Sunday, August 23, 2009

இலங்கைப் பதிவர் சந்திப்பு - ஓர் எதிர்ப்பாட்டு

பதிவர்களின் கலந்துரையாடலிற் சொல்லப்பட்ட ஒரு கருத்து ஏற்படுத்திய எரிச்சலின் பலனாக இவ்விடுகை எழுதப்படுகிறது.

இன்று (23-08-2009) கொழும்பிலே இலங்கை வலைப்பதிவர்களின் சந்திப்பொன்று நடைபெற்றது. இது தொடர்பான விவரணங்கள், விவரங்களை தொடர்புடையவர்களே எழுதியிருப்பார்கள். ஆகவே இது தொடர்பான ஆலாபனைகள் இங்குத் தேவையில்லை.

சந்திப்பானது இணைய வழியிலே நேரடி அஞ்சல் செய்யப்பட்டது. அதனால் எங்களைப் போன்றவர்கள் அச்சந்திப்பில் பார்வையாளராய்ப் பங்கேற்க முடிந்தது. இந்நிலையில்,மற்றவிடங்களில் நடைபெற்றது போன்று அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று மூன்றாந்தரப்பாக நின்று கதைக்காமல் நேரடி அனுபவமாகவே எமது விமர்சனங்களை முன்வைக்கும் வழிவகை ஏற்பட்டுள்ளது.

சந்திப்பில் கதைத்தவர் தனது கருத்தை முன்வைத்தது போலவே அதில் பார்வையாளனாய்க் கலந்து கொண்ட எனக்கும் அதற்குரிய எதிர்க்கருத்தைத் தெரிவிக்கும் உரிமையுண்டெனக் கருதி இவ்விடுகை எழுதப்படுகிறது.

இணையவழிப் பார்வையாளர்கள் தனியே பார்ப்பதோடு மட்டும் நின்றுவிடாது தமது கருத்துக்களைத் தட்டச்சிப் பரிமாறும் வசதியுமிருந்தது. நான் அரட்டைப் பெட்டியில் நுழையும்போது ஏற்கனவே இருபது வரையானவர்கள் 'குதியன் குத்தி'க் கொண்டிருந்தார்கள். கிருத்திகனும் சினேகிதியும் உசாராக நின்று ஓடியாடி வேலைசெய்துகொண்டு நின்றார்கள். (எத்தினை பேர் சந்திப்புக்கு வந்திருக்கினம் என்று யாராவது கேட்டாலும் இவர்கள்தான் பதிலளித்துக்கொண்டிருந்தார்கள். 'உடல் இங்கே, உள்ளம் அங்கே' என்று அதற்கொரு காரணமும் சொல்லப்பட்டது ;-))

சந்திப்பில் தனித்தனி ஆளாகப் பேசிமுடிய கலந்துரையாடல் நேரம் வந்தது (அல்லது அப்படியொரு புதுத் திசைக்கு நிகழ்வு சென்றது). அதிலே தமிழில் தட்டச்சுவது பற்றிய கருத்துப் பரிமாற்றம் தொடங்கியதும்தான் நான் கொஞ்சம் ஈடுபாடு காட்டத் தொடங்கினேன். அதுவரைக்கும் நடைபெற்றவற்றில் நான் ஆர்வப்படுமளவுக்கு எதுவுமிருக்கவில்லை. தட்டச்சு முறைபற்றித் தொடங்கிய கருத்து, தமிழெழுத்துக்கள் பொறிக்கப்பட்ட விசைப்பலகையை அறிமுகப்படுத்தல் என்பதோடு நின்றுகொண்டது. அதைத்தாண்டிச் செல்லவில்லை. அரட்டைப் பெட்டியில் நான் எழுதிக்கொண்டிருந்தேன், பாமினி, தமிழ்நெற் 99, Tamil phonetic முறைகள் பற்றிய கலந்துரையாடலைச் செய்யும்படி. அத்தோடு வந்திருக்கும் பதிவர்களிடத்தில் அவர்கள் பயன்படுத்தும் விசைப்பலகை முறை பற்றிய கணிப்பீடு ஒன்றை எடுக்கும்படியும். Tamil Phonetic முறையைப் பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு இலங்கைப் பதிவர்களிடம் இருக்கிறதா, ஒருவராவது அந்த விழிப்புணர்வு பற்றி அக்கலந்துரையாடலில் கதைப்பாரா என்பது என் ஆவலாயிருந்தது. ஆனால் நடக்கவேயில்லை. கணிப்பீடு எடுக்கும்படி பலதரம் கேட்டும்கூட எந்தப்பதிலுமில்லை. அரட்டைப்பெட்டியில் 'அதி முக்கியமான' வியாக்கியானங்கள் நடந்துகொண்டிருந்தன. இயலாக்கட்டத்தில் 'டோய், ஆருக்காவது நான் சொல்லிறது கேக்குதோ?' என்று கேட்டதற்கு 'ஓம்' என்று ஒரு பதிலும், 'இல்லை, கேக்கேல' என்று இன்னொரு பதிலும் மட்டும் வந்தது;-). இருவருமே இணையவழிப் பார்வையாளர்கள்.

இரண்டாவது பதிலைச் சொன்னவர் சொன்னார், 'ஓய் வசந்தன், உம்மட பிரண்ட் கதைக்கிறார்' என்று. எனக்கு எந்த நண்பனும் அங்கில்லை என்றபோதும் ஆர்வமாகப் பார்த்தேன். உடனடியாக யாரென்று தெரியாவிட்டாலும் கதைக்கத் தொடங்கி சில வினாடிகளுள் கண்டுபிடித்துவிட்டேன். அவர் மு.மயூரன். 'உம்மட பிரண்ட்' என்று மயூரனைக் குறிப்பிட்டு ஏன் சொன்னார் என்றோ அதிலுள்ள உட்குத்து என்னவென்றோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவ்வளவு நேரமும் நான்மட்டும் அரட்டைப் பெட்டியில் குத்திக்கொண்டிருந்த விடயத்தை மயூரன் வாயிலெடுத்தார் (கையிலெடுத்தார் எண்டு சொல்லேலாது பாருங்கோ). பிறகு யோசித்தேன், இதற்கு மயூரன் பேசாமலேயே இருந்திருக்கலாம்; எழில்வேந்தனைச் சாடி ஓர் இடுகை எழுதுவதிலிருந்து நானாவது தப்பியிருப்பேன்.

தொடக்கத்திலேயே மயூரன் சொன்னார், தனக்கு phonetic விசைமுறையைப் பயன்படுத்துவது தொடர்பில் எதிர்ப்போ ஆதரவோ இல்லை, ஏனென்றால் தான் அதைப் பயன்படுத்துவதில்லையாம். இப்படி நழுவிய மயூரனுக்கு அரட்டைப் பெட்டியில் 'இவர் தமிழ்க் கடும்போக்காளர் போல கிடக்கு' என்ற பட்டம் கிடைத்தது தனிக்கதை. ஆனால், phonetic முறையை எதிர்ப்பவர்கள் கூறுகிறார்கள் என்று மூன்றாந்தரப்பாக நின்று அவர்களின் நியாயத்தைச் சொல்லப் புறப்பட்டார் மயூரன். அப்படி அவர் சொன்ன நியாயங்கள் phonetic முறையை எதிர்ப்பவர்களின் வலுவான வாதமாக இருக்கவில்லை என்பதுதான் சோகம்.

"phonetic முறையில் தட்டச்சிக்கொண்டு போனால் எதிர்காலத்தில் தமிழ் தனது வரிவடிவங்களை இழந்து ஆங்கில வரிவடிவங்களால் எழுதப்படும் நிலைக்குப் போய்விடும் என்பது phonetic முறையின் எதிர்ப்பாளர்களின் வாதம். மலாய் மொழிக்கு நடந்ததைப் போல தமிழுக்கும் நடந்துவிடுமென்று அவர்கள் பயப்படுகிறார்கள். ஆனால் யுனிகோட் வந்ததால் தமிழ் தப்பித்தது"
என்பது மயூரன் "மூன்றாந்தரப்பாக" நின்று phonetic முறை எதிர்ப்பாளர்கள் சார்பில் சொன்ன நியாயம்.

ஒருங்குறி வந்ததால் தமிழ் அடைந்த நன்மையைக் குறிக்க இதையொரு காரணமாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் phonetic முறையை எதிர்ப்பதற்கான முதன்மைக் காரணமாக இதைச் சொன்னார் மயூரன். (ஒருங்குறியே ஓர் அரைகுறைத் தீர்வு என்பது இன்னும் வாதமாக இருக்கிறது. இராம.கி இது குறித்து முன்பு எழுதினார். இன்னொருவரும் (கவிதா கயீதா ஆன கதை - WOW?)இது குறித்து எழுதினார். ஆனால் ஒருங்குறி மீதான முரட்டுத்தனமான காதலால் அக்கருத்துக்களை விளங்கிக் கொள்ளாமல் அல்லது விளங்கியும் விளங்காதது போல் நடித்து ஒரு கூட்டம் எதிர்த்தது. பிறகு அதுபற்றிய கதைகள் வலைப்பதிவில் அடங்கிவிட்டன.)

phonetic முறையில் தட்டச்சுவதை எதிர்த்து வலைப்பதிவுகளிலேயே நிறைய எழுதப்பட்டாயிற்று. இதை ஓர் இயக்கமாகவே முன்னெடுத்தார்கள் சிலர். "ammaa ≠ அம்மா" என்ற முழக்கத்தை அடிப்படையாக வைத்து அதை முன்னெடுத்தார்கள். வலைப்பதிவுகளில் தட்டிகள் எல்லாம் வைத்தார்கள். இப்போதும் சில வலைப்பதிவுகளில் அவை இருக்கக் கூடும். (அவற்றுக்கான இணைப்புக்களைத் தேடியெடுத்துப் போட நேரமோ ஊக்கமோ இல்லையென்பதால் நண்பர்கள் யாராவது பின்னூட்டங்களில் இடுவீர்களாக!)

phonetic முறையை எதிர்ப்பவர்கள் சார்பில் கதைக்கப் புறப்பட்ட மயூரனும் அதைச் சரியான முறையில் வெளிப்படுத்தவில்லை. (அவரே சொன்னதுபோல் அதை எதிர்ப்பது, ஆதரிப்பது தொடர்பில் அவருக்குக் கருத்தில்லையாதலால் அது தொடர்பில் அவர் ஆராயவில்லையென்று விட்டுவிடலாம். ஆனால் அப்படி தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருப்பது 'தமிழ்ச்சிந்தனை'யில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் பற்றி சிந்திப்பாரானால் அவர் தனது நிலையை மாற்றக் கூடும்)

ஆனால் அதற்குப் பிறகு வந்த சிறப்பு விருந்தினர் (நானும் அவர் வலைப்பதிவராகத்தான் கலந்துரையாடலுக்கு வந்திருந்தார் என்று நினைத்திருந்தேன் வந்தியத்தேவனின் இடுகையைப்பார்க்கும்வரை) எழில்வேந்தன் phonetic முறையில் தட்டச்சுவதற்கு வக்காலத்து வாங்க வந்து சொன்ன கருத்துக்கள் எரிச்சலைக் கிழப்பியதுடன், எழுதாமலே விட்டிருந்த இவ்வலைப்பதிவில் ஓரிடுகை எழுத வேண்டிய சூழ்நிலைக்கும் காரணமாயின.

"இன்று ஏராளமான குழந்தைகளுக்குத் தமிழ் பேசவே வரவில்லை. தமிழ் சுத்தமாக எழுதவே தெரியாது. வெளிநாட்டில் வாழும் தமிழ்க் குழந்தைகள் தமிழ்ச் சொற்களைப் பிறநாட்டு மொழிகளிலேயே எழுதி வாசிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த phonetic முறையில் தட்டச்சுவது நல்ல வரப்பிரசாதம். ammaa என்று எழுதினால் 'அம்மா' என்று வரும். அம்மா என்பதற்கான தமிழ் வரிவடிவங்கள் எப்படியிருக்குமென்று அந்தப் பிள்ளைகள் அறிவார்கள். எனவே phonetic முறையில் தட்டச்சுவதை எதிர்க்காதீர்கள்"
என்பதாக அவரது வாதம் அமைந்திருந்தது.

தமிழ்ச்சொல்லைப் பிறமொழி வரிவடிவங்களில் எழுதி வாசிக்கும் அந்தக் குழந்தைகளின் நிலைக்குத்தான் தமிழ்வலைப்பதிவாளர்களையும் போகச் சொல்கிறார் எழில்வேந்தன். அம்முறையில் தட்டச்சிக் கொண்டிருந்தால் அதுதான் நடக்கும் என்பதைச் சூசகமாகவேனும் ஒத்துக் கொண்ட எழில்வேந்தனைப் பாராட்டத்தான் வேண்டும். கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் phonetic முறை எதிர்ப்பாளர்களும் சொல்லிக் கொண்டிருப்பது ஏனோ உறைக்கவில்லை. சிலவேளை தான் தமிழ் வலைப்பதிவர்களிடத்தில் பேசுகிறேன் என்பதை மறந்து எங்கோ புலம்பெயர்ந்திருக்கும் - தமது பிள்ளைகளுக்கு தமிழெழுத்துக்கள் எப்படியிருக்குமென்று காட்ட அவாப்படும் பெற்றோர் யாருக்காவது வகுப்பெடுக்கிறேன் என்று நினைத்தாரோ தெரியவில்லை.

'என்னப்பா இந்தாள் இப்பிடிக் கதைக்குது? என்று எனது விசனத்தை அரட்டைப் பெட்டியில் வெளியிட்டபோது,
'ஓய்! அவர் மூத்த வலைப்பதிவாளர் தெரியுமோ?' என்று ஒருவர் எதிர்க்கேள்வி கேட்டார்.
எனக்கு அது தெரியும். ஆனால் அவ்வெதிர்க் கேள்வி கேட்டவர் என்ன கருத்தில் அதைக் கேட்டாரோ தெரியாது, எனக்கென்னவோ நையாண்டி பண்ணுவதைப் போலவே இருந்தது. அப்படியென்றாலும்கூட என்னையா எழில்வேந்தனையா என்பதையும் அவர்தான் சொல்ல வேண்டும் ;-).

அம்மா என்று காகிதத்தில் எழுதும்போது ஆனா, இம்மன்னா, மாவன்னா என்றுதான் மனதில் எழுத்துக் கூட்டி எழுதுவோம். பாமினி முறையிலோ தமிழ்நெற் 99 முறையிலோ தட்டச்சுபவர்களும் அப்படியே எழுத்துக்கூட்டித் தட்டச்சுவார்கள். ஆனால் phonetic முறையில் தட்டச்சுபவர்கள் அம்மாவை ஆனா, இம்மன்னா, மாவன்னா என்று மனதுள் எழுத்துக்கூட்டுவதில்லை. மாறாக a m m a a என்றுதான் மனதுள் எழுத்துக்கூட்டுவார்கள். இந்தச் சின்னப் புள்ளியிலிருந்து யோசிக்கத் தொடங்குங்கள். phonetic முறையில் தட்டச்சுவதால் தனிமனிதனுக்கு, அதன் தொடர்ச்சியாக சமுதாயத்துக்கு ஏற்படப்போகும் தீங்கை. தீங்கென்பது இரண்டொரு வருடத்தில் வருவதைப்பற்றியன்று; அல்லது ஒருவருடைய வாழ்நாளில் வருவதைப்பற்றிய பயம் மட்டுமன்று. இவற்றின் தொடர்ச்சியாக ஒரு மொழிக்குழுமத்தில் நடைபெறப்போகும் தாக்கத்தைப் பற்றியது. கணனித் தட்டச்சைத் தவிர்த்து எவருமே பயணிக்க முடியாத நிலை எமது சமுதாயத்திலும் ஏற்படத்தான் போகிறது. இந்நிலையில் இப்படியான தட்டச்சு முறையினால் எமது மொழிக்குழுமம் அடையப்போகும் பாதிப்பு பற்றிய அறிவு, சில தலைமுறைகள் கடந்தபின் எமது குழுமத்தின் மொழிவளம் பற்றிய "பிரக்ஞை" (இந்தச் சொல்லில சிரிக்கக் கூடாது. சீரியசாச் சொல்லிக்கொண்டிருக்கிறன்) எமக்கு இருக்க வேண்டும்.

முந்தியொருக்கா எழில்வேந்தன் அண்ணர், அகிலனுக்குக் குடுத்த செவ்வியொண்டு இந்த நேரத்தில் ஞாபகம் வந்து துலைக்குது. திரும்ப ஒருக்கா அதைக் கேக்க வேணும். நேரமிருந்தாப் பாப்பம். ஆனா ஒண்டு நல்ல ஞாபகமிருக்கு. அதில மூச்சுக்கு ஒருதரம் "தமிழ் பற்றிய 'பிரக்ஞை' இப்ப குறைஞ்சு கொண்டு வருது. அது எல்லாருக்கும் இருக்க வேணும்" எண்டு சொல்லிக் கொண்டிருந்தார்.

===========================
கலந்துரையாடல் குறித்துப் பாராட்ட நிறையவே உள்ளன. சும்மா நாலுபேர் மதகில் குந்தியிருந்து பீடி குடித்துவிட்டுத் தம்பட்டம் அடிக்காமல் உண்மையிலேயே அதிக சிரத்தையெடுத்துச் செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கு தனிப்பட எனது பாராட்டு. குறிப்பாக உலகெங்கும் இணையவழியில் அதை நேரடி ஒளிபரப்புச் செய்தது. அந்த வசதியால்தான் நாங்கள் நேரடியாகப் பங்குகொண்ட உணர்வோடு இந்த விமர்சனத்தை எழுத முடிகிறது.

இது உண்மையிலேயே உளமார்ந்த பாராட்டே. பின்னூட்டத்தில் யாராவது வந்து 'ஏய் இவ்வளவு நல்ல விசயம் நடந்திருக்கு நொட்டை மட்டும் பிடிச்சுக் கொணடிருக்கிறாய்' என்று கேட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில் எழுதப்பட்டதன்று. அப்படியாக நடுநிலையாளன், நியாயவாதி என்ற பட்டங்களைப் பேணவேண்டிய நிலை எனக்கில்லை.

மேலும், அச்சந்திப்பிலேயே மருதமூரான் குறிப்பிட்ட கருத்தொன்று பிடித்திருந்தது. யாழ்தேவி என்ற பெயர் குறித்த விமர்சனங்கள் வைக்கப்பட்டபோது, "இவ்வளவுநாளும் ஆகா ஓகோ என்று புகழ மட்டுமே செய்தீர்கள், ஒருவராவது இப்படியான விமர்சனத்தை இவ்வளவு நாட்களில் எழுப்பவேயில்லை. தேவையில்லாத புகழ்ச்சியை விட்டுவிட்டு சரியான விமர்சனத்தைச் சரியான நேரத்தில் வைத்திருக்க வேண்டும்" என்று ஆதங்கத்தோடு சொன்னது பிடித்திருந்தது.
அதையே நான் செய்கிறேன், புகழ்ந்துகொண்டிருப்பதைவிட சரியான விமர்சனத்தைச் சரியான நேரத்தில் வைப்போமென்று.

நிற்க, மருதமூரான், யாழ்தேவி என்ற பெயரை மாற்றுவதே நன்று என்பது எனது கருத்து. இவ்வளவு நாட்களும் ஓடிவிட்ட, பிரபலமாகிவிட்ட அப்பெயரை இப்போது மாற்றுவதென்பது சங்கடமானதே. உண்மையில் இன்று உங்கள் சந்திப்பில் விவாதிக்கப்படும்வரை எனக்கு அப்படியொரு திரட்டி இருப்பதே தெரியாது.

=====================================
ரவிசங்கர் முன்பு எழுதிய தமிழ்நெற்99 விசைப்பலகைக்கு ஆதரவான இடுகைகளுக்கான இணைப்புக்கள் இப்போது இணைக்கப்பட்டுள்ளன. தமிழ்நெற்99 முறையைப் பரப்புவதையே முதன்மை நோக்கமாக அவை கொண்டிருந்தால் ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுவதிலுள்ள அபத்தத்தை அவை பேசுகின்றன. அவ்விடுகைகள் சிலருக்காவது விளக்கத்தை அளிக்கலாம்.

ஏன் தமிழ்99 விசைப்பலகைக்கு மாற வேண்டும்?


தமிழ்99


Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, February 01, 2008

தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!

படியெடுக்கப்பட்ட கட்டுரையை வாசிப்பதற்கு முன்னர் எனது குறிப்புக்கள் சில:

தைத்திருநாளை தமிழர் புத்தாண்டுத் தொடக்கமாகக் கொணடாடுவது தொடர்பாக இரு வருடங்களின் முன்பே வலைப்பதிவில் கதைத்துள்ளேன். அப்போது கல்வெட்டு(எ) பலூன்மாமா பொங்கலைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடுவது தொடர்பாக பெரியளவில் முயன்றிருந்தார். தைத்திருநாள் சயம நிகழ்வன்று என்பதைச் சொல்லி அவர் விவாதத்தைத் தொடக்கிவைத்தார். அப்போதே எனது இக்கருத்தையும் சொல்லியிருந்தேன்.

எனது கருத்தென்பது விடுதலைப்புலிகளால் உருவானது என்பதைச் சொல்லியாக வேண்டும். இன்றல்ல; பல ஆண்டுகளின் முன்பே விடுதலைப்புலிகளின் முக்கியத்தர்களால் சித்திரைப் புதுவருடத்துக்கெதிரான கடுமையான எதிர்ப்பும், தைத்திருநாளே தமிழரின் ஆண்டுத் தொடக்கமாக இருக்க வேண்டுமென்ற பார்வையும் வெளியிடப்பட்டு வந்துள்ளன.தமிழீழ நிதித்துறைப் பொறுப்பாளர் தமிழேந்தி, தமிழீழக் கல்விக் கழகப்பொறுப்பாளர் இளங்குமரன் (பேபி சுப்பிரமணியம்), தற்போது வரலாற்றுத்துறைப் பொறுப்பாளராக இருக்கும் யோகரத்தினம் யோகி ஆகியோர் இவர்களுள் முதன்மையானவர்கள்.

ஓரளவுக்குப் பெரியாரின் தாக்கம் இவர்கள்மேல் இருந்தபோதிலும், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் தீவிர தொண்டர்கள் எனலாம் (சொற்பிறப்புப் பற்றிய விவாதங்களில் சிலவிடங்களில் பாவாணரிடத்தில் மாறுபாடுடையவர்கள் என்றபோதும்கூட). அவ்வழியே மறைமலை அடிகள், கி.ஆ.பெ. விசுவநாதன் போன்றோரின் கருத்துக்களால் உள்வாங்கப்பட்டவர்கள். அதனாலேயே சித்திரை வருடப்பிறப்பு மீதான கடுமையான எதிர்ப்பும், தைத்திருநாளே ஆண்டுத்தொடக்கமென்ற வாதமும் இவர்களிடமிருந்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
(கி.ஆ.பெ. விசுவநாதன் பற்றிய சராசரி ஈழத்தவர்களின் அறிவுத்தொடக்கம், தலைவர் பிரபாகரன் பற்றி அவர் வெளியிட்ட கருத்துடன்தான் தொடங்கியது என்று நினைக்கிறேன். அதன்பின் அவர் பற்றிய தேடல் அதிகரித்ததோடு அவரின் கருத்துக்கள் பெருமளவில் மக்களிடம் சென்றன என்பதும் குறிப்பிடப்பட வேண்டிவை.)

ஆனால் தமது அரசாங்கத்தில் இதையொரு ஆணையாகக் கொண்டுவராமல் பரப்புரை மூலம் செய்ய இவர்கள் முயற்சித்தார்கள்; முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் வெற்றி பெறுவார்கள் என்பதிலும் ஐயமில்லை. நிலைமை சீராக வரும்போது ஒருநாள் இவர்களிடமிருந்து அறிப்பு வரும். தமிழீழத்தில் மொழி தொடர்பில் நடைபெற்ற நிறையப் புரட்சிகளுக்கு தமிழேந்தியும், இளங்குமரனும் அத்திவாரங்கள். போராளிகளுக்கான தனித்தமிழ்ப் பெயர்கள், கடைகள் - நிறுவனங்களுக்கான தனித்தமிழ்ப் பெயர்கள், பொருட்களுக்கான தனித்தமிழ்ப் பெயர்கள் எப்போதோ நடைமுறைக்கு வந்துவிட்ட, வெற்றிபெற்ற பல நடவடிக்கைகளுக்கு இவர்களே கால்கள். இராணுவத்துறையிற்கூட தமிழ்க்கட்டளைகளைப் பயன்படுத்த முடியுமா என்ற கேள்விகளைப் புறந்தள்ளி அதைச் செய்துகாட்டியவர்கள். தமிழ் மீட்பை ஒரு வெறியாகவே செய்துவருபவர்கள்.

இந்திய இராணுவம் ஈழத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட பின்னர், "யாழ்ப்பாணத்தில்" தமிழ்த் தேசியம் மீளெழுச்சியுற்ற ஒரு பொற்காலம் எனலாம். யாழ்ப்பாணத்தில் சடுதியான மாற்றங்கள் நிகழ்ந்தன. "முத்தமிழ் விழா" என்ற பெயரில் சில இடங்களில் நடத்தப்பட்ட மூன்றுநாள் பெருவிழாவை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். மிகப்பெருமெடுப்பில் புலிகளால் நடத்தப்பட்ட இவ்விழா உண்மையில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. இவ்விழா குறித்து எதிர்த்தரப்புக்கள் அதிகம் கவலைப்பட்டது உண்மை. 'புலிகள் தமது படைப்பலத்தால் தோற்றாலும்கூட இவ்விழாக்கள் மூலம் மீளவும் தம்மைக் கட்டியெழுப்பி விடுவார்கள்' என்று கொழும்புப் பத்திரிகைகள் எழுதின.
தென்மராட்சியில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் தலைவர் பிரபாகரன் பகிரங்கமாகத் தொன்றி பொதுமக்களுக்கு மேடையில் வைத்துப் பரிசளித்தார்.

அதேகாலத்தில் அறிவிப்புப் பலகைகளின் பெயர்களைத் தமிழில் மாற்றுவது, நிறுவனப்பெயர்களை தமிழில் மாற்றுவது உட்பட பல வேலைத்திட்டங்கள் புலிகளால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன. தைத்திருநாளை எழுச்சியாகக் கடைப்பிடிப்பதும் அப்போதே தொடங்கியது. அதுவரை தைப்பொங்கல் இந்துக்களுக்குரிய நாள் என்றிருந்த கருத்துருவாக்கம் உடைக்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டுக்குரிய தைத்திருநாளை, யாழ்ப்பாணத்துக் கத்தோலிக்கத் தலைமை கொண்டாடி, அது தமிழர் திருநாளே என அறிவித்தது. அவ்வாண்டுக்குரிய தைப்பொங்கல் கத்தோலிக்கத் தேவாலங்களில் கொண்டாடப்பட்டது. தைத்திருநாள் சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கோவிலிலேயே பொங்கி மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. அதன்பிறகு கத்தோலிக்கர் வீடுகளிலும் பொங்கும் நிகழ்வை அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடங்கினர்.

திபாவளிக்கெதிரான கருத்துக்கள் அன்றுதொடக்கம் விடுதலைப்புலிகளாற் சொல்லப்பட்ட வருகின்றன என்றபோதும் அவை நிறுத்தப்படவில்லை. ஆனால் இந்தியாவோடு ஒப்பிடும்போது ஈழத்தில் திபாவளியென்பது (புலிகள் கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதற்கு முன்பேகூட) முக்கியமான பண்டிகையாக இருந்ததில்லையென்றே தெரிகிறது. இன்றும் தீபாவளி தமிழருக்கான பண்டிகையன்று என்ற கருத்து வலுவாகச் சொல்லப்பட்டு வருகிறது; பெருமளவானோர் அதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்றும் கூறலாம். வன்னியில் இது சாத்தியப்படக் காரணமுள்ளது. தீபாவளியையும் சித்திரை வருடப்பிறப்பையும் கொண்டாட்டமாக்குவதில் முக்கிய காரணியாக இருக்கும் குறிப்பிட்ட நாட்களுக்குரிய சிறப்புத் திரைப்பட வெளியீடுகள் வன்னியில் இல்லையென்பதே அது.

~~~~~~~~~~~~~~~~~~~
தைத்திருநாளையே தமிழரின் ஆண்டுத்தொடக்கமாகக் கருத வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து வலைப்பதிவுலகில் பல்வேறு விவாதங்கள் நிகழ்ந்தன. ஆதரவு / எதிர்ப்புப் பதிவுகளைப் படித்து இது தொடர்பான கருத்துக்களைப் பெற்றுக்கொள்வது சிறப்பு.

** இது தொடர்பான மேலதிக விவாதங்கள் நிகழ்த்தப்பட்டால் நன்று. நிறையத் தகவல்கள் அறிந்து கொள்ளலாம்.

என் பங்குக்கு, ஆதரவுக் கட்டுரையொன்றை இடுகிறேன். தமிழ்நாதம் இணையத்தளத்தில் வெளிவந்த கட்டுரையிது.


தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!


ஆக்கம்: சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா


தமிழரின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் நாள் குறித்துப் பல கருத்துக்களை, வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும், பண்பாட்டு வழியாகவும், ‘பண்டைய காலக் கணக்கு முறை’ வழியாகவும் முன் வைத்துத் தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழீழத்திலும், தமிழ் நாட்டிலும் மட்டுமன்றி, உலகளாவிய வகையில் இன்று புலம் பெயர்ந்திட்ட தமிழ் மக்களும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற இக் காலகட்டத்தில் இவ்வகையான தர்க்கங்கள் பல ஆக்கபூர்வமான சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்து அவற்றைச் செயற்பட வைப்பதற்கும் உதவக் கூடும்!


“பொங்கல்” என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன?


பொங்குகை, பெருங்கோபம், மிளகு-சீரகம்-உப்பு-நெய், முதலியன கலந்து இட்ட அன்னம், உயர்ச்சி, பருமை, மிகுதி, கள், கிளர்தல், சமைத்தல், பொலிதல் என்று பல பொருட்களைத் தமிழ் மொழியகராதியும், தமிழ்ப் பேரகராதியும் தருகின்றன. அத்தோடு இன்னுமொரு பொருளும் தரப்படுகின்றது.


‘சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும் நாளான தை மாத முதற்தேதியன்று சூரியனை வழிபட்டுப் பொங்கல் நிவேதனம் செய்யும் திருவிழா’-என்ற பொருளும், பொங்கல் என்ற சொல்லுக்குத் தரப்பட்டுள்ளது. இந்தப் பொருளுக்கு உள்ளே, பல முக்கியமான விடயங்கள் பொதிந்திருப்பதை நாம் காணக் கூடியதாக உள்ளது.


அதாவது பொங்கல் திருவிழா என்பது தமிழ் மக்கள் வாழ்வில் வரலாற்று ரீதியாக, ஒரு பண்பாட்டு அங்கமாக, அவர்களது வாழ்வியலில் திகழுகின்ற திருவிழாவாக இருந்து வந்துள்ளது என்பது புலனாகின்றது. அத்தோடு பண்டைத் தமிழர்கள் இயற்கையின் காலக்கணக்கைக் கணித்து, சரியாக எந்த நாளில் தைத்திருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார்கள் என்பதையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது.


இதனைச் சற்று ஆழமாகக் கவனிப்போம்.


பண்டைத் தமிழன் இயற்கையை வணங்கி, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ முனைந்தவன் ஆவான்! தன்னுடைய வாழ்க்கைக் காலத்தில் வித்தியாசமான காலப்பருவங்கள் தோன்றுவதையும் அவை மீண்டும் மீண்டும் தொடர்ந்து வருவதையும் தமிழன் அவதானித்தான். ஒரு குறிப்பிட்ட காலச் சேர்வையில், மழை, வெயில், குளிர், பனி, தென்றல், வாடை, ஆகியவை மாறி மாறித் தோன்றி, தமிழனின் வாழ்வை ஆண்டு வந்ததால் இந்தக் காலச் சேர்வையைத் தமிழன் ‘ஆண்டு’ என்று அழைத்தான் - என்று அறிஞர் வெங்கட்ராமன் என்பார் கூறுவார்.


தமிழகத்தில் வானியலில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களை ‘அறிவர், பணி, கணியன்’ -என அழைத்தார்கள். மூவகைக் காலமும் நெறியினாற்றும் ‘அறிவர்கள்’ குறித்துத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். அரசர்களுடைய அவைகளில் ‘பெருங் கணியர்கள்’ இருந்ததாகச் சிலப்பதிகாரமும் குறிப்பிடுகின்றது. தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் தென்படுகின்ற வானியற் செய்திகள் முழுமையாக உருப்பெற்றமைக்குப் பல ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அத்தோடு ஆரியர்களது ஊடுருவலுக்கு முன்னரேயே தமிழர்கள் வானியலில் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று பல் நாட்டு அறிஞர்களும் கூறியுள்ளார்கள். மேல்நாட்டு அறிஞரான சிலேட்டர் என்பவர் ‘தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது’ என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தைக் கணித்தனர் என்றும், தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கங்களையும் பருவங்களையும் மிகத் தெளிவாக அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (A Social history of the Tamils-Part 1)

தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தார்கள். ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பகுத்து வைத்தார்கள். ‘வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்’ என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.


அதாவது பண்டைக் காலத்தமிழர்களது ஒரு நாட்பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு - அதாவது 24 மணித்தியாலங்களோடு - அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.


தைப்பொங்கல் தினத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்ற தமிழர்களின் ஆண்டுப் பகுப்பை அடுத்துக் கவனிப்போம்.


பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.


1. இளவேனில் - ( தை-மாசி மாதங்களுக்குரியது)


2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)


3. கார் - (வைகாசி � ஆனி மாதங்களுக்குரியது)


4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)


5. முன்பனி � (புரட்டாசி � ஐப்பசி மாதங்களுக்குரியது)


6. பின்பனி � (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)


(இதைத் தவிர, ஓர் ஆணின் வாழ்க்கைக் காலத்தை, ஒரு பெண்ணின் வாழ்க்கைக் காலத்தை, ஏன் ஒரு மலரின் வாழ்க்கைக் காலத்தைக் கூடத் தமிழன் பல காலத் தொகுதிகளாக வகுத்து வைத்துள்ளான் என்பதானது இன்னுமொரு தளத்திற்குரிய ஆய்வுக் கருத்துக்களாகும்!)


காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை நேயர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.



தமிழர்கள் மட்டுமல்ல, உலகத்தில் பலகோடி வேற்று இன மக்களும் தத்தமக்குரிய இளவேனிற் காலத்தையே புத்தாண்டாக கொண்டாடி வருவதாக குறிப்பிட்டிருந்தோம். உதாரணத்திற்காக யப்பானிய மக்களின் புத்தாண்டை, தமிழர்களின் புத்தாண்டான பொங்கல் திருநாளோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.


தமிழர்-யப்பானிய பண்பாட்டு ஒற்றுமை நிலையை வெளிப்படுத்தும் நடைமுறையாகத் தைப்பொங்கல் விளங்குகிறது. யப்பானியர் தை 14ம் திகதி அன்று பழைய பயன்பாட்டுப் பொருட்களை எரிப்பார்கள். தமிழர்களும் அவ்வாறே செய்கின்றார்கள்.


தை 15ம் நாள் யப்பானியர்களும், தமிழர்கள் போன்று தோரணங்களைத் தொங்கவிட்டு புதுநீர் அள்ளி, பருப்புச் சேர்த்து சமைத்த பொங்கலைப் பரிமாறுகின்றார்கள். தமிழர்கள் பொங்கல் பானையில் பால் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். அதே போல் யப்பானியர் தமது புத்தாண்டான தை 15ம் நாளில் FONKARA - FONKARA� என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள்.


தை 16ம் நாள் பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்கல், முன்னோர்க்குப் படையல் செய்தல், கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தல், மாடுகளுக்கு உணவளித்தல் போன்ற காரியங்களைத் தமிழர்கள் செய்வது போலவே யப்பானியர்களும் செய்கிறார்கள்.


பருப்புத் தவிடு பொங்க - பொங்க

அரிசித் தவிடு பொங்க - பொங்க

-என்ற கருத்துப்படப் பாடப்படும் யப்பானிய வாய் மொழிப் பாடலில் ‘பொங்க-பொங்க’ என்ற சொற்களுக்கு யப்பானிய மொழியில் ‘uONGA-uONGA’ என்றே பாடுகிறார்கள்.




இடையில் தமிழன் மட்டும் மாறி விட்டான்! ஆளவந்த ஆரியர்களின் அடிமையாக மாறியது மட்டுமல்லாது, இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான்.


இவை குறித்து பேராசியரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் கீழ் வருமாறு அன்று கூறியிருந்தார்.


“சித்திரை வருடப்பிறப்பு” என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப்பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலை நாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது….. …….. (சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன் மூலம் ) தமிழினத்தின் பழமையையும், பண்பையும், சிறப்பையும், செல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இடமானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக்கேடான, நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா? - தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும், தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளன. . .


என்று பேராசிரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.


தமிழர்களின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் தினத்தை தமிழர்களுடைய பண்டைக் காலத்திலிருந்தே வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும்;, பண்பாட்டு வழியாகவும், வானியல் அறிவு வழியாகவும் தமிழர்கள் இனம் கண்டு அறிந்துணர்ந்து கொண்டாடி வந்துள்ளார்கள் என்பதையும் நாம் தர்க்கித்ததோடு, ஆரியர்கள் எம்மீது திணித்த சித்திரை வருடப் பிறப்பு குறித்தும் நாம் சில கருத்துக்களைத் தெரிவித்ததற்குக் காரணங்கள் உண்டு!


“தைப்பொங்கல் தினமான, தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழனுக்குரிய தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!!”


பொங்கல் திருநாள்-தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள்-என்பதானது, சிலர் பிதற்றித் திரிவதுபோல் இந்துக்களின் விழா அல்ல! உண்மையில் இது, சமய சார்பற்ற, இயற்கை சார்ந்த, எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவான திருநாளாகும்! மற்றைய எல்லாத் திருநாட்களையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கே ஏதாவது ஓர் அரசனை, வீரனை, கடவுளைக் குறிப்பிட்ட ‘கதை’ ஒன்று புனையப்பட்டு அந்தத் திருநாள் உருவாகியதற்கான காரணம் ஒன்றும் கற்பிக்கப்பட்டிருக்கும்.


ஆனால் தைப்பொங்கல் திருநாள் அப்படியான ஒன்றல்ல! அது வான் சார்ந்து, மண் சார்ந்து, முழுமையான இயற்கை சார்ந்து உருவாகிய திருநாளாகும்! இது தமிழர்களான எமக்குப் பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகின்ற திருவிழாவாகும்! இத் திருநாளைப் புறம் தள்ளுவதும், இதற்கு மதம் சார்ந்த கற்பிதங்களை உருவாக்குவதும், தமிழினத்தைக் கேவலப்படுத்தும் செயல்களாகும்!


தைப்பொங்கல் திருவிழாவிற்குச் சமயச் சாயம் பூச முற்படுபவர்களை மறைமலை அடிகளாரும் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்த வரலாற்றுப் பதிவு ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.


1935ம் ஆண்டு திருச்சியில் அகிலத் தமிழர் மகாநாடு என்ற பெயரில் ஒரு மகாநாடு நடைபெற்றது. பசுமலை சோமசுந்தரப் பாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த மகாநாட்டில்
கா. சுப்பிரமணியனார், மதுரை தமிழவேள், பி.டி. இராசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப. சாமி, திரு.வி.க. மறைமலை அடிகளார் முதலான பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டார்கள். தந்தை ஈ.வெ.ரா. பெரியாரும் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். இந்த மகாநாட்டின் போது தைப்பொங்கல் சமயவிழாவா? இல்லை சமயமற்ற விழாவா? என்று பலத்த விவாதம் எழுந்தது. இறுதியாக, மறைமலை அடிகளார் திட்டவட்டமாகக் கீழ்வருமாறு கூறினார்.


“பொங்கலைச் சமயவிழா என்று சொல்லிச் சர்ச்சையைக் கிளப்பிக் குழப்பம் செய்ய யார் முயன்றாலும் அவர்கள் இம் மாநாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். இது சமய சார்பு இல்லாத விழா! எந்த சமயத்துக்காரன், எந்த சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான்? எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது? எந்த இதிகாசம் இதற்கு இருக்கிறது? ஆனால் தமிழில் புறநானூற்றில், பிட்டங்கொற்றன் வரலாற்றில், கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கின்றது. இதை என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி” - என்று மறைமலை அடிகளார் முழங்கினார்.


“இல்லை - நான் ஏற்றுக் கொள்கின்றேன்”- என்று ஈ.வெ.ரா. பெரியார் தெளிவாகப் பதிலுரைத்தார். அனைவரும் கையொலி எழுப்பினர். அதனையடுத்து திரு.வி.க. அவர்கள் இதனைப் பாராட்டிப் பேசினார்.


ஆகவே தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல! தமிழரின் பண்பாட்டு விழா! காலக் கணிப்பை மேற் கொண்டு மிகச் சரியாகத் தமது புத்தாண்டுக்குரிய இளவேனிற் காலத்தின் முதல்நாளை வகுத்தறிந்து தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு ஆரம்பத்தைக் கொண்டாடும் நாள்!


பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை ‘போகி’ (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது போக்கு, போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகி -போகியது). இத் தினத்தில் பழைய பொருட்களை எரித்தல், பழைய குடில்களை எரித்தல் போன்ற நடைமுறைகள் மேற் கொள்ளப்படுகின்றன. (முன்னாளில் யாழ்ப்பாணத்தில் பட்டி அடைக்கின்ற வயற்குடில்களை எரிக்கும் பழைய நடைமுறை இருந்தது. ஆனால் இப்போது இந்த நடைமுறை அருகி விட்டது.)


தமிழ்ப் புத்தாண்டான தைப்பொங்கல் தினமன்று புத்தாண்டுக்குரிய சகல நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும். தோரணம் தொங்கவிடல், புதுநீர் அள்ளுதல், வீட்டை அழகுபடுத்தல், பொங்கலிடுதல், புத்தாடை அணிதல், கையுறை பெறுதல் போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.


தைப்பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள் நடைபெறுகின்ற நடைமுறைகள் புத்தாண்டின் தொடக்கத்தை உணர வைப்பதாக உள்ளன. பயிர்ச் செய்கையிலே இணைந்து தொழிற்படும் மாடு, தமிழரால் பொங்கலின் மறுநாள் சிறப்பிக்கப்பட்டு அது மாட்டுப் பொங்கல் தினமாக அறியப்பட்டது. அத்துடன் மாட்டுப் பொங்கலின் மறுநாள், உறவினர் வீடுகளுக்குச் செல்லும் நடைமுறையைக் ‘காணும் பொங்கல்’ என்று அழைப்பர். , தமிழரிடையே இருந்த தவப்படையல் என்ற நடைமுறை இப்போது அருகி விட்டது. யாழ்ப்பாணத்தில், வடமராட்சிப் பகுதியில் தைப் பொங்கல் தினமன்றே தவப் படையல் செய்யப்படும் வழக்கமிருந்தது. இப்படையலில் மீன்-இறைச்சி முதலியன படைக்கப்பட்டன. இத்தினத்தில் கலை நிகழ்வுகள், அரங்கேற்ற நிகழ்வுகள், புத்தாண்டுப் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.


தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம் உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம், உழைப்பையும் தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்துகின்ற முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில்; போற்றப்படுவதை நாம் காணலாம்.



அன்புக்குரிய வாசகர்களே! இன்றைய நடைமுறை யதார்த்தத்தை சுட்டிக் காட்டித் தர்க்கிக்கவே நாம் இவ்வாறு மேற்கோள் காட்டினோம். இல்லாவிட்டால் யார்-யார் எந்த எந்த நாளில், எந்த எந்தக் கொண்டாட்டங்களையும் கொண்டாடுவதைத் தடுப்பதற்கு நாம் யார்? எவரும் - எதையும் - எப்படியும் கொண்டாடட்டும் ஆனால் பெயரை மட்டும் சரியாகச் சொல்லட்டும்.


தனித்துவமான மொழியைப் பேசுகின்ற, தனித்துவமான பண்பாட்டைக் கொண்டுள்ள, தனித்துவமான கலைகளைக் கொண்டுள்ள, தமக்கென பாரம்பரிய மண்ணைக் கொண்டுள்ள மக்கள், ஒரு தேசிய இனத்தவர் ஆவார்கள். அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு உரித்தானதாகும் என்று உலகச்சட்டமொன்று சொல்கிறது. இப்போது எமக்கு ஒரு தனித்துவமான பண்பாடு இருக்கின்றதா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.



அன்புக்குரிய எமது வாசகர்களே! தமிழனின் வாழ்க்கையையும் பண்பாட்டையும் எதிரிகள் சிதைத்தது போதாதென்று நாமும் கூட ஆரிய மாயையில் மயங்கிப்போய் எமது பண்பாட்டை இகழ்ந்தும், இழந்தும் வருகின்றோம். இந்தக் காலகட்டத்தில் தமிழ்ப் புத்தாண்டு தினமான தைப்பொங்கல் குறித்துச் சில வரலாற்று உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முனைந்தோம். அனைவருக்கும் எமது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!



இந்தக் கட்டுரைக்குப் பல நூல்களும், ஆய்வுநூல்களும் பயன்பட்டன. முக்கியமாகத் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், எட்டுத்தொகை-பத்துப்பாட்டு, தமிழர் நாகரிகமும் பண்பாடும், ஒப்பியன் மொழி நூல், வாக்கிய பஞ்சாங்கம், பண்பாட்டுக் கட்டுரைகள், செம்பருத்தி சஞ்சிகைக் கட்டுரைகள், பொங்கலே தமிழ்ப் புத்தாண்டு - மலேசியச் சிறப்பு மலர், தமிழர் - யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல் போன்ற நூல்கள் பேருதவி புரிந்தன. சில சொல்லாக்கங்ககளும் சொல்லாடல்களும் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது மனங் கனிந்த நன்றிகள். காலத்தின் தேவை கருதி ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் சில கருத்துக்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளன.


இவ் ஆய்வு மீள்பிரசுரமாகும்.(2008)

Labels: , , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, February 07, 2007

எஸ்.பொன்னுத்துரை கதைக்கிறார்...-2

கடந்த கிழமை மெல்பேணில் நடந்த தமிழ் எழுத்தாளர் விழாவில் மூத்த எழுத்தளார் எஸ்.பொ. அவர்கள் ஆற்றிய உரையை முன்னர் ஒலிவடிவில் பதிவாக்கியிருந்தேன்.
இப்போது எஸ்.பொ. அவர்களின் மிகுதி ஒலிப்பதிவுகளைப் பதிகிறேன். மூன்று ஒலிப்பதிவுகளும் mp3, rm ஆகிய வடிவங்களில் தரப்பட்டுள்ளன.

அவ்விழாவில் வழங்கப்பட்ட கேள்விபதில் நேரத்தில் எஸ்.பொ.விடம் கேட்கப்பட்ட கேள்விகளைம் அவற்றுக்கான பதில்களையும் முதலிரு பகுதிகளும் கொண்டுள்ளன.
இரண்டாவது ஒலிக்கோப்பில், 'பின்னவீனத்துவம், நவீனத்துவம்' போன்ற சொல்லாடல்கள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, "அச்சொற்கள் வாசகனை வெருட்டி பேப்பட்டம் கட்டவே சிலரால் பாவிக்கப்படுகின்றன" என்று எஸ்.பொ. பதிலளிக்கிறார்.



எஸ்.பொ. கேள்விபதில் - கோப்பு ஒன்று
S.PO-Q&A1.mp3





எஸ்.பொ. கேள்விபதில் - கோப்பு இரண்டு.

S.PO-Q&A2.mp3




அவ்விழாவில் எஸ்.பொ. அவர்களுக்கு வழங்கப்பட்ட பவளவிழா விருதைப் பெற்றுக்கொண்ட பின் அவர் ஆற்றிய உரை மூன்றாவது கோப்பாக வருகிறது.
உரையின் தொடக்கத்தில் இரண்டு நிமிடங்கள் பதிவாகவில்லை.
தனக்கு இதுவரை சாகித்திய மண்டலப் பரிசு கிடைக்காதது குறித்துக் கதைத்தவை அந்த விடுபட்ட பகுதிக்குள் போய்விட்டன.
S.PO-pathilurai.mp...


Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, January 30, 2007

மெல்பேர்ண் எழுத்தாளர் விழா 2007 - தொகுப்பு

ஆண்டுக்கொருமுறை அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடாத்தும் எழுத்தாளர்விழா இம்முறை மெல்பேணில் நடைபெற்றது.
கடந்த சனிக்கிழமை - 27.01.2007 அன்று காலை பத்துமணியளவில் இவ்விழா தொடங்கியது. இவ்விழாவில் ஈழத்தின் மூத்த படைப்பாளிகள் மூவர் சிறப்பிக்கப்பட்டனர். நாட்டுக்கூத்தொன்றும் இடம்பெற்றது.
எஸ்.பொ, முருகபூபதி, கலைவளன் சிசு. நாகேந்திரன், காவலூர் ராசதுரை, 'சின்னமாமியே' நித்தி கனகரத்தினம், அருண் விஜயராணி, இளைய பத்மநாதன் என்று ஓரளவு பிரபலமானவர்கள் கலந்து கொண்ட விழா இது.

திரு.லெ.முருகபூபதி அவர்களின் தலைமையில் தொடங்கிய இவ்விழாவில் முதலாவதாக கருத்தமர்வு ஒன்று இடம்பெற்றது.
இதில், பவள விழாக்காணும் எழுத்தாளர் எஸ.பொ 'தமிழில் சிறுகதை - தோற்றம் - வளர்ச்சி - மாற்றம்' என்ற தலைப்பில் உரையாற்றினார். உரையின் முடிவில் கேள்விகளுக்கான நேரம் ஒதுக்கப்பட்டது. என்வரையில் அவ்வெழுத்தாளர் விழாவின் முக்கிய அங்கமாக இவ்வுரை இருந்தது. எஸ.பொ மொத்தமாக நான்குமுறை ஒலிவாங்கியடியில் வந்தார். ஒலிப்பதிவையும் இணைக்க நினைப்பதால் அவைபற்றித் தனியப்பதிவு போடலாமென்று நினைக்கிறேன். ஒரிடத்தில், தனக்கேயுரிய பாணியில் "சிறுகதை இலக்கியம் மீளவும் உயிர் பெறுவது புலம்பெயர்ந்தோரிடமிருந்து தான்" என்று சொல்லிவைத்தார்.

அதே கருத்தரங்கில் திருமதி பாமினி பிரதீப், கலாநிதி சந்திரலேகா வாமதேவா (வலைப்பதிந்து வந்த சந்திரலேகா இவரா?) ஆகியோர் 'எழுத்தாளர் விழாக்களில் சமூகப்பங்களிப்பு' என்ற தலைப்பில் கருத்தாடினர். நான்கைந்து வருடங்களின் முன்பு நடந்த விழாவில் அரங்கு நிறைந்த மக்கள் வந்ததாகவும் இப்போது மிகமிகக் குறைந்துவி்ட்டதையும் மையப்படுத்தியே விவாதம் இருந்தது. (அன்றைய காலை அமர்வில் வந்தவர்கள் அனைவரையும் சேர்த்து மொத்தம் அறுபது பேர் மட்டுமே. விழாவுடன் தொடர்பில்லாத எம்மைப்போல் வெளியாட்கள் ஒரு பதினைந்து பேர்தான் வரும்.)

'தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளில் சிறுவர் நாடகம்' என்ற தலைப்பில் திரு. அ.சந்திரகாசன் மாவை நித்தியானந்தன் அவர்கள் உரையாற்றினார்.

பின் 'சின்ன மாமியே புகழ்' நித்தி கனகரத்தினம் 'தமிழர் உணவு நாகரிகம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மரக்கறி, கீரை, கிழங்கு வகைகளுக்கு உலகப்பயன்பாட்டுக்கென தமிழின் வேரிலிருந்தே சொற்கள் பெறப்பட்டன என்பதே அவரின் உரையுடைய அடிப்படை. வல்லாரை, பொன்னாங்காணி, கத்திரி, பசளி, நாரத்தங்காய், இஞ்சி என்பவற்றுக்கான வேற்றுமொழிப் பெயர்கள் எப்படி தமிழில் இருந்து போயின என்ற தொனியில் கதைத்துக்கொண்டிருந்தார். இந்த வரலாறுகளை மூடிமறைத்துக்கொண்டிருக்கும் தாவரவியல் ஆய்வாளரை அடிக்கடி கண்டித்துக்கொண்டும், தான் எப்படி யார் யாருடன் இது தொடர்பாக சண்டைபிடித்தேன் என்பதையும் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார். இன்னும் நீளமான பெயர்ப்பட்டியலொன்றை வைத்திருந்தார், ஆனால் மத்தியானச் சாப்பாட்டு நேரமென்பதால் அவரை விரைவில் முடிக்கச்சொல்லி விட்டார்கள்.
அன்றைய விழாவில் அவுஸ்திரேலியக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பொன்று 'வானவில்' என்ற பேரில் வெளியானது. அதில் நித்தி கனகரத்தினம் அவர்களின் கவிதையொன்றும் இருந்ததைப் பார்த்தேன். 'அம்மாவின் பழஞ்சோற்றுக் குழையலும் பூவரசங்குழையும்' என்ற தலைப்பில் அது இருந்தது. கவிதை தொடங்குகிறது இப்படி:
கீரை கிழங்கு மரவள்ளி கத்திரிக்காய் பால்கறியும் பொரித்த முருங்கைக்காய் ..................................

[நித்தி கனகரத்தினம் பேசுகிறார். பின்னாலிருப்பவர் மருத்துவக் கலாநிதி வேலுப்பிள்ளை கருணாகரன் என்று நினைக்கிறேன்.]

பின் மதிய உணவு. விழா ஏற்பாட்டாளரால் அனைவருக்கும் இலவச மதிய உணவு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. பாயாசமும் இருந்தது.

அடுத்ததாக கவிதைச் சமர் இடம்பெற்றது.
'ஆணாதிக்கமா? அதற்காய் பெண்ணாதிக்கமா??
பெண்ணடிமைத்தனமா? அதனால் ஆணாதிக்கமா??'
என்ற தலைப்பில் மனோ ஜெகேந்திரன், செளந்தரி சிவானந்தன் என்ற பெண்களிருவர் மாறிமாறி கவிதை வாசித்தனர்.

பின்னர் நூல் விமர்சன அரங்கு இடம்பெற்றது.
தலைமை: திருமதி ஜெயந்தி விநோதன்

1.துவிதம் (கவிதை) - ஆழியாள்
விமர்சனம்: திரு. குலம் சண்முகம்
2.ஈடு (நாடகம்) - எஸ்.பொ, அ.சந்திரகாசன்
விமர்சனம்: திரு.எஸ.சூசைராஜா
3. நினைவுக் கோலங்கள் (சிறுகதை) - லெ.முருகபூபதி
விமர்சனம்: செல்வி.ஜெயசக்தி பத்மநாதன்
4.கொஞ்சும் தமிழ் (சிறுவர் இலக்கியம்) -அம்பி
விமர்சனம்: திரு.எட்வர்ட் பிலிப் மரியதாசன்
5.பனிக்குள் நெருப்பு (விமர்சனம்) - எஸ்.பொ
விமர்சனம்: திரு.செ.சிவசம்பு
6.அம்மா என்றொரு சொந்தம் (சிறுகதை) - உஷா ஜவகர்
விமர்சனம்: திரு.கே.எஸ்.சுதாகரன்
7.சிறைப்பட்டிருத்தல் (போட்டிக் கதைத்தொகுப்பு)
விமர்சனம்: ஆவூரான்
8.மொழிபெயர்க்கப்பட்ட மெளனம் (நேர்காணல்) - லதா
விமர்சனம்: திருமதி உதயா சிங்கராசா
9.ஞானம் (சஞ்சிகை)
விமர்சனம்: திரு.எஸ். கிருஷ்ணமூர்த்தி.

விமர்சனங்களுக்கான பதிலுரையை எஸ்.பொ வும் முருகபூபதியும் நிகழ்த்தினர். 'கொஞ்சும் தமிழ்' என்ற சிறுவர் இலக்கிய நூலை எழுதிய கவிஞர் அம்பி அவர்கள் இறுதிநேரத்தில் சுகவீனமுற்றதால் விழாவில் கலந்துகொள்வில்லை. எனவே அந்நூல் உருவாக்கத்தில் கூடநின்று பணியாற்றியவர் என்ற முறையில் எஸ.பொ.வே பதிலுரைத்தார். ஆறுஇலட்சம் இந்திய ரூபாய்கள் செலவழித்து இப்புத்தகம் அச்சிடப்பட்டதாகச் சொன்னார். உண்மையில் மிகமிகத் தரமான வடிவத்தில் புத்தகம் வந்துள்ளது. கண்ணைக்கவரும் நிறப்படங்களும், ஓவியங்களும் உள்ளன.

இத்துடன் பகல் விழா நிறைவு பெற்றது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இரவு நிகழ்ச்சிகள் மாலை ஏழு மணிக்குத் தொடங்கின.

முதலில் ஒரு கவியரங்கம். பாடும்மீன் சு.சிறிகந்தராசா தலைமையில் சில கவிஞர்கள் கவிமழை பொழிந்தனர் (கவியரங்கத் தாக்கம்;-)).
'தங்கத் தாத்தா' சோமசுந்தரப் புலவரின் பேரனார் சோ.இளமுருகனார் பாரதி அவர்களும் இதிற் கலந்துகொண்டார்.

அதைத்தொடர்ந்து அன்றை விழாவின் முக்கிய பகுதியான படைப்பாளிகளுக்கான பாராட்டு நிகழ்வு தொடங்கியது. விருதுபெறும் மூவரில் எஸ.பொ, காவலூர் இராசதுரை ஆகியோர் 75 ஆவது வயதில் பவள விழா காணுகின்றனர். மற்றவரான சிசு.நாகேந்திரன் ('அந்தக் காலத்து யாழ்ப்பாணம்' எழுதியவர். இந்நூல் பற்றி சந்திரவதனா ஒரு பதிவு எழுதியிருந்தார்). 85 வயதை நிறைவு செய்கிறார். எனக்கென்றால் மூவரிலும் சிசு.நாகேந்திரன் அவர்கள்தான் துடிப்பாகத் தெரிந்தார்.



[எஸ்.பொவுக்குச் சான்றிதழ் கொடுப்பவர் சந்திரலேகா வாமதேவா.
பின்னால் இருப்பவர்கள் இடமிருந்து வலமாக:
கலைவளன் சிசு.நாகேந்திரன், சட்டத்தரணி ரவீந்திரன், ஓவியர் ஞானம்.]

விருது பெறும் மூவரில் இருவர் மட்டுமே மேடையில் இருந்தனர். அன்று காலையில் ஓடியாடித் திரிந்த காவலூர் இராசதுரையை மேடையில் காணவில்லை. இடையில் முருகபூபதி அறிவித்தார், சற்றுமுன்னர்தான் திடீரென்று உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று.

மற்ற இருவருக்கும் விருதும் சான்றிதழும் வழங்கப்பட்டன. அவர்களின் கலைச்சேவைகளைக் குறிப்பிட்டு தனித்தனி மடல்கள் வாசிக்கப்பட்டன.
(இம்மூவரைப்பற்றியும் விழாக்குழுவினர் வெளியிட்ட சேவைக் குறிப்புக்களை நேரம் கிடைத்தால் தட்டச்சி வெளியிடுகிறேன். இளைய தலைமுறையினர் பலர் இவர்கள் பற்றி அறிய உதவும்.)


அடுத்ததாக, வானவில் கவிதைத் தொகுதி வெளியிடப்பட்டது. 31 கவிஞர்களின் கவிதைகள் வெளியிடப்பட்டன. இவர்களின் இருவர் அமரராகி விட்டனர். முன்பு எங்களோடு வலைப்பதிந்த தெய்வீகனின் கவிதையொன்றும் இடம்பெற்றுள்ளது.

இறுதி நிகழ்வாக அண்ணாவியார் இளைய பத்மநாதனின் நெறியாள்கையில் சிட்னி கலைஞர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 'யாழ்பாடி' நாட்டுக்கூத்து இடம்பெற்றது.


['யாழ்பாடி' நாட்டுக்கூத்தின் இறுதியில் மங்களம் பாடும் நேரம்.
நடுவில் தாடியுடன் யாழ்பாடி பாத்திர நடிகனாக நிற்பவர்தான் அண்ணாவியார் இளையபத்மநாதன்.]

பின்னர் அருண் விஜயராணி அவர்களின் நன்றியுரையோடு விழா நிறைவுற்றது.

காலை அமர்வைவிட இரவு அமர்வுக்கு அதிகம் பேர் வந்திருந்தனர். வேலை காரணமா? அல்லது கூத்துப்பார்த்தலா?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விழாப்படங்கள் சிலவற்றை எனது வசந்தம் வலைப்பதிவில் இடுகிறேன்.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Saturday, December 23, 2006

ஈழத்து முதுபெரும் அரசியலாளன் நவரத்தினம் மறைவு

இலங்கைத் தமிழரசுக் கட்சியை அடித்தளமிட்டவர்களில் முக்கியமான மூத்த அரசியலாளன் வி.நவரத்தினம் அவர்கள் கனடாவில் காலமானார்.
இறக்கும்போது 97 வயதுடைய நவரத்தினம் அவர்கள் 1910 ஆம் ஆண்டு பிறந்தார்.


ஈழத்தமிழரின் தொடக்ககால அரசியலில் முக்கியமாக விளங்கிய இவர் பண்டா - செல்வா ஒப்பந்தமுட்பட பல முக்கிய அரசியல் நிகழ்வுகளில் பங்கெடுத்துள்ளார்.
இவர் ஈழத்து அரசியல் குறித்து முக்கியமான இரு புத்தகங்கள் எழுதியுள்ளார்.

அன்னாரின் மறைவுகுறித்த தமிழ்நெட் செய்தி:

Navaratnam, the doyen of Federal Party, passes away

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, December 15, 2006

மதியுரைஞர் பாலசிங்கம் மறைவு

விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் 15.12.2006 அன்று அதிகாலை மரணமடைந்தார்.
அண்மைக்காலத்தில் புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன் விடுதலைப்புலிகளுடன் தொடர்பு ஏற்பட்டதிலிருந்து அவர்களின் தத்துவ கொள்கை வகுப்பாளராகவும் அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றிய இவர் தமிழர்கள் தரப்பில் பல பேச்சுக்களில் கலந்துகொண்டவர்.
இவரின் இழப்பு அரசியற்களத்தில் ஈழத்தவருக்கு மிகப்பெரும் இழப்பு.

அரசியல் ஆலோசகருக்கு எம் மனம் நிறைந்த அஞ்சலி.

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, April 12, 2005

வரலாற்றுச் சாதனை.

கடைசியாக பரலோகத்திலிருந்து கிடைத்த அறிக்கையின்படி, கடவுள்களின் வாழ்க்கை வரலாற்றில்(?) ஒரே நேரத்தில் அதிகூடிய வேண்டுதல்கள் வந்ததாக இன்றைய நாள் பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்த கடவுள்களின் கூட்டமைப்பு(?) வெளியிட்ட அறிக்கை ஒஸ்ரேலிய நேரப்படி இரவு 10.15 க்கு வெளியாகியது.

அந்த அறிக்கையின் விவரப்படி, பாகிஸ்தான் இந்திய அணிகளுக்கிடையேயான துடுப்பாட்டப் போட்டியின் கடைசிக் கட்டத்தில் கடவுள்களுக்கு வரும் மன்றாட்டங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கத் தொடங்கியதாகவும், இறுதி ஓவர் வீசப்படும் போது அது இன்னும் அதிகரித்து உச்சத்தைத் தொட்டதாகவும் கூறப்படுகிறது. அதுவும் கடைசிப்பந்து வீசப்படுவதற்கான நேரத்திலேயே வரலாறு காணாத அளவு வேண்டுதல்கள் கடவுள்களின் சன்னிதானத்துக்கு வந்து சேர்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

இதுதான், இதுவரையான வரலாற்றுக்காலத்தில் அதிகூடிய வேண்டுதல்கள் ஒரே நேரத்தில் வந்து குவிந்த சம்பவமாகக் கடவுள்களின் கூட்டமைப்புக் கருதுகிறது. இதை கின்னஸ் புத்தகக் குழுவுக்கு அறிவிக்க ஒவ்வொரு கடவுளிடமிருந்தும் ஒவ்வொரு சிறப்புத் தூதுவர் விரைகிறார்கள்.

பரிதாபமான விசயம் என்னவென்றால், அந்தக் கடைசிப் பந்து வீசி முடிந்ததும் சில கடவுள்களுக்கு கடுமையான வசைமழை பொழியப்பட்டதாக எமது புலனாய்வுச் செய்தியாளர் தெரிவித்தார். எனினும் கடவுள்களின் கூட்டமைப்பு இச் செய்தியை மறுத்துள்ளது.

பிந்திய செய்தி:
கடவுள்களுக்கு வந்த வேண்டுதல்களின் எண்ணிக்கை விவரம் கின்னஸ் குழுவினரால் கேட்கப்பட்டதைத் தொடர்ந்து கடவுள்களுக்கிடையில் சண்டை மூண்டு விட்டதாக எமக்குக் கிடைக்கும் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. மிகுதிச் செய்திகள் பின்னர் விரிவாகத் தரப்படும்.

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________