Sunday, June 26, 2005

அன்னியன் பற்றி...

ஒரு வழியாக அன்னியன் பார்த்தாயிற்று.
இது விமர்சனம் அன்று.
அதைத்தான் செய்கிறொமென்று நிறையப்பேர் எழுதியாயிற்றே.
படம் சொல்லும் கருத்து எனக்குத் தேவையில்லாதது. குறிப்பாக சங்கரின் படத்தில் இதைப்பற்றியெல்லாம் கதைக்கமுடியாதென்பதும் என்கருத்து. பொழுதுபோக்கு என்பதைத்தாண்டி இப்படம் விதைக்கப்போகும் கருத்தியலைப்பற்றியும் எனக்குக் கவலையில்லை. அது எனக்குப் புரியவுமில்லை.

எனக்குத் தோன்றியவை.

தமிழ்ச்சினிமாவில் ஒரு நோய் இருக்கிறது. கதைக்காக நடிகனைத் தேடாது, நடிகனுக்காகக் கதையைத் தேடுவது. அப்படிச்செய்தும் பலவற்றில் கதை இருப்பதில்லை. அப்படி வந்ததுதான் அன்னியன். விக்ரமுக்காகவென்றே ஒரு கதையைச் செய்திருக்கிறார் சங்கர். பல வேடங்களில் பின்னக்கூடியமாதிரி விக்ரமுக்கு ஒரு பாத்திரம் வரத்தக்கதாகச் சொல்லிச் செய்த கதை. விக்ரமின் நடிப்புக்குத் தீனிபோடவென்றே இக்கதை செய்யப்பட்டுள்ளது. பல வேடங்களில் வெளுத்துக் கட்ட நல்ல சந்தர்ப்பம் விக்ரமுக்கு. மனிதர் ஏமாற்றவில்லை. பின்னியெடுத்திருக்கிறார்.

ஆனால் சில இடங்களில் காசியும், பிதாமகன் வெட்டியானும் வந்து போகிறார்கள். பல முகபாவங்கள் காசியின் சாடை. தன் காதல் மறுக்கப்பட்டபோது தற்கொலை செய்ய படிக்கட்டுக்களில் இறங்கிவரும்போது, கைகள் ஆட்டாமல் ஓடும் பிதாமகன் வெட்டியான்தான் தெரிகிறது. 3 பாத்திரத்துக்குமே கன கச்சிதமாகப்பொருந்துகிறது உடம்பும் முகமும். அம்பி எல்லோரினதும் பரிதாபத்தைத் தட்டிச்செல்கிறார். நிறைய இடங்களில் சிரிக்க வைக்கிறார். மாறுபட்ட வேடங்களில் நடித்தல் என்பது முத்திப்போய், கணத்துக்குக் கணம் பாத்திரம் மாற்றிப்பேசுவது சுத்த அபத்தம். (பிரகாஷ்ராஜுடனான விசாரணைக்காட்சி. அதிலும் இவரின் நடிப்புத்திறனைப்பார்த்து கையிலிருந்த துப்பாக்கியையும் அவர் கீழே போட்டுவிடுவாராம். நானே ஒரு நடிகன் என்று தொடங்கி பிரகாஷராஜ் சொல்வது விக்ரம் பற்றிய ஒரு தற்புகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட காட்சி.)

வழமையான சங்கர் படம்தான். சண்டைக்காட்சிகள் வைப்பதென்று வந்தபிறகு அதில் ஒரு நேர்த்தியைச் செய்திருக்கிறார்கள். ஏதோ வழமையான காய்கறிச் சந்தைச் சண்டையோ, சட்டிபானைகள் உடையும் சண்டையோ இல்லாமல் புதுசா, (ஆனால் ஏறகெனவே மட்ரிக்ஸ், ஸ்பைடர் மான் என்பவற்றில் பார்த்ததுதான்) கவர்ச்சியா சண்டைக்காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. எல்லாம் புழுகுதான் என்றாலும் வயித்தெரிச்சலைக்கிளப்பாத சண்டைகள்.

பாடல்கள் வழமையானவைதான். பின்னணி இசை பரவாயில்லை. தற்காலச் சினிமாவைக் கருத்திற்கொண்டால், சதாவுக்கு வஞ்சகம் செய்யப்படவில்லை. (அவரும் வஞ்சகம் செய்யவில்லை). வெளிநாட்டுத் தெருக்களில் ஆடாமல் கட்டடத்துள் ஆடியது, தமிழ்ச்சினிமாவில் ஒரு புதுமையான முயற்சி. வாழ்த்துக்கள் சங்கர்.

மற்றவர்களும் சிறப்பாகத்தான் செய்துள்ளார்கள். விக்ரமைவிட படத்தில் மிளிரும் ஒருநபர் பிரகாஷ்ராஜ்தான். எனக்கு மிகப்பிடித்த நடிகருள் ஒருவர். என்னைப்பொறுத்தளவில் விவேக் வந்து போகிறார் அவ்வளவே. நகைச்சுவைக்கென தனியொரு நடிகரை வைத்துக்கொள்ளும் வரை தலையிலடித்துக்கொள்ள வேண்டியதுதான்.

விக்ரம் ஏதோ இன்னொரு தேசியவிருது என்ற அளவுக்குப் புகழ்ந்து தள்ளியிருந்தார். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதுதான் அக்கருத்தின் மீதான என் கருத்து. தனியே நடிப்புக்கு மட்டுந்தான் கருத்திலெடுக்கப்படுமாயிருந்தால் சரிதான். விக்ரம் அசைக்க முடியாதவர். இன்றைய நிலையில் ஓரிரண்டு பேரைத் தவிர வேறு யாரும் செய்ய முடியாத பாத்திரம் தான் அது. ஆனால் கதைக்களமோ சரக்கற்ற வெறும் மசாலாதான். அதில் விக்ரமை மட்டும் வைத்து எப்படி?

இப்படத்துக்கான உழைப்பை உணர முடிகிறது. விக்ரமின் உழைப்பு அலாதியானது. ஆனால் படத்துக்காக செலவு செய்யப்படும் கோடிகளின் எண்ணிக்கையும் பாவிக்கப்ட்ட கமராக்களின் எண்ணிக்கையும் தான் சிறந்தபடம் என்பதை நிர்ணயிப்பதாக நினைக்கப்படுகிறது. யாருக்குத் தேவை 25 கோடியில் படமும் 100 கமரா பாவித்து பாடலும்?

விக்ரம் தனக்கெனத் தளம்பாத ஒரு பாதையை அமைத்துக்கொள்ள வேண்டும். வர்த்தக ரீதியான படங்களிலும் அதே நேரம் தேர்ந்தெடுத்த சில நல்ல படங்களிலும் ஒரே சீராக நடிக்க வேண்டும். இப்படி ஒன்றரை வருடமாக ஒரு வர்த்தகப்படத்துக்காக மட்டுமே உழைப்பது சுத்த முட்டாள்தனம். அப்படி இதுவொன்றும் முக்கியமான படமன்று.
பாலுமகேந்திரா விக்ரமுக்காகக் காத்திருப்பதாகச் சொல்கிறார். தான் சாக முதல் இயக்க விரும்பும் ஒரு படம் விக்ரமுக்காக என்று சொல்கிறார். ஏற்கெனவே எல்லாம் தயார் பண்ணி வைத்திருக்கிறாராம். இன்னும் சில நல்ல கதைகளும் படங்களும் விக்ரமுக்காக காத்திருக்கலாம். விரைவில் நல்ல படமொன்றுடன் விக்ரமைச் சந்திக்க ஆசை.

அன்னியன் படம் பார்க்கலாம் விக்ரமுக்காக - என்னைப்பொறுத்தவரை, விக்ரமுக்காக மட்டுமே.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"அன்னியன் பற்றி..." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (27 June, 2005 08:45) : 

எழுதிக்கொள்வது: பெடியன்'கள்

வலைப்பூக்களில் வரும் பதிவுகள் எப்படியாக அமையவேண்டும் என்பதையும், அவை மீறப்படும்பட்சத்திலல் என்ன நடவடிக்கைகள் எம்மால்மேற்கொள்ளப்படும் என்பதனையும் விரைவில் எமது தலைமை அறிவிக்கும்.

குறிப்பாக தமிழ் மீதும், தமிழ்த் தேசியத்தின் மீதும் களங்கமேற்படுத்தும் பதிவுகளை யாராவது இட்டால்...

தமிழ்மக்கள் மத்தியில் குழப்பங்களை மேற்கொள்ள முற்பட்டால்...

எமது இயக்கத்தை மீறி வேறெவராவது வளர முற்பட்டால்...

பட்டியல் நீளும். தலைமையின் தீர்க்கமான முடிவு விரைவில் அறிவிக்கப்படும்.

- புதியோன்
(ஊடுருவல் படையணி)

அநாவசியமான, தரக்குறைவான பதிவுகளை எழுதும் வலைப்பதிவாளர்களின் தளங்கள் எமது தாக்குதலுக்கு உள்ளாகும் என்பதை அறியத் தருகிறோம்.
எனவே ஒழுங்காக நல்ல பிள்ளைகளாக பதிவுளைப்போடுமாறு எமது இயக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இது எச்சரிக்கை மட்டுமன்று, கட்டளை! கட்டளை! கட்டளை!
எமது பலத்தைக் காட்டவே இது. வெறும் முன்னோட்டம் தான்.

அப்ப வரட்டுங்களா தோழர்களே, தோழியரே!
(இயக்கம் எண்டு வந்திட்டா இப்படியான பெயருகளிலதான் மற்றாக்களக் கூப்பிட வேணுமெண்டு முன்னோர் சொல்லியிருக்கினம்.)
இப்படிக்கு,
-உம்மாண்டி-
பெடியன்'கள்


1.15 27.6.2005

 

said ... (28 June, 2005 23:03) : 

நன்றி பொடியன்கள் (என்ற பெயரில் எழுதுபவர்)
ஆனால் பொடியன்கள் வேறு தளங்களில் எழுதுவதில்லையென்று அறிக்கை வெளியிட்டுள்ளார்களே?
-வசந்தன்-

 

post a comment

© 2006  Thur Broeders

________________