Sunday, August 23, 2009

இலங்கைப் பதிவர் சந்திப்பு - ஓர் எதிர்ப்பாட்டு

பதிவர்களின் கலந்துரையாடலிற் சொல்லப்பட்ட ஒரு கருத்து ஏற்படுத்திய எரிச்சலின் பலனாக இவ்விடுகை எழுதப்படுகிறது.

இன்று (23-08-2009) கொழும்பிலே இலங்கை வலைப்பதிவர்களின் சந்திப்பொன்று நடைபெற்றது. இது தொடர்பான விவரணங்கள், விவரங்களை தொடர்புடையவர்களே எழுதியிருப்பார்கள். ஆகவே இது தொடர்பான ஆலாபனைகள் இங்குத் தேவையில்லை.

சந்திப்பானது இணைய வழியிலே நேரடி அஞ்சல் செய்யப்பட்டது. அதனால் எங்களைப் போன்றவர்கள் அச்சந்திப்பில் பார்வையாளராய்ப் பங்கேற்க முடிந்தது. இந்நிலையில்,மற்றவிடங்களில் நடைபெற்றது போன்று அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று மூன்றாந்தரப்பாக நின்று கதைக்காமல் நேரடி அனுபவமாகவே எமது விமர்சனங்களை முன்வைக்கும் வழிவகை ஏற்பட்டுள்ளது.

சந்திப்பில் கதைத்தவர் தனது கருத்தை முன்வைத்தது போலவே அதில் பார்வையாளனாய்க் கலந்து கொண்ட எனக்கும் அதற்குரிய எதிர்க்கருத்தைத் தெரிவிக்கும் உரிமையுண்டெனக் கருதி இவ்விடுகை எழுதப்படுகிறது.

இணையவழிப் பார்வையாளர்கள் தனியே பார்ப்பதோடு மட்டும் நின்றுவிடாது தமது கருத்துக்களைத் தட்டச்சிப் பரிமாறும் வசதியுமிருந்தது. நான் அரட்டைப் பெட்டியில் நுழையும்போது ஏற்கனவே இருபது வரையானவர்கள் 'குதியன் குத்தி'க் கொண்டிருந்தார்கள். கிருத்திகனும் சினேகிதியும் உசாராக நின்று ஓடியாடி வேலைசெய்துகொண்டு நின்றார்கள். (எத்தினை பேர் சந்திப்புக்கு வந்திருக்கினம் என்று யாராவது கேட்டாலும் இவர்கள்தான் பதிலளித்துக்கொண்டிருந்தார்கள். 'உடல் இங்கே, உள்ளம் அங்கே' என்று அதற்கொரு காரணமும் சொல்லப்பட்டது ;-))

சந்திப்பில் தனித்தனி ஆளாகப் பேசிமுடிய கலந்துரையாடல் நேரம் வந்தது (அல்லது அப்படியொரு புதுத் திசைக்கு நிகழ்வு சென்றது). அதிலே தமிழில் தட்டச்சுவது பற்றிய கருத்துப் பரிமாற்றம் தொடங்கியதும்தான் நான் கொஞ்சம் ஈடுபாடு காட்டத் தொடங்கினேன். அதுவரைக்கும் நடைபெற்றவற்றில் நான் ஆர்வப்படுமளவுக்கு எதுவுமிருக்கவில்லை. தட்டச்சு முறைபற்றித் தொடங்கிய கருத்து, தமிழெழுத்துக்கள் பொறிக்கப்பட்ட விசைப்பலகையை அறிமுகப்படுத்தல் என்பதோடு நின்றுகொண்டது. அதைத்தாண்டிச் செல்லவில்லை. அரட்டைப் பெட்டியில் நான் எழுதிக்கொண்டிருந்தேன், பாமினி, தமிழ்நெற் 99, Tamil phonetic முறைகள் பற்றிய கலந்துரையாடலைச் செய்யும்படி. அத்தோடு வந்திருக்கும் பதிவர்களிடத்தில் அவர்கள் பயன்படுத்தும் விசைப்பலகை முறை பற்றிய கணிப்பீடு ஒன்றை எடுக்கும்படியும். Tamil Phonetic முறையைப் பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு இலங்கைப் பதிவர்களிடம் இருக்கிறதா, ஒருவராவது அந்த விழிப்புணர்வு பற்றி அக்கலந்துரையாடலில் கதைப்பாரா என்பது என் ஆவலாயிருந்தது. ஆனால் நடக்கவேயில்லை. கணிப்பீடு எடுக்கும்படி பலதரம் கேட்டும்கூட எந்தப்பதிலுமில்லை. அரட்டைப்பெட்டியில் 'அதி முக்கியமான' வியாக்கியானங்கள் நடந்துகொண்டிருந்தன. இயலாக்கட்டத்தில் 'டோய், ஆருக்காவது நான் சொல்லிறது கேக்குதோ?' என்று கேட்டதற்கு 'ஓம்' என்று ஒரு பதிலும், 'இல்லை, கேக்கேல' என்று இன்னொரு பதிலும் மட்டும் வந்தது;-). இருவருமே இணையவழிப் பார்வையாளர்கள்.

இரண்டாவது பதிலைச் சொன்னவர் சொன்னார், 'ஓய் வசந்தன், உம்மட பிரண்ட் கதைக்கிறார்' என்று. எனக்கு எந்த நண்பனும் அங்கில்லை என்றபோதும் ஆர்வமாகப் பார்த்தேன். உடனடியாக யாரென்று தெரியாவிட்டாலும் கதைக்கத் தொடங்கி சில வினாடிகளுள் கண்டுபிடித்துவிட்டேன். அவர் மு.மயூரன். 'உம்மட பிரண்ட்' என்று மயூரனைக் குறிப்பிட்டு ஏன் சொன்னார் என்றோ அதிலுள்ள உட்குத்து என்னவென்றோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவ்வளவு நேரமும் நான்மட்டும் அரட்டைப் பெட்டியில் குத்திக்கொண்டிருந்த விடயத்தை மயூரன் வாயிலெடுத்தார் (கையிலெடுத்தார் எண்டு சொல்லேலாது பாருங்கோ). பிறகு யோசித்தேன், இதற்கு மயூரன் பேசாமலேயே இருந்திருக்கலாம்; எழில்வேந்தனைச் சாடி ஓர் இடுகை எழுதுவதிலிருந்து நானாவது தப்பியிருப்பேன்.

தொடக்கத்திலேயே மயூரன் சொன்னார், தனக்கு phonetic விசைமுறையைப் பயன்படுத்துவது தொடர்பில் எதிர்ப்போ ஆதரவோ இல்லை, ஏனென்றால் தான் அதைப் பயன்படுத்துவதில்லையாம். இப்படி நழுவிய மயூரனுக்கு அரட்டைப் பெட்டியில் 'இவர் தமிழ்க் கடும்போக்காளர் போல கிடக்கு' என்ற பட்டம் கிடைத்தது தனிக்கதை. ஆனால், phonetic முறையை எதிர்ப்பவர்கள் கூறுகிறார்கள் என்று மூன்றாந்தரப்பாக நின்று அவர்களின் நியாயத்தைச் சொல்லப் புறப்பட்டார் மயூரன். அப்படி அவர் சொன்ன நியாயங்கள் phonetic முறையை எதிர்ப்பவர்களின் வலுவான வாதமாக இருக்கவில்லை என்பதுதான் சோகம்.

"phonetic முறையில் தட்டச்சிக்கொண்டு போனால் எதிர்காலத்தில் தமிழ் தனது வரிவடிவங்களை இழந்து ஆங்கில வரிவடிவங்களால் எழுதப்படும் நிலைக்குப் போய்விடும் என்பது phonetic முறையின் எதிர்ப்பாளர்களின் வாதம். மலாய் மொழிக்கு நடந்ததைப் போல தமிழுக்கும் நடந்துவிடுமென்று அவர்கள் பயப்படுகிறார்கள். ஆனால் யுனிகோட் வந்ததால் தமிழ் தப்பித்தது"
என்பது மயூரன் "மூன்றாந்தரப்பாக" நின்று phonetic முறை எதிர்ப்பாளர்கள் சார்பில் சொன்ன நியாயம்.

ஒருங்குறி வந்ததால் தமிழ் அடைந்த நன்மையைக் குறிக்க இதையொரு காரணமாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் phonetic முறையை எதிர்ப்பதற்கான முதன்மைக் காரணமாக இதைச் சொன்னார் மயூரன். (ஒருங்குறியே ஓர் அரைகுறைத் தீர்வு என்பது இன்னும் வாதமாக இருக்கிறது. இராம.கி இது குறித்து முன்பு எழுதினார். இன்னொருவரும் (கவிதா கயீதா ஆன கதை - WOW?)இது குறித்து எழுதினார். ஆனால் ஒருங்குறி மீதான முரட்டுத்தனமான காதலால் அக்கருத்துக்களை விளங்கிக் கொள்ளாமல் அல்லது விளங்கியும் விளங்காதது போல் நடித்து ஒரு கூட்டம் எதிர்த்தது. பிறகு அதுபற்றிய கதைகள் வலைப்பதிவில் அடங்கிவிட்டன.)

phonetic முறையில் தட்டச்சுவதை எதிர்த்து வலைப்பதிவுகளிலேயே நிறைய எழுதப்பட்டாயிற்று. இதை ஓர் இயக்கமாகவே முன்னெடுத்தார்கள் சிலர். "ammaa ≠ அம்மா" என்ற முழக்கத்தை அடிப்படையாக வைத்து அதை முன்னெடுத்தார்கள். வலைப்பதிவுகளில் தட்டிகள் எல்லாம் வைத்தார்கள். இப்போதும் சில வலைப்பதிவுகளில் அவை இருக்கக் கூடும். (அவற்றுக்கான இணைப்புக்களைத் தேடியெடுத்துப் போட நேரமோ ஊக்கமோ இல்லையென்பதால் நண்பர்கள் யாராவது பின்னூட்டங்களில் இடுவீர்களாக!)

phonetic முறையை எதிர்ப்பவர்கள் சார்பில் கதைக்கப் புறப்பட்ட மயூரனும் அதைச் சரியான முறையில் வெளிப்படுத்தவில்லை. (அவரே சொன்னதுபோல் அதை எதிர்ப்பது, ஆதரிப்பது தொடர்பில் அவருக்குக் கருத்தில்லையாதலால் அது தொடர்பில் அவர் ஆராயவில்லையென்று விட்டுவிடலாம். ஆனால் அப்படி தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருப்பது 'தமிழ்ச்சிந்தனை'யில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் பற்றி சிந்திப்பாரானால் அவர் தனது நிலையை மாற்றக் கூடும்)

ஆனால் அதற்குப் பிறகு வந்த சிறப்பு விருந்தினர் (நானும் அவர் வலைப்பதிவராகத்தான் கலந்துரையாடலுக்கு வந்திருந்தார் என்று நினைத்திருந்தேன் வந்தியத்தேவனின் இடுகையைப்பார்க்கும்வரை) எழில்வேந்தன் phonetic முறையில் தட்டச்சுவதற்கு வக்காலத்து வாங்க வந்து சொன்ன கருத்துக்கள் எரிச்சலைக் கிழப்பியதுடன், எழுதாமலே விட்டிருந்த இவ்வலைப்பதிவில் ஓரிடுகை எழுத வேண்டிய சூழ்நிலைக்கும் காரணமாயின.

"இன்று ஏராளமான குழந்தைகளுக்குத் தமிழ் பேசவே வரவில்லை. தமிழ் சுத்தமாக எழுதவே தெரியாது. வெளிநாட்டில் வாழும் தமிழ்க் குழந்தைகள் தமிழ்ச் சொற்களைப் பிறநாட்டு மொழிகளிலேயே எழுதி வாசிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த phonetic முறையில் தட்டச்சுவது நல்ல வரப்பிரசாதம். ammaa என்று எழுதினால் 'அம்மா' என்று வரும். அம்மா என்பதற்கான தமிழ் வரிவடிவங்கள் எப்படியிருக்குமென்று அந்தப் பிள்ளைகள் அறிவார்கள். எனவே phonetic முறையில் தட்டச்சுவதை எதிர்க்காதீர்கள்"
என்பதாக அவரது வாதம் அமைந்திருந்தது.

தமிழ்ச்சொல்லைப் பிறமொழி வரிவடிவங்களில் எழுதி வாசிக்கும் அந்தக் குழந்தைகளின் நிலைக்குத்தான் தமிழ்வலைப்பதிவாளர்களையும் போகச் சொல்கிறார் எழில்வேந்தன். அம்முறையில் தட்டச்சிக் கொண்டிருந்தால் அதுதான் நடக்கும் என்பதைச் சூசகமாகவேனும் ஒத்துக் கொண்ட எழில்வேந்தனைப் பாராட்டத்தான் வேண்டும். கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் phonetic முறை எதிர்ப்பாளர்களும் சொல்லிக் கொண்டிருப்பது ஏனோ உறைக்கவில்லை. சிலவேளை தான் தமிழ் வலைப்பதிவர்களிடத்தில் பேசுகிறேன் என்பதை மறந்து எங்கோ புலம்பெயர்ந்திருக்கும் - தமது பிள்ளைகளுக்கு தமிழெழுத்துக்கள் எப்படியிருக்குமென்று காட்ட அவாப்படும் பெற்றோர் யாருக்காவது வகுப்பெடுக்கிறேன் என்று நினைத்தாரோ தெரியவில்லை.

'என்னப்பா இந்தாள் இப்பிடிக் கதைக்குது? என்று எனது விசனத்தை அரட்டைப் பெட்டியில் வெளியிட்டபோது,
'ஓய்! அவர் மூத்த வலைப்பதிவாளர் தெரியுமோ?' என்று ஒருவர் எதிர்க்கேள்வி கேட்டார்.
எனக்கு அது தெரியும். ஆனால் அவ்வெதிர்க் கேள்வி கேட்டவர் என்ன கருத்தில் அதைக் கேட்டாரோ தெரியாது, எனக்கென்னவோ நையாண்டி பண்ணுவதைப் போலவே இருந்தது. அப்படியென்றாலும்கூட என்னையா எழில்வேந்தனையா என்பதையும் அவர்தான் சொல்ல வேண்டும் ;-).

அம்மா என்று காகிதத்தில் எழுதும்போது ஆனா, இம்மன்னா, மாவன்னா என்றுதான் மனதில் எழுத்துக் கூட்டி எழுதுவோம். பாமினி முறையிலோ தமிழ்நெற் 99 முறையிலோ தட்டச்சுபவர்களும் அப்படியே எழுத்துக்கூட்டித் தட்டச்சுவார்கள். ஆனால் phonetic முறையில் தட்டச்சுபவர்கள் அம்மாவை ஆனா, இம்மன்னா, மாவன்னா என்று மனதுள் எழுத்துக்கூட்டுவதில்லை. மாறாக a m m a a என்றுதான் மனதுள் எழுத்துக்கூட்டுவார்கள். இந்தச் சின்னப் புள்ளியிலிருந்து யோசிக்கத் தொடங்குங்கள். phonetic முறையில் தட்டச்சுவதால் தனிமனிதனுக்கு, அதன் தொடர்ச்சியாக சமுதாயத்துக்கு ஏற்படப்போகும் தீங்கை. தீங்கென்பது இரண்டொரு வருடத்தில் வருவதைப்பற்றியன்று; அல்லது ஒருவருடைய வாழ்நாளில் வருவதைப்பற்றிய பயம் மட்டுமன்று. இவற்றின் தொடர்ச்சியாக ஒரு மொழிக்குழுமத்தில் நடைபெறப்போகும் தாக்கத்தைப் பற்றியது. கணனித் தட்டச்சைத் தவிர்த்து எவருமே பயணிக்க முடியாத நிலை எமது சமுதாயத்திலும் ஏற்படத்தான் போகிறது. இந்நிலையில் இப்படியான தட்டச்சு முறையினால் எமது மொழிக்குழுமம் அடையப்போகும் பாதிப்பு பற்றிய அறிவு, சில தலைமுறைகள் கடந்தபின் எமது குழுமத்தின் மொழிவளம் பற்றிய "பிரக்ஞை" (இந்தச் சொல்லில சிரிக்கக் கூடாது. சீரியசாச் சொல்லிக்கொண்டிருக்கிறன்) எமக்கு இருக்க வேண்டும்.

முந்தியொருக்கா எழில்வேந்தன் அண்ணர், அகிலனுக்குக் குடுத்த செவ்வியொண்டு இந்த நேரத்தில் ஞாபகம் வந்து துலைக்குது. திரும்ப ஒருக்கா அதைக் கேக்க வேணும். நேரமிருந்தாப் பாப்பம். ஆனா ஒண்டு நல்ல ஞாபகமிருக்கு. அதில மூச்சுக்கு ஒருதரம் "தமிழ் பற்றிய 'பிரக்ஞை' இப்ப குறைஞ்சு கொண்டு வருது. அது எல்லாருக்கும் இருக்க வேணும்" எண்டு சொல்லிக் கொண்டிருந்தார்.

===========================
கலந்துரையாடல் குறித்துப் பாராட்ட நிறையவே உள்ளன. சும்மா நாலுபேர் மதகில் குந்தியிருந்து பீடி குடித்துவிட்டுத் தம்பட்டம் அடிக்காமல் உண்மையிலேயே அதிக சிரத்தையெடுத்துச் செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கு தனிப்பட எனது பாராட்டு. குறிப்பாக உலகெங்கும் இணையவழியில் அதை நேரடி ஒளிபரப்புச் செய்தது. அந்த வசதியால்தான் நாங்கள் நேரடியாகப் பங்குகொண்ட உணர்வோடு இந்த விமர்சனத்தை எழுத முடிகிறது.

இது உண்மையிலேயே உளமார்ந்த பாராட்டே. பின்னூட்டத்தில் யாராவது வந்து 'ஏய் இவ்வளவு நல்ல விசயம் நடந்திருக்கு நொட்டை மட்டும் பிடிச்சுக் கொணடிருக்கிறாய்' என்று கேட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில் எழுதப்பட்டதன்று. அப்படியாக நடுநிலையாளன், நியாயவாதி என்ற பட்டங்களைப் பேணவேண்டிய நிலை எனக்கில்லை.

மேலும், அச்சந்திப்பிலேயே மருதமூரான் குறிப்பிட்ட கருத்தொன்று பிடித்திருந்தது. யாழ்தேவி என்ற பெயர் குறித்த விமர்சனங்கள் வைக்கப்பட்டபோது, "இவ்வளவுநாளும் ஆகா ஓகோ என்று புகழ மட்டுமே செய்தீர்கள், ஒருவராவது இப்படியான விமர்சனத்தை இவ்வளவு நாட்களில் எழுப்பவேயில்லை. தேவையில்லாத புகழ்ச்சியை விட்டுவிட்டு சரியான விமர்சனத்தைச் சரியான நேரத்தில் வைத்திருக்க வேண்டும்" என்று ஆதங்கத்தோடு சொன்னது பிடித்திருந்தது.
அதையே நான் செய்கிறேன், புகழ்ந்துகொண்டிருப்பதைவிட சரியான விமர்சனத்தைச் சரியான நேரத்தில் வைப்போமென்று.

நிற்க, மருதமூரான், யாழ்தேவி என்ற பெயரை மாற்றுவதே நன்று என்பது எனது கருத்து. இவ்வளவு நாட்களும் ஓடிவிட்ட, பிரபலமாகிவிட்ட அப்பெயரை இப்போது மாற்றுவதென்பது சங்கடமானதே. உண்மையில் இன்று உங்கள் சந்திப்பில் விவாதிக்கப்படும்வரை எனக்கு அப்படியொரு திரட்டி இருப்பதே தெரியாது.

=====================================
ரவிசங்கர் முன்பு எழுதிய தமிழ்நெற்99 விசைப்பலகைக்கு ஆதரவான இடுகைகளுக்கான இணைப்புக்கள் இப்போது இணைக்கப்பட்டுள்ளன. தமிழ்நெற்99 முறையைப் பரப்புவதையே முதன்மை நோக்கமாக அவை கொண்டிருந்தால் ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுவதிலுள்ள அபத்தத்தை அவை பேசுகின்றன. அவ்விடுகைகள் சிலருக்காவது விளக்கத்தை அளிக்கலாம்.

ஏன் தமிழ்99 விசைப்பலகைக்கு மாற வேண்டும்?


தமிழ்99


Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"இலங்கைப் பதிவர் சந்திப்பு - ஓர் எதிர்ப்பாட்டு" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (24 August, 2009 01:00) : 

வசந்தன் ஆரம்பத்தில் நீட்சிக் கமராவில் ஒளிபரப்பு முயன்று அது பிரச்சினை குடுக்க மடிக்கணிணி கமராவில் ஒளிபரப்பவேண்டியதாகிவிட்டது... அதனால் சாட்டிங்கை ஒழுங்காக கவனிக்கமுடியாது போய்விட்டது... கௌபாய்மதுவாக நானும் ஊராோடியாக பகீயும் பதிலளித்துக்கொண்டிருந்தோம். நாங்கள் நேர இருந்து தட்டச்சினால் எங்கள் முகம்தான் ஒளிபரப்பப்படும். அதனால் மடிக்கணிணியை சபைபக்கம் திருப்பி கையை வளைத்து சாட்டிங்க் செய்வதே கொடுமையாகிவிட்டது.

ஊரோடி இன்று யாழ் சென்று சேரும்போது அவரது கை உளைவு குடுக்கும் எண்டு நம்புறேன்.

அடுத்த முறை நீட்சிக் கமராவையோ அல்லது நீட்சி தட்டச்சுப் பலகையோ வைத்து நிச்சயமாக நேரடி ஒளிபரப்பை சிறப்பாகச் செய்வோம்...

 

said ... (24 August, 2009 01:07) : 

நல்ல பதிவு.

 

said ... (24 August, 2009 01:13) : 

வசந்தன்,
இலங்கைத் தமிழ்ப் பதிவர்களுக்கான குழுமம் ஒன்று ஆரம்பிக்கிறோம். அநேகமாக இன்று அல்லது நாளை. சந்திப்பில் வாதப் பிரதிவாதங்களை ஆரோக்கியமாக எடுத்துச் செல்ல நேரம் இடம்குடுக்கவில்லை.

குழுமத்தில் விவாதிப்போம்.ஆரம்பத்தை ஆரோக்கியமாக முன்னெடுத்துச் செல்வோம். சந்திப்பு நன்றாகச் சென்றது நிறைவாக இருந்தாலும் எனக்கும் மாற்றுக் கருத்துக்கள் இருக்கின்றன... குழுமத்தில் கதைப்பதாக இருக்கிறேன்...

 

said ... (24 August, 2009 01:16) : 

வசந்தன் உங்கள் பதிவுக்கு நன்றிகள். சில விடயங்களைப் பற்றி பின்னர் பின்னூட்டமிடுகின்றேன்.

 

said ... (24 August, 2009 01:18) : 

வசந்தன் பாடிய இதே பாட்டத்தான் நானும் அங்க பாட இருந்தனான்.... பிறகு ஏனிந்த படமெடுக்க வந்த கமாராக்காரன் விளங்காதமாதிரி கதைக்கிறான் எண்டு ஆரும் சொல்லீடக்கூடாதெண்டு விட்டுட்டன்...

உண்மையில சிறப்பு விருந்தினர் எழில்வேந்தனின் கருத்துக்கள் அங்கே இருந்த பலருக்கும் கடுப்பை கொடுத்தது உண்மைதான், பின்னர் ஒரே செய்கில கனநேரம் சுத்தக்கூடாதெண்டு வேற விசயம் கதைக்க போட்டினம்.

 

said ... (24 August, 2009 01:20) : 

அண்ணை... Tamil Phonetic பற்றி நீங்கள் சொன்ன போதுதான் கொஞ்சம் உறைச்சுது... பாமினி பாவிக்க நான் றெடி ஆனா என்னெண்டு அதை பழக்கத்துக்குக் கொண்டுவாறது எண்டு விழங்கேலை..ஆனாக் கொஞ்ச காலத்தில பழகீடுவன்..

On a serious note...அதில மாற்றமில்லை..தமிழ் எழுத்துக்கள் உள்ள் கீ-போட் வாங்கி நீங்கள் சொன்னமாதிரி கீ-போட்ட பாத்து தட்டச்சு செய்யலாமா? அது எந்தளவுக்கு பலன் தரும்?

மற்றபடி நேர்மையாத்தான் விமர்சிச்சிருக்கிறியள்..

 

said ... (24 August, 2009 01:25) : 

ஆட்டம் சூடு பிடிக்குது,
இப்பத்தான் நான் யோசிக்கிறன் அநியாயமா நான் இணையத்துல இல்லாம போட்டன் எண்டு...

 

said ... (24 August, 2009 01:27) : 

யாழ்தேவி எண்டொரு திரட்டியோ எனக்கு தெரியாதே..?

 

said ... (24 August, 2009 01:37) : 

வணக்கம் வசந்தன். பலகாலம் தூசு படிந்திருந்த என் வலைப்பதிவையும் இன்றுதான் இந்த நிகழ்வால் தூசு தட்டி பின்னூட்டம் போட்டேன். அத்துடன் பின்னூட்டம் சிலவரும் இட்டுள்ளேன்.

முதலாவதாக மயூரன் ஏதோ சொல்ல இடையில் நீங்கள் ஏதோ புரிந்த மாதிரித் தெரிகின்றது. நான் அதுவும் இல்லை இதுவும் இல்லை என்று கழுவுற மீனில நழுவிற மீனாக தப்பியது தமிழ் 99ஆ இல்லை பாமினியா இல்லை இரங்கநாதனா??? என்ற விவாதம் காரணமாகத்தான்.

நான் பொதுவாக ammaa ஐ எதிர்ப்பவன் அதை எதிர்த்து ரவிசங்கரோட சேர்ந்து பிரச்சாரம் செய்த அனுபவமும் இருக்கு. இதைப் பற்றி பேச வெளிக்கிடும் போது மைக் என் கையில வரமாட்டேன் என்றுவிட்டது. வழமையாக எம்மவர்கள் மைக்கை வாங்க தயங்குவார்கள் இங்கோ ஓரே கூத்து ;)

இதைப்பற்றி நான் பேசவேண்டும் என்று கடைசியில் வந்தியிடம் கேட்டேன் அவரும் நேரம் இல்லை என்று கையைவிரித்துவிட்டார். நேரம் காரணமாகத்தான் இவற்றை விவாதிக்க முடியவில்லை. கட்டாயமாக அடுத்த வலைப்பதிவர் சந்திப்பில் இதுபோன்ற ஆக்கபூர்வமாக தொழில்நுட்பம் சார்ந்த கருத்துக்களை கலந்துரையாட வேண்டும் என்பது இந்த அடியேனின் வேண்டுகோள்.

மற்றும்படி எழில்வேந்தன் பற்றி நோ கொமன்ட்ஸ் ;)

 

said ... (24 August, 2009 01:52) : 

///உடல் இங்கே, உள்ளம் அங்கே/// ஐயோ..அது நான் விட்ட வயனம்.. (நன்றி நல்லையா சேர்)

 

said ... (24 August, 2009 02:13) : 

மதுவதனன் மௌ.,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அரங்கிலிருந்தவர்கள் பதிலளிக்காததை நானொரு முக்கிய குறையாகச் சொல்லவேயில்லை. சொன்னதுகூட பம்பலாகத்தான். கிருத்திகனும் சினேகிதியும் ஆட்கணக்குச் சொன்னதைச் சுட்டியதும் பம்பலாகவே. ('ஓய், உம்மட பேரில ஒருத்தன் வந்துநிண்டுகொண்டு சினேகிதியோட ராத்திறான்' எண்டு எனக்கு ஜிமெயிலில் தகவலனுப்பிய அன்பர்களும் இருக்கிறார்கள்;-)
சொல்லப்போனால் அரட்டைப் பெட்டியில் தேவையில்லாமல் அலட்டிக் கொண்டிருந்தவர்களைத்தான் சுட்ட வேண்டும்.

ஆனாலும் தட்டச்சுமுறை பற்றிய கணிப்பீடு செய்யும்படி நான் ஏழெட்டு முறையாவது தட்டச்சியிருப்பேன் என்று நினைக்கிறேன். உங்களுக்கோ ஊரோடிக்கோ அது தட்டுப்படவில்லையென்றால் என்ன சொல்ல? எனக்கு அதிஸ்டமில்லையென்பதைத் தவிர.

 

said ... (24 August, 2009 02:14) : 

நான் போட்ட பின்னூட்டத்தை பிளாக்கர் திண்டுவிட்டதோ???

 

said ... (24 August, 2009 02:40) : 

இடுகை எழுதிவிட்டு படுக்கப் போவோமென்று ஆயத்தப்படுத்தினால் பின்னூட்டங்கள் நாலைந்து குவிந்துவிட்டன. அவற்றை வெளியிட்டுவிட்டு ஒரு பதிலும் எழுதிவிட்டுப் பார்த்தால் மேலும் சில பின்னூட்டங்கள், ஏன் பின்னூட்டத்தைக் காணவில்லையென்று உடனேயே அடுத்த பின்னூட்டம்.

நாளைக்கு இணையத்துக்கு வரமுடியுமா தெரியவில்லை. எனவே பின்னூட்டங்களை உடனடியாக வெளியிட முடியாமலிருக்கும், பதில்களும் உடனுக்குடன் எழுத முடியாமலிருக்கும்.
---------------
மயூரேசன்,
நீர் ரவிசங்கரோடு இணைந்து வேலை செய்தது தெரிந்ததே. நீர் பாமினியிலிருந்து தமிழ்நெற் 99 இற்கு மாறிய அல்லது மாறும்படி மற்றவர்களைக் கேட்டெழுதிய இடுகையிலே சண்டையும் பிடித்திருக்கிறேன் பெயரிலியோடு சேர்ந்து;-). Phonetic முறையை எதிர்ப்பதற்கு நியாயமான காரணங்கள் எங்கள் தரப்பில் உள்ளன. ஆனால் பாமினியை ஆதரிப்பதற்கு என்னைப் போன்றவர்களுக்கு அரசியற் காரணங்களே உள்ளன. எனவே பாமினியைத்தான் பின்பற்று என்று யாரும் யாரையும் அழுத்த முடியாது. யாழ்ப்பாணத்தாரே பாமினி பயன்படுத்துவதாக மயூரன் முன்பு சொன்ன ஞாபகம். எழில்வேந்தன்கூட இன்றைய சந்திப்பில் பாமினி கனடாவிலிருந்து வந்ததென்று ஏதோ சொன்னதாக ஞாபகம்.
நல்லது. கனடாவிலிருந்து வந்தது பிடிக்கவில்லையென்றால் கொழும்பிலிருந்தே ஒன்றை உருவாக்குங்கள், திருகோணமலைக்கென்று ஒன்றை உருவாக்குங்கள் (மயூரன் தானே ஒரு விசைப்பலகை முறையை ஏற்படுத்திப் பயன்படுத்துவதாகச் சொன்னார்).

மயூரன் கதைத்ததை நான் சரியாக விளங்கிக் கொள்ளவில்லையென்பது சரியாகக் கூட இருக்கலாம். எனது விளக்கப்படி மயூரன் phonetic முறையை எதிர்ப்பதற்கான சரியான வாதத்தை வைக்கவில்லை. தனக்கு அது தொடர்பில் எதிர்ப்போ ஆதரவோ இல்லையென்று சொன்னபின்னால் அவர் அவ்வளவுதான் கதைக்க முடியுமென்று கருதுகிறேன்.

அவர் அப்படி சரியான வாதத்தை வைத்து நான்தான் பிழையாக விளங்கிக் கொண்டேன் என்றால் அத்தவறை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அம்முறைக்கெதிரான கருத்தைத் தீவிரமாகக் கொண்டிருக்கும் எனக்கே அவர் கதைத்தது விளங்கவில்லையென்றால், அம்முறை மீது விமர்சனமற்றிருந்த வலைப்பதிவர்களுக்கு எவ்வளவு தூரம் அவரது வாதம் விளங்கியிருக்கும் அல்லது உறைத்திருக்கும்?

மயூரன் அதை எதிர்க்க வேண்டுமென்பது கூட என்னுடைய கருத்தன்று. எதிர்ப்பாளரின் கருத்தென்று சொல்லப்புறப்பட்டவர் சரியான முறையில் அதைச் சொல்லியிருக்க வேண்டுமென்பதே என் கருத்து. ஒருத்தரும் கதைக்காதவிடத்தில் இவராவது இவ்வளவாவது கதைத்தாரே என்று ஆறுதல்பட வேண்டியதுதான். Phonetic முறைத் தட்டச்சை எதிர்ப்பதற்கு ஒரு கூட்டமிருக்கிறது என்ற கருத்தாவது இன்றைய கூட்டத்தில் போய்ச் சேர்ந்தது, அதற்கு நன்றி. இனிவருங்காலங்களில் மயூரேசன் போன்றவர்கள் இதை முன்னெடுப்பீர்கள் தானே?

 

said ... (24 August, 2009 02:43) : 

நல்ல பல விடயங்கள் பேசப்பட்டு இருக்கின்றன. இலங்கைப் பதிவர்களின் எதிர் பார்ப்பு வீண் போகவில்லை.

நேரடி ஒளிபரப்பு செய்வதிலே பல கஷ்டங்களை எதிர் நோக்கி இருக்கின்றார்கள் என்பது நேரடி ஒளிபரப்பை பார்க்கும்போதே புரிந்தது.

முதல் சந்திப்பே அசத்தல் அல்லவா.

 

said ... (24 August, 2009 04:54) : 

வசந்தன்,

நீங்கள் ஆங்கில ஒலியியல் விசைப்பலகை மீதான பெருங்கோபத்திலா அல்லது மு. மயூரன் மீதான முற்சாய்வுகளுடனா இதை எழுதினீர்கள் என்று தெரியவில்லை. எதுவாயினும் நான் கதைத்ததை நீங்கள் முழுமையாக கேட்கவில்லை என்பதை மட்டும் என்னால் உறுதியாய் சொல்ல முடியும்.

இங்கே நான் கதைத்தது முழுமையா இருக்கு. நேரம் கிடைக்கும் போது கேட்டுப்பாருங்க.

நேரடி ஒளிபரப்பில் பாட்டையகலப் போதாமைகளுடன், முறையான ஒலிவாங்கல் வசதிகள் இல்லாத இடத்தில் முழுமையாக கேட்க முடியாமல் போனதுக்கு உங்களையே முழுக்குற்றமும் சுமத்த முடியாதுதான்.

உரையாடல் நிகழ்ந்துகொண்டிருந்தபோது அரட்டை வழியாக கேட்கப்பட்டவற்றை எண்பதுபேருக்கும் கொண்டு சேர்ப்பதில் நடைமுறைச்சிக்கல்கள் இருந்ததால் நீங்கள் கேட்டவை என்னால் அறிந்துகொள்ளப்படாமற்போனது.


/இதற்கு மயூரன் பேசாமலேயே இருந்திருக்கலாம்/

உங்கள் ஜனநாயகப் பண்புகளுக்கு நன்றி.


/தொடக்கத்திலேயே மயூரன் சொன்னார், தனக்கு phonetic விசைமுறையைப் பயன்படுத்துவது தொடர்பில் எதிர்ப்போ ஆதரவோ இல்லை, ஏனென்றால் தான் அதைப் பயன்படுத்துவதில்லையாம்./

பாதி ஆங்கில ஒலிப்பியல் வடிவமான, அதிகம் பேர் பயன்படுத்தாத ஆவரங்கால் சிறீவாஸ் இன் விசைப்பலகையையே நான் பயன்படுத்துகிறேன். நான் அதை 2004- 2006 இற்குப்பிறகு மற்றவர்களுக்குப் பரிந்துரைப்பதும் குறைவு. இயங்குதளங்கள் மாறும்போது வீட்டுவேலையாக இதற்கான இயக்கியைச்செய்து தட்டெழுதிப் பிழைத்து வருகிறேன்.

நானே ஆங்கில ஒலிப்பியல் விசைப்பலகையை பயன்படுத்திக்கொண்டு காட்டமாக ஆங்கில ஒலிப்பியல் விசைப்பலகையை எதிர்க்க எனக்கு அருகைதை இருக்கமுடியும் என்று நான் நினைக்கவில்லை.

அங்கே ஆட்கள் முரண்பட்டுக்கொண்ட நான்கு தீவிர எதிர்நிலைப்புள்ளிகளான பாமினி-ரெங்கநாதன்-தமிழ்99-ஆங்கில ஒலிப்பியல் விசைப்பலகைவைவங்களில் எதையும் முழுமையாகப் புறந்தள்ளிற, எதையும் பிடிச்சபிடியாய் போற்றுற நிலைப்பாட்டில் நான் எப்போதும் இருக்கவுமில்லை.

எல்லா வடிவங்களிலும் குறைகளும் பயன்களும் உண்டு என்றே நான் நம்புகிறேன். ஆனால் ஆங்கில ஒலிப்பியல் விசைப்பலகையை தேவையற்று பரிந்துரைக்கக்கூடாது என்ற, இதை கூகிள் போன்ற நிறுவனங்கள் தத்தெடுப்பதில் பரப்புவதில் உள்ள உலகமயமாக்க ஏகாதிபத்திய நலன்சார் அரசியலை எதிர்க்கும் (இதைச் சொல்லக் குறித்து வைத்தேன். நேரத்தை சுருக்க வேகமாக கதைக்க வெளிக்கிட்டு தவற விட்டுவிட்டேன்) நிலைப்பாட்டினைக் கடைப்பிடிக்கிறேன்.

நடுநிலை, எதிர்ப்போ ஆதரவோ இல்லாத நிலை என்றெல்லாம் சொல்ல இல்லை. இப்ப சொந்தமா கருத்தெதுவும் சொல்ல இல்லை எண்டே சொன்னேன்.

 

said ... (24 August, 2009 04:54) : 

/அப்படி அவர் சொன்ன நியாயங்கள் phonetic முறையை எதிர்ப்பவர்களின் வலுவான வாதமாக இருக்கவில்லை என்பதுதான் சோகம்./

எதுதான் வலுவான வாதம் என்கிறீர்கள்?


/மலாய் மொழிக்கு நடந்ததைப் போல தமிழுக்கும் நடந்துவிடுமென்று அவர்கள் பயப்படுகிறார்கள். ஆனால் யுனிகோட் வந்ததால் தமிழ் தப்பித்தது/

இது ரெண்டையும் சேர்த்து விளங்கிக்கொள்ளும்படி என்னுடைய சொற்கள் உங்களுக்கு தெளிவாக விளங்காமல் போன தொழிநுட்பப்போதாமைகளை நொந்துகொள்கிறேன்.

நான் சொன்னது தமிழ் எழுத்துருக்களோ, கணினித்தமிழ் பயன்பாடோ ஆரம்பிக்காத காலத்தில் SMSஇல் கூட ஆங்கில ஒலிப்பில் ஆங்கில வரிவடிவத்தில் தமிழை எழுதிக்கொண்டிருந்தபோது இவ்வாறான் அச்சம் பரவியதையும் பிறகு எழுத்துகள் யுனிக்கோட் என்று வந்தபோது இதிலிருந்து தப்பினோம் என்றும்.

இதற்கும் ஆங்கில ஒலிப்பியல் விசைப்பலகைக்குமான முடிச்சு என்ன என்றால், ஆங்கில ஒலிப்பியலில் எழுதினாலும் இந்த அச்சம் உள்ளதென்பதுதான்.

ஒருங்குறி வந்ததால ஆங்கில ஒலிப்பியலில் தட்டெழுதினாலும் குடிமுழுகிப்போகாது என்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை.
மற்றது ஒருங்குறி தொடர்பிலேயே எனக்கு சிக்கல்கள் நிறைய உண்டு.


/'தமிழ்ச்சிந்தனை'யில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் பற்றி சிந்திப்பாரானால் அவர் தனது நிலையை மாற்றக் கூடும்/

நான் அதைப்பற்றித்தான் முதலிலேயே கதைதேன். தமிழ் ஆங்கில வரிவடிவமாக மூளையில் பதியப்போகும் ஆபத்துப்பற்றி.

அத்தோடு கூடவே மிக அழுத்தமாக, பிள்ளைகளுக்கு ஆங்கில ஒலிப்பியல் விசைப்பலகையை பழக்காதீர்கள் என்று தெளிவாகவே, உரத்த குரலில் சொன்னேன்.


கூடவே ஆங்கில விசைப்பலகையில் எந்த வடிவத்தைப்பயன்படுத்துவதையும் விட தமிழ் பொறிக்கப்பட்ட விசைப்பலகையில் தமிழை எழுதப் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள் அது "சரியான நல்லம்" என்று இரண்டு முறை அழுத்திச்சொன்னேன்.



மொத்தத்தில நான் ஆங்கில ஒலிப்பியல் தொடர்பா கதச்சதெல்லாம் அதற்கு எதிராகத்தானே ஒழிய ஆதரவா ஒண்டும் சொல்ல இல்ல.
நீங்கள் ஏதோ நான் English phonetic KB க்கு வக்காலத்து வாங்கினேன் என்ற தொனியில் எழுதியுள்ளீர்கள்.


/அத்தோடு இவர்கள்தான் இந்த பாமினியை விடாமல் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டிருப்பவர்கள்./

என்று நான் 2007 இல் என் பதிவொன்றில் யாழ்ப்பாணத்தமிழர் தொடர்பா எழுதியதை ஞாபகம் வைத்திருந்து எனது யாழ் மேலாதிக்க எதிர்ப்பு பாமினி எதிர்ப்பாக மாறி இன்று பொனட்டிக் ஆதரவாக கலையெடுத்து ஆடுது என்ற முற்சாய்வுகளுடன் நீங்கள் என்னுடைய கதையை அணுகியிருப்பதாகவே எனக்கு எண்ணத்தோன்றுகிறது. (இன்றைக்கு அவர்களின் புதிய தலைமுறையும் அதன் facebook தலைமுறையும் பொனட்டிக்குக்கே மாறிவிட்டது வேறு கதை)

 

said ... (24 August, 2009 04:59) : 

அண்ணை.. பம்பல் எனக்கு விளங்கினது.. நான் சீரியஸாகக் கேட்ட கேள்விக்குப் பதில் போடேல்ல நீங்கள்..

 

said ... (24 August, 2009 10:11) : 

மயூரன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உமக்கு மட்டும் அவசரமாகப் பதிலெழுதுகிறேன்.

முதலில் இவ்விடுகையின் முதன்மை நோக்கம் உமது கருத்தை எதிர்ப்பதோ விமர்சிப்பதோ அன்று. இது எழில்வேந்தன் அவர்களுக்கானது. அவர் கதைக்க வேண்டியவந்தது உமது கருத்தைத் தொடர்ந்தே என்பதால் உமது கருத்தைப் பதிந்தேன்.

அத்தோடு நீர் ஆங்கில ஒலியியல் முறையை ஆதரிக்கிறீர் எனவோ அப்பொருள் படும்படியோ நான் எழுதியதாகத் தெரியவில்லை. ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுவதை நீர் எதிர்க்கவில்லை என்பதையே சுட்டியிருந்தேன். பாமினி விசைப்பலகை முறையை நீர் எதிர்க்கிறீர் என்பதாகவும் நான் நினைக்கவில்லை. உபுண்டுக்கு பாலினி எழுத்துருவைக் கொண்டுவந்த காலத்தில் ஓரிடத்தில் ‘அது யாழ்ப்பாணத்தவர்க்கானது’ என்ற பொருள்பட நீர் கதைத்த ஞாபகம். அவ்வளவே. நீர் சொல்வதைப் போலவே யாழ்ப்பாணத் தலைமுறை பாமினியிலிருந்து வெளியே வந்துவிட்டதை நானும் சொல்கிறேன். சந்திப்பில் ஒரு கணிப்பு நடத்தியிருந்தாலே பாமினிப் பயன்பாட்டின் விழுக்காடு மிகக்குறைவாகவும் ஆங்கில ஒலியியல் முறையின் விழுக்காடு அதிகமாகவும் இருக்கிறதென்பது தெளிவாகியிருக்குமென்று நம்புகிறேன். ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுபவர்களுக்கு மட்டுமே உரித்தான எழுத்துப்பிழைகளைக் கொண்டு அவர்களைச் சுலபமாக அடையாளங் காணலாம். தமிழ்வலைப்பதிவுலகின் ஆதிகாலச் செயற்பாட்டாளரான ஈழத்தவர் ஒருவரே ஆங்கில ஒலியியல் முறையில்தான் தட்டச்சுகிறார் என்பதை அண்மையிற் கண்டுபிடித்தேன்.
------------------------------

உமது ஒலிப்பதிவை மீளவும் கேட்டேன். ‘எதிர்க்கிறவங்கள் என்ன சொல்லிறாங்கள் எண்டால்’ என்று தொடங்கி மேலே நான் இடுகையில் சொல்லியவற்றைச் சொல்கிறீர். உமது பின்னூட்டத்தை வாசித்தபின் ஒலிப்பதிவைக் கேட்டால் சிலவேளை நீர் ஒருங்குறி பற்றிச் சொல்லியதைத் தனியே பிரித்தறிய முடியலாம். ஆனால் “இங்க என்ன பிரச்சினை எண்டால்….’ என்று தொடங்கி மலாய் மொழிப் பிரச்சனை பற்றிச் சொல்கிறீர்; அதே பயம் தமிழுக்கும் வந்தது என்கிறீர். அதேயொழுக்கில் ஒருங்குறி தோன்றியதால் தமிழ் பிழைத்ததையும் சொல்கிறீர். ‘இங்க என்ன பிரச்சினையெண்டால்’ என்பது ஆங்கில ஒலியியல் தட்டச்சுமுறைக்கான எதிர்ப்பாளரின் கருத்து என்றே எனக்குப் பொருள்பட்டது. அதேயிடத்தில் ஒருங்குறி தோன்றியதைக் குறிப்பிட்டதைத் தனித்துப் பார்க்க அப்போது முடியவில்லை. என்னை விடும், அரங்கில் நேரடியாகக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அது விளங்கியிருந்தால் சரிதான்.

‘நீர் பேசாமலேயே இருந்திருக்கலாம்’ என்பது எப்படி ஜனநாயக மறுப்பாகுமென்று தெரியவில்லை. அதன் கருத்து ‘நீ பேசக்கூடாது’ என்பதன்று. “எனது பார்வையில்” அரைகுறையான கருத்தாகப் பட்டதைப் பேசுவதை விட பேசாமல் இருந்திருக்கலாம் என்ற கருத்தே. மேலும் அவ்வசனம் உமது கருத்துக்கான நேரடி விமர்சனமன்று. எழில்வேந்தனை எதிர்த்து இடுகை எழுதவேண்டி வந்திருக்காது என்று எழுதியதைச் சேர்த்தே வாசித்து அதன் காரணத்தைப் புரிந்து கொள்ளவும். (எனக்கு நையாண்டியாக எழுத வராதென்பதை ஒத்துக் கொள்கிறேன்.)

தமிழெழுத்துக்களுக்குப் பதிலாக ஆங்கில எழுத்துக்கள் மூளையிற் பதிவதைப் பற்றி நீர் சொல்லியிருக்கிறீர். சரிதான். ‘வலுவான வாதம்’ என நான் சொல்வதும் அந்த மூளையிற் பதிவது தொடர்பானதே. எனவே நீர் வலுவான வாதம் வைத்ததாகவே நான் ஒத்துக் கொள்கிறேன்.

முன்பே சொன்னது போல் எழில்வேந்தனின் கருத்துக்கான விமர்சனத்தையே இவ்விடுகை முதன்மை நோக்காகக் கொண்டது. இதில் உம்மேல் வைக்கப்பட்ட விமர்சனத்துக்கான பதிலை நீர் எழுதியுள்ளீர். அதற்கு மீளவும் ஒரு நன்றி.

எனக்கு எப்படி விளங்கியது என்பது குறித்து நானும் நீரும் வாதிடுவதே இங்கு முதன்மைப் பிரச்சனையாகப் போய்விட்டது. உண்மையில் அரங்கிலிருந்தவர்களுக்கு எப்படி விளங்கியதென்பதே முக்கியமானது.

சரி. ஒருகேள்வி. நீர் இப்படிக் கதைத்தபின்னும் எழில்வேந்தன் எழும்பி அப்படிக் கதைத்தார் என்பதை எவ்வாறு எடுத்துக் கொள்கிறீர்?

 

said ... (24 August, 2009 14:34) : 

/சரி. ஒருகேள்வி. நீர் இப்படிக் கதைத்தபின்னும் எழில்வேந்தன் எழும்பி அப்படிக் கதைத்தார் என்பதை எவ்வாறு எடுத்துக் கொள்கிறீர்? /
எழில்வேந்தன் அப்படிக் கதித்து ஆங்கில ஒலிப்பியலுக்கு சார்பான வாதம் வைத்ததே நான் எதிர்த்தேன் என்பதால் தானே?

பிறகு நான் பதில் சொல்லி விவாத்த்தை நீட்ட விரும்பவில்லை. காரணம் அங்கே ஏற்கனவே சேதுவுக்கும் சர்வேசுக்கும் தமிழ் 99 எதிர் ரெங்கநாதன் என்கிற விவாதம் வந்துவிட்டிருந்தது. கூடவே பாமினிக் காரர் இலங்கை அரச ஆதரவில் பாமினியில் மாற்றம் செய்யப்பட்டே ரெங்கநாதன் வந்திருக்கிறது என்பது "மாற்றம்" என்றவுடன் முகச்சுழிப்பை தந்துவிட்டிருந்தது.

எல்லாவற்றையும் விட "யாழ்தேவி" அரசியலை அவதானமாகவும் (புரிக) நாசூக்காகவும் சந்திப்பில் கடுமைகள் வராமல் பார்த்துக்கொண்டும் கையாளவேண்டி எனக்கிருந்தது.( "யாழ்" என்பதை விட அங்கே முக்கியமானது போருக்குப்பின்னான அந்த "யாழ்தேவிக்" குறியீட்டின் அரசியல். ஒரு பதிவர் துணிந்து கோபத்தோடு அதையும் வெளிப்படுதினார்)

குறித்த விடயம் சார்ந்த விவாதத்தில் தொடந்துகொண்டிருந்தால் பலதரப்பட்ட விடயங்களையும் அந்த நேர இடைவெளியில் தொட்டுவிட முடியாத சூழல் வருவதை நான் விரும்பவில்லை. விக்சனரி, விக்கிபீடியா நூலகம் தொடர்பாகவே கூட நான் சில செக்கன்கள் மட்டுமே தொட்டுப்போனேன்.

சண்டைகளை விட ஓர் இனிய சந்திப்பும் அறிமுகமுமே அங்கே எனது எதிர்பார்ப்பாக இருந்தது.

 

said ... (24 August, 2009 17:52) : 

தாங்கள் எவ்வளவுதான் இப்பதிவர் சந்திப்பு பற்றியும் எழில் பற்றியும் மற்றும் மயூரன் ஆகியோர் பற்றியும் விமர்சிப்பினும் அங்கு வந்திருந்த புதிய பதிவர்களின் அல்லது பதிவிட இருப்பவர்களின் கருத்துகள் எழில் சொன்ன கருத்துக்களோடு ஒத்திருந்தது.அவர்களைப் பொருத்த வரை இது போன்ற சர்ச்சைகளை விடவும் பதிவிடுதல் பற்றிய ஆர்வமும் மற்றய பதிவர்களை சந்தித்த திருப்தியுமே அவர்களுக்கு தேவைப்பாடானதொரு விடயமாக இருந்தது. இது தவிர மேலும் சில விடயங்கள் தொடர்பில் எனது பதிவில் சொல்ல முயற்சிக்கிறேன்.

 

said ... (24 August, 2009 23:08) : 

//பின்னூட்டத்தில் யாராவது வந்து 'ஏய் இவ்வளவு நல்ல விசயம் நடந்திருக்கு நொட்டை மட்டும் பிடிச்சுக் கொணடிருக்கிறாய்' என்று கேட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில் எழுதப்பட்டதன்று.//

:-)

 

said ... (25 August, 2009 00:34) : 

செல்வநாயகி, வந்தியத்தேவன், நிமல்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//On a serious note...அதில மாற்றமில்லை..தமிழ் எழுத்துக்கள் உள்ள் கீ-போட் வாங்கி நீங்கள் சொன்னமாதிரி கீ-போட்ட பாத்து தட்டச்சு செய்யலாமா? அது எந்தளவுக்கு பலன் தரும்?//

கிருத்திகன்,
தமிழெழுத்துக்கள் பொறிக்கப்பட்ட விசைப்பலகை எனும்போது அது இயல்பாகவே ஆங்கில ஒலியியல் முறையிலிருந்து விடுபட்டுவிடும். அத்தோடு எழுத்துக்களைப் பார்த்துப் பார்த்துத் தட்டச்சுவதால் உங்கள் மூளையில் தமிழ் வரிவடிவங்களே பதியப் போகின்றன. எனவே அப்படிப் பயன்படுத்துவது என்னைப் பொறுத்தவரை தவறன்று.

ஆனால் தட்டச்சுவது தொடர்பில் எனக்கொரு கருத்துண்டு. விசைப்பலகையைப் பார்க்காமலே தட்டச்சப் பழக வேண்டுமென்பதையே நான் மற்றவர்களுக்கு அறிவுரையாகச் சொல்வேன்(அது எம்மொழிக்காயினும்).

என்னைக் கேட்டால் புதிய எழுத்துருவை(பாமினி என்று வைத்துக் கொள்வோம்)சராசரியான வேகத்தில் தட்டச்சிப் பழகத் தேவையான நேரம் வெறும் மூன்று மணித்தியாலங்களே. மறுநாள் அதேநிலைக்கு வர அரைமணி நேரங்கூடப் பிடிக்காது. பிறகு முன்னேற்றம்தான். இதை நான் பழகியதை மட்டும் வைத்துச் சொல்லவில்லை, இன்னும் இரண்டொருவருக்குப் பழக்கியவன் என்ற முறையிலும் சொல்கிறேன்.

இரண்டு விடயங்களில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
1. எப்படியாவது இதைப் பழகுவது என்பது.
2. விசைப்பலகையைப் பார்க்காமல் தட்டச்ச வேண்டுமென்பது.

தட்டச்சுவதற்கென்று இருக்கும் நியமமுறைப்படி பத்துவிரல்களையும் சரியான முறையில் பயன்படுத்தி விசைப்பலகையைப் பார்க்காமல் தட்டடிச்சிப் பழகுங்கள் என்பதே எனது அறிவுரை.

அதற்கான உதவிக் குறிப்புக்களுடன் ஓரிடுகை எழுதத்தான் வேண்டும். பார்ப்போம்.

 

said ... (25 August, 2009 00:41) : 

முக்கிய குறிப்பு:

பாமினி என்பது ஓர் எழுத்துருவின் பெயர். அதே விசைப்பலகை முறையைக் கொண்டு வேறு பல பெயர்களில் நிறைய எழுத்துருக்கள் உள்ளன. என்றாலும் அந்த விசைப்பலகை முறை பாமினியின் பெயரால் அழைக்கப்படுகிறது. (பாமினியின் பெயர் பிரபலமாகக் காரணம் என்னவென்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள். சிலவேளை அதுதான் முதல்வந்த எழுத்துருவா?)

இந்நிலையில் பாமினி மட்டுமே சரியான விசைப்பலகை வடிவம் என்று நான் சொல்வதாக யாரும் பொருள் கொள்ள வேண்டாம். முக்கியமாக புதிதாக வலைப்பதிய வந்தவர்கள். வேறும் பல விசைப்பலகை வடிவங்களுள்ளன. ஆங்கில ஒலியியல் முறையிலமையாத எந்த விசைப்பலகை முறையையும் நீங்கள் முயற்சிக்கலாம்.

நான் (வேறும் சிலர்கூட) பாமினியைப் பிடித்துத் தொங்குவதற்குத் தனிப்பட்ட அரசியற் காரணங்களுமுள்ளன.

இதைத் தெளிவுபடுத்தாவிட்டால் வேறு பக்கங்களால் நான் சாத்து வாங்க வேண்டிவருமென்பதால் ஒரு முன்னெச்சரிக்கையாக இந்தக் குறிப்பு.

 

said ... (25 August, 2009 00:42) : 

தமிழன்-கறுப்பி,
வருகைக்கும் கருத்துக்கு நன்றி.

எனக்கும் அன்றுதான் யாழ்தேவி திரட்டி பற்றித் தெரியவந்தது.

மற்றவர்களுக்கு நாளைக்கு வந்து பதிலளிக்கிறேன்.

 

said ... (25 August, 2009 04:09) : 

அருமை... மிக மிக அருமை... மிகச்சரியான விசயத்தைப் பற்றிய விவாதம் இங்கே போய்க் கொண்டிருக்கிறது.

நீங்கள் தமிழ்99 பயன்படுத்துவதற்கான காரணத்தை விளக்கிய விதம் அருமை.

மா.சிவகுமார் அவர்களால்தான் தமிழ்99 பயன்படுத்த ஆரம்பித்தேன். இப்போது NHM மை, எனது கணிணியில் நிறுவி பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். என்னால் இப்போது சுயமாக தமிழில் தட்டச்சும்போது தமிழிலேயே சிந்திக்க முடிகிறது. ஆனால் phonetic முறையில் பயன்படுத்திய போது நிலைமை தலைகீழ். நேரமும் அதிகம் செலவானது. எழுத்துப்பிழைகள் வேறு.

எனவே தமிழ்99 பயன்படுத்துவோம். :)

 

said ... (25 August, 2009 10:51) : 

இதுக்குள்ளே இவ்வளவு அரசியல் இருக்கா?

யாழ்தேவி சர்ச்சை பற்றி நானும் பின்னர் எழுதவேண்டும்..

இந்த தட்டச்சுப் பொறி பற்றி முன்னர் கொஞ்சம் தெரிந்திருந்தது.. இந்தப் பதிவு பின்னூட்டங்கள் மூலமாக நிறைய அறிந்து கொண்டேன்.. நன்றி சகோஸ்.. :)

மயூரன் மற்றும் இன்ன பிறர் சொன்னது போல,//சண்டைகளை விட ஓர் இனிய சந்திப்பும் அறிமுகமுமே அங்கே எனது எதிர்பார்ப்பாக இருந்தது.

//

 

said ... (25 August, 2009 15:06) : 

என்ன. பிரச்சினை ஒன்றுமேயில்லாமல் சந்திப்பு சுமுகமாக முடிந்துவிட்டதே என எண்ணிக்கொண்டிருந்தேன். நானே ஒரு பிரச்சினைக்குக் காரணமாக ஆகிவிட்டேன் என்பதில் கவலையே.இந்தத் தட்டெழுத்துப் பலகைபற்றி நீண்ட காலமாக விவாதித்துக் கொண்டிருப்பது உண்மையில் எனக்குப் பிடிக்கவில்லை. புதுக்கவிதையா மரபுக் கவிதையா சிறந்தது என் இன்னும் வாதிட்டுக் கொண்டிருக்கிறார்களே. அதுபோல.ஒவ்வொருவரும் தங்களுக்கு வாலாயமான, நன்கு பழக்கமான தட்டெழுத்துப் பலகையைப் பரிந்துரை செய்கிறார்களே என்ற ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் அது. குறிப்பாக மயூரன் வெளி நாட்டில் வதியும் குழந்தைகள் தொடர்பாக பேசியபோதுதான் இந்தக்கருத்தை ஒரு உதிரித் தகவலாகச் சொன்னேனே தவிர நான் ஆங்கில உச்சரிப்புத் தட்டெழுத்துதான் உயர்ந்தது என்றோ அதைத்தான் எல்லோரும் பாவிக்க வேண்டுமென்றோ கூற வரவில்லை. எனக்குத் தெரிந்து இலங்கையின் மிக உயர்ந்த ஒரு நிறுவனத்தில் தமிழ் இணையத்தளம் வடிவமைக்கும்போது இத்தட்டெழுத்துப் பிரச்சனை ஏறத்தாள 3 மாதங்கள் விவாதிக்கப்பட்டு மிகுந்த சிரமப்பட்டார்கள். ஒவ்வொருவருக்கும் ஒன்று சிறப்பாகத் தோன்றும். நான் ஒரு கணணி வல்லுனனோ அன்றில் மென்பொருள் வல்லுனனோ. நான் சாதாரண கணினிப் பாவனையாளன். எனக்குத் தேவை எனது கருத்துகளை விரைவாக மற்றும் சுலபமாக தட்டெழுதக் கூடிய ஏதோ ஒரு தட்டெழுத்துப் பலகை. எனக்கு கனடிய (பாமினி,கழகம் போன்றவை) விசைப்பலகை முறைமையும் தெரியும். ஆங்கில உச்சரிப்பு விசைப்பலகை முறைமையும் தெரியும். நான் பாவிக்கும் கணிணியைப் பொறுத்துப் பலகைகளை மாற்றிக் கொள்வேன். என் தேவை என் கருத்தைத் தட்டெழுத்திடுவது மட்டுமே. எதைக் கொண்டு தட்டெழுத்திடுகிறேன் என்பதல்ல. எனவே தயவு செய்து என்னை ஒரு பிரிவுக்குள் மட்டுப்படுத்தவேண்டமெனக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் உங்கள் வலையில் இரு முறையிலுமான தட்டெழுத்துப் பலகைக்கான தெரிவுகளையும் இணைத்திருப்பதும் என்னைப் போன்றவர்களுக்கென்றே நம்புகிறேன்.

 

said ... (25 August, 2009 16:59) : 

எனக்கும் எனது தாய் மொழியை ஆங்கிலத்தில் A M M A என எழுதி அதை அம்மா வாசிக்கும் முறைக்கு எதிரி தான். இது நாங்கள் ஆங்கிலத்தில் சிந்தி்த்து தமிழுக்கு மொழி மாற்றுவதை போன்றதே. மற்றபடி இவ்விவாதம் இனிய தேவையான காரணங்களுக்காக விவாதிக்கப்பட்டதால், இது காலத்தின் தேவையே

பின் குறிப்பு - நான் இந்த பின்னூட்டத்தை பாமினி முறை மூலம்தான் எழுதுகிறேன்.

 

said ... (25 August, 2009 17:06) : 

வசந்தன் உங்கள் எதிர்பாட்டுக்கு ஒரு சின்ன விளக்கம் என்னுடைய வலையில் கொடுத்திருக்கின்றேன். எனக்கு தமிழ்99, கழகம், ஈகலப்பை என்ற எந்தக்கோதாரியும் தெரியாது கூகுளிலும் தமிழ் எழுதியிலும் தட்டச்சுச் செய்யத் தெரியும். ஆனால் இவற்றைப் பற்றிக்கேள்விப்பட்டிருக்கின்றேன், ஆரம்பகாலத்தில் கம்பன் பாவித்திருக்கின்றேன்.

ஆரோக்கியமான விவாதம் தொடரட்டும்.

http://enularalkal.blogspot.com/2009/08/blog-post_2835.html

 

said ... (25 August, 2009 21:02) : 

பின்னூட்டங்களை பெற...

 

said ... (25 August, 2009 22:44) : 

எழில்வேந்தன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஆக, இவ்விடுகையின் விடயப்பரப்பின் மூலகர்த்தாவே வந்துவிட்டீர்கள்.

மரபுக்கவிதையா புதுக்கவிதையா என விவாதித்துக் கொண்டிருப்பவர்கள் ‘விவாதத்துக்காக’ மட்டுமே செய்துகொண்டிருக்கிறார்கள். அது அவர்களது தொழில். இங்கு அப்படியில்லை. எது சிறந்தது என்பது இங்குச் சிக்கலேயில்லை. எது ஆபத்தான வடிவம் என்பதையிட்டுப் பேசுகிறோம். ஆங்கில ஒலியியல் முறையிலுள்ள தீங்கைச் சொல்கிறோம். அது இன்னும் சரியாக உறைக்கவில்லை என்பதே எமது ஆதங்கம்.

நீங்கள் சந்திப்பில் பேசியது போலவே இங்கும் உங்கள் பின்னூட்டம் அமைந்துள்ளது.

//குறிப்பாக மயூரன் வெளி நாட்டில் வதியும் குழந்தைகள் தொடர்பாக பேசியபோதுதான் இந்தக்கருத்தை ஒரு உதிரித் தகவலாகச் சொன்னேனே தவிர//

மயூரன் வெளிநாட்டில் வாழும் குழந்தைகளை உதாரணப்படுத்தியதுதான் எனக்கும் குழப்பத்தை உண்டுபண்ணியது. அத்தோடு, அவர் சந்திப்பில் பேசியபோது கவனிக்காத விடயமொன்றை இப்போது கவனித்தேன். தமிழிலேயே உயர்தரம் வரை படித்து, தமிழிலே நல்ல சிந்தனைத் திறனுள்ளவர்கள் ஆங்கில ஒலியியல் முறையைப் பயன்படுத்துவது பிரச்சினையில்லை என்ற மாதிரியான கருத்தொன்றைச் சொல்கிறார். அவர் எந்த அர்த்தத்தில் அதைச் சொன்னார் என முழுமையாகத் தெரியவில்லை. அவர் வலுவான வாதமே வைத்தார் என நான் ஒத்துக்கொண்டபின் மீண்டும் அவரைக் கிளறி வாதிட்டுக் கொண்டிருக்கப் போவதில்லை.

ஆனால் உங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய இவ்விடத்தில் இந்த விடயத்தையும் தெளிவுபடுத்த வேண்டும். தமிழில் நல்ல தேர்ச்சியுள்ளவர்கள் ஆங்கில ஒலியியல் முறையைப் பயன்படுத்துவது பிரச்சினையில்லை என்ற கருத்து முற்றிலும் தவறானது. தமிழில் மட்டுமே படித்து, பேசி வளர்ந்த - ஆங்கிலத்தைப் பேசத் தெரியாத – கூட்டம் ஆனாலும் கூட ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுவதால் ஏற்படும் தாக்கம் ஒன்றுதான். அரைகுறைத் தமிழறிவாளர்களுக்கே இம்முறை தீங்கைத் தருமென்பது முற்றிலும் தவறான கருத்து.

சரி, வெளிநாட்டில் வாழும் குழந்தைகளை விடுங்கள். வலைப்பதிவர்கள் பற்றி வருவோம்.
தமிழ் வலைப்பதிவாளர்கள் ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுவதைப் பற்றியே ஆதரித்தோ எதிர்த்தோ பேசவேண்டியுள்ளது.

//என் தேவை என் கருத்தைத் தட்டெழுத்திடுவது மட்டுமே. எதைக் கொண்டு தட்டெழுத்திடுகிறேன் என்பதல்ல.//

சந்திப்பு நடந்தபோது உங்கள் உரையை எதிர்த்து அரட்டைப் பெட்டியிலே நான் எழுதியபோது பிரபல பதிவர் ஒருவரும் நீங்கள் சொன்ன இதே வசனத்தைச் சொல்லி உங்களுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.

இப்போது அவருக்கும் சேர்த்தே பதில் சொல்கிறேன்.

முதலில், நீங்கள் கதைத்த இடம் வலைப்பதிவர்களுக்கான சந்திப்பு. வேறுசிலரும் வந்திருக்கக் கூடுமென்றாலும் குறைந்தது தொன்னூறு வீதமானவர்களாவது தமிழில் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருப்பவர்கள் அல்லது எழுதப் போகிறவர்கள். சரிதானே?
இவர்களுக்குத்தான் ஆங்கில ஒலியியல் தட்டச்சுமுறை பாதிப்பைத் தரப்போகிறது. அதாவது தொடர்ச்சியாக அதிகளவில் தட்டச்சப் போகிறவர்களுக்கு.
இவர்களிடத்தில்தான் ஆங்கில ஒலியியல் முறைக்கெதிரான விழிப்புணர்வைக் கொண்டுவரவேண்டும் என்பது என்னைப் போன்றவர்களின் கருத்து. ஆங்கில ஒலியியல் முறையால் என்ன பாதிப்பென்று இடுகையிலேயே சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளேன். எப்போதாவது இருந்துவிட்டு நாலு சொற்களைத் தட்டச்சப் போகிறவர்களுக்கு ஆங்கில ஒலியியல் முறையால் எப்பாதிப்புமில்லை என்பதே உண்மை.

நீங்கள் சொல்வது போல், ‘தட்டச்சினால் சரிதான், எந்த முறையில் என்பது தேவையில்லாதது. அவரவர் தமக்கு இலகுவான, வசதியான முறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்’ என்ற வாதம் சரியன்று. அப்படிப் பார்க்கப் போனால் இன்று புலத்தில் பெற்றோர்கள் குழந்தைகளிடம் தமிழிற் கதைக்காமலிருப்பதைக் கூட விமர்சிக்க எவருக்கும் முடியாமற் போகும். பிள்ளைக்கு இலகுவாக விளங்கக் கூடிய, பிள்ளையால் இலகுவாகப் பேசக்கூடிய மொழியை விட்டுவிட்டு பிறகேன் தமிழால் அவர்களைக் கொல்ல வேண்டும்? இலகுவான, வசதியான முறை என்பதற்கப்பால் அம்முறையிலுள்ள நன்மை தீமைகளைப் பற்றியும் சிந்திக்க வேண்டாமா? (இவ்வளவுக்கும் ஆங்கில ஒலியியலில் அப்படி என்னதான் இலகுத்தன்மை இருக்கிறதென்றும், மற்ற விசைவடிவங்களில் அப்படி என்னதான் கடினத்தன்மை இருக்கிறதென்றும் விளங்கவில்லை. தொடர்ச்சியாகக் கணனியில் தட்டச்சப் போகிறவர்கள் ஆங்கில ஒலியியலின் தீமையைப் புரிந்த பின்னும் ஒரு புதிய விசைப்பலகை வடிவத்தைப் பழகுவதற்குப் பின்னடிப்பது ஒருவகையில் சோம்பேறித்தனம் என்றுதான் சொல்வேன்)

தொடரும்...

 

said ... (25 August, 2009 22:44) : 

தொடர்ச்சி...

//நான் ஒரு கணணி வல்லுனனோ அன்றில் மென்பொருள் வல்லுனனோ. நான் சாதாரண கணினிப் பாவனையாளன்//

அப்ப நாங்கள் யார்? இந்த ஆங்கில ஒலியியல் முறையை எதிர்ப்பதற்கும் அதை விளங்கிக் கொள்வதற்கும் எந்தவொரு நுட்ப அறிவும் தேவையில்லை. ஏன், கணினிப் பயன்பாட்டாளனாய்க்கூட இருக்க வேண்டியதில்லை.

//நீங்கள் உங்கள் வலையில் இரு முறையிலுமான தட்டெழுத்துப் பலகைக்கான தெரிவுகளையும் இணைத்திருப்பதும் என்னைப் போன்றவர்களுக்கென்றே நம்புகிறேன்.//

இறுதியாகச் சரியான இடத்துக்கு வந்திருக்கிறீர்கள்.
ஆங்கில ஒலியியல் முறையை நான் விமர்சிக்கும் போது நண்பர்கள் ஒருகட்டத்தில் ‘நீ உன்ர புளொக்கில ஏன் அந்த முறையில எழுத வசதி செய்து குடுத்திருக்கிறாய்?’ என்று கேட்பார்கள். என்னை மடக்குவதாக அவர்கள் நினைத்துக்கொள்வார்கள்.

என்னிடம் நியாயமான பதிலிருக்கிறது.

அந்தப் பின்னூட்டப்பெட்டி வசதி எந்த வலைப்பதிவரையாவது அல்லது “தொடர்ச்சியாகத் தமிழில் தட்டச்சும்” யாரையாவது ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்ச ஊக்குவிக்குமாக இருந்தால் நான் அதைத் தூக்கிவிடுவேன். நான் அதை வைத்திருப்பதற்கான காரணம் வேறு.
வலைப்பதிவர்கள் மட்டுமே வலைப்பதிவு வாசகர்கள் அல்லர். வலைப்பதிவரல்லாத நிறையப்பேர் – தமிழில் தட்டச்சத் தெரியாத நிறையப்பேர் வலைப்பதிவை வாசிக்கிறார்கள். அவர்கள் இடுகையொன்றுக்குப் பின்னூட்டமிட விரும்பினால் ஒன்றில் ஆங்கிலத்திலேயே எழுத வேண்டும் அல்லது ஆங்கில எழுத்துக்களால் தமிழ்ச்சொற்களை எழுத வேண்டும்.
இதிலே ஆங்கிலத்திலேயே எழுதுவது நன்றுதான். எழுதுபவர்களுக்கும் சிக்கலில்லை, வாசிப்பவர்களுக்கும் சிக்கலில்லை. ஆனால் மற்றவடிவம் வாசிப்பவர்களுக்கு மிகுந்த எரிச்சலைத் தரும் வகை. அவர்களைப் போன்றவர்கள் பிழைத்துப் போகட்டுமென்று அந்த வசதியை விட்டு வைத்திருக்கிறேன். ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சி தமிழெழுத்துக்களைப் பெறுவதும், ஆங்கில எழுத்துக்களாலேயே தமிழ்ச்சொற்களைத் தட்டச்சுவதும் ஒன்றேதான். அந்த வசதியை எடுத்துவிடுவதால் நான் யாரையும் காப்பாற்றப் போவதில்லை. அவர்கள் ஆங்கில எழுத்துக்களாலேயே தமிழைத் தட்டச்சிவிட்டுப் போவார்கள். எனது இடுகைக்குப் பின்னூட்டமிடுவதற்காக மட்டுமே தமிழில் தட்டச்ச வேண்டிய தேவையுள்ள ஒருவர் பாமினியோ அல்லது வேறு விசைப்பலகை முறைகளிலோ தட்டச்சத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுவத அவர்களைப் பாதிக்கப்போவதில்லை என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். தொடர்ச்சியாகத் தமிழில் தட்டச்ச வேண்டியவர்களைத்தான் ‘ஆங்கில ஒலியியல் முறையிலிருந்து விலகியிருக்கும்படி’ கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்தது, அந்த எழுத்துரு மாற்றி நிரல் என்னால் செய்யப்பட்டதன்று. அந்நேரத்தில் சுரதா, கிருபா போன்றவர்களால் உருவாக்கப்பட்டுப் பொதுவில் விடப்பட்டது. அதைப் பொருத்திய நான் செய்த ஒரேமாற்றம், அதில் பாமினியை நியமத் தெரிவாக்கி விட்டதுதான். நான் ஏதாவது செய்ய முடிந்திருந்தால் பாமினியும் தமிழ்நெற் 99 உம்தான் எனது விருப்புக்குரிய தெரிவாக இருந்திருக்கும்.

நிற்க,
ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுவதிலுள்ள தீமைகளை எடுத்துக் கூறுகிறேன். அப்படிச் செய்வதாலேயே பின்னூட்டமிடுவோருக்கு அந்த வசதியைச் செய்து கொடுத்திருப்பது பெருங்குற்றமாகுமா? பேச்சுக்காக, நான் பாமினிக்கான வசதியை மட்டும் கொடுத்து மற்றவசதியை நீக்கினால், பாமினி முறையில் மட்டுமே தட்டச்சுங்கள் என்று நான் சொல்வது போலாகாதா? பிறகு பாசிசம், ஜனநாயக விரோதி பட்டங்கள் என்னை நோக்கி வராதா?
தற்போதைய நிலையில், எழுதுவதைப் போன்ற எரிச்சல் தரும் வேலையொன்று எனக்கில்லை. எனது வலைப்பதிவைப் பார்த்தாலே தெரியும். வேறு யாராவது ஒருத்தர் உங்களின் கருத்தைச் சொல்லியிருந்தால் பேசாமலேயே விட்டிருப்பேன். உங்களின் பேச்சின் போது அகிலனுக்கு நீங்கள் கொடுத்த செவ்விதான் ஞாபகத்துக்கு வந்தது. அதைவிட மூத்த ஊடகவியலாளர், வானொலி அறிவிப்பாளர், வலைப்பதிவாளர் - அதைவிட அச்சந்திப்புக்கு சிறப்பு விருந்தினர் என்ற நிலையில் உங்களின் கருத்து ஏற்படுத்தும் தாக்கத்தைக் கருத்திற் கொண்டு எழுத வேண்டி வந்தது.

 

said ... (25 August, 2009 23:09) : 

திரு.எழில்வேந்தன் அவர்களின் கருத்து மீது எனக்கும் பெரிய வருத்தம்.
தமிழ் ஏதோ அழிந்து போன மொழி போல ஆங்கிலத்தில் யோசித்தாவது தமிழ் பிழைத்துக் கொள்ளட்டும் என்ற கருத்து என்னைப் பொறுத்த வரையில் பிழையானது, நான் எதிர்க்கிறேன்.

 

said ... (26 August, 2009 03:19) : 

கருத்துப் பரிமாற்றங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமே தவிர விதண்டாவாதங்களாகவோ அல்லது தனிப்பட்ட ஒரு நபரை தாக்கி அவரை மனத்துக்கப்படுத்துவதாகவோ இருக்கக் கூடாது.

Phonetic எனப்படும் ஒலியியல் முறையிலான தட்டச்சில் காணப்படும் குறை என்ன ? எதிர்காலத்தில் 'அம்மா' என்ற வார்த்தையை நாம் 'ammaa' என்று எழுத நேரிடும் என்பதுதானே.

இதற்கும் ஒலியியல் தட்டச்சு முறைக்கும் என்ன தொடர்பு? ஒலியியல் தட்டச்சு முறையில் தட்டெழுதும் போது நமக்குத் திரையில் தெரிவது 'அம்மா' தானே ஒழிய 'ammaa' இல்லையே.

மேலும், தமிழ்த் தெரிந்தவர்களுக்கெல்லாம் தட்டச்சு தெரிவதில்லை. தட்டச்சு என்பது ஒரு தனி ஆற்றல் (skill), இவ்வாற்றல் இருந்தால் மட்டுமே தமிழில் நாம் கணினியில் எழுத முடியுமென்ற நிலை வந்தால், கணினியில் தமிழைப் பாவிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். இது தேவை இல்லாத ஒன்று. ஆங்கில தட்டச்சு தெரிந்து கொண்டா நாம் கணினி பாவிக்கத் தொடங்கினோம் ?


சரி, தனித் தமிழ் விசைப்பலகை ஒன்றை உருவாக்குவோம் என்றால், மடிக் கணினி பாவனையாளர்களுக்கு என்ன தீர்வு? தமிழ் மடிக் கணிணிகள் தயாரிக்கும் அளவிற்கு நம்மிடம் போதிய நிதி இருக்கிறதா ? அப்படியே தயாரித்தாலும், வர்த்தக ரீதியில் அது வெற்றி பெறுமா ? இலங்கையில் இணையப் பாவனையாளர்கள் வெறும் 2% தான். இதில் தமிழரின் வீதத்தை அதிலும் தமிழைக் கணிணியில் பாவிப்பவர்களின் வீதத்தை நீங்களே அனுமானித்து விடலாம்.


ஒருங்குறிப் பிறப்பாக்கும் மென்பொருள்கள் (unicode generators) தமிழில் பல இருக்கின்றன. தமிழ் 99, ஒலியியல், பாமினி (ரங்கநாதனை ஒத்தது), Windows உடன் வரும் Inscript, இன்ன பிற. இவை பிறப்பாக்கும் ஒருங்குறி ஒன்றுதான். அதாவது விளைவு (output) ஒன்றுதான்.

ஆகவே அவரவர்க்கு எது இலகுவானதோ அதைப் பயன்படுத்துவது நன்மை தரும். நாம் கணிணியில் சரளமாகத் தமிழைப் பாவிக்கும் திறனைத் தரும். நமது இலக்கு இங்கே அதுதானே. அதைவிடுத்து தமிழ் எழுத்துக்கள் அழிந்து விடும் என்றெல்லாம் வாதிடுவதும் பயப்படுவதும் தேவையில்லாதது மற்றும் தமிழ் மொழியின் வல்லமையையும் ஆளுமையையும் குறைத்து எடை போடுவதுமாகும் என்பது எனது தாழ்மையான கருத்து.

மேலும் தமிழ் தட்டச்சைப் பற்றி இவ்வாறு தேவையற்ற விவாதங்களை ஆரம்பிப்பவர்கள், தமிழ் தட்டச்சுக்களை உற்பத்தி செய்பவர்களா என்ற சந்தேகமும் எனக்கு ஏற்படுகிறது. தங்கள் உற்பத்திப் பொருள்களை விற்பதற்காக இப்படியொரு திட்டமோ தெரியவில்லை.


எழில் அண்ணாவுக்கு ஒரு வரி......................
தங்கள் கருத்து இங்கே சரியான முறையில் விளங்கிக் கொள்ளப்படவில்லை. நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் நமது தமிழ் பெற்றோருக்குப் பிறந்து, தமிழ் மணம் இன்றி வளரும் எமது சிறாருக்குத் தமிழ் எழுத்துக்களை அறிமுகப்படுத்த ஓர் இலகுவான வழியாக ஒலியியல் தட்டச்சைக் காண்கிறீர்கள். இந்தச் சிந்தனையை நான் பாராட்டுகிறேன். கசப்பான மருந்தையே இனிப்பு உறையோடு சாப்பிடும் பிள்ளைகள் அவர்கள், கஷ்டம் தெரியாதவர்கள், அவர்களிடம் தமிழை எடுத்துச் செல்ல இது ஒரு நல்ல வழியாகவே எனக்குப் படுகிறது.


வசந்தனுக்கு ஒரு வரி............................
இந்த எனது பதிப்பைத் தாங்கள் திருத்தங்கள் ஏதுமின்றி அப்படியே போடுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.


திலகநாதன்

 

said ... (26 August, 2009 10:27) : 

வசந்தன் அவர்களே,

தங்களுடைய எழுத்துக்களைப் படித்தேன். மிகவும் நன்றாக எழுதுகிறீர்கள். ஆனால் ஒரு குறை.

தங்கள் கருத்தை மட்டும் சொல்லாமல், ஒரு படி மேலே போய், மற்றவர்களை சிறுமைப் படுத்தும் அல்லது தனிப்பட்ட முறையில் காயப்படுத்தும் உங்களது உளப்பாங்கும் உங்கள் எழுத்தில் வெளிப்படுகிறது. மற்றவர் கருத்துக்களை எள்ளி நகையாடுவதைக் கூட காண்கிறேன்.

நம்மை நாமே காயப்படுத்திச் சுவைக்கும் இந்த உளப்பாங்குதான் நமது இன்றைய இந்த நிலைக்குக் காரணம் என்பது என் கருத்து.

தமிழ் என்றாலே பிரச்சினை என்ற நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. இதனால் சர்ச்சைகளை விரும்பாத என் போன்ற தமிழர்கள் வாய் மூடி தம் வழியே செல்லும் வாய்ப்புகளும் அதிகம்.

யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி, வெளிநாட்டில் வாழும் உங்களுக்குக் கூட, வாதங்களை மற்றவர் மனம் புண்படாமல் எடுத்துச் சொல்லும் திறன் இல்லாமல் இருப்பது சோகமே.

 

said ... (26 August, 2009 13:24) : 

திலகநாதன்,

நீண்ட பின்னூட்டமொன்றை எழுதியிருக்கிறீர்கள்.
முதலில் நன்றி.

//Phonetic எனப்படும் ஒலியியல் முறையிலான தட்டச்சில் காணப்படும் குறை என்ன ? எதிர்காலத்தில் 'அம்மா' என்ற வார்த்தையை நாம் 'ammaa' என்று எழுத நேரிடும் என்பதுதானே.

இதற்கும் ஒலியியல் தட்டச்சு முறைக்கும் என்ன தொடர்பு? ஒலியியல் தட்டச்சு முறையில் தட்டெழுதும் போது நமக்குத் திரையில் தெரிவது 'அம்மா' தானே ஒழிய 'ammaa' இல்லையே.//

வடிவேலு அழுவதைப் போல் நான் அழுவதாக இவ்விடத்தில் கற்பனை பண்ணிக் கொள்ளவும்.

திரும்பவும் முதலில இருந்தா?..... என்னால் முடியாது ஐயா

எனது மொழிக்குறைபாடு எனக்குப் புரிகிறது. யார் எழுதினால் உங்களுக்குப் புரியுமென்று சொன்னால் அவர்கள் தன்னார்வமாக விளங்கப்படுத்த முயற்சிக்கலாம். நீங்கள் சொல்லிய காரணத்தை இதுவரை நான் சொல்லவில்லை, வேறு யாரும் சொல்லவேயில்லை. எனவே இதற்கான பதிலெழுத வேண்டிய தேவை எனக்கில்லை. (சம்பந்தமே இல்லாமலெழுதிவிட்டு இந்த லட்சணத்தில் "திருத்தங்கள் ஏதுமின்றி அப்படியே போடுவீர்கள்" என்ற நையாண்டி வேறு உங்களுக்கு. நாலரை ஆண்டுகால வலைப்பதிவுச் சூழலில் நான் எப்போதாவது அப்படி நடந்திருக்கிறேனா?)

//மேலும் தமிழ் தட்டச்சைப் பற்றி இவ்வாறு தேவையற்ற விவாதங்களை ஆரம்பிப்பவர்கள், தமிழ் தட்டச்சுக்களை உற்பத்தி செய்பவர்களா என்ற சந்தேகமும் எனக்கு ஏற்படுகிறது. தங்கள் உற்பத்திப் பொருள்களை விற்பதற்காக இப்படியொரு திட்டமோ தெரியவில்லை.//

உங்களின் விளக்கத் திறனை முன்னமே வெளிக்காட்டிவிட்டீர்களென்பதால் இவ்விடத்தில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

//எழில் அண்ணாவுக்கு ஒரு வரி......................
தங்கள் கருத்து இங்கே சரியான முறையில் விளங்கிக் கொள்ளப்படவில்லை. நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் நமது தமிழ் பெற்றோருக்குப் பிறந்து, தமிழ் மணம் இன்றி வளரும் எமது சிறாருக்குத் தமிழ் எழுத்துக்களை அறிமுகப்படுத்த ஓர் இலகுவான வழியாக ஒலியியல் தட்டச்சைக் காண்கிறீர்கள்.//

முதலில யாரைப்பற்றிக் கதைக்கப்படுகிறது என்பதையாவது விளங்கிக் கொள்ளுங்கள். வலைப்பதிவர்கள் பற்றி. எழில்வேந்தன் அவர்களுக்கான பின்னூட்டத்தை வாசியுங்கள். அவர் வெளிநாட்டுக் குழந்தைகளுக்கு மட்டும் ஒலியியல் முறையைப் பரிந்துரைக்கிறார் என்றால் நான் இவ்விடுகையை எழுதியிருக்க மாட்டேன்.

//சரி, தனித் தமிழ் விசைப்பலகை ஒன்றை உருவாக்குவோம் என்றால், மடிக் கணினி பாவனையாளர்களுக்கு என்ன தீர்வு? தமிழ் மடிக் கணிணிகள் தயாரிக்கும் அளவிற்கு நம்மிடம் போதிய நிதி இருக்கிறதா ? அப்படியே தயாரித்தாலும், வர்த்தக ரீதியில் அது வெற்றி பெறுமா ? இலங்கையில் இணையப் பாவனையாளர்கள் வெறும் 2% தான். இதில் தமிழரின் வீதத்தை அதிலும் தமிழைக் கணிணியில் பாவிப்பவர்களின் வீதத்தை நீங்களே அனுமானித்து விடலாம்.//

தமிழ் விசைப்பலகைதான் தீர்வென்று நான் சொல்லவேயில்லை. என்னைப் பொறுத்தவரை அது முழுமையான தீர்வன்று. கிருத்திகன் கேட்ட கேள்விக்குத்தான் பதில்சொன்னேன். தமிழெழுத்துக்கள் பொறித்த விசைப்பலகைகளால் அதைப் பயன்படுத்துபவர்களைத் தவிர்த்து இந்தச்சிக்கலை தீர்க்க முடியாதென்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

தற்போது ஆங்கில ஒலியியலில் தட்டச்சுபவர்கள் பலர் விசைப்பலகையைப் பார்க்காமலேயே தட்டச்சுகிறார்கள். இங்கே என்ன சொல்லப்போகிறீர்கள்? கணனியைப் பயன்படுத்தத் தொடங்கிய சிலநாட்களிலிருந்தே விசைப்பலகையைப் பார்க்காமல் தட்டச்சிக் கொண்டு வருபவன் நான். இன்னும் நிறையப் பேர் இருக்கிறார்கள். விசைப்பலகையைப் பார்க்காமல் ஆங்கிலத்தில் தட்டச்ச முடிகிறவர்களுக்கு அதேபோல் தமிழிலும் தட்டச்ச முடியாதா?

நான் பரிந்துரைப்பது தட்டச்சத் தொடங்கும்போதே நியம முறைப்படி விசைப்பலகையைப் பார்க்காமல் தட்டச்சப் பழக வேண்டுமென்பதே. இது கடினமான செயலுமன்று.

 

said ... (26 August, 2009 13:53) : 

Thamizh,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நீங்கள் எனது எழுத்தைப்பற்றி உளமாரச் சொல்லியிருந்தால் நன்றி.

//யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி, வெளிநாட்டில் வாழும் உங்களுக்குக் கூட, வாதங்களை மற்றவர் மனம் புண்படாமல் எடுத்துச் சொல்லும் திறன் இல்லாமல் இருப்பது சோகமே.//

இதில 'யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி, வெளிநாட்டில் வாழும் உங்களுக்குக் கூட' என்பதற்குள்ளால் என்ன சொல்ல வருகிறீர்கள்?

மனம் புண்படாமல் கதைப்பது என்று நீங்கள் சொல்ல வருவது புரியவில்லை. இங்கே பலர் எல்லோருக்கும் நல்லவன் என்ற பெயரெடுக்க நடத்தும் விளையாட்டுக்கள் சகிக்க முடியவில்லை. அப்படியான பெயர் எனக்குத் தேவையில்லை என்பது ஒரு காரணம்.

அடுத்தது, உண்மையில் எனக்கு ஏற்பட்ட எரிச்சல், கோபம் எழுத்தில் வெளிப்படத் தானே செய்யும்? 'தமிழ் பற்றி பிரக்ஞை' என்று நான் எழுதியதுதான் பெரும்பாலும் உங்களுக்குச் சுட்டிருக்குமென்று நினைக்கிறேன். எழில்வேந்தன் அதற்குத் தகுதியானவரே.

இப்போது இப்பின்னூட்டத்தில் நான் ஒன்று எழுதுகிறேன்.

'எப்பிடியாவது தமிழ் வந்தாச் சரிதானே' என்ற வாதத்தை எதிர்க்க நான் அவருடைய சொற்களையே எடுத்துக் கொள்கிறேன்

"பின்ன என்ன கோதாரிக்கு நல்ல தமிழ் கதைக்க வேணுமெண்ட ஒப்பாரி? தமிழ் பற்றின பிரக்ஞை எல்லாருக்கும் இருக்க வேணுமெண்ட வியாக்கியானம்? விளங்கினாச் சரிதானே எண்டுபோட்டு இருக்கலாமே? தமிழக ஒலி,ஒளிபரப்புக்கள் மேல் ஏன் விமர்சனம்? தமிழக வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஐம்பது வீதம் தமிழிருந்தாலே பெரிய விசயம். ஆனால் அந்தக் கதையாடல்கள் யாருக்குத்தான் விளங்கவில்லை? இலங்கையிலேகூட அந்தக் கதையாடல்கள் யாருக்காவது விளங்காமலா போய்விடும்?

சனம் கதைக்கிற மாதிரியே, சனத்துக்கு விளங்கிற மாதிரியே கதைச்சிட்டுப் போக வேண்டியதுதானே? இப்போதைய வானொலி அறிவிப்பாளர்கள் தமிழைக் கொல்கிறார்கள் என்ற ஒப்பாரி எதற்கு? சனத்துக்கு விளங்குது, அவன் கதைச்சிட்டுப் போறான். "தக்கன பிழைக்கும்" எண்டு சொல்லிப்போட்டு இருங்கோவன். ஏன் சும்மா வந்து நிண்டுகொண்டு 'ஐயோ தமிழ் துலையுது' எண்டு மற்றாக்களுக்கு அட்வைஸ் பண்ணிக் கொண்டு இருக்கோனும்?"

சரி Thamizh என்ற அன்பரே,
மேலே நான் கூறியது எழில்வேந்தனைச் சிறுமைப்படுத்துகிறதா? அப்படிச் சிறுமைப்படுத்துகிறது என்பதற்காக நான் அதைச் சொல்லக் கூடாதா? "எனது பார்வையில்" ஒரே விடயத்துக்கு இருவேறு நிலைப்பாட்டை எடுக்கிறார் என்றளவில் அவரின் ஒருநிலைப்பாட்டைக் கொண்டு மற்றநிலைப்பாட்டைக் கேள்வி கேட்கிறேன். அதற்காகவேதான் அவர் அகிலனுக்குக் கொடுத்த பேட்டியைச் சுட்டினேன். அதில் நையாண்டி நிறையவே இருந்தது என்பது உண்மையே. அதை ஏற்றுக்கொள்வது அவரவரைப் பொறுத்தது.

மேலே நான் கூறியதை எப்படி 'மனம் நோகாமல்' சொல்லிறதெண்டு உங்கட 'வேர்சனில' ஒரு பின்னூட்டம் போடுங்கோ. நான் திருந்த முயற்சிக்கிறன்;-).

அடுத்தது, 'எழில்வேந்தனை' எதிர்த்து இப்படி எழுதியது சிலருக்குக் கோபமூட்டியிருக்கிறதென்பது புரிகிறது. நான் அவரைப் பெயர்சொல்லிப் பயன்படுத்தியது குறித்து ஒருவர் தனிமடல் கூட அனுப்பியிருக்கிறார். வலைப்பதிவுச் சூழலில் வயதுவித்தியாசமின்றி எல்லோரையும் பெயர்சொல்லியே எழுதுவது எப்போதோ வந்துவிட்ட நடைமுறையாகவே பார்க்கிறேன். சிலர் சிலருக்கு 'சார்' போட்டுக் குழைவது வேறு விசயம். மற்றும்படி பொதுவாகவே பெயர்சொல்லி எழுதுவதும் அதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வதும் ஏற்கனவேயிருக்கும் நடைமுறையே. அப்படி அண்ணாவோ ஐயாவோ போட்டுத்தான் எழுதவேண்டுமென்று தொடர்புடையவர்கள் விரும்பினால் தாராளமாகத் தெரிவிக்கலாம். 'அக்கா' என்று எழுதாதே என்று வேண்டுகோள் வைத்து அதை மற்றவர்கள் கடைப்பிடிப்பது போலவே, அப்படி மரியாதைச் சொல்லொன்றோடுதான் என்னைக் குறிப்பிட வேண்டுமென்று சொல்லவும் உரிமையுண்டு.

 

said ... (26 August, 2009 18:34) : 

தம்பி வசந்தன், மிகுந்த மன வேதனையோடு எழுதுகிறேன். தங்களின் எழுத்துக்களையும் பின்னூட்டங்களுக்கான பின்னூட்டங்களையும் பார்க்கும்போது, ஏதாவது சிக்கலானவற்றைச் சொல்லவேண்டுமென்பதிலேயே குறியாக இருப்பதாகத் தெரிகிறது. கருத்துகளை ஒன்றுக்கொன்று முரணாகச் சொல்கிறீர்கள்.

ப்ப்ப்ப்ப்ப்ப்முதலில் அகிலனுக்கு நானளித்த பேட்டி முழுக்க முழுக்க வானொலியில் பயன்படுத்தும் தமிழ் பற்றியதேயொழிய அது தமிழ் தட்டெழுத்து தொடர்பானதல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அது மட்டுமின்றி அப்பேட்டியில் நான் "பிரஞ்ஞை" என்ற வார்த்தையை நானாகப் பயன்படுத்தவில்லை. அகிலனின் கேள்வியில் அச்சொல் வந்தபோதுதான் என் பதிலிலும் அச்சொல் வந்தது.. அதனை ஒரு "கேலி"க்குரிய சொல்லாகப் பயன்படுத்தியுள்ளீர்கள். அகிலனின் தளத்தை மீண்டும் சென்று பாருங்கள்

கடைசியாக நீங்களிட்ட பின்னூட்டத்தில் (திலகநாதனுக்கான பதிலில்)நான் வெளிநாட்டுப் பிள்ளைகளுக்காக அவ்வாறு கூறியிருந்தால் இந்தப் பதிவே வந்திருக்க மாட்டாதெனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

//முதலில யாரைப்பற்றிக் கதைக்கப்படுகிறது என்பதையாவது விளங்கிக் கொள்ளுங்கள். வலைப்பதிவர்கள் பற்றி. எழில்வேந்தன் அவர்களுக்கான பின்னூட்டத்தை வாசியுங்கள். அவர் வெளிநாட்டுக் குழந்தைகளுக்கு மட்டும் ஒலியியல் முறையைப் பரிந்துரைக்கிறார் என்றால் நான் இவ்விடுகையை எழுதியிருக்க மாட்டேன்//

என்னுடைய பேச்சைச் சரியாகக் கேட்டிருந்தீர்களானால் நான் வெளிநாட்டுப் பிள்ளைகளை அடியொற்றித்தான் இக்கருத்தை முன்வைத்தேன் என்பது நன்கு புரிந்திருக்கும். அதற்காக ஒரு உதாரணத்தைக் கூடச் சொல்லியிருந்தேன். நீங்கள் என் பேச்சை முழுமையாகக் கேட்காது விட்டிருந்தால் தயவு செய்து மௌ மதுவதனின் நா வலைப் பூவில் ஒலிப்பதிவுகள் உள்ளன. அதில் 5ம் பாகத்தின் கடைசிப் பகுதியைக் கேட்கவும்.வெளிநாட்டிலுள்ள தமிழ்ப் பிள்ளைகளுக்கு இம்முறை உதவுமென தெளிவாகக் கூறியிருக்கிறேன்.

இன்னுமொன்று.

//அடுத்தது, 'எழில்வேந்தனை' எதிர்த்து இப்படி எழுதியது சிலருக்குக் கோபமூட்டியிருக்கிறதென்பது புரிகிறது. நான் அவரைப் பெயர்சொல்லிப் பயன்படுத்தியது குறித்து ஒருவர் தனிமடல் கூட அனுப்பியிருக்கிறார். வலைப்பதிவுச் சூழலில் வயதுவித்தியாசமின்றி எல்லோரையும் பெயர்சொல்லியே எழுதுவது எப்போதோ வந்துவிட்ட நடைமுறையாகவே பார்க்கிறேன். சிலர் சிலருக்கு 'சார்' போட்டுக் குழைவது வேறு விசயம். மற்றும்படி பொதுவாகவே பெயர்சொல்லி எழுதுவதும் அதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வதும் ஏற்கனவேயிருக்கும் நடைமுறையே.//

நான் எவரையும் என்னை அண்ணா என்றோ ஐயா என்றோ அழைக்க வேண்டுமென விரும்புகிறவனல்ல. எனது பிள்ளையின் வயதொத்தவர்களே என்னோடு வானொலியில் பணியாற்றும்போது வெறுமனே "எழில்" என்று என்னை அழைக்குமாறு சொல்லி, அமுல்படுத்தியவன். வேண்டுமானால் என்னோடு பணியாற்றிய லோஷன் போன்றோரிடம் கேட்டறிந்து கொள்ளலாம். இதற்கும் ஏதேனும் புதுக் காரணங்களை நீங்கள் காணலாம்.

உங்கள்கருத்துகளை உங்களுக்குச் சொல்ல எவ்வளவு உரிமையுண்டோ அதே போன்றுதான் என் கருத்தைச் சொல்ல எனக்கும் உரிமையுண்டு என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். நான் கருத்துக் கூறுகையில் அதை நான் தெளிவாகச் சொன்னேன். இது என் சொந்த அபிப்பிராயமென்று.தவிர்த்து நீங்கள் சொல்வதைத்தான் எல்லோரும் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று பிடிவாதம் பிடிக்காதீர்கள். அல்லது மற்றவரை கேலியாகப் பேசுவதுதான் உங்கள் கருத்தாடலின் முக்கிய நோக்காகவும் கொள்ளாதீர்கள். எதையும் மறுதலிப்பதுதான் வாழ்வின் உச்சமல்ல. இது தொடர்பாக இனிமேல் நான் உங்களுக்கு எதுவுமே எழுதப் போவதில்லை.

வாழ்த்துகளுடன்

சி.எழில்வேந்தன்

 

said ... (26 August, 2009 23:31) : 

அன்புள்ள எழில் வேந்தன்,

நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை, நான் சொல்வது உங்களுக்குப் புரியவில்லை என்றளவில்தான் இதை முடிக்க வேண்டும்.

/அகிலனுக்கு நானளித்த பேட்டி முழுக்க முழுக்க வானொலியில் பயன்படுத்தும் தமிழ் பற்றியதேயொழிய அது தமிழ் தட்டெழுத்து தொடர்பானதல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.//

அது எனக்கு நன்றாகவே புரிந்திருக்கிறது. உங்களது அந்தச் செவ்வியில் வானொலி அறிவிப்பாளர்களைப் பற்றித்தான் சொன்னீர்கள் என்பதை நான் பின்னூட்டத்திலும் சொல்லியுள்ளேனே? இதிலென்ன குழப்பம்? நான் உங்களின் செவ்வியைக் குறிப்பிட்டுக் கதைத்த காரணம் உங்களுக்கு இன்னும் விளங்கவில்லையென்பது வியப்பாகவே இருக்கிறது.
திரும்பத் திரும்ப ஒன்றையே சொல்லிக் கொண்டிருக்க எனக்கும் விருப்பமில்லைத்தான்.

பிரக்ஞை என்பதை நான் நையாண்டியாகவே பயன்படுத்தினேன். அது உங்களை வருத்தப்படுத்தியிருப்பதால் அதற்கு மன்னிக்க.

உங்களை மதிப்போடுதான் நான் அழைக்க வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்ப்பதாக நான் சொல்லவில்லை, அப்படிக் கருதவுமில்லை. நான் உங்களைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டதால் கோபமுற்ற மற்றவர்களுக்கான பதிலே அது. லோசனைப் போய்க் கேட்க வேண்டியவர்கள் அவர்களே. உங்களுக்கு அப்படித் தோன்றும் விதத்தில் எழுதியது எனது பிழையே.

//அவர் வெளிநாட்டுக் குழந்தைகளுக்கு மட்டும் ஒலியியல் முறையைப் பரிந்துரைக்கிறார் என்றால் நான் இவ்விடுகையை எழுதியிருக்க மாட்டேன் - வசந்தன்//

இதிலே "மட்டும்" என்ற சொல்லைத் தேவையில்லாமலா எழுதினேன்? நீங்கள், நான் சொன்னதாக எழுதியதில் அந்தச் சொல்லை விட்டுவிட்டு எழுதியுள்ளீர்கள்.

மயூரன் வலைப்பதிவர்களுக்கும் சேர்த்துத்தான் கதைத்தார். உங்களின் பதில் வலைப்பதிவர்களுக்கும் சேர்த்துத்தான் என்பதாகவே நான் விளங்கிக் கொண்டேன். இப்போதும் நீங்கள் வலைப்பதிவர்கள் ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுவதை எதிர்க்கவில்லை. 'எப்படியாவது தமிழ் வந்தாச் சரிதான்'என்பதைத்தானே சொல்கிறீர்கள்?

இல்லை, நீங்கள் வலைப்பதிவர்கள் ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுவதை ஆதரிக்கவில்லையென்றால் நான் இந்த இடுகையை எழுதவேண்டிய தேவையே இல்லை.

இந்த விசைப்பலகை முறைக்கு ஆதரவாக பலர் இருக்கும்போது, பலர் கதைக்கும்போது உங்களை மட்டும் நான் குறிப்பிட்டு இடுகையெழுதியதற்குக் காரணம், நீங்கள் நல்ல தமிழ், தமிழ் மீட்சி, வேற்றுமொழிக் கலப்பின்மை பற்றிக் கதைப்பதாலேயே.
அதைத்தான் ஒரேவிடயத்தில் இருவேறு நிலைப்பாடுகள் என்றேன். (இன்னமும் அது வானொலித் தமிழ் இது தட்டச்சுத் தமிழ் என்று வகைப்படுத்திவிட்டு அந்த இருநிலைப்பாட்டை நியாயப்படுத்தினாற்கூட எனக்கு ஒன்றுமில்லை. வேற்றுமொழிச் சொற்கள் கலந்து கதைப்பதால் தமிழ் சீரழிந்து போகுமென்பது எப்படி உண்மையோ அதைப்போலவே ஆங்கில ஒலியியல் முறையாலும் தமிழுக்கு ஆபத்து என்பது என் கருத்து.)

அடுத்து, நான் சொல்வதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று நான் அடம்பிடிக்கவில்லை. நகைமுரணாக, பின்னூட்டமிடுவோருக்கு ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்ச வசதி செய்து கொடுத்ததைக் கேள்விக்குட்படுத்தியவர் நீங்களே.

இதுவரைக்கும் ஒருவருமே ஆங்கில ஒலியியல் முறைக்கெதிராக வைக்கப்பட்ட கருத்தை மறுக்கவே இல்லை. (நிறையப் பேருக்கு அந்தக் கருத்தே விளங்கவில்லை என்பதுதான் இப்போது எனது புரிதல். திலகநாதனின் பின்னூட்டம் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. ஏதோ எனது எழுத்துத்திறமை அவ்வளவுதான்.-( ) ஆக, நியாயமான எந்த எதிர்க்கருத்தையும் வைக்காமலேயே 'எப்பிடியெண்டாலும் தமிழ் வந்தாச் சரிதான்' என்றுகொண்டிருப்பதைத்தான் அடம்பிடித்தல் என்று சொல்லலாம்.

ஆக்கபூர்வமானதாக இருந்திருக்க வேண்டிய இந்த விவாதம் 'எழில்வேந்தன் எதிர் வசந்தன்' என்பதாகப் போவதும் 'அடம்பிடிப்பது' போன்ற தோற்றப்பாட்டுக்குக் காரணமாயிருக்கலாம்.
-----------------------------------
இந்த இடுகை மூலம் நான் அறிந்துகொண்ட சில விசயங்களுள்ளன.

ஆங்கில ஒலியியல் முறைக்கெதிரான ஒரு விமர்சனமிருப்பதையே பலர் - நீண்டகாலம் வலைப்பதிபவர்கள்கூட அறிந்திருக்கவில்லை.

இலங்கையிற்கூட மிகமிக அதிகமானவர்கள் ஆங்கில ஒலியியல் முறையிலேயே தட்டச்சுகிறார்கள்.

சிலர் மட்டுமே நான் சொல்லவருவதை விளங்கிக் கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு விளங்கும்வண்ணம் எனக்கு எழுதத் தெரியவில்லை.

--------------------------
எழில்வேந்தன் கலந்துகொள்ளாத பட்சத்தில் இனிமேல் அவர் சொன்னது, அவருக்கு நான் சொன்னது தொடர்பாக மற்றவர்கள் எழுதும் எந்தப் பின்னூட்டமும் வெளியிடப்படாது.

தட்டச்சு முறை தொடர்பாக வரும் பின்னூட்டங்கள் அனைத்தும் வெளியிடப்படும். அத்தோடு மற்றவர்களுக்கும் எனக்குமான விவாதங்கள் ஏதாவது இருந்தாலும் தொடரலாம்.

 

said ... (27 August, 2009 02:55) : 

ஒலியியல் தட்டச்சு முறையில் தட்டெழுதும் போது நமக்குத் திரையில் தெரிவது 'அம்மா' தானே ஒழிய 'ammaa' இல்லையே. //

திலகநாதன் அவர்களுக்கு

திரையில் அம்மா என்றுதான் தெரியும். ஆட்டுக்குட்டி என்று தெரியாது.

ஆனால் உங்களது மூளைக்குள் அது அம்மா என்று பதிகிறதா.. அல்லது ammaa என பதிகிறதா..? நான் ammaa என்றுதான் பதியும் என்கிறேன். எதிர்காலத்தில் எல்லா மொழியிலும் எழுத்து வடிவம் கணணியோடுதான் தங்கிவிடப்போகிறது. பேப்பர் பேனையில் எழுதும்காலம் முடிந்துவிட்டது.

ஆகவே.. கணிணியில் எழுத எழுத.. மூளைக்குள் ammaa.. aadu.. ilai.. ee என்று பதியத்தொடங்க.. கடைசியில மூளையிலிருந்தும் மூளை தரும் சிந்தனையிலிருந்தும் அம்மா ஆடு இலை ஈ போன்றவை தள்ளிப்போகும்.

இவ்வளவும்தான்.

 

said ... (27 August, 2009 11:24) : 

வசந்தன் அவர்களே,

எனக்கு விளக்கத் திறன் இருக்கிறதோ இல்லையோ தெரியவில்லை ஆனால் தங்களுக்கு உள் வாங்கும் மனம் (receptive mind) இல்லை என்பது எனக்கு நன்றாகவே விளங்குகிறது. இது ஒரு விதமான மனநிலைக் கோளாறு. தயவு செய்து ஒரு மன நல மருத்துவரைச் சந்திக்கவும்.

மேலும், பாவம், நீங்கள் இன்னும் வடிவேலுவை விட்டு வெளியே வராதவர் என்பது எனக்கு இப்போது புரிகிறது. எழில் அண்ணை இதில் பின்னூட்டமிட்டதனால், நானும் ஏதோ ஒரு முக்கிய விவாதம் என்று நினைத்துவிட்டேன். ஆனால், எழில் அண்ணைக்கும் வேற வேலையில்லை போல கிடக்கு.

ஆனால் ஒன்று, எழில் அண்ணை சொன்னது போல் மறுதலிப்பதுதான் வாழ்வின் உச்சமில்லை.

சயந்தன் அவர்களே,

உங்கள் கண்டுபிடிப்புக்குப் பாராட்டுக்கள். உண்மை, 'aattukkutty' என்றடித்தால்தான் 'ஆட்டுக்குட்டி' என்று வரும். 'ammaa' என்றடித்தால் 'அம்மா' தான் வரும். ஆனால் என் மூளை எனக்கு 'ஆட்டுக்குட்டி' யையும் 'அம்மா' வையும் தான் காட்டுகிறது. ஒரு வேளை என் மூளை தங்களது மூளையைப் போல் விருத்தியடையவில்லயோ என்னவோ........


நான் ஒலியியல் தட்டச்சு முறைதான் சிறந்தது என்பவனல்ல ஆனால் இதன் பாவனையை உங்களால் தடுக்கமுடியாது.


தனிப்பட்ட முறையில் ஒரு குறிப்பு.................
தாங்கள் இருவரும் வடிவேல் படங்களை விட்டு விட்டு 'Emotional Intelleigence' பற்றி ஏதாவது படிக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்கிறேன்.

திலகநாதன். கை

 

said ... (27 August, 2009 12:02) : 

தமிழ்நெற்99 இற்கு ஆதரவாக ரவிசங்கர் எழுதிய இரண்டு இடுகைகளுக்கான இணைப்புக்கள் எனது இடுகையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன.

அவை தமிழ்நெற்99 ஐ ஊக்கப்படுத்தும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்டிருந்தாலும் ஆங்கில ஒலியியல் முறையில் முறையில் தட்டச்சுவதிலுள்ள பாதகத்தைப் பற்றியும் பேசுகிறது.

அவ்விடுகைகள் சிலருக்காவது விளக்கத்தை அளிக்கக் கூடும்.

====================

திலகநாதன்,
சயந்தன் சொல்லியது உமக்கு விளங்கியதா? அதைத்தான் நானும் சொன்னேன். அதை மறுப்பதென்பது வேறு. ஆனால் நீங்களோ 'வட்டுக் கோட்டைக்கு வழிகேட்டால் துட்டு ரெண்டு கொட்டைப்பாக்கு' என்ற கதையாக நான் சொல்லாத ஒரு விசயத்தைத்தான் எனது வாதமாகக் கருதிக்கொண்டு முன்பு பின்னூட்டமிட்டிருந்தீர்கள். அதைச் சுட்டி நான் சொன்னதை ஏற்றுக்கொள்ளத் தெரியாத நீங்கள் என்னைப் பார்த்து எனக்கு ஏற்றுக்கொள்ளும் மனமில்லை என்பது பெரிய வேடிக்கை.

நீங்களே சொன்னதுபோல் உங்கள் மூளைதான் சிக்கலாக இருக்கலாம். (கவனிக்க: ஆங்கில ஒலியியல் முறைக்கு ஆதரவானவர்களுக்கு மூளை பிசகானதென்று நான் சொல்லவேயில்லை)

சரி, நான் தந்திருக்கும் இரு இணைப்புக்களையும் போய்ப்பாருங்கள். அவ்விடுகைகளிற்கூட இன்னும் பல இணைப்புக்கள் உள்ளன. அங்கெல்லாம் நிறையப்பேர் கதைத்திருக்கிறார்கள். வாசித்துப் பாருங்கள். ஏன் எனது இடுகையிற்கூட சிலர் ஆங்கில ஒலியியல் முறைக்கெதிராக பின்னூட்டமிட்டே இருக்கிறார்கள்.

இவர்கள் எல்லாருக்கும் மூளையில் சிக்கலென்றுவிட்டு மேதாவிகள் நீங்கள் இருங்கள்.

/நான் ஒலியியல் தட்டச்சு முறைதான் சிறந்தது என்பவனல்ல ஆனால் இதன் பாவனையை உங்களால் தடுக்கமுடியாது.//

ம். இதுக்கு என்னத்தைச் சொல்லிறது? தடுக்க முடியாது எண்டதுக்காக எங்களுக்குப்பட்ட எதிர்விமர்சனத்தை வைக்கக்கூடாது எண்டால் என்ன கதையிது? ஏதோ தமிழ்ப்பட வில்லனின்ர சவடால் மாதிரியெல்லோ உங்கட கதையிருக்கு?

 

said ... (27 August, 2009 13:26) : 

திலகநாதனுக்கான இறுதிப் பின்னூட்டத்தைத் தொடர்ந்து எனது இடுகையையும் சகல பின்னூட்டங்களையும் மீள வாசித்துப் பார்த்தேன்.

எங்கோ தொடங்கி எங்கோ வந்து நிற்கிறது. ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுவதை விமர்சிக்க வேண்டுமென்ற என் நோக்கம் சிதறுப்பட்டு தனிப்பட்டவர்களின் கருத்தை விமர்சிப்பதாகத் தொடங்கி அவர்களோடே சண்டைபிடிப்பதாக நீண்டுள்ளதை உணர்கிறேன். ஆங்கில ஒலியியல் முறைக்கு எதிரான வாதத்தை முழுமையாக்குவதில் முழுக்கவனத்தையும் செலுத்தாமல் வேறுதிசையில் எனது கவனம் திசைதிரும்பியதாகவே படுகிறது.

பின்னூட்டங்களில் எந்தவொரு இடத்திலும் இம்முறைக்கு ஆதரவாகவோ எதிர்த்தோ ஆரோக்கியமான வாதம் நடக்கவில்லை. திலகநாதன் மட்டுமே தான் இறுதியாக சயந்தனுக்கு அளித்த பதிலில் 'எனது மூளையில் அப்படிப் படிவதில்லை' என்று மறுப்புச் சொல்லியிருக்கிறார். அந்தளவுக்குக்கூட வேறெவரும் சொன்னதில்லை. இதை அவர் முன்பே எனக்கான பதிலில் சொல்லியிருந்தாலே தேவையற்ற சண்டை வந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியொரு மறுப்பைக்கூடச் சொல்லாமல் 'எப்பிடியெழுதினாலும் தமிழ் வந்தாச் சரிதானே?' என்று சொல்லிக் கொண்டிருந்ததே எனக்குச் சினத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. (ஆம்! இடுகையிலும் பின்னூட்டங்களிலும் எனது சினம் வெளிப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஏன் ஒலியியல் முறை தீங்கானது என்பதைச் சரியான முறையில் சொல்லாமல் - எழில்வேந்தன் அதை அறிந்திருக்காத பட்சத்தில் நான் சினந்துகொள்வது பிழையே.)

என்ன செய்ய? சயந்தன் சொல்லியது திலகநாதனுக்குச் சரியாக விளங்கியது, அதையே நான் சொன்னபோது வேறுவிதமாக விளங்கியது என்றால் எனது எழுத்திலேதான் பிழையிருக்கிறதென்று தெரிகிறது.

எனினும் விடுவதாக இல்லை.

ஆங்கில ஒலியியல் முறையின் பாதகத்தை எடுத்துக்கூறி இன்னோர் இடுகை விரைவில் எழுதப்போகிறேன். அதிலே எந்தப் பதிவரினது பெயரோ அவர்களின் பழைய செவ்விகளோ கருத்துக்களோ இடம்பெறா என்பதை உறுதிகூறுகிறேன் ;-) அங்கே அதுகுறித்த ஆரோக்கியமான விவாதங்கள் நடக்குமென நம்புகிறேன்.

இவ்விடுகையில் இனிமேலும் ஏதும் ஆரோக்கியமான விவாதம் நடக்க வாய்ப்பில்லை. எனவே இவ்விடுகைக்கான பின்னூட்டப்பெட்டி இத்தோடு பூட்டப்படுகிறது. இனிவரும் பின்னூட்டங்கள் வெளியிடப்படமாட்டா.

ஆனாலும் திலகநாதன் பதிலளிக்க ஏதும் இருந்தால் அவருக்கான வாய்ப்பு வழங்கப்படும். அவரோ சயந்தனோ எழுதும் பின்னூட்டங்கள் மட்டும் (கூடவே எழில்வேந்தன் ஏதும் எழுதினாலும்) வெளியிடப்படும்.

விரைவில் அடுத்த இடுகையில் சந்திப்போம்.

நன்றி.

 

post a comment

© 2006  Thur Broeders

________________