக்கங்கள் (அ.செ.மு., சு.வே, வரதர், கனகசெந்திநாதன்) பெயருக்கேற்ப முன்னவர்களுடையதைவிட முற்போக்கான விடயங்களை அணுகுபவையாகவும் ஒருவகை விமர்சன நோக்கைக் கொண்டவையாகவும் இருந்தனவெனக் கொள்ளலாம்.

இவர்களுக்கு அடுத்துவந்த முற்போக்கு எழுத்தாளர்கள் இன்னுமொருபடி மேலே சென்றனர். மறுமலர்ச்சிக்காலத்தில் ஏற்பட்ட கருத்தியல் ரீதியான அருட்டல் இவர்களிடம் முழுமையடைகிறது எனலாம். மண்வாசனை, பிரதேச வாசனை என்று வந்த புனைவுகளுக்கு சமூக உணர்வு பாய்ச்சப்பட்டு அவற்றை ஏற்றத்தாழ்வு, சுரண்டல் ஆகியவற்றை பிரதிபலிக்கும் இடதுசாரி (மார்க்சியக்) கருத்தியல் படைப்புகளாக மாற்றிய பெருமை முற்போக்கு எழுத்தாளர்களைச் சாரும். இவ்வாறு முற்போக்கு எழுத்தாளர்களை ஆற்றுப்படுத்திய காலகட்டத்தின் (1956 - 70) ஆளுமைகளாக க.கைலாசபதியும் கா.சிவத்தம்பியும் நிற்கின்றனர்.

முற்போக்கு காலகட்டத்தைத் தொடர்ந்து அடுத்தகட்ட பாய்ச்சலும் நேர்கிறது.

முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் அதன் இயக்கமும் அதன் உச்ச நிலையில் இருந்தபோது (1960-70) அதற்கு எதிரான குரல் எழத் தொடங்கிற்று. முற்போக்கு அணியினரின் கருத்தியல் பற்றியோ, அவர்கள் வாயிலிருந்து உதிர்க்கப்பட்ட `இயக்கவியல்', `கருத்துமுதல் வாதம்', `பொருள் முதல்வாதம்' `சோஷலிஸ்ற் றியலிஸம்', `வர்க்கபேதம்' என்பவற்றின் அர்த்தம் ஒன்றும் புரியாது ஏனைய `வட்டங்களை'ச் சேர்ந்த `எழுத்தாளர்கள் 'தலையைச் சொறிந்து கொண்டிருந்தபோது யாரும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து அதற்கெதிரான குரல் எழத்தொடங்கிற்று.

ஒன்று எஸ்.பொ.வுடையகுரல், அதேகாலத்தில் எழுந்த அடுத்த குரல் மு.த.வுடையது. எஸ்.பொ.வைப் பொறுத்தவரை தான் மு.போ.எ.சங்கத்தி லிருந்து வெளியேற்றப்பட்ட ஆத்திரத்தின் விளைவாய், அதற்குக் காரணமாய் இருந்த க.கை., சிவத்தம்பி ஆகியோர் மேல் அவர் ஆரம்பத்தில், வியாசிகதேசிகர் என்ற பேரில் அள்ளிக் கொட்டிய வசைபாடும் விமர்சனங்களையோ அல்லது அதற்குப்பின் `நற்போக்கு' என்ற பேரில் எவ்.எக்ஸி. நடராசா, சதாசிவம் ஆகிய பண்டிதர்க ளையும் கனகசெந்திநாதன் போன்ற எழுத்தாளர்களையும் கூட்டுச் சேர்த்து முன்வைத்த வாதங்களையோ, விமர்சனங்களையோ ஈழத்து இலக்கிய உலகில் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு எதிராக வைத்த எதிர்வினை என்றோ ஒரு புதுக்கருத்தியல் என்றோ சொன்னால் அது நகைப்பிற்கிடமான ஒன்றே. எஸ்.பொ. ஒரு சிறுகதை ஆசிரியராகவோ, நாவலாசிரியரா கவோ இருக்கலாம். ஆனால், அவர் ஒரு சிந்தனையாளரோ அல்லது தரிசனம் மிக்க எழுத்தாளரோ அல்லர். இதுவே அவரது அத்தனை சீரழிவுகளுக்கும் காரணமாய் இருந்துள்ளது. அத்தனைகாலம் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருந்தும் அவரைவிடக் கல்வியறிவில் குறைவான சக முற்போக்கு எழுத்தாளர்களிடம் டானியல் ஜீவா இருந்த கருத்தியல் ரீதியான ஒழுங்கமைவு கூட இவரிடம் இல்லாமல் போனதற்கும் காரணம் இதுவே. ஆரம்பத்தில் க.கை.யின் தூண்டுதலின் பேரில் இவர் தினகரனில் `நாவலாசிரியர் வரிசையில்' என்ற தொடரில் அல்பட்டோ மொறாவியாவை பற்றி எழுதியது கூட இவரின் சொந்த அறிதலால் வந்த ஒன்றல்ல. (பார்க்கவும் விமர்சக விக்கிரகங்கள் -மு.த.)

ஆகவே, இக்காலகட்டத்தில் முற்போக்கு எமுத்தாளர்களுக்கு எதிராக எழுந்த நியாயமான ஒரே குரல் மு.த.வுடையதே. அத்தோடு, அவர்கள் போக்கை அவர் எதிர்கொண்டவிதமும் தனியானது. 1962 இல் `முற்போக்கு இலக்கியம்' என்ற தலைப்பில் (இது நூலாக 1984 `கிரியா' வால் வெளியிடப்பட்டது) மு.த .கலைச் செவ்வி யில் மூன்று தொடராக எழுதிய கட்டுரை பெரும்பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திற்று. அந்த விவாதத்தில் பங்குபற்றுவதாக இருந்த க.கைலாசபதி, அதைப்படித்த பின்னர் ஏதோ நொண்டிச் சாட்டுக் கூறிக்கொண்டு அதிலிருந்து விலகிக் கொள்கிறார். ஆனால், மு.த.அத்துடன் நிறுத்தாது, `ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' என்னும் தொடர் கட்டுரையை (இது கிரியாவினால் 1984 இல் நூலாக வெளியிடப்பட்டது) எழுதுகிறார். அதில் முற்போக்கு இயக்கத்தின் பிதாமகரான க.கை.ஈழத்து இலக்கியத்தின் தரத்தை மேன்மைப்படுத்த ஆற்றிய பங்களிப்பை பாராட்டிய அதேவேளை, அவரின் போதாமைகளையும் அதன்மூலம் ஈழத்து எதிர்கால இலக்கியப் போக்கு ஒரு திருகப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்ட குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் விவகாரமாக மாறியமையும் சுட்டியதோடு முற்போக்குச் சம்பந்தப்பட்ட மாயையையும் தகர்க்கிறார். இதுமட்டுமல்லாமல் இதுகால வரை முற்போக்கு எழுத்தாளர்களால் மறைக்கப்பட்டும் பிற்போக்கானதாகவும் பார்க்கப்பட்டுவந்த ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் அவசியத்தையும் தமிழ்த் தேசியத்தின் நியாயப்பாட்டையும் மு.த.முன்வைக்கிறார். இதற்கிடையில் மு.த.`விடுதலையும் புதிய எல்லைகளும்' என்ற கட்டுரைத் தொடரை அறுபதுகளின் இறுதியில் `மல்லிகை'யில் எழுதுகிறார். இது அவரால் விரைவாக வெளியிடப்படவிருந்த `போர்ப்பறை'என்ற நூலின் அறிமுகமாகவும் அதன் கருத்தியலின் எளிமை விளக்க மாகவும் வந்துகொண்டிருந்தது. இதுகால வரை முற்போக்கு எழுத்தாளர்களால் ஒதுக்கப்பட்டும் உதாசீனப்படுத்தப்பட்டும் கிடந்த பல இலக்கிய வட்டங்களைச் சேர்ந்த ஏனைய எழுத்தாளர்கள் பலர் அதைப்படித் ததும் புதுவிதத்தெம்பும் தமக்கும் ஒரு கருத்தியல் இருக்கென்ற பார்வை பெற்றவர்க ளாகவும் நிமிர்கின்றனர். இதை அவர்கள் மு.த.வை நேரில் சந்தித்த போதும் அவருக்கு கடிதம் எழுதியதன் மூலமும் தெரிவித்தனர் என்பது பழைய கதை. இதைத் தொடர்ந்து மு.த.வின் `போர்ப்பறை' நூல் வெளியீடு வருகிறது. இதைப் படித்த போது பேராசிரியர் சிவத்தம்பி, ஏனைய எழுத்தாளர்கள் போலல்லாது, காழ்ப்புணர்வற்று, தனக்கேயுரிய நேர்மையோடு, "60களில் ஈழத்தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்ட தேக்கத்தை உடைத்தநூல் இது" என்று மல்லிகையில் எழுதினார்.

இச்சந்தர்ப்பத்தில் நாம் ஆரம்பத்தில் குறிப்பட்ட, ஒவ்வொருகால கட்டத்துக்கும் ஒரு தேவை இருக்கிறது. அந்தத்தேவை அக்காலகட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஆளுமைகளால் வெளிக்கொணரப்படு கின்றன என்பதை சிறிது விசாரணைக்குட் படுத்த வேண்டும். சமூக வரலாற்று ஓட்டமே ஆளுமைகளைத் தீர்மானிக்கிறது. அவர்களுக்கென்று ஒரு தனித்தன்மை மிக்க ஆளுமை என்ற ஒன்றில்லை என யாந்திரீக முறையில் ஆளுமைகளை விளக்கும் வைதீக மார்க்சிய வாதிகள் இன்றும் உள்ளனர். ஆனால், அவை சிரிப்புக்கிடமான வகையில் ஒதுக்கப்படுபவையாக உள்ளன என்பதற்கு ஈழத்து இலக்கிய உலகில் நிகழ்ந்த பின்வரும் நிகழ்ச்சிகளாய் சாட்சியாய் உள்ளன:

ஈழத்து இலக்கிய உலகில் அறுபதுகளில் க.கை.யின் தலைமையில் ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களால் கட்டியெழுப்பப்பட்ட சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக இரண்டு குரல்கள் எழுந்தன. ஒன்று எஸ்.பொ.வுடை யது. அடுத்தது மு.த.வுடையது. இந்த இருவரில் எஸ்.பொ.வின் ஆளுமையானது, அவரைப் பண்டிதர்களோடு கூட்டுச் சேரவைத்து, `நற்போக்கு' என்ற பேரில் படுபிற்போக்கு வாதத்திற்குத் தலைமை தாங்க வைக்க, மு.த.வுடையதோ க.கை ஆகியோர் காட்டிய முற்போக்குவாதத்தின் போதாமைகளைச் சுட்டிக் காட்டியதோடு அதற்குமப்பால் சென்று இனிவரப்போகும் உலக இலக்கியப் போக்கையும் சுட்டுவதாய் அமைந்தது என்பதிலிருந்து ஆளுமைகளும், அவற்றின் தனித்தன்மைகளும் எவ்வாறு சமூகவரலாற்று ஓட்டத்தைத் தீர்மானிக் கின்றன என்பதை அறியலாம் (இவ்விடத் தில் ரஷ்ஷியாவில் ஸ்ரலின் இருந்த இடத்திற் குப் பதிலாக புகாரினோ ட்றொஸ்கியோ இருந்திருந்தால் வரலாற்றோட்டம் எவ்வாறு மாறியிருக்கும் என்று சிந்தித்துப் பார்ப்பது சுவாரஸ்யமானது) ***

மு.த. இவ்வாறு தனது இலக்கிய விமர்சனங்கள், புனைவியல், தத்துவார்த்த எழுத்துகள் மூலம் பாரிய புரட்சியொன்றை முன்வைத்த போதும், ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகு அதனால் எந்தவித அதிர்வுகளையும் பெற்றதில்லை. ஆகக் கூடிப்போனால் முற்போக்கு அமைப்பையும் அதற்குத்த லைமை தாங்கிய க.கை.யையும் எதிர்த்து எழுதினார் என்பதற்குமேல் எதுவும் தெரியாத தட்டையான புரிதலுடைய வைதீக மார்க்சியவாதிகளும் `நற்போக்கு' `சற்போக்கு' படைப்பாளிகளுமே அன்றும் இன்றும் இங்கு பொதுவிதியான நிலையில் இவர்களிடம் மு.த.வின் எழுத்துகள் பற்றி எதுவும் எதிர்பார்க்க முடியாது. அதன் அதிர்வுகளை உள்வாங்கும் frequency இருந்தால்தானே அது பற்றிப் பேசவும் அது ஒரு திருப்புமுனையா என்று அறியவும் முடியும்?

ஆனால், வரலாற்று ஓட்டம், இவர்களிடம் போய் தீக்கோழிபோல் தலையோட்டிக் கொண்டு நிற்பதில்லை. அதன் அதிர்வுகள் இலங்கையைவிட்டு தமிழ் நாட்டில் பலரைத்தொட்டது. ஆரம்பத்தில் மு.த.வோடு தொடர்புகொண்டிருந்த வெங்கட் சாமிநாதன், மு.த. `முற்போக்கு இலக்கியம்'தொடரைக் கலைச் செவ்வியில் எழுதியபோது `எவ்வாறு இதை நீங்கள் தனியனாய் நின்று செய்யமுடியும்?' என்று வியந்தவர். பின்னர் அவரது `போர்ப்பறை' நூல் வெளிவந்தபோது இதை விமர்சிப் பதாகக் கூறிவிட்டு அப்படிச் செய்யாது, தருமு சிவராமின் `கைப்பிடியளவு கடல்' கவிதைநூலுக்கு போர்ப்பறையில் காணப்பட்ட கருத்துக்களை உள்வாங்கி முன்னுரையாக எழுதினார். இதை `வெ.சாமிநாதன் ஏடு பற்றி சரிநிகரில் மு.பொ. விமர்சித்தபோது சுட்டிக்காட்டினார் என்று நினைக்கிறேன். அடுத்து, தமிழ்நாடு `சமுதாயம் வெளியீடு' உரிமையாளர் கோவிந்தன் மு.தவின் எழுத்துகளால் கவரப்பட்டு - இதற்கு இராஜநாராயணனும் தூண்டுதலாய் இருந்தார்- அவரது முக்கியமான அனைத்து ஆக்கங்களையும் நூலுருவில் கொணர்ந்தார். இதற்கிடையில் அமரர் சு.ரா. மு.த.வின் எழுத்துகளை வாசித்து, தன்னைப் போன்ற சுயமான சிந்தனையாளனை வரவேற்கும் பாணியில் அவர் பற்றி பின்வருமாறு எழுதினார். (பார்க்கவும் `மு.த.வின் பிரபஞ்ச யதார்த்தம், சு.ரா.)

இருபதாம் நூற்றாண்டில் வாழ்வதற்கான சாயல் இவரைப் போல் முழுவீச்சோடு வெளிப்படுத்திய ஆளுமைகள் நம்மிடையே வேறு யாருளர்?... பாரதியின் கருத்துலகத்தை விடவும் தளையசிங்கத்தின் கருத்துலகம் முழுமையானது. மற்றொரு விதத்தில் சொன்னால், பாரதியின் சிந்தனையை இவர் நம்காலத்துக்கு கொண்டுவந்து இடைக்காலச் சரித்திரத்துக்கும் எதிர்வினை தந்து இடைவெளிகளை அடைத்து முழுமைப் படுத்த முயன்றார் என்று சொல்லாம்.

இவ்வாறு சு.ரா.சொன்னதற்குப் பிறகு, தமிழ்நாட்டில் தளையசிங்கம் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டார். அண்மையில் ஜெயமோகன் கூட்டிய தளையசிங்கம் பற்றிய விமர்சனக்கூட்டம் பல தமிழ்நாட்டு முன்னணி எழுத்தாளர்களைப் பங்குகொள்ள வைத்தது. மு.த.தனது போர்ப்பறை நூலை வெளியிட்டு ஏறத்தாழ 50 ஆண்டுகள் முடியுந்தறுவாயில் அவர் பற்றி மீண்டு சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. அண்மையில் வெளிவந்த காலச்சுவட்டில் (செப்டெம்பர் 2006) ஆனந்த என்ற தமிழ்நாட்டுக்கவிஞர் பின்வருமாறு கூறுகிறார்.... ஆனால் அந்தப் பரிணாம வளர்ச்சி புதிய உயிரினங்கள் தோன்றிவளர்வதைப் பற்றிய பதிவுகளாகத் தான் இருக்கு. அதாவது, evolution of forms உருவங்கள் அல்லது வடிவங்களின் தோற்றமும் வளர்ச்சியுமாகத்தான் இருக்கு. பிரக்ஞையோட பரிணாமந்தான் உண்மையான பரிணாமம். பிரக்ஞை தன்னோட பரிணாமத்தின் அந்தக்காலகட்டத் தேவைக்கு ஏற்ப புதிய உயிரினங்களின் உருவங்களை உருவாக்கிக்குதுன்னு நான் நம்பறேன். இது மிகவும் அடிப்படையான விஷயமாத்தான் படுது' என்று கூறும் அவர் விண்வெளி சென்று திரும்பியவர் அனுபவம் பற்றியும் இனி வரப்போகும் பரிணாமம் பற்றி அரவிந்தர் கூறிய supermind நீட்சே கூறிய superman பற்றியும் அவர் கூறுபவை எல்லாம் அறுபதுகளி லேயே மு.த. போர்ப்பறைப், மெய்புள்' நூல்களில் கூறியவை இன்று மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு, மு.த.முன்வைத்த சிந்தனையை நோக்கி ஓடிக்கொண்டிருப்பது கண்கூடு.

சரி, மு.த.முன்வைக்கும் செய்தி என்ன?

அவர் இலக்கிய, தத்துவார்த்த சிந்தனை ஊடாகப் புதிய கருத்தியல் ஒன்றை முன்வைக்கிறார். இப்பொழுது மனிதன் அடிப்படைச் சிந்தனை மாற்றத்தின் காலகட்டத்தில் நிற்கிறான் என்று கூறும் அவர், மார்க்சியம் அடிப்படைச் சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வரவில்லை, மாறாக, 12,13 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மறுமலர்ச்சிக் காலத்தால் கொண்டுவரப் பட்ட அடிப்படைச் சிந்தனை மாற்றத்தின் இறுதி வடிவமே மார்க்சியம் என்கிறார். அதனால்தான் அது இன்னும் மறுமலர்ச்சி காலத்திற்கு முன்னிருந்த இலக்கிய வகைக்கு (செய்யுள், காவியம்) எதிராக மறுமலர்ச்சிக் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட சிறுகதை, நாவல் ஆகிய இலக்கிய வடிவங்களையே இன்றும் (சோஷலிஸப் புரட்சி ஏற்பட்ட) நாடுகளில் பின்பற்றுகிறது. இன்று அடிப்படைச் சிந்தனை மாற்றத்தின் வாயிலில் நிற்கும் நாம், அந்த அடிப்படைச் சிந்தனை மாற்றத்திற்கு தடையாக இருக்கின்ற, மறுமலர்ச்சிக்காலத்தில் ஏற்பட்டு இன்று வரை நீடிக்கின்ற சுரத்துக்கெட்ட சிறுகதை, நாவல் கவிதை என்கின்ற இந்தப்பழைய இலக்கிய வடிவங்களை உடைத்தெறிய வேண்டும் என்று கூறும் மு.த.இன்றைய அடிப்படைச் சிந்தனை மாற்றமென்பது, பரிணாமத்தோடு (evolution) தொடர்புடைய தென்றும் ஜடம், உயிர், மனம் என்று முன்னேறிவந்த பரிணாம வளர்ச்சி, மனதையும் தாண்டிச் செல்லும் - புதிய மனித இனத்தோற்றத்திற்கு வரவு கூறும் - காலகட்டத்தில் நிற்கிற தென்றும் (on the threshold of a New Life - psycho metabolism) ஜூலியன் ஹக்ஸ்லி, ரெஹார் டி சாடின் ஆகிய உயிரியல் விஞ்ஞானிகளையும் அரவிந்தர் நீட்சே. நீட்சே (supermind, superman) ஆகிய தத்துவஞானிகளையும் ஆதாரம் காட்டி விளக்கியுள்ளார். இந்தப் புதிய அடிப்படைச் சிந்தனை மாற்றம் எப்பொழு தும் போலவே கலை இலக்கியத்திலேயே தெரியவரும் என்றும் இதுகாலவரை இருந்துவந்த கலை இலக்கிய உருவங்கள் உடைபட புதிய உருவங்கள் தோன்றும் என்றும் அத்தகைய புதிய வரவுக்கு மு.த. `மெய்யுள்' என்றும் பெயரிட்டார். கூடவே கலைஞனின் தாகம் `அண்டை வீடுகள், புதுக்குரல்கள், `உள்ளும் வெளியும் மெய்' ஆகிய புதிய வடிவங்களையும் ஆக்கிக் காட்டினார்.

ஆனால், வேடிக்கை என்னவென்றால் மு.த.வுக்குப் பின்னர் யாரும் `மெய்யுள்'எழுதிக்காட்டவில்லையே, ஆகவே, அவரது புதிய கலை இலக்கிய வடிவம் பற்றிய சிந்தனை தோற்றுப்போன ஒன்று எனச் சிலர் விமர்சித்தனர். இவ்வாறு ஸ்ரீ கணேசன் ஒருமுறை சரிநிகரில் (1998) எழுதிய போது அதற்கு மு.பொ. பின்வருமாறு பதில் அளித்ததாக எனக்கு ஞாபகம்: இன்று மு.த.வுக்கு பின் அவரது இலக்கி ஆர்வலர்கள் (மு.பொ. சு.வி) மெய்யுள் எழுதிக்காட்ட வில்லையே என்று கேட்பது அறியாமையே. இன்று நடைமுறையில் உள்ள கலை இலக்கிய வடிவங்களுக்கு எதிராக உலகெங்கும் எழுதப்படும் அனைத்து anti உருவங்களும் (அவற்றை எழுதுவோர் அவற்றை எழுதுவதற்கு பின்நவீனத்துவம், அமைப்பயல் வாதம், கட்டுடைப்பு என்று காரணம் காட்டினாலும்) மு.த.கூறிய இன்றைய பரிணாமத் தேவையின் கருத்தியல் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது அத்தனை புதிய உருவங்களும் எழுந்து கொண்டிருக்கும் அடிப்படைச் சிந்தனை மாற்றத்தில் வசப்படும் புதிய பிரக்ஞையின் (consciousness) வெளிக் காட்டல்களே - மெய்யுள். சு.ரா.வின் ஜே.ஜே. குறிப்புகளிலிருந்து வில்லியம் பரோஸின் குலைத்துப் போடும் நாவல்கள் வரை இதன் டிப்புகளே என்று புரிந்து கொண்டால் சரி. சகோதரி நிவேதிதா `அன்னை காளி'என்ற நூலில் கூறியது இன்னும் விளக்கமானது: `ஒரு சிந்தனை மற்ற காலகட்டத்தில் இடம் பெறும் மிகக்காட்டுமிராண்டித்தனமான கொலைகள், சித்திரவதைகள் அராஜகங்கள் அநியாயங்கள் கூட எதிர்வரப்போகும் அடிப்படைச் சிந்தனை மாற்றத்தின் குருட்டுத்தனமான வெளிக்காட்டல்கள் (பார்க்கவும் `அன்னை காளி') என்றார். (இன்றைய இலங்கைக்கு இது மிகப் பொருத்தமானது)

கவிஞர் ஆனந்த கூறிய பரிணாமம் அடையும் பிரக்ஞை பற்றி இன்று நம் எழுத்தாளர்கள் பிரக்ஞை உடையவர்களாய் இருக்க வேண்டும். இது பற்றித் தெரியாது, மு.த சிந்தனையில் ஏற்படுத்திய திருப்பு முனை பற்றி எவரும் பேசமுடியாது. 50 ஆண்டுகளுக்குப் பின் அவரது எழுத்து கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இது பற்றி இன்னும் தீவிரமாகச் சிந்திப்போமாக.

_______________________________________________

நன்றி: ஞாயிறு தினக்குரல் October 15, 2006



Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________