Wednesday, December 10, 2008

மரங்கள் - 3 - தேன்தூக்கி -

==============================
நான் இவ்வலைப்பதிவில் எழுதத் தொடங்கி
நான்காண்டுகள் நிறைவடைகின்றன.
இதற்காக ஓரிடுகை. ;-)

==============================

மரங்கள் - 1 - வெடுக்குநாறி
மரங்கள் -2- விண்ணாங்கு



கடந்த ஈரிடுகைகளிலும் முறையே வெடுக்குநாறி, விண்ணாங்கு ஆகிய மரங்கள் பற்றிப் பார்த்திருந்தோம். இப்போது 'தேன் தூக்கி' என்றொரு மரம் பற்றி கொஞ்சம் அலசலாம்.

இதன் பெயர்க்காரணம் சரியாகத் தெரியவில்லை. தேனுக்கும் இம்மரத்துக்கும் ஏதும் தொடர்பிருப்பதாகவும் தெரியவில்லை. வேறேதேனும் பெயரிலிருந்து மருவி 'தேன் தூக்கி' என்று வந்திருக்கலாம். வேறிடங்களில் இம்மரம் வேறு பெயர்களில் அழைக்கப்படவும் கூடும்.

உருவம், பயன்பாடு:
வன்னிக் காடுகளில் இம்மரம் மிக அதிகளவில் வளர்கிறது. மிகப்பெரிய மரமாக வளராது; அதேநேரம் சிறியதாகவும் இல்லாமல் இடைப்பட்ட அளவில் வளரும். சுமார் முப்பது தொடக்கம் நாற்பது அடி உயரத்துக்கு வளரும். இளம் பருவத்தில் இதன் பட்டை மஞ்சள் கலந்த மண்ணிறமாக இருக்கும். மரத்தின் உட்பாகமும் மஞ்சளாகவே இருக்கும். முற்றிய மரமாயின் தண்டின் நடுவே கோறையாக இருக்கும். காய்ந்த நிலையில் சோத்தியான மரமாகவே இருக்கும்.

பச்சையாகவே வெட்டினால் குறிப்பிட்ட காலத்துக்கு இம்மரத்தைப் பயன்படுத்தலாம். கப்புகளுக்கு இம்மரம் பயன்படுத்தப்படுவதுண்டு.
விறகுத் தேவைக்கு இது பயன்படுத்தப்படுவதில்லை.

தேன்தூக்கி மரத்தின் சிறப்பியல்பு ஒன்றுண்டு. இது தனக்குக் கீழ் எதையும் வளரவிடாது. வெயில் கிடைக்கும் இடமாயிருந்தால் புற்கள் மட்டும் பசுமையாக வளரும், மற்றும்படி வேறெந்தத் தாவர வகைகளும் இம்மரத்தின் கீழ் வளரா. இது அனுபவத்தில் கண்டது தானேயொழிய விஞ்ஞானபூர்வமான முடிபு அன்று.

வன்னியில் 'வெட்டைக்காடு' என்ற சொல்லாடல் உண்டு. வெட்டையும் காடும் எதிர்மறையான பொருளுடைய இரு சொற்கள். வெட்டை என்பது மரஞ்செடிகளற்ற வெறும் வெளியைக் குறிக்கும். பிறகெப்படி இரண்டும் சேர்ந்து ஒரு சொல்லானது?

இங்கு 'வெட்டைக் காடு' என்பது உயரிய மரங்களைக் கொண்ட அடர்ந்த காடாகவுள்ள அதேநேரத்தில் பற்றைகளையோ உயரம் குறைந்த சிறு மரஞ்செடிகளையோ -அதாவது கீழ்வளரிகளைக் கொண்டிராத காடுகளைக் குறிக்கும்.

பெரிய மரங்களைக் கொண்டிருந்தாலும் நிலப்பகுதியில் அடர்த்தியான பற்றைகளைக் கொண்ட காடுகளுமுண்டு. இக்காடுகளில் இருபது யார் தூரத்துக்கப்பால் எதையும் அவதானிக்க முடியாதிருக்கும். இவற்றில் மனித நகர்திறன் மிக மோசமாக இருக்கும். அவ்வாறன்றி, நிலமட்டத்தில் பற்றைகளின்றி வெளியாக இருக்கும் அடர்ந்த காடுகளுமுள்ளன. நூறு யார் தூரத்துக்கும் அப்பாற்கூட நன்றாக அவதானிக்கலாம். தெருவில் நடப்பதைப் போல கைவீசிக் கொண்டு நடந்து போகலாம். அதேவேளையில் வெயில் நிலத்தில் விழாதபடி மிக அடர்ந்த காடாகவும் அது இருக்கும். இப்படியான காடுகளையே 'வெட்டைக் காடு' என்ற சொல்லால் அழைப்பதுண்டு.

தேன் தூக்கி பற்றிக் கதைக்க வந்து வெட்டைக்காடு பற்றி கதைக்கத் தேவையென்ன?
தேன்தூக்கி மரங்கள் அதிகமுள்ள காடுகள் அனேகமாக வெட்டைக் காடுகளாக இருக்கும். ஏனென்றால் தேன்தூக்கியின் கீழ் பற்றைகளோ வேறு தாவரங்களோ வளரா.

வன்னியில் முத்தையன்கட்டுப் பகுதிக் காடுகள் - குறிப்பாக முத்தையன்கட்டுக் குளத்தைச் சுற்றியுள்ள காடுகள் அடர்ந்த வெட்டைக் காடுகள்.

தமக்குக் கீழுள்ளவர்களின் வளர்ச்சியைப் பாழாக்கும் அதிகாரிகளை 'தேன்தூக்கி' என்று அழைக்கலாம். ;-)

தேன்தூக்கி தொடர்பில் இன்னொரு குறிப்புண்டு.
இம்மரத்தில் ஒருவகை உண்ணி இருக்கும். (அல்லது இவ்வகை உண்ணி இம்மரத்தில்தான் அதிகமாக இருக்கும்). தனியொரு உண்ணியை வெற்றுக்கண்ணால் உடனடியாகப் பார்த்துக் கண்டுபிடிக்க முடியாதபடி மிகமிகச் சிறிய உண்ணி. கூட்டமாக ஊர்ந்தால்தான் உடனடியாகக் கண்ணுக்குத் தட்டுப்படும். தேன்தூக்கி இலைகளில் கும்பலாகக் குடியிருக்கும் இக்கூட்டம் அவ்வழியே நகரும் மனிதர் மீது ஒட்டிக்கொள்ளும். பின் உரோமங்கள் அதிகமுள்ள இடங்கள் தேடி அமர்ந்துகொள்ளும். தேவையான நேரத்தில் அவ்வப்போது கடித்துக்கொள்ளும். ஒருவர் முழுமையாக உண்ணி பொறுக்கி முடிய இரண்டு மூன்று நாட்கள் கூட ஆகலாம்.

ஆனால் தேன்தூக்கி உண்ணியின் தாக்குதலுக்கு உள்ளாவது மிக அருந்தலாகவே நடைபெறும். ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் அந்த அதிஷ்டம் கிடைக்கும்.

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, February 01, 2008

தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!

படியெடுக்கப்பட்ட கட்டுரையை வாசிப்பதற்கு முன்னர் எனது குறிப்புக்கள் சில:

தைத்திருநாளை தமிழர் புத்தாண்டுத் தொடக்கமாகக் கொணடாடுவது தொடர்பாக இரு வருடங்களின் முன்பே வலைப்பதிவில் கதைத்துள்ளேன். அப்போது கல்வெட்டு(எ) பலூன்மாமா பொங்கலைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடுவது தொடர்பாக பெரியளவில் முயன்றிருந்தார். தைத்திருநாள் சயம நிகழ்வன்று என்பதைச் சொல்லி அவர் விவாதத்தைத் தொடக்கிவைத்தார். அப்போதே எனது இக்கருத்தையும் சொல்லியிருந்தேன்.

எனது கருத்தென்பது விடுதலைப்புலிகளால் உருவானது என்பதைச் சொல்லியாக வேண்டும். இன்றல்ல; பல ஆண்டுகளின் முன்பே விடுதலைப்புலிகளின் முக்கியத்தர்களால் சித்திரைப் புதுவருடத்துக்கெதிரான கடுமையான எதிர்ப்பும், தைத்திருநாளே தமிழரின் ஆண்டுத் தொடக்கமாக இருக்க வேண்டுமென்ற பார்வையும் வெளியிடப்பட்டு வந்துள்ளன.தமிழீழ நிதித்துறைப் பொறுப்பாளர் தமிழேந்தி, தமிழீழக் கல்விக் கழகப்பொறுப்பாளர் இளங்குமரன் (பேபி சுப்பிரமணியம்), தற்போது வரலாற்றுத்துறைப் பொறுப்பாளராக இருக்கும் யோகரத்தினம் யோகி ஆகியோர் இவர்களுள் முதன்மையானவர்கள்.

ஓரளவுக்குப் பெரியாரின் தாக்கம் இவர்கள்மேல் இருந்தபோதிலும், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் தீவிர தொண்டர்கள் எனலாம் (சொற்பிறப்புப் பற்றிய விவாதங்களில் சிலவிடங்களில் பாவாணரிடத்தில் மாறுபாடுடையவர்கள் என்றபோதும்கூட). அவ்வழியே மறைமலை அடிகள், கி.ஆ.பெ. விசுவநாதன் போன்றோரின் கருத்துக்களால் உள்வாங்கப்பட்டவர்கள். அதனாலேயே சித்திரை வருடப்பிறப்பு மீதான கடுமையான எதிர்ப்பும், தைத்திருநாளே ஆண்டுத்தொடக்கமென்ற வாதமும் இவர்களிடமிருந்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
(கி.ஆ.பெ. விசுவநாதன் பற்றிய சராசரி ஈழத்தவர்களின் அறிவுத்தொடக்கம், தலைவர் பிரபாகரன் பற்றி அவர் வெளியிட்ட கருத்துடன்தான் தொடங்கியது என்று நினைக்கிறேன். அதன்பின் அவர் பற்றிய தேடல் அதிகரித்ததோடு அவரின் கருத்துக்கள் பெருமளவில் மக்களிடம் சென்றன என்பதும் குறிப்பிடப்பட வேண்டிவை.)

ஆனால் தமது அரசாங்கத்தில் இதையொரு ஆணையாகக் கொண்டுவராமல் பரப்புரை மூலம் செய்ய இவர்கள் முயற்சித்தார்கள்; முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் வெற்றி பெறுவார்கள் என்பதிலும் ஐயமில்லை. நிலைமை சீராக வரும்போது ஒருநாள் இவர்களிடமிருந்து அறிப்பு வரும். தமிழீழத்தில் மொழி தொடர்பில் நடைபெற்ற நிறையப் புரட்சிகளுக்கு தமிழேந்தியும், இளங்குமரனும் அத்திவாரங்கள். போராளிகளுக்கான தனித்தமிழ்ப் பெயர்கள், கடைகள் - நிறுவனங்களுக்கான தனித்தமிழ்ப் பெயர்கள், பொருட்களுக்கான தனித்தமிழ்ப் பெயர்கள் எப்போதோ நடைமுறைக்கு வந்துவிட்ட, வெற்றிபெற்ற பல நடவடிக்கைகளுக்கு இவர்களே கால்கள். இராணுவத்துறையிற்கூட தமிழ்க்கட்டளைகளைப் பயன்படுத்த முடியுமா என்ற கேள்விகளைப் புறந்தள்ளி அதைச் செய்துகாட்டியவர்கள். தமிழ் மீட்பை ஒரு வெறியாகவே செய்துவருபவர்கள்.

இந்திய இராணுவம் ஈழத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட பின்னர், "யாழ்ப்பாணத்தில்" தமிழ்த் தேசியம் மீளெழுச்சியுற்ற ஒரு பொற்காலம் எனலாம். யாழ்ப்பாணத்தில் சடுதியான மாற்றங்கள் நிகழ்ந்தன. "முத்தமிழ் விழா" என்ற பெயரில் சில இடங்களில் நடத்தப்பட்ட மூன்றுநாள் பெருவிழாவை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். மிகப்பெருமெடுப்பில் புலிகளால் நடத்தப்பட்ட இவ்விழா உண்மையில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. இவ்விழா குறித்து எதிர்த்தரப்புக்கள் அதிகம் கவலைப்பட்டது உண்மை. 'புலிகள் தமது படைப்பலத்தால் தோற்றாலும்கூட இவ்விழாக்கள் மூலம் மீளவும் தம்மைக் கட்டியெழுப்பி விடுவார்கள்' என்று கொழும்புப் பத்திரிகைகள் எழுதின.
தென்மராட்சியில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் தலைவர் பிரபாகரன் பகிரங்கமாகத் தொன்றி பொதுமக்களுக்கு மேடையில் வைத்துப் பரிசளித்தார்.

அதேகாலத்தில் அறிவிப்புப் பலகைகளின் பெயர்களைத் தமிழில் மாற்றுவது, நிறுவனப்பெயர்களை தமிழில் மாற்றுவது உட்பட பல வேலைத்திட்டங்கள் புலிகளால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன. தைத்திருநாளை எழுச்சியாகக் கடைப்பிடிப்பதும் அப்போதே தொடங்கியது. அதுவரை தைப்பொங்கல் இந்துக்களுக்குரிய நாள் என்றிருந்த கருத்துருவாக்கம் உடைக்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டுக்குரிய தைத்திருநாளை, யாழ்ப்பாணத்துக் கத்தோலிக்கத் தலைமை கொண்டாடி, அது தமிழர் திருநாளே என அறிவித்தது. அவ்வாண்டுக்குரிய தைப்பொங்கல் கத்தோலிக்கத் தேவாலங்களில் கொண்டாடப்பட்டது. தைத்திருநாள் சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கோவிலிலேயே பொங்கி மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. அதன்பிறகு கத்தோலிக்கர் வீடுகளிலும் பொங்கும் நிகழ்வை அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடங்கினர்.

திபாவளிக்கெதிரான கருத்துக்கள் அன்றுதொடக்கம் விடுதலைப்புலிகளாற் சொல்லப்பட்ட வருகின்றன என்றபோதும் அவை நிறுத்தப்படவில்லை. ஆனால் இந்தியாவோடு ஒப்பிடும்போது ஈழத்தில் திபாவளியென்பது (புலிகள் கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதற்கு முன்பேகூட) முக்கியமான பண்டிகையாக இருந்ததில்லையென்றே தெரிகிறது. இன்றும் தீபாவளி தமிழருக்கான பண்டிகையன்று என்ற கருத்து வலுவாகச் சொல்லப்பட்டு வருகிறது; பெருமளவானோர் அதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்றும் கூறலாம். வன்னியில் இது சாத்தியப்படக் காரணமுள்ளது. தீபாவளியையும் சித்திரை வருடப்பிறப்பையும் கொண்டாட்டமாக்குவதில் முக்கிய காரணியாக இருக்கும் குறிப்பிட்ட நாட்களுக்குரிய சிறப்புத் திரைப்பட வெளியீடுகள் வன்னியில் இல்லையென்பதே அது.

~~~~~~~~~~~~~~~~~~~
தைத்திருநாளையே தமிழரின் ஆண்டுத்தொடக்கமாகக் கருத வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து வலைப்பதிவுலகில் பல்வேறு விவாதங்கள் நிகழ்ந்தன. ஆதரவு / எதிர்ப்புப் பதிவுகளைப் படித்து இது தொடர்பான கருத்துக்களைப் பெற்றுக்கொள்வது சிறப்பு.

** இது தொடர்பான மேலதிக விவாதங்கள் நிகழ்த்தப்பட்டால் நன்று. நிறையத் தகவல்கள் அறிந்து கொள்ளலாம்.

என் பங்குக்கு, ஆதரவுக் கட்டுரையொன்றை இடுகிறேன். தமிழ்நாதம் இணையத்தளத்தில் வெளிவந்த கட்டுரையிது.


தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!


ஆக்கம்: சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா


தமிழரின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் நாள் குறித்துப் பல கருத்துக்களை, வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும், பண்பாட்டு வழியாகவும், ‘பண்டைய காலக் கணக்கு முறை’ வழியாகவும் முன் வைத்துத் தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழீழத்திலும், தமிழ் நாட்டிலும் மட்டுமன்றி, உலகளாவிய வகையில் இன்று புலம் பெயர்ந்திட்ட தமிழ் மக்களும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற இக் காலகட்டத்தில் இவ்வகையான தர்க்கங்கள் பல ஆக்கபூர்வமான சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்து அவற்றைச் செயற்பட வைப்பதற்கும் உதவக் கூடும்!


“பொங்கல்” என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன?


பொங்குகை, பெருங்கோபம், மிளகு-சீரகம்-உப்பு-நெய், முதலியன கலந்து இட்ட அன்னம், உயர்ச்சி, பருமை, மிகுதி, கள், கிளர்தல், சமைத்தல், பொலிதல் என்று பல பொருட்களைத் தமிழ் மொழியகராதியும், தமிழ்ப் பேரகராதியும் தருகின்றன. அத்தோடு இன்னுமொரு பொருளும் தரப்படுகின்றது.


‘சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும் நாளான தை மாத முதற்தேதியன்று சூரியனை வழிபட்டுப் பொங்கல் நிவேதனம் செய்யும் திருவிழா’-என்ற பொருளும், பொங்கல் என்ற சொல்லுக்குத் தரப்பட்டுள்ளது. இந்தப் பொருளுக்கு உள்ளே, பல முக்கியமான விடயங்கள் பொதிந்திருப்பதை நாம் காணக் கூடியதாக உள்ளது.


அதாவது பொங்கல் திருவிழா என்பது தமிழ் மக்கள் வாழ்வில் வரலாற்று ரீதியாக, ஒரு பண்பாட்டு அங்கமாக, அவர்களது வாழ்வியலில் திகழுகின்ற திருவிழாவாக இருந்து வந்துள்ளது என்பது புலனாகின்றது. அத்தோடு பண்டைத் தமிழர்கள் இயற்கையின் காலக்கணக்கைக் கணித்து, சரியாக எந்த நாளில் தைத்திருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார்கள் என்பதையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது.


இதனைச் சற்று ஆழமாகக் கவனிப்போம்.


பண்டைத் தமிழன் இயற்கையை வணங்கி, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ முனைந்தவன் ஆவான்! தன்னுடைய வாழ்க்கைக் காலத்தில் வித்தியாசமான காலப்பருவங்கள் தோன்றுவதையும் அவை மீண்டும் மீண்டும் தொடர்ந்து வருவதையும் தமிழன் அவதானித்தான். ஒரு குறிப்பிட்ட காலச் சேர்வையில், மழை, வெயில், குளிர், பனி, தென்றல், வாடை, ஆகியவை மாறி மாறித் தோன்றி, தமிழனின் வாழ்வை ஆண்டு வந்ததால் இந்தக் காலச் சேர்வையைத் தமிழன் ‘ஆண்டு’ என்று அழைத்தான் - என்று அறிஞர் வெங்கட்ராமன் என்பார் கூறுவார்.


தமிழகத்தில் வானியலில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களை ‘அறிவர், பணி, கணியன்’ -என அழைத்தார்கள். மூவகைக் காலமும் நெறியினாற்றும் ‘அறிவர்கள்’ குறித்துத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். அரசர்களுடைய அவைகளில் ‘பெருங் கணியர்கள்’ இருந்ததாகச் சிலப்பதிகாரமும் குறிப்பிடுகின்றது. தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் தென்படுகின்ற வானியற் செய்திகள் முழுமையாக உருப்பெற்றமைக்குப் பல ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அத்தோடு ஆரியர்களது ஊடுருவலுக்கு முன்னரேயே தமிழர்கள் வானியலில் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று பல் நாட்டு அறிஞர்களும் கூறியுள்ளார்கள். மேல்நாட்டு அறிஞரான சிலேட்டர் என்பவர் ‘தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது’ என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தைக் கணித்தனர் என்றும், தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கங்களையும் பருவங்களையும் மிகத் தெளிவாக அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (A Social history of the Tamils-Part 1)

தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தார்கள். ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பகுத்து வைத்தார்கள். ‘வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்’ என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.


அதாவது பண்டைக் காலத்தமிழர்களது ஒரு நாட்பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு - அதாவது 24 மணித்தியாலங்களோடு - அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.


தைப்பொங்கல் தினத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்ற தமிழர்களின் ஆண்டுப் பகுப்பை அடுத்துக் கவனிப்போம்.


பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.


1. இளவேனில் - ( தை-மாசி மாதங்களுக்குரியது)


2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)


3. கார் - (வைகாசி � ஆனி மாதங்களுக்குரியது)


4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)


5. முன்பனி � (புரட்டாசி � ஐப்பசி மாதங்களுக்குரியது)


6. பின்பனி � (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)


(இதைத் தவிர, ஓர் ஆணின் வாழ்க்கைக் காலத்தை, ஒரு பெண்ணின் வாழ்க்கைக் காலத்தை, ஏன் ஒரு மலரின் வாழ்க்கைக் காலத்தைக் கூடத் தமிழன் பல காலத் தொகுதிகளாக வகுத்து வைத்துள்ளான் என்பதானது இன்னுமொரு தளத்திற்குரிய ஆய்வுக் கருத்துக்களாகும்!)


காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை நேயர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.



தமிழர்கள் மட்டுமல்ல, உலகத்தில் பலகோடி வேற்று இன மக்களும் தத்தமக்குரிய இளவேனிற் காலத்தையே புத்தாண்டாக கொண்டாடி வருவதாக குறிப்பிட்டிருந்தோம். உதாரணத்திற்காக யப்பானிய மக்களின் புத்தாண்டை, தமிழர்களின் புத்தாண்டான பொங்கல் திருநாளோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.


தமிழர்-யப்பானிய பண்பாட்டு ஒற்றுமை நிலையை வெளிப்படுத்தும் நடைமுறையாகத் தைப்பொங்கல் விளங்குகிறது. யப்பானியர் தை 14ம் திகதி அன்று பழைய பயன்பாட்டுப் பொருட்களை எரிப்பார்கள். தமிழர்களும் அவ்வாறே செய்கின்றார்கள்.


தை 15ம் நாள் யப்பானியர்களும், தமிழர்கள் போன்று தோரணங்களைத் தொங்கவிட்டு புதுநீர் அள்ளி, பருப்புச் சேர்த்து சமைத்த பொங்கலைப் பரிமாறுகின்றார்கள். தமிழர்கள் பொங்கல் பானையில் பால் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். அதே போல் யப்பானியர் தமது புத்தாண்டான தை 15ம் நாளில் FONKARA - FONKARA� என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள்.


தை 16ம் நாள் பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்கல், முன்னோர்க்குப் படையல் செய்தல், கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தல், மாடுகளுக்கு உணவளித்தல் போன்ற காரியங்களைத் தமிழர்கள் செய்வது போலவே யப்பானியர்களும் செய்கிறார்கள்.


பருப்புத் தவிடு பொங்க - பொங்க

அரிசித் தவிடு பொங்க - பொங்க

-என்ற கருத்துப்படப் பாடப்படும் யப்பானிய வாய் மொழிப் பாடலில் ‘பொங்க-பொங்க’ என்ற சொற்களுக்கு யப்பானிய மொழியில் ‘uONGA-uONGA’ என்றே பாடுகிறார்கள்.




இடையில் தமிழன் மட்டும் மாறி விட்டான்! ஆளவந்த ஆரியர்களின் அடிமையாக மாறியது மட்டுமல்லாது, இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான்.


இவை குறித்து பேராசியரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் கீழ் வருமாறு அன்று கூறியிருந்தார்.


“சித்திரை வருடப்பிறப்பு” என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப்பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலை நாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது….. …….. (சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன் மூலம் ) தமிழினத்தின் பழமையையும், பண்பையும், சிறப்பையும், செல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இடமானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக்கேடான, நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா? - தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும், தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளன. . .


என்று பேராசிரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.


தமிழர்களின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் தினத்தை தமிழர்களுடைய பண்டைக் காலத்திலிருந்தே வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும்;, பண்பாட்டு வழியாகவும், வானியல் அறிவு வழியாகவும் தமிழர்கள் இனம் கண்டு அறிந்துணர்ந்து கொண்டாடி வந்துள்ளார்கள் என்பதையும் நாம் தர்க்கித்ததோடு, ஆரியர்கள் எம்மீது திணித்த சித்திரை வருடப் பிறப்பு குறித்தும் நாம் சில கருத்துக்களைத் தெரிவித்ததற்குக் காரணங்கள் உண்டு!


“தைப்பொங்கல் தினமான, தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழனுக்குரிய தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!!”


பொங்கல் திருநாள்-தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள்-என்பதானது, சிலர் பிதற்றித் திரிவதுபோல் இந்துக்களின் விழா அல்ல! உண்மையில் இது, சமய சார்பற்ற, இயற்கை சார்ந்த, எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவான திருநாளாகும்! மற்றைய எல்லாத் திருநாட்களையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கே ஏதாவது ஓர் அரசனை, வீரனை, கடவுளைக் குறிப்பிட்ட ‘கதை’ ஒன்று புனையப்பட்டு அந்தத் திருநாள் உருவாகியதற்கான காரணம் ஒன்றும் கற்பிக்கப்பட்டிருக்கும்.


ஆனால் தைப்பொங்கல் திருநாள் அப்படியான ஒன்றல்ல! அது வான் சார்ந்து, மண் சார்ந்து, முழுமையான இயற்கை சார்ந்து உருவாகிய திருநாளாகும்! இது தமிழர்களான எமக்குப் பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகின்ற திருவிழாவாகும்! இத் திருநாளைப் புறம் தள்ளுவதும், இதற்கு மதம் சார்ந்த கற்பிதங்களை உருவாக்குவதும், தமிழினத்தைக் கேவலப்படுத்தும் செயல்களாகும்!


தைப்பொங்கல் திருவிழாவிற்குச் சமயச் சாயம் பூச முற்படுபவர்களை மறைமலை அடிகளாரும் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்த வரலாற்றுப் பதிவு ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.


1935ம் ஆண்டு திருச்சியில் அகிலத் தமிழர் மகாநாடு என்ற பெயரில் ஒரு மகாநாடு நடைபெற்றது. பசுமலை சோமசுந்தரப் பாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த மகாநாட்டில்
கா. சுப்பிரமணியனார், மதுரை தமிழவேள், பி.டி. இராசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப. சாமி, திரு.வி.க. மறைமலை அடிகளார் முதலான பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டார்கள். தந்தை ஈ.வெ.ரா. பெரியாரும் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். இந்த மகாநாட்டின் போது தைப்பொங்கல் சமயவிழாவா? இல்லை சமயமற்ற விழாவா? என்று பலத்த விவாதம் எழுந்தது. இறுதியாக, மறைமலை அடிகளார் திட்டவட்டமாகக் கீழ்வருமாறு கூறினார்.


“பொங்கலைச் சமயவிழா என்று சொல்லிச் சர்ச்சையைக் கிளப்பிக் குழப்பம் செய்ய யார் முயன்றாலும் அவர்கள் இம் மாநாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். இது சமய சார்பு இல்லாத விழா! எந்த சமயத்துக்காரன், எந்த சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான்? எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது? எந்த இதிகாசம் இதற்கு இருக்கிறது? ஆனால் தமிழில் புறநானூற்றில், பிட்டங்கொற்றன் வரலாற்றில், கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கின்றது. இதை என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி” - என்று மறைமலை அடிகளார் முழங்கினார்.


“இல்லை - நான் ஏற்றுக் கொள்கின்றேன்”- என்று ஈ.வெ.ரா. பெரியார் தெளிவாகப் பதிலுரைத்தார். அனைவரும் கையொலி எழுப்பினர். அதனையடுத்து திரு.வி.க. அவர்கள் இதனைப் பாராட்டிப் பேசினார்.


ஆகவே தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல! தமிழரின் பண்பாட்டு விழா! காலக் கணிப்பை மேற் கொண்டு மிகச் சரியாகத் தமது புத்தாண்டுக்குரிய இளவேனிற் காலத்தின் முதல்நாளை வகுத்தறிந்து தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு ஆரம்பத்தைக் கொண்டாடும் நாள்!


பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை ‘போகி’ (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது போக்கு, போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகி -போகியது). இத் தினத்தில் பழைய பொருட்களை எரித்தல், பழைய குடில்களை எரித்தல் போன்ற நடைமுறைகள் மேற் கொள்ளப்படுகின்றன. (முன்னாளில் யாழ்ப்பாணத்தில் பட்டி அடைக்கின்ற வயற்குடில்களை எரிக்கும் பழைய நடைமுறை இருந்தது. ஆனால் இப்போது இந்த நடைமுறை அருகி விட்டது.)


தமிழ்ப் புத்தாண்டான தைப்பொங்கல் தினமன்று புத்தாண்டுக்குரிய சகல நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும். தோரணம் தொங்கவிடல், புதுநீர் அள்ளுதல், வீட்டை அழகுபடுத்தல், பொங்கலிடுதல், புத்தாடை அணிதல், கையுறை பெறுதல் போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.


தைப்பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள் நடைபெறுகின்ற நடைமுறைகள் புத்தாண்டின் தொடக்கத்தை உணர வைப்பதாக உள்ளன. பயிர்ச் செய்கையிலே இணைந்து தொழிற்படும் மாடு, தமிழரால் பொங்கலின் மறுநாள் சிறப்பிக்கப்பட்டு அது மாட்டுப் பொங்கல் தினமாக அறியப்பட்டது. அத்துடன் மாட்டுப் பொங்கலின் மறுநாள், உறவினர் வீடுகளுக்குச் செல்லும் நடைமுறையைக் ‘காணும் பொங்கல்’ என்று அழைப்பர். , தமிழரிடையே இருந்த தவப்படையல் என்ற நடைமுறை இப்போது அருகி விட்டது. யாழ்ப்பாணத்தில், வடமராட்சிப் பகுதியில் தைப் பொங்கல் தினமன்றே தவப் படையல் செய்யப்படும் வழக்கமிருந்தது. இப்படையலில் மீன்-இறைச்சி முதலியன படைக்கப்பட்டன. இத்தினத்தில் கலை நிகழ்வுகள், அரங்கேற்ற நிகழ்வுகள், புத்தாண்டுப் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.


தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம் உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம், உழைப்பையும் தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்துகின்ற முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில்; போற்றப்படுவதை நாம் காணலாம்.



அன்புக்குரிய வாசகர்களே! இன்றைய நடைமுறை யதார்த்தத்தை சுட்டிக் காட்டித் தர்க்கிக்கவே நாம் இவ்வாறு மேற்கோள் காட்டினோம். இல்லாவிட்டால் யார்-யார் எந்த எந்த நாளில், எந்த எந்தக் கொண்டாட்டங்களையும் கொண்டாடுவதைத் தடுப்பதற்கு நாம் யார்? எவரும் - எதையும் - எப்படியும் கொண்டாடட்டும் ஆனால் பெயரை மட்டும் சரியாகச் சொல்லட்டும்.


தனித்துவமான மொழியைப் பேசுகின்ற, தனித்துவமான பண்பாட்டைக் கொண்டுள்ள, தனித்துவமான கலைகளைக் கொண்டுள்ள, தமக்கென பாரம்பரிய மண்ணைக் கொண்டுள்ள மக்கள், ஒரு தேசிய இனத்தவர் ஆவார்கள். அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு உரித்தானதாகும் என்று உலகச்சட்டமொன்று சொல்கிறது. இப்போது எமக்கு ஒரு தனித்துவமான பண்பாடு இருக்கின்றதா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.



அன்புக்குரிய எமது வாசகர்களே! தமிழனின் வாழ்க்கையையும் பண்பாட்டையும் எதிரிகள் சிதைத்தது போதாதென்று நாமும் கூட ஆரிய மாயையில் மயங்கிப்போய் எமது பண்பாட்டை இகழ்ந்தும், இழந்தும் வருகின்றோம். இந்தக் காலகட்டத்தில் தமிழ்ப் புத்தாண்டு தினமான தைப்பொங்கல் குறித்துச் சில வரலாற்று உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முனைந்தோம். அனைவருக்கும் எமது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!



இந்தக் கட்டுரைக்குப் பல நூல்களும், ஆய்வுநூல்களும் பயன்பட்டன. முக்கியமாகத் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், எட்டுத்தொகை-பத்துப்பாட்டு, தமிழர் நாகரிகமும் பண்பாடும், ஒப்பியன் மொழி நூல், வாக்கிய பஞ்சாங்கம், பண்பாட்டுக் கட்டுரைகள், செம்பருத்தி சஞ்சிகைக் கட்டுரைகள், பொங்கலே தமிழ்ப் புத்தாண்டு - மலேசியச் சிறப்பு மலர், தமிழர் - யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல் போன்ற நூல்கள் பேருதவி புரிந்தன. சில சொல்லாக்கங்ககளும் சொல்லாடல்களும் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது மனங் கனிந்த நன்றிகள். காலத்தின் தேவை கருதி ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் சில கருத்துக்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளன.


இவ் ஆய்வு மீள்பிரசுரமாகும்.(2008)

Labels: , , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


மரங்கள் -2- விண்ணாங்கு

இத்தொடரின் முதலாவது பகுதியில் 'வெடுக்குநாறி' என்ற மரத்தைப்பற்றிப் பார்த்தோம்.
இவ்விடுகையில் 'விண்ணாங்கு' பற்றிப் பார்ப்போம்.

தொடக்கத்தில் வேறொரு பெயரோடு இம்மரத்தின் பெயர் எனக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும். அப்பெயர் 'வெங்கணாந்தி'.
வன்னி வந்த தொடக்கத்தில் விண்ணாங்கு மரத்தை வெங்கணாந்தி எனவும் பலதடவைகள் சொல்லியிருக்கிறேன்.
வெங்கணாந்தி என்பது வன்னியிலுள்ள ஒருவகைப் பாம்பின் பெயர். 'மலைப்பாம்பு' என்று நாங்கள் அறிந்து வைத்திருந்த பெரிய, பருத்த பாம்புக்குத்தான் இந்தப்பெயருள்ளது. விலங்குகள் பற்றி எழுத முடிந்தால் அங்கு இப்பாம்பைப் பற்றிப் பார்ப்போம்.
'அப்பக் கோப்பை', 'பேக்கிளாத்தி' போல 'வெங்கணாந்தி'யும் மற்றவர்களைத் திட்டப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்.
'அவனொரு வெங்கணாந்தி'.

சரி விண்ணாங்குக்கு வருவோம்.

இதுவும் வன்னியில் மிகப்பெருமளவில் காணப்படும் மர வகை.
அடர்காடுகளில் இருக்கும் அதேவேளை, பற்றைக்காடுகள் மற்றும் மக்கள் குடியிருப்புக்களிலும் இம்மரங்கள் உள்ளன.
புதுக்குடியிருப்பு - ஒட்டுசுட்டான் வீதியிலிருந்து மன்னாகண்டல் வழியாக முத்தையன்கட்டுக் குளத்துக்கு வரும் பாதையில், வாய்க்கால் கரையோரத்தில் விண்ணாங்கு மரங்கள் மட்டுமே மிக அடர்த்தியாக வளர்ந்திருக்கும் பகுதியொன்றைக் காணலாம்.

இது அடர்த்திகுறைந்த / எடைகுறைந்த மரம். மிகவும் 'சோத்தி'யான மரமென்று இதைச் சொல்லலாம். எடையில் கிட்டத்தட்ட முள்முருக்குப் போன்றிருக்கும். ஆனால் ஒப்பீட்டளவில் முருக்கை விட கொஞ்சல் வலிமையானது.
இம்மரம் அடர்த்தியான வகையில் இலைகளைக் கொண்டிராது. இலைகள் சாம்பல் கலந்த பச்சைநிறத்திலிருக்கும். மண்ணிறப் பட்டையைக் கொண்டிருக்கும்; முற்றிய மரமென்றால் ஆங்காங்கே பட்டைகள் வெடித்து உரிந்திருக்கும்.
கிளைபரப்பி அகன்று வளராமல் நெடுத்து வளரும். பெரிய விண்ணாங்கு மரமொன்று நின்றாலும் அதன்கீழ் திருப்தியான நிழல் கிடைக்காது. காரணம் பரந்து வளர்வதில்லை; அத்தோடு அடர்த்தியாகக் குழைகளைக் கொண்டிருப்பதில்லை.


சோத்தி மரமென்பதால் தளபாடங்களுக்குப் பயன்படுத்துவதில்லை. விறகாகவும் பயன்படுத்துவதில்லை. எதிர்த்தாலும்கூட அதிகளவு புகையைக் கக்கிக்கொண்டிருக்கும்.
ஒப்பீட்டளவில் பயன்பாடற்ற மரமாகவே தோற்றமளிக்கும். ஆனாலும் சில பயன்பாடுகளுள்ளன.

நீண்டு, நெடுத்து, நேராக வளர்வது இதன் சிறப்பு. மெல்லிய விண்ணாங்குத் தடிகள் வரிச்சுத்தடிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
உலக்கை அளவுக்குத் தடிப்பான விண்ணாங்கு உருளைக் கட்டைகள் மிக நேரான முறையில் கிடைக்கும். அவை பலவிதங்களில் பயன்படுகின்றன. மேலும் விண்ணாங்குக் கட்டைகளை நெடுக்குவெட்டாக இரண்டாகக் கிழிப்பது மிகச் சுலபம். அப்படிக் கிழித்து சிறிய சட்டப்பலகைகள் உருவாக்கலாம்.
வன்னியில் பரண் அமைக்கும் தேவையுள்ளது. சாதாரணமாக நிலத்திலிருந்து இரண்டடி, மூன்றடி உயரத்தில் கட்டில் போல நிரந்தரமாக பரண் அமைத்துப் படுப்பது வழமை. பாம்புகளிடமிருந்து ஓரளவுக்குப் பாதுகாப்பளிக்கும். அதைவிட வயற்காவல், வேட்டை போன்ற தேவைகளுக்கு உயரமான பரண் அமைப்பதும் வழமை. பரண் அமைப்பதற்கு, கிழித்த விண்ணாங்குக் கட்டைகள் அருமையானவை.

வன்னியில் நிகழ்ந்த தொடர்ச்சியான இடப்பெயர்வு வாழ்க்கையில் விண்ணாங்கு மரத்தின் பங்கு கணிசமானது. புதிதாக கொட்டிலொன்றைப் போட்டு வாழ்க்கையைத் தொடங்குவதாயின் விண்ணாங்கு பெருமளவு தளபாடத் தேவையை நிறைவேற்றும். படுப்பதற்கும் இருப்பதற்குமான பரண், பொருட்கள், பாத்திரங்கள் வைப்பதற்கான அடுக்கணி என்பன பெரும்பாலும் விண்ணாங்கின் மூலமே நிறைவு செய்யப்படும்.

கொட்டில்களில் அறைகள் பிரிப்பதற்கும் கிழித்த விண்ணாங்குச் சட்டங்கள் உதவும். யாழ்ப்பாணத்தில் பனைமட்டையால் வேலி வரிவது போன்று விண்ணாங்குச் சட்டங்களால் வரியப்டும்.

தேவைக்கேற்றாற்போல் கத்தியாலேயே சீவி சரிப்படுத்துமளவுக்கு மிக இலகுவான மரமென்பதால் இது பலவகைகளில் வசதியாகவுள்ளது.

மிக அதிகளவில் இது பயன்படுத்தப்படும் இன்னொரு தேவை ஆயுதங்களுக்கான பிடிகள்.
வன்னியில் மண்வெட்டி, பிக்கான், கோடரி போன்ற ஆயுதங்களின் பிடிகள் விண்ணாங்குக் கடையில்தான் அதிகமாகப் போடப்படுகின்றன.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விண்ணாங்கு பற்றிய மேலதிகத் தகவல்கள், திருத்தங்கள் இருந்தால் பின்னூட்டங்களில் தெரியப்படுத்தவும்.

அடுத்த இடுகையொன்றில் இன்னொரு மரத்தோடு உங்களைச் சந்திப்பேன்.
நன்றி.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, January 21, 2008

மரங்கள் - 1 - வெடுக்குநாறி

தெரிந்த மரங்களின் பெயர்கள் சிலவற்றைத் தொகுத்து வைக்கும் நோக்கத்தோடு இது எழுதப்படுகிறது.

மரங்கள் பற்றிய அறிவு, அனுபவம் என்பன வித்தியாசமானவை. பாடப் புத்தகங்களிலும், வேறு வழிகளிலும் மரங்கள் பற்றிய அறிவைப் பெறுவது ஒருமுறை. ஆனால் மரங்களை நேரிற்பார்த்து பழகி அனுபவம் பெறுவது வேறொரு முறை. நாம் அறிபவற்றில் அனுபவிக்கக் கிடைப்பவை சிலவே. அது நாம் வாழும் அமைவிடங்களைப் பொறுத்தது.

சிலமரங்கள், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுவதைக் கண்டிருக்கிறோம். பூக்களின் பெயர்கள் தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் வேறுபடுவதை வலைப்பதிவுகளில் கண்டிருக்கிறோம்.

இங்கே, மரங்களை அறிமுகப்படுத்த முடியாது. அவைபற்றிய முழுமையாக தரவுகள், படங்களுடன் இடுகையெழுத முடியாது. ஆனால் நான் பழகிய மரங்களின் பெயர்களைப் பதிந்து வைப்பது என்பதே இவ்விடுகையின் நோக்கம். இன்னும் ஈராண்டுகள் கழித்து, எனக்கே சில மரங்களின் பெயர்களை ஞாபகப்படுத்திக்கொள்வதுதான் இதன் முதன்மை நோக்கம்; மற்றவர்களுக்குப் பயன்படுமென்று நினைக்கவில்லை.

இப்படிச் செய்யவேண்டி வந்ததற்கு தலைப்பிலுள்ள 'வெடுக்குநாறி' தான் காரணம்.
இம்மரம் பற்றிய சம்பவமொன்றை அசைபோட்ட பொழுதில், அம்மரத்தின் பெயர் உடனடியாக நினைவுவர மறுத்துவிட்டது. இதென்ன கொடுமை? மிக அதிகளவில் பழகிய மரத்தின் பெயரொன்று வெறும் மூன்று வருடத்துக்குள், சடாரென்று நினைவு வராமற் போகுமளவுக்கு மங்கிவிட்டது திகைப்பாக இருந்தது. கொஞ்சம் யோசித்து பெயரை நினைவுபடுத்திக்கொண்டேன்.

சரி, இப்பிடியே போனா இன்னும் ரெண்டு வருசத்தில் மூளை மக்கிப்போன நேரத்தில இன்னும் பிரச்சினையாக இருக்குமே எண்டு நினைச்சு, அந்த நேரத்தில் உதவக்கூடிய மாதிரி எழுதி வைக்கிறதெண்டு முடிவெடுத்ததன் விளைவுதான் இவ்விடுகை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

யாழ்ப்பாணத்தில் இருந்தபோது அறிந்த மரங்களின் தொகை மட்டுப்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்திற் காணக்கிடைக்காத மரங்களில் நான் கேள்விப்பட்டிருந்த பெயர்கள்: பாலை, முதிரை, கருங்காலி போன்றன. இவைகள் தளபாடங்கள் மூலம் அறிந்த பெயர்கள். இவற்றில் பாலையைத் தவிர ஏனையவற்றை வன்னிக்கு நிரந்தரமாக இடம்பெயரும்வரை நேரிற் கண்ட ஞாபகமில்லை. இரண்டொருமுறை யாழ்ப்பாணத்திலிருந்து மடுத் திருநாளுக்காக வந்து போனதில் பாலைமரம் நல்ல பரிச்சயம். அவற்றைவிட வீரை, சூரை என்பவற்றைக் கேள்விப்பட்டதன்றி நேரிற் பார்த்ததில்லை.

1996 இன் தொடக்கத்தில் வன்னிக்கு வந்தபின்பு புதுப்புது மரங்கள் பலவற்றை அறியக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அவற்றிலொன்றுதான் இவ்விடுகைக்குரிய தலைப்பான 'வெடுக்கு நாறி'.

இந்தப் பெயர்வர என்ன காரணமென்று தெரியவில்லை. இம்மரத்தை வெட்டினால் ஒரு மணம் வரும், எல்லா மரத்துக்கும் வருவதைப் போலவே. ஆனால் அருவருக்கத்தக்கதாக அது இருக்காது. வெடுக்கு, நாறுதல் போன்ற சொற்களுக்கு தற்காலத்தில் நாம் கொண்டிருக்கும் பொருட்படி பார்த்தால் அது கொஞ்சம் அருவருக்கத்தக்க மணத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அப்படியில்லை.

இது நெடுநெடுவென்று நேராக உயர்ந்து வளரும், கிட்டத்தட்ட தேக்குப் போல. இளம் வெடுக்குநாறிகளைப் பார்த்தால் மின்கம்பங்களாக நடக்கூடிய மாதிரித்தான் நேராக உயர்ந்து வளர்ந்திருக்கும். பின்னர் முற்றிப் பருக்கும். நாலைந்து பேர் சுற்றிநின்று கட்டிப்பிடிக்கக் கூடியளவுக்குப் பருமனான வெடுக்குநாறிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படிப் பருத்த மரங்கள் எண்ணிக்கையில் குறைவாகவே காணப்படுகின்றன. அந்த நிலைக்கு வருவதற்கு முன்பே ஏதோவொரு வகையில் இம்மரங்கள் தமது வாழ்நாளை முடித்துக்கொள்வதாகக் கருதுகிறேன்.

இதன் இலைகள் கரும்பச்சை நிறத்திலிருக்கும். இதன் பட்டை கறுப்பாக இருக்கும். கொஞ்சம் தூரத்திலிருந்து பார்த்தால் கருங்காலி மரத்துக்கும் வெடுக்குநாறி மரத்துக்கும் உடனடியாக வித்தியாசம் பிடிக்க முடியாதபடி இருக்கும். கருங்காலிக்கு பட்டை தனிக்கறுப்பாக இருக்கும். அத்தோடு சிறிய செதில்கள் போல பட்டைத் துண்டுகள் மேற்கிளம்பியிருக்கும்.
ஆனால் வெடுக்குநாறிக்கு பட்டை மேற்பரப்பு மிகமிக அழுத்தமாக இருக்கும். அத்தோடு கறுப்பினிடையே (உண்மையில் வெடுக்குநாறியின் பட்டையின் நிறத்தைக் கறுப்பென்று சொல்லமுடியாது. கறுப்பும் கடும்பச்சையும் கலந்தவொரு நிறம்) வெளிர்நிறக் கோடுகள் நெடுக்காகத் தெரியும்.

அதைவிட மரத்தின் கிளையமைப்பு வெடுக்குநாறிக்கு வித்தியாசம். நெட்டையாக நிற்கும் இள வெடுக்குநாறிகளின் கிளைகள் கற்தேக்குப் போல ஓரளவு குடைவடிவக் கிளையமைப்பைக் கொண்டிருக்கும். (ஆனால் நன்கு முற்றிப் பருத்த வெடுக்குநாறி மரம் முற்றிலும் மாறுபட்டு சாதாரண மரங்கள் போன்று காட்சிதரும்.)

சரி, வெடுக்குநாறியின் பயனென்ன எனக் கேட்டால் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஒன்றுமில்லை. இதிலிருந்து தளபாடங்கள் எவையும் செய்ய முடியாது. வைரமான மரமன்று. விறகுக்குக்கூட இதைப் பயன்படுத்துவதில்லை. காய்ந்தபின், அடர்த்திகுறைவாகத் தெரியும்.
ஆனால் குறுகிய கால நோக்கில் இம்மரம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. நேராக நெடுத்து வளருவதால், அவ்வாறான கம்பங்களின் தேவையை இம்மரங்கள் நிறைவேற்றுகின்றன. அண்ணளவாக ஓராண்டு காலம்வரை இம்மரத்தைக் கொண்டு குறிப்பிட்ட பயனைப் பெறலாம். காய்ந்த பின் நிறை மிகக்குறைவாக இருப்பது இன்னொரு சிறப்பு.

அவசரமாக பதுங்கு - குழியமைக்க, கிணற்றுக்குக் குறுக்காக வளையொன்று (கப்பி கட்ட) போட, குறுகியகால வதிவிடம் அமைக்க வளையாக, தீராந்தியாக, கப்பாக என இம்மரம் பயன்படுத்தப்படுகிறது.

இவ்வின மரங்கள் வன்னிக் காடுகளில் மிகமிகச் செறிவாகக் காணப்படுகின்றன.
~~~~~~~~~~~~~~~~~~~~~
இம்மரத்தைப் பற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள், அல்லது எனது தகவல்களில் முரண்படுகிறவர்கள் பின்னூட்டங்களில் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.

இன்னொரு மரத்தோட அடுத்த இடுகையிற் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுகிறேன்.

நன்றி.

~~~~~~~~~~~~~~~~~~~~~

இடுகைக்குத் தொடர்பில்லாதது; டி.சேயின் பின்னூட்டத்தைத் தொடர்ந்து இப்படம் இங்கு இணைக்கப்படுகிறது.
நாயுண்ணிப் பூவின் படம். (பீநாறியும் நாயுண்ணியும் வெவ்வேறு செடிகள்)



படம்: அருச்சுனா

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Sunday, December 23, 2007

மலேசியத் தமிழ் இளையோர் - தமிழ்நெற் சிறப்புக்கட்டுரை

அண்மையில் மலேசிய இந்தியர்கள் நடத்திய அறவழிப்போராட்டத்தை அடிப்படையாக வைத்து மலேசியத் தமிழர்கள் தொடர்பான சிறப்புக்கட்டுரையொன்றை தமிழ்நெற் வலைத்தளம் வெளியிட்டுள்ளது. பலரும் வாசிக்க வேண்டிய கட்டுரையென்பதால் பயன்கருதி இங்கு அது மீள்பதிவாக்கப்படுகிறது.

நன்றி: தமிழ்நெற்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மலேசியத் தமிழ் இளையோர்

மலேசியத் தமிழ் இளையோர்: பண்பாட்டு-வலுவாக்கச் சிக்கல்
இன்றைய உலக விமானப் போக்குவரத்தின் தலைசிறந்த மையங்களுள் ஒன்று, கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையம். இதன் பயணிகள் அகலும்/இடைமாறும் கட்டிடத்தை ஒரு குறு நகரம் என்றே சொல்லலாம்.

இருப்பினும், மலேசியாவின் பன்மைப் பண்பாட்டுடன் பழக்கமுடைய எவரும் வினவக்கூடியது என்னவென்றால், இங்குள்ள கண்கவர் இன உணவு, விநோதப்பொருள், சர்வதேசச் சரக்கு அங்காடிகளில் இந்நாட்டின் மக்கட் தொகையில் ஏறத்தாழ 9 வீதம் கொண்ட தமிழ்ச்சமூகம் ஏன் முறையாக பிரதிபலிக்கவில்லை என்பதே.

தமிழர்கள் நடத்துவது என்று ஒரு புத்தகசாலையைத் தவிர வேறு விற்பனை நிலையங்கள் எதுவும் இங்கு இருப்பதாகவும் தெரியவில்லை. உலகத்தின் மொழிகளில் நூல்கள் அடுக்கப்பட்ட இக் கடையிலும் ஒரு தமிழ் நூலைக் காணக் கிடைக்கவில்லை. இவ்வாறிருக்க, விமான நிலையத்தின் பெருந்தொகையான கழிப்பிடங்கள் அனைத்தையும் கவனித்துக்கொள்பவர்கள் மட்டும் தமிழர்களாகவே காணப்படுகிறார்கள் என்பது ஒருவருக்கு ஆச்சரியம் தரக்கூடியது.

நவீன மலேசியாவின் சமூகங்களுக்கிடையிலான அபிவிருத்தி பேதங்களை பிரதிபலிக்கும் உதாரணக் காட்சி இது; பிறர் எவரும் வெளிப்படையாகவே விளங்கிக் கொள்ளக்கூடியது.

***********

வளர்ச்சியின் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக அணிதிரண்ட ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், மகாத்மா காந்தியின் படத்தையும் பிரபாகரனின் படத்தையும் தாங்கிச்சென்றார்கள் என்று எமக்குச் சொல்லப்படுகிறது. இதைக் கேட்டு, இந்தியாவிலும் இலங்கையிலும் மலேசியாவிலும் பயப்பிராந்தியடைந்த பிறழ்வு சக்திகள் அவசர முடிவுகளுக்குத் தாவினர். இலங்கைக்கு அப்பாலும் தமிழ் அடையாளத்துக்கு பயங்கரவாத முலாம் கொடுக்கும் முயற்சிகள் இப்பொழுது ஆரம்பமாகிவிட்டன.

முழுக்கட்டுரையையும் வாசிக்க...

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, February 13, 2007

மறுக்கப்பட்ட உரிமையும் புதிய வலைப்பதிவும்

விக்ரோறிய மாநிலம் (அவுஸ்திரேலியா) தொடர்பான சில தகவல்களையும் படங்களையும் பகிர்ந்துகொள்ள "மெல்பேர்ண் எனும் மெல்லியமகள்" என்ற வலைப்பதிவு நிறுவப்பட்டுள்ளது.
அவ்வலைப்பதிவு நிறுவப்பட்ட பின்னணி, முன்னணி பற்றி விரிவாக அங்குச் சொல்லப்பட்டுள்ளது.

விக்ரோறிய மாநிலம் என்று இருந்தாலும் தொடக்கத்தில் மெல்பேர்ண் நகரை மையப்படுத்தியதாகவே பதிவுகள் இருக்கும்.

வலைப்பதிவை தமிழ்மணத்தில் இணைக்கும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
அதற்குமுன் ஓர் அறிமுகத்தைக் கொடுக்கவே இப்பதிவு.

அங்கு பின்னூட்ட வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே ஏதாவது சொல்ல வேண்டியிருந்தால் இப்பதிவிலேயே பின்னூட்டமிடவும்.


Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, September 29, 2006

தாயகப் பயணம் - ஒரு வலைப்பதிவு அறிமுகம்

மெழுகல் பற்றி ஒரு குரற் பதிவு.







Journey to my Motherland என்ற தலைப்போடு வலையில் பதிந்து வருகிறார் Shivi Bala.

ஈழம், விடுதலைப்புலிகள் இயக்கம் என்பன மட்டில் சுவாரசியமற்ற மூன்றாம் நிலையில் ஐரோப்பாவில் வாழ்ந்தவரின் தாயகம் நோக்கிய பயணம் என்று சொல்லலாம்.
கொழும்பு வாழ்க்கை, அங்குள்ள தமிழர்கள், யாழ்ப்பாணத்துக்கான விமானப்பயணம், யாழ்ப்பாண மக்கள், தமிழகத் தொலைக்காட்சிகளின் செல்வாக்கு, வன்னிப் பயணம், வன்னி மக்கள் என்பவை தொடர்பான பார்வை இவராற் பதியப்படுகின்றன.

அதில் வன்னியில் தான் ஒன்றாகத் தங்க நேரிட்ட குடும்பமொன்றைப் பற்றிய பதிவு வருகிறது. கண்ணம்மா என்ற பெண் பற்றி விவரிக்கிறார்.
வலைப்பதிவாளர் மாட்டுச் சாணத்தால் நிலம் மெழுக வேண்டி வந்த சம்பவம் உட்பட பல சுவாரசியங்களைக் கொண்டு செல்கிறது அப்பதிவு.
______________________________________________________________

பதிவை வாசித்தபோது, பதிவாளர் மாட்டுச் சாணத்தால் மெழுகப்பட்ட தரை தொடர்பில் இவ்வளவு தூரம் அரியண்டப்பட வேண்டுமா? என்று என்னுள் ஆச்சரியம் வந்தது. பிறகு யோசித்தபோது புரிந்தது. வெளிநாடொன்றில் வாழ்ந்த, மாட்டுச்சாணத்தால் மெழுகப்பட்ட எந்த இடத்தையும் எதிர்கொள்ளாத ஒருவருக்கு முதல் அனுபவம் எப்படியிருக்கும் என்பது புரிந்தது.
இந்த விசயத்தில் என் அனுபவம் எப்படி இருந்தது என்று யோசித்துப்பார்க்கிறேன்.

யாழ்ப்பாணத்தில், மாட்டுச் சாணத்தால் மெழுகப்பட்ட இடங்களில் வாழ்ந்த ஞாபகம் எனக்கில்லை. எங்கள் ஊர் கிராமம்தான் என்றாலும் எங்கள் பகுதியில் பெரும்பாலும் கல்வீடுகள்தாம். பெரும்பாலும் எல்லாமே காறை பூசப்பட்டவை. காறை பூசப்படாதவைகூட புத்துமண்ணால் மெழுகப்பட்டவை, மாட்டுச்சாணத்தால் அன்று.

ஆனால் அப்படி புத்துமண்ணால் மெழுகப்பட்ட தரை அழுத்தமாக, சீராக இருக்காது. நிறைய வெடிப்புக்கள் வரும். புழுதி கிளம்பும். சொந்த ஊரிலிருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்துக்குள்ளயே தங்கியிருந்த காலத்திலயும் நான் கல்வீட்டிலதான் இருந்திருக்கிறேன்.

மாட்டுச்சாணத்தால் மெழுகப்பட்ட குடிசைகள் எனக்கு அறிமுகமானது 1996 இல் வன்னியிலாகத்தான் இருக்க வேண்டும். பலதடைவைகள் நான் சாணியில் மெழுகியிருக்கிறேன். ஆனால் மாட்டுச்சாணத்தால் மெழுகுதல் பற்றிய எனது முதல் அனுபவம் என்று குறிப்பிட்டுச் சொல்லும்படி என் மனத்தில் ஏதுமில்லை. எனவே எந்த அதிர்ச்சியோ அருவருப்போ இன்றி இயல்பாகவே இசைவாக்கப்பட்டிருக்கிறேன். இப்படி மெழுகப்பட்ட வெறும் நிலத்தில் உருண்டு புரண்டிருக்கிறேன். அவற்றின் மணம்கூட என்னைத் தொந்தரவு செய்த ஞாபகமில்லை.



மாட்டுச் சாணத்தால் மெழுகுவது மிக நேர்த்தியாக இருக்கும். நிலம் நல்ல அழுத்தமாக, சீராக இருக்கும். வெடிப்புக்கள் வந்து அழகைக் குலைக்காது. மெழுகியபின் தரையில் ஓர் அழகு தெரியும். விளக்குமாறால் முற்றம் கூட்டியபின், நாம் கூட்டிய ஒழுங்கில் ஈர்க்குக் கீறல்கள் நிலத்தில் கோலம் போட்டு ஓர் அழகு தெரியுமே, அதேபோல் நாம் மெழுகிய ஒழுங்கில் மெழுகப்பட்ட தரையில் கோலம் தெரியும்.

எனவே மெழுகும்போது ஒரு கலையுணர்ச்சி தேவை. அங்கிங்கென்று ஒழுங்கற்ற முறையில் கைகளை அலைத்து மெழுகலாம். நிலம் சீராக மெழுகப்பட்டிருக்கும். அனால் அழகாக இராது. ஒரே அகலத்தில், ஒரே பக்கமிருந்து (வலமிருந்து இடம் போல) ஒரே ஆரையில் இழுத்துக்கொண்டு வரவேண்டும். ஒவ்வொரு இழுவையும் ஒரே வளைவாக ஒரே அகலத்தில் இருக்கவேண்டும். இப்படி அழகாக மெழுகுவதென்பது உடனடியாக வராது என்றே நினைக்கிறேன்.
நான் பார்த்தளவில் சிலர், மாடு காலையில் போட்ட சாணம், மாலையில் போட்ட சாணம் என்று வேறுபடுத்திக்கூட மெழுகுவார்கள். நிறத்தில், தடிப்பில் மாற்றம் இருக்கும்.
__________________________________________--
அனுபவத்தின் அடிப்படையில் மாட்டுச்சாணம் பூசிய நிலங்கள் தொடர்பில் சொல்லக்கூடியது 'நித்திரை'.
அந்த மாதிரி நித்திரை வரும். நினைத்த நேரத்தில் அமைதியாக நித்திரை கொள்வது எப்போதும் கிடைப்பதில்லை. குறிப்பாக வெளிநாட்டில் என் அனுபவப்படி விருப்பமான நித்திரை இதுவரை கிடைக்கவில்லை. நித்திரை கொள்ள வேண்டுமென்று நினைத்த நேரத்தில் நித்திரை வராது. வரக்கூடாத நேரத்தில் வந்து தொந்தரவு செய்யும்.

மாட்டுச்சாணத்தில் மெழுகப்பட்ட வீட்டு நிலங்களில் நல்ல குளிச்சியை உணர்ந்திருக்கிறேன். நல்ல நித்திரையை அனுபவித்திருக்கிறேன். நல்ல அலாதியான பகல் நித்திரைக்கு நான் பரிந்துரைப்பவை: கடற்குளிப்பு முடிந்ததும் நிழலில் வந்து படுப்பது, மாட்டுச்சாணத்தால் மெழுகப்பட்ட தரையில் படுப்பது.

__________________________________


என்னுடைய பழைய குரற்பதிவுகளை கீழே இணைத்துள்ளேன்.
விரும்பினால் அப்பக்கங்களுக்குச் சென்று கேட்கலாம்.


"படலையும்" பால்ய நினைவும்.

கால் பிரேக்…- “ஒர் அலசலும் அனுபவமும்.”
___________________________________

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, May 16, 2005

முசுப்பாத்தி பற்றி முசுப்பாத்தியாக...

முசுப்பாத்தி...
இது எம்மிடையே(ஈழத்தில்) பேச்சு வழக்கில் பரவலான பாவனையிலிருக்கும் சொல். பம்பல் என்பதன் ஒத்த கருத்தாகப் பாவிக்கிறோம். பம்பல் என்பதும் புரியாதவர்களுக்கு:
நகைச்சுவையாகப் பேசுதல் அல்லது நகைச்சுவை எனும் பொருளில் பாவிக்கப்படுகிறது.
'இது நல்ல முசுப்பாத்தி' என்றால் 'நல்ல நகைச்சுவை' என்று கருத்து. 'முசுப்பாத்தியான ஆள்' என்றால் 'நகைச்சுவையான மனிதன்'.
'முசுப்பாத்தியாகப் பேசக்கூடியவர்' என்றால் 'நகைச்சுவையாகப் பேசக்கூடியவர்'.

இச்சொல்லை நானும் இன்னும் ஈழத்தைச் சேந்த சிலரும் வலைப்பதிவிற் பாவித்துள்ளோம். இந்தச் சொல் எப்படி வந்தது என்று சிந்தித்ததுண்டு. அனேகமாய் ஏதாவது ஐரோப்பிய மொழியிலிருந்து தான் வந்திருக்கும் என்று நினைத்திருந்தேன். இன்றுதான் ஒரு இச்சொல் பற்றி அறியும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

பண்டிதர் வீ. பரந்தாமன் எழுதியுள்ள ஒரு புத்தகத்தில் (வேர் - அடி வழித் தமிழ்ச் சொற்பிறப்பியற் சிற்றகர முதலி. – பெயரைப் பார்த்துப் பயப்பட வேண்டாம்) இச்சொல் பற்றி எழுதியுள்ளார். ஆச்சரியமாயிருக்கிறது, இது தமிழ்ச்சொல் என்பது. இதை முனைவர் கு. அரசேந்திரனும் வியந்துள்ளார். இனி பண்டிதர் பரந்தாமனின் எழுத்து அப்படியே.

முசுப்பாத்தி: முசி – (முசிப்பு + ஆற்றி) – முசிப்பாற்றி – முசிப்பாத்தி = இளைப்பாறுகை, இளைப்பாற்றுகைப் பொருட்டுப் பேசும் வேடிக்கைப் பேச்சு, நகையாட்டு.

முசிதல் = 1.அறுதல்.
2.கசங்குதல்.
3.களைத்தல்.
4.ஊக்கங் குன்றுதல்.
5.மெலிதல் “அற்பமனம் முசியாள்” (அரிச்சந்திர மயான காண்டம். 115) 6.அழிதல்.

முசித்தல் = 1.களைத்தல்.
2.வருந்துதல்.
3.மெலிதல்.
4.அழிதல்.
5.கசங்குதல்.

முசிப்பு < முசி = 1.மெலிவு. 2.களைப்பு. 3.அழிவு. முசிப்பாற்றி = இளைப்பாற்றுகை. (Winslow's Tamil English Dictionary)
முசிப்பாறுதல் = இளைப்பாறுதல். (Winslow's Tamil English Dictionary)

முசிப்பாற்றி – முசிப்பாத்தி - முசுப்பாத்தி.
சிலர் அறியாமையினால் இச்சொல்லை பிறமொழிச் சொல்லெனக் கூறுகின்றனர். அதற்கு இச்சொல் பிழையாக, ‘முஸ்பாத்தி’ என்று உச்சரிக்கப்படுவதும் ஒரு காரணமாகும். இவ்வாறே பல தமிழ்ச் சொற்களைப் பிறமொழி ஒலிகளில் உச்சரித்து வேற்று மொழிச் சொற்களாகக் காட்டுகின்றனர். பண்டிதரேயானாலும் சொல்லியல் மொழிநூற்புலமையிலாராயின் பொருடெரியிற் சொல்வதேயன்றி, அச்சொல் இன்ன மொழிச் சொல்லென்று துணிந்து கூறுதலை ஒழித்தல் வேண்டும்.

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, May 09, 2005

போயிட்டு வாறன்’

ஒரு கிழமையா உங்கள அலைக்கழிச்சிட்டு ‘போயிட்டு வாறன்’ எண்டு ஒரு சொல் சொல்லாமப் போயிட்டன் எண்டு நினைக்கிறியளா?
மத்தியானம் நன்றி சொல்லி ஒரு பதிவு போட்டிட்டு அவசரத்தில ஓடீட்டன். ஆனா அது தமிழ்மணத்தில வரேலயெண்டு இப்பதான் தெரிஞ்சுது. திருப்ப ஒரு நன்றிக் கடிதம் எழுதிறன். ஆனா நிறைய விசயங்கள நிப்பாட்டி சுருக்கமா.

இந்தக் கிழம என்னோட ‘வெள்ளி பாத்த’ ஆக்களுக்கு நன்றி.
மொத்தமா 25 பதிவுகள் போட்டிருக்கிறன். அதில ‘படங் காட்டினது’ ஏழு பதிவுகள். கொஞ்சம் கூடுதலாத் திணிச்சுப்போட்டன் போல கிடக்கு.

சிலபதிவுகளைத் தவிர்த்திருக்கலாமென்று நினைக்கிறேன். குறிப்பாக திடீரென்று எழுதிய ‘தனித்தமிழும் மயிர்த்தமிழும்’ பதிவு. அந்த விவாதத்தைத் தொடர எண்ணமில்லை.

என் பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் தந்து உற்சாகமூட்டியவர்களுக்கும் ஏனைய வாசகருக்கும் நன்றிகள்.

உங்களுக்குப் பயன்பாடாக நான் விட்டுச்செல்லும் ஒரு அனுபவம்: ஏற்கெனவே உங்கள் பலருக்குத் தெரிந்திருக்கும்.
பின்னூட்டங்கள் அதிகம் வரவேண்டுமென்றால்,
படம் காட்டுங்கள் அல்லது படத்தைப் பற்றி எழுதுங்கள்.

நன்றி. வணக்கம்.

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, May 02, 2005

நட்சத்திரமாகவன்றி, நிலவாக…

பிறை - ஒன்று. (மாயம்)
உங்கள் சுமைகளைப் போக்கவன்று, மேலும் சுமத்தவே வந்தேன்.
உங்களை விடுவிக்கவன்று, மேலும் அடிமையாக்கவே வந்தேன்.


வணக்கம்!
இராம.கி. உங்களெல்லோருக்கும் நாள் காட்டியிருந்தார். இப்போது அல்லவாசிட்டி விஜய் அல்வா காட்டி முடித்திருக்கிறார். நானும் இந்தக் கிழமை முழுவதும் உங்களுக்கு ஒன்றைக் காட்டப் போறன். அதுதான் வெள்ளி.
ஓம், வெள்ளி காட்டப் போறன்.
என்ன... வெள்ளி பாக்க எல்லாரும் தயாரா?


என்னை இந்த வார நட்சத்திரம் எண்டு சொல்லீச்சினம்.
நட்சத்திரமா இருக்கிறது எனக்குப் பிடிக்கேல.
நிலவாக இருக்கத்தான் விருப்பம்.

நட்சத்திரங்களுக்குத் தனித்தன்மை இல்ல.
எண்ணிக்கையில எக்கச்சக்கமா இருக்கு, எண்ணவே ஏலாத அளவுக்கு.
ஆனா நாங்களறிஞ்ச நிலவு ஒண்டுதான்.
மனுசருக்கு இருக்குற நிலவு ஒண்டே ஒண்டுதான்.
அதால நிலவா இருக்க ஆசப்படுறன்.

நட்சத்திரங்கள் சுயமானதாம்.
சுயமா ஒளி கொண்டவையாம்.
யாரிட்டயும் இரவல் வேண்டிறேலயாம்.
ஆனா நிலவு சுயமில்லாததாம்.
ஒண்டுமேயில்லாத வெறும் உருண்டையாம்.
வெளிச்சத்த வேற இடத்திலதானாம் வேண்டுறது.
சீ…. நட்சத்திரமா இருக்கிறதும் ஒரு வாழ்க்கையோ?
ஒருத்தரிட்டயும் ஒண்டுமே இரவல் வாங்காமல், இருக்கிறதையும் மற்றாக்களுக்குக் குடுத்துக்கொண்டு (அது குறையாட்டியும்) இருக்கிற “முட்டாள்” நட்சத்திரமா இல்லாமல், இரவல் வேண்டியே பிழைப்பு நடத்திற,அந்த இரவல் வெளிச்சத்த மட்டுமே வச்சு பிழைச்சுக் கொள்ளிற நிலவாத் தான் நான் இருக்க ஆசப்படுறன்.

நிலவில ஒண்டுமில்லயாம்.
தண்ணி, காத்து, புல்பூண்டு, உயிரினம் எண்டு ஒண்டுமே இல்லயாம்.
கல், மண், தூசியத் தவிர எதுவுமே இல்லயாம்.
அவ்வளவு “சுத்த வேஸ்ட்” ஆக இருந்து கொண்டு,
இவ்வளவு தூரத்துக்கு தன்னப் பற்றின புகழையும் மாயையையும் தோற்றுவித்த நிலவை;

ஆனானப்பட்ட மனுச வர்க்கத்தையே யுகம் யுகமா ஏங்க வச்சு,
கோடிக்கணக்கில சிலவழிக்க வச்சு,
தன்னில காலடி பதிக்க வச்சு,
அந்த நிகழ்ச்சியை “மானுடத்தின் மாபெரும் பாய்ச்சலாக” பிதற்ற வச்ச அந்த “ஒண்டுமில்லாத நிலவின்ர திறமையை;

மனுச இனம் தோன்றினதிலயிருந்தே தன்னைப்பற்றிக் கவித கவிதயா காவியங்களாக் கொட்ட வச்சு,
நிலவில்லாமல் காதலில்ல, காதலில்லாமக் கலவியில்ல, கலவியில்லாமல் மனித குலமேயில்ல எண்டு கோட்பாட உருவாக்கி,
அதன்படி நிலவில்லாம மனிதனில்ல எண்ட “வெளிப்படை உண்மையை” வெளியிட்ட அந்த “சுத்த வேஸ்ட்” நிலவின்ர சமயோசிதத்தை;

நான் விரும்புகிறேன். நல்லா ரசிக்கிறேன்.

ஒண்டுமில்லாமலே இருந்து கொண்டு, ‘தானில்லாமல் ஒண்டுமில்ல’ எண்ட நிலைமையை உருவாக்கின அந்த நிலவு,
எல்லாம் இருந்தும் ஒண்டுமே செய்யத் தெரியாத அந்த முட்டாள் நட்சத்திரங்கள விட எனக்குப் பிடிச்சிருக்கு.
அந்த நிலவுதான் என்ர றோல் மொடல்.
(சும்மாயிருந்து சுகமனுபவிப்பதின் மகிமை தெரிந்தவர்களுக்கு இது புரியும்.)

அதாலதான் சொல்லுறன், நான் நட்சத்திரமா இருக்க விரும்பேல.
நிலவாய் இருக்க விரும்பிறன்.
அதானால என்னை இனி ‘இந்தவார நிலவு’ எண்டே கூப்பிடுங்கோ.
நிலவாயிருந்து கொண்டு உங்களுக்கு வெள்ளி காட்டுறன்.

நான் நிலவு எண்டு சொன்னதால முதலே உங்களிட்டயிருந்து தப்பிக் கொள்ளுறன். நிலவைப் போலவே என்னட்ட ஒண்டுமில்ல (சுத்த வேஸ்ட்). அதால உங்களுக்குப் பயன்படுற மாதிரி இந்தக் கிழம எதுவும் இருக்காது.
கிழமைக் கடைசியில மட்டும் உங்களுக்குப் பயன்படுற மாதிரி ஒரு பதிவு போடுவன். அதுவும் இதுதான்அந்தப் பதிவு எண்டு சொல்லித்தான் போடுவன். நான் தெரிவு செய்யப்பட்ட காலம் அந்தமாதிரி. ஆரவாரங்களுக்குள்ள சத்தமில்லாம இந்தக் கிழமைய ஓட்டி முடிச்சிடலாம்.

கொல்லப்பட்ட மாமனிதன் சிவராமுக்கு என் அஞ்சலியைத் தெரிவித்து, இந்தக் கிழமையைத் தொடங்குகிறேன்.



சரி, அப்ப வரட்டே?
வெள்ளி பாக்க வாற எல்லாருக்கும் என்ர வாழ்த்துக்கள்.

பட உதவி சயந்தன்.

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, December 10, 2004

உங்களோடு ஒரு நிமிடம்...

வணக்கம்!
இது வசந்தனின் பக்கம்.
தனியே பார்வையிடுவதோடு நின்று விடாது உங்கள் கருத்துக்களையும் எழுதிச் செல்லுங்கள்.
உங்கள் கருத்துக்களே என்னையும் இத்தளத்தையும் வளர்க்கும்.

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________