விருது வழங்குவது சரியா?
தமிழ் வலைப்பதிவுச்சூழலில் அவ்வப்போது ஏதாவது குளறுபடி நடந்துகொண்டேயிருக்கும். இப்போது விருது என்றொரு பிரச்சினை வந்துள்ளது. என்ன நடக்கிறது என்பது தெரியாமலே பலரைப்போல நானும் விருது பற்றியோர் இடுகை எழுதவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிட்டேன். ஒன்றைப்பற்றி எழுதியே ஆகவேண்டிய நிலைக்கு பதிவர்கள் ஆளாவது அவ்வப்போது நடப்பதுதான். சந்திரமுகி, சிவாஜி பற்றி கட்டாயம் ஓரிடுகையாவது எழுதியாக வேண்டிய நிலையிருந்தது. அதனாலேயே படம் பார்க்காமலேயே விமர்சனம் எழுத வேண்டிய நிலை எனக்கும் வந்தது. அதுபோல் விருது பற்றியும் ஏதாவது உளறி வைத்தாக வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் வலைப்பதிவராக இருக்க முடியாது. எனவே இவ்விடுகை எழுதப்படுகிறது. அதைவிட, வருடம் முடிகிறது; நீண்டகாலமாக ஏதும் எழுதவில்லை; இவ்விடுகை மூலம் நானும் இருக்கிறன் என்று காட்டிக்கொள்வதும் ஒரு காரணம். தற்போது வலைப்பதிவுகளோடு அதிக நேரம் செலவிடுவதில்லையென்பதால் இந்த விருதுக்கூத்து எப்போது தொடங்கியது, அதில் என்ன சிக்கல் என்பவை தொடர்பில் முழுமையான அறிவில்லை. மோகன்தாசின் எழுத்தைப்பார்த்தால் இது தமிழ்மண நிர்வாகத்துக்குப் போட்டியாக யாரோ செய்யும் நரிவேலை என்பதாகப் புலப்படுகிறது. விருது கொடுத்து அப்படி என்னதான் கிழித்துவிட முடியுமென்றும் தெரியவில்லை. அவர் சொல்வது உண்மையாயின் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் வலைப்பதிவுகளில் வரும் பெரும்பாலான எதிர்ப்புப் பதிவுகள் மேலெழுந்தவாரியான எதிர்ப்பையே வெளிப்படுத்துகின்றன. தற்போது பார்த்தளவில் அனேகம்பேர் இந்த விருது வழங்கலை எதிர்த்து எழுதிக்கொண்டிருப்பது தெரிகிறது. அவற்றில் பெரும்பாலானவை கும்பலில் கோவிந்தாவாக வெளிப்படும் கருத்துக்களென்பதே எனது எண்ணம். விருதை ஆதரித்து ஒரு போக்கு இருந்திருந்தால் இவற்றில் பெரும்பாலானவர்கள் அதையாதரித்து இடுகை எழுதியிருப்பார்கள். யாரோ காரசாரமாக எதர்த்தெழுதத் தொடங்கியதன் பின்னணியில் அதைத்தொடர்ந்து தாங்களும் ஏதாவது எழுதியாகவேண்டுமென எழுதுபவர்கள் பலர். (இது தமிழ்வலைப்பதிவுலகில் காலகாலமாக நிலவிவரும் ஒரு நடைமுறைதான். வேண்டுமானால் கடந்த சிலநாட்களில் விருது வழங்குவதை எதிர்த்து வெளிவந்த இடுகைகளை வாசித்துப் பாருங்கள். அடிப்படைத் தர்க்கமேதுமற்ற இடுகைகள் பல.) சிலர் மட்டும் (சங்கமம் குழுவை மட்டுமன்றி) விருது வழங்கும் நடைமுறையை பொதுவாகவே கேள்விக்குட்படுத்தியிருக்கிறார்கள். பலர் இதைமட்டும் குறிவைத்துத் தாக்குகிறார்கள். வலைப்பதிவுகளுக்கு விருது வழங்குவது இதுதான் முதுன்முறையன்று. இதற்குமுன் வலைப்பதிவு விருதுகளை எதிர்த்து காரசாரமாக யாரும் பிரச்சினை பண்ணியதாக நினைவில்லை. அப்படி வந்தவைகூட, போட்டியில் அதிக தமிழர்கள் கலந்துகொள்ளவில்லையென்ற குறையைத்தான் (முக்கியமானவர் தருமி) சொன்னதாக ஞாபகம். மற்றும்படி அனைவரும் விருது வழங்குவதை ஏற்றுக்கொண்டனர். விருதில் வெற்றிபெற்றவர்களை வாழ்த்தி ஒரு கிழமை வாழ்த்துப் பதிவுகளெழுதிக் கொண்டாடினர். சரி, அவை குறிப்பிட்ட நடுவர்களன்றி, வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவை என்ற வாதத்தை வைக்கலாம். ஆனால் வாக்குப்போட்டவர்களின் எண்ணிக்கை அண்ணளவாக இருநூறு என்றுதான் ஞாபகம். (போட்டி நடைபெறப்போவது தங்களுக்குத் தெரியாது, சரியான முறையில் விளம்பரப்படுத்தப்படவில்லையென்ற குறைகள் பலரால் வைக்கப்பட்டன). அங்கே இருநூறு பேரால் தெரிவு செய்யப்பட்டது போன்று, இங்கே பதினேழு பேரால் தெரிவுசெய்யப்படப் போகிறார்கள். விருது வழங்குவது பதிவர்களிடையே சண்டையை மூட்டிவிடுமென்ற வாதம் ஏன் வந்ததென்று தெரியவில்லை. இதே கோணத்தில் ஆழப்போனால் தமிழ்மணத்திரட்டியில் நட்சத்திரக் குத்துக்கள் வந்தது, பின்னூட்டங்கள் திரட்டப்பட்டது என 'பதிவர்களிடையே சண்டையை மூட்டும்' சமாச்சாரங்கள் பலவற்றைக் கேள்விக்குட்படுத்த வேண்டும். அப்படி பல சண்டைகள் வலைப்பதிவுலகில் நடந்துள்ளன. ஒரு கட்டத்தில் பின்னூட்டத் திரட்டிச் சேவையை நிறுத்திவிடுவதென்று தமிழ்மணம் முடிவெடுத்து, அதற்கான அறிவிப்பும் வெளியாகியது. அண்மையிற்கூட நாற்பதுக்கும் மேற்பட்ட பின்னூட்டங்களைப் பெறும் இடுகைகள் திரட்டப்படா என திரட்டி அறிவித்து பெரிய கலவரமே நடந்து முடிந்தது. அதற்கு முன்பு பின்னூட்ட மட்டுறுத்தலை திரட்டி கட்டாயப்படுத்தியபோது, சில பதிவர்களை திரட்டியை விட்டு நீக்கியபோது என வலைப்பதிவுலகம் கொந்தளித்த பல சம்பவங்களுள்ளன. ஓரிடுகைக்கு யார் அதிகபட்சப் பின்னூட்டங்கள் வாங்குவதென்ற போட்டி சுவாரசியமான முறையில் நடந்தது. [டோண்டு தனது பின்னூட்டங்களை ஒரேயிடுகையில் திரட்டி 500 வரை போய் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு முன்பு இருநூறு என்ற இலக்கை முதன்முதல் எட்டியவர் இட்லிவடையென்பதும், அந்தப் பின்னூட்டவிழாவை வெற்றிகரமாகத் தொடக்கிவைத்தவன் நானென்பதும் ஒரு துணைத்தகவல்.;-)] எல்லாம் கடந்துதான் தமிழ்வலைப்பதிவர்கள் இருக்கிறார்கள். இவ்வளவு கடந்து வந்தவர்கள் கேவலம் ஒரு விருதுக்காக தங்களுக்குள் சண்டை போடுவார்களென்பதோ, அப்படிச் சண்டைபோடுவது எப்போதும் நடக்காதது என்பதோ அபத்தமென்றே படுகிறது. சண்டை போட்டால் போட்டுவிட்டுப் போகிறார்கள். அதற்காக விருது கொடுக்காமலிக்க முடியுமா? சண்டை போடுகிறார்கள், தனது பதிவு தொடர்ந்தும் திரட்டியில் தெரியவேண்டுமென்பதற்காக தமக்குத்தாமே பின்னூட்டமிடுகிறார்கள், பின்னூட்டங்களில் சாராம்சமில்லை என்ற காரணங்களால் பின்னூட்டத் திரட்டி நிறுத்தப்பட்டுவிட்டதா என்ன? தமிழ் வலைப்பதிவுலகம் என்பது எல்லோரையும் சேர்த்தது. சில்லறை விசயத்துக்கு வருடக்கணக்கில் சண்டை பிடிப்பவர்களும் இருக்கிறார்கள். மிகப்பெரிய விசயத்தைக்கூட அன்றோடே முடித்துவிட்டுப் போய்விடும் பதிவர்களும் இருக்கிறார்கள். மொக்கை, கும்மியுட்பட ஒருவகைப்பதிவுகளும் மிகவும் காத்திரமான படைப்புக்களும் ஒரேநேரத்தில் தமிழ்மணத்தில் வருகின்றன. ஒருவரிடமிருந்தேகூட அவை வருகின்றன. இந்த விருதைப் பிரச்சினையாக்குபவர்கள் இருப்பார்கள் என்பதைப்போல அதை முழுமனதோடு ஏற்றுக்கொள்பவர்களும், ஏன் அதையொரு பொருட்டாகக்கூட கவனிக்காதவர்களும் இருக்கிறார்கள். எனவே விருது கொடுப்பவர்கள் கொடுக்கட்டும், பங்குபற்றுபவர்கள் பங்குபற்றட்டும், வெல்பவர்கள் வெல்லட்டும். இவற்றில் நொட்டை பிடித்துக்கொண்டிருப்பது தேவையற்றது. நான் கலந்துகொள்ளவில்லையென்பதைப் போலவே நிறையப்பேர் கலந்துகொள்ளப்போவதில்லை. நானும்தான். இதுவரை எந்தப்போட்டியிலும் கலந்துகொண்டதில்லை. போட்டியென்ன? ஆறு போட, எட்டுப்போட, நாலுபோட என வந்த அழைப்புக்களைக்கூட ஏற்றுக்கொண்டதில்லை. (ஒரேயொரு தடவைமட்டும் - அதுவும் வேறோர் பிரச்சினையைத் திசைதிருப்ப எழுதினேன்). அந்த அழைப்புக்கள்கூட வலைப்பதிவர்களிடையே சண்டையை, பிரச்சினையை மூட்டும் வல்லமை வாய்ந்தவை. பதிவர்களின் வாசிப்பு, அவர்கள் வைத்திருக்கும் புத்தகங்கள் பற்றிய (புத்தக மீம் என்று நினைக்கிறேன். பிரகாஷரால் தொடக்கப்பட்டது) அழைப்பு பதிவர்களிடையே தாழ்வுமன்பபான்மை ஏற்படுத்துகிறது, அது தவிர்க்கப்பட வேண்டியது என சுந்தரமூர்த்தி இடுகையெழுதினார், பலர் அக்கருத்தை ஆமோதித்தனர். பலர் புழுகிக்கொள்ள வேண்டி நேர்ந்த அந்த அவல நிலையை இந்த விருது ஒருபோதும் ஏற்படுத்திவிடாது என நினைக்கிறேன். விருது, பதிவர்களிடையே சண்டையை மூட்டிவிடுமென்ற குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்து ஒரு கேள்வி. இரண்டு நடுவர்களை மட்டும்கொண்ட புகைப்படப் போட்டி எந்தவிதத்தில் சரியென்று நினைக்கிறீர்கள்? பதினேழு நடுவர்களைக் கொண்ட (ஒப்பீட்டளவில் சரியான முடிவு வருவதற்கு அதிக சாத்தியமுள்ள) சங்கமம் விருது எப்படி தவறென்று கருதுகிறீர்கள்? புகைப்படப் போட்டி முடிவால் பதிவர்களிடையே சண்டை மூண்டதா? *** கவனிக்க: புகைப்படப் போட்டி தவறென்று நான் சொல்லவில்லை. விருதை எதிர்க்கும் சிலரின் குற்றச்சாட்டுக்குரிய விளக்கத்தைக் கோரியே இது சொல்லப்பட்டது. அவர்கள் சொல்லிய கருத்துக்கள் எவ்விதத்தில் புகைப்படப் போட்டிக்குப் பொருந்தாமற்போகுமென்ற கேள்வி எனக்குள் எழுகிறது. பொருந்தினால் அப்போட்டியை எதித்து ஏன் பிரச்சினைகள் எழவில்லையென்ற கேள்வியும் வருகிறது. உண்மையிலேயே விளக்கத்தை எதிர்பார்க்கிறேன். *** சங்கமம் விருதின் பின்னாலிருக்கும் அரசியல், இராஜதந்திரம், மந்திரம், சூனியம், நயவஞ்சகம் என்றெல்லாம் கருத்துச் சொல்லிப் பின்னூட்டமிட வேண்டாம். அவற்றைப் புறந்தள்ளியே எனதிடுகையுள்ளது. *** ஒரு விருது யாரால் கொடுக்கப்படுகிறதென்பதை வைத்தே அதற்குரிய மதிப்பைக் கொடுக்க நாங்களெல்லாம் பழகிவிட்டோம். சகட்டு மேனிக்கு முளைக்கும் டாக்டர்கள், கலைமாமணிகள் தொடக்கம் நிறையப் பேரைப் பார்க்கிறோம். திரைத்துறைக்கு தமிழ்நாட்டு அரசாங்கம் அளிக்கும் விருதுக்கும் தேசிய விருதுக்குமுள்ள வித்தியாசத்தை மிகத் தெளிவாக அறிந்தே அணுகுகிறோம். அதுபோற்றான் எல்லா விருதுகளும். *** இது இவ்வருடத்தின் கடைசி இடுகையன்று. |
"விருது வழங்குவது சரியா?" இற்குரிய பின்னூட்டங்கள்
2007 ம் வருடத்தின் "மாதன முத்தா" விருது பெறுபவர் வசந்தன்.
( என்ன? கன நாளா காணேல்லை )
புகைப்படப் போட்டி போலவே தனியே சிறுகதை கவிதை என போட்டி வைத்து விருது வழங்கச்சொல்லியும் மொத்த பதிவுக்கென விருது வழங்க கூடாதெனவும் யாரோ எழுதியிருந்ததாக நினைவு.
ஆனா முன்பும் பத்ரியின் பதிவுக்கு நம்பர் 1 விருது கிடைத்திருந்ததாக நினைவு. அந்த பதக்கம் கூட அங்கே இருந்தது.
அப்புறம்.. இது இவ்வருடத்திற்கான உமது கொள்கை விளக்க உரையா..
//அப்புறம்.. இது இவ்வருடத்திற்கான உமது கொள்கை விளக்க உரையா..//
-:))
//புகைப்படப் போட்டி முடிவால் பதிவர்களிடையே சண்டை மூண்டதா?//
Wrong one to compare with.
1 - Photo stuff not to create any fight with other blogger.
2 - They teach some thing and contest is to just to improve the photography technique unlike other contests.
3 - They are not issuing any thing based on personal interest. choosing "Technically knowledged ppl" to select photo based on the quality of the photo.
my 2 cents
I am afraid such a post might lead to stop such a wonderful try by those group of ppl who tries to do some thing creatively ..
even if they are not.. i am hurt.
one of the contestant in PiT.
இப்போதைக்கு பிரபுக்கு மட்டும் பதில்.
பிரபு,
எனது இடுகையை சீரியசாகக் கருதியதற்கு முதலில் நன்றி.
புகைப்படப் போட்டி தவறென்று நான் சொல்லவில்லை. அது பதிவர்களிடையே சண்டையை மூட்டுகின்றதென்றும் நான் சொல்லவில்லை. நீங்கள் சொல்வதுபோல் வலைப்பதிவு விருதையும் புகைப்படப் போட்டிப் பரிசையும் நூறுவீதமும் ஒன்றாக ஒப்பிட முடியாதென்பதிலும் எனக்கு உடன்பாடே.
ஆனால் நான் ஒப்பிட்டது, விருதோ பரிசோ பங்குபற்றுபவரிடையே சண்டையை மூட்டும் என்ற வாதத்தை எதிர்கொள்ளவே. புகைப்படப் போட்டியில் பங்குபற்றும் அதே பதிவர்களைக் கொண்ட வலைப்பதிவுக்குழுமத்தில் சிறந்த வலைப்பதிவர் என்ற விருது எப்படி சண்டையை உருவாக்குமென்பதே என் கேள்வி. சண்டையை உருவாக்கினால்கூட, அந்தக்காரணத்துக்காக விருது வழங்குவதை நிறுத்திவைக்க வேண்டுமா என்பதும் என் கேள்வி. சண்டை மூளக்காரணமாக இருந்த நிறைய விசயங்கள் இப்போதும் நடைமுறையிலுள்ளன என்பதை ஏற்கனவே எனது இடுகையில் சொல்லியிருக்கிறேன்.
புகைப்படப் போட்டி முடிவுகள் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்பிராயம் இருக்கலாம். முதலாம் பரிசை வென்ற படத்தைவிட பரிசு பெறாத இன்னொரு படம் ஒருவருக்குச் சிறந்ததாகத் தோன்றலாம். ஆனால் "நடுவர்"களின் (கவனிக்க: நடுவர்களின்) ஏதோவோர் எதிர்பார்ப்பை அது பூர்த்திசெய்யவில்லையென்பதே உண்மை. இதை போட்டி நடத்துபவர்கள்கூட சொல்லியிருக்கிறார்கள்.
அதைப்போல வலைப்பதிவு விருதுகளையும் பார்த்துவிட்டுப் போய்விடுவது தானே? நடுவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வலைப்பதிவுகள் வெற்றிபெறுகின்றன என்ற புரிதல் ஒருவருக்கும் இல்லையா?
என்ன, புகைப்படப் போட்டி நடத்துபவர்கள் அந்தத்துறை தொடர்பான நுட்பங்களைக் கற்பிக்கிறார்கள், போட்டியாளர்களை மேம்படுத்துகிறார்கள். அதனால் போட்டியாளரிடையே வெற்றி தொடர்பான புரிந்துணர்வொன்று ஒப்பீட்டளவில் அதிகமிருப்பதை ஊகிக்க முடியும். ஆனால் இதை பொதுவான வலைப்பதிவு தொடர்பில் செய்யமுடியாது. சிறந்த மொக்கை, கும்மிப் பதிவு எழுதுவது எப்படி என்று வகுப்பெடுக்க முடியுமா தெரியவில்லை. சிறந்த கவிதை எழுதுவது எப்படி என்று வகுப்பெடுப்பதைப் போல அபத்தமிருப்பதாக நான் நினைக்கவில்லை.
நிற்க,
புகைப்படப் போட்டி நடத்துபவர்கள் எனது இடுகையைப் பார்த்து ஆத்திரப்படவோ மனமுடையவோ என்ன இருக்கிறதென்று எனக்கு விளங்கவில்லை.
நாளைக்கே அவர்கள் போட்டியை நிறுத்திவிட்டு, வசந்தனால்தான் நிறுத்தப்பட்டது என்று சொன்னால், "போடா விசரங்களா" என்று தலைப்பிட்டு அதற்குமோர் இடுகையெழுதிவிட்டுப் போவேன். ஐயோ குய்யோ என்று சினுங்கி ஆள்கூட்ட மாட்டேன். அவ்வளவுதான்.
Vasanthan :
//என்ன, புகைப்படப் போட்டி நடத்துபவர்கள் அந்தத்துறை தொடர்பான நுட்பங்களைக் கற்பிக்கிறார்கள், போட்டியாளர்களை மேம்படுத்துகிறார்கள். அதனால் போட்டியாளரிடையே வெற்றி தொடர்பான புரிந்துணர்வொன்று ஒப்பீட்டளவில் அதிகமிருப்பதை ஊகிக்க முடியும். ஆனால் இதை பொதுவான வலைப்பதிவு தொடர்பில் செய்யமுடியாது. சிறந்த மொக்கை, கும்மிப் பதிவு எழுதுவது எப்படி என்று வகுப்பெடுக்க முடியுமா தெரியவில்லை. சிறந்த கவிதை எழுதுவது எப்படி என்று வகுப்பெடுப்பதைப் போல அபத்தமிருப்பதாக நான் நினைக்கவில்லை.//
you sait it.
this is it.. this is the main thing
rest of the point, i am with you
prabhu