Thursday, February 16, 2006

நோவா விட்ட காகம்.

ஒருவனை அல்லது ஒருத்தியை ஏதாவதொரு வேலையாய் அனுப்பி, அந்நபர் எங்காவது "மிலாந்தி"க்கொண்டு நின்றால் அவர்களைக் குறிக்க ஒரு சொற்றொடர் ஈழத்தில் - குறைந்தபட்சம் யாழ்ப்பாணத்தில் பாவிக்கப்படுகிறது. அதுதான் மேற்சொன்ன "நோவா விட்ட காகம்".

இத்தொடர் மத பேதங்களின்றி எல்லாராலும் பயன்படுத்தப்படுவது குறித்து முதலில் ஆச்சரியப்பட்டேன்.
சரி. அதென்ன 'நோவா விட்ட காகம்'?

விவிலியத்தில் நோவா என்ற பாத்திரத்தை வைத்து ஒரு கதை உண்டு. அதுபற்றி சிறில் சுருக்கமாக எழுதியுள்ளார். இங்கே விவிலியத்தைத் தாண்டிய ஒரு கதையில், நோவா வெள்ளம் வடிந்துவிட்டதா என்பதை அறிய முதலில் பறக்க விட்டது ஒரு காகத்தைத் தானாம். பறந்த காகம் சேதி சொல்லத் திரும்ப வரவேயில்லை. அது பிணங்களைக் கண்டதும் அங்கேயே குந்திவிட்டது போலும். காகம் வரும்வருமென்று காத்திருந்து ஏமாந்த நோவா பின்புதான் புறாவைப் பறக்கவிட்டாராம். அது பின் ஒலிவ் கிளையுடன் வந்து சேர்ந்ததாக அக்கதை தொடரும்.

காகத்தை அனுப்பிவிட்டுக் காத்திருந்த நோவாவின் நிலைதான், ஏதாவது வேலையாக ஒருவரை அனுப்பிவிட்டுக் காத்திருப்பவர்களினதும். குறிப்பிட்ட நேரத்துக்குள் அவர் வரவில்லையென்றால், அவர்தான் "நோவா விட்ட காகம்".

சின்ன வயசில் நானுட்பட நிறையப் பேர் இந்தச் சொற்றொடரால் திட்டப்பட்டிருப்போம். உங்களில் யாருக்கேனும் இப்படித் திட்டு வாங்கியது ஞாபகமிருக்கா?
இதே உணர்வை வெளிப்படுத்தப் பாவிக்கப்படும் வேறு சொற்றொடர்கள் இருக்கா? ("கப்பல் பார்க்கப்போன சேவகன்" கதையைச் சொல்லாதீர்கள். அதுவேறு இதுவேறு.)
அல்லது இதே சொற்றொடருக்கு வேறேதும் கதைகளிருக்கா?
தமிழகத்தில் இச்சொற்றொடர் இருக்கா?


எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"நோவா விட்ட காகம்." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (16 February, 2006 11:02) : 

//அதென்ன 'நோவா விட்ட காகம்'?//
நான் இந்த சொற்றொடரைக் கேள்விப்படாவிட்டாலும், மறைந்து அல்லது மறந்து போன ஒன்றை ஞாபகப்படுத்தியமைக்கும் விளக்கம் தந்ததற்கும் நன்றிகள்.

 

said ... (16 February, 2006 12:33) : 

//கப்பல் பார்க்கப்போன சேவகன்//
கப்பல் பாக்கப் போன சோனங்கி எண்டுதான் எனக்கு பேச்சு விழுகிறது..

 

said ... (16 February, 2006 23:59) : 

சிறிதரன்,
வந்ததுக்கும் கருத்துக்கும் நன்றி.

சயந்தன்,
நல்லவேளை 'கப்பல் பாக்கப்போன சோனங்கி'யோட முடிஞ்சுது.
'நோவா விட்ட காகம்' கதையும் உங்கட அம்மாவுக்குத் தெரிஞ்சிருந்தால் உம்மட நிலைமை என்ன?

எண்டாலும் இந்தக் கதை போற இடத்துக்குப் போய்ச் சேர்ந்திருக்குமெண்டு நினைக்கிறன். கொஞ்ச நாளைக்குப்பிறகு தொடர்ச்சியா "நோவா விட்ட காக"ப் பட்டம் வேண்டி விளையாடும்.

 

said ... (17 February, 2006 04:57) : 

பதிவு போட்டுட்டு, நோவா விட்ட காகத்திற்கு நோவா காத்திருந்த மாதிரி....

 

said ... (17 February, 2006 14:23) : 

தருமி,
என்ன சொல்ல வாறியளெண்டு சரியா விளங்கேல.

நான் பதிவு போட்டிட்டு உங்கட வருகைக்காக காத்திருந்தனான் எண்டு சொல்ல வாறியளோ? (அதாவது நான் நோவா நீங்கள் காகம்?)

அல்லது பதிவு போட்டிட்டு பின்னூட்டங்களுக்காகக் காத்திருக்கிறதைச் சொல்லிறியளோ?

 

said ... (18 February, 2006 00:28) : 

தமிழ்நாட்டுல இத எப்படிச் சொல்வாங்க.....நல்லா பெராக்கு பாத்துக்கிட்டிருந்தான்னு சொல்வாங்க. இந்த மாதிரி சொலவடை தெரியலையே.

 

said ... (18 February, 2006 00:29) : 

போனா போன எடம்
வந்தா வந்த எடம்-னு சொல்லியும் கேள்விப் பட்டிருக்கேன்.

 

said ... (18 February, 2006 03:06) : 

பதிவு போட்டிட்டு பின்னூட்டங்களுக்காகக் காத்திருக்கிறதைச் சொல்லிறியளோ?
- அதே!

 

said ... (19 February, 2006 09:17) : 

இராகவன்,
இரு பின்னூட்டங்களுக்கும் நன்றி.

தருமி,
தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.

 

said ... (17 March, 2006 18:32) : 

எழுதிக்கொள்வது: Sirumi

அண்ணாச்சி . . .
அப்படியே . .
வெள்ளி பார்த்தது . . .
அணிலேற விட்ட நாய் . . .
போன்றவற்றிற்கு விளக்கமில்லாமல் திரியிறன்.
நேரம் கிடைக்கும்போது எங்கயாச்சும் குட்டியா எழுதுங்கோ.
நன்றி.

7.55 17.3.2006

 

said ... (17 March, 2006 23:33) : 

சிறுமி,
(அண்ணாச்சி எண்டது இப்பவெல்லாம் வில்லனைக் குறிக்கத்தான் பாவிக்கப்படுது. எல்லாம் தமிழ்ச்சினிமாவின்ர கைங்கரியம்.)

நீங்கள் சொன்ன மாதிரி நான் பதிவுபோடுவன் எண்டு 'அணிலேற விட்ட நாய்' மாதிரி என்ர வலைப்பதிவையே பாத்துக்கொண்டு இருங்ககோ.

 

post a comment

© 2006  Thur Broeders

________________