நவீன இலக்கிய வரலாற்றின் ஜீவநாடி வல்லிக்கண்ணன்
பனுவல் -பத்மா சோமகாந்தன்- தினக்குரல் வாரவெளியீட்டில் வெளிவந்த கட்டுரை பயன்கருதி இங்குப் பதிவாக்கப்படுகிறது. "கோயில்களை மூடுங்கள்" என்ற புரட்சிகரமான தலைப்பில் வெளிவந்த நூலின் ஆசிரியர் பெயர் "கோரநாதன். விஷயத்தின் ஆழத்துக்கேற்ற முறையில் அமைந்த நடையிலான இந்நூல் பெரியார் ஈ.வே.ரா. விடம் கொடுக்கப்பட்டது. அதனை ஆர்வத்தோடு வாசித்து முடித்த ஈ.வே.ரா. பெரியார் இந்நூலின்" சொற்கள் வாணலியில் வறுத்து எடுத்தன போல இருக்கின்றன" என்று சுடச்சுட எழுதப்பட்ட முறையைப் பெரிதும் வரவேற்று மகிழ்ந்து பாராட்டினார். பெரியாருடைய பாராட்டைப் பெறக் கூடிய வகையில் புதுமையாகச் சிந்தித்து புரட்சிகரமாக எழுத்து நடையைக் கையாண்டும், கண்டிக்க வேண்டியவற்றை கடுமையாகவும் நையாண்டியாகவும் நகைச்சுவையாகவும் எழுத்தில் வித்தை செய்யக் கூடியவராகவும், சாதாரண விஷயங்களைச் சொல்லும் போது மிகத் தெளிவாகவும் எளிமையாகவும் சிறு சிறு வசனங்களையும் எழுதக் கூடிய வல்லமையைக் கொண்டிருந்தவர் வல்லிக் கண்ணன் என்ற எழுத்துலக ஞானி. 1920 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி இராஜவல்லி புரம் என்ற ஊரில் பிறந்த கிருஷ்ண சாமி என்ற இயற்பெயரைக் கொண்ட வல்லிக் கண்ணனின் தந்தையார் மு.சுப்பிரமணிய பிள்ளை. தாயார் மகமாயி அம்மாள். இரு அண்ணன் மாரையும் ஒரு தம்பியாரையும் உடன் பிறப்புகளாகக் கொண்டிருந்த கிருஷ்ண சாமி 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி ஓரிரு வாரங்கள் சுகயீனமுற்ற வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றும் பூரண சுகமடைய முடியாமல் இயற்கையெய்தினார். தனது பதினேழாவது வயதில் "இதய ஒலி" எனும் கையெழுத்துப் பிரதியொன்றை தானாகவே ஆரம்பித்து நடத்தி எழுத்துலகில் காலடியைப் பதிக்கத் தொடங்கிய வல்லிக் கண்ணன் என்ற புனைப் பெயரைச் சுமந்து கொண்ட கிருஷ்ண சாமி இரு வருடங்களின் பின்னர் `பிரசண்ட விகடன்' என்ற பத்திரிகையில் `சந்திர காந்தக்கல்' என்ற தனது முதலாவது சிறு கதையை வெளியிட்டு தனது எழுத்திற்கான அங்கீகாரத்தைப் பதிவு செய்து கொண்டார். ஆக்க இலக்கியத்தின் மீதுள்ள ஆர்வம் பிடரியைப் பிடித்துத்தள்ளவும் படைப் பிலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் பத்திரிகை சிறு சஞ்சிகைகள், கதை, கட்டுரை, நாவல், மொழி பெயர்ப்பு, விமர்சனம், திரைக்கதை வசனம், கவிதை எனப் பற்பல அம்சங்களிலும் கூர்மையான பார்வையுடன் பேனாவைச் செலுத்தி தனது அறிவையும் ஆற்றலையும் மேன் மேலும் வளர்த்துக் கொண்டார். இதன் நிமித்தமாகத் தினமணி ஏ.என்.சிவராமன், மஞ்சரி ஆசிரியர் தி.ஐ.ரங்கநாதன், `எழுத்து' ஆசிரியர் சி.சு.செல்லப்பா, தி.க.சி, கண முத்தையா, அகிலன், கு.அழகிரி சாமி டாக்டர் மு.வரதராஜன் தி.ஜானகிராமன், தொ.மு. சிதம்பர ரகுநாதன், சின்னக் குத்தூசி, இந்திரா பார்த்த சாரதி பி.எஸ்.இராமையா, ந.பிச்சமூர்த்தி, சே.கணேஷலிங்கம், ஜெயகாந்தன், திருப்பூர் கிருஷ்ணன், பொன்னீலன், தாமரை மகேந்திரன் போன்ற தலைசிறந்த சிந்தனையாளர்களதும் எழுத்துலகப் பிரம்மாக்களதும் மத்தியில் மிகவும் மதிப்பு வாய்ந்தவராகவும், போற்றப்படுபவராகவும், மிக மிக வேண்டிய வராகவும் விளங்கினார். குடும்பச் சுமைகளையோ, லௌகீக வாழ்க்கையையோ மேற்கொண்டிராத வல்லிக் கண்ணன் ஆக்க இலக்கியத்தின் மீதான விடுதலறியாப் பற்றினால் பல இலக்கியச் சுமைகளைத், தனது முதுகிலேயே சுமந்து கொண்டு மகிழ்ந்தார். சஞ்சிகை உலகில் சில காலம் அனுபவம் பெற்ற இவர். சிறுகதை, கவிதை, கட்டுரை ,எழுத்து என்பவற்றில் தனது மனதை முற்று முழுதாக ஈடுபடுத்தி உழைத்துக்கொண்டிருந்த வேளைகளில் ஈழத்து எழுத்தாளர் பலரைச் சந்தித்துப் பேசி ஈழத்து இலக்கியத்தில் பெரும் ஆர்வமும் அக்கறையும் ஈடுபாடும் கொண்டிருந்தார். ஈழத்து இலக்கியத்தை அறியும் ஆவல் ஈழ இலக்கியத்தின் வீச்சையும் போக்கையும் நன்கு அவதானித்து பாராட்டினார். பலருடைய ஆக்கங்களைப் பொறுமையோடும் அவதானிப்போடும் வாசித்து அவற்றை எடை போட்டு மெலெழுந்து நிற்பவற்றைப் புகழ்ந்தும் நசிவானவற்றைச் சுட்டிக் காட்டித் திருத்தியும் உதவுவதில் பெரும் பங்கு கொண்டிருந்த போக்கை அவரது இலக்கியத் தடத்தின் பரிமாணங்களில் சிலவாகக் கொள்ள முடியும். ஆகையினாலன்றோ ஈழத்து ஆக்க இலக்கியக் காரர் பலருடைய நூல்களுக்கு டாக்டர் நந்தியின் `தரிசனம்', பத்மா சோமகாந்தனின் `வேள் விமலர்கள்' நீ.பி.அருளானந்தத்தின் `வாழ்க்கையின் வர்ணங்கள்' என்றநாவல், எனப் பலருடைய ஆக்கங்களை வரவேற்று முன்னுரை வழங்கி வாழ்த்தியுள்ளார். கடந்த 1996 ஆம் ஆண்டு ஜூன் மாசக் கடைசி வாரங்களில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கொழும்பில் இரு தினங்கள் முற்போக்கு எழுத்தாளர் சங்க மகாநாட்டைச் சரஸ்வதி மண்டபத்தில் நடாத்தியது. இரு நாள் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உரையாற்றும் விசேட விருந்தினராகத் தமிழகத்திலிருந்து பிரபல நாவலாசிரியர், பொன்னீலன் தாமரை ஆசிரியர் மகேந்திரன் ஆகியோருடன் எழுத்தாளர் வல்லிக்கண்ணனும் இலங்கைக்கு முதன் முதலாக வருகை தந்திருந்தார். பல சிரமங்களின் மத்தியிலும் முதன் முதலாகத் தான் இலங்கை வந்துள்ள விபரங்களையும் `வல்லிக் கண்ணன்' என்ற புனைபெயரையே `விசா' கடவுச் சீட்டு எடுப்பதற்காகவும் போடப்பட்ட சங்கடங்களை மாநாடு ஆரம்பித்த பின்னரே கொழும்பு சரஸ் வதி மண்டபத்தை வந்தடைய முடிந்த சிக்கல் நிறைந்த தனது பிரயாணம் பற்றியும், தனது இயற்பெயரை அறவே மறந்து விட்ட உண்மையையும் ஈழத்து இலக்கியச் கலைஞருடைய எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் சுவைபடத் தனது பேச்சின் இடையே திணித்துப் பேசி ஈழத்து மக்களுடைய அன்பையும் இலக்கியதாகத்தையும் தீர்த்துக் கொண்டது இன்று நிகழ்ந்த சங்கதி போல் நினைவில் நிற்கிறது. ஈழத்தில் வ.க. தங்கியிருந்த வேளைகளில் இங்கு வாழும் இலக்கிய நெஞ்சங்களையும் எழுத்தாளர், அறிஞர், கவிஞர், விமர்சகர், சுவைஞர், கலைஞர், எனப் பலதுறை சார்ந்தவர்களையும் சந்தித்துப் பேசுவதிலும் உரையாடி மகிழ்வதிலும் மிகுந்த நேசம் கொண்டிருந்தார். சாகித்ய இரத்தினம் வரதர் அவர்களுடைய பிறந்த நாளான முதலாம் திகதி ஜூலை மாசத்தன்று "வரத கதைகள்" என்னும் நூலை வெளியிட்டு வைத்து மகிழ்ந்து உரையாற்றினார். நவீன இலக்கியத்தின் மீது தீராத காதல் கொண்டிருந்த வல்லிக் கண்ணன் சராசரியான தமிழக மக்கள் உரையாடுவது போலன்றி, மிகச் சுருக்கமாகவும் நறுக்கான இரண்டொரு சொற்களுடனும் மிகக் குறைவாகவே பேசுவார். ஆனாலும், அவை மிக ஆணித்தரமாகவும் வெகு நிதானமாகவுமே இருக்கும். இதுவே அவருடைய உரையாடலின் இயல்பு. அதீதிமான அமைதியும் அடக்கமான மெதுவாகப் பேசும் பாங்கையும் உடையவரே இந்த இலக்கிய யோகி. இலக்கிய சம்பந்தமான விஷயங்களையோ கடந்த கால சிறு சஞ்சிகைகள் பற்றியோ நவீன இலக்கியத்தின் வரலாறு, எழுத்துலகப் பிரம்மாக்கள் பற்றி யெல்லாம் பேசத் தொடங்கினால், காலம், நேரம், ஆண்டுகள், இடங்கள், பெயர்கள், விஷயங்கள் ஆகிய விபரங்கள் கூடச் சற்றும் பிசகாமல் அச் சொட்டாகச் சொல்லி ஆற்றொழுக்கு நடையில் விபரித்துக் கொண்டே போவார்; அவ்வேளையில் `ஜெட் விமானத்தின் வேகம் போல இருக்கும் அவர் பேச்சு. பெருங்காற்று அடித்தால் எங்கே அள்ளுப்பட்டு வீசப்பட்டு விடுவாரோ என்று எண்ணக் கூடிய மிக மெலிந்த சுள்ளலான உருவம். இந்த மனிதனிடம் இத்தனை ஞாபகசக்தி நிறைந்த விடய அடக்கமும் ஆளுமையும் எப்படி?....! என வியந்து நிற்போரே பலர். அத்தனை தூரம் நவீன இலக்கியப் பரப்பில் தோய்ந்து எழுந்தவர் இந்த இலக்கியத் திருமூலர். நாம் தமிழகம் சென்று இவரைச் சந்தித்த வேளைகளிலெல்லாம் வரதர், டொமினிக் ஜீவா, சாந்தன் போன்ற எழுத்தாளர்கள் சிலரது பெயர்களைக் கூறியும் இங்கிருந்து வெளிவரும் இலக்கிய சஞ்சிகைகள், பத்திரிகைகள், அவற்றின் செல் நெறிகள் பற்றியெல்லாம் புகுந்தகத்தில் வாழ்ந்து கொண்டு பிறந்தகத்தின் நிலையைப் பற்றி அறிய அவாவும் மணப் பெண் போல வெகு அக்கறையோடு கேட்டறிந்து கொள்வார். கடைசி நாட்களில், சுகவீனமுற்றிருந்த சில நாட்கள் தவிர ஏனைய நாட்களில், எண்பத்தாறு ஆண்டுகள் நிறைந்த இவரது வாழ்வில் இறக்கும் வரை காந்தியடிகளின் கொள்கைகளைச் சார்ந்து தான் உபயோகிக்கும் உடைகளையும், தான் உணவுண்ணும் பாத்திரங்களையும் தனது கரங்களாலேயே சுத்தம் செய்து கொள்ளும் பழக்கமும் பண்பும் கொண்டவர். எளிமையான தோற்றத்தையும், வாழ்க்கையையும் மேற்கொண்டிருந்த இவர் மிக உயர்ந்த சிந்தனைகளுக்கு உரியவராகவே வாழ்வை மேற்கொண்டிருந்தார். எழுத்தையே நேசித்து எழுத்தையே காதலித்து எழுத்தையே மணஞ்செய்து எழுத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்த வல்லிக்கண்ணன் தனது பிரமச்சரிய வாழ்வினால் மட்டுமல்ல ஏனைய எழுத்தாளர்களை விட மிகவும் வித்தியாசமான போக்குகள் வரித்துக் கொண்டவர். எவ்வித தீய பழக்கங்களுக்கும் அடிமையாகாத இவர் உயர்ந்த ஒழுக்க சீலராகவே வாழ்ந்தார். வ.க, சொனாமுனா, கோரநாதன், இளவல், ஆர். ரத்னம், நையாண்டி பாரதி, மார்பியல், அவதாரம், ரா.சு.கி. ஞானப்பிரகாசம், எஸ். சொக்கலிங்கம், மிவாஸ்கி என ஏகப்பட்ட புனைபெயர்களுள் ஒளிந்து கொண்டு எழுதும் வல்லிக்கண்ணன் வாசிப்பதில் சூரனென்றும் எழுதுவதில் `ராட்சஸன்' என்றும் பலர் கூறி வியந்தாலும் இவ்விரு சூரத்தனமான பெயர்களுக்கும் அவரது இயல்பான சுபாவம் மிகவும் மாறுபட்டது. சிறுகதைகளைப் படிக்கும்போது அவற்றிக்கேற்ப லாவகமான நடையில் இனிமையாக எழுதும் வல்லிக்கண்ணன் புனைபெயர்களுள் மறைந்து கொண்டு அப்பெயர்களுக்கும் தான் எழுதும் விடயத்துக்குமேற்றதாகத் தன் நடையை மாற்றிக் கொள்வதில் விற்பன்னராகவே விளங்கினார். இந்த ரீதியில் வ.க. அவர்களைப் பு. பித்தனுடன் ஒப்பிடலாமெனவும் பொருளுக்கேற்ப நடையை மாற்றிக் கொள்வது ைநயாண்டியாகவும் அரசியல் கட்சி சார்பற்றும் எழுதும் வகையில் வ.க., புதுமைப்பித்தனை முன்னோடியாகக் கொண்டவரென எழுத்தாளர் ம.ந. ராமசாமி குறிப்பிடுவார். குறைவில்லாத பூரண உன்னத இலக்கியமென்பது கிடையாது. அப்படியிருக்கையில் குற்றம் குறைகளைச் சுட்டிக்காட்டி எழுத்தாளனை முடக்குவது இலக்கியத்துக்குச் செய்யும் சேவையல்ல என்பதே வ.க. வின் கருத்தென்பதால் அவர் குறைவான இலக்கியங்கள் மட்டையை இரு கீற்றாகக் கிழித்துத் தலைமாடு கால்மாடாகப் போட்டுக் கழிப்பது போலச் செய்யமாட்டாரென்று இவர் அபிப்பிராயப்படுகிறார். எழுத்தாளர் என்போர் மனிதப்பிறவியில் சிறந்தவர்கள் என்ற நல்லெண்ணமே வ.க. வின் உடம்பெல்லாம் விகசித்து நின்றது. 20 ஆம் நூற்றாண்டின் நவீன தமிழ் இலக்கியத்தை எதிர்கால இளைஞர்களும் ஏனையோரும் நன்கு விளங்கிக் கொள்ளும் வகையில் வ.க. மணிக்கொடிக்காலம், தீபம் யுகம், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், பாரதிக்குப்பின் உரைநடை, சரஸ்வதிகாலம் என்ற தொகுப்பு நூல்களின் மூலம் தற்கால நவீன இலக்கியச் செல்நெறியை எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள் போன்றோரின் படைப்புகளோடு தொகுத்து வெளியிட்டு எதிர்கால சந்ததிக்கு கடந்தகாலம் பற்றிய ஒளியை ஏற்றி வைத்த இந்த மணிக்கொடி சகாப்த எச்சமான இம் மாணிக்கத்தின் புகழ் என்றென்றும் மங்காமல் நவீன இலக்கியம் கொடிவிட்டுப்படர ஒளிவீசிக் கொண்டே இருக்கும் என்பது சத்தியமான உண்மை; வெறும் புகழ்ச்சி*. *பத்திரிகையில் 'வெறும் புகழ்ச்சி' என்றுதான் பதிவாகியிருக்கிறது. 'வெறும் புகழ்ச்சியன்று' என்று வந்திருக்க வேண்டும். ___________________________________ நன்றி: ஞாயிறு தினக்குரல் January 14, 2007 Labels: இலக்கியம், எழுத்தாளர், நினைவு, படைப்பாளி |
"நவீன இலக்கிய வரலாற்றின் ஜீவநாடி வல்லிக்கண்ணன்" இற்குரிய பின்னூட்டங்கள்