Sunday, January 15, 2006

தமிழர் திருநாள் வாழ்த்துக்களும் சில நினைவுகளும்

வலைப்பதியும் அன்பர்கள் அனைவருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் தமிழர் திருநாள் வாழ்'த்'துக்கள்.


இங்கே வந்தபின் கடந்த வருடமும் இவ்வருடமும் நான் பொங்கவில்லை. கடந்தவருடம் சுனாமிச் சூழலில் பொங்க வேண்டுமென்று தோன்றவில்லை. இவ்வருடமும் ஏனோ தோன்றவில்லை.

ஊரில் பொங்கல் வெகு விமரிசையாகவே கொண்டாடப்படும். எங்கள் குடும்பம் கிறிஸ்தவக் குடும்பமென்றாலும் எல்லோரையும் போலவேதான் எங்களுக்கும் இந்நாள். 1990 இல்தான் யாழ்ப்பாணத்தில் தேவாலயங்களில் பொங்கல் கொண்டாடப்படத் தொடங்கியதென்று நினைக்கிறேன். ஆலயத்துக்குச் சென்றுகொண்டிருந்த சிறுவயதில் இவற்றிற் பங்கெடுத்த ஞாபகங்கள் சுவாரசியமானவை. பொங்கற்றினத்தன்று சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். பெரிய கிடாரங்களில் 'புக்கை' பொங்கப்படும். பின் திருப்பலி முடிய அனைவருக்கும் வழங்கப்படும். அதைத் தின்றுகொண்டு வீட்டுக்கு வந்தால் அக்கம்பக்கத்திலிருந்தும் வீட்டுக்குப் பொங்கல் வரும். (அப்போதெல்லாம் எங்கள் வீட்டிற் பொங்குவதில்லை.)

முதலாவது இடப்பெயர்வின் பின்தான் எங்கள் வீட்டிலும் பொங்கத் தொடங்கினோம். கோலம் போடுவதிலிருந்து எல்லாமிருக்கும். ஆனால் பிள்ளையார் பிடிப்பது, குறிப்பிட்ட திசையில் (கிழக்கென்று நினைக்கிறேன்) பொங்கிவழிய வேண்டுமென்று எதிர்பார்ப்பது (அதை உறுதிப்படுத்த அத்திசையில் பானையைச் சற்றுச் சரித்துவைப்பது:-)) மற்றும் தேவாரம் பாடுவது என்பவை மட்டும் கிடையா. (இந்தியாவைப் போற் குலவையிடுவது ஈழுத்தில் இல்லையென்று நினைக்கிறேன்)

அப்போது பட்டாசுக்கள் இல்லை. ஆனால் அந்தநேரத்தில் நாங்கள் பட்டாசு போல சத்தம் வரக்கூடிய மாதிரி ஒரு வெடி செய்து வெடிக்க வைப்போம். மெல்லிய அலுமினியக்குழாயுள் தீக்குச்சி மருந்தை நிறைத்து இருபக்கமும் அடைத்துவிட்டு நெருப்புத்தணல் மீது போட்டுவைத்துவிட்டால் அண்ணளவாக இருபது வினாடிகளில் வெடிக்கும். அதையே சிரட்டையோ சிறு பேணியோ கொண்டு மூடிவிட்டால் பெரிய சத்தம் வரும். அப்போது வானொலி திருத்தும் கடைகளிற் சென்று பழைய வானொலி அன்ரனாக்களை வாங்கிவந்து அவற்றைக் கொண்டே இந்த வெடிகளைச் செய்வோம்.
பொங்கலுக்கும் இப்படியான வெடிகளை வெடிக்க வைத்து மகிழ்வோம்.

வன்னி வந்தபின் எனது பொங்கற் கொண்டாட்டங்கள் பெரும்பாலும் நண்பர்களுடனேயே இருந்தன. ஒருமுறை பொங்கலின்போது அங்குநின்ற ஒருத்தனுக்கும் தேவாராம் தெரியாதென்று சொல்லிவிடவே, (அல்லது தெரிந்தும் பாடவிரும்பாமல் அப்படிச் சொல்லிவிட) என்ன செய்வதென்று யோசித்தோம். சரி, தேவாரமில்லாமலே பொங்கலைச் சாப்பிடுவோமென்று முடிவெடுத்தாலும் சிலர் விடுவதாயில்லை. ஏதாவது பாடித்தான் முடிக்க வேண்மென்று பிடிவாதமாய் நின்றனர். சரி, எல்லாருக்கும் பொதுவாக தான் ஒரு பாட்டுப்பாடுகிறேனென்று ஒருவன் தொடங்கினான்.

"ஆதியாய் அனாதியாய் அவதரித்த செந்தமிழ்
அன்புக்கு விளக்கேற்றி அறங்காத்த தெங்கள் தமிழ்
"

என்ற பாட்டைப் (காசி ஆனந்தன் எழுதி சாந்தன் பாடியதென்று நினைக்கிறேன்.) பாடி பொங்கலை உண்டோம். அன்றிலிருந்து அடுத்த இரு வருடங்கள் தேவாரத்தைவிட்டுவிட்டு அந்தப்பாட்டைப் பாடுவதை வழக்கமாகக் கொண்டோம்.

2004 இன் தைப்பொங்கல்தான் ஊரில் நான் கடைசியாகப் பொங்கிய பொங்கல். அன்று சுவாரசியமான சம்பவமொன்று நடந்தது. புக்கையைக் கிண்டிக் கொண்டிருந்த நண்பனொருவன் அகப்பையை அடுப்புக்கல்லின் மேல் சாய்த்து வைத்துவிட்டான். அடுத்ததடவை எடுத்து புக்கையுள் வைத்துக் கிண்டிவிட்டு அகப்பையை வெளியே எடுத்தபோது அகப்பைக்காம்பு மட்டுமே வந்தது. 'சிரட்டை கழன்றுவிட்டதாக்கும்' என்று நினைத்து (அகப்பை வாங்கிய கடைக்காரனையும் திட்டி) உடனே வோறோர் அகப்பையை வைத்துப் பொங்கலை ஒப்பேற்றினோம்.

"டேய் அவிஞ்ச சிரட்டை இன்னும் ருசியா இருக்கும்"
என்று பம்பலடித்துக்கொண்டோம்.
சாப்பிடுவதற்காகப் புக்கையை எடுக்கும்போதும் அச்சிரட்டை வரவேயில்லை. அதை யாரும் கண்டுகொண்டதாகவும் தெரியவில்லை.

சாப்பிடும்போதுதான் நடந்ததென்னவென்று புரிந்தது. ஆங்காங்கே சிறுசிறு கரித்துண்டுகள் கடிபடத் தொடங்கின. ஒரேயொரு விளிம்பு கருகிய சிரட்டைத் துண்டொன்று அகப்பட்டது. அகப்பையை அடுப்புக்கல்லின்மேல் வைக்கும்போது வெப்பத்துக்கு அச்சிரட்டை கருகிவிட்டது (எரியவில்லை). அடுத்தடவை புக்கையைக் கிண்டும்போது அது உடைந்துநொருங்கிவிட்டது.
-----------------------------------------------

வன்னியில் கோயில்களில் பொங்கல் கொண்டாடப்படுகிறதோ இல்லையோ போராளிகளின் முகாம்களில் அது கொண்டாடப்படும். முகாம் வாசலில் பெரிதாகக் கோலம்கூடப் போடுவார்கள். சண்டைக்காலத்தில் களமுனையிற்கூட பொங்குவார்களென்று கேள்விப்பட்டேன். கடந்தவருடம் பெண்போராளிகளின் முகாமொன்றில், பொங்கற்றிருநாளன்று எடுக்கப்பட்ட படங்களிவை.



படஉதவி: அருச்சுனா.

-------------------------------------------
இன்று கிளிநொச்சியில் மாபெரும் பொங்கல் விழா விடுதலைப்புலிகளால் நடத்தப்படுகிறது. விடுதலைப்புலிகளின் நிதித்துறை இவ்விழாவை ஒழுங்குசெய்துள்ளது.


கிளிநொச்சி மத்திய மைதானத்தில் இவ்விழாவுக்கான மேடையமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை இவ்விழா தொடங்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மைதானத்தைச் சூழவுள்ள பகுதிகளும் அலங்காரவளைவுகள் சகிதம் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் பேச்சுக்கள், கருத்தரங்கு என்பவற்றுடன், மாலையில் கலைநிகழ்வுகள் வானவேடிக்கைகள் என்பனவும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
--------------------------
தகவல், படங்கள்: சங்கதி.


எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"தமிழர் திருநாள் வாழ்த்துக்களும் சில நினைவுகளும்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (14 January, 2006 14:08) : 

எழுதிக்கொள்வது: கல்வெட்டு

வசந்தன்இ
உங்களது வசந்தம் பதிவிலேயே சொல்லிட்டேன் உங்களுக்கு வாழ்த்து.

ஃஃ"ஆதியாய் அனாதியாய் அவதரித்த செந்தமிழ்
அன்புக்கு விளக்கேற்றி அறங்காத்த தெங்கள் தமிழ்"ஃஃ

மிக அருமையான வரிகள்.

அனைத்து தமிழர்களும் சிறந்து வாழஇதமிழர் திருநாளாம் விவசாயிகளின் நன்றித் திருநாளான பொங்கல் நாளில்..உங்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துகள்.உங்கள் நண்பர்களுக்கும்இ உறவினர்களுக்கும் மகிழ்ச்சியும்இஅன்பும் மற்றும் எல்லா வளங்களும் பொங்கல் போல் என்றும் பொங்கட்டும்.
அன்புடன்இ
கல்வெட்டு (எ) பலூன் மாமா.

22.35 13.1.2006

 

said ... (14 January, 2006 14:44) : 

எழுதிக்கொள்வது: துளசி கோபால்

வசந்தன்இ

நல்ல பதிவு. பழைய நினைவுகள் எப்பவுமே அருமைதான். ஏன் பொங்காம விட்டீர்கள்? இனி அப்படி விடாதீங்கோ.

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் துள

17.7 14.1.2006

 

said ... (14 January, 2006 15:49) : 

வசந்தன்,

உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

அன்புடன்
பரஞ்சோதி

 

said ... (14 January, 2006 18:42) : 

ம்..பழையபடி ஒரு நிலைக்கு வந்திட்டீர்..தொடர்ந்து எழுதும்! உம்மடை பக்கத்தை இப்ப கன பேர் பாக்கிற படியாலை உம்மடை பக்கத்தில என்ர பக்கத்துக்கு ஒரு விளம்பரம் போடலாம் எண்டு இருக்கிறன். எவ்வளவு கேக்கிறீர்

 

said ... (14 January, 2006 21:51) : 

எழுதிக்கொள்வது: தருமி

வசந்தன்,
பொங்கல் பானையில் பொங்கினால்தானா, என்ன?

பொங்கல் வாழ்த்துக்கள்.
என்றும், எங்கும் மங்க

16.43 14.1.2006

 

said ... (14 January, 2006 21:53) : 

வசந்தன்,
பொங்கல் பானையில் பொங்கினால்தானா, என்ன?

பொங்கல் வாழ்த்துக்கள்.
என்றும், எங்கும் மங்களம் செழிக்க...

 

said ... (14 January, 2006 23:33) : 

இப்பதிவுக்கு வந்து பின்னூட்டமிட்டவர்களே,
எங்கிருந்து இப்பக்கத்துக்கு வந்தீர்கள்?
அதாவது எப்படி இந்தப்பக்கத்துக்கு வந்தீர்களென்று கேட்டேன். காரணம், எனது இப்பதிவு நந்தவனத்தில் திரட்டப்பட்டதாகத் தெரியவில்லை. (என்ன சிக்கலென்று இதுவரை புரியவில்லை.) அப்படியிருக்க நீங்கள் எப்படி வந்தீர்களென்று அறிய ஆவல்.
தற்செயலாக நந்தவனத்தில் திரட்டப்பட்டு நான் தான் பார்க்கவில்லையோ தெரியவில்லை.
அல்லது தேன்கூடு போன்று வேறு வழியால் வந்தீர்களா?

-குழப்பமுடன்_
வசந்தன்.

 

said ... (14 January, 2006 23:59) : 

நந்தவனக் காற்று தான் இங்கு கொண்டுவந்து சேர்த்தது .

உங்களுக்கு எம் பொங்கல் வாழ்த்துக்கள்

-அன்புடன் இளந்திரையன் + குடும்பம்

 

said ... (15 January, 2006 00:07) : 

வசந்தன்,
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

 

said ... (15 January, 2006 00:17) : 

எழுதிக்கொள்வது: குமரன்

அன்பு வசந்தன். உங்களுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளும். நீங்களும் வாழ்த்துக்கள் என்று ஒற்று மிகுந்து எழுதியிருக்கிறீர்களே? அது தான் இலக்கணப் படி சரியா? கொஞ்சம் விளக்குகிறீர்களா?

ஏன் வாழ்'த்'துக்கள் என்று எழுதியிருக்கிறீர்கள் என்பதையும் கொஞ்சம் சொல்லுங்கள். எனக்குப் புரியவில்லை.

7.32 14.1.2006

 

said ... (15 January, 2006 00:17) : 

அன்பு வசந்தன். உங்களுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளும். நீங்களும் வாழ்த்துக்கள் என்று ஒற்று மிகுந்து எழுதியிருக்கிறீர்களே? அது தான் இலக்கணப் படி சரியா? கொஞ்சம் விளக்குகிறீர்களா?

ஏன் வாழ்'த்'துக்கள் என்று எழுதியிருக்கிறீர்கள் என்பதையும் கொஞ்சம் சொல்லுங்கள். எனக்குப் புரியவில்லை.

 

said ... (15 January, 2006 00:21) : 

வசந்தன்,
நான் முதலில் பின்னூட்டம் இடும் போது இது திரட்டப்படவில்லை. வசந்தத்தைத் தேடி வந்தேன்
நந்தவனத்தில் இப்போது (8:46 AM EST) முதலாகத் தெரிவது உங்கள் பதிவுதான். :-)))

 

said ... (15 January, 2006 00:38) : 

ஸ்ரீரங்கன், வசந்தன் உங்கள் இருவரின் பதிவு, மறுமொழி எல்லாம் நந்தவனத்தில் வருகிறதே? இதை கிளிக்கிப் பாருங்கள்.

http://www.thamizmanam.com

 

said ... (15 January, 2006 00:41) : 

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

இப்பதிவு கிட்டத்தட்ட பன்னிரண்டு மணித்தியாலங்களின் பின்தான் தமிழ்மண/நந்தவனத் திரட்டியில் வந்துள்ளது. முன்பு வரவில்லை. ஆனாற் சில பின்னூட்டங்கள் வந்திருந்தன. அதுதான் குழம்பிப்போனேன். இப்போது திரட்டப்பட்டுவிட்டது.
இது பற்றிய என் ஆராய்ச்சி முடிவின்படி, பதிவைப்போட்டாலும் தமிழ்மணத்திற் சென்று எமது உரலைக் கொடுத்தபின் எம் பதிவை வகைப்படுத்தியபின்பே அது திரட்டுகிறது. இப்படித்தான் இப்போது புரிந்து வைத்துள்ளேன். சரியா தவறா தெரியவில்லை. சயந்தனுக்கும் இதுதான் நடந்தது. போகப்போக எல்லாம் புரிந்துவிடும்.

 

said ... (15 January, 2006 00:55) : 

குமரனுக்கு,
வாழ்த்துக்களை ஒற்றுமிகும் வண்ணமே எழுதுகிறேன். இதுபற்றி குமரனுட்பட பலர் விவாதித்ததைப் பார்த்திருந்தேன். அதுதான் ஒற்றை மேற்கோட்குறிக்குட் போட்டேன்.
ஆனாலும் எனக்கு எது சரியென்று சந்தேகமே. அங்கே, 'குழந்தைகள்' என்பதை எடுத்துக்காட்டி வாழ்த்துகள் என்றே வருமென்று சொன்னார்கள். என் பழக்கத்திலிருந்தே வாழ்த்துக்களுக்கு ஒற்று மிகவைத்து எழுதுகிறேன். வேறும் சில சொற்களை இப்படி எழுதுகிறேன்.
குறிப்புக்கள்
பாட்டுக்கள்
கூற்றுக்கள்

மேற்கண்டவற்றுக்கு ஒற்று மிகவைத்தே எழுதுகிறேன் (எல்லாம் பழக்கத்தால் மட்டுமே). இவற்றில் இப்போது மேற்கண்ட சொற்களில் எனக்குப்பட்ட ஒற்றுமைகள் என்னவென்றால் ஒருமையாக வரும் சொற்கள் (குறிப்பு, பாட்டு, கூற்று) தன்னின மெய்யைத் தொடர்ந்து உகரத்தில் முடிவன. 'குழந்தை' அப்படியன்று.

இக்குழப்பம் பற்றி தெருத்தொண்டன் ஏற்கெனவே கேட்டிருந்தார். எனக்கு இதுபற்றித் தெரியாததால் ஏதும் சொல்லவில்லை. குற்றியலுகரத்துடன் சம்பந்தப்பட்டு ஒரு விதி இதற்கு இருக்குமென்று நினைக்கிறேன். யாராவது தெரிந்தவர்கள் சரியான விளக்கத்தைச் சொன்னால் நன்று.

"குழந்தை" என்ற சொல்லுடன் ஒப்பிட்டு இவற்றுக்கு ஒற்றுமிகாது என்று சொல்வது என்னைப்பொறுத்தவரை வெறும் தட்டையான விளக்கமே. ஒற்றுமிகாது என்றிருந்தாலும் சரியான விளக்கத்தை நான் எதிர்பார்க்கிறேன்.

எனக்கெல்லாம் இலக்கண அறிவு தொடக்க நிலைதான். ஆர்வத்தால் அறிந்துகொண்டவைதான் (பாடசாலையிற் படித்தவை மண்டையில் ஏறவில்லை) அதிகம்.
----------------------------------------
மற்றவர்களுக்கு ஆறுதலாக வந்து பதிலளிக்கிறேன்.

 

said ... (15 January, 2006 01:18) : 

//(பாடசாலையிற் படித்தவை மண்டையில் ஏறவில்லை) //
எனக்கும் அதே நிலைதான் :-(((
ஒற்று -- உங்களைப்போல் எனக்கும் குழப்பமே.

 

said ... (15 January, 2006 07:00) : 

VASANTHAN

ARE YOU FROM CHILLAI(JAFFNA)?

 

said ... (15 January, 2006 09:36) : 

ஐயா அநாமதேயம்,
நான் சில்லாலை இல்லை.
பக்கத்திலதான்.
தாங்கள் ஆரெண்டு தெரியேல.
வேணுமெண்டா பக்கத்தில இருக்கிற முகவரிக்கு மின்னஞ்சல் போடுங்கோவன்.

 

said ... (15 January, 2006 22:46) : 

கல்வெட்டு, உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

துளசி, உங்கள் வாழ்த்துக்கு நன்றி. அடுத்த முறை 'பொங்கு'கிறேன்.

பரஞ்சோதி உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

சயந்தன் உம்மட கருத்துக்கு நன்றி.
//ம்..பழையபடி ஒரு நிலைக்கு வந்திட்டீர்.//
அப்ப இவ்வளவு நாளும் எத்தினை நிலைகளில இருந்தனான்?
விளம்பரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா.

தருமி, உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

இளந்திரையன் உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

ஜோ, உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

குமரன், உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

உஷா, உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

 

said ... (16 January, 2006 01:44) : 

மேலேயிருக்கிற பின்னூட்டத்தை துளிசி பாணியில் எழுதியிருந்தால் ஒன்பது பின்னூட்டங்கள் போட்டிருக்கலாம். தவறவிட்டுவிட்டீர்களே?

 

said ... (16 January, 2006 06:56) : 

அன்னானி அவர்களே,
//பின்னூட்டத்தை துளிசி பாணியில் எழுதியிருந்தால் ஒன்பது ....//

துளசி பதிவுலே போய்ப் பாருங்க. எத்தனை எண்ணீக்கையைத் தவறவிட்டுட்டாங்கன்னு தெரியும்(-:

 

said ... (16 January, 2006 11:39) : 

ஐயா/அம்மா அநாமதேயம்,
துளசியம்மா இப்ப நிறைய மாற்றம். இந்த நேரத்தில நீங்கள் பழைய துளிசயம்மாவை நினைச்சுக்கொண்டு இப்படிச் சொல்லுறது சரியில்லை. பாருங்கோ, அவ கோவிச்சுக்கொண்டு போயிட்டா.
எண்டாலும் துளிசியம்மா அல்லது அக்கா எண்டு கூப்பிடாம, துளிசியெண்டு எழுதிறதில ஓரளவுக்கு உங்களைக் காட்டுக்குடுக்குது போல.
:-)

 

said ... (17 January, 2006 03:22) : 

வசந்தன், ஊருக்கெல்லாம் பொங்கல் வாழ்த்து சொன்னேன். உங்கள் பதிவை எப்படி விட்டேன்.

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் வசந்தன்.

பிறகு ஒரு விஷயம். பாட்டுக்கள் கூத்துக்கள் இல்லை. பாட்டுகள் கூத்துகள். இதற்கான இலக்கணம் எனக்கு மறந்து விட்டது. இலக்கணப் புத்தகத்தைத் தேட வேண்டும். ஆனால் ஒற்று இங்கு அள்பெடுக்காது என்பது நினைவிருக்கிறது. உங்களுக்கு விடை சொல்வதற்காகவது நான் இலக்கண நூலைத் தேடி அலைய வேண்டும் போல. தேடத் தொடங்குகிறேன். கிடைத்ததும் இடுகிறேன்.

 

said ... (17 January, 2006 04:55) : 

//பொங்கிவழிய வேண்டுமென்று எதிர்பார்ப்பது (அதை உறுதிப்படுத்த அத்திசையில் பானையைச் சற்றுச் சரித்துவைப்பது:-)) //

நல்லாத்தான் பொங்கள் வைப்பதை பார்த்திருக்கிறீர்கள். தைப் பொங்கள் வாழ்த்துக்கள் (இராகவனும் இப்பக்கம் வரட்டும் என்றுதான்).

 

said ... (17 January, 2006 04:56) : 

அடடே வந்துட்டாரா?., oopps

 

said ... (17 January, 2006 04:57) : 

பொங்கல் ... ஐய... இன்னைக்கு என்னாச்சு எனக்கு?

 

said ... (18 January, 2006 00:10) : 

// நல்லாத்தான் பொங்கள் வைப்பதை பார்த்திருக்கிறீர்கள். தைப் பொங்கள் வாழ்த்துக்கள் (இராகவனும் இப்பக்கம் வரட்டும் என்றுதான்). //

வந்துட்டேனய்யா வந்துட்டேன்.....பொங்களில் இருக்கும் கள்ளை விலக்கிக் கல்லைச் சேருங்கள். ரேஷன் அரிசியில் இருக்கும் கல் பொங்கலிலும் இருக்கலாம் தானே!

 

said ... (18 January, 2006 11:30) : 

இராகவன், அப்படிப்போடு,
உங்கள் வரவுக்கு நன்றி.
இராகவன்,
உங்கள் விளக்கத்தை எதிர்பார்க்கிறேன். நான் பழக்கத்தில் அப்படி எழுதுகிறேன். இப்போது எனக்கும் எது சரியென்பதில் சந்தேகம் இருக்கிறது. இராம.கி. அவர்களிடமும் கேட்டுள்ளேன். உறுதிப்படுத்தும்வரை என் இயல்பிலேயே எழுத எண்ணியுள்ளேன்.

"கள்" என்பதற்குச் சிறப்பு விதியேதும் இருக்கிறதா தெரியவில்லை. இல்லாவிட்டால் இயல்பாக நான் மேற்கூறிய சொற்களுக்குப்பின்னால் வல்லினங்கள் வரும்போது வலிமிகுந்தே வருகிறது.
பாட்டு + பாடு = பாட்டுப்பாடு
பாட்டு + கட்டு + பாட்டுக்கட்டு
வாழ்த்து + பா = வாழ்த்துப்பா

இதைப்போலவே கள் என்பதும் புணரும்போது வலிமிகுமோ என்று யோசிக்கிறேன்.
அதாவது நான் சொன்ன வன்றொடர்க் குற்றியலுகரங்களுக்குப்பின்னால்(முன்னாலென்றும் சொல்லலாம்) 'கசதப' வரும்போது வல்லினம் மிகும் என்ற விதிக்கமையவே கள் என்பதையும் வலிமிகுந்து புணர்த்துவதாக நினைக்கிறேன்.
இவ்விதி 'கள்' தவிர்ந்த சொற்களுக்குத்தான் பொருந்துமென்றால் இராகவன் சொன்னபடி ஒற்றுமிகாது. இல்லாத பட்சத்தில் ஒற்று மிகுந்தே வரும் என்று நான் புரிந்துகொண்டுள்ளேன்.

இங்கே குழந்தை என்ற சொல்லையும் வாழ்த்து என்ற சொல்லையும் ஒப்பிட்டுக் கருத்துச் சொல்வது சரியன்று. ஒற்றுமிகுவதில் குற்றியலுகரச் சொற்கள் முக்கியமானவை. குழந்தை என்ற சொல் அப்படியன்று.
----------------------------------------
அப்படிப்போடு, பின்னூட்டுக்கு நன்றி.

 

post a comment

© 2006  Thur Broeders

________________