Thursday, February 23, 2006

கடவுளின் முதல் தோல்வி.

(காயின், ஆபேல் இருவரும் கடவுளின் முதல் மனிதப்படைப்புக்களான ஆதாம், ஏவாளின் புத்திரர்கள் என்று விவிலியக் கதை கூறுகிறது).

முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். காயின் கெட்டவனில்லை. கடின உழைப்பாளி. ஆனால் கோபக்காரன். உழைப்பாளிக்குக் கோபம் வருவது புதிதா என்ன? அவன் கடினமாயுழைத்துத் தானியங்களைப் பயிரிட்டு வந்தான்.

அவனது தம்பி ஆபேல் சாந்தமானவன். மந்தை மேய்த்து வந்தான். மந்தையை மேயவிட்டு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் புல்லாங்குழல் வாசிப்பான். வெயில் கடுமையென்றால் மரநிழலில் இருந்து இளைப்பாறுவான். அதே கொடும் வெயிலில் வயலில் வேலை செய்துகொண்டிருக்கும் காயினுக்கு, தன் தம்பி நிழலில் இளைப்பாறியபடி புல்லாங்குழல் வாசிப்பதோ யாழ் மீட்டுவதோ இனிக்குமா?
சரி இளையவன் தானே? விட்டுவிடுவோமென்றிருந்திருப்பான்.

வீட்டிற்கூட ஆபேல்மீதுதான் எல்லாருக்கும் பாசம். காயினை யாரும் கண்டுகொள்வதில்லை. வீட்டிலே இளையவன் மீது பாசம் அதிகமாயிருப்பது புதிதா என்ன? அதையும் பொறுத்துக்கொள்வோமென்றிருந்திருப்பான்.

விளைச்சலில் பத்திலொன்றைக் கடவுளுக்குக் கொடுக்க வேண்டுமாம்.
இங்கே காயின் 'சிந்திக்க'த் தொடங்கினான்.

"கடவுள் இந்தக் காணிக்கையைச் சாப்பிடப்போவதில்லை. வெறுமனே நெருப்பிலெரிந்து சாம்பலாகப் போகிறது. இதில் யாருக்கு என்ன இலாபம்? நான் கடினமாயுழைத்து விளைவித்ததை ஏன் காணிக்கையென்ற பேரிற் சாம்பலாக்க வேண்டும்? கடவுளாற் படைக்கப்பட்ட நாம் அவருக்குச் செலுத்தும் காணிக்கைதான் இது என்று தாய்தந்தையர் சொல்கின்றனரே, சரி. அதன்படியே காணிக்கை கொடுக்கலாம். அதாவது எம்மைப் படைத்துக் காத்துவரும் கடவுளுக்குரிய கூலிதான் பத்திலொன்றென்றால் ஒவ்வொரு விளைச்சல் முடிவிலும் அதைத் தாராளமாகக் கொடுக்கலாம். ஆனால் அத்தோடு கடவுளிடம் கணக்கு முடிந்துவிடுகிறதே. பிறகேன் அவரைத் துதிபாடவும், சேகவம் செய்யவும் வேண்டியுள்ளது?"

நிறைய சிந்திக்கத் தொடங்குகிறான் காயின். காணிக்கை கொடுக்க - அல்லது காணிக்கையென்ற பேரில் தானியங்களைச் சாம்பலாக்க அவனுக்கு முழுமையான விருப்பமில்லை. வெயில், மழையென்று பாராது உடலை வருத்தி உழைத்து- தான் விளைவித்த தானியம் கண்முன்னே யாருக்கும் பயனின்றி எரிந்து சாம்பலாவதை எந்த "உண்மையான" உழைப்பாளிதான் பார்த்துக்கொண்டிருப்பான்?

ஆனாலும் அவனால் மறுக்க முடியாது. "அவன்" இன்றி அணுவும் அசையாதல்லவா? அவரைச் சாந்தப்படுத்தாவிட்டால், அவர் கட்டளையை நிறைவேற்றாவிட்டால் அவனால் உயிர்வாழ முடியாதென்பதும் - வாழ்ந்தாலும் நிம்மதியாக வாழ முடியாதென்பதும் அவனுக்கு நன்கு தெரியும். கட்டளையை மீறியதால் தன் தாய்தந்தையர் படும் துன்பத்தைப் பார்த்தவனாயிற்றே. (ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்தப்பட்டது, பிரசவ வலி உட்பட பேருபாதைகள்)

அதனால் (விருப்பமின்றியே - அல்லது குழப்பத்துடனே) காணிக்கை செலுத்தத் தயாராகிறான் காயின். விளைச்சலில் நல்லவற்றைத் தெரிந்து பத்திலொன்பதைத் தானெடுத்துக்கொண்டு மிகுதியைக் காணிக்கையாகக் கொண்டு வருகிறான். (அல்லது காயின் மீதான புறக்கணிப்பை நியாயப்படுத்த கதைசொல்லிகள் 'நல்லவற்றைத் தானெடுத்துக்கொண்டான்' என்று இப்படிச் சொல்லியிருக்கக்கூடும்).

ஆபேலும் தயாராகிறான். தன் மந்தையில் கொழுத்தவற்றைக் கொண்டுவருகிறான்.

இருவரும் காணிக்கையைப் படைத்துவிட்டு, கடவுள் ஏற்றுக்கொள்ள வேண்டிக் காத்திருக்கின்றனர். ஆபேலின் "கொழுத்த" காணிக்கையை மட்டும் கடவுள் ஏற்றுக்கொள்கிறார். காயினின் காணிக்கை ஏற்றுக்கொள்ளப்படாமல் அப்படியே இருக்கிறது.

இப்புறக்கணிப்பு காயினுக்கு ஆத்திரத்தை மூட்டுகிறது. உண்மையில் ஆத்திரம் ஆபேல் மீதானதில்லை. அது கடவுள் மீதானது. கடவுள் மேல் ஆத்திரப்பட்டு என்னாவது? எங்கிருக்கிறாரென்றே தெரியாத "ஆனாமதேய"ப் பேர்வழியோடு எப்படிப் பொருதுவது? வருந்தியுழைத்த தன் காணிக்கை புறக்கணிக்கணிக்கப்பட்டதும், தானே தன்பாட்டில் மேய்ந்து கொழுத்த மந்தையைக் காணிக்கையாக்கின ஆபேலின் காணிக்கை ஏற்கப்பட்டதும் (காயினின் பார்வையில் சொகுசான தொழிலாகவே ஆபேலின் தொழில் இருந்திருக்கும்) அவனாற் பொறுக்க முடியவில்லை. இனி இதைவைத்தே தன்னை தாய்தந்தையுட்பட எல்லோரும் மட்டந்தட்டுவார்களென்ற எண்ணம் அவனுக்கு வந்தது. தொடர்ச்சியான பல நிகழ்ச்சிகளிலிருந்து காயின் ஒன்றை உணர்ந்து கொண்டான். அதுதான் "கடவுள் ஆபேலை மட்டும் தேர்ந்தெடுத்திருக்கிறார்".

*************************************
விவிலியத்தில் கடவுளின் "தேர்ந்தெடுப்பு" பலமுறை நிகழ்ந்திருக்கிறது. தன் ஆசீர்வதிக்கப்பட்ட இனமொன்றை உருவாக்க, குறிப்பிட்ட ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவருக்கூடாக சந்ததியைத் தழைக்க வைப்பார். இப்படித்தான் நோவாவைத் தேர்ந்தெடுத்ததோடு மிகுதியானோரை அழித்தார். ஆபிரகாமைத் தேர்ந்தெடுத்தவர், அவரின் மகனான ஈசாக்கை மட்டும் தேர்ந்தெடுத்தார். மற்றவரைப் "புறவினத்தார்" ஆக்கினார். (புறவினத்தாரென்றால் இறைவனால் ஆசீர்வதிக்கப்படாத அல்லது தேர்ந்தெடுக்கப்படாதவர்கள்). ஈசாக்கின் பிள்ளைகளில் யாக்கோபை மட்டும் தேர்ந்தெடுத்தார்.
இப்படித் தேர்ந்தெடுப்புக்களைச் செய்த கடவுள், ஆதாம் ஏவாளிலிருந்து அடுத்த சந்ததியில் தன் ஆசிர்வதிக்கப்பட்ட இனத்தை உருவாக்க ஆபேலைத் தேர்ந்தெடுத்திருந்தார். (இது விவிலியத்தில் நேரடியாக இல்லை.) இவ்வுண்மையைத் தெரிந்துகொண்டான் காயின்.
************************************

மிகுந்த ஆத்திரமுற்றிருந்த பொழுதொன்றில் காயின் ஆபேலைத் தனியாக அழைத்துச்சென்று கொன்று போடடான். அவன் கொன்றதற்கான துல்லியமான காரணம் கண்டுபிடிப்பது கடினமே.
உண்மையில் ஆபேல் மீதான ஆத்திரம்தான் நூறுவீதமும் காரணமா?
இல்லவேயில்லை. கடவுள் மீதான ஆத்திரத்தில் அவரின் செல்லப்பிள்ளையான ஆபேலைக் கொன்றானா?

என்ன இருந்தாலும் கடவுளின் மாபெரும் திட்டமொன்றைத் (அதுதான் 'ஆபேல் மூலம் ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியை உருவாக்குவதும் - மற்றவர்களைப் புறவினத்தாராக்குவதும்') தவிடுபொடியாக்கிக் கடவுளையே அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டான் காயின். மறைந்திருக்கும் சக்தியொன்றோடு மோத அவனுக்கு இதைத்தவிர வேறுவழியில்லை. (விவிலியக் "கதையை" உண்மையென்று யாராவது நம்புவார்களாயின், ஒடுக்கப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்டவர்களின் முதலாவது எதிர்ப்பு அல்லது போராட்டமென்று இதைக் கொள்ளலாம்)

வரலாற்றில் கடவுளின் முதல்தோல்வி இதுதான்.

தான் அயர்ந்திருந்த நேரத்தில் நடந்த இத்தோல்வியோடு கடவுள் உசாராகிவிட்டார். அதன்பின் அவர் படு உசாராகச் செயற்பட்டாரென்றே நினைக்கிறேன்.

நோவாவின் பெட்டகத்தைத் தவிர ஏனையவற்றை மூழ்கடித்தது,
பாபேல் கோபுரம் கட்டி மானுடன் தன் வலிமையைப் பறைசாற்றப் புறப்பட்டபோது அவனைப் பிரித்துச் சிதறடித்தது,
தனது இன்னொரு தெரிவான சூசையைக் (இவர் யாக்கோபின் பன்னிரு புத்திரர்களில் பதினோராவது.) கொல்ல அவரது சகோதரர்கள் முயன்றபோது அவரைக்காப்பாற்றியது,
எகிப்திலிருந்து கானான் தேசம் நோக்கிய "விடுதலைப்பயணத்தில்" தன்னை வணங்காதவர்களையெல்லாம் கொன்றது,
அதன்மூலம் மக்களை வெருட்டி வைத்தது,
தேவையான நேரங்களில் போர்களை உருவாக்கி 'புறவினத்தார்களை'யோ தன் ஆசிர்வதிக்கப்பட்ட இனத்திலேயே தனக்குப் பிடிக்காதவர்களையோ அழித்தது

என்று கடவுளின் படு உசாரான நடவடிக்கைகளினூடு வரலாறு பயணிக்கிறது.

(இடையில் தன்னையொத்த கடவுளர்களோடும் பொருதும் துர்ப்பாக்கியம் வந்து சேர்ந்தது கடவுளுக்கு. அதற்கும் மானுடனையே பயன்படுத்த முடிவெடுத்தார்.)

ஆனாலும் கடவுளின் உசார் நடவடிக்கைகளுக்குள்ளும் மானுடன் வெற்றி பெறுகிறானென்றே நினைக்கிறேன். யார் கண்டது? வெற்றி பெறுபவர்களெல்லாம் கடவுளின் "தேர்ந்தெடுக்கப்பட்ட" இனத்தவர்களென்று புதிய கதையொன்று எழுதப்படலாம்.
************************************
பத்துப் பன்னிரண்டு வருடங்களின் முன் யாழ்ப்பாணத்திற் கண்ட நாடகப்படியொன்று இதன் கருமூலம்.


எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Thursday, February 16, 2006

கவளம் - ஒரு நினைவு.

எங்கட சொந்த பந்தங்களின்ர வகைதொகையளப் பற்றி ஏற்கனவே "அம்மாச்சி"யின்ர பதிவில சொல்லியிருக்கிறன். எங்கட அம்மம்மாவின்ர மூன்றாவது சகோதரிய "சூட்டி" என்ற அடைமொழியோடு உறவுமுறையையும் சேர்த்துக் கூப்பிடுவோம். அதாவது சூட்டியக்கா, சூட்டியம்மா, சூட்டியம்மம்மா...
எனக்கு அவ 'சூட்டியம்மம்மா' எண்டாலும் அது 'சூட்டியம்மா' எண்டுதான் வாயில வரும். அதால ஒருசந்ததி முந்தியதாகக்கூடச் சொல்லலாம்.

எங்கட சொந்தத்துக்க ஏதாவது விசேசமெண்டா குறைஞ்சது ஓர் இரவெண்டாலும் எல்லாரும் அந்தவீட்டில தங்கிறது வழக்கம். எத்தினை நாளெண்டது விசேசங்களைப் பொறுத்து மாறுபடும். பெரும்பாலும் எல்லாரும் ஒரே கிராமத்திலதான் (சொந்த ஊரில இருக்கும் வரைக்கும்) எண்டபடியா இது வசதியாயுமிருந்திச்சு. பல நாட்கள் அப்பிடியான நேரங்களில சின்னாக்களின்ர பட்டாளம் பெரிசா இருக்கும். விளையாட்டும் கும்மாளமுமாய்ப் பொழுது போகும். அந்த நாட்களில இரவுச்சாப்பாடும் அதற்கடுத்த நாள் காலைச்சாப்பாடும் பெரும்பாலும் **கவளம்** தான். அண்டைக்கு மத்தியானத்தான் கறி, சோறு எல்லாத்தையும் பிரட்டி, உருண்டையாத் திரட்டி, ஒவ்வொருவரும் வளமான கையில ஏந்திச் சாப்பிடுறதுதான் கவளம். அனேகமா அதுக்குள்ள இறைச்சியும் பருப்பும் கட்டாயமிருக்கும். மற்றக்கையில அப்பளப்பொரியலோ மிளகாய்ப்பொரியலோ இருக்கும்.

இரவு விளையாடிக்கொண்டிருக்கிற நேரத்தில எட்டரை - ஒன்பதுக்கு, "சின்னாக்கள் எல்லாரையும் சாப்பிட வரட்டாம்" எண்டொரு சத்தம் வரும். நாங்கள் உடனடியாக ஒன்றுகூடிவிடுவதில்லை. விளையாட்டின் சுவாரசியத்தைப் பொறுத்து அது மாறுபடும். பிறகு நாலைந்து வெருட்டல்களுக்குப்பிறகு எல்லாரும் வந்து விறாந்தையில் குந்துவோம். அப்ப ரெண்டொருபேர் - அனேகமா விடலைப்பருவத்தில இருக்கிறவை, வந்து குந்தப் பஞ்சிப்படுவினம். தாங்கள் சின்ன ஆக்கள் இல்லையெண்ட நினைப்போட இருப்பினம். பிறகு நாலு நக்கல் வேண்டிக்கொண்டு வந்திருப்பினம்.

தனிய சின்னாக்கள் மட்டும்தான் எண்டில்ல, பெரிய ஆக்களும் சிலவேளை வந்து கவளத்துக்குக் குந்துவினம். எப்பிடியும் பதினைஞ்சு பேர் ஒரு பந்திக்கு வந்திடுவினம். பந்தியெண்டாப்போல வரிசையா இருக்கிறேல. கும்பலா இருப்பம். குந்திலயோ, குத்தியிலயோ இருக்கலாம். எழும்பிவந்து கவளத்தை வாங்கிக்கொண்டு போனால் சரி. இந்தக் கவளத்தைத் திரட்டித்தாறது எங்கட 'சூட்டியம்மா'தான் ("சூட்டியம்மம்மா" தான் சரியான சொல் எண்டாலும் நடைமுறையில நான் கூப்பிட்ட சொல்லையே இனி வாற இடங்களில பாவிக்கிறன்). நானறிய சூட்டியம்மா தவிர்ந்து வேற ஆக்கள் இப்பிடியான நேரங்களில கவளம் திரட்டி நான் பார்த்ததில்லை. அவதான் கவளம் திரட்ட வேணுமெண்டது எழுதப்படாத விதி. அவவுக்குப் பெரிய உடம்பு. பெரிய சருவச்சட்டியில எல்லாத்தையும் குழைச்சுக் கொண்டு வந்து இருந்தாவெண்டா எல்லாரும் சாப்பிட்டு முடியத்தான் எழும்புவா. இப்பவும் அவ குந்தியிருந்து கவளம் திரட்டுறது மனசுக்க நிக்குது.

கவளத்தின்ர அளவு ஆக்களுக்கேற்ற மாதிரி மாறுபடும். சூட்டியம்மா ஆகப்பெரிசா திரட்டிற கவளம் ஒருநேரச்சாப்பாட்டுக்குக் காணும். நாங்களெல்லாம் வேலியில நிக்கிற பூவரசில நல்ல பெரிய இலையாப் பாத்துப் பிடுங்கி அதைக் கையில வைச்சு அதிலதான் கவளம் வாங்கிச் சாப்பிடுறது வழக்கம். கவளம் கொஞ்சம் ஈரப்பதனா இருந்தா விரல் இடைவெளியளுக்கால ஒழுகும் எண்டதால இப்படியொரு ஏற்பாடு. ஆனா வடிவாச்சாப்பிட்டா கைகழுவ வேண்டிய தேவையிராது. என்ர ஞாபகத்தில பூவரசமிலையும் கவளமும் பிரிக்க முடியாதவை.

**************************************
கவளம் திரட்டிச் சாப்பிடுறது மிக அலாதியானது. நான் நாளாந்தம்கூட கவளம் திரட்டிச் சாப்பிட்டிருக்கிறேன். விடுமுறை நாட்களில் அம்மம்மா வீட்டில் எனக்கென்றே பழங்கறியும் சோறும் இருக்கும். ஒரு பிரட்டுப் பிரட்டி அம்மம்மா தாற கவளத்தை, சுட்ட 'சீலா'க் கருவாட்டோடை சாப்பிட்ட சுகம் தனி.
*************************************

இடம்பெயர்ந்து மானிப்பாய் வந்திருந்தோம். வந்த புதிதில் இரவு நேரத்தில் மத்தியானத்தான் சோறு கறிகளைப் பிரட்டி கவளமாக அம்மா தர, அப்பளப் பொரியலோடு சாப்பிடுவது வழக்கம். இது, அம்மாவுக்குச் சமைக்கப் பஞ்சியெண்டதால இல்லை. அது எங்களுக்குப்பிடிச்சிருந்திச்சு. அப்ப நானும் தங்கச்சியவையும் பக்கத்து வீட்டுக்காரரோட இரவு முத்தத்திலயிருந்து கதைக்கிறது வழக்கம். ஒருநாள்,

"இரவு என்ன சாப்பாடு?" எண்டு கேட்டீச்சினம்.
"கவளம்" எண்டு தங்கச்சி சொன்னாள்.
அடுத்த இரவும் அதே கேள்வி - அதே பதில்.

அடுத்த நாள் காலமை எங்கட அம்மாவிட்ட அந்த வீட்டுக்கார அம்மா வந்தா.
"இஞ்ச... நிங்கள் செய்யிற அந்த இரவுச்சாப்பாடு எப்பிடிச் செய்யிறதெண்டு ஒருக்காச் சொல்லித்தாறியளே?"
"என்ன சாப்பாடு?"
"அதுதான் கவளமோ... கிவளமோ..."

அம்மாவுக்கு அப்பதான் பிரச்சினை விளங்கீச்சு. பிறகு அவைக்கு விளங்கப்படுத்தினா. கவளம் எண்ட சொற்பாவனை எல்லா இடத்திலயும் இல்லையெண்டது அப்பதான் எனக்கு விளங்கீச்சு.
*************************************

நீண்டகாலத்தின்பின் சொந்தக்காரர் பலர் சந்தித்த ஒரு கொண்டாட்டமது. 2004 ஆம் ஆண்டின் தொடக்கம். கொழும்பு தொடக்கம் பல இடங்களிலிருந்தும் குடும்பத்தோடு எல்லாரும் யாழ்ப்பாணம் வந்திருந்தார்கள். அதற்கு முன் பார்த்திராத பல முகங்கள். மழலைப் பட்டாளங்களை இன்னாரின் பிள்ளைகள் என்று அறிமுகப்படுத்தினார்கள். பத்துவருடத்தில் புதிதாக வந்த பல சொந்தங்களை அப்போதுதான் பார்த்தேன்.
வழமைபோலவே இரவும் வந்தது.

"பவளம் மாமி எல்லாரையும் சாப்பிட வரட்டாம்"
என்று 3 வயதுப் பிள்ளையொன்று எல்லோரையும் அழைத்தது.
"யாரது பவளம் மாமி? எனக்குத் தெரிந்து யாருமில்லையே? "
என்று நினைத்தபடி முற்றத்துக்கு வருகிறேன். அங்கே அதே சூட்டியம்மா சருவச்சட்டியோடு கவளம் திரட்டியபடி. அவவைச் சுத்தி சின்னப் பட்டாளமொன்று. அப்பதான் விளங்கிச்சு. அச்சிறுமி சொன்னது 'பவளம் மாமி' இல்லை, "கவளம் மாமி". சூட்டியம்மாவுக்கு, 'கவளம் மாமி' எண்டே பேர் வச்சிட்டுதுகள்.

சிலர் கையில Lunch sheet வைத்து அதில கவளத்தை வேண்டிச்சாப்பிட்டினம். அவையளில ஒரு பிரச்சினையுமில்லை. ஏனெண்டா பூவரசமிலை பறிக்க வேலியில்லை. அது சுத்துமதிலாகியிருந்திச்சு. இப்பிடி பட்டாளமாயிருந்து சூட்டியம்மாவிட்ட கவளம் வாங்கிச் சாப்பிட்டு ஏறத்தாள பத்து வருசமாகியிருந்திச்சு.
அண்டைக்கு நானும் ஆசைதீரக் கவளம் திரட்டிச் சாப்பிட்டன்.

கவளத்தின் அளவோ சுவையோ, திரட்டித்தரும் சூட்டியம்மாவோ, அவ குந்தியிருக்கிற நிலையோ எதுவுமே மாறவில்லை. கையிலே பூவரசமிலைக்குப் பதிலாக Lunch sheet. அவ்வளவுதான்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


நோவா விட்ட காகம்.

ஒருவனை அல்லது ஒருத்தியை ஏதாவதொரு வேலையாய் அனுப்பி, அந்நபர் எங்காவது "மிலாந்தி"க்கொண்டு நின்றால் அவர்களைக் குறிக்க ஒரு சொற்றொடர் ஈழத்தில் - குறைந்தபட்சம் யாழ்ப்பாணத்தில் பாவிக்கப்படுகிறது. அதுதான் மேற்சொன்ன "நோவா விட்ட காகம்".

இத்தொடர் மத பேதங்களின்றி எல்லாராலும் பயன்படுத்தப்படுவது குறித்து முதலில் ஆச்சரியப்பட்டேன்.
சரி. அதென்ன 'நோவா விட்ட காகம்'?

விவிலியத்தில் நோவா என்ற பாத்திரத்தை வைத்து ஒரு கதை உண்டு. அதுபற்றி சிறில் சுருக்கமாக எழுதியுள்ளார். இங்கே விவிலியத்தைத் தாண்டிய ஒரு கதையில், நோவா வெள்ளம் வடிந்துவிட்டதா என்பதை அறிய முதலில் பறக்க விட்டது ஒரு காகத்தைத் தானாம். பறந்த காகம் சேதி சொல்லத் திரும்ப வரவேயில்லை. அது பிணங்களைக் கண்டதும் அங்கேயே குந்திவிட்டது போலும். காகம் வரும்வருமென்று காத்திருந்து ஏமாந்த நோவா பின்புதான் புறாவைப் பறக்கவிட்டாராம். அது பின் ஒலிவ் கிளையுடன் வந்து சேர்ந்ததாக அக்கதை தொடரும்.

காகத்தை அனுப்பிவிட்டுக் காத்திருந்த நோவாவின் நிலைதான், ஏதாவது வேலையாக ஒருவரை அனுப்பிவிட்டுக் காத்திருப்பவர்களினதும். குறிப்பிட்ட நேரத்துக்குள் அவர் வரவில்லையென்றால், அவர்தான் "நோவா விட்ட காகம்".

சின்ன வயசில் நானுட்பட நிறையப் பேர் இந்தச் சொற்றொடரால் திட்டப்பட்டிருப்போம். உங்களில் யாருக்கேனும் இப்படித் திட்டு வாங்கியது ஞாபகமிருக்கா?
இதே உணர்வை வெளிப்படுத்தப் பாவிக்கப்படும் வேறு சொற்றொடர்கள் இருக்கா? ("கப்பல் பார்க்கப்போன சேவகன்" கதையைச் சொல்லாதீர்கள். அதுவேறு இதுவேறு.)
அல்லது இதே சொற்றொடருக்கு வேறேதும் கதைகளிருக்கா?
தமிழகத்தில் இச்சொற்றொடர் இருக்கா?


எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, February 15, 2006

காதலர் தினத் தகவல்கள்

"காதலர் தினம்-சொல்லக் கூடிய சில தகவல்கள்"
-.சபேசன் (அவுஸ்திரேலியா)-

Valantine's Day என்று தற்போது அழைக்கப்பட்டு வருகின்ற "காதலர் தினம்" இன்றைய காலகட்டத்தில் நன்கு வணிகமயப் படுத்தப்பட்ட பிரபல்யமான ஒரு சமுதாயச் சடங்காக வளர்ந்து வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. காதலர் தினத்துக்குரிய வாழ்த்து அட்டைகள் மட்டும் சுமார் ஒரு பில்லியனுக்கு மேல் விற்பனையாகி வருவதாக அறிகிறோம். இந்த 2006 ஆம் ஆண்டு இந்த விற்பனை மேலும் அதிகரித்தால் அதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. இந்த ஒரு பில்லியன் வாழ்த்து அட்டைகளில் 85 சதவீதமானவற்றைப் பெண்களே வாங்குகின்றார்கள் என்பது ஓர் உபரியான தகவல்.

Valantines தினம் எவ்வாறு ஆரம்பமானது என்ற ஆய்வில் இறங்கினால், பலவிதமான தகவல்களை நாம் காணக்கூடியதாக உள்ளது. இவற்றில் பல உறுதிப்படுத்தப்படாமல் செவி வழித் தகவல்களாகவும் இருக்கின்றன. சில உறுதிப்படுத்தப்பட்டு ஆவணங்களாகவும் உள்ளன. இவை குறித்துச் சுருக்கமாக ஆய்வதோடு உலகின் பல இனங்களையும் நமது தமிழினம் உட்பட இக்காதலர் தினம் அல்லது இந்தக் காதல் எவ்வளவு பாதித்துள்ளது, அல்லது பாடுபடுத்தியுள்ளது என்பதையும் நாம் குறிப்பிட விழைகின்றோம்.

ரோம் நகரத்தில் கிறிஸ்துவுக்குப் பின்னர் மூன்றாம் நூற்றாண்டிளவில் மத நம்பிக்கையற்ற சடங்காகக் காதலர் தினம் உருவாகியது என்று பலர் கருதுகின்றார்கள். ஆட்டு மந்தைகளையும் அவைகளின் இடையர்களையும் தொடர்ந்து ஓநாய்கள் தாக்கி வந்தமையால்- இந்த இடையர்களின் நல்வாழ்வு கருதி ஒரு சடங்கு மேற்கொள்ளப்பட்டு வந்தது. மணமாகாத இளம் பெண்களின் பெயர்களை தனித்தனியே சீட்டுகளில் எழுதி ஒரு பெட்டியில் இட்டு ஒவ்வொரு இளைஞனும் தனக்கென ஒரு சீட்டை எடுப்பான். தேர்ந்தெடுக்கப்படுகின்ற இளம்பெண்கள் தம்மைத் தேர்ந்தெடுத்த இளைஞர்களுடன் ஓர் ஆண்டு காலம் சேர்ந்து வாழ்வார்கள் இந்த சடங்கு பெப்ரவரி மாத மத்தியில் நடைபெற்று வந்தது.

இந்த நடைமுறையைப் பின்னர் கிறிஸ்தவ தேவாலயங்கள் மாற்றியமைத்து சீட்டுக்களில் இளம் பெண்களின் பெயர்களுக்கு பதிலாக புனிதர்களின் பெயர்களை இட்டு இப் புனிதர்களின் பெயர்களை தெரிவு செய்யும் இளைஞர்கள் அப்புனிதர்களைப் போலவே வாழ வேண்டும் என்று விதிமுறையை கொண்டு வந்தன. இந்தப் புதுமுறை வெற்றி யளிக்கவில்லை.

Valantine என்ற பெயர் வந்ததற்குச் சுமாராக ஏழு கதைகள் உள்ளன. பின்னாளில் இந்த ஏழு கதைகள் அல்லது சம்பவங்கள் ஒரு கதையாக உள்வாங்கப்பட்டிருக்கலாம் புனித வலண்டைன் என்கின்ற கிறிஸ்தவ பாதிரியார் செய்து வந்த பிரசாரம் காரணமாக மக்கள் இராணுவத்தில் சேரவேயில்லை என்றும் இதனால் கோபமுற்ற சக்கரவர்த்தி கிளோடியஸ் வலன்டைன் பாதிரியாரை சிறையில் அடைத்ததன் விளைவாக சிறையில் வலன்டைன் பாதிரியார் இறந்தார் என்றும் அறியப்படுகின்றது. பாதிரியார் இறந்த விதம் குறித்தும் பல உபகதைகள் உண்டு. வலன்டைன் பாதிரியார் பல காதலர்களுக்கு துணை நின்று அவர்களுடைய காதலை நிறைவேற்றி வைத்தபடியால் அவர் காதலர்களின் அன்புக்குரிய பாதிரியாராக அறியப்பட்டார். பின்னளில் புனித வலன்டைன் தினம் காதல் தினமாக அறியப்பட்டது.

இதேவேளை பெப்ரவரி 14 ஆம் திகதியில்தான் பறவைகள் இனவிருத்தியல் ஈடுபட ஆரம்பிக்கின்றன என்று பொதுவாக ஐரோப்பியர்கள் நம்புவதுண்டு. இது குறித்துக் கவிதைகள் பலவும் உண்டு. தவிரவும் Saint Valantine's தினம் குறித்து சேக்ஸ்பியரும் குறிப்பிடுகின்றார்.

சீனர்களின் பண்பாட்டில் கூட காதலர் தினம் முக்கிய இடம் வகிக்கின்றது. The Night of Seven என்ற அழைக்கப்படும் இத் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏழாம் மாதம் ஏழாம் திகதியன்று கொண்டாடப்படுகின்றது. ஜப்பானியர்;களின் பண்பாட்டில் சூரியக் காலக் கணக்கின்படி ஜூலை ஏழாம் திகதியன்று காதலர் தினம் சற்று வித்தியாசமான முறையில் கொண்டாடப்படுகின்றது. பிரேசில் நாட்டில் ஆண்நண்பர் பெண்நண்பர் என்ற பெயரில் ஜூன் 12 ஆம் திகதி காதலர் தினம் கொண்டாடப்படுகின்றது. கொலம்பியா நாட்டின் செப்டெம்பர் மாதத்து மூன்றாவது வெள்ளிக்கிழமையிலும் நட்பு மற்றம் காதலர் தினம் என்ற பெயரில் காதல் தினம் கொண்டாடப்படுகின்றது.
இத்தகவல்கள் எடுத்துக்காட்டாக தரப்படுகின்றன.

இவையெல்லாம் இருக்கட்டும். தமிழர் வாழ்வில் "காதலர் தினம்" என்ற ஒன்று தேவையா? அல்லது தமிழர் வாழ்வில் காதல் என்ற ஒன்று இல்லையா? என்று விதவிதமாகக் கேட்போரையும் சற்றுக் கவனிப்போம்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் காதலர் தினத்தைப் பழித்தும், இகழ்ந்தும் பேசி வருவதோடு அது வெள்ளைக்காரனின் பண்பாடு என்று ஒதுக்கித் தள்ளுவதையும் இன்று நாம் பார்க்கின்றோம். காதலர் தினம் உண்மையில் மேல்நாட்டுப் பண்பாடா? தமிழன் எப்போதும் பேசித்தான் திருமணம் செய்தானா? தமிழனுக்கும் காதலுக்கும் காத தூரமா? என்றெல்லாம் கேள்விகள் எம்மவர் மனதில் எழுந்து கொண்டுதான் உள்ளன.

உண்மையைச் சொல்லப் போனால், காதல் விடயத்தில் காதலர் தின விடயத்தில் மேல்நாட்டவனுக்கு தமிழன் அப்பனல்ல, பாட்டனுமாவான். அந்த அளவிற்கு காதல் விடயத்தில் புகுந்து விளையாடியவன் தொல்தமிழன். சங்ககால இலக்கியங்களில் சிலப்பதிகாரத்திலும் ஏன் தொல்காப்பியத்திலும் காதலும் காதல் மணமும் எடுத்தாளப்பட்டுள்ளன. இந்தக் காதலர் தினத்தை ஒரு சாட்டாக வைத்து எம் பழம் தமிழர் மரபை நாமும் திரும்பிப் பார்ப்போம்.

தமிழ் மொழிக்கே உரிய சிறப்பான பொருள் இலக்கியம் அகம் - புறம் என்கின்ற இரண்டு தனிக்கூறுகளைக் கொண்டது. இந்த இரண்டு திணைகளைப் பற்றிக் கூறுகின்ற பொருள் இலக்கண இலக்கிய நூல்கள் தமிழ் மொழி தவிர உலகின் வேறு எந்த மொழியிலும் காண முடியாது. இந்தப் பொருள் இலக்கண இலக்கிய நூல்கள் தமிழரின் சமுதாய வாழ்வை அணுகி நுணுகி ஆய்ந்து எழுதப்பட்டுள்ளன.

தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் அகம் புறம் குறித்து வரையறுத்துக் கூறுகின்றார். அகம் பற்றிக் கூறும் போது "ஒத்த அன்பான ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம்..." என்றுதான் அவர் ஆரம்பிக்கின்றார். சமுதாயத்தில் ஒருவனும் ஒருத்தியும் வாழும் வாழ்வில் காதல் - கணவன் - மனைவி - உறவு என்பன அகம் எனப்படும். குடும்பத்தின் புறம் சார்ந்த கடமைகளான கொடை வீரம் போர் ஆட்சி என்பன புறம் எனப்படும். அகப்பொருளின் பாடு பொருள் ஆண், பெண் என்னும் இருபாலாரது காமம் ஆகும். காமம் என்பது உலக உயிர்களுக்கெல்லாம் உரியது. உடைமையது இன்பம் தருவது. இது குறித்துத் தொல்காப்பியனார் இவ்வாறு சொல்கின்றார்.

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானர்ந்து வருஉம் மேவற்றாகும்.
-தொல்காப்பியம் பொருளதிகாரம் - நூற்பா 27

உலக மக்களின் இனப்பெருக்கத்திற்கும் உலக வாழ்வின் பண்பு மேற்பாட்டிற்கும் வழி வகுக்கின்ற அகப்பொருள் சங்க இலக்கியப் பாடல்களில் சிறப்பிடம் பெறுகிறது. 2,381 சங்க இலக்கியப் பாடல்களில், 1,862 பாடல்கள் அகத்தினைப் பற்றிக் கூறுகின்றன. சங்க இலக்கியப் பாடல்களைப் பாடிய 473 புலவர்களில் 378 புலவர்கள் அகப் பொருளைப் பாடியவர்கள் ஆவார்கள். இதன் மூலம் சங்கக் காலத்துச் சான்றோர் அகப்பொருள் இலக்கியத்திற்கு தந்த சிறப்பையும் முதன்மையையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது. மகன் - தாய் - அண்ணன்- தம்பி ஆகியோரிடத்து ஒவ்வொரு நிiயினரும் அன்பு என்னும் காதல் காட்டப்படுகின்றது.

குறுந்தொகையில் இக்காதல் தலைவன் தலைவியிடத்தும், தலைவி தோழியிடத்தும், செவிலி நற்றாயிடத்தும், தலைவன் பாங்கனிடத்தும், ஒருவர் மற்றொருவரிடத்தும் காட்டுகின்ற அன்பின் விளக்கமாக அமைந்துள்ளது.
தொல்காப்பியத்தில் வருகின்ற கற்பு என்கின்ற இடங்களை ஆராய்ந்தால் அது இல்லறம் என்கின்ற பொருளையே குறிக்கின்றது என ஆய்வாளர்கள் கூறுவார்கள். பத்துவிதமான திருமணங்கள் சங்க காலத்தில் நடந்ததாக நாம் அறியக்கூடியதாக உள்ளது.

1. களவுமணம்
2. தொன்றியல் மரபின் மன்றல்
3. பரிசல் கொடுத்து மணத்தல்
4. சேவை மணம்
5. திணைக் கலப்பு மணம்
6. ஏறு தழுவி மணமுடித்தல்
7. மடலேறி மணமுடித்தல்
8. போர் நிகழ்த்தி மணமுடித்தல
9. துணல்கையாடி மணத்தல்
10. பலதார மணம்

இதில் களவு மணம் குறித்துச் சற்றுக் கவனிப்போம்.
களவியல் குறித்த பொருள் விளக்கச் சிந்தனை ஒரு நீண்ட பரிணாம வளர்ச்சியின் ஊடாகவே நிகழ்ந்துள்ளது. தமிழ் இலக்கண வரலாற்றில் தொல்காப்பியம் தொடங்கிச் சோழர் கால உரையாசிரியர் வரை இந்த சிந்தனைப் போக்கின் பரிணாமத்தை அறிந்து கொள்ள முடியும்.
தொல்காப்பியர் தமது நூற்பா ஆக்கத்தினை இரண்டு வழிகளில் மேற்கொண்டுள்ளார். முதலாவது-முன்னோர் கருத்தை ஏற்று மொழிவது. இரண்டாவது தாமே படைத்து மொழிவது. களவியலைப் பொறுத்தவரையில் அதன் பொருள் விளக்கத்தை தொல்காப்பியர் தானே படைத்து மொழிந்துள்ளார். ஆகவே தொல்காப்பியர் காலத்து முந்திய களவியல் பற்றிய பொருள் விளதக்கத்தை இப்போது அறிய இயலாமல் உள்ளது.

களவுக்காதல் வாழ்வை பலதுறைகளாக அமைத்துச் சுவைபட சங்கப்புலவர்கள் பாடியுள்ளார்கள். காமம் நுகர்வதற்குரிய குமர்ப் பருவமடைந்த எங்கோ பிறந்த தலைவனும் தலைவியும் எதிர்பாராத விதத்தில் ஓரிடத்தில் எதிர்ப்பட்டு ஒருவரிடத்தில் ஒருவர் அன்பு கொண்டு காதல் கொள்வதனை இயற்கைப் புணர்ச்சி என்று அக இலக்கணம் கூறுகின்றது. இவ்வாறு சந்தித்து மனமொன்றிய காதலர்கள் மீண்டும் சந்திக்க வேட்கை கொண்டு முன்பு சந்தித்த இடத்தில் சந்தித்து மகிழ்ச்சி கொள்வது இடந்தலைப்பாடு என்று அழைக்கப் பட்டது. அந்தக் களவுக்கூடல் தலைவனின் தோழனின் உதவியால் நடைபெறும் என்றால் அது "பாங்கற் கூட்டடம்" என்றும் தலைவியின் தோழி வாயிலாக நிகழுமென்றால் அது "பாங்கியற் கூட்டம்" என்றும் வழங்கப்பட்டது.

வேட்கை மிகுதியால் களவுக் காதலர்கள் இரவிலும் பகலிலும் தோழியின் துணையால் சந்தித்து அளவாவுதல் உண்டு. இவ்வாறு பகலில் நடைபெறும் காதலர் கூடல் பகற்குறி என்றும் இரவில் நடைபெறும் களவுக் கூடல் இரவுக்குறி, என்றும் வழங்கப்பட்டது.

இங்கே ஒரு விடயத்தை நேயர்கள் கவனிக்க வேண்டும். சங்க காலத்து களவுக்காதல் கற்பு வாழ்விற்கு ஒரு வாயிலாக அமைந்தது. கற்பு என்பதற்கு இல்லறம் என்ற பொருளையே தொல்காப்பியர் சொல்வது இங்கு கவனிக்கத் தக்கது. ஆகவே அக் களவுக்காதல் புனிதமனது. சங்கக் காலச் சமுதாயம் களவுக் காதலை மதித்தது. போற்றியது. கற்பு வாழ்வுக்கு அதாவது இல்லற வாழ்விற்கு வழி வகுத்துக் கொடுத்தது. சங்கக் காலக் களவுக்காதலின் நெறியை குறித்து "களவொழுக்கம் தூயது, களவுக் காதலர் மனமாசற்றவர், மணந்து கொள்ளும் உள்ளத்தவர், களவுக்காதல் வெளிப்பட்ட பின்னரும் வாழ்பவர்" என்று டாக்டர்-வ. சு. ப. மாணிக்கம் அவர்கள் கூறியதை இங்கே நினைவு கூறுகின்றோம்.

களவுக் காதலர் மணம் புரிந்து இல்லறம் என்னும் நல்லறம் இனிது நடத்தலைப் பற்றிக் கூறுவது கற்பொழுக்கம் ஆகும். அகத்தினை கூறும் தூய்மையான அறங்களுள் தலையானது களவு வழிப்பட்ட கற்பு வாழ்க்கையாகும்.

காதல் என்பது இன்பத்துள் பேரின்பம், உணர்ச்சியுள் பேருணர்ச்சி, ஆற்றலுள் பேராற்றல், அடிப்டையுள் பேரடிப்படை எல்லோருக்கும் உரியது. நட்பினுள் இருபாலாரையும் இணைப்பது என்பதைச் சங்கத் தமிழர்கள் அறிந்திருந்தார்கள்? என்று ஆய்வாளர் டாக்டர் -வ.சு.ப.மாணிக்கம் அவர்கள் குறிப்பிடுகின்றார்.

காதலால் ஒருமித்து சேர்ந்து வாழ்ந்தவர்களில் மத்தியில் பிரச்சனைகள் ஏற்பட்டு பிரிவு ஏற்பட்டபோது அதனை தடுப்பதற்காக பின்னாளில் திருமணம் என்ற சடங்கு அறிமுகம் படுத்தப்பட்டது. அதனை தொல்காப்பியர் கீழ்வருமாறு கூறுகின்றார்.

'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
அய்யர் யாத்தனர் கரணம் என்ப"

இங்கே அய்யர் என்று சொல்லப்படுபவர்கள் நீங்கள் நினைப்பது போல் பிராமணர் அல்லர்! சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக பெரிவர்களாக சான்றோர்களாக அறியப்பட்டவர்களை ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களை அய்யன் என்று தொல்காப்பியர் காலச் சமுதாயம் அழைத்தது. அதேபோல் கரணம் என்பதற்கு அர்த்தம் திருமணச் சடங்காகும்.

அதாவது காதல் வயப்பட்டு ஒன்றாக வாழ்ந்தவர்கள் வாழ்வில் பிரிவு வரக்கூடாது என்பதற்காக பின்னாளில் ஊர்கூடி திருமணச்சடங்கை நடாத்தியது. அதன் காரணமாக இல்வாழ்க்கையில் இணைந்தவர்கள் சமுதாயத்திற்கும் பொறுப்பாகவும், அச்சமுதாயம் அவர்களுக்கு பொறுப்பாகவும் இருக்க்pன்ற சூழ்நிலை உருவாகியது. எனவே களவு முறையில் தோன்றும் பொய்யையும் வழுவையும் ~கரணம் தடுக்கும் என்றும் தடுப்பதற்காகவே கரணத்தை அமைத்தனர் என்னும் கட்டுப்பாட்டுத்தன்மை சமிழ் சமுதாயத்தில் பின்னர் உருவாயிற்று.

தமிழன் காதலில் திளைத்த பின்பே இல்லறத்தை நாடியவன் என்பதற்கு காமத்துப்பால் எழுதிய திருவள்ளுவரும் சாட்சிக்கு நிற்கின்றார். அறத்துப்பாலையும், பொருட்பாலையும் விட காமத்துப்பாலில் நளினமும் இனிமையும் கூட இருப்பதை நேயர்கள் அறிவீர்கள். நறுக்குத் தெறித்தாற்போல் காதலைப் பற்றியும் காமத்தைப் பற்றியும் வள்ளுவர்; கூறினாலும் அதிலிருக்கும் பொருளோ எல்லை கடந்தாக உள்ளது.

"யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்"
-திருக்குறள் 1094

என்ற குறளில் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் நோக்கெதிர் நோக்குகின்றார்கள். தலைவியோ தனக்கே உரிய நாணத்தின் காரணமாக நிலத்தை நோக்கினாள். தலைவன் பாராதவிடத்து தலைவி அவனை நோக்கி மெல்லப் புன்முறுவல் செய்தாள். தலைவனுக்கு தனது உள்ள-விருப்பை தனது மலரும் முகத்தினால் வெளிப்படுத்தினாள். தலைவனும் தலைவியிடம் தோன்றிய புகுமுகம் புரிதல் மெய்ப்பாட்டால் அவள் தன்னை மனப்பூர்வமாக விரும்புகின்றாள் என்பதனை அறிந்து கொண்டான் என்று பார்வையினூடே காதலை படர விடுகின்றார் வள்ளுவர்.

வள்ளுவர் சுட்டிக்காட்டுகின்ற இன்னுமொரு தலைவியோ வேறு விதப் பார்வையினால் தன் காதலை வெளபபடுத்துகின்றாள். தலைவனை நேரடியாக நோக்காது வேறொரு பொருளை நோக்குவதுபோல் முகம் காட்டிக்கொண்டு ஒருவிழிப்பார்வையால் தலைவனை நோக்கித்தன்னுள்ளே மகிழ்ந்தாள் என்பதனை

'குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒரு கண்
சிறக்கணித்தாள் போல நகும்."
- குறள் 1,095
என்ற குறள் மூலம் வள்ளுவர் அழகாக சொல்லி காதல் இன்பத்தை வெளிக்கொண்டு வருகிறார்.

பண்டைத் தமிழனின் காதல் வாழ்க்கை முறை பின்னர் ஆரியர் ஆக்கிரமிப்பின் பின்னர் மறையத் தொடங்கியது பெண்ணடிமை மிக்க சடங்குகளும் வாழ்க்கை முறைகளும் தமிழன் வாழ்வைச் சீரழிக்க ஆரம்பித்தன. பண்டைத் தமிழர் காலத்தில் காதல் எவ்வவளவு வலுவாக இருந்தது என்பதற்கு ஒரு காரணத்தை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். தமிழர்களுக்கு எதிராக எழுதப்பட்ட இராமாயணத்தை தெள்ளு தமிழில் தேனூறும் சொல்பரப்பி கம்ப நாடான் மொழி பெயர்த்தான். வால்மீகி ராமாயணத்தில் இல்லாத ஒரு காட்சியை கம்பன் தனது கம்பராமாணயணத்தில் காட்டுகின்றான்.

வில்லை முறித்து சீதையை மணப்பதற்காக ராமன் வருகின்றான். வில்லை முறிக்கின்றான். சீதையை மணக்கின்றான். இது வால்மீகி ராமாயணம். கம்பனின் இராமாயணத்திலோ வில்லை முறிக்க வரும் இராமனை மேல் மாடத்திலிருந்து சீதை பார்க்கின்றாள். இராமனும் அவளை நோக்குகின்றாள். இருவரது கண்களும் ஒருவரை ஒருவர் முதல் தடவையாக பார்க்க்pன்றன. காதல் வசப்படுகின்றன. உள்ளக் குறிப்புரைகளைக் கண்களால் பேசிக் கொள்கின்றன. ஒருவரது உள்ளத்தை ஒருவர் உள்ளம் ஈர்க்கின்றது. இராமன் உள்ளத்தில் சீதையும், சீதை உள்ளத்தில் இராமனும் குடிபுகுந்தனர். தமிழர் காதல் பண்பாட்டின் அடிப்படையான புதுமுகம் புரிதல் மெய்ப்பாடு இங்கே கம்பனால் காட்டப் படுகின்றது அதனை கம்பன் இவ்வாறு எழுதுகின்றார்.

'எண்ணரும் நலத்தினாள் இளையள் நின்றுழி
கண்ணொடு கண்ணினைக் கவ்வி ஒன்றையொன்று
உண்ணவும் நிலைபெறாமல் உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்".

'பருகிய நோக்கெனும் பாசத்தால் பிணித்து
ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால்
வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினர்"

- (கம்பராமாயணம் - பாலகாண்டம் செய்யுள் 590, 592)

தமிழன் காதலிக்காமல் திருமணம் செய்வதில்லை எனவே கம்பர் இராமயணத்தை தமிழாக்கி தமிழருக்குள் கொண்டு வரும்போது இப்படி இடையில் ஒரு காதல் காட்சியை புகுத்தி இராமன் சீதைத் திருமணத்தை ஒரு காதல் வீரத் திருமணமாக காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் அன்று அவருக்கு இருந்தது. இது தமிழரின் காதல் வாழ்விற்கு ஒரு எடுத்துக் காட்டல்லவா?

இன்று நாம் புலம் பெயர்ந்துள்ள வெளிநாடுகளில் காதல் அடையாளமாகக் கொடுக்கப்படும் மலர்கள் எம் தமிழர் வாழ்விலும் பெரும் பங்கு வகித்தன என்பதும் ஒரு வரலாற்று உண்மை தமிழ்நாட்டில் மலர்கள் மங்கையர் கூந்தலிலும், மனங்களிலும், இல்லங்களிலும் இன்றும்கூட முக்க்pய இடத்தை வகித்து வருகின்றன.

அன்புக்குரிய நேயர்களே!
தமிழனின் கடல்போன்ற காதல் வாழ்வைச் சொல்வதற்காக முக்குளித்து ஒரு துளியை மட்டும் இன்று சொல்ல முனைந்தோம். இந்தக் கட்டுரைக்கு சங்கக் காலப்பாடல்கள், தொல்காப்பியம், திருக்குறள், கம்ராமாயணம் போன்றவற்றோடு சங்க இலக்கியத்pல் காதல் மெய்பாடுகள், தொல்தமிழர் சமயம், குறுந்தொகை காட்டும் காதல்வாழ்க்கை போன்ற நூல்களும் உதவின. இது உங்கள் காதல் தீயை இன்னும் கொழுந்து விட்டெரியச் செய்யும் என்று நம்புகின்றோம்.

*********************************************
இது தமிழ்நாதத்தில் வெளிவந்த கட்டுரை.
நன்றி: தமிழ்நாதம்.
*********************************************

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, February 01, 2006

எலியுஞ் சேவலும் -பாகம் இரண்டு

நாலாங்காட்சித் தொடர்ச்சி......

முந்தைய பதிவுக்கு இங்கே செல்லவும்.

(சேவல் கொக்கரித்ததைத் தொடர்ந்து சேயெலி வெருண்டு தாயைக் கூப்பிட்டுக் கொண்டு ஓடுகிறது.)

சேயெலி:
ஓடிவாருவாயம்மா உள்ளங் கலங்குதம்மா
வாடி நடுங்குகின்றேன் வந்துபயம் தீருமம்மா
மேவி ஒருவனம்மா விண்ணதிரச் சத்தமிட்டான்
ஆவி அகத்ததோ புறத்ததோ அன்னையே வாரும்
(தாயெலி வந்து சேயெலியைத் தழுவிக்கொண்டு வினாவுகிறது).

தாயெலி:
அன்பு மிகுந்த என் செல்வா - என்ன
ஆபத்து நேர்ந்த தறிந்திடச் சொல்வாய்
என்பு முரிந்திட வோடி - இங்கே
இரக்கியே வந்தனை யேங்கியே வாடி

(சேயெலி தன்னைப் பயப்படுத்திய சேவலைப் பற்றி விவரிக்கிறது. *வினாவிசைக்குறி - கேள்விக்குறி.)

சேயெலி:
கொண்டையி லிரத்தந் தோய்ந்த
கூரிய வாளொன் றுண்டு
கண்டத்தி லிரண்டு கத்தி
கட்டியே தூங்கு மம்மா

சண்டைசெய் வீரன் போலச்
சடசட வென்ற டித்து
விண்டது பெரிய சத்தம்
மெய்ம்மறந் தறிவு சோர்ந்தேன்.

விடுவிடு என்றுகை தட்டி - அம்மா
*வினாவிசைக் குறிபோற் கழுத்தை வளைத்துக்
கொடுமைசெய் கூற்றுவன் போல - வந்து
கூவினதே யொரு பொல்லாப் பிராணி

அல்லாது போனாலென் அம்மா - நான்
அருமை யானவோர் தோழனைக் கண்டு
நல்லசல் லாபஞ்செய் வேனே - அதை
நாசப் படுத்திய தேயப்பி ராணி

(பூனையை அருமையான தோழனாகவும், அதனுடன் ஏற்படவிருந்த அருமையான நட்பை அந்தச் சேவல் கெடுத்துவிட்டதாகவும் புலம்புகிறது செயெலி)

(அதற்கு, தாயெலியின் பதில் இவ்வாறு அமைகிறது).
தாயெலி:
கண்மணி போன்ற மகனே - நீ
கண்டு பயந்ததனை நன்றுரை செய்யின்
வண்ண முடையசேவல் - ஒரு
வஞ்சகமு மில்லாநல்ல செஞ்சொற் சேவல்

மற்றைப் பிராணி மகனே! எம்மை
மறைவி லிருந்து பிடித்துண்டு மகிழும்
குற்ற முடைய பூனை - அதன்
கோலத்தினால் மயங்கல் சாலத் தவறே.

(தொடர்ந்து தாயெலி சேயெலிக்குப் பாடம் புகட்டுகிறது)
தாயெலி:
கண்மணி யனைய என்னரு மகனே!
உண்மகிழ் வாக உரைப்பது கேட்பாய்
வெளிப்புற வேடப் பொலிவினை நோக்கி
உள்ளகத் தெண்ணம் உரைத்திடப் போமோ

பொல்லா மறவன் புதரினில் மறைந்தும்
மெல்லெனப் பறவையை வீட்டுதல் போல
நல்ல வேடம் தன்னிலே மறைந்து
அல்லன செய்யும் மாந்தரும் உளரே;

கடுஞ்சொற் கூறி இனிமை பயக்கும்
நடுநிலை நண்பரும் பலருண் டதனால்
அகமும் புறமும் ஆராய்ந்து
தகுதி நண்பரைத் தான்கொளல் முறையே.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________