Thursday, January 11, 2007

மண்மண் திரைப்படம் பற்றி ஒருபக்கம் ஆகா ஓகோ என்றும் இன்னொரு பக்கம் திட்டித் தீர்த்தும் பலவாறான கருத்துக்கள் எழுதப்பட்ட நிலையில் நானும் எனக்குப்பட்டதைச் சொல்வோமென்று எழுதியது இப்பதிவு.ஈழத்துத் தமிழ்த்திரைப்படமாகப் பலராலும் கருதப்படும் 'மண்' படத்தின் கதை ஈழத்தின் வன்னியை மையமாக வைத்து நடக்கிறது. பெரியளவில் பேசப்படாமற்போன, தற்போது பலராற் பேசத் தயங்கப்படும் களமொன்றை திரைக்கதை கொண்டிருக்கிறது. என்னைப்பொறுத்தவரை, அக்களமான சாதிப்பிரச்சினை, ஒடுக்குமுறை என்பவற்றை படம் ஓரளவு வெற்றிகரமாக வெளிப்படுத்தியுள்ளது. அந்தளவில் பாராட்டும் வரவேற்புமுண்டு.
பாராட்டப்பட வேண்டி அம்சங்களிருக்கும் அதேநேரம், ஏதோ புரட்சிகரமான, வித்தியாசமான படம் என்று தூக்கிவைத்து ஆடுமளவுக்கு இல்லாமல், வழமையான தமிழ்ச்சினிமா மாசாலக்கள் இரண்டொன்றைத் தூவி சிலசந்தர்ப்பங்களில் வெகுசாதாரண படமாகத் தோன்றும்படி வந்துள்ளதுதான் மண். அவை எவையென்று பின்னர் பார்ப்போம்.

முதலில் இதுவோர் ஈழத்துத் தமிழ்ப்படம் என்றளவில்தான் நானும் கருதிக்கொண்டிருந்தேன். அதற்கான கூறுகள் நிறையவேயுள்ளன.
கதைக்களம் நடக்கும் கனகராயன்குளப் பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்படவில்லையென்றாலும் அம்மண்ணை, மண்வாசனையை படத்தில் கொண்டுவருகிறார்கள். குளக்கட்டுப் பாதைகள், பற்றைகள், வயல்கள், முதிரைக் கட்டைகள் நட்டு முள்ளுக்கம்பி வரிந்த வயல்வேலிகள், தென்னந்தோப்புக்கள் என்று காட்சிகள் இயல்பாகவே கதைக்களத்துக்குப் பொருந்துகின்றன. படத்தில் அவ்வப்போது வரும், குளக்கரையில் தாழ்வாக விரிந்த பெருங்கிளைகளுடன் விசாலமாக வளர்ந்த மருதமரங்கள் எனக்குக் கிளர்ச்சியூட்டின.
ஈழத்தவரின் பேச்சுவழக்கில் படம் எடுக்கிறோமென்ற பேரில் சிலர் நடத்திய கூத்துப்போலில்லாமல் கதைக்களத்துக்குரிய பேச்சுவழக்கு பெருமளவு சரியாகவே பொருந்துகிறது. ஆனால் இடையிடையே தோன்றும் - மேடைநாடகத்தில் கதைப்பதுபோன்ற இழுவையுடன் கூடிய பேச்சுவழக்கைக் குறைத்திருக்கலாம்.

பெற்றோர் கொடுக்கும் தண்டனை முறைகள் - குறிப்பாக கண்ணில் மிளகாய்த்தூள் தூவுவது குறிப்பிட்டுச சொல்லவேண்டிய காட்சிகள். சின்னச்சின்ன விசயங்கள் பலவற்றில் நல்ல முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அப்படியே பச்சைமிளகாய் தின்னவிடும் தண்டனையையும் ஒரு காட்சியாக்கியிருக்கலாம்.

பூசி மெழுகிக்கொண்டு வரும் கதாநாயகர், நாயகி, பிறபாத்திரங்கள் என்றில்லாமல் மண்ணோடு ஒட்டிய பாத்திரங்கள் நன்றாகப் பொருந்துகின்றன. இதுவரை பார்த்த தமிழ்ப்பட நாயகிகளில் அதிகம் கவர்ந்தவர் இந்த இலட்சுமிதான். ஆலங்குளம், கரப்புக்குத்தி, குறிசுட்டகுளம்... என்றுவரும் சுற்றுப்புற ஊர்களின் பெயர்களோடு கதைக்களம் மிகமிக உண்மையாக இருக்கிறது. விடுமுறைநாட்களில் வயற்காவலுக்கும் ஆடுமாடு மேய்க்கவும் மாணவர்கள் (முதலாளிகளின் மகன்மாரும்) போகவேண்டிய யதார்த்தம் நன்றாக வந்திருக்கிறது.

இவைகள் சரியாக அமைந்தமைக்கு திரைக்கதையும் இயக்கமும் ஈழத்தவரே என்பதும் முக்கிய காரணம். கதைக்களத்தையும் மக்களையும் 'கதை நடந்த காலப்பகுதியில்' நன்கறிந்தவரென்பதால் இப்படி வந்தது. [இன்னும் சிலவற்றைச் சேர்த்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். குறிப்பாக வன்னியில் இன்றியமையாமற் போய்விட்ட ஆடுமாடுகளைப் பெருமளவில் காணவேயில்லை. ஒருமுறை பட்டியொன்று காட்டப்படுகிறது. மாடுகள் மேயாத, படுத்துக்கிடந்து தொல்லைப்படுத்தாத வன்னி வீதிகள் சற்று இடறுகின்றன. அதேபோல் நாயகன் குறும்படமெடுக்க வந்த நிகழ்காலமும் சரியாகக் காட்சிப்படுத்தப்படவில்லை. வீதிப்போக்குவரத்தில் நிற்கும் காவற்றுறையையோ, அங்கிங்கு ஓடித்திரியும் புலிகளின் வாகனங்களையோ காணவில்லை. இப்படத்தை வன்னியில் எடுக்க முடிந்திருந்தால் இவற்றைக் கொண்டுவந்திருக்கலாம் என்பதைக் காரணமாகச் சொல்லிக்கொள்ளலாம். எனினும் இது 'இந்தியப் படமாக' திரையிடப்பட்டதும் காரணமென்றுதான் தோன்றுகிறது]

இப்படத்தின் பின்னணி பற்றிய ஒரு சம்பவம் அண்மையில் படிக்க நேர்ந்தது. முதலில் திட்டமிடப்பட்டதிலிருந்து மாற்றங்களுடன்தான் இப்படம் திரையிடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் திரையிட வேண்டுமென்பதற்காக சிலகாட்சிகள் (தமிழீழக் காவற்றுறை சம்பந்தப்பட்ட காட்சியும் அதிலொன்று) நீக்கப்பட்டு அல்லது மாற்றியமைக்கப்பட்டு படம் இந்திய தணிக்கைக் குழுவின் அங்கீகாரம் பெறப்பட்டு வெளியிடப்பட்டது என்ற தகவலே அது. யதார்த்தத்தை மீறியதாகத் தெரியும் அக்கொலைக் காட்சிக்கு நீக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட காட்சிகளில் பதில் இருந்திருக்கக் கூடும்.
ஆக இந்தியத் தணிக்கைக் குழுவுக்கு ஏற்றாற்போல் தயாரிக்கப்பட்ட இப்படம் யாருக்குரிய திரைப்படம் என்ற கேள்வி இயல்பாகவே வருகிறது. 'ஈழத்துத் திரைப்படம்' என்று ஆவலோடிருந்த எனக்கு இது ஒருவித ஏமாற்றத்தையே தந்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை. சிலர், ஆணிவேரையே ஈழத்துத் திரைப்படமென்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

_______________________________________
இனி இப்படத்தை சராசரி தமிழ்ப்படமாகக் கருத வைப்பவற்றில் இரண்டொரு கூறுகளைப் பார்ப்போம்.

*** படம் தொடங்கி முக்கால் மணிநேரமாகியும் எதுவும் வரவில்லையென்று ஆச்சரியப்பட்டபோது அடுத்த நிமிடமே வந்தது தமிழ்ச்சினிமாவின் சாபக்கேடான பாடற்காட்சி. 'ஒரு படமெடுத்தால் கட்டாயம் சில பாட்டுக்களும் ஆட்டங்களும் இருக்கவேணும்; அதிலயும் கட்டாயம் ஒரு காதல் பாட்டு வேணும்' என்ற எழுதாத விதி இங்கும் பின்பற்றப்படுகிறது. இரண்டுபேர் காதலிக்கிறார்கள் என்பதைச் சொல்ல எங்கள் இயக்குனர்களுக்கு இருக்கும் மிகச்சுலபமான வழியாக ஒரு பாட்டுக்காட்சியைத்தான் கருதுகிறார்கள். அப்படித்தான் 'மண்' இயக்குனர் புதியவனும் நினைத்தாரோ என்னவோ?

*** BBQ பாட்டும் நடனமும்:
வெளிநாட்டிலிருந்து சுற்றுலாவுக்கோ இன்னபிற தேவைக்கோ தாயகம் வருபவர்கள் அங்கே குடிப்பதோ கூத்தாடுவதோ இல்லையென்று நான் சொல்ல வரவில்லை. வெளிநாட்டுச் சரக்கில் நாலைந்து போத்தல்கள் கொண்டுவந்து (அதற்கு வரிகட்டாமல் வருவதற்கு இவர்கள் படும்பாடு!) தங்கள் ஆடம்பரங்களை மண்ணின் மைந்தர்களுக்குக் காட்டமாட்டார்கள் என்றும் இல்லை. சொல்லப்போனால் சிலர் தாயகம் வருவதே அதற்குத்தான். வெளிநாட்டில் வெயிற்காலத்தில் எப்படி உடுத்துவார்களோ அதைவிடவும் குறைவாக உடுத்தி எங்கள் பெண்கள் வன்னியர்களுக்கு பாஸ் காட்டுவார்களென்பதையும் மறைப்பதற்கில்லை.

ஆனால் மண் படத்தில் இடம்பெற்ற இப்பாடற்காட்சி இப்படியான இயல்பைச் சொல்லும் நோக்கத்தின் பாற்பட்டதன்று. வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் தன் சொந்தங்கள், தெரிந்தவர்களுக்கு விருந்தொன்று வைக்கிறார் என்பதை வெளிப்படுத்தும் நோக்கமுமன்று. அல்லது பாடல்வரிகள் சொல்வதைப் போன்று வன்னிமக்களின் வாழ்வைச் சொல்வதற்காகப் புகுத்தப்பட்ட பாடற்காட்சியுமன்று.
இயக்குனருக்கு ஒரு ஆசையும் தேவையும் தெரிகிறது.. ஒரு நடனக்குழுவை வைத்து வண்டியையும் குண்டியையும் ஆட்டி வழமையான தமிழ்ச்சினிமாப் பாணியில் ஒரு பாடற்காட்சி தேவைப்படுகிறது. இன்றைய மொழியில் ஒரு 'குத்துப்பாட்டு'. 'உங்களுக்கு நாங்கள் எவ்விதத்திலும் சளைத்தவர்களில்லை'யென்பதை கோடம்பாக்கத்துக்கு நிரூபிக்கும் இலட்சியம் இயக்குனருக்கு இருந்திருக்க வேண்டும். அதற்கென்று கோடம்பாக்கத்திலிருந்தே நடன இயக்குனர் ஒருவர் நியமிக்கப்பட்டுத்தான் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
படத்துக்குச் சம்பந்தமில்லாமல், படம்பார்க்க வருபவரை கிளுகிளுப்பூட்டும் நோக்கத்தை மட்டும் கொண்டு சினிமாப் பொதுப்புத்தியோடு புகுத்தப்பட்ட பாடற்காட்சியாகவே அது தெரிகிறது. என்ன மாற்றமென்றால், கோடம்பாக்கம் கமராவைத் தூக்கிக்கொண்டு வெளிநாடு போகும்; இங்கு மாறி நடந்திருக்கிறது.

*** படத்தில் வரும் காதலை விளங்கிக்கொள்ள முடியவில்லை. நான் நினைக்கிறேன், படம் பார்த்த யாருக்குமே அது முடியாத விசயம். நாயகன் உண்மையில் காதலித்தானா இல்லையா என்பது தெளிவில்லை. முன்படத்தி்ல் வரும் காட்சிகள், அவன் மனமொத்துக் காதலிப்பதாகவே வருகிறது. காதலியை இழிவாய்ப் பேசியதற்காக நண்பனோடு அடிபடுகிறான். ஆனால் பின்னர் வரும் காட்சியில் அனைத்தும் திட்டமிட்டுச் செய்தாகக் காட்டப்படுகிறது. பொன்ராசுவைக் கொலை செய்யும் காட்சியின்பின் திரையில் வரும் வசனம்தான் இயக்குனர் படம்மூலம் சொல்ல வந்த கருத்தென்றுபடுகிறது. அந்தக் கருத்தை நியாயப்படுத்த வேண்டும்; கொலையாளியை நியாயப்படுத்த வேண்டும்; எனவே பொன்ராசுவை வில்லனாக்க வேண்டும். அல்லாதபட்சத்தில் சந்தர்ப்பவசத்தால், சமூகத்தின் தவறால் வெளிநாடு போகவேண்டிவந்த ஓர் அப்பாவியைக் கொலை செய்துவிட்டு புரட்சிவசனத்தைக் கருத்தாய்ச்சொல்லும் படத்தின் அபத்தம் உறைக்கும். இவை அனைத்துக்காகவும் படத்தின் இடையில் அடித்த குத்துக்கரணம்தான், பொன்ராசு எல்லாம் திட்டமிட்டே லட்சுமியை ஏமாற்றினான் என்ற கதை. இது பட இயக்கத்தில், திரைக்கதையில் மிகப்பெரிய பலவீனமாகவே எனக்குத் தோன்றுகிறது.

தகவற்பிழைகள், தர்க்கப்பிழைகள் என்பனவும் ஆங்காங்கே வருகின்றன.
படத்தில், 'காயாக்கன்னி' என்ற பேரில் நாயகனால் நாயகிக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது ஒருமரம். 'இந்த மரத்தைப்போல உறுதியாகவும் கன்னியாகவும் எங்கட காதல் இருக்க வேணும்' என்றும் சொல்லப்படுகிறது. அதேமரத்தில் நாயகனைக் கட்டிவைத்துவிட்டு மகன்(கொலையாளி) பேசும்போது 'விளாத்தி மரத்தைக் காட்டி என்ன சொன்னனி? வைரமான மரமோ?' என்று கேட்கிறார். காயாக்கன்னி விளாத்தியானது விளங்கவில்லை.

குறும்படமெடுக்க தாயகம் திரும்பிவரும் நாயகனுக்குச் சற்று இளைத்த தோற்றத்தைக் காட்டியிருக்கலாம். கதைப்படி குறைந்தபட்சம் முப்பத்தைந்து வயது கொண்டவர். பெண்கள் எப்படியென்றாலும், பொதுவாக புலம்பெயர்ந்த எங்கட ஆண் சிங்கங்கள் விரைவில் வயக்கெட்டுப்போவார்கள் என்றுதான் நினைக்கிறேன் ;-).

அடுத்து படத்தில் வரும் இயக்கம் சம்பந்தப்பட்ட காட்சிகள்:
கொலையாளி போராளியா இல்லையா என்பது நேரடியாகக் காட்டப்படவில்லை. ஆனால் அதைவைத்தே சப்பைக்கட்டு கட்ட முடியாது. அவனும் நண்பனும் 'ஜெயசிக்குறு நேரத்தில் ஆமிக் கொமாண்டர் இருந்த வீடு' பற்றிக் கதைக்கிறார்கள். அதைவிட குறும்படம் எடுக்க வந்தவருக்கு உதவிசெய்யவென்று நியமிக்கப்பட்டவர்கள்தாம் அந்த இருவரும். மேலும் பொன்ராசு பற்றி பழைய கோப்புக்கள் பார்த்து விவரத்தை உறுதிப்படுத்துகிறார்கள்.

படத்தில் காட்டப்படும் இயக்கம் விடுதலைப்புலிகளைச் சுட்டவில்லையென்பதும் வெறும் சப்பைக்கட்டுத்தான். தெளிவாகவே காலமும் இடமும் சொல்லப்படுகிறது. யுத்தநிறுத்த ஒப்பந்த காலத்தில் கனகராயன்குளம் புலிகளின் நிர்வாகப்பகுதிதான். அங்கிருக்கும் ஆயுதம் தாங்கியவர்கள் புலிகள் மட்டுமே.

BBQ பாட்டு முடியும் நேரத்தில் பொன்ராசுவைக் காணவரும் இயக்கத் தளபதிக்கிருக்கும் பாதுகாப்பு, குறைந்தபட்சம் ஒரு கேணல் தரத்தைக் காட்டுகிறது. உடனேயே அடையாளம் கண்டது ஒருபுறமிருக்க, அடுத்தகணமே பதினெட்டு வருசத்துக்கு முன்பு பழகியதுபோலவே 'என்னடா மச்சான்' என்று பேசத்தொடங்குவதும் இயல்பாகவே இல்லை.

கனகரயான்குளத்தில் கொலையாளி கைத்தொலைபேசியில் கதைக்கிறார். மறுமுனையும் வன்னிக்குள்தான் இருக்கிறது. வோக்கி ரோக்கியில் கதைப்பது போல் எடுத்திருக்க வேண்டிய காட்சியது.

கதையில் றிவோல்வர் வருகிறது. எங்காவது ஆவணமாகப் பத்திரப்படுத்தியிருந்ததைத் தூக்கிவந்துவிட்டார்களோ? அல்லது உண்மையில் புலிகள் தவிர்ந்த வேறு யாராவதுதான் கொலையாளிகளோ தெரியவில்லை. புலிகள்தான் என்று இயக்குனர் நினைத்திருந்தால் அவர்மனதில் இருக்கும் புலிகள் இயக்கம் எண்பதுகளுக்குப்பின் Update ஆகவில்லை போலுள்ளது.

_________________________________________
மேற்குறிப்பிட்டவற்றில் நிறைய விதயங்கள் பலருக்கு பொருட்படுத்தத் தேவைற்றவையாகவே இருக்கும். அவரவர் பார்க்கும் பார்வையில் மாறுபடும். என்வரையில் மணிரத்தினமோ புகழேந்தியோ எடுக்கும் படத்துக்கும் புதியவன் எடுக்கும் படத்துக்குமிடையில் வித்தியாசத்தை எதிர்பார்க்கிறேன். முன்னவற்றை ஒரு சினிமா என்றளவில் பார்ப்பதோடு பின்னதற்கு முட்டையில் மயிர்பிடுங்கிப் பார்ப்பேன்.

இந்தியர் ஒருவர் 'மண்' பார்ப்பது வேறு; நான் பார்ப்பதும் எதிர்பார்ப்பதும் வேறு.
அதுபோல் இந்தியர்களுக்கு 'மண்' காட்டுவது வேறு; எங்களுக்குக் காட்டப்பட வேண்டியது வேறு.

முடிவாக, ஈழத்தமிழ்ச் சமூகம் சார்ந்த இறுக்கமான பிரச்சினையை அடித்தளமாகக் கொண்டு அதைப்பற்றிப் பேசப்புறப்பட்ட(தாக நானும் பலரும் கருதும்) படம், சில தவறுகளாலும் இலக்கற்ற தன்மையாலும் வழமையான சினிமாப்படமாகிப்போனது.

_________________________________________
இந்தியாவில் ஜனரஞ்சக அந்தஸ்துடன் ஓடிய ஈழத்தமிழரின் முதலாவது திரைப்படம் இதுவென்று நினைக்கிறேன்.
பயணத்தில் தொடர்ந்து முன்னேற வாழ்த்து.

_________________________________________
ரெறறிஸ்ட் படத்தின் பின்னானவை போலவே, கொலையாளி சரணடையாத பட்சத்தில் 'மண்' படத்தின் தொடர்ச்சியாக நடப்பவை குறித்தும் திகிலூட்டும் படமொன்று எடுக்கலாம்.
கொலையாளி எப்பாடுபட்டாவது வன்னிக்குள்ளிருந்து தப்பவேண்டிய சூழ்நிலையில் நடப்பவை நிச்சயம் திகிலூட்டுபவையாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவரின் கொலை வன்னி நிர்வாகம்மீது ஏற்படுத்தும் அரசியல் பிரச்சினை, நிர்வாக நற்பெயர் இழுக்கு என்பவையும் சேர்ந்துகொள்ள நடக்கும் துரிதகதி விசாரணைகளும் தேடுதல்களும், பெரும்பாலும் முடிவில் நிகழப்போகும் இன்னொரு கொலையும் என்று ஒரு விறுவிறுப்புப் படம் பண்ணலாம்.

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"மண்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (11 January, 2007 14:05) : 

//இந்தியாவில் ஜனரஞ்சக அந்தஸ்துடன் ஓடிய ஈழத்தமிழரின் முதலாவது திரைப்படம் இதுவென்று நினைக்கிறேன்.//


இல்லை, ஈழத்தவரால் முழுமையாக எடுக்கப்பட்ட பொன்மணி படமும் இந்தியாவில் ஓடியது. சிங்களத் தமிழ்ப்படம் என்று கேலி பேசிய வாரப்பத்திரிகை ஒன்று வாங்கிக்கட்டிக்கொண்டது.

மண் படம் எப்படி உமக்கு கிடைச்சது என்பது ஆச்சரியம் மெல்பனிலை காட்டினவையே?

கேள்விப்பட்டவரை சில நெருடல்கள் எனக்குண்டு. குறிப்பாக மலையகத்தமிழர் மீதான பாகுபாடு. இதையே பெரிதாக்கி இந்தியத் தினகரன் பத்திரிகை விமர்சனம் செய்தது வருத்தம் தந்தது.
பார்த்திட்டுத் தான் சொல்லவேணும்.

 

said ... (11 January, 2007 14:48) : 

வசந்தன்.
இவ்வளவு யதார்த்தமாயும் அழகுணர்ச்சியோடும் விமர்சிப்பீர்கள் என்று நான் இதுவரை எண்ணியதில்லை.
அருமை அருமை . . படத்தைச் சொல்லவில்லை உங்கள் விமர்சனத்தைச் சொன்னேன்.
சென்னையில் பெருமளவில் பகல் காட்சிகள் மட்டுமே இந்த படம் ஓடியது.பத்தின் ஒளிப்பதிவாளர் எனது நண்பர் என்பதால் முதல் காட்சிக்கு அழைப்பு வந்தது போக முடியவில்லை.அதன் பின் பார்க்கலாமெண்டால் அடிகடி தியட்டர்கள் மாறிகொண்டே இருகிறது படம்.
சரியென பாடல்கள் மட்டும் பார்த்தேன்....நான் தவறுதலாக நிறைய எதிர்ப்பார்த்திருக்க கூடும்போல.

ஆனால் நீங்கள் ஒரு தேர்ந்த விமசகராகியிருகிறீர்கள் என்பது மட்டும் இப்போதைய எனது எண்ணம்.

 

said ... (11 January, 2007 14:55) : 

கானாபிரபா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பொன்மணி பற்றின தவலுக்கு நன்றி.
நான் நினைத்தேன், அப்படம் ஈழத்தில் மட்டும் திரையிடப்பட்டதென்று.

 

said ... (11 January, 2007 16:16) : 

This comment has been removed by a blog administrator.

 

said ... (11 January, 2007 16:19) : 

சோமிதரன்.. நீங்கள் உதவி இயக்கனராக பணியாற்றும் இயக்குனர் பேரரசுவின் படங்களை விட மண் நன்றாக இருந்திருக்கும் என்பதே எனது கருத்தாகும்

 

said ... (11 January, 2007 16:50) : 

//ஆலங்குளம், கரப்புக்குத்தி, குறிசுட்டகுளம்...//
குருவிசுட்டகுளம்?

 

said ... (11 January, 2007 16:58) : 

சோமி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
படத்தைப் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

சிற்றரசு,
உங்களுக்கு சோமியோடு தனகுவதே தொழிலாய்ப் போச்சு.

அனானி,
அது குறிசுட்ட குளமென்றுதான் நினைக்கிறேன்.

 

said ... (11 January, 2007 17:02) : 

நல்ல அலசல் வசந்தன்

 

said ... (11 January, 2007 19:55) : 

வசந்தன்!

'மண்' படம் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் இப்படம் பார்த்தவர்களிடமிருந்து, எனக்குக் கிடைத்த தகவல்களுக்கும் உங்கள் பார்வைக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது. உங்கள் விமர்சனக் கருத்துக்கள் படத்தைப் பார்க்க வேண்டும் எனும் எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

பதிவுக்கு நன்றி!

 

said ... (11 January, 2007 20:56) : 

மண் படம் இன்னும் பார்க்கவில்லை..படம் நல்லதோ கூடாதோ தெரியவில்லை... ஆனால் வசந்தன் படத்தை விமர்சித்த பாணி நன்றாக இருக்கிறது.. ஒரு கை தேர்ந்த விமர்சகர் போல் செய்திருக்கிறார்.
இங்கு லண்டனில் மண் படத்திற்க்கான டிவிடி கொப்பிக்கான விளம்பரத்தை ரிவி யிலை இப்பொழுது அடிக்கடி போட்டு கொண்டிருக்கிறார்கள்

 

said ... (12 January, 2007 02:47) : 

வெகு நேர்த்தியான பயனுள்ள விமர்சனம்

 

said ... (13 January, 2007 14:26) : 

வசந்தன் மண் படத்தை நான் பார்த்திருந்தால் கூட இவ்வளவு வேற்றுமைகள் என் மந்தில் தோன்றியிருக்காது.வன்னி மண்ணில் ஊறிப்போன உங்களுக்குத் தான் வேறுபாடுகள் தெளிவாகத் தெரிந்திருக்கின்றன.நல்லதொரு அலசல்.

அவரவர் பார்வை அவரவருக்கு என்பதை சரியாகப் புரிந்து கொள்கிறேன்.நீங்கள் மண் படத்தில் மண்ணின் உயிர்ப்புக் குறைவென்கிறீர்கள் உங்கள் பார்வை அதையொட்டிப் போகிறது.அ.மார்க்ஸ் தீராநதியில் பார்க்கும் பார்வை ஈழத்துச் சாதியப் பின்புலம் பற்றியும் அதன் முரண்பாடுகள் பற்றியும் மண் சிறப்பாகச் சொல்லியிருப்பதாகப் பாராட்டுகிறார்.இதையே எங்கள் மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் விமர்சித்தால் வன்னியில் விடுதலைப்புலிகள் செய்யும் கொடுமைகளையெல்லாம் மண் படம் காட்டவில்லை ஆகவே இது ஒரு படமே இல்லை என்பார்கள்

 

said ... (13 January, 2007 19:42) : 

மண் படத்திற்கான தங்களது விமர்சனம் வித்தியாசமாக இருந்தது. ஏனைய பத்திரிகை விமர்சனங்களைவிட, நான் படம் பார்க்கும் போது நீங்கள் கூறிய காட்சிப்பிழை,தககவவல்பபிழைகளை கூர்ந்து கவனிப்பேன். நன்றி

 

said ... (13 January, 2007 20:04) : 

இப்போது இருக்கும் நிலமையில் எப்போதோ நடந்த விடயத்தை காட்டுவது இப்போதைக்குத் தேவையில்லைதானே!.. ??

அன்று அடக்கப்பட்டது ஏன் ஒரு சமூகம் என்று காட்ட விழைகின்றனர்..??? ஈழத்தமழிரும் தானே சாதிகொடுமை யால் பாகுபடுத்தப்பட்டனர்???
என்விமர்சனத்தை இங்கே பார்க்கவும்!!!
http://thamizhblog.blogspot.com/2007/01/52.html

 

said ... (16 January, 2007 02:58) : 

எழுதிக்கொள்வது: tamilnathy

வசந்தன் அந்தப் பாட்டுக் கட்டத்தை தொலைக்காட்சியில் காணநேர்ந்தது. சற்றும் யதார்த்தத்திற்கு ஒவ்வாத ஆட்டமும் பாட்டும். வெளிநாட்டிலிருந்து நாட்டிற்குப் போகும் ஒருவரின் மீளிணைவின்போதான மகிழ்வைத் தெரிவிக்கும் ஆட்டமாகவே அது இருக்கட்டும்.... தமிழ்ச்சினிமாவிற்கேயுரித்தான 'போலித்தன்மை'யையே அதல் கண்டேன். உண்மையில் இதுதான் எங்கள் மண்ணின் முகம் என்று ஈழத்தைப் பற்றி அறியாதவர்கள் நிச்சயம் நினைமத்துக்கொள்வதற்கான சாத்தியங்களே அதிகம். கலாச்சாரம் அது இதுவெல்லாம் ஒருவுறமிருக்கட்டும். உண்மைக்குப் புறம்பான காட்சிகளை எடுப்பதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை.

21.49 15.1.2007

 

said ... (16 January, 2007 15:56) : 

எழுதிக்கொள்வது: தமிழ்நதி

நான் இட்ட பின்னூட்டத்தை யார் தின்றது?

10.53 16.1.2007

 

said ... (26 January, 2007 02:00) : 

பெயரிலி,
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

மலைநாடான்,
பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

சின்னக்குட்டி,
பாராட்டுக்கு நன்றி.

Boston Bala
வருகைக்கு நன்றி.

ஒருபொடியன்,
அவரவர்க்கு அவரவர் பார்வை.
மார்க்ஸின் கட்டுரை வாசித்தேன்.
அதில் சாதிப்பிரச்சினையை மறுவளமாக மிகைப்படுத்துகிறாரோ என்று தோன்றுகிறது.

 

said ... (02 February, 2007 00:32) : 

U.P.Tharsan,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மயூரேசன்,
இதைக் காட்டுவது தேவையா இல்லையா என்பது அவரவரின் அரசியலைச் சார்ந்தது.
இந்த மண்ணைப் பற்றியோ, இதன் சமூகப்பின்புலங்கள் பற்றியோ ஏதும் தெரியாமலே 'மண்' படத்தை ஆகா ஓகோ என்று புகழ்வதும் அந்த அரசியலின் நீட்சியே.

அதேபோல், இப்படிப்பட்ட பிரச்சினைகள் எங்களிடம் இருந்ததில்லை என்பதோ, இப்போது இல்லையென்பதோ, இதை இப்போது சொல்லத் தேவையில்லையென்பதோகூட அரசியல்தான்.
இப்போதிருக்கும் பிரச்சினையைப் பற்றி மட்டும் பேசு என்றோ, அல்லது இதை மட்டும்தான் பேசு என்றோ யாரையும் வற்புறுத்த முடியாது.
என்வரையில் இப்படம் எடுக்கப்பட்டதற்கு உள்நோக்கமேதும் இருந்தாலுங்கூட, இதை அரசியல் ரீதியில் எதிர்க்க எனக்கு எந்தக் காரணமுமில்லை. குறிப்பாக நீங்கள் சொல்லும் காரணங்களுக்காக எதிர்க்க எதுவுமில்லை.
ஈழத்தவரே அடக்கப்பட்டதைச் சொல்லும் காட்சிகளும் இப்படத்தில் வருகின்றன. அதைமட்டும் காட்டவேண்டுமென்றால் இன்னும் சில படங்கள் எடுக்கலாம்.

__________________________________

தமிழ்நதி,
ஆட்டத்தைப் பார்த்தீர்களா?
உங்கள் கருத்தைப் பதிந்தமைக்கு நன்றி.

உங்கள் பின்னூட்டத்தை யாரும் தின்னவில்லை. பசிக்குச் சாப்பிடுமளவுக்கு சுவையானதா உங்கள் பின்னூட்டம்? ;-)
வெளிவந்த பின்னூட்டத்தைவிட வேறேதாவது பின்னூட்டம் இட்டீர்களா?

 

said ... (03 February, 2007 21:59) : 

எழுதிக்கொள்வது: Kannan

வசந்தன் மண் படத்தை இன்று பார்த்தேன்.உங்கள் கருத்துக்களோடு நான் பெரும்பாலும் உடன்படுகிறேன் இடங்களின் பெயர்கள்(குறிசுட்ட குளம் என்பது சரியான பெயர்தான் - குறீட்டகுளம் என்று பேச்சு வழக்கில் சொல்லப்படும்) பிரதேச வழக்குகளை நன்றாக அறிந்து வைத்துருக்கிறீர்கள் ( நீங்களும் வன்னியா). நான் கதைக்களத்தை(கனகராயன் குளம்)சார்ந்தவன் தவிர கதை நடக்கின்ற அதே காலப் பகுதியை ஒத்தவன் எனபதோடு மேலும் பல காரணங்களோடும் உஙகள் கருத்துக்களின் தகவல்களை உறுதிப்படுத்த்க்கூடிய அருகதை உள்ளவன் என நினைக்கின்றேன் - இரட்டை அர்த்த உரையாடல்கள்,இயலாது என்று தெரிந்தும் சப்பாத்தை கட்டாயமாக்கும் ஆசிரியர்கள் திங்கட் கிழமைகளில் தாமதித்து வந்து வெள்ளிக்கிழமைக
ளில் அரை நேரத்துடன் போவது, தம்பி தண்டிக்கப் படுவதை பார்த்துக் கலங்கும் சகோதரி (இதுவே சகோதரனாய் இருந்தால் பதிலுக்கு ஆசிரியரை தண்டித்து அன்றிலிருந்து பாடசாலைக்கு முழுக்கு),வயல் வெளிகளில் காவல், குளங்களில் குளிப்பு,மாணவ மாணவியர் ஒன்றாகவே பாடசாலை போவது மற்றும் அந்த ஊர்களின் பெயர்கள் இப்படி நிறைய விடயங்கள் என்னை படத்துடன் ஒன்றிப்போக வைத்தது.ஒன்ற முடியாத சில விசயங்களும் இருந்தது என்பதை மறுப்பதற்கு இல்லை(உ+ம் எனக்குத் தெரிந்தவரை தென்னைகள் தோப்பாக அங்கு இல்லை,BBQ ம் பைலாவும்,மாடுகளையும் மாட்டுப்பட்டியையும் காட்டாத்தது பெரிய குறை(அது இரண்டும் இல்லாமல் ஒரு கனகராயன் குளமா) காயாககனி மரம் நான் கேள்விபடவே இல்லை ( நான் அரை குறை வன்னியான் என்பதால் இருக்கலாம்). மற்றும் நீங்கள் மேலே குறிப்பிட்ட புலிகளின் இருப்பு, நிர்வாகம், இயக்கம் எனபது யார்?, அதிலே வந்து போகும் பெடியளின் அடையாளம் என்ன?, கதா நாயகன் உண்மையிலேயே காதலிக்கின்றானா அல்லது நடிக்கின்றானா எனப்தில் உள்ள குழப்பம் போன்றவற்றின் விமர்சனங்களில் எனக்கும் உடன்பாடு உண்டு,தொழில் நுட்பரீதியாக ஒளிப்பதிவும் இசையும் எனக்குப் பிடித்து இருந்தது. வன்னிக் கிராமத்தை அழகாக படம் பிடித்து இருந்தாரகள்
பாடல்கள் சிறப்பாக இருக்கின்றன,பாடல்கள் இப்படத்திற்கு தேவையா என்பதை விட பொருத்தமான இடத்தில் பயன்படுதத வேன்டும் என்பதும் படததின் தொய்யாமல் கொண்டு போக வேண்டும் என்பதும் எனது அபிப்பிராயம்(சினிமா கருத்தை சொல்வதோடு மட்டுமல்லாமல் ஜனரஞசகமாகவும் இருக்கலாம் என்று நினைக்கின்றேன்)காட்சிகளையும் சமபவங்களையும் பார்த்துகொண்டிருக்கும் போது எனக்குள்ளே பல முகங்கள் வந்து போயின ( நான் உட்பட)இதை என்னைப் போல ஒரு வன்னியானால் ரசிப்பதைபோல அதற்கு வெளியே உள்ள ஒருவரால் ரசிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனாலும் வசந்தன் நீங்கள் வன்னியை நன்றாக அறிந்து வைத்து இருப்பாதாலேயே சிறப்பான ஒரு விமர்சனத்தை வைக்க முடிந்திருக்கிறது என நினைக்கிறேன் (எனது ஊகம் சரியாயிருந்தால் நான் கேட்ட படலை பற்றிய ஒரு ஒலிப்பதிவு உங்களுடயதாய் இருக்கவேண்டும் என நினைக்கின்றேன்)

18.36 3.2.2007

 

said ... (03 February, 2007 22:32) : 

மண் படம் இன்னும் பார்க்கவில்லை. இந்த விமர்சனத்திகுப் பிறகு கெதியா பாக்கவேணும் போலிருக்கு.நல்ல விமர்சனம்
நன்றி

 

said ... (04 February, 2007 14:47) : 

இந்த படத்தை vcdயில் பாதி
பார்த்து விட்டு மிகுதி தமிழ் மணத்தில்
வந்த விமர்சனங்கள் நிரப்பிவிட்டன.
நல்ல ஒளிப்பதிவு பாரட்டத்தக்கது
ஆனால் கதைக்களம் பின்னோக்கியது
இக்காலகட்டத்துடன் ஒன்றிப்போகதளவுக்கு பல காட்சிகளின்
நெருடல்கள் (படம் வியபாரரீயில்
வெற்றியடைய வேண்டுமென்பதற்காக
காட்சிகள் எடுக்கப்பட்டுருக்கலாம்)
கதாநாயனும் கதாநாயகியும் சந்திக்கும்
ஒவ்வொரு தடவையும் கட்டிபிடுத்துக்
கொள்வதும் தடவிக்கொள்வதும்
கொஞ்சம் ஓவர் அதுவும் கிராமத்து
காதல் (துள்ளுவதோ இளமை ரேஞ்சுக்கு போயிருக்க வேண்டாம்)
ஒரு வன்னி கிராமத்தின் இயல்பையும்
இயற்கையையும் மிக அழகாக காட்சி
படுத்தியளவுக்கு கதைவசனமும்
இயக்கமும் கவரவில்லை. இயக்குனரே
சகலதும் ஏற்று இயக்கியதால் கவனக்குறைவு வந்திருக்கலாம்.
கொமும்பிலிருந்து எதற்காக ஒரு சிங்கள வானை வாடகைக்கு அமர்த்திக்
கொண்டு போகிறார் (தமிழர் யாரும்
கிடைக்க வில்லையோ) பல காட்சிகளில்
உண்மையை சொல்ல முனைந்திருக்கிறர்
பணத்தை எண்ணி பார்த்து விட்டு
குறையுது எடு காசை தோட்டக்காட்டு
நாயே என்பது.ஆசிரியர்கள் திங்கள்
பின்நேரம் வந்து வெள்ளி காலையில்
ஊருக்கு போவதும் தங்கள் மனக் குழப்பங்களை கோபங்களை மாணவர்
மீது வன்முறையாக வெளிப்படுத்துவது.

வன்னிப் பயல்
------------

 

said ... (05 February, 2007 02:37) : 

கண்ணன்,
வருகைக்கும் நீண்ட கருத்துக்கும் நன்றி.

நான் முழுவதும் வன்னியனல்லன்.
யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் கிட்டத்தட்ட சமகால அளவு வசித்திருக்கிறேன்.
முதலில் யாழ்ப்பாணம், வளர்ந்த பின் வன்னி.

கனகராயன் குளத்தில் தென்னந்தோப்புகள் இருந்தன. எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது. ஜெயசிக்குறு இராணுவம் வரமுன்னர் 1997 இன் நடுப்பகுதிவரை அங்கு தென்னந்தோப்புகள் இருந்தன. அதுவும் நன்கு செழித்து வளர்ந்த தோப்புகள்.

திரைப்படத்தில் பாடல் பற்றி எனக்கு வேறு கருத்துண்டு. அது தனியே மண் என்ற படத்தை மட்டும் வைத்து வருவதன்று.
"பாடல்கள் இல்லாமலும் படமெடுக்கலாம் என்ற நிலை வரும்போதுதான் எமது திரைப்படங்கள் உருப்படும்" என்ற எண்ணம் எனக்கு வலுவாக உண்டு. திரைப்படமும் பாடல்களும் தனித்தனித் துறைகள். இரண்டையும் கலந்ததால் இரண்டிலும் நாம் முழுமையில்லை. இரண்டுமே அரைகுறைதான். திரைப்படங்களும் எதுவும் ஒழுங்கில்லை. பக்திப்பாடல்களைத் தவிர்த்துப் பார்த்தால் திரைப்படத் துறைக்கு வெளியே மிகமிக அரிதாகவே பாடல்கள் வெளியாகின்றன. திரைப்படத்துக்கா எழுதப்படும் பாடல்களிலும் முக்கால்வாசி சொத்தைகள்தாம்.

படத்தை சுவாரசியமாக்கவும் தொய்வில்லாமல் செய்யவும் பாடல்கள் தேவையென்று நீங்கள் சொல்கிறீர்கள். நான் அதற்கு எதிர்வளம்.
பாடல்கள்தாம் படத்தைத் தொய்வாக்குகின்றன; சுவாரசியமற்றதாக்குகின்றன என்கிறேன். இதுபற்றித் தனிச்சமாவே வைக்கலாம்.
________________________
உங்கள் ஊகம் சரியென்றுதான் நினைக்கிறேன்.
படலை பற்றிய ஒரு குரற்பதிவு ஏற்கனவு இட்டிருக்கிறேன்.
அதைத்தான் கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
இப்போதும் எனது வலைப்பக்கத்தில் இடதுபக்கத்தில் விருப்பப் பதிவுகள் என்ற தலைப்பின் கீழ் என் குரற்பதிவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

 

said ... (07 February, 2007 15:30) : 

செல்லி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிலரின் பின்னூட்டத்தைப் பார்க்கும்போது மண் படத்துக்கு நான் விளம்பரம் செய்கிறேன் போலுள்ளது.
;-)

________________________
வன்னி"ப்"பயல்,
'வன்னி பயல்' என்று மலைநாடானின் பதவில் பின்னூட்டமிட்டது நீங்கள்தானா? அல்லது வேறொருவரா?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 

post a comment

© 2006  Thur Broeders

________________