Tuesday, January 17, 2006

போஜன் மாஸ்டரின் குடும்பத்தினர் சுட்டுக்கொலை.

நேற்றிரவு யாழ்ப்பாணம் மானிப்பாயில் நடைபெற்ற படுகொலைச் சம்பவமொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் கொல்லப்பட்டனர், இருவர் காயமடைந்தனர். 15.01.2006 -ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45 மணியளவில் வீட்டுக்குட் புகுந்த ஆயுததாரிகள் அவர்கள்மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூட்டை நடத்தினார்கள்.

யாழ்ப்பாணத்தில் - குறிப்பாக வலிகாமத்தில் தொன்னூறுகளில் மாணவராயிருந்தவர்களுக்கு போஜன் மாஸ்டரைத் தெரியாமலிருக்க முடியாது.
சகவலைப்பதிவாள் டி.சே. தமிழனுக்கு நன்றாகத் தெரியுமென்று நினைக்கிறேன். கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாக் கொண்டவர். நாங்களெல்லாம் சாரணராகத்தான் அவரை அறிமுகப்படுத்திக்கொண்டோம். தன்னார்வத் தொண்டுக்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். தற்போது யாழ்ப்பாண சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் பிரிவின் யாழ்மாவட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளர் ஆவார்.
யுத்த காலத்தில் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் முதலுதவிப் பயிற்சிகளை வழங்கிவந்தார். வலிகாம இடப்பெயர்வின் பின் மானிப்பாயிலேயே அவரது குடும்பம் தங்கியிருந்ததாக அறிகிறேன்.
சுட்டுக்கொல்லப்பட்டவர்கள்,
அவரது மனைவியான போஜன் அர்த்தநாகேஸ்வரி (வயது 51),
மகள்களான போஜன் ரேணுகா (வயது 30), போஜன் சானுகா(வயது 23).
இவர்களின் ரேணுகா என்பவர் விடுதலைப் புலிகளின் நிதர்சனம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட "அம்மா நலமா?" (சிறிரங்ன் முன்பொரு முறை பின்னூட்டத்தில் எழுதிய படம்) என்ற திரைப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
காயமடைந்தவர்கள் போஜன் மாஸ்டரும் அவரது மகனுமாவர்.
இவரின் இன்னொரு மகன் போராளியாயிருந்தது தெரியும்.

இப்படுகொலைகளின் பின்னணியில் இராணுவப்புலனாய்வுத் துறையும் ஈ.பி.டி.பியும் இருப்பதாக நம்பப்படுகிறது.
---------------------------------------
யாழ்ப்பாணத்தில் சாரணர்களின் வளர்ச்சிக்கும் அவர்களின் செயற்பாட்டுக்கும் அடித்தளமாகவும் முக்கிய புள்ளியாகவுமிருந்து செயற்பட்டவர் போஜன் மாஸ்டர். போர்க்காலத்தில் சாரணர்களினதும் முதலுதவிப் பயிற்சி முகாம்களினதும் இரத்ததான முகாம்களினதும் முக்கியத்துவம் யாவரும் அறிந்ததே. 1991 இல் ஆகாயக் கடல்வெளிச் சமரின்போது காயப்பட்டவர்களை யாழ்.மருத்துவனைக்கு எடுத்து வரும் வழிநெடுக மைல்கணக்கில் சாரணர்களே வீதியொழுங்கைப் பேணினார்களென்பது குறிப்பிடத்தக்கது.
-------------------------------------
கொல்லப்பட்ட போஜன் மாஸ்டரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அஞ்சலி.
-------------------------------------
மூலச் செய்தி: புதினம்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"போஜன் மாஸ்டரின் குடும்பத்தினர் சுட்டுக்கொலை." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (17 January, 2006 03:14) : 

எழுதிக்கொள்வது: kulakaddan

அன்னாரது குடும்பத்துக்கு அஞ்சலி.
அது சரி ஏன் வசந்தன் இதை நகைச்சுவை/நையாண்டிக்க போட்டிருக்கு????

17.41 16.1.2006

 

said ... (17 January, 2006 04:06) : 

வசந்தன் தகவலுக்கு நன்றி.

போஜன் மாஸ்ரை நன்கு தெரியும். 1985 இல் வடமராட்சியில் சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் பிரிவினை அறிமுகப்படுத்தியவர், அதற்காக பெரிதும் பாடுபட்டவர்.

ஆயுள் வேதக் கல்லூரி சுகந்தன் இன்னாசித்தம்பி அவர்களுடன் சேர்ந்து பணியாற்றியவர்.

அவரது குடும்பத்திற்கு அஞ்சலி.

 

said ... (17 January, 2006 09:32) : 

பின்னூட்டங்களுக்கு நன்றி.

குளக்காட்டான்,
நான் இதை வகைப்படுத்தவில்லை. பதிவைப் போட்டுவிட்டு போய்ப்படுத்துவிட்டேன். இப்போதுதான் வந்து பார்க்கிறேன்.
யாரோ இதற்கென்றே திரிகிறார்கள் போலுள்ளது. ஏற்கனவே முகமூடி, பத்ரி உட்பட பலருக்கு இப்படி வகைப்படுத்தியிருக்கிறார்கள்.
பதிவு போட்டவுடனேயே வகைப்படுத்தாமல் விட்டது என் குறைதான்.

 

said ... (17 January, 2006 10:03) : 

அன்னார் குடும்பத்திற்கு எமது அஞ்சலிகள்.

 

said ... (17 January, 2006 13:08) : 

எழுதிக்கொள்வது: இளந்திரையன்

என்று முடியும் இந்த இதயத்து வேதனைகள். ஆழ்ந்த அனுதாபங்கள்

18.33 16.1.2006

 

said ... (17 January, 2006 13:21) : 

I wish to jion with you all to convey my heart felt condolences
to the family.

 

said ... (17 January, 2006 14:48) : 

வசந்தன், இந்தச் செய்தியை நேற்று அறிந்தபோது....பதிவில் போடவேண்டும் என்று நினனத்திருந்தாலும், அதன் பாதிப்பும் பதிவாய் போட்டாலும் ஒரு செய்தியாகவும் கொலைகள் எண்ணிக்கையாக மட்டுமே கணக்கிலெடுக்கப்படும் என்ற் வெறுமையில் ஒருவருக்கு மெயிலாக மட்டும் இந்த விடயத்தை எழுதியிருந்தேன்.
..........
எனக்கு மட்டுமன்று எங்கள் குடும்பத்தினருக்கும் போஜன் அவர்களின் குடும்பத்தினரை நன்கு தெரியும். போயன் மாஸ்ரர் எங்கள் அம்மாவோடுதான் படித்தவர். உல்லாசன்,போராளியான அவரது தமையன், கொல்லப்பட்ட அவரது இளைய சகோதரி போன்றவருடன் நல்ல பழக்கம் பாடசாலையில் படித்த காலத்தில் இருந்தது.
....
கொலைகளைக் கண்டிப்பதையும், அதற்காய் வருந்துவதையும் தவிர வேறென்னத்தைச் செய்யமுடியும் இந்தக்கணத்தில் :-(?

 

said ... (18 January, 2006 10:06) : 

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

டி.சே,
உல்லாசன் சிலநாட்கள் என்னோடு ஒரே வகுப்பிற் படித்தவர்.
அவரது தமையன் போராளியாயிருந்தது தெரியுமென்று என் பதிவிற் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அவர் மாவீரர் என்று சங்கதி செய்தித்தளம் சொல்லியுள்ளதை இப்போதுதான் பார்த்தேன்.
1997 இன் நடுப்பகுதியில் அவரைக் கண்டிருக்கிறேன். எங்கே எப்போது வீரச்சாவடைந்தாரென்று தெரியவில்லை.
------------------------------------------
என்தரப்பில் இழக்கப்படும் உயிர்களுக்காக மற்றவர்முன் ஒப்பாரி வைக்கும் நிலையில் நானில்லை. அவற்றைக் கண்டித்துப் பதிவுகூட போட விரும்பவில்லை. எல்லாக் கொலைகளையும் கண்டிக்கிறேன் என்று என்னளவில் பொய் சொல்லவும் விரும்பவில்லை. அதையொரு செய்தியாகச் சொல்ல முயற்சிப்பதைத் தாண்டி எந்த நோக்கமுமில்லை.

என்னளவிலே என்ன நடக்க வேண்டுமென்பதிலும் எது நடக்கப்போகிறதென்பதிலும் மிகமிகத் தெளிவாகவே இருக்கிறேன்.

 

said ... (18 January, 2006 11:00) : 

//என்தரப்பில் இழக்கப்படும் உயிர்களுக்காக மற்றவர்முன் ஒப்பாரி வைக்கும் நிலையில் நானில்லை. அவற்றைக் கண்டித்துப் பதிவுகூட போட விரும்பவில்லை. எல்லாக் கொலைகளையும் கண்டிக்கிறேன் என்று என்னளவில் பொய் சொல்லவும் விரும்பவில்லை. அதையொரு செய்தியாகச் சொல்ல முயற்சிப்பதைத் தாண்டி எந்த நோக்கமுமில்லை.

என்னளவிலே என்ன நடக்க வேண்டுமென்பதிலும் எது நடக்கப்போகிறதென்பதிலும் மிகமிகத் தெளிவாகவே இருக்கிறேன். //

I appriciate your post and this understanding.

 

said ... (13 March, 2006 21:15) : 

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தங்கமணி.

 

post a comment

© 2006  Thur Broeders

________________