எலியுஞ் சேவலும் -பாகம் இரண்டு
நாலாங்காட்சித் தொடர்ச்சி...... முந்தைய பதிவுக்கு இங்கே செல்லவும். (சேவல் கொக்கரித்ததைத் தொடர்ந்து சேயெலி வெருண்டு தாயைக் கூப்பிட்டுக் கொண்டு ஓடுகிறது.) சேயெலி: ஓடிவாருவாயம்மா உள்ளங் கலங்குதம்மா வாடி நடுங்குகின்றேன் வந்துபயம் தீருமம்மா மேவி ஒருவனம்மா விண்ணதிரச் சத்தமிட்டான் ஆவி அகத்ததோ புறத்ததோ அன்னையே வாரும் (தாயெலி வந்து சேயெலியைத் தழுவிக்கொண்டு வினாவுகிறது). தாயெலி: அன்பு மிகுந்த என் செல்வா - என்ன ஆபத்து நேர்ந்த தறிந்திடச் சொல்வாய் என்பு முரிந்திட வோடி - இங்கே இரக்கியே வந்தனை யேங்கியே வாடி (சேயெலி தன்னைப் பயப்படுத்திய சேவலைப் பற்றி விவரிக்கிறது. *வினாவிசைக்குறி - கேள்விக்குறி.) சேயெலி: கொண்டையி லிரத்தந் தோய்ந்த கூரிய வாளொன் றுண்டு கண்டத்தி லிரண்டு கத்தி கட்டியே தூங்கு மம்மா சண்டைசெய் வீரன் போலச் சடசட வென்ற டித்து விண்டது பெரிய சத்தம் மெய்ம்மறந் தறிவு சோர்ந்தேன். விடுவிடு என்றுகை தட்டி - அம்மா *வினாவிசைக் குறிபோற் கழுத்தை வளைத்துக் கொடுமைசெய் கூற்றுவன் போல - வந்து கூவினதே யொரு பொல்லாப் பிராணி அல்லாது போனாலென் அம்மா - நான் அருமை யானவோர் தோழனைக் கண்டு நல்லசல் லாபஞ்செய் வேனே - அதை நாசப் படுத்திய தேயப்பி ராணி (பூனையை அருமையான தோழனாகவும், அதனுடன் ஏற்படவிருந்த அருமையான நட்பை அந்தச் சேவல் கெடுத்துவிட்டதாகவும் புலம்புகிறது செயெலி) (அதற்கு, தாயெலியின் பதில் இவ்வாறு அமைகிறது). தாயெலி: கண்மணி போன்ற மகனே - நீ கண்டு பயந்ததனை நன்றுரை செய்யின் வண்ண முடையசேவல் - ஒரு வஞ்சகமு மில்லாநல்ல செஞ்சொற் சேவல் மற்றைப் பிராணி மகனே! எம்மை மறைவி லிருந்து பிடித்துண்டு மகிழும் குற்ற முடைய பூனை - அதன் கோலத்தினால் மயங்கல் சாலத் தவறே. (தொடர்ந்து தாயெலி சேயெலிக்குப் பாடம் புகட்டுகிறது) தாயெலி: கண்மணி யனைய என்னரு மகனே! உண்மகிழ் வாக உரைப்பது கேட்பாய் வெளிப்புற வேடப் பொலிவினை நோக்கி உள்ளகத் தெண்ணம் உரைத்திடப் போமோ பொல்லா மறவன் புதரினில் மறைந்தும் மெல்லெனப் பறவையை வீட்டுதல் போல நல்ல வேடம் தன்னிலே மறைந்து அல்லன செய்யும் மாந்தரும் உளரே; கடுஞ்சொற் கூறி இனிமை பயக்கும் நடுநிலை நண்பரும் பலருண் டதனால் அகமும் புறமும் ஆராய்ந்து தகுதி நண்பரைத் தான்கொளல் முறையே. தமிழ்ப்பதிவுகள் |
"எலியுஞ் சேவலும் -பாகம் இரண்டு" இற்குரிய பின்னூட்டங்கள்
அருமையான இசையும் கதையும்.
கீழ்க்கண்டதிலிருக்கும் பிழையைத் திருத்தி விடுங்கள்!
//(தாயெலி வந்து சேவலைத் தழுவிக்கொண்டு வினாவுகிறது).//
சிறுவர் பாடல்களோடு சேர்த்து வைக்கிறேன். நன்றி