படைப்பாளிகளின் பட்டியல்: படைப்புலக அடக்குமுறை
"ஈழத்து இலக்கியத்தில் பரிசோதனை முயற்சிகள்" என்ற தலைப்பில் தினக்குரல் வாரமலரில் வந்த கட்டுரையொன்றை ஏற்கனவே பதிவாக்கியிருந்தேன். இம்முறை அக்கட்டுரையை விமர்சித்து ஒரு கட்டுரை தினக்குரலில் வந்துள்ளது. எதிர்வினைக் கட்டுரையில் பெரியளவில் குறிப்பிடக்கூடியவையில்லையென்று நான் கருதினாலும் அதையும் இங்குப் பதிவாக்குகிறேன். இங்கும் சொந்தப்பேரில் எழுதும் பிரச்சினை வருகிறது. ;-) ஏற்கனவே "பட்டியலிடுதல்" தொடர்பாக பெயரிலியுட்பட சிலரால் வலைப்பதிவுகளில் கதைக்கப்பட்டதென்பதையும் நினைவுபடுத்துகிறேன். _________________________________________________ படைப்பாளிகளின் பட்டியல் படைப்புலக அடக்குமுறை! -எம்.நவாஸ்சௌபி- படைப்பாளர்களை பட்டியல் படுத்தும் ஒரு நடைமுறை இலக்கிய உலகில் காணப்பட்டு வருகிறது. இதற்காக சரியான மதிப்பீடுகள் அல்லது அளவுகோல் பற்றிய ஒரு வரையறையை முன்வைக்காமல் இவ்வாறு பட்டியல் படுத்தும் முயற்சிகள் இன்னும் இடம் பெறுவது தான் பலவீனமான ஒரு விடயமாக இருக்கிறது. `தினக்குரல்' பனுவல் பகுதியில் `ஈழத்து இலக்கியத்தில் பரிசோதனை முயற்சிகள்' எனும் தலைப்பில் தாவிது கிறிஸ்ரோ - என்பவர் படைப்பு சார்ந்த பட்டியலுடன், பின் நவீனத்துவத்திற்கான பெருத்த கண்டனத்தையும் எழுதியிருந்தார். அவரிட்ட பட்டியலும் புதியதல்ல. இதற்கு முன்னும் பட்டியலிட்டவர்களினால் காட்டப்பட்டுள்ள அனேக பெயர்கள் இதில் இடம் பெற்றிருப்பதையும் அறிய முடிகிறது. அவர்களது பெயர்களை நானும் சொல்வது மீண்டும் ஒரு பட்டியலை நானும் இடுவதாய் ஆகி விடும் என்பதால் அதிலிருந்து தவிர்ந்து கொள்கிறேன். படைப்புலகில் பரிசோதனை முயற்சிகள் என்று எதுவுமில்லை அவை படைப்புகளின் `வித்தியாசம்' என்று தான் பார்க்கப்பட வேண்டும். ஒரு படைப்பின் வாசிப்பை ஒரு சார்பாக கொண்டு ஏனைய படைப்புகளை புறம் தள்ளுவது என்பது படைப்புலக அடக்கு முறையாகும். தாவிது கிறிஸ்ரோ எழுதிய பரிசோதனை முயற்சிகள் என்ற கதையாடல் படைப்புலகின் வித்தியாசங்கள் என்று திருத்தப்பட வேண்டியது. இவ்வாறு ஒரு பட்டியலுக்குள் உள்வாங்கப்படுகிறவர்கள் ஒரு வரையறைக்குள்ளானவர்களாக ஆளாக்கப்படுகிறார்கள் என்பது ஒரு மறைமுகமான உளவியல் பார்வையாகும். இது அவர்களின் விசாலமான படைப்புச் செயற்பாட்டை குறுகியதாக்கி ஒரு முகப்பட்ட பார்வையை அவர்களது படைப்புகளுக்கு கொடுத்து விடுகிறது. ஆனால் படைப்பு என்பது பன்முகப்படுத்தப்பட்ட பார்வையினைக் கொண்டது. அதனை வாசகர்கள் தங்களது வாசிப்பு பிரதி மூலம் அப்படைப்பின் வேறுபட்ட கூறுகளையும் தங்களது ஆளுமைகளுக்கேற்ப ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக உணர்ந்து கொள்வார்கள்.இந்த வகையில் விமர்சனம் என்பதும் ஒரு படைப்பிற்கு போலித்தன்மையை உருவாக்கி விடுகிறது. அப்படைப்பின் பன்முகத் தன்மையை அது அழித்து விடுகிறது என்பது எனது அபிப்பிராயம். ஒரு படைப்பின் பரிசோதனை முயற்சியை அளவிட வித்தியாசமான உருவ அமைப்பை அடிப்படையாகக் கொள்வது தவறான ஒரு புரிதலாகும். ஒரு படைப்பிற்கு உருவ அமைப்பு என்பது கூட நிலையான ஒரு விடயமல்ல. அது மாறிக் கொண்டு வந்த வரலாறு நம்மிடமுண்டு மரபை உடைத்துக் கொண்டு புதிய கவிதை அமைப்பு உருவானது. புதியதை உடைத்துக் கொண்டு நவீன கவிதை அமைப்பு உருவானது என்ற கதைகள் இதற்கு சான்று பகிர்கின்றன. படைப்பியலைப் பொறுத்தவரை மரபு, புதியது, நவீனம், பின் நவீனம் என்ற எந்த சித்தாந்தங்களுமில்லை என்பதே எனது கருத்து. இவை குறிப்பிட்ட ஒரு காலத்தின் தேவையை மட்டும் திருப்திப்படுத்துகின்ற கதையாடல்களாக இருப்பவை. இந்த சித்தாந்தங்கள் எதுவும் நிலையான இருப்புக் கொள்ள முடியாமல் காலத்தால் புறம் தள்ளப்பட்டிருப்பதை சங்க காலத்திலிருந்து எம்மால் பார்க்க முடிகிறது. இது தவிர்க்க முடியாததுமாகும். இத்தகைய கருத்துச் சமர்களுக்கு அப்பால் உணர்வுகளை மொழிப்படுத்தும் படைப்புலகம் தன் பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கிறது. கவிதை எல்லாக் காலத்திலும் கவிதையாகவே இருக்கிறது. இவர்களுடைய மதிப்பீடும் அளவுகோலுமே அவற்றை தப்பான திசைக்கு அழைத்துச் செல்கின்றது. ஒரு படைப்பை மதிப்பிடும் பணி இன்னொரு படைப்பாளியினுடையது அல்ல. அவ்வாறான மதிப்பீட்டில் தன் படைப்பு சார் பண்புகளையே அவர் நிறுவ முனைவது குறிப்பிட்ட படைப்பின் பன்முகத்தை இல்லாது செய்கிறது. அது வாசகர்களின் வாசிப்பு மதிப்பீடாக முன்வைக்கப்படும்போதுதான் படைப்பாளியினுடைய உழைப்பிற்கான உண்மையான ஒரு வெகுமதியை கொடுப்பதாக காண முடிகிறது. எனவே, படைப்புகளுக்கும் சித்தாந்தங்களுக்குமிடையில் ஓர் தடை கல்லாக வாசகர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். படைப்புலக கருத்தியல் இவ்வாறிருக்க, பின் நவீனத்துவம் பற்றிய எதிர்வினைகள் இப்போது ஆங்காங்கே மின்னுகின்றன. இது `பெரு வெளி' எனும் சஞ்சிகையின் வருகைக்கு பின்புதான் என்பதையும் தாவிது கிறிஸ்ரோவின் கட்டுரையில் நன்றாக அறிய முடிகிறது. இவ்வாறு பின் நவீனத்துவ எதிர்வினையை செய்பவர்கள், தங்களது சொந்த பெயரில் எழுதிய கட்டுரைகள் எதனையும் காண முடியாமலிருக்கிறது. எந்த கருத்தையும் தனது சொந்தப் பெயரில் சொல்வதற்கான முதுகெலும்புடைய பேனையை வைத்துக் கொண்டு அவர்கள் எழுதிக் கொண்டால் அதன் பின்புலத்தையும் அவர்களுடைய எழுத்துக்கப்பால் அறிய உதவுமே என்பது எனது நப்பாசை. ____________________________________ நன்றி: ஞாயிறு தினக்குரல் December 03, 2006 Labels: இலக்கியம், ஈழ இலக்கியம், எழுத்தாளர், படைப்பாளி, விமர்சனம், விவாதம் |
"படைப்பாளிகளின் பட்டியல்: படைப்புலக அடக்குமுறை" இற்குரிய பின்னூட்டங்கள்
எழுதிக்கொள்வது: tamilnathy
இந்தப் பட்டியலிடும் அரசியல் பற்றி நானும் பேசவேண்டுமென்றிருந்தேன். ஈழத்து சிறுகதை என்று வரும்போது சில குறிப்பிட்ட பெயர்களே தொடர்ந்து வரும். கவிதை என்று வரும்போதும் பட்டியலிடுவதில் பெரிய மாறுதலைக் காணமுடியாது. நடந்த ஒரே தடத்தில் மானுடம் நடந்துகொண்டிருப்பதில்லை. எழுத்தும் அப்படித்தான். படைப்பாளிகளின் பட்டியலில் புதியவர்களின் பெயர்களும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.தவிர தமிழக இலக்கியகாரர்களும் ஈழத்து இலக்கியம் பற்றி பட்டியலிடும்போது தொடர்ந்து ஒரே பெயர்களையே குறிப்பிடுட்டு வருகிறார்கள்.சரியான தரவுகளைக் கண்டடைவதில் சோம்பலா... அல்லது தமிழகக்காரர்களோடு தொடர்புடைய பெருங்கவிதையாளர்கள் வளர்ந்துவருகிறவர்களைப் பற்றி கவனத்திற்குக் கொண்டுவர பின்னிற்கிறார்களா... இது செத்த வீட்டில் நான்தான் பிணம் கலியாண வீட்டில் நான்தான் மாப்பிள்ளை என்பது போலிருக்கிறது. சிறியவர்கள் எத்தனை பேர் நன்றாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை அடையாளம் காண மறுப்பதென்பது அடுத்த சந்ததிக்கு ஒன்றும் இல்லாமல் பண்ணுகிற வேலை.
11.7 8.12.2006
எழுதிக்கொள்வது: tamilnathy
இந்தப் பட்டியலிடும் அரசியல் பற்றி நானும் பேசவேண்டுமென்றிருந்தேன். ஈழத்து சிறுகதை என்று வரும்போது சில குறிப்பிட்ட பெயர்களே தொடர்ந்து வரும். கவிதை என்று வரும்போதும் பட்டியலிடுவதில் பெரிய மாறுதலைக் காணமுடியாது. நடந்த ஒரே தடத்தில் மானுடம் நடந்துகொண்டிருப்பதில்லை. எழுத்தும் அப்படித்தான். படைப்பாளிகளின் பட்டியலில் புதியவர்களின் பெயர்களும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்.தவிர தமிழக இலக்கியகாரர்களும் ஈழத்து இலக்கியம் பற்றி பட்டியலிடும்போது தொடர்ந்து ஒரே பெயர்களையே குறிப்பிடுட்டு வருகிறார்கள்.சரியான தரவுகளைக் கண்டடைவதில் சோம்பலா... அல்லது தமிழகக்காரர்களோடு தொடர்புடைய பெருங்கவிதையாளர்கள் வளர்ந்துவருகிறவர்களைப் பற்றி கவனத்திற்குக் கொண்டுவர பின்னிற்கிறார்களா... இது செத்த வீட்டில் நான்தான் பிணம் கலியாண வீட்டில் நான்தான் மாப்பிள்ளை என்பது போலிருக்கிறது. சிறியவர்கள் எத்தனை பேர் நன்றாக எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை அடையாளம் காண மறுப்பதென்பது அடுத்த சந்ததிக்கு ஒன்றும் இல்லாமல் பண்ணுகிற வேலை.
Normaly i am not interested in posting comments as an anonymous, but this time somehow it has happened. sorry about that. it is me-tamilnathy left that comment.
தமிழ்நதி,
வருகைக்கும் நீண்ட கருத்துக்கும் நன்றி.
நீங்கள் 'வருத்தப்பட்டு' வெளியிட்ட மற்றப் பின்னூட்டத்தைப் பின்புதான் பார்த்தேன்.
உங்களிடமிருந்து இரு பின்னூட்டங்கள் வந்திருந்தன, ஒன்று அனாமதேய வசதிக்குள்ளால், மற்றது புளொக்கர் முகவரிக்குள்ளால்.
மற்றப்பின்னூட்டத்தை வெளியிட்டிருக்க வேண்டும்.