Wednesday, January 25, 2006

எலியுஞ் சேவலும்

இதுவொரு சிறுவர்க்கான இசைநாடகம்.

எழுதியவர் 'தங்கத் தாத்தா' சோமசுந்தரப் புலவர்.

சின்ன வயதில் எங்கள் வகுப்பில் இந்த இசைநாடகத்தைப் பயின்றபோது நான் தான் பூனை. பூனைக்குரிய பாட்டு இப்போதும் மனத்தில் பசுமையாகவே இருக்கிறது. பிறகேதோ காரணத்தால் மேடையேறாமலே போனது இவ்விசைநாடகம்.

நடிகர்கள்: தாயெலி, சேயெலி, பூனை, சேவல்

முதலாங் காட்சி
சேயெலி:

வெய்யிற் கொடுமையம்மா! மேனி வேர்க்குதம்மா!
பைய உலாவிவரப் பரிந்துவிடை தாருமம்மா!
பொல்லாத வெப்பமம்மா! பழுங்கி யவியுதம்மா!
மெல்ல உலாவிவர விரும்பிவிடை ஈயுமம்மா!
தாயெலி:
ஆசைமிகுந்த மைந்தா! அன்பான கண்மணியே!
மோசம் வரும்மகனே! முற்றத்திலும் போக வேண்டாம்.
பொல்லாத துட்டர்மைந்தா! புறத்தே பதுங்கிநிற்பர்
அல்லா தனபுரிவார் ஐயாநீர் போகவேண்டாம்.

சேயெலி:
ஆண்பிள்ளை நானலனோ! அன்னாய் பயமுனக்கேன்
வீண்பிள்ளை யாக்காதே விடையருளிச் செய்யுமம்மா
கும்பிட்டேன் அன்னையுனைக் குறிக்கேநீ மறிக்காதே
வெம்பிப் புழுங்குமிங்கு வெளியேபோய் வருவெனம்மா

தாயெலி:
மகனே! பெற்றமனம் பித்து: பிள்ளைமனம் கல்லு என்பதுபோலப் பிடிவாதமாய் நிற்கிறாய். சரி, நீ நினைத்தபடி,
போய்வருவாய் என்மகனே!
புத்தியுடன் பத்திரமாய்
நீதிரும்பு மவ்வளவும்
நின்றுவழி பார்த்திடுவேன் - போய்வருவாய்.

இரண்டாங் காட்சி
('தீராத விளையாட்டுப் பிள்ளை' என்ற பாடலின் மெட்டில் இதைப் பாடலாம்.)

சேயெலி:
தொங்கிச் சுவரிற் குதிப்பேன் - மிகத்
துரிதமாக ஓடித் துள்ளி மிதிப்பேன்.
அங்கு மிங்குமாக நடிப்பேன் - சுவைத்
தருந்து முணவை மணந்து பிடிப்பேன்

ஆனந்த மான வெளிச்சம் - மகிழ்
வாக வுலாவுதற் கணுகுமோ வச்சம்
தேனுந்து மாமலர் வாசம் - வரும்
சில்லென்று தென்றலும் மிகுந்தவுல் லாசம்

அடுக்களைப் புறத்திலே ஓடி - அங்கே
அப்பமும் வெண்ணெயு மருந்துவென் தேடி
எடுத்துக் கடித்துண்டு கொண்டு - மிக
இன்புறுவே னோடி யன்னையைக் கண்டு.

மூன்றாங் காட்சி

(வலியில் துடிதுடிக்கும் பூனை, அடித்தவளுக்குச் சாபம் கொடுக்கிறது. நாங்கள் நாடகம் பழகும்போது இந்த இடத்தில் யாருக்கும் தெரியாமல் புதிதாக நாலைந்து வரிசேர்த்திருந்தோம். அன்று அடிதடியில் பின்னியெடுக்கும் இரு ஆசிரியைகளை வைத்து எழுதப்பட்டிருந்தன அவ்வரிகள். மேடையேறாததால் யாருக்கும் தெரியாமலே போய்விட்டது (பத்துவயதில்) எங்கள் கலகம்.)

பூனை:
மாஆயோ - மாஆயோ - மாஆயோ
மாஆயோ.......
முள்ளெலும்பு நோக முதுகு மிகவலிக்க
உள்ளம் நடுநடுங்க ஓங்கி யடித்தாளே -மாஆயோ

மெத்த வலிப்பெடுக்க மேனி நடுநடுங்க
மத்தா லடித்தாளே! மனமிரங்கா மாபாவி - மாஆயோ
மெய்யொடிய மத்தால் வெடுக்கென் றடித்தவள்தன்
கையொடிந்து மெத்தக் கலங்காளோ மாபாவி - மாஆயோ

சேவல்:
புனையாரே! பூனையாரே! பத்திமிகக் கலங்கிப்
பாதிவிழி மூடிப் பாடுகிறீர் காரணமென்?
காலைநக்கி நக்கியிரு கண்ணுமுக முந்துடைத்து
வாலைக் குழைத்தனுங்க வந்த வருத்தமென்ன?

பூனை:
(அந்த வேதனையிலும் எவ்வளவு சுவாரசியமாக சம்பவத்தை விவரிக்கிறது பாருங்கள். மெட்டு: தீராத விளையாட்டுப் பிள்ளை.)
சட்டியிற் காய்ச்சிய பாலைத் - தோய்த்துச்
சமையற்காரி வைத்தாள் உறியதன் மேலே
எட்டிப் பரண்மேலே தாவிக் - குதித்
தேறினேன் உறியினில் இனிதாக மேவி

பார்க்கப் பார்க்கப் பசிமீறும் - பசும்
பாலின் மணத்தினால் வாய்மிக வூறும்
ஆர்க்குங் காணாமலங் கிருந்தே - வெகு
ஆனந்தமா யுண்டேன் அமுதொத்த விருந்தே

காண்பார்க ளென்று நினைத்தே - இரு
கண்களை மூடியென் நாவை நனைத்தே
மாண்பாக யானுண்ணும் போது - அங்கே
வந்தாளே அந்த மடைக்குல மாது

சத்தப் படாமலே வந்து - மேலே
தங்கி யருந்துங் களவினைக் கண்டு
மத்தா லடித்தாளே பாவி - உடல்
வலிக்குதே ஐயையோ! மறுகுதே யாவி

சேவல்:
ஐயா! களவு பொல்லாதது - இதை
அறியாது செய்ததால் வந்ததே தீது
மெய்யா யடாதுசெய் தோரே - மிக
வெம்பிப் படாது படுவார்கள் நேரே

பூனை:
பொல்லாது சூதொடு வாதும் - என்று
புத்தி சொல்லவந்தீர் போமினிப் போதும்
நல்லாய்ப் பசிக்குது காணும் - இனி
நானங்குப் போயிரை தேடுதல் வேணும்.

நாலாங்காட்சி
பூனை:

ஆகா! அங்கேயோர் எலி வருகிறது. அதை மெல்லப் பதுங்கியிருந்து பிடித்து உண்ண வேண்டும்.
(தனக்குட் பாடுகிறது)

எலியே நீ வருவாய் - எனக்
கிரையாகவே வருவாய்
நலியா தென்பசி நானுனைத் தின்னுவேன்
எலியே நீ வருவாய்

(பூனை எலியைப்பிடிக்கப் பாயப்போகும் நேரத்தில் சேவல் கூவுகிறது)

சேவல்:
கொக்கறொக்கோஓ கொக்க றொக்கோ கூஉ
மிக்கவெயில் இக்கணமே போஓஒ
விண்ணும் மண்ணும் மூடியிருள் வாஆஅ
கொக்க றொக்கோஒ கொக்கறொக்கோ கூஉ

(எலி பயந்து தாயைக் கூப்பிட்டுக்கொண்டு ஓடுகிறது)
-------------------------------------
அதன்பின் என்ன நடந்ததென்று அடுத்த பதிவிற் பார்ப்போம். உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.
-----------------------------------------


எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"எலியுஞ் சேவலும்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (26 January, 2006 01:30) : 

இன்னொரு 'இரைமீட்டலுக்கு' நன்றி வசந்தன். இப்போதும் இந்தப்பாடல் நினைவில் இருக்கிறது :-).
.....
சின்ன வயசிலேயே மற்ற ஆக்களுக்கு உம்மைப்பற்றித் தெரிந்துதான், பூனை வேசம் போட விட்டிருக்கினம் போலக்கிடக்கு. இந்தப் பாடலில் வந்த பூனையைப்ப்போல, நிஜ வாழ்விலும் எததனை பெண்களிடம் மத்தாலும், செருப்பாலும் அடிவாங்கினனீர் என்பது பக்கக்த்தில் இருந்த கன்னியர்மட பாடசாலைப் பெண்களுக்கே வெளிச்சம்!

 

said ... (26 January, 2006 08:02) : 

எமது 'தங்கத் தாத்தா'வின் பாடல்களை 'பதிவு'களாக வெளிக்கொணர்ந்தமைக்கு நன்றி.

 

said ... (26 January, 2006 10:38) : 

//பக்கக்த்தில் இருந்த கன்னியர்மட பாடசாலைப் பெண்களுக்கே //

அண்ணே,
அது பக்கத்தில இல்லையுங்கோ. தள்ளிக்கொண்டுபோய் ஒரு குச்சொழுங்கைக்குள்ள வச்சிட்டாங்கள். அந்த ஒழுங்கைக்குள்ள இறங்கினாலே சிங்கன் எங்க போறாரெண்டு தெரிஞ்சிடும். ஆக, ஆருமே 'றிஸ்க்' எடுக்க விரும்பிறேல. றோட்டிலதான் ஏதாவது சாத்தியப்படலாம். ஆனாலும் சுவாமிமார், சிற்றர் மாரின்ர கண்ணுக்கால தப்பிறது வலு கஸ்டம்தான்.

அதவிட அந்தநேரத்தில நான் 'வயசுக்கு வராததால' அவையிட்ட மத்தடி, செருப்படி வேண்டிற சந்தர்ப்பமும் கிடைக்கேல. நாலாம் வகுப்புக்குப்பிறகு, ரீயூசனுக்குப்போன இரண்டொரு மாதங்களைத் தவிர எல்லாப் படிப்புமே தனியாத்தான்.

நீங்களெல்லாம் குடுத்துவைச்சனியள். தும்புக்கட்டைக்குக்கூட சண்டைபோடுற பாக்கியம் எங்களுக்கெல்லாம் இல்லையே?

 

said ... (26 January, 2006 11:12) : 

This comment has been removed by a blog administrator.

 

said ... (27 January, 2006 00:01) : 

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சிறிதரன்.

 

said ... (27 January, 2006 08:06) : 

This comment has been removed by a blog administrator.

 

said ... (27 January, 2006 11:07) : 

நல்ல பதிவு.
அடுத்த பகுதி எப்பவரும்.

 

said ... (27 January, 2006 14:13) : 

வணக்கம் வசந்தன்

நமது ஈழத்துப் படைப்பாளிகளின் படைப்புக்கள், மற்றும் அவர்தம் குறிப்புக்கள் இணையத்தில் மிகக் குறைவு. நீங்கள் மற்றும் சிறீ அண்ணாவின் தமிழ் வலையின் மினி நூலகம் இந்த வெற்றிடத்தைச் சிறப்பாக நிரப்பிவருகின்றீர்கள்.
வாழ்த்துக்கள்.

 

said ... (27 January, 2006 23:23) : 

கானா பிரபா,
உதெல்லாம் அதிகமான சொல்.
ஈழத்துப்படைப்பை அறிமுகப்படுத்துவதற்கு நானேதும் செய்யவில்லை.

அனாமதேய நண்பரே,
நாளைக்கு அடுத்த பகுதியை இடலாமென்றிருக்கிறேன்.
கருத்துக்கள் எழுதியோருக்கும் நன்றி.

 

said ... (27 January, 2006 23:54) : 

தங்க தாத்தாவின் பாடல் மிகவும் அருமை.

தொடர்ந்து கொடுங்க.

 

said ... (28 January, 2006 16:52) : 

பரஞ்சோதி,
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 

said ... (29 January, 2006 13:20) : 

//ஈழத்துப்படைப்பை அறிமுகப்படுத்துவதற்கு நானேதும் செய்யவில்லை//
அடக்கமான பதில்:-)

வசந்தன், கைவீசம்மா கைவீசு என்ற சிறுவர் பாடலை இயற்றியது யாரென்று உங்களுக்குத் தெரியுமா?

 

said ... (09 February, 2006 00:54) : 

அன்புள்ள வசந்தன்,
நல்ல சுவையான சேதிகளை உங்களிடம்எதிர்பார்கிரேன்
அன்புடன்
தியாகு

 

said ... (16 February, 2006 10:29) : 

சிறிதரன்,
கைவீசம்மா கைவீசு பாடல் யாரெழுதியதென்று தெரியவில்லையே.
அனேகமாய் யாரென்றே தெரியாத நாட்டுப்புறப்பாடல்களைப் போலத்தான் இதுவும் செவிவழி வந்திருக்குமென்று நினைக்கிறேன்.

"சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு" பாட்டும்கூட இப்படிப்பட்ட தொட்டிற்பாடலேயென்று இளமுருகனார் சொல்லியுள்ளார்.

 

said ... (19 February, 2006 11:19) : 

இப்போது காலை 11.45. நாள் 19.02.2006.
இதற்கு மேலுள்ள பின்னூட்டம் இப்போதுதான் தமிழ்மணத்திரட்டியில் வருகிறது. ஏறத்தாள 3 முழுமையான நாட்களின்பின்தான் கடந்த பின்னூட்டம் திரட்டப்பட்டிருக்கிறது.
என்ன நடக்குது?

 

said ... (19 February, 2006 17:19) : 

//ஏறத்தாள 3 முழுமையான நாட்களின்பின்தான் கடந்த பின்னூட்டம் திரட்டப்பட்டிருக்கிறது. என்ன நடக்குது?//
மறுமொழி மட்டுறுத்தல் செய்யப்படாமலேயே சில வலைப்பதிவுகளின் பின்னூட்டல்கள் உடனடியாகவே திரட்டப்படுகின்றன. என்னமோ நடக்குது, ஒன்னுமே புரியலேங்க.

 

said ... (26 August, 2006 22:37) : 

saainthaadamma paadalLum SomasuntharaPulavarIn Paadale

 

said ... (27 August, 2006 04:01) : 

வசந்தன்,
அற்புதம்.அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன். :-)

ஆமாம், இந்த 'தங்கத் தாத்தா' சோமசுந்தரப் புலவர் எனபவர் யார்?

 

said ... (27 August, 2006 08:49) : 

எழுதிக்கொள்வது: Kanags

கிரி, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு பாடலை பாசமலர் படத்தில் சிவாஜி பாடுவார் என ஞாபகம் வருகிறது. அந்தப்பாடல் எமது தங்கத்தாத்தா பாடியதே என அறிந்ததில் சந்தோஷம்.
சிறீதரன்

9.8 27.8.2006

 

post a comment

© 2006  Thur Broeders

________________