Monday, January 16, 2006

மெல்பேணில் தைத்திருநாள் விழா.

"விக்ரோறிய தமிழ் கலாச்சார கழகம்" (இப்படித்தான் எழுதுகிறார்கள்) என்ற அமைப்பு நடத்திய தைப்பொங்கல் விழா 14.01.2006 அன்று மாலை மெல்பேணில் நடைபெற்றது. இது இக்கழகத்தால் நடத்தப்படும் பதின்மூன்றாவது தைப்பொங்கல் விழாவாகும்.

மாலை ஏழு மணியளவில் தொடங்கிய இந்நிகழ்வில் ஐநூறு வரையான தமிழர்கள் பங்குபற்றினர்.(இத்தொகை நான் எதிர்பாராதது) சிறப்பு விருந்தினர்களாக ஒஸ்ரேலியப் பாராளுமன்ற உறுப்பினரொருவர் உட்பட சில முக்கிய நிலைகளிலிருக்கும் ஒஸ்ரேலியரும் வந்திருந்தனர்.
அண்மையில் மட்டக்களப்பிற் சுட்டுக்கொல்லப்பட் மாமனிதர் ஜோசப் பரராசசிங்கம் அவர்களுக்கு அகவணக்கத்தோடு நிகழ்வு தொடங்கியது. தொடர்ந்து கலைநிகழ்வுகள் நடைபெற்றன.

இடையில் சிறப்பு விருந்தினரான ஒஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினரின் உரை இடம்பெற்றது. ஜோசப் பரராசசிங்கததைப் பற்றிக் கதைத்தார். இரு மாதங்களின் முன் அவர் மெல்பேண் வந்தபோது தன்னை வந்து சந்தித்ததையும் சொல்லி அவரின் உழைப்பு, விருப்பம் என்பவற்றையும் சொன்னார்.

இந்நிகழ்வில் கலாநிதி முருகர் துரைசிங்கம் அவர்கள் எழுதிய "இலங்கைத் தமிழர் வரலாற்று மூலங்கள்" என்ற உலகந்தழுவிய ஆய்வு நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. ஏற்கெனவே வன்னியுட்பட வேறுசில இடங்களில் வெளியிட்டப்பட்டிருந்தாலும் ஒஸ்ரேலியாவில் இது இப்போது தான் வெளியிடப்படுகிறது.

அந்நூலாசிரியரின் உரையும், இன்னொருவரின் மதிப்புரையும் இடம்பெற்றது. ஆனால் இவை மிகமிகக் குறுகிய நேரமே நடைபெற்றது. நாட்டியங்களைக் குறைத்து இதற்கு அதிக நேரம் ஒதுக்கியிருக்கலாமென்று பட்டது.

படத்தில் இடப்பக்கமிருப்பவர்தான் நூலின் ஆசிரியர்.
----------------------------------

அப்புத்தகம் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிடப்பட்டது. அதுவும் ஒரே புத்தகமாக. புத்தகத்தின் முதற்பாகம் ஆங்கிலத்திலும் அதன் தமிழ்வடிவம் அடுத்த பாகமாகவும் அச்சாகியுள்ளது. மிகத்தரமான அட்டைவடிவமைப்புடன் மிகமிக நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது இப்புத்தகம். தமிழ், ஆங்கிலம் இரண்டையும் சேர்த்து மொத்தம் 368 பக்கங்கள் மட்டுமே கொண்டது இப்புத்தகம்.

மேலோட்டமாகப் பார்த்ததில் அண்மைய சில நூற்றாண்டுகளை மாத்திரமே கருத்திற்கொண்டுள்ளதாகப் படுகிறது. அதாவது பழைய காலத்துக்குச் சென்று வரலாற்றைத் தோண்டாமல், மிகக்கிட்டவாக நிகழ்ந்தவற்றைத் தொகுத்துள்ளதாகப்படுகிறது. அவரே குறிப்பிடுவதைப்போல் "இலங்கைத் தமிழரின் நவீன அரசியல் வரலாறு" என்ற நிலையில்தான் இப்புத்தகம் ஆக்கப்பட்டுதாக நினைக்கிறேன். முழுதும் படித்தால்தான் புரியும்.

இப்புத்தகம் ஈராண்டுகால முயற்சியென்று சொன்னார்கள். இதற்காக பல்வேறு நாடுகளுக்கும் நூலகங்களுக்கும் சென்று ஆராய்ந்ததாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக ஐரோப்பிய, அமெரிக்க நூலகங்களில் பெருமளவு நேரம் செலவழிக்கப்பட்டுள்ளது. யாழ் நூல்நிலைய எரித்தழிப்போடு ஈழத்தமிழரின் முக்கிய வரலாற்று அத்தாட்சிகளும் அழிந்தன என்பதைக் குறிப்பிடுகிறார்.

இடையில் பணப்பற்றாக்குறை வந்து திண்டாடியபோது, சிலர் உதவியுள்ளார்கள். வானொலியில் இத்திட்டம் பற்றிய நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இதில் அவர் சொல்லும் க.பிரபா (இளங்கல்விமான், இன்பத்தமிழ் வானொலி அறிவிப்பாளர்) என்பவர் தற்போது சிட்னியிலிருந்து வலைப்பதியும் கானா.பிரபா தானா என்று தெரியவில்லை.

ஆசிரியரே சொன்னதுபோல, இது முழுமையற்ற முயற்சிதான். தனியொருவனால் எல்லாவற்றையும் ஆராய்ந்து முடிக்க முடியுமென்பது இயலாதது. இதுக்கொரு குழு அமைத்து மிகவிரிவான ஆராய்ச்சிகளோடு ஆக்கங்கள் வெளியிடப்படவேண்டும்.

இப்புத்தகம் பற்றி விடயமறிந்தவர்கள் யாராவது ஒரு விமர்சனம் செய்யலாமே?
---------------------------------
இறுதியில் விழா கொத்துரொட்டியோடு இனிதே நிறைவுற்றது.
---------------------------------
படங்கள்:
பெரிதாய்ப்பார்க்க படத்தின் மேலழுத்தவும்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"மெல்பேணில் தைத்திருநாள் விழா." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (17 January, 2006 08:38) : 

இன்பத்தமிழ் ஒலி கானா பிரபா எனில் இவர் அவரே! அல்லது அவர் இவரே

 

said ... (17 January, 2006 09:34) : 

தெளிவுபடுத்தியமைக்கு நன்றி சயந்தன்.
எண்டாலும் அவரா வந்து சொல்லிறது நம்பகத்தன்மையாயிருக்கும்.
அதுக்காக உம்மை நான் நம்பேல எண்டு இல்லை.:-)

 

said ... (17 January, 2006 09:51) : 

வணக்கம் வசந்தன்,
நீங்கள் சந்தேகம் எழுப்பியதால் உறுதிப்படுத்துகின்றேன்.
எமது வானொலியின் கருத்துக் களம் நிகழ்ச்சியில் கடந்த ஓகஸ்ட் மாதம் " இதுவரை வெளிவந்த ஈழத்து போராட்டம் சார்ந்த படைப்புக்கள்" என்ற தலைப்பில் நேயர்களுடன் கலந்துரையாடல் நிகழ்விற்கு திரு குணசிங்கம் அவர்களை அழைத்து வந்து ஆரம்பித்திருந்தேன். அப்போது அவரின் இந்த முயற்சி பற்றி அறிந்து என்னால் செய்யக்கூடிய உதவியாக இதைச் செய்தேன். இதற்கு பெரிதும் துணை நின்றது நண்பரின் தமிழ்நாதம் தளம்.
திரு குணசிங்கம் அவர்கள் நன்றி தெரிவித்தது அவரின் பெருந்தன்மை.
தயவு செய்து இதை நான் எழுதியதைத் தற்பெருமையாக நினைக்கவேண்டாம்.

 

post a comment

© 2006  Thur Broeders

________________