Tuesday, December 27, 2005

தாடியறுந்த வேடன் - சிறுவர் பாடல்

நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏற்கெனவே அவரின் 'கத்தரித் தோட்டத்து வெருளி'ப் பாட்டும், 'ஆடிப்பிறப்புக் கொழுக்கட்டை'ப் பாட்டும் மதி கந்தசாமியால் பதிவாக இடப்பட்டன. இப்போது அவரின் இன்னொரு பாடலை நானிங்கு பதிவாக இடலாமென்றிருக்கிறேன்.

சோமசுந்தரப் புலவரைத் 'தங்கத் தாத்தா' என்று செல்லமாக அழைப்பதுண்டு. தாத்தாவென்றால் தாடியில்லாமலா? இவருக்கும வெண்பஞ்சுபோல வெள்ளைத்தாடி இருந்ததாம். இவர் தாடி பற்றியும் ஒரு பாட்டெழுதியுள்ளார். அது "தாடியறுந்த வேடன்".

தன் தாடிக்கு இப்படி நடந்தால் எப்படியிருக்குமென்று நினைத்தோ உண்மையிலேயே அவர்தாடிக்கு வந்த ஆபத்தை வைத்தோ இப்பாடலை அவர் எழுதியிருக்கக்கூடும்.

நாயை வைத்து வேட்டையாடும் ஒருவன் ஒருநாள் அணில் வேட்டைக்கு தன் நாயுடன் போகிறான். அதில் அவன் தாடி அறுந்துவிட்டது. எப்படி அறுந்ததென்று 'தங்கத் தாத்தா' சொல்கிறார்.

தேமா - இப்பாட்டிற் சொல்லப்படும் தேமா என்பது ஒருபூமரத்தை என்றுதான் நான் விளங்கி வைத்திருந்தேன். ஆனால் இது மாமரத்தில் ஒருவகையென்றும் சிலர் சொல்வதுண்டு. எதுசரியெனத் தெரியவில்லை.
---------------------------------

வீமா! வீமா! ஓடி வாவா - அணில்
வேட்டை ஆடிப்பிடித் தூட்டுவேன் வாவா
தேமா மரத்திற் பதுங்கி - மாங்காய்
தின்னும் அணிலைப் பிடிப்போம் ஒதுங்கி


மரத்தில் இருந்து குதித்தே - அடடா
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே பார்பார்
துரத்திப் பிடிபிடி வீமா - உச்சு
சூச்சூஅணில் எம்மைத் தப்பியும் போமா?


பொந்துக்குட் புகுந்தது வீமா - உந்தப்
புறத்தில்நில் அந்தப் புறத்தினில் வருவேன்
அந்தோஎன் தாடியை விடுவாய் - அந்த
அணில்தப்பி ஓடிய தையையோ கெடுவாய்.

--------------------------------------


என்ன நடந்ததென்று பாடலில் முழுதும் விளங்காதவர்களுக்கு:
வேடன் தன் நாயான வீமனைக் கொண்டு அணிலைத் துரத்துகிறான். அது வேறோர் பெரிய மரத்தின் பொந்துக்குட் சென்று பதுங்கிக்கொள்கிறது. உடனே வேடன், நாயை பொந்தின் இந்தப் பக்கம் நிற்கச்சொல்லிவிட்டு, தான் மரத்தின் மறுபக்கம் வந்து பொந்துக்குள் எட்டிப் பார்க்கிறான். அப்போது எதிர்ப்பக்கம் நின்ற வீமனுக்கு வேடனின் தாடி பொந்துக்குள்ளால் தெரிகிறது. அதுதான் அணிலென்று நினைத்துக் கவ்வியிழுத்தது வீமன். தாடியும் போச்சு. அணிலும் தப்பியோடி விட்டது.

* * * * *

இது நாலாம் ஆண்டில் (மூன்றாம் தரம்) படித்ததாக நினைவு. அழகான மெட்டு, அழகான பாட்டு. படத்துடன் பாடலைப் படித்தால் இன்னும் அருமையாக இருக்கும். தாத்தாவுக்கு 'வாலைக் கிழப்பிக் கொண்டோடுதே' என்ற சொற்றொடரில் நல்ல மயக்கம் போலிருக்கிறது எங்களைப் போலவே. 'கத்தரி வெருளி'ப் பாட்டிலும் இதே சொற்றொடர் வரும். உண்மையில் அந்த வயதில் வாலைக்கிழப்பிக் கொண்டோடும் ஒரு பசுவை இச்சொற்றொடர் அப்படியே கண்முன் கொண்டுவரும். கன்றுக்குட்டியோ ஆட்டுக்குட்டியோ துள்ளி விளையாடுவதைப் பார்க்கும்போது அறியாமலேயே இந்த வரி வாயில் வந்துவிடும். அந்த வரிக்கு அமைந்த மெட்டும் (இரு பாட்டிலும் இந்தவரிக்கு ஒரே மெட்டுத்தான்) வசீகரித்ததால் அந்தவரியை மட்டும் அடிக்கடி பாடிக்கொள்வோம்.

நன்றி: தங்கத் தாத்தா.
------------------------------

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"தாடியறுந்த வேடன் - சிறுவர் பாடல்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (27 December, 2005 10:25) : 

அழகான பாடலைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் வசந்தன்.

 

said ... (27 December, 2005 11:09) : 

எழுதிக்கொள்வது: இளைஞன்

நன்றி வசந்தன்.
பழைய ஞாபகம் வந்துபோனது.
சிறுவயதில் பள்ளிப் புத்தகத்தில் படித்த பாடல்.
இணைத்தமைக்கு நன்றி.

தேன் + மா = தேமா ?
மாமரத்தின் ஒருவகையாக இருக்கும் என்றே நம்புகிறேன்.

1.34 27.12.2005

 

said ... (27 December, 2005 14:48) : 

வசந்தன் அருமையான பாடல்.

தாத்தாவைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் இப்போ அவரைப்பற்றி அறிய ஆசை.

இது போன்ற நகைச்சுவையான பாடல்கள் சிறுவர்களை வெகுவாக கவரும்.

மேலும் நானும் பலமுறை அணில் வேட்டைக்கு நாயுடன் போயிருக்கிறேன், அணிலை கவ்விய நாளை விரட்டி அந்த அணிலை பிடுங்குவதற்குள் உயிரே போயிடும்.

தொடர்ந்து கொடுங்க...

 

said ... (27 December, 2005 15:26) : 

பரஞ்சோதி,
//தாத்தாவைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் இப்போ அவரைப்பற்றி அறிய ஆசை//
தாத்தாவைப் பற்றி அறிய இங்கு சொடுக்குங்கள்:
தங்கத் தாத்தா

 

said ... (27 December, 2005 23:38) : 

சிறிதரன், இளைஞன்,
கருத்துக்களுக்கு நன்றி.

 

said ... (27 December, 2005 23:39) : 

இளைஞன்,
நீங்கள் சொன்னது போல தேன் + மாவாக இருக்கலாம்.

 

said ... (28 December, 2005 08:25) : 

வருகைக்கு நன்றி பரஞ்சோதி,
'கத்தரித் தோட்டத்து வெருளிக்கு' இணைப்புக் கொடுத்துள்ளேன். 'ஆடிப்பிறப்பை'க் காணவில்லை.
மேலதிக தகவல்களின் இணைப்பைத் தந்த சிறிதரனுக்கு நன்றிகள்.
தங்கத் தாத்தாவின் இன்னும் சில பாடல்களை இங்கே பதிவாக இடலாமென்றிருக்கிறேன்.

 

said ... (28 December, 2005 19:01) : 

This comment has been removed by a blog administrator.

 

said ... (30 December, 2005 20:15) : 

எழுதிக்கொள்வது: sup

undefined

20.43 30.12.2005

 

post a comment

© 2006  Thur Broeders

________________