Sunday, June 12, 2005

குளத்தில் நீராடல்

வணக்கம்!

“நீர் ஆடல்” எண்டு ஒரு படப்பதிவு போட்டனான். அதில இந்தத் தலைப்புச் சம்பந்தமா ஓர் உண்மைச் சம்பவத்தைச் சொல்லப்போவதாக் கூறியிருந்தேன். அதை இப்போது சொல்கிறேன்.

நான் அப்போது எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தேன். என்னோடு எட்மன் என்றொருவனும் படித்தான். ஒரே வாங்குதான் நாங்கள் ரெண்டுபேரும். நல்ல கூட்டாளியள். (இப்ப அவன் இல்ல. அவனப்பற்றி இங்கே எழுதியருக்கிறன்)

நாங்கள் எடுத்த பாடம் சித்திரம். அவன் ஓரளவு நல்லாப் படம் கீறுவான். என்னைவிட நல்லாக் கீறுவான். (கீறுதல் எண்டது சும்மா கிறுக்கிற அர்த்தத்தில இல்ல. வரையிற அர்த்தத்தில) அப்ப நடந்த ஓர் இடைத்தவணைத் தேர்வில சித்திரப் பாடத்தில எங்களுக்கு வந்த தலைப்பு, “குளத்தில் நீராடுதல்”.

நானும் எனக்குத் தெரிஞ்ச குளத்தில கொஞ்சப்பேர் குளிக்கிற மாதிரி ஒரு படம் கீறினன். தேர்வுத்தாட்கள் தாற நேரத்தில சித்திர ஆசிரியையும் புள்ளிகள வாசிச்சா. பாத்தா, எப்பவும் எண்பதுக்கு மேல எடுக்கிற எட்மனுக்கு ஐம்பதோ என்னவோ தான். பிறகு எல்லாற்ற விடைத்தாளையும் தந்திட்டு கடசியா அவனக்கூப்பிட்டு, ஏனிப்பிடி படம் கீறினனி? எண்டு கேட்டா. அப்பதான் அவன் கீறின படத்தப் பாத்தம். கேணி மாதிரியொண்டில (யாழ்ப்பாணத்தில படிக்கட்டுக்கள் வச்சு கேணி மாதிரியிருக்கிற சிலதையும் குளம் எண்டு சொல்லுறது.) தண்ணி நிக்குது. அவ்வளவு தான். என்னடா இது எண்டு பாத்தா, பிறகுதான் விளங்கீச்சு, என்ன நடந்தது எண்டு.

குளத்தில் நீராடுதல் எண்டத, குளத்தில் நீர் ஆடுதல் எண்டு விளங்கிப்போட்டான். எண்டாலும் உப்பிடி விளக்கம் எடுக்கிறது சரியான கஸ்டம் கண்டியளோ. அவன் லட்சத்தில ஒருத்தனாயிருக்க வேணும். ஆனா அவன் அப்படித்தான் விளக்கம் எடுத்திருக்கிறான். அந்தக் கேணில நீர் ஆடுறதக் காட்டுறதுக்காகச் சின்னச்சின்ன அலைகள் காட்டியிருக்கிறான். எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சம். அவனும்தான். புள்ளிகள் குறைஞ்சதுகூட அவனுக்குக் கவலையில்ல. இந்தக் கதை பள்ளிக்கூடம் முழுக்கப் பரவீட்டுது. அடுத்தநாள் எங்களுக்குப் பாடமெடுக்காத, உயர்தரத்துக்கு மட்டும் ஏதோ ஒரு பாடம் எடுக்கிற வாத்தியார் ஒருத்தர் வந்து எங்கட வகுப்பில கதைச்சார்.

இவனின்ர பிரச்சினையச் சுட்டிக்காட்டி, அதுசம்பந்தமாத்தான் நான் கதைக்க வந்தனான் எண்டிட்டுத் துவங்கினார். உது ஏதோ பொல்லாத வியாதி எண்ட மாதிரி இருந்திச்சு அந்தாளின்ர கதை. ஏதோ ஆங்கிலச் சொல்லில சொல்லீச்சு, எங்களொருத்தருக்கும் விளங்கேல. உப்பிடியே போனா உது பெரிய பிரச்சினையளக் கொண்டந்துடும்; சோதினையில சின்னக் கணக்கக்கூட பெரிசா யோசிச்சு பெரியவழியளில செய்து பிழ விட வேண்டி வரலாம்; வாழ்க்கையில சின்னப்பிரச்சினையளப் பெரிசாக் கற்பனை பண்ணி வாழ்க்கையையே குழப்பிப்போடலாம்; உப்பிடி யோசிக்கிற ஆக்கள் பின்னாளில சரியாக் கஸ்டப்படுவினம்; வேலையளில பிழை விடுவினம்; உது கனக்க யோசிக்கிறதால தான் வாறது; உத இப்பவே தடுக்க வேணும்; தியானம் தான் நல்ல மருந்து.
அப்படியிப்பிடியெண்டு மனுசன் வெளுத்துக்கட்டுது. எனக்கு இந்தப்பிரச்சின வந்திருந்தா அந்தாளின்ர கதையக் கேட்டு நான் பயந்துபோயிருப்பன். (அதோட அந்தாள் சொல்லுற அவ்வளவு பிரச்சினையளும் எனக்கு வந்திருக்கக்கூடும்.) ஆனா நல்லகாலம் எட்மன் சிரிச்சபடியே கேட்டுக்கொண்டிருந்தான். அத அவன் கடுமையான பிரச்சினையா எடுக்கவேயில்ல.

அந்தக்குணம் தானோ என்னவோ, ரெண்டு காலும் போன பிறகும்கூட அவனால சைக்கிளோடவும் படகோடவும் முடிஞ்சுது.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"குளத்தில் நீராடல்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (12 June, 2005 14:15) : 

வசந்தன்., இந்த பதிவை படித்து சிரித்துவிட்டு., நீங்கள் இங்கே என சுட்டியிருந்த பதிவு படித்தேன். அப்பப்பா... கண்ணீரை என்னால் கட்டுப் படுத்த இயலவில்லை. எப்படி அந்தப் பதிவை படிக்காமல் விட்டேன்?., இவ்வளவு இளம் உள்ளங்களின், வீரமும், தியாகமும் எவ்வித அடையாளமும்மின்றிப் போவதா?., எதாவது செய்யுங்கள்.

 

said ... (12 June, 2005 18:06) : 

நல்ல பதிவு.

 

said ... (12 June, 2005 18:07) : 

வசந்தன் மிகவும் இலகுவாக நகைச்சுவையோடு எழுதியிருக்கின்றீர்கள்

 

said ... (12 June, 2005 19:20) : 

நல்லாயிருக்கு.. :)

 

said ... (13 June, 2005 00:54) : 

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
அப்படிப்போடு!
ஏதாவது செய்யுங்களென்றால் என்னத்தைச் செய்வது?

 

said ... (13 June, 2005 03:19) : 

வசந்தன்,
நல்ல பதிவு. Thanks !!!

 

said ... (13 June, 2005 11:47) : 

வாசித்தேன்.
நகைச்சுவையும் கூடவே சுட்டியில் கனமான உணர்வும் கிடைத்தது.

 

said ... (13 June, 2005 14:46) : 

//வசந்தன் மிகவும் இலகுவாக நகைச்சுவையோடு எழுதியிருக்கின்றீர்கள்//

ஆமாம் வசந்தன்.

 

post a comment

© 2006  Thur Broeders

________________