மரங்கள் -2- விண்ணாங்கு
இத்தொடரின் முதலாவது பகுதியில் 'வெடுக்குநாறி' என்ற மரத்தைப்பற்றிப் பார்த்தோம். இவ்விடுகையில் 'விண்ணாங்கு' பற்றிப் பார்ப்போம். தொடக்கத்தில் வேறொரு பெயரோடு இம்மரத்தின் பெயர் எனக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும். அப்பெயர் 'வெங்கணாந்தி'. வன்னி வந்த தொடக்கத்தில் விண்ணாங்கு மரத்தை வெங்கணாந்தி எனவும் பலதடவைகள் சொல்லியிருக்கிறேன். வெங்கணாந்தி என்பது வன்னியிலுள்ள ஒருவகைப் பாம்பின் பெயர். 'மலைப்பாம்பு' என்று நாங்கள் அறிந்து வைத்திருந்த பெரிய, பருத்த பாம்புக்குத்தான் இந்தப்பெயருள்ளது. விலங்குகள் பற்றி எழுத முடிந்தால் அங்கு இப்பாம்பைப் பற்றிப் பார்ப்போம். 'அப்பக் கோப்பை', 'பேக்கிளாத்தி' போல 'வெங்கணாந்தி'யும் மற்றவர்களைத் திட்டப் பயன்படுத்தப்படும் ஒரு சொல். 'அவனொரு வெங்கணாந்தி'. சரி விண்ணாங்குக்கு வருவோம். இதுவும் வன்னியில் மிகப்பெருமளவில் காணப்படும் மர வகை. அடர்காடுகளில் இருக்கும் அதேவேளை, பற்றைக்காடுகள் மற்றும் மக்கள் குடியிருப்புக்களிலும் இம்மரங்கள் உள்ளன. புதுக்குடியிருப்பு - ஒட்டுசுட்டான் வீதியிலிருந்து மன்னாகண்டல் வழியாக முத்தையன்கட்டுக் குளத்துக்கு வரும் பாதையில், வாய்க்கால் கரையோரத்தில் விண்ணாங்கு மரங்கள் மட்டுமே மிக அடர்த்தியாக வளர்ந்திருக்கும் பகுதியொன்றைக் காணலாம். இது அடர்த்திகுறைந்த / எடைகுறைந்த மரம். மிகவும் 'சோத்தி'யான மரமென்று இதைச் சொல்லலாம். எடையில் கிட்டத்தட்ட முள்முருக்குப் போன்றிருக்கும். ஆனால் ஒப்பீட்டளவில் முருக்கை விட கொஞ்சல் வலிமையானது. இம்மரம் அடர்த்தியான வகையில் இலைகளைக் கொண்டிராது. இலைகள் சாம்பல் கலந்த பச்சைநிறத்திலிருக்கும். மண்ணிறப் பட்டையைக் கொண்டிருக்கும்; முற்றிய மரமென்றால் ஆங்காங்கே பட்டைகள் வெடித்து உரிந்திருக்கும். கிளைபரப்பி அகன்று வளராமல் நெடுத்து வளரும். பெரிய விண்ணாங்கு மரமொன்று நின்றாலும் அதன்கீழ் திருப்தியான நிழல் கிடைக்காது. காரணம் பரந்து வளர்வதில்லை; அத்தோடு அடர்த்தியாகக் குழைகளைக் கொண்டிருப்பதில்லை. சோத்தி மரமென்பதால் தளபாடங்களுக்குப் பயன்படுத்துவதில்லை. விறகாகவும் பயன்படுத்துவதில்லை. எதிர்த்தாலும்கூட அதிகளவு புகையைக் கக்கிக்கொண்டிருக்கும். ஒப்பீட்டளவில் பயன்பாடற்ற மரமாகவே தோற்றமளிக்கும். ஆனாலும் சில பயன்பாடுகளுள்ளன. நீண்டு, நெடுத்து, நேராக வளர்வது இதன் சிறப்பு. மெல்லிய விண்ணாங்குத் தடிகள் வரிச்சுத்தடிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. உலக்கை அளவுக்குத் தடிப்பான விண்ணாங்கு உருளைக் கட்டைகள் மிக நேரான முறையில் கிடைக்கும். அவை பலவிதங்களில் பயன்படுகின்றன. மேலும் விண்ணாங்குக் கட்டைகளை நெடுக்குவெட்டாக இரண்டாகக் கிழிப்பது மிகச் சுலபம். அப்படிக் கிழித்து சிறிய சட்டப்பலகைகள் உருவாக்கலாம். வன்னியில் பரண் அமைக்கும் தேவையுள்ளது. சாதாரணமாக நிலத்திலிருந்து இரண்டடி, மூன்றடி உயரத்தில் கட்டில் போல நிரந்தரமாக பரண் அமைத்துப் படுப்பது வழமை. பாம்புகளிடமிருந்து ஓரளவுக்குப் பாதுகாப்பளிக்கும். அதைவிட வயற்காவல், வேட்டை போன்ற தேவைகளுக்கு உயரமான பரண் அமைப்பதும் வழமை. பரண் அமைப்பதற்கு, கிழித்த விண்ணாங்குக் கட்டைகள் அருமையானவை. வன்னியில் நிகழ்ந்த தொடர்ச்சியான இடப்பெயர்வு வாழ்க்கையில் விண்ணாங்கு மரத்தின் பங்கு கணிசமானது. புதிதாக கொட்டிலொன்றைப் போட்டு வாழ்க்கையைத் தொடங்குவதாயின் விண்ணாங்கு பெருமளவு தளபாடத் தேவையை நிறைவேற்றும். படுப்பதற்கும் இருப்பதற்குமான பரண், பொருட்கள், பாத்திரங்கள் வைப்பதற்கான அடுக்கணி என்பன பெரும்பாலும் விண்ணாங்கின் மூலமே நிறைவு செய்யப்படும். கொட்டில்களில் அறைகள் பிரிப்பதற்கும் கிழித்த விண்ணாங்குச் சட்டங்கள் உதவும். யாழ்ப்பாணத்தில் பனைமட்டையால் வேலி வரிவது போன்று விண்ணாங்குச் சட்டங்களால் வரியப்டும். தேவைக்கேற்றாற்போல் கத்தியாலேயே சீவி சரிப்படுத்துமளவுக்கு மிக இலகுவான மரமென்பதால் இது பலவகைகளில் வசதியாகவுள்ளது. மிக அதிகளவில் இது பயன்படுத்தப்படும் இன்னொரு தேவை ஆயுதங்களுக்கான பிடிகள். வன்னியில் மண்வெட்டி, பிக்கான், கோடரி போன்ற ஆயுதங்களின் பிடிகள் விண்ணாங்குக் கடையில்தான் அதிகமாகப் போடப்படுகின்றன. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ விண்ணாங்கு பற்றிய மேலதிகத் தகவல்கள், திருத்தங்கள் இருந்தால் பின்னூட்டங்களில் தெரியப்படுத்தவும். அடுத்த இடுகையொன்றில் இன்னொரு மரத்தோடு உங்களைச் சந்திப்பேன். நன்றி. |
"மரங்கள் -2- விண்ணாங்கு" இற்குரிய பின்னூட்டங்கள்