Tuesday, January 30, 2007

மெல்பேர்ண் எழுத்தாளர் விழா 2007 - தொகுப்பு

ஆண்டுக்கொருமுறை அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடாத்தும் எழுத்தாளர்விழா இம்முறை மெல்பேணில் நடைபெற்றது.
கடந்த சனிக்கிழமை - 27.01.2007 அன்று காலை பத்துமணியளவில் இவ்விழா தொடங்கியது. இவ்விழாவில் ஈழத்தின் மூத்த படைப்பாளிகள் மூவர் சிறப்பிக்கப்பட்டனர். நாட்டுக்கூத்தொன்றும் இடம்பெற்றது.
எஸ்.பொ, முருகபூபதி, கலைவளன் சிசு. நாகேந்திரன், காவலூர் ராசதுரை, 'சின்னமாமியே' நித்தி கனகரத்தினம், அருண் விஜயராணி, இளைய பத்மநாதன் என்று ஓரளவு பிரபலமானவர்கள் கலந்து கொண்ட விழா இது.

திரு.லெ.முருகபூபதி அவர்களின் தலைமையில் தொடங்கிய இவ்விழாவில் முதலாவதாக கருத்தமர்வு ஒன்று இடம்பெற்றது.
இதில், பவள விழாக்காணும் எழுத்தாளர் எஸ.பொ 'தமிழில் சிறுகதை - தோற்றம் - வளர்ச்சி - மாற்றம்' என்ற தலைப்பில் உரையாற்றினார். உரையின் முடிவில் கேள்விகளுக்கான நேரம் ஒதுக்கப்பட்டது. என்வரையில் அவ்வெழுத்தாளர் விழாவின் முக்கிய அங்கமாக இவ்வுரை இருந்தது. எஸ.பொ மொத்தமாக நான்குமுறை ஒலிவாங்கியடியில் வந்தார். ஒலிப்பதிவையும் இணைக்க நினைப்பதால் அவைபற்றித் தனியப்பதிவு போடலாமென்று நினைக்கிறேன். ஒரிடத்தில், தனக்கேயுரிய பாணியில் "சிறுகதை இலக்கியம் மீளவும் உயிர் பெறுவது புலம்பெயர்ந்தோரிடமிருந்து தான்" என்று சொல்லிவைத்தார்.

அதே கருத்தரங்கில் திருமதி பாமினி பிரதீப், கலாநிதி சந்திரலேகா வாமதேவா (வலைப்பதிந்து வந்த சந்திரலேகா இவரா?) ஆகியோர் 'எழுத்தாளர் விழாக்களில் சமூகப்பங்களிப்பு' என்ற தலைப்பில் கருத்தாடினர். நான்கைந்து வருடங்களின் முன்பு நடந்த விழாவில் அரங்கு நிறைந்த மக்கள் வந்ததாகவும் இப்போது மிகமிகக் குறைந்துவி்ட்டதையும் மையப்படுத்தியே விவாதம் இருந்தது. (அன்றைய காலை அமர்வில் வந்தவர்கள் அனைவரையும் சேர்த்து மொத்தம் அறுபது பேர் மட்டுமே. விழாவுடன் தொடர்பில்லாத எம்மைப்போல் வெளியாட்கள் ஒரு பதினைந்து பேர்தான் வரும்.)

'தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளில் சிறுவர் நாடகம்' என்ற தலைப்பில் திரு. அ.சந்திரகாசன் மாவை நித்தியானந்தன் அவர்கள் உரையாற்றினார்.

பின் 'சின்ன மாமியே புகழ்' நித்தி கனகரத்தினம் 'தமிழர் உணவு நாகரிகம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மரக்கறி, கீரை, கிழங்கு வகைகளுக்கு உலகப்பயன்பாட்டுக்கென தமிழின் வேரிலிருந்தே சொற்கள் பெறப்பட்டன என்பதே அவரின் உரையுடைய அடிப்படை. வல்லாரை, பொன்னாங்காணி, கத்திரி, பசளி, நாரத்தங்காய், இஞ்சி என்பவற்றுக்கான வேற்றுமொழிப் பெயர்கள் எப்படி தமிழில் இருந்து போயின என்ற தொனியில் கதைத்துக்கொண்டிருந்தார். இந்த வரலாறுகளை மூடிமறைத்துக்கொண்டிருக்கும் தாவரவியல் ஆய்வாளரை அடிக்கடி கண்டித்துக்கொண்டும், தான் எப்படி யார் யாருடன் இது தொடர்பாக சண்டைபிடித்தேன் என்பதையும் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார். இன்னும் நீளமான பெயர்ப்பட்டியலொன்றை வைத்திருந்தார், ஆனால் மத்தியானச் சாப்பாட்டு நேரமென்பதால் அவரை விரைவில் முடிக்கச்சொல்லி விட்டார்கள்.
அன்றைய விழாவில் அவுஸ்திரேலியக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பொன்று 'வானவில்' என்ற பேரில் வெளியானது. அதில் நித்தி கனகரத்தினம் அவர்களின் கவிதையொன்றும் இருந்ததைப் பார்த்தேன். 'அம்மாவின் பழஞ்சோற்றுக் குழையலும் பூவரசங்குழையும்' என்ற தலைப்பில் அது இருந்தது. கவிதை தொடங்குகிறது இப்படி:
கீரை கிழங்கு மரவள்ளி கத்திரிக்காய் பால்கறியும் பொரித்த முருங்கைக்காய் ..................................

[நித்தி கனகரத்தினம் பேசுகிறார். பின்னாலிருப்பவர் மருத்துவக் கலாநிதி வேலுப்பிள்ளை கருணாகரன் என்று நினைக்கிறேன்.]

பின் மதிய உணவு. விழா ஏற்பாட்டாளரால் அனைவருக்கும் இலவச மதிய உணவு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. பாயாசமும் இருந்தது.

அடுத்ததாக கவிதைச் சமர் இடம்பெற்றது.
'ஆணாதிக்கமா? அதற்காய் பெண்ணாதிக்கமா??
பெண்ணடிமைத்தனமா? அதனால் ஆணாதிக்கமா??'
என்ற தலைப்பில் மனோ ஜெகேந்திரன், செளந்தரி சிவானந்தன் என்ற பெண்களிருவர் மாறிமாறி கவிதை வாசித்தனர்.

பின்னர் நூல் விமர்சன அரங்கு இடம்பெற்றது.
தலைமை: திருமதி ஜெயந்தி விநோதன்

1.துவிதம் (கவிதை) - ஆழியாள்
விமர்சனம்: திரு. குலம் சண்முகம்
2.ஈடு (நாடகம்) - எஸ்.பொ, அ.சந்திரகாசன்
விமர்சனம்: திரு.எஸ.சூசைராஜா
3. நினைவுக் கோலங்கள் (சிறுகதை) - லெ.முருகபூபதி
விமர்சனம்: செல்வி.ஜெயசக்தி பத்மநாதன்
4.கொஞ்சும் தமிழ் (சிறுவர் இலக்கியம்) -அம்பி
விமர்சனம்: திரு.எட்வர்ட் பிலிப் மரியதாசன்
5.பனிக்குள் நெருப்பு (விமர்சனம்) - எஸ்.பொ
விமர்சனம்: திரு.செ.சிவசம்பு
6.அம்மா என்றொரு சொந்தம் (சிறுகதை) - உஷா ஜவகர்
விமர்சனம்: திரு.கே.எஸ்.சுதாகரன்
7.சிறைப்பட்டிருத்தல் (போட்டிக் கதைத்தொகுப்பு)
விமர்சனம்: ஆவூரான்
8.மொழிபெயர்க்கப்பட்ட மெளனம் (நேர்காணல்) - லதா
விமர்சனம்: திருமதி உதயா சிங்கராசா
9.ஞானம் (சஞ்சிகை)
விமர்சனம்: திரு.எஸ். கிருஷ்ணமூர்த்தி.

விமர்சனங்களுக்கான பதிலுரையை எஸ்.பொ வும் முருகபூபதியும் நிகழ்த்தினர். 'கொஞ்சும் தமிழ்' என்ற சிறுவர் இலக்கிய நூலை எழுதிய கவிஞர் அம்பி அவர்கள் இறுதிநேரத்தில் சுகவீனமுற்றதால் விழாவில் கலந்துகொள்வில்லை. எனவே அந்நூல் உருவாக்கத்தில் கூடநின்று பணியாற்றியவர் என்ற முறையில் எஸ.பொ.வே பதிலுரைத்தார். ஆறுஇலட்சம் இந்திய ரூபாய்கள் செலவழித்து இப்புத்தகம் அச்சிடப்பட்டதாகச் சொன்னார். உண்மையில் மிகமிகத் தரமான வடிவத்தில் புத்தகம் வந்துள்ளது. கண்ணைக்கவரும் நிறப்படங்களும், ஓவியங்களும் உள்ளன.

இத்துடன் பகல் விழா நிறைவு பெற்றது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இரவு நிகழ்ச்சிகள் மாலை ஏழு மணிக்குத் தொடங்கின.

முதலில் ஒரு கவியரங்கம். பாடும்மீன் சு.சிறிகந்தராசா தலைமையில் சில கவிஞர்கள் கவிமழை பொழிந்தனர் (கவியரங்கத் தாக்கம்;-)).
'தங்கத் தாத்தா' சோமசுந்தரப் புலவரின் பேரனார் சோ.இளமுருகனார் பாரதி அவர்களும் இதிற் கலந்துகொண்டார்.

அதைத்தொடர்ந்து அன்றை விழாவின் முக்கிய பகுதியான படைப்பாளிகளுக்கான பாராட்டு நிகழ்வு தொடங்கியது. விருதுபெறும் மூவரில் எஸ.பொ, காவலூர் இராசதுரை ஆகியோர் 75 ஆவது வயதில் பவள விழா காணுகின்றனர். மற்றவரான சிசு.நாகேந்திரன் ('அந்தக் காலத்து யாழ்ப்பாணம்' எழுதியவர். இந்நூல் பற்றி சந்திரவதனா ஒரு பதிவு எழுதியிருந்தார்). 85 வயதை நிறைவு செய்கிறார். எனக்கென்றால் மூவரிலும் சிசு.நாகேந்திரன் அவர்கள்தான் துடிப்பாகத் தெரிந்தார்.[எஸ்.பொவுக்குச் சான்றிதழ் கொடுப்பவர் சந்திரலேகா வாமதேவா.
பின்னால் இருப்பவர்கள் இடமிருந்து வலமாக:
கலைவளன் சிசு.நாகேந்திரன், சட்டத்தரணி ரவீந்திரன், ஓவியர் ஞானம்.]

விருது பெறும் மூவரில் இருவர் மட்டுமே மேடையில் இருந்தனர். அன்று காலையில் ஓடியாடித் திரிந்த காவலூர் இராசதுரையை மேடையில் காணவில்லை. இடையில் முருகபூபதி அறிவித்தார், சற்றுமுன்னர்தான் திடீரென்று உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று.

மற்ற இருவருக்கும் விருதும் சான்றிதழும் வழங்கப்பட்டன. அவர்களின் கலைச்சேவைகளைக் குறிப்பிட்டு தனித்தனி மடல்கள் வாசிக்கப்பட்டன.
(இம்மூவரைப்பற்றியும் விழாக்குழுவினர் வெளியிட்ட சேவைக் குறிப்புக்களை நேரம் கிடைத்தால் தட்டச்சி வெளியிடுகிறேன். இளைய தலைமுறையினர் பலர் இவர்கள் பற்றி அறிய உதவும்.)


அடுத்ததாக, வானவில் கவிதைத் தொகுதி வெளியிடப்பட்டது. 31 கவிஞர்களின் கவிதைகள் வெளியிடப்பட்டன. இவர்களின் இருவர் அமரராகி விட்டனர். முன்பு எங்களோடு வலைப்பதிந்த தெய்வீகனின் கவிதையொன்றும் இடம்பெற்றுள்ளது.

இறுதி நிகழ்வாக அண்ணாவியார் இளைய பத்மநாதனின் நெறியாள்கையில் சிட்னி கலைஞர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 'யாழ்பாடி' நாட்டுக்கூத்து இடம்பெற்றது.


['யாழ்பாடி' நாட்டுக்கூத்தின் இறுதியில் மங்களம் பாடும் நேரம்.
நடுவில் தாடியுடன் யாழ்பாடி பாத்திர நடிகனாக நிற்பவர்தான் அண்ணாவியார் இளையபத்மநாதன்.]

பின்னர் அருண் விஜயராணி அவர்களின் நன்றியுரையோடு விழா நிறைவுற்றது.

காலை அமர்வைவிட இரவு அமர்வுக்கு அதிகம் பேர் வந்திருந்தனர். வேலை காரணமா? அல்லது கூத்துப்பார்த்தலா?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விழாப்படங்கள் சிலவற்றை எனது வசந்தம் வலைப்பதிவில் இடுகிறேன்.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"மெல்பேர்ண் எழுத்தாளர் விழா 2007 - தொகுப்பு" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (30 January, 2007 13:52) : 

பதிவுக்கு நன்றி வசந்தன்.

 

said ... (30 January, 2007 14:06) : 

எழுதிக்கொள்வது: Kana Praba

சுடச்சுடத் தந்தமைக்கு நன்றி,

14.33 30.1.2007

 

said ... (30 January, 2007 15:33) : 

வசந்தன்,
தகவல்களுக்கு மிக்க நன்றி.
ஆண்டுதோறும் இப்படியான விழாக்கள் புலம்பெயர் நாடுகளில் நடப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

நீங்கள் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர்கள் பற்றி இதுவரை அறிந்ததில்லை. அவர்களின் குறும் படைப்புக்கள் ஏதாவது இருந்தால் பதிவிலிடுங்களேன்.

மிக்க நன்றி.

 

said ... (30 January, 2007 22:08) : 

பதிவுக்கு நன்றி வசந்தன்

 

said ... (31 January, 2007 03:14) : 

எட உங்க பாரடாப்பா புதுமைய!
ஷ்ரேயா முதலாவதா வந்து பின்னூட்டம் போட்டிருக்கிறா.

வருகைக்கு நன்றி.

கானா பிரபா, வெற்றி, சின்னக்குட்டி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 

said ... (31 January, 2007 03:21) : 

வசந்தன்,
/*கானா பிரபா, வெற்றி, சின்னக்குட்டி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.*/

இப்பிடி எல்லாருக்கும் ஒரே பின்னூட்டத்திலை பதில் சொன்னால் உங்களின் பதிவு தமிழ்மணத்தின் முகப்பில் கன நேரம் தெரியாது. அதோட கன பேரைச் சென்றடையாது. அதனால நண்பர் இ.கொ வின்ரை பாணியைப் பின்பற்றுங்கோ. ஒவ்வொருவருக்கும் தனிப்பதில் பதில் போடேக்கை பின்னூட்டம் இட்டவரிடம் சும்மா ஒரு கேள்வியையும் கேட்டு வைக்கவேணும்.அப்பதான் அவர் திரும்பி வந்து பதில் சொல்ல, அதை அனுமதிக்க...பின் உங்கள் பதிவு தமிழ்மணத்தின் முகப்பில் இருக்கும்... இதையெல்லாம் நீங்கள் இ.கொத்தரிட்டை படிக்கவேணும்.:)))

 

said ... (31 January, 2007 05:54) : 

//கலாநிதி சந்திரலேகா வாமதேவா (வலைப்பதிந்து வந்த சந்திரலேகா இவரா?) //

yes.

http://uyirppu.blogdrive.com

in thozhiyar

http://uyirppu.yarl.net

-Mathy

 

said ... (31 January, 2007 13:01) : 

எழுதிக்கொள்வது: கார்திக்வேலு

//அவர்களின் குறும் படைப்புக்கள் ஏதாவது இருந்தால் பதிவிலிடுங்களேன்.//
அதே !

நன்றி வசந்தன்.

13.24 31.1.2007

 

said ... (01 February, 2007 12:17) : 

அவரே தான் இவர்

 

said ... (01 February, 2007 12:45) : 

வசந்தன்

நானுநதான் அவுஸ்ரேலியாவில் இருக்கிறேன், ம்ம்ம்.... குடுத்து வைச்சவர்கள் நீங்கள் எல்லாரும்.
அது சரி, //'தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளில் சிறுவர் நாடகம்' என்ற தலைப்பில் திரு. அ.சந்திரகாசன் அவர்கள் உரையாற்றினார்// என்கிறீர்கள், அப்படியானால்
"ஈடு (நாடகம்) - எஸ்.பொ, அ.சந்திரகாசன்" இது சிறுவர் நாடகமா?

 

said ... (01 February, 2007 19:49) : 

கானா பிரபா,
எண்டாலும் உமக்கு நக்கல் அதிகம்தான்.
சனிக்கிழமை நடந்த நிகழ்வை செவ்வாய்க்கிழமை பதிவாக்கியிருக்கிறன்.
நீரென்னடா எண்டால் "சுடச்சுட" வோ?

வெற்றி,
நீர் இப்ப ஆலோசனை சொல்லிறீரோ, இ.கொத்தனாரை நக்கலடிக்கிறீரோ?

மதி, கானாபிரபா,
சந்திரலேகாவை உறுதிப்படுத்தினதுக்கு நன்றி.

எங்களைப் போல அலட்டல் பதிவுகள்தான் எழுதத் தேவையில்லை; உப்பிடியான விழாக்கள் தொடர்பான அறிவிப்புக்களையும் விழாவில என்ன நடந்தது எண்ட தொகுப்பையுமாவது உவையள் வலைப்பதிவில எழுதலாமெல்லோ? அதுவும் விழா ஏற்பாட்டாளராக இருந்துகொண்டு உதுகளைச் செய்யாமல் விடுறது எப்படி?
பிறகு விழாவில வந்து நிண்டுகொண்டு 'சனங்கள் ஏன் இந்த விழாவுக்கு வருகுதுகளில்லை?' எண்டு கருத்தரங்கு வேற வைக்கிறா. ;-)

ஆரேன் நேரில கண்டா சொல்லுங்கோ.

 

said ... (01 February, 2007 22:14) : 

நல்ல பதிவு. நன்றி. போன வருஷம் இங்கு சிட்னியில நடந்தது. நல்ல கூட்டம் இருந்த மாதிரி ஞாபகம்.

வெற்றி,
//நீங்கள் குறிப்பிட்டுள்ள எழுத்தாளர்கள் பற்றி இதுவரை அறிந்ததில்லை.//
அந்தப் பட்டியலில இருக்கிற பலரைப் பற்றிய குறிப்புகள் இங்கு உள்ளன.

 

said ... (02 February, 2007 06:24) : 

கார்த்திக் வேலு,
வருகைக்கும் வேண்டுகோளுக்கும் நன்றி.

செல்லி,
இதைத்தான் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுறது எண்டுறது.
சிறுவர் நாடகம் பற்றி ஒருவர் கருத்துரைத்தால் அவர் எழுதுவதெல்லாம் சிறுவர் நாடகமா?
(கொத்து ரொட்டி பற்றி நீங்கள் பதிவு போட்டால், நீங்கள் சமைக்கிறதெல்லாம் கொத்து ரொட்டி ஆகிவிடுமா?;-) )
'ஈடு' என்பது முழுக்க முழுக்க அரசியல்; ஈழத்தமிழரின் அரசியல்; இலங்கைத்தீவில் ஈழத்தமிழன் சிங்களவனால் ஒடுக்கப்பட்டதும், தமிழன் தனக்குள்ளேயே ஒடுக்கியதும், ஒடுக்கப்பட்டதும், சாதி சமய சண்டைகள் அடங்கிய ஈழத்தமிழரின் அரசியலைச் சொல்லும் நாடகம் தான் "ஈடு".

கனகர்,
வருகைக்கும் இணைப்புக்கும் நன்றி.

 

said ... (02 February, 2007 07:02) : 

கனக்ஸ்,
/*அந்தப் பட்டியலில இருக்கிற பலரைப் பற்றிய குறிப்புகள் இங்கு உள்ளன. */

மிக்க நன்றி.

வசந்தன்,
/* நீர் இப்ப ஆலோசனை சொல்லிறீரோ, இ.கொத்தனாரை நக்கலடிக்கிறீரோ?*/

இதிலை என்ன நக்கல் இருக்கு, huh?:)
இதெல்லாம் சும்மா சின்ன சுழிவு நெளிவுகள். இவ்வளவு கால இருக்கிறீர், இதெல்லாம் தெரியாதோ :))

 

said ... (02 February, 2007 21:47) : 

எழுதிக்கொள்வது: johan-paris

வசந்தன்!
செய்திக்கும்; விபரிப்புக்கும் நன்றி!
பார்வையாளரக் கூட்ட வேண்டுமென்றால்; தென்னிந்தியத் துணை நடிகர் ஒருவரைக் கூப்பிட்டிருந்தால் களை கட்டியிருக்கும்.
யோகன் பாரிஸ்


12.8 2.2.2007

 

said ... (03 February, 2007 00:29) : 

வசந்தன்
கடந்த வருடம் மெல்பேர்ண்ணில் நடந்த எழுத்தாளர் விழாவில் நானும் கலந்து கொண்டேன்.
இம்முறை அழைப்பு வந்திருந்தும் போக இயலாது போய் விட்டது.
விபரமான பதிவுக்கு நன்றி.

மெல்பேர்ண் பொங்கல் விழாவுக்குப் போனீர்களா?

 

said ... (04 February, 2007 19:25) : 

எழுதிக்கொள்வது: k.s.suthakar

எழுத்தாளர் விழா பற்றிய பதிவுகளைச் செய்த வசந்தனுக்கு எனது நன்றிகள். விழாவிற்கு அ.சந்திரகாசன் அவர்கள் வருகை தரவில்லை. எனவே அதற்கு தலைமை வகிக்க இருந்த மாவை.நித்தியானந்தன் அவர்களே "தமிழர் புலம் பெயர்ந்த நாடுகளில் சிறுவர் நாடகம்" என்பதைப் பற்றிப் பேசினார்.

அடுத்தது 'வானவில்' கவிதைத் தொகுப்பில் எழுதியிருக்கும் தெய்வீகன் என்பவர் ஒரு பெண் எழுத்தாளர் ஆவார்.அவர் புனைபெயரில் எழுதியுள்ளார்.

விழாக்குழுவில் இருக்கின்றபடியால் இத்தகவலைத் தங்களுக்குத் தருகின்றேன்.

நன்றி.

கே.எஸ்.சுதாகர்

19.45 4.2.2007

 

said ... (05 February, 2007 14:56) : 

வெற்றி,
வருகைக்கும் உந்த நெளிவு சுழிவுகளைச் சொன்னதுக்கும் நன்றி.
என்னண்ணை செய்யிறது?
உந்த நெளிவு சுழிவுகள் ஏதும் தெரியாமலே அப்பாவியளா ரெண்டுவருசம் வலைப்பதிவில குப்பை கொட்டீட்டம்.
ஏதோ இப்பவெண்டாலும் நீங்கள் வந்து நாலு விசயம் சொல்லித் தாறியளே! அதே காணும்.

பிரபாவுக்கு இப்ப எரியுமே??? ;-) ;-) ;-)

(சிலரின்ர பேர் அனானியாத் தெரியுது. அதில வெற்றியும் ஓராள்).
______________________

யோகன்,
வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி.
விழாக்குழுவினரும் இந்தப்பதிவைப் பாத்திருக்கினம். வாறமுறை ஏதாவது செய்தாலும் செய்யக்கூடும்.
வாறமுறை பிரபாவின்ர பக்கம் தானே?
______________________
சந்திரவதனா,
போனமுறை நான் போகேல.
இந்தமுறை தைப்பொங்கல் விழாவுக்குப் போகேல.

 

said ... (05 February, 2007 15:26) : 

ஏதோ தெரியாத ஒண்டைக் கேட்டா, அதுக்கு என்ர கொத்துரொட்டிக்கு நக்கலோ?
பரவாயில்ல, பிழைப்பில ம்ண் அள்ளிப் போட்டிடன் எண்டு எரிச்சல்போல.(பகிடிக்கு)
ம்...என்னத்தைச் சொல்ல.

 

said ... (06 February, 2007 13:18) : 

சுதாகர்,
நீங்கள் சொன்ன தகவலின்படி பதிவில் திருத்தம் செய்துவிட்டேன்.

ஆனால் தெய்வீகன் பற்றி நீங்கள் சொன்ன குறிப்பு தவறு.
அவர் ஆணேதான்.
அவரும் தெய்வீகன் பக்கம், அகரவலை என இரு வலைப்பதிவு வைத்திருந்தார்.
அகரவலையில் எழுதிய ஒரு கவிதைதான் வானவில் தொகுதியில் வெளிவந்துள்ளது.
அன்றைய விழாவுக்கும் தெய்வீகன் வந்திருந்தார்.

 

said ... (06 February, 2007 13:20) : 

சுதாகர்,
அதுசரி, எப்படி என் வலைப்பக்கத்தைத் தேடிப்பிடித்தீர்கள்?

 

said ... (07 February, 2007 10:56) : 

செல்லி,

ஒண்டைச் சொல்லிப்போட்டு பிறகு அடைப்புக்குறிக்குள்ள பகிடிக்கு, கோவியாதையுங்கோ, சும்மா சொன்னான், நக்கலாச் சொன்னனான் எண்டு விளக்கம் குடுக்கப்பட வேண்டிய நிலையில நானில்லை.
என்ரை பதிவில நீங்கள் தாராளமாக பகிடி பண்ணலாம்.
நான் தான் உப்பிடி பகிடி விட்டுப்போட்டு பிறகு 'நான் விட்டது பகிடி' எண்டு விளங்கப்படுத்திக்கொண்டிருக்கிறன் எண்டா நீங்களுமா?
;-(

 

post a comment

© 2006  Thur Broeders

________________