Sunday, December 04, 2005

சுனாமி மற்றும் காலநிலை அவதானிப்பு.

அண்மையில் கிளிநொச்சியில் காலநிலை அவதானிப்பு நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டது. இது வெறுமனே காலநிலைகளை அவதானிப்பதாக மட்டுமன்றி, சுனாமி எச்சரிக்கை மையமாகவும் தொழிற்படுகிறது. இது எப்படி தொடங்கப்பட்டது, இதன் பின்னாலுள்ள உழைப்பு என்பன பற்றி இதை நடைமுறைப்படுத்துவதில் முன்னின்றவரின் கருத்துக்கள் இங்கே பதிவாகின்றன. இது பற்றி ஈழநாதத்தில் வெளிவந்த கட்டுரையொன்றை இங்கே இடுகின்றேன்.

இயற்கை அழிவிலிருந்து மக்களைப்பாதுகாக்கும் தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம்

தமிழீழ தனியரசை நோக்கிய கட்டுமானங்களில் தமிழர் தாயகம் பல துறைகளில் அதீத வளர்ச்சிபெற்று வருகிறது. அந்த வகையில் அதன் தனியரசு நோக்கிய வளர்ச்சிப் பாதையின் ஒரு அங்கமாகத்தான் அண்மையில் கிளிநொச்சி அறிவியல் நகரில் ஆரம்பிக்கப்பட்ட (weather monitoring center) காலநிலை அவதானிப்பு நிலையமாகும். எமது தாயக மக்களை பல்வேறு இயற்கை அனர்த்தங்களிலிருந்தும் பாதுகாப்ப தற்கு இந்நிலையம் பெரும் பங்காற்றும்.
அந்த வகையில் காலநிலை அவதானிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பாக அதன் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றிய புலம் பெயர்ந்து வாழ்ந்துவரும் குகதாசன் கண்ணன் அவர்கள் தரும் விளக்கங்கள்.

"சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட பின்பு எமது தாயகத்தில் ஏற்பட்ட இழப்புக்களின் விளைவால் இனி இவ்வகையான இயற்கை அனர்த்தத்தி லிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக முதலில் சுனாமியை அவதானிப்பதற்கான ஒரு ஒழுங்கு படுத்தலை ஏற்படுத்தத் திட்டமிட்டு கணினி மென்பொருள் ஒன்றை கொண்டுவந்து கணினி யோடு இணைத்து சுனாமியை மட்டும் அவதானித்துக் கூறக்கூடிய ஒரு ஒழுங்குபடுத் தலைத்தான் நாங்கள் முதலில் சிந்தித்தோம். இதன்படி இந்தத் தகவலை அரசியல்துறைப் பொறுப்பாளர் ஊடாக தேசியத் தலை வருக்கு தெரியப்படுத்தியபோதுதான் அவர் கூறினார்,
'ஏன் நாங்கள் எங்களுடைய வளங் களை பயன்படுத்தி ஒரு காலநிலை அவதானிப்பு நிலையத்தை ஆரம்பிக்கக்கூடாது?' என்று.

எனவேதான் தமிழீழத்தில் இவ்வாறானதொரு நிலையம் இன்மையால் தலைவரினது சிந்தனையின் செயல் வடிவமாகத்தான் இந்த காலநிலை அவதானிப்பு நிலையம்.

நாங்கள் லண்டனிலிருந்து இங்கு வரும்போது இவ்வாறான ஒரு சிந்தனையோடு வரவில்லை. ஆனால் இங்கு வந்ததன் பின்புதான் தலைவரின் ஆலோசனைக்கு அமைய இத்துறைசார்ந்த இந்நிலையத்தை இருக்கின்ற வளங்களைக்கொண்டு ஆரம்பித்தோம். இந்நிலையத்தின் செயற்பாடுகள் இரண்டுவகையானவை.
அதாவது ஒன்று சுனாமி அவதானிப்பு நிலையம், மற்றது காலநிலை அவதானிப்பு நிலையம். இதில் மூன்று பேர் கடமையாற்றுகிறார்கள். இவர்களில் ஒருவர் காலநிலை அவதானிப்புப் பிரிவிலும், ஏனைய இரண்டு பேரும் சுனாமி அவதானிப்புப் பிரிவுகளிலும் 24மணி நேரமும் கடமையில் இருப்பார்கள். முதலில் சுனாமி தொடர்பான எமது செயற்பாடு எப்படி இருக்குமென்று பார்ப்போம்.

சுனாமி பல வகையில் ஏற்படலாம். அதில் பிரதானமாக கடலடியில் ஏற்படுகின்ற பூகம்பம், மற்றது கடலடியில் இடம்பெறும் எரிமலை வெடிப்பு, இதைவிட நிலநடுக்கத்தாலும் ஏற்படலாம். இதை அறிவதற்கு மூன்று நிறுவனங்கள் உண்டு.
1. I.O.C
2. P.T.W.C
3. U.S.C.S

இந்த மூன்று அமைப்புகளோடு 24 நாடுகள் சேர்ந்து ஹவாய் தீவில் அந்த நாடு களினுடைய 12இற்கு மேற்பட்ட செயற்கைக் கோள்களின் உதவியுடன் ஒரு வலைப்பின்னலில் முழு உலகையும் கண்காணித்து வருகின்றன. இதன்படி உலகில் எங்கேனும் ஓர் இடத்தில் சாதாரண ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டால் கூட அதாவது 01.5ரிச்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டால் கூட அவர்களுக்குத் தெரியும். இதனைக் கவனத்தில்கொண்டுதான் லண்டனிலிருந்து ஹவாய் தீவிலுள்ள நிலையத்தோடு தொடர்புகொண்டு எங்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று கேட்டபோது அதற்கு அவர்கள் முதலில் மறுத்தார்கள். 'எதுவாக இருந்தாலும் தாங்கள் இலங்கை அரசினூடாகத்தான் செய்வோம்' என்றார்கள். ஆனால் நாங்கள் தொடர்ந்தும் தொடர்புகளை ஏற்படுத்தி சுனாமி, மற்றும் இயற்கை அனர்த்தம் தொடர்பாக மக்கள் அறிவது ஒரு இராணுவ இரகசியம் சார்ந்த விடயமல்ல. இதுவொரு மனிதாபிமான உதவி. எனவே இலங்கையிலுள்ள வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் நலன் கருதி நீங்கள் இவ் உதவியைச் செய்யவேண்டும் என்று மீண்டும் கேட்டபோது அதற்கு இறுதியில் அவர்கள் சம்மதித்தனர்.

இதற்கு முதல் அவர்களுடன் முதலில் தொடர்புகொண்டு எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று கேட்டபோது அவர்கள் கூறிய முக்கியவிடயம் என்னவெனில் இலங்கை அரசு கூட இதுவரை தங்களோடு தொடர்புகொண்டு இத்தகைய உதவியை கேட்கவில்லை என்றார்கள். இன்னும் தென் இலங்கையில் இப்படியொரு ஒழுங்குபடுத்தல் இல்லையென்றுதான் கூறவேண்டும். எனவே இதன்படி ஹவாய் தீவு நிலையம் தங்களது 12இற்கு மேற்பட்ட செயற்கைக்கோள்கள் மூலம் பெற்றுக்கொள்கின்ற அனைத்துத் தரவுகளையும் இணையத்தளம் மூலம் நாங்கள் உள்வாங்கி இங்குள்ள கணனிகள் மூலம் பரிசீலனை செய்து 05.5ரிச்டர் அளவுக்கு மேல் உள்ள நிலநடுக்கங்களை எங்களுக்கு உடன் அறியப்படுத்தும். (பதினைந்து நிமிடத்திற்கு ஒரு முறை ஹவாய் தீவிலிருந்து நாம் தகவல்களை பெற்றுக்கொள்வோம்) இது எங்களுடைய கணனியில் எச்சரிக்கை ஒலியுடன் எழுத்து வடிவிலும் பெற்றுக்கொள்வோம். அதே நேரம் இங்குள்ள கண்காணிப்பாளர் ஒருவர் நித்திரை யில் இருந்தால் கூட அந்த சத்தத்தைக் கேட்டு எழுந்து உடனே அவர் அடுத்த கட்டமாக கணனி மூலம் உலக வரைபடத்தை எடுத்துப் பார்த்து, இந்த நிலநடுக்கம் எங்கு இடம்பெற் றுள்ளது? கடலிலா நிலத்திலா என்பதை அறிந்து கடலடியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தால் அது இலங்கைத்தீவுக்கு அண்மையில் ஏற்பட்டிருக்கின்றதா என்பதையும் அறிந்து அது எவ்வளவு அளவுகோலில் உள்ளது என்பதையும் அறிந்து இங்குள்ளவர்களுக்கு எமது நிலையத்தின் மூலம் அறிவிப்பு விடுக்கப்படும்.

இவ் எச்சரிக்கையை நாங்கள் மூன்று வகையாகப் பிரித்துள்ளோம். அதாவது பச்சை, மஞ்சள், சிவப்பு என்று. இதில் பச்சை சமிக்ஞை என்றால் நிலநடுக்கம் இடம்பெற்றுள்ளது என்றும், 05.5சமிக்ஞை புள்ளிக்கு மேல் என்றால் மஞ்சள் என்றும், 08புள்ளிக்கு மேல் என்றால் சிவப்பு சமிக்ஞை என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 08 புள்ளி என்பது கடும் ஆபத்து, 05.5புள்ளிஎன்றால் அது கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் நிலையாக இருக்கும்.

இதன்படி தமிழீழக் காலநிலை அவதானிப்பு நிலையம் பெற்ற தகவல்களை இங்குள்ள ஊடகங்கள் ஏனைய வசதிகளோடு எமது மக்களுக்குத் தெரியப்படுத்தி அவர்களை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றுவோம் என்றவரிடம் இனியொரு சுனாமி அனர்த்தம் ஏற்பட்டால் எமது மக்களின் உயிரிழப்பை தவிர்த்துக்கொள்ளலாமா எனக் கேட்டபோது சடுதியாக ஆம் நிச்சயமாக என்றார்.

அவர் மேலும் கூறுகையில்,குறைந்தது இரண்டு மணித்தியாலங்களுக்கு முன் நாம் தகவல்களை ஹவாயிலிருந்து அறிந்து எமது மக்களுக்கு முன் எச்சரிக்கையாக விடுப்போம் என்றார்.இக்காலநிலை அவதானிப்பு நிலையத்தை பொறுத்தவரையில் முதலில் நாங்கள் கிளிநொச்சியில்தான் ஆரம்பித்துள்ளோம். இதனால் ஏனைய மாவட்ட மக்கள் யோசிக்கக்கூடாது, எங்களுடைய பிரதேசங்களில் ஆரம்பிக்கவில்லை என்று. இனிவருங்காலங் களில் தமிழர் தாயகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறு சிறு காலநிலை அவதானிப்பு நிலையத்தை ஆரம்பிக்கவுள்ளோம்.

இப்போது காற்றின் ஈரப்பதன், காற்றழுத்தம், இடிமின்னலுடன் மழையா? சாதாரண மழையா? புயல் போன்ற தகவல்களை அறிந்து 24மணித்தியாலங்களுக்கு முன் எதிர்வு கூறக்கூடியதாக ஒழுங்குபடுத்தி யுள்ளோம். ஆனால் காலநிலை மாற்றங்களை துல்லியமாக அறியவேண்டு மென்றால் அதற்கு எங்களுக்கென தனியான செயற்கைக்கோள் தேவை இருந்தும் நாங்கள் சாதாரணமாக மழை, வெயில் போன்ற காரணிகளில் ஏற்படுகின்ற மாற்றங்களை அறியக்கூடியதாக இருக்கிறது. நவீன தொழில்நுட்ப வசதிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கமுடியாது இருந்தாலும் எங்களிடம் உள்ள வசதி வாய்ப்புக்களைக் கொண்டு எமது மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்றார் கண்ணன்.
--------------------------------------------

நன்றி:- ஈழநாதம்.


எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"சுனாமி மற்றும் காலநிலை அவதானிப்பு." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (05 December, 2005 07:48) : 

பின்னூட்டுக்கு நன்றி கலாநிதி.

 

said ... (06 December, 2005 08:37) : 

கட்டுரைக்கு நன்றி.
நானும் இது தனியே காலநிலை அவதானிப்பு நிலையம் தான் என நினைத்திருந்தேன்.

சிவா.

 

post a comment

© 2006  Thur Broeders

________________