Tuesday, January 03, 2006

குளியல்.

என்னடா இவன் குளியல் பற்றி எழுதிறான் எண்டு ஆச்சரியப்படாதேங்கோ. அதைப்பற்றி எழுத ஒவ்வொருத்தருக்குமே நிறைய விசயங்கள் இருக்கும். இஞ்ச இப்ப சரியான வெக்கையா இருக்கிறதால பதிவிலயும் ஒரு குளியல் போட்டா நல்லாயிருக்குமெண்டு நினைச்சு போடுற பதிவிது. இஞ்ச வந்த புதுசில குளியல் தொடர்பில் எனக்கு நடந்த சுவாரசியமான நினைவுகளுக்காக ஒரு பதிவு. (வெளிநாட்டுக்கு வந்த புதுசில பெரும்பாலானவர்களுக்கு இப்படி ஏதாவது நடந்திருக்கலாம்).

யாழ்ப்பாணத்தில அனேகமா வீட்டுக்கொரு கிணறு இருக்கும். சில இடங்களில ரெண்டு வீட்டுக்கொரு கிணறு இருக்கும். சீதனமாக் காணி பிரிக்கேக்க இப்படி கிணறும் பிரிபட்டிருக்கலாம். கிணத்துக்கு நடுவால மதில் கட்டி, இந்தப்பக்கம் பாதிக்கிணறு அந்தப்பக்கம் பாதிக்கிணறு எண்டு இருக்கும். சண்டை சச்சரவில்லாத குடும்பங்களெண்டா ரெண்டு குடும்பப்பொம்பிளையளுக்கும் கிணத்தடியில நல்லாப் பொழுது போகும்.

யாழ்ப்பாணத்தில எங்கட ஊர்ப்பக்கத்தில வீட்டுக்கிணறுகளில துலா பாவிக்கிறது குறைவு. கப்பியும் பாவனை குறைவுதான். எல்லாம் கையால இழுவைதான். தண்ணி மட்டமும் பெரிய ஆளமெண்டில்ல, ஒரு இருவது, இருவத்தஞ்சு அடிக்குள்ளதான் வரும். தொன்னூறில சண்டை தொடங்க முதல் (இரண்டாம் கட்ட ஈழப்போர்) யாழ்ப்பாணத்தில மின்சாரம் இருந்தது. எங்கட வீட்டில பெரிய தொட்டியுமிருந்திச்சு. அக்கம்பக்கத்தில இருக்கிற வயசுபோன நாலைஞ்சு பேர் உட்பட நாங்களெல்லாம் மோட்டர் போட்டு அதில தண்ணியிறைச்சு அள்ளிக்குளிக்கிறனாங்கள். சண்டை தொடங்கி கொஞ்ச நாட்களில மின்சாரம் நிப்பாட்டுப்பட்டிட்டுது. பிறகென்ன? கிணத்தில அள்ளித்தான் குளியல். அண்டைக்குப்பிறகு ஈழத்தை விட்டு வெளிக்கிடும்வரை பெரும்பாலும் கிணத்தில அள்ளித்தான் குளிச்சனான்.



பத்திக்குள்ள நிண்டு குளிச்சாச்சரி. நல்ல சுதந்திரமா கைகால ஆட்டி, ஊத்தை உருட்டி சாகவாசமாக் குளிக்கலாம். கிழமைக்கு ஒருக்காவெண்டாலும் பக்கத்தில இருக்கிற கப்பில போய் முதுகைத் தேய்ச்சு ஊத்தை உருட்டுறது வழக்கம். நண்பர்களோட சேர்ந்து குளிக்கேக்க ஆளாளுக்கு முதுகில ஊத்தை உருட்டி விடுவம். சிலர் பீர்க்கங்காய்த் தும்புக்குச் சீலத்துணி தைச்சு வைச்சிருப்பினம் ஊத்தை உருட்ட. தண்ணியள்ளேக்க ஒரே இழுவையில வாளியைப் பிடிக்கிறது எண்டும், ஆர் ஆகக்குறைஞ்ச இழுவைகளில வாளியைப் பிடிக்கிறதெண்டும் நண்பர்களுக்குள் போட்டிகூட நடப்பதுண்டு. பத்தியில் பாசி பிடித்திருந்தால் அடிக்கடி வழுக்கி விழுந்தெழும்புவதும் சுவாரசியம்தான்.

யாழ்ப்பாணத்துக்குள்ளயே முதலாவது இடப்பெயர்வுக்குப்பிறகுதான் துலாவிலயும் கப்பியிலயும் தண்ணியள்ளிக் குளிக்கத் தொடங்கினன். எங்கட ஊரில பெரும்பாலும் கப்பியோ துலாவோ பாவிக்கிறேல எண்டது அந்த ஊர்க்காரருக்குப் பெரிய ஆச்சரியம்தான். இப்ப யோசிச்சுப்பாத்தா என்ர ஊர் பற்றி எனக்கே ஆச்சரியமாத்தான் கிடக்கு. துலாவில அள்ளுறது ஆழக்கிணறுகளுக்கு ஒப்பீட்டளவில் இலுகுவாயிருந்தது. ஆனாலும் துலா அங்க இஞ்சயெண்டு உலாஞ்சிக்கொண்டும் கிறிச் கிறிச் எண்டும் சத்தம் போட்டுக்கொண்டிருந்தா எரிச்சல்தான் வரும். கப்பி சத்தம் போடாம, கயிறு இறுகாம, ஒழுங்காச் சுத்திக்கொண்டிருந்தாச் சரிதான்.

வன்னியிலயும் அனேகமாக் கிணத்துக்குளிப்புத்தான். ஆனா, கிணறுகள் கொஞ்சம் அழம். அறுபதடிக் கிணற்றில் சிலமாதங்கள் கப்பியில் அள்ளிக் குளித்திருக்கிறேன். அவ்வப்போது குளத்துக்குளியல், கடற்குளியல் என்றும் பொழுதுபோகும். (யாழ்ப்பாணத்தில் கடற்கரையோடே வாழ்ந்திருந்தாலும் நானறிய ஐந்தோ ஆறுமுறைதான் கடற்குளித்திருக்கிறேன்.)

ஒஸ்ரேலியாவுக்கு வந்துதான் குளியலறைக் குளிப்பு. முதல்நாளே அதிர்ச்சி. ஒரு கண்ணாடிக்கூண்டைக் காட்டி அதுக்குள்ளதான் குளிக்க வேணுமெண்டாங்கள். இரண்டரை அடி நீள அகலம் கொண்ட சதுரக்கூண்டு. அப்பப்ப ஏதாவது ஆங்கிலப்படத்தில இப்பிடியொரு கூண்டைப் பாத்திருந்தாலும் அப்பவெல்லாம் சந்தேகம் வந்ததேயில்லை. இதென்னெண்டு இதுக்குள்ள நிண்டு குளிக்கிறதெண்டு யோசிச்சாலும், எல்லாரும் இதைத்தானே பாவிக்கிறாங்களெண்டு துணிஞ்சு இறங்கினன். அண்டையில இருந்து கொஞ்சநாட்களுக்கு நான் குளிக்கேக்க படார் படார் எண்டு சத்தம் கேட்டுக்கொண்டிருந்திச்சு. ஊர்ப்பழக்கத்தில கையக்கால கொஞ்சம் சுதந்திரமா அசைச்சதுதான் பிரச்சினை. முதுகில தேய்க்கக் கையத்தூக்கினா 'படார்', குனிஞ்சு காலத்தேச்சா 'படார்' எண்டு கொஞ்சநாளா ஒரே சத்தம்.

அதுமட்டுமில்லை, சவர்க்காரக்கட்டி வைக்கிறதுக்கிருக்கிற தட்டு என்ர முழங்கையை முதல்நாளே பதம் பார்த்து ரத்தம் சிந்த வைத்தது. அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்தாக்குதலால் ஒரு புண்ணே வந்துவிட்டது. முதல்நாள் என்னைக் குளிக்க விட்டிட்டு வெளியில காத்திருந்து சிரிச்சாங்கள். இவ்வளவுக்கும் எனக்கு சராசரி உடம்புதான். கொஞ்சம் மொத்தமா இருக்கிற ஆக்கள் என்ன செய்வினம் எண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறன்.
சரி, இந்தவீட்டதான் குளியற்கூண்டை இப்பிடிச் சின்னனாக் கட்டிப்போட்டாங்களாக்குமெண்டு வேற நாலைஞ்சு வீடுகளுக்கும் போய்ப்பாத்தன். எல்லா இடத்திலயும் இதுதான் அளவு. இதுதான் நியம அளவாம்.

அதவிட குளிர்நீரையும் சுடுநீரையும் சரியான அளவில் திறந்துவிடுவதில் கொஞ்சநாள் சுவாரசியமாகப் போனது. திடீர்திடீரெண்டு ஏதோவொரு நீர் கூடிக்குறையும். சரியானபடி பழக்கத்துக்குவர கொஞ்சநாள் எடுத்தது. திருப்தியாக ஊத்தை உருட்டிக் குளித்ததில்லை. ஒருத்தன் மட்டுமே குளிக்கலாமெண்டதால முதுகு தேய்க்கவும் ஆளில்லை. முதுகு உரஞ்ச மாற்றுவழியான மரக்குத்தியும் இல்லை. (கண்ணாடிக்குப் பதில் சொரசொரப்பா ஒரு சுவர் வச்சிருந்தாலும் உபயோகமாயிருந்திருக்கும்)

ஊரில கால் தேய்க்கிறதுக்கெண்டு ஒரு கல் வைச்சிருப்பம். அது அனேகமா சொரசொரப்பான கொங்கிறீட் கல்லா இருக்கும். ஒரு சாய்வா வைச்சிருக்கிற அந்தக்கல்லில பாதத்தை நல்லாத் தேய்ச்சு ஒரு மாதிரி மஞ்சளாக்கிப்போடுவம். இஞ்ச வந்தப்பிறகு கால்தேய்க்க ஆசை வந்திச்சு. பாதத்தின்ர நிறமும் கொஞ்சம் மாறியிருந்ததால அடிக்கடி கால்தேய்க்க வேணுமெண்டு முடிவெடுத்தன். ஆனா எங்க தேய்க்கிறது? அதுசம்பந்தமா விசாரிச்சதில, கால்தேய்க்கவெண்டே சவர்க்காரக்கட்டிபோல கல் விக்கிதெண்டு சொல்லிச்சினம். சரியெண்டு அந்தக் கல்லும் வாங்கியந்தாச்சு. காலில ஊத்தை போச்சுதோ இல்லையோ கல்மட்டும் தேஞ்சுது. அதுவும் ஒருக்கா கால்தேய்ச்சா ஒரு கல் கரையுது. ஆக ஒரு குளியலுக்கு ஒரு கல் தேவையெண்ட நிலைமை விளங்கினதால அந்தத் திட்டத்தைக் கைவிட்டன். பிறகு வேற ஓரிடத்தில எடுத்த கூளாங்கல்தான் இண்டை வரைக்கும் எனக்குக் கால் தேய்க்குது.

இப்ப இஞ்ச கடும் வெக்கை. 2005 இன்ர கடசி ரெண்டு நாளும் தாங்க ஏலாத வெக்கை. 45 பாகை செல்சியஸ் இல வெக்கை. அந்த நாட்களில வெளிய போன என்ர தவம் கலைஞ்சு போடுமெண்டதால வெளியிலயும் வெளிக்கிடேல:-) இந்த வெக்கைக்கு குளியல் பற்றி ஒரு பதிவுபோடலாமெண்டு போட்டிருக்கு.
------------------------------------

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"குளியல்." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (03 January, 2006 04:59) : 

it is a very enjoyable article. verygood

 

said ... (03 January, 2006 05:18) : 

எழுதிக்கொள்வது: P.V.Sri Rangan

பதிவு நல்லாயிருக்கு.

19.41 2.1.2006

 

said ... (03 January, 2006 08:09) : 

எழுதிக்கொள்வது: thanara

குளியல் கட்டுரை பிரமாதம்.
நன்றி
தனர

22.34 2.1.2006

 

said ... (03 January, 2006 12:34) : 

சிட்னிப் புதுவருசம் சயந்தனுக்குப் பிடிச்சுதோ என்டு கேட்டனீரோ?

 

said ... (03 January, 2006 14:57) : 

கருத்திட்டோருக்கு நன்றி.
ஷ்ரேயா,
அவருக்குப் பிடிக்குதோ இல்லையோ எண்டு நானேன் கேக்க வேணும்?
பக்கத்தில இருக்கிற நீங்களே கேட்டுச் சொல்லுங்கோ.

 

said ... (03 January, 2006 16:13) : 

:-)

 

said ... (03 January, 2006 17:42) : 

நல்ல குளியல் கட்டுரை. நீங்கள் சொல்லும் கஷ்டத்தை நானும் ஐரோப்பாவின் அனுபவித்தேன். கண்ணாடிக் கூண்டைத் திறந்து வைத்துக் குளித்தால் தண்ணீர் அறையெங்கும் தெறிக்கும். இல்லையென்றால் நிம்மதியாகக் குளிக்கவும் முடியாது. பேசாம குளியல் தொட்டி உள்ள வீடாப் பாருங்க. தண்ணிய நெரப்பி படுத்துத் தூங்கலாம்.

 

said ... (03 January, 2006 22:17) : 

எழுதிக்கொள்வது: siva

undefined

21.48 3.1.2006

 

said ... (04 January, 2006 09:24) : 

நற்கீரன், இராகவன்,
கருத்துக்களுக்கு நன்றி.
இராகவன்,
குளியற்றொட்டி இருக்குத்தான். அதுக்க 'எருமை' மாதிரிக் கிடக்கச் சொல்லிறியளோ?

 

said ... (04 January, 2006 10:14) : 

எழுதிக்கொள்வது: Shreya

மெல்பேணில நல்ல இதமான வானிலை பழகினவருக்கு முதலாந்திகதி இங்க கொளுத்தினது எப்பிடியிருந்ததெண்டு அறியத்தான். ஆள் எங்கையும் சுருண்டு விழுந்து போச்சோ தெரியல்ல!!

10.41 4.1.2006

 

said ... (04 January, 2006 11:34) : 

நல்ல குளியல் பதிவு.

அதென்ன 45 டிகிரியா?

இங்கே எங்கூருக்கு வாங்க. எப்பவாவது 30 வந்தாலே அதிகம்.

 

said ... (04 January, 2006 20:13) : 

ஷ்ரேயா,
கொஞ்சநாளா ஆளின்ர தொடர்பில்லை. ஆள் இப்ப பெரிய புள்ளி எண்டு கேள்வி.
வெக்கைக்குச் சுருண்டு விழுந்திருப்பார். எங்கயேன் beach லதான் போய் ஆளைப்பிடிக்க வேணும்.
துளசி,
என்னசெய்ய? 45 டிகிரி எண்டது நம்பக்கஸ்டமாய்த்தானிருக்கும். ஆனா உண்மை. பாத்துக்கொண்டிருங்கோ, உங்கட பக்கமும் இப்பிடி வரத்தான் போகுது.

 

said ... (04 January, 2006 21:41) : 

// இராகவன்,
குளியற்றொட்டி இருக்குத்தான். அதுக்க 'எருமை' மாதிரிக் கிடக்கச் சொல்லிறியளோ? //

வேற என்ன செய்ய வசந்தன். எனக்கும் இந்தத் தொட்டியில ஊறுறது பிடிக்காதுதான். ஆனா அந்தூருகள்ள அப்படித்தான குளிக்கிறாங்க.

 

said ... (05 January, 2006 10:34) : 

என்ன இருந்தாலும் 45 டிகிரி எண்டது கொஞ்சம் கூடத்தான்! சிட்னியில Beach க்கு போகவும் பயமாக்கிடக்கு! ஐயோ மெல்பேணில நல்லாயிருக்குமே எண்டு கவலைப்பட்டன். ஆனா மெல்பேணிலையும் 45 எண்டு அறிஞ்ச பிறகு தான் மனசுக்கு நிம்மதி! பாருங்கொ.. சந்திரவதனாக்கா வந்த வேகத்தில ஓடப்போறா..

 

said ... (05 January, 2006 10:59) : 

எழுதிக்கொள்வது: Shreya

துளசி - 45 எல்லாம் சர்வ சாதாரணம் ஜனவரி மாதத்துக்கு. நான் அனுபவித்த உச்ச வெப்பநிலை 48.8 பாகை. ஏதோ போறணைக்குள்ள (oven) இருக்குமாப்போல இருந்துது. காத்தும் வீசாது..அமுக்கிப் பிடிச்சுக் கொண்டிருக்கும்! ஈரமே இல்லாத வளி!

11.22 5.1.2006

 

said ... (05 January, 2006 13:07) : 

//ஆனா மெல்பேணிலையும் 45 எண்டு அறிஞ்ச பிறகு தான் மனசுக்கு நிம்மதி! //

தனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்ல, எதிரிக்குச் சகுனம் பிழைக்கவேணுமெண்டு திரியிற கூட்டம் தானே?
அதுசரி, "எதிரி"தானே?
-------------------
சந்திரவதனா உங்க வந்து நிக்கிறாவோ? சொல்லவே இல்ல?
-------------------
இராகவன், நன்றி.

 

said ... (07 January, 2006 16:31) : 

எழுதிக்கொள்வது: surya

இ லிகெ திச் எக்ஷ்பெரினெcஎ ஒf பத் நிcஎ நர்ரடிஒன்

11.21 7.1.2006

 

said ... (08 January, 2006 04:26) : 

எழுதிக்கொள்வது: T.S.Seethalakshmi

எலகை டமிழில் படிக்க சுவரச்யமக இருக்கிரது.னல்ல நகைசுவை உனருடன் உல்லது.

23.5 7.1.2006

 

said ... (09 January, 2006 03:34) : 

கரட் இஞ்சி சுரண்டிற ஸ்க்ரேப்பர் இருக்கெல்லா அதிலை நல்ல சின்ன கண்ணாய் உள்ளதை வாங்கி காலை தேச்சு பாரும். அந்த மாதிரி வரும். என்ன காலை கொஞ்ச நேரம் ஒரு பாத்திரத்துக்கை சுடுநீரும் உப்பம் கலந்து வைச்சிட்டு அதுக்கை காலை ஒரு அரை மணிநேரம் ஊறவைச்சிட்டு அதாலை உரஞ்சிப்பாரும் அந்த மாதிரி செக்க சிவப்பாயிருக்கும் பாத்து கவனம் அவசரம் கூடாது பிறகு தோலை சுரண்டி எடுத்து விட்டிடும் பிறகு என்னை திட்டிறேலை. கிழமையிலை 2 தரம் இப்பிடி செய்ய கால் பூவைப்போலை வரும்.

 

said ... (09 January, 2006 09:40) : 

சூர்யா, சீத்தாலட்சுமி, நாளாயினி,
கருத்துக்களுக்கு நன்றி.
நளாயினி நீங்கள் சொல்லிறதப் பாத்தா, சுரண்டி முடிய அந்தத் தூளை வைச்சுக் கறிவைக்கலாம் போல கிடக்கே. ஊறவைக்கிற தண்ணிக்க மிளகாய்த்தூள், இன்னபிற சரக்குகள் போடத்தேவையில்லையோ?

// கிழமையிலை 2 தரம் இப்பிடி செய்ய கால் பூவைப்போலை வரும்//

கால் பூவைப்போல வந்தபிறகு அதைவைச்சு என்னத்தைச் செய்யிறது?

 

said ... (09 January, 2006 10:31) : 

ம்.. அதுகும் சரிதான். ம்.. கல்யாணம் பேசத்தான் எண்டு நினையுங்கோவன்..பின்ன என்ன விசரைக் கிழப்பிறியள். ஒராளின்ரை காலைப்பாத்து அந்தாளின்ரை சுத்தம் பற்றி அறியலாம்.

 

said ... (12 January, 2006 21:43) : 

ஹிஹிஹி...
நாளாயினியக்கா,
இப்பவெல்லாம் சப்பாத்துப் போடுறதால அந்தப்பிரச்சினையெல்லாம் இல்லை. காலுறையை மணக்காமல் வைச்சுக்கொண்டால் காணுமாக்கும்.

 

post a comment

© 2006  Thur Broeders

________________