Wednesday, June 22, 2005

சிதையா நெஞ்சு கொள்-1

தங்கமணியின் பதிவில் முத்தையன்கட்டில் குளத்துநீரைப் பாவித்து மின்னுற்பத்தி செய்த ஒருவரைப்பற்றி எழுதியிருந்தார். அச்செய்தியை அதற்குமுன்பே புதினத்தில் பார்த்திருந்தேன். தங்கமணியின் பதிவைப்பார்த்த பின்தான் அதன் முக்கியத்துவைத்தை உணர்ந்தேன். இன்னும் சொல்லப்போனால் அந்த மனிதன் எனக்குத் தெரிந்தவனாயிருக்க வேண்டும். முகத்தைவிட பெருவிரலில்லாத வலது கைதான் எனக்கு ஆதாரமாய் இருக்கிறது. அந்த நபர் நான் நினைப்பவராக இருக்கும் பட்சத்தில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

முத்தையன்கட்டுக் குளத்தின் சீர் செய்யப்படாத மடைக்கதவுகளுக்குள்ளால் வெளியேறி கழிவுநீராக அநாவசியமாய்ப் போகும் நீரைப்பற்றி யோசித்திருக்கிறேன். இன்னும், இரணைமடுவின் வான்பாயும் நீரையோ, அல்லது சீரமைக்கப்படாத குளக்கட்டைக் கருத்திற்கொண்டு குளத்துநீரைத் திறந்து வெளியேற்றும்போது பெருக்கெடுத்துப்பாய்ந்து அநாவசியமாய்ப்போகும் நீரைப் பார்த்தும் பொருமியிருக்கிறேன்.

தேவைகள் தான் சில கண்டுபிடிப்புக்களை உருவாக்குகின்றன. அந்தவகையில் போர்க்காலத்தில் எங்கள் மக்களால் செய்யப்பட்ட சில புதுமைகளைப்பற்றிக் கதைக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஜாம் போத்தல் விளக்கு.
இதைப்பற்றி நான் சுந்தரவடிவேலின் பதிவிற் சொன்னபோது, அவர் சாதாரண போத்தல் (Bottle) விளக்கென்று நினைத்துவிட்டார். அது சாதாரண விளக்குகளைவிட வித்தியாசமானது. எண்ணைய்ச் சிக்கனத்துக்காகத் தயாரித்து அறிமுகப்படுத்தப்பட்டது.

1990 இன் ஆனியில் இரண்டாம் கட்ட ஈழப்போர் சிங்கள அரசுக்கெதிராகத் தொடங்கியது. போர் தொடங்கியவுடனேயே தமிழர் பகுதிகளில் பொருளாதாரத்தடை போடப்பட்டது. மருந்துப்பொருட்கள் கூடத் தடைசெய்யப்பட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் சுன்னாகத்திலிருந்த மின்நிலையமூடாக ஒரு நாளைக்கு ஒரு மணித்தியாலம் என்ற அளவில் சுழற்சிமுறையில் மின்வினியோகம் செய்யப்பட்டது. (எங்கள் ஊருக்கு பகல் பத்துமணிக்கு வரும்). பொறுக்குமா சிங்கள அரசு? சில நாட்களிலேயே அந்தச் சுன்னாக மின்நிலையம் சிங்கள வான்படையாற் குண்டுவீசி அழிக்கப்பட்டது. அத்தோடு குடாநாடு முற்றாக இருளில் மூழ்கியது.

அப்போது, குடாநாடு முற்றாக வெளித்தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்தது. வன்னியுடன் இணையும் ஒரே பாதையான ஆனையிறவில் இராணுவம் குந்தியிருந்தது. மற்றைய பாதை பூநகரிப் படைமுகாமால் முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் யுத்தம் ஆரம்பித்தவுடன் பொருட்களின் விலைகளனைத்தும் சடுதியாக உயர்ந்தன. அத்தியாவசியப்பொருட்கள் சிலவற்றைக் காணவே கிடைக்கவில்லை. ஒருவருக்கு 100 கிராம் சீனி வீதம் கடையொன்றில் விற்கப்பட்டபோது, அதை வாங்க 300 பேர் வரிசையில் காத்திருந்த நாட்கள் ஞாபகமிருக்கிறது. அதில் சீனி வாங்குவதற்காகவே பாடசாலை போகாமல் சில சிறுவர்களும் அடக்கம்.

இந்த நேரத்தில் மண்ணெண்ணெய் பயங்கரத் தட்டுப்பாடு. ஒரு லீற்றர் 350 ரூபா விற்றது. (இத்தொகை அப்போது யாழ்ப்பாணத்தில் கணிசமான தொகை). எங்கள் ஊரில் கிட்டத்தட்ட ஒரு வருடமாக எந்த மோட்டார் சைக்கிளோ காரோ ஓடி நான் பார்த்ததில்லை. அவ்வளவுக்கு எரிபொருள் தட்டுப்பாடு. பெற்றோல் வாசனையையே மறந்துவிட்டிருந்தோம். எனக்கு ஞாபகமிருக்கிறது; நிலவு வெளிச்சம் இருக்கும் காலங்களில் எங்கள்வீட்டில் விளக்குக்கேற்றுவதில்லை. எங்கள் அயலிலும் தான். இரவு ஏழு மணிக்கே சாப்பிட்டுவிட்டு கதைகள் சொல்லி விளையாடி, பாட்டுக்குப்பாட்டுப் போட்டி வைத்து, அம்மம்மாவிடம் கதைகேட்டுத் தூங்கிப்போக நேரம் சரியாக இருக்கும். (அந்த வயதில் அது இன்பமான பொழுதுகள்).

இப்படியான நேரத்தில் பத்திரிகைகளில் ஒரு விளக்கைப்பற்றிச் செய்தியும் அறிவித்தலும் வந்திருந்தன. தொடர்ச்சியாக சிலநாட்கள் அவ்விளக்கைப் பயன்படுத்தச்சொல்லி அறிவுரைகளும் வந்தன. அதுதான் ‘ஜாம் போத்தல் விளக்கு’. (இதைவிட வேறு பெயர் அந்த விளக்குக்கு இருந்ததாக நான் அறியவில்லை.)

சின்ன ஜாம் போத்தல் ஒன்றை எடுத்து அதற்குள் சிறிதளவு பஞ்சு வைத்து, கடுதாசியைச் சுருட்டிச் செய்த திரியைப் பாவித்து அந்தவிளக்குச் செய்ய வேணும். திரியைக் கவ்வ, நுனியில் சிறிய வளையம் கொண்ட கொழுக்கியொன்றைப்பாவிக்கலாம். அக்கொழுக்கி போத்தலின் விளிம்பில் கொழுவப்பட்டிருக்கும். (இதற்கெல்லாம் சைக்கிளின் வால்வ் கட்டை தான் சிறந்ததாகக் கருதப்பட்டது. அந்த நேரத்தில் பழைய சைக்கிள் ரியூப்புக்களுக்கும் சரியான மரியாதை.) ஏறக்குறைய போத்தலின் அரைவாசிக்கும் சற்று மேலாக திரி முடிவடையும். பஞ்சில் ஊறக்கூடியவாறு மண்ணெண்ணெய் விட வேண்டும். பஞ்சில் ஊறிய எண்ணெய்தான் கடுதாசி வழியாக எரிகிறது. மண்ணெண்ணெய் பஞ்சில் ஊறும் அளவுக்கு மட்டுமே விடப்படவேண்டும்.

இந்த விளக்குத்தான் பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் பாவிக்கப்பட்டது. இதையே ஹரிக்கேன் விளக்குப்போல மேலே மூடியும் கைபிடியும் வைத்து விதம்விதமாக விளக்குகள் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்தன. யாழ்ப்பாணத்தில் அந்நேரத்தில் அவ்விளக்குப் பாவித்த ஆக்களுக்கு அதன் பயன்பாடும் முக்கியத்துவமும் நிச்சயம் தெரிந்திருக்கும்.

என்னைப்பொறுத்தவரை இது எண்ணெய்ச்சிக்கனத்தைச் சரிவரச் செய்தது. எல்லா மக்களுமே இவ்விளக்கின் பயனை நன்கு உணர்ந்திருந்தனர். பின்னர் கொஞ்ச நாளில் உப்புப்போட்டால் எண்ணெய் இன்னும் சிக்கனப்படுத்தப்படும் என்ற கதையொன்று ஊரில் உலாவியது. (சும்மா கதைவழிதான்) கிட்டத்தட்ட எல்லோருமே பஞ்சின்மேல் உப்புப்போட்டுப்பாவித்தோம். ஆனால் உப்புப்போடுவதால் எண்ணைய்ச் சிக்கனமுண்டு என்பது எவ்வளவுதூரம் உண்மையென்று தெரியாது. அதை நாம் உணரவுமில்லை. அதற்குரிய விளக்கங்கள் ஏதுமிருப்பதாக நான் அறியவுமில்லை. ஆனால் இந்த விளக்கு மூலம் நாம் எண்ணையை மிச்சப்படுத்தலாமென்று நன்கு உணர்ந்துகொண்டோம்.

கிட்டத்தட்ட ஒருவருடம் அந்தவிளக்கு மட்டுமே பாவிக்கப்பட்டு, பின் ஏனைய விளக்குகளோடு கலந்து பாவிக்கப்பட்டு வந்தது. (பின் எண்ணைய்த் தட்டுப்பாடு ஓரளவு குறைந்திருந்தது.) யாழ் இறுதி இடப்பெயர்வு வரை எங்கள் வீட்டில் முதன்முதல் செய்த ஜாம்போத்தல் விளக்கு பாவனையிலிருந்தது. (இதற்கிடையில் 3 இடப்பெயர்வு நடந்தாலும் அவ்விளக்கு எங்களோடு கூடவே பயணித்தது.)

இந்தவிளக்கு மூலம் மாதத்துக்கு வெறும் 250 மில்லி லீற்றர் எண்ணெய் அளவுக்குத்தான் சேமிக்க முடிந்திருக்கும். இன்றைக்கு எல்லோருக்குமே இது வெறும் தூசு என்ற அளவுதான். ஆனால் அன்றைய நிலையில் பெரிய பெறுமதி அதற்கிருந்தது. பகலில் பஞ்சிலுள்ள எண்ணெய் ஆவியாகிப் போய்விடக்கூடாதென்பதற்காய் விளக்கை மூடிவைக்கும் காலம் அது. திரியாகப் பயன்படுத்தப்பட்ட காகிதத்துண்டு மாற்றப்படும்போது, பழைய கடுதாசித்துண்டைக் கசக்கிப் பிழிந்து எண்ணைய் எடுப்போம்.

இந்த ஜாம் போத்தல் விளக்கை யார் வடிவமைத்தார்களோ தெரியாது. எனினும் குறிப்பிட்ட அந்தக் காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒவ்வொருவராலும் நன்றியுடன் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்.

இதுதான் ஜாம் போத்தல் விளக்கின் கதை. கதையைச் சரியாகச் சொன்னேனா தெரியவில்லை. குறிப்பாக எண்ணெய்த் தட்டுப்பாட்டைச் சரியாக வெளிப்படுத்தினேனா தெரியாது.
இப்பதிவை இப்போது எழுதத் தூண்டிய சிறிரங்கனுக்கு நன்றி.
மேலும் தங்மணியின் தலைப்பையே நானும் பாவித்ததால் அவருக்கும் நன்றி.
-வசந்தன்-

குறிப்பு:
யாரிடமாவது இந்த ஜாம் போத்தல் விளக்கின் படம் இருந்தால் (மின்கலங்களே இல்லாத அந்த நேரத்தில் கமராவை யார் பாவித்தது என்று கேட்காதீர்கள். கீறப்பட்ட படமேதாவது இருந்தால்) தந்துதவ முடியுமா?

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"சிதையா நெஞ்சு கொள்-1" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (22 June, 2005 18:39) : 

This comment has been removed by a blog administrator.

 

said ... (22 June, 2005 19:11) : 

எழுதிக்கொள்வது: kulakaddan

வசந்தன்....அப்ப மெழுகு திரிக்கு தேங்காய் எண்ணெய் விட்டு எரிச்சது ஞபக்ம் இருக்கோ.

11.40 22.6.2005

 

said ... (22 June, 2005 19:43) : 

வசந்தன் நல்ல பதிவு.நமது மக்கள் புடம்போட்ட மக்களென்பதற்கு இதைவிட வேறொரு உதாரணம் வேண்டாம்.என்றபோதும் இப்போது யாழ்ப்பாணம் தலைகீழாகப் போய்விட்டது.தங்கைக்கு கல்யாணத்துக்குக் ஏதாவது கொடுத்தால்ஈதம்பி மருந்து குடிப்பேன்-எனக்கும் அனுப்பிவிடு என்று வித்தை காட்டுகிற நிலை!அதைவிட வேறுபல சீரழிவுகளையும் இராணவத்தால் திட்டமிட்டு நடக்கிறதாம்.
எது எப்படியோ இப்பதிவு சில பொறுப்புணர்வை எனக்கு உணர்த்தியது.
ஸ்ரீரங்கன்.

 

said ... (22 June, 2005 22:45) : 

குழைக்காட்டான்!
ஞாபகமிருக்கு.

சிறிரங்கன்!
நீங்கள் சொல்வது சரி.
என் பழைய பதிவுகளில் இப்போதைய யாழ்ப்பாணம் மீதான விசனம் தென்படும். அது இப்போது தான் என்றில்லை, முன்பும் இந்தக்குணங்கள் இருந்தன, அனால் அமுக்கப்பட்டிருந்தன.
இன்று மோட்டார் சைக்கிள் வேண்டித்தராவிட்டால் தற்கொலை செய்வேன் என மிரட்டும் இளம் சமுதாயம். மோட்டார் சைக்கிள் வைத்திருக்காதவன் மனிதனே அல்லன் என்ற மனோபாவம் உருவாகியிருப்பதைக்கண்டு நான் அதிர்ந்ததுண்டு. பெரும்பாலும் புலம்பெயர்ந்தவர்களின் பணம் அங்கே பெற்றோலாகவும், திரைப்படங்களாகவும் இறைக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் ஒருவன் இரண்டு கைத்தொலைபேசிகள் தேவையென அடம்பிடிப்பதை என்னவென்று எடுத்துக்கொள்வது?

-வசந்தன்-

 

said ... (23 June, 2005 01:23) : 

நல்ல பதிவு.
அதெப்படி ஒரே நேரத்தில் பல பதிவுகள்?

 

said ... (23 June, 2005 02:19) : 

நல்ல பதிவு வசந்தன். இன்னும் பல கண்டுபிடிப்புகளைப் பற்றியும் அதன் தேவைகளைப் பற்றியும் எழுதுங்கள். பனைபொருட்களில் இருந்து பல விதமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன என அறிந்தேன். முடிந்தால் எழுதவும். நன்றி.

தலைப்பு, பாரதியின் புதிய ஆத்திச்சூடி.

 

said ... (23 June, 2005 04:58) : 

மனதைத் தொடும் பதிவு. உங்களுடைய ஒரு பதிவில் ஏதாவது செய்யுங்கள் என எழுதியிருந்தேன்., அப்பள்ளி நிர்வாகத்திற்கு எவ்வகையிலாவது உங்கள் தோழர்களின் தியாகத்தைத் தெரியப்படுத்துங்கள் என்பதே அது. இம்மாதிரி நினைவு கூறல்கள் கண்டிப்பாகத் தேவை. முன்பே உங்கள் பதிவிற்கான பின்னூட்டமொன்றில் நான் குறிப்பிட்டதைப் போல் எங்கள் பக்கத்து வீட்டிலிருந்த இலங்கைத் தமிழர்கள் 6 லிருந்து 7 க்குள் இரவு உணவை முடித்து உறங்கச் சென்று விடுவார்கள்., தீபாவளி சமயங்களில் எப்போதாவது வெளியே தலை காட்டுவார்கள்., ஏனென்று கேட்டால்., "ஒரே செல்லடி மாதிரிக் கிடக்குங்கோ" (பட்டாசு வெடிப்பது). செல்லடிச் சத்தம் வாழ்நாள் முழுவதும் அவர்கள் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை. நல்ல பதிவு.

 

said ... (23 June, 2005 09:41) : 

எழுதிக்கொள்வது: f

ப்ன்

10.9 23.6.2005

 

said ... (23 June, 2005 17:28) : 

நன்றி தங்கமணி!
எழுத முயற்சிக்கிறேன்.

அப்படிப்போடு!
ஆதரவான கருத்துக்கு நன்றி.
புரிந்தது நீங்கள் முதற்சொன்னது.
அது நான் படித்த பள்ளிக்கூடம் தான். நிச்சயம் அது செய்யப்பட வேண்டும்.

அநாமதேயம்!
விளங்கேலயே நீங்கள் சொன்னது.

 

said ... (23 June, 2005 23:39) : 

வசந்தன் வணக்கம்!பெடியன்கள் கொழுவியின் பதிவையும் நிறுத்திப்போட்டான்கள்!அவங்ளோடு சண்டைபோட்டுப் பிரயோசனமில்லை.அவங்கள் நுட்பவியலில் கெட்டிக்காரன்கள் போலதாம் கிடக்கு.அறிவை அழிவுக்குப் பயன்படுத்தி என்னத்தப்பண்ணப்போறாங்கள்!

 

said ... (24 June, 2005 14:20) : 

நல்ல பதிவு.

//மோட்டார் சைக்கிள் வைத்திருக்காதவன் மனிதனே அல்லன் என்ற மனோபாவம் உருவாகியிருப்பதை..புலம்பெயர்ந்தவர்களின் பணம் அங்கே பெற்றோலாகவும், திரைப்படங்களாகவும் ...
இரண்டு கைத்தொலைபேசிகள் தேவையென...//
கசப்பான உண்மை.

சீமெந்துத் தட்டுப்பாட்டுக்காலத்தில் உருவாக்கப்பட்ட சீமெந்து, பனங்களி(என நினைக்கிறேன்) கொண்டு தயாரிக்கப்பட்ட சவர்க்காரம் பற்றியும் சொல்லுங்க.

 

said ... (29 June, 2005 05:26) : 

வசந்தன் நல்ல பதிவு நினைவு படுத்தியதற்கு நன்றி.

நானும் இந்த விளக்கு பயன்படுத்தியிருக்கிறன். "தீண்டாமணி" என்பார்கள். எங்கள் வீட்டில் உப்பு போடுவார்கள். தண்ணியும் விடுவார்கள்.

நுளம்பிற்கு புகை வேப்பம் விதை குளை பட்டைகள் கொண்டு போடுவார்கள். சீனிக்கு பனங்கட்டி சக்கரை பாவித்திருக்கிறோம். ஜாம் போத்தல் விளக்கு இலகுவில் அணையாது. அதுவும் ஒரு நல்ல பயன். மறக்க முடியாத அனுபவம் தான்.

 

said ... (02 July, 2005 01:26) : 

ஷ்ரேயா!
பின்னூட்டுக்கு நன்றி. நீங்கள்கூடப் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் போலுள்ளது.
அட, வலிகாமத்தில் இருந்துகொண்டு வீட்டில்கூட முழு நேரமும் காசுகுடுத்து மினரல் வோட்டர் மட்டுமே வேண்டிக்குடிக்கிற 'மனிசரை'ப் பற்றி என்ன நினைக்கிறியள்? அவையின்ர கொழுப்பை நினைச்சுச் சிரிச்சிருக்கிறன். ஆனா ஆரோ ஒருத்தனோ சிலரோ தங்கட கொழுப்பைக் கரைக்கினம் அவைக்காக.

கயல்விழி!
நன்றி. பலதை ஞாபகப்படுத்தியிருக்கிறியள். நேரம் கிடைச்சா எழுதுவம்.

 

post a comment

© 2006  Thur Broeders

________________