Friday, December 30, 2005

தமிழில் இலக்கணம் கடைப்பிடித்தல்.

VoW அவர்களின் எண்ணத்தில் வந்த பதிவைப் பார்த்ததும் இலக்கணத்தைக் கடைப்பிடித்தல் என்பதன் மீது எனக்கிருந்த சந்தேகத்தையும் சிக்கலையும் ஒரு பதிவாக எழுதும் எண்ணம் வந்தது.
ஆகவே ஓர் அவசரப்பதிவு.

நான் சில இலக்கணத் தவறுகளைத் தெரிந்தே செய்கிறேன். அதாவது மீறுகிறேன்.
பல இடங்களில் 'ல்' --'த்' புணர்ச்சியைத் தெரிந்தே தவிர்க்கிறேன்.
காவல் + துறை = காவற்றுறை
கல் + தூண் = கற்றூண்
கடல் + தொழில் = கடற்றொழில்

இவை, காவல் துறை, கல் தூண், கடல் தொழில் என்றே பெரும்பாலும் எழுதப்படுகின்றன. சிலர் இடையிலே 'த்' போடுவார்கள். இப்புணர்ச்சிவிதியைக் கடைப்பிடிப்பதில் எனக்கொன்றும் சிக்கலில்லை. வாசிப்பவருக்கு, பெரும்பாலும் புழக்கத்திலில்லாத சொல் சங்கடத்தைக் கொடுக்குமென்பது தவிர்த்தலுக்கான ஒரு காரணம்.

மேலும் நான் உச்சரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவன். என்னிடம் யாராவது வலிமிகும் (ஒற்று வரும்) , வலிமிகா (ஒற்று மிகா) இடங்கள் பற்றிக் கேட்டால் நான் சொல்வது:
'நீ எப்படி உச்சரிக்கிறாயோ அப்படி எழுது'
என்பதுதான். எந்தெந்த இடங்களில் ஒற்று வரவேண்டுமோ அந்தந்த இடங்களிலெல்லாம் ஒற்றுப்போட்டுத்தான் நாம் உச்சரிக்கிறோம். இது தொன்னூறு வீதம் பொருந்தும். அதேபோல் சொற்புணர்ச்சியும் எமது உச்சரிப்பில் தான் (உச்சரிப்பிற்றான் என்று எழுத முடியுமா?) பெரிதும் தங்கியுள்ளது.

ஆனால் கடற்றொழில், காவற்றுறை, கற்றூண் என்று நாங்கள் யாரும் பேச்சுவழக்கில் உச்சரிப்பதில்லை.
நிறையப் பொழுதுகளில் 'த்' சேர்த்து உச்சரிக்கிறோம்.
கடல் + தொழில் = கடல்த்தொழில்
காவல் + துறை = காவல்த்துறை
கல் + தூண் = கல்த்தூண்

அதாவது இப்புணர்ச்சிவிதி ('ல்'-- 'த்') எங்கள் பேச்சுவழக்கிலிருந்து மிகமிக விலத்தி நிற்கிறது. எம்மால் உச்சரிப்பிற் கடைப்பிடிக்க முடியாத விதியை, அல்லது இயல்பினின்று பிறழ்ந்த விதியை ஏன் காவித்திரிய வேண்டுமென்ற கேள்வி எனக்குண்டு.
இலக்கண விதிகளனைத்தும் இயல்பினின்று உருவானவைதாம் என்ற தெளிவு எனக்குண்டு. எனவே எம்முன்னோர்களின் உச்சரிப்பில் இயல்பாக இப்புணர்ச்சி இருந்திருக்க வேண்டும். ஆனால் இன்று நாம் அதைத் தொலைத்துவிட்டோம் ('ழ'கர உச்சரிப்பைத் தொலைத்ததைப் போல). இன்றைய நிலையில் இப்புணர்ச்சிவிதியைக் கைக்கொள்ளத்தான் வேண்டுமா என்ற கேள்வி எனக்குண்டு. நானறிய, பெருமளவானோர் இக்குறிப்பிட்ட விதியைக் கைக்கொள்வதிலிருந்து விலகிவிட்டனர். சிக்கலான இச்சந்தர்ப்பத்தில் சொற்களைப் புணர்த்தாமல் இரண்டையும் தனித்தனியே எழுதும்படி அறிவுறுத்துகின்றனர், காவல் துறை, கடல் தொழில் என்றவாறு.

நானும் இச்சந்தர்ப்பங்களில் நிலைமைக்கு ஏற்றவாறு சரியாகப் புணர்த்தியோ, புணர்த்தாமல் தனித்தனியாகவோ எழுதுகிறேன். (ஆனால் இடையில் 'த்' போடுவதில்லை. விதியைக் கடைப்பிடிக்கவில்லையென்று இருக்கலாமேயொழிய, புதிய விதி உருவாக்கியவன் என்று இருக்கக்கூடாது:-).

இதைப்பற்றி வலைப்பதிவாளர்களின் கருத்தென்ன?
சரியானபடி புணர்த்தியெழுதினால் வாசிக்கும்போது அந்நியத் தன்மையை யாராவது உணர்ந்திருக்கிறீர்களா? (இதன்பொருள் அச்சொல் புரியாது என்பதன்று)

நான் மேலே எழுதியது விளங்கவில்லையென்றால் அதையும் சொல்லுங்கள். அடுத்தமுறை கவனமெடுக்கிறேன்.
------------------------------------------------------
இலக்கணத்தைக் கடைப்பித்தல் தொடர்பில் மேற்கூறிய விதியொன்றின் மீது மட்டுந்தான் எனக்குச் சிக்கல். இதுகூட ஒவ்வாத தன்மைகொண்ட விதி என்பதால் மட்டுமே. கடைப்பிடிக்கத்தான் வேண்டுமென்று வந்தால் அதில் எனக்கு எந்தச் சிக்கலுமில்லை.
மற்றும்படி ஏனைய நடைமுறைகள் பற்றி எவ்விதக் குறையுமில்லை. அவை கடைப்பிடிக்கப்பட வேண்டியவையென்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை.
------------------------------------------------------

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"தமிழில் இலக்கணம் கடைப்பிடித்தல்." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (30 December, 2005 05:08) : 

Jsri,

குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (நாயித்துக் கெளம இல்லை!:)) பாடத்துல சொல்லித் தர்றது:

"வாழை மரத்திலிருந்து வாழைப் பழம் வழவழத்துக் கொழகொழத்து நழுவிக் கீழே விழுந்தது"

:)

Tongue Cleaner வாரத்துக்கு ஒரு முறையாவது உபயோகிச்சா 'ழ' தொலையாம நிக்கும்!

வசந்தன்

அக்கறையின்மையால் நீர்த்துப் போகச் செய்தது நிறைய. அதை நியாயப் படுத்த முயலாமல், தொலைத்தவற்றை மீட்டெடுப்பதே மொழிக்கு நாம் செய்யும் மரியாதை என்று நினைக்கிறேன்.

'மனம்'தான் காரணம். மொழியல்ல.

பதிவுக்கு நன்றி.

 

said ... (30 December, 2005 05:34) : 

அவ்சியமான பதிவு.

 

said ... (30 December, 2005 10:00) : 

ஜெய்சிறி, சுந்தர், கார்த்திக்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஜெய்சிறி,
நானும் தேடிப்பார்க்கிறேன். கிடைத்தாற் சொல்கிறேன்.

சுந்தர்,
//அக்கறையின்மையால் நீர்த்துப் போகச் செய்தது நிறைய. அதை நியாயப் படுத்த முயலாமல், தொலைத்தவற்றை மீட்டெடுப்பதே மொழிக்கு நாம் செய்யும் மரியாதை என்று நினைக்கிறேன்.
'மனம்'தான் காரணம். மொழியல்ல.//

"நீர்த்துப் போகச் செய்தவை" என்றும், "மொழியன்று" என்றும் வந்திருக்க வேண்டும். இப்படி ஆளாளுக்கு மாறிமாறி அவ்வப்போது சுட்டிக்காட்டினாலே சிலராவது வழிக்கு வருவார்கள். பலர் தெரிந்திருந்தும் கவனமின்மையால் விடும் தவறுகளிவை. நானுந்தான்.

அப்போ, நான் சந்தேகமெழுப்பிய விதியையும் கடைப்பிடிக்க வேண்டுமென்கிறீர்கள். நன்றி.
கார்த்திக்,
உங்களுக்குச் சொல்ல ஏதுமில்லை தட்டச்சுப் பிழையைத் தவிர;-)

 

said ... (30 December, 2005 12:32) : 

//"நீர்த்துப் போகச் செய்தவை" என்றும், "மொழியன்று" என்றும் வந்திருக்க வேண்டும்//

மிகச் சரி! :)

"அன்று", "அல்ல" ஆகிய சொற்களின் பயன்பாட்டைப் பற்றி மரத்தடியில் ஹரியண்ணா அருமையான விளக்கம் கொடுத்திருந்தார். சுட்டி: http://www.maraththadi.com/article.asp?id=2339

சு(கு)ட்டிக் காட்டியதற்கு நன்றி.

//இப்படி ஆளாளுக்கு மாறிமாறி அவ்வப்போது சுட்டிக்காட்டினாலே சிலராவது வழிக்கு வருவார்கள்//

நிச்சயம். நம்பிக்கை இருக்கிறது.

அன்புடன்
சுந்தர்.

 

said ... (30 December, 2005 13:02) : 

நண்பர்களே, தமிழன்பர்களே. சில நாட்களாக நானும் பல பதிவுகள் எழுதி வருகிறேன். இலக்கணத்தைக் கடைப்பிடிக்கிறேனா என்று தயைசெய்துப் பார்த்துச் சொல்லுங்கள்.

 

said ... (30 December, 2005 13:22) : 

//சிக்கலான இச்சந்தர்ப்பத்தில் சொற்களைப் புணர்த்தாமல் இரண்டையும் தனித்தனியே எழுதும்படி அறிவுறுத்துகின்றனர், காவல் துறை, கடல் தொழில் என்றவாறு.//

எனக்கு இதுவே சிறந்த அணுகுமுறையாகப் படுகிறது.

 

said ... (30 December, 2005 14:02) : 

'காவல் துறை', 'கடல் தொழில்' என்பனவற்றிலே 'ஒவ்வொரு சொல்லும்' தன்னளவிலே இரண்டு விடயங்களையோ பொருட்களையோ குறிக்கும் சொற்கள் அல்லவே? காவலுக்குரிய துறையினைக் குறிக்கும் ஒரு சொல்லும் கடலிலே தொழில் புரிவதைக் குறிப்பதற்கான ஒரு சொல்லும் ஆனவை. ஆகவே, காவற்றுறை, கடற்றொழில் என எழுதுவதே சரியான நிலை எனப் படுகிறது.

மற்றவர்களுக்குப் புரியவேண்டும் என்ற போர்வையிலே மொழியினை அநாவசியமாகச் சிதைப்பது முறையானதன்று.

சோம்பேறிகள் கற்றுக்கொள்ளட்டும்; சோம்பேறிகளுக்காக, கற்றதைக் கொல்லவேண்டாம் ;-))

 

said ... (30 December, 2005 20:09) : 

இறுதியாக வந்த அநாமதேய நண்பரே!
நீங்கள் சொல்வது சரி. அவை தனிப் பெயர்ச்சொற்களாகப் பார்க்கப்பட்டாற் போதும். தக்க சமயத்தில் தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.
உடனடியாக எனக்கு எடுத்துக்காட்டுக்கள் வரவில்லை.
"அதனாற்றான், சமயத்திற் றெளிவுபடுத்தியமைக்கு" என்பவை இப்போது எனக்கு ஞாபகம் வந்தவை.

இந்த அருமையான கருத்தை, பெயரைப்போட்டுச் சொல்லியிருக்கலாமேயென்று நான் சொல்லப்போவதில்லை. இதைச்சொல்வதாற் பயங்கரவாதியாகப் பார்க்கப்படக்கூடிய ஏதுநிலையை உங்கள் பின்னூட்டமே தெரியப்படுத்துகிறது:-)

 

said ... (30 December, 2005 20:58) : 

ஒரு அளவுக்கு மேல் புணர்ந்து எழுதினால் தீவரத் தமிழ் ஆர்வலர் என்று முத்திரை குத்தி விடுவார்கள்!! குழந்தைகளுக்காக எழுதும் போது பிரித்து எழுதுதல் நலம். மற்றபடி, சேர்த்து எழுதுவதே விரும்பத்தக்கது. அண்மைய காலங்களில் தமிழ்மணத்தில் ஒரே இலக்கண வகுப்புக்களாக இருக்கின்றன :)

 

said ... (30 December, 2005 22:36) : 

//குழந்தைகளுக்காக எழுதும் போது பிரித்து எழுதுதல் நலம். மற்றபடி, சேர்த்து எழுதுவதே விரும்பத்தக்கது//
சரியாகச் சொன்னீர்கள். சகல கலா வல்லி மாலை மூன்று விதமாகப் பிரித்து இங்கே பதிந்துள்ளேன்.

 

said ... (06 March, 2006 23:15) : 

எழுதிக்கொள்வது: treenatesan

இலக்கணத்தவறு என்று இதை அறுதியிட்டுக்கூற முடியாது. சங்கிலி எழுத்து மறைந்தது போல இதையும் மொழியின் வளர்ச்சி என்றுதான் கொள்ளவேண்டும். இல்லாவிடில் பாமரமக்கள் பேச்சுத்தமிழை இன்னும் சிதைத்து விடுவார்கள்

17.52 6.3.2006

 

said ... (17 March, 2006 03:51) : 

நான் தமிழ் இலக்கனம் படித்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆகிவிட்டன. பலதும் மறந்து போய்விட்டது.

யாராவது இலக்கணம் சொல்லித்தரும்படி பதிவு போட்டால் நல்லாருக்கும்.

இலக்கணம் கற்றுக்கொள்வதும் இ. பிழையின்றி எழுத முயல்வதும் நல்லது என்றே எண்ணுகிறேன். என்னை பொறுத்தவரை எழுத்தின் கரு இதை நிர்ணையிக்கவேண்டும்.

சில கருத்துக்களை பேச்சுத் தமிழில் சொல்வதுதான் இனிமை.

வலைப் பதிவுகள் ஒரு முறை சாரா எழுத்தாகத்தான் தோன்றுகிறது. எந்த ஒரு கட்டத்திற்குள்ளும் இதை நிறுத்தமுடியாது, இருப்பினும் முரையாய் எழுதிப் பழக இதுவே நல்ல தருணம்.

பாஸ்டன் பாலாவுக்கு யாரோ இலக்கணப் பிழைகளை குறித்து பின்னூட்டமிட்டிருந்தார்கள், எனக்கும் யாராவது எட்துச் சொன்னால் ஏற்றுக்கொள்வேன்.

 

said ... (17 March, 2006 07:32) : 

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிறில்.
முரை -> முறை.

 

said ... (17 March, 2006 10:22) : 

லகரத்துக்கும், ளகரத்துக்கும் இடையிலான இடைவெளி எனக்குப் புரிகின்றது. ஆனால் ழகரத்துக்கும் ளகரத்துக்குமான வித்தியாசம் எனக்குப் புரியவில்லை. ஒரு தமிழ் ஆசானைக் கேட்டபோது 'வாயைப்பயம்' என்றார். ஏன் வாய்க்கெல்லாம் பயங் கொள்ளுகின்றார் என யானறியேன். ழகரம் பற்றிக் கேட்க, ஏன் யகரம் பற்றிச் சொல்கின்றார்? மொழி மீதிலுள்ள பற்றினாலும் பித்தினாலும் ழகரம் தேவையென அவர் சொல்கின்றார் என்பது எனது தாழ்மையான கருத்து. ழகரம் தேவையில்லை என்று நான் சொன்னாலும் தமிள் என்று எழுத என்னிலேயே சிரிப்பு வருகின்றது.

ய்,ர்,ழ் ஆகிய மெய்யெழுத்துக்களுடன் மட்டும்தான் இன்னுமொரு மெய்யெழுத்துச் சேர்ந்துவரும்.
உ+ம்:
மிளகாய்ச்செடி
வாழ்க்கை
ஈர்ப்பு (யார் மீதென்பது &%^@#$^@#%F&^$%%#$#4$)

ஏனோ தெரியவில்லை...அந்த விதி எனக்குப் பிடிக்கின்றது. "காவல்த்துறை" என்று சொல்லின், உம்மை காவல்துறை பிடித்துக் கொண்டு போவதாக!

 

said ... (17 March, 2006 23:47) : 

கிசோ,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

'ள', 'ழ' என்பவற்றின் ஒலிகள் நிச்சயம் வேறுவேறானவைதான். இல்லாவிட்டால் 'ழ்' வல்லெழுத்துடன் புணரும்போது 'ட்' ஆகவேண்டுமென்று விதி இருந்திருக்கும்.

குறைந்தபட்சம் எழுத்தில் சொற்களின் வித்தியாசத்தை உணர்த்தவாவது ஈரெழுத்துக்களும் இருக்க வேண்டும். (வாழ், வாள்). 'ந', 'ன' கூட அப்படித்தான்.

காவல்'த்'துறை என்று எழுதுவது தவறு. காவற்றுறை என்பதே சரி. ஆனால் அச்சொல்லை உச்சரிக்கும்போது 'காவல்த்துறை என்றுதான் உச்சரிக்கிறோம். கற்றூண், மட்டூண் என்பவற்றையெல்லாம் பிரித்தெழுதக் கூடாத சொற்களாக அறிவிக்க வேண்டும். பிரித்தெழுதினால் காவற்றுறை கொண்டு போக வேண்டும்.

 

post a comment

© 2006  Thur Broeders

________________