Monday, July 10, 2006

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி

வெளியான முதல்நாளே பார்க்கவேண்டுமென்று இன்றுவரை நான் எந்தப்படத்துக்கும் முயன்றதில்லை. அப்படிப் பார்த்ததுமில்லை. ஆனானப்பட்ட தலை, வால்களின் படங்களுக்கே அப்படித்தான்.

முதன்முறையாக இம்சைஅரசனுக்கு முயன்றேன்.

கதையை முழுக்கச் சொல்லி வழமையாக விமர்சனமென்ற பெயரில் பலர் செய்யும் கேலிக்கூத்தை நான் செய்யப்போவதில்லை. எனக்குப் படம் பிடித்திருக்கிறது. நிறைவைத் தருகிறது.
கதையென்று புதிதாக ஏதுமில்லை. அடுத்தடுத்து வரும் காட்சிகளை நாமே முன்கூட்டிக் கற்பனை செய்துகொள்ளக்கூடியதாக உள்ளது. பெரும்பாலும் சரியாகவே அனுமானங்கள் அமைகின்றன.
அவற்றை அழகாகக்கோர்த்து முழுநீளப் படமாகத் தந்துள்ளார்கள்.

என் கணிப்பில் நகைச்சுவைக்கென்று தனியாக நடித்தவர்களில் நாகேசுக்கு அடுத்ததாக வடிவேலுவைச் சொல்லலாமென்றாலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர் எனக்கு அருவருப்பையும் அயர்ச்சியையுமே தந்தார். (விவேக் போட்டியிலேயே இல்லை). மற்றவர்கள் தூக்கிவைத்துக் கொண்டாடுமளவுக்கு நான் வடிவேலுவைக் கொண்டாடியதில்லை. ஆனாலும் ஏதோவொன்று அவரிடம் என்னை ஈர்க்கிறது.

இப்படத்தில் தன்பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார். அவருக்கேயுரிய வாய்ச்சவடால் பாத்திரம்தான் 23ஆம் புலிகேசி.

நாயகிகள் பலர். அந்தப்புரப் பாட்டுக்காட்சியில் 'குறைந்தபட்சம்' மூன்று நடிகைகளோடு ஆடுகிறார். இவ்வளவுகாலமும் கதாநாயக நடிகர்கள் எனற பேரில் திரையில் வந்தவர்களுக்கு மட்டும் கிடைத்த பேறு இம்முறை முழுநேர நகைச்சுவை நடிகனுக்கு. நன்றாக இருந்தது.
பாடல்கள் அனைத்தும் எனக்கு மிகப்பிடித்தன. முக்கிய காரணம் இசைதான். பாடல்வரிகள் புலமைப்பித்தன். நல்ல தேர்வு. பாடற்காட்சிளும் அருமை. நீண்டகாலத்தின் பின் பாடற்காட்சிகளை இரசித்திருக்கிறேன். சில காட்சிகள் எம்.ஜி.ஆர், ஜெமினியை ஞாபகப்படுத்தின.நகைச்சுவைக் காட்சிகளை தொட்டுக்கொள்ளும் அளவுக்கு வைத்துக்கொள்ளும் படங்களிலேயே அருவருப்பான காட்சிகளும் வசனங்களும் தாராளமாக இடம்பெறும். சொல்லப்போனால் இரட்டையர்த்த வசனங்களும் கீழ்த்தரமான காட்சிகளுமே நகைச்சுவையென்ற மனப்பான்மை வந்துவிட்டது. ஆனால் முழுநீள நகைச்சுவைப் படத்தில் அப்படியேதுமில்லாதது ஆச்சரியம்தான்.

படத்தில் எங்குமே தொய்வு இருந்ததாக நான் உணரவில்லை. என்வரையில் திரைக்கதை அருமையாக அமைக்கப்பட்டுள்ளது.
அரங்கமைப்புக்கள் இயன்றவரை சரியாக இருக்கின்றன. தமிழ்ச்சினிமாவுக்குரிய எல்லையைப் பார்த்தால் திருப்தி என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் வில், அம்பு போன்றவற்றில் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்திருக்கலாம். சாதிச்சண்டைக் காட்சியின்போது ஒருவர் தற்கால 'இரட்டைத் தொலைநோக்கி'யைப் பாவிப்பது தவறா? அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்று தெரியவில்லை.

படத்தின் ஒரேகுறையாக நான் சொல்வது வெள்ளையர் சம்பந்தப்பட்ட காட்சிகள்தாம். படத்தில் எவ்விதத்திலும் ஒட்டவில்லையென்பதுடன் முழுக்கோமாளித்தனமாக இருந்தன. ஆங்கிலேயர் தமிழ்பேசுவதைத் தவிர்த்து வேறொரு முறையைக் கையாண்டிருக்கலாம். ஆனால் இப்படம் மிகச்சாதாரண மக்களை இலக்காகக் கொண்டது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. (உயர்வாகச் சிந்தித்தாலும் ஹேராமுக்காக கமல் வாங்கிய விமர்சனம் போல்தான் வரும்)

திரையில் அனைவரும் தத்தமது பாத்திரத்தைச் சரியாகச் செய்துள்ளனர் என்றே சொல்லவேண்டும். வடிவேலுவுக்கு அடுத்து முக்கிய பாத்திரம் நாசர்தான். நன்றாகச் செய்திருக்கிறார்.

வடிவேலு திரையில் வரும் முதற்காட்சியிலேயே வரலாறு தடம்புரளத் தொடங்குகிறது. முக்கியமான தலைவர்கள், மன்னர்களைச் சொல்லி அவர்களைப்போல் தானும் ஆளவேண்டும் என்று கடவுளை வேண்டும்போது நெப்போலியனின் பெயரையும்சொல்கிறார். ஆனால் படத்தில் அக்காட்சி நெப்போலியனுக்கு முந்திய காலம். அடடா, கதையில் பிசகு விடத் தொடங்கிவிட்டார்களே என்று நினைத்தவேளையில் ஒரு முழுநீள நகைச்சுவைப்படத்தில் இவற்றை எதிர்பார்க்கக்கூடாதென்று அடங்கிவிட்டேன். ஆனால் அது தெரிந்தே சொல்லப்பட்டது என்று நினைக்கும் வகையில் பின்வரும் காட்சிகள் பல இருந்தன. இயக்குனர் சமகாலத்தையும் கலந்துதான் படத்தைச் செய்துள்ளார். முக்கியமான இடங்களில் அவர் சமகாலத்தைப் புகுத்தி அருமையான நகைச்சுவையைத் தந்துள்ள்ளார்.

இரண்டு வடிவேலுக்களும் சந்தித்துக் கொண்டபின் சோதிடர், "நீங்கள் ரெண்டு பேரும் இணைவீர்களென்று எனக்கு முன்பே தெரியும்" என்று சொல்வார். "தெரியுமா? எப்படியப்பா?" என்று ஆவலோடு கேட்டுக்கொண்டு வருவார்கள். அப்போது சோதிடர் சொல்வார், "இரட்டைக்குழந்தை பிறந்தால் திரைக்கதையில் வேறெதைத்தான் செய்ய முடியும்?"

நாசருடன் உக்கிரபுத்திரன் (வீரன் வடிவேலு) வாட்சண்டை செய்துகொண்டிருக்க புலிகேசி (கோழை வடிவேலு) பதுங்கியிருந்து ஒரு கதவுக்குள்ளால் எட்டிப்பார்ப்பார். கதவில் "Enter the Dragon புரூஸ் லீ" யின் இரத்தக் கீறல்கள் விழுந்த உடம்பில் வடிவேலுவின் தலைபொருத்திய ஓவியம்.

படம் முடியும்போது வடிவேலு எல்லோருக்கும் ஒரு பிரசங்கம் வைப்பார். அதில் பல இராசாக்களைச் சொல்லி அவர்களைப் போல் நாமும் வீரமுடன் பகைவரை எதிர்த்துப் போரிட வேண்டும்" என்று முடிப்பார். அதில் இராசஇராசன் தொடக்கம் பலரைச் சொல்லி, Brave Heart மெல்ஜிப்சனையும் சேர்த்துச் சொல்லிமுடிப்பார். இருக்கையை விட்டு ஓடும் முனைப்பிலிருக்கும்போது இவ்வசனம் வரும். பலருக்கு வெளியில் வந்து மற்றவர்கள் சொல்லித்தான் அந்த இறுதி வசனம் புரிந்தது.


படம் நல்ல வெற்றி பெறும் என்பதிற் சந்தேகமில்லை. வடிவேலு இனி தனக்குரிய படங்களையும் பாத்திரங்களையும் கவனத்திற் கொள்வது நன்று. இதுவரைகாலமும் அவர் செய்த பல காட்சிகள் அருவருப்பானவை. குறிப்பாக பெண்வேடமிட்டு அவர் செய்த படங்கள் மோசமானவை. இனிமேலும் அப்படி நடவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதேவேளை இப்படம் தமிழ்ச்சினிமாவில் புதிய போக்கைத் தொடங்கிவிடுமா? தமிழ்ச்சினிமாவில் நீண்ட இடைவெளியில் யாரும் இறங்காத, பழைய காலத்துக் கதைக்குள் இறங்குவார்களா? முழுநீள நகைச்சுவைப்படங்கள் புதிய பரிமாணத்தோடு வெளிவருமா? (கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் வெற்றி பெறாதது தமிழ்ச்சினிமாவின் சறுக்கலே. கமலின் சறுக்கலன்று).


_____________________________________________

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"இம்சை அரசன் 23ஆம் புலிகேசி" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (10 July, 2006 01:15) : 

எழுதிக்கொள்வது: jimmy

நன்றி

17.33 9.7.2006

 

said ... (10 July, 2006 02:11) : 

நன்றிகள் வசந்தன்.
எனக்கு இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று ஒரு உந்துதல் உள்ளது.
மேலும் வலுப்பெற்றுள்ளது இப்பதிவினால்.

 

said ... (10 July, 2006 02:38) : 

எழுதிக்கொள்வது: ஈழநாதன்

நீரும் என்ரை கூட்டுத்தான்.அடிச்சுப் பிடிச்சு படம்பார்க்கப் போனால் முதல் மூன்று காட்சிகளுக்கான நுழைவுச் சீட்டு விற்றுத் தீர்ந்துவிட்டது.வேறென்ன இருந்து விடிய விடிய பார்த்துவிட்டு வந்தோம்.வடிவேல் மட்டுமல்ல சிம்புதேவன் கூட ஏமாற்றவில்லை.ரசித்துச் சிரித்தது அக்காமாலா(கொக்கக் கோலா)கப்சி(பெப்சி) நகைச்சுவையும் அதன் பின்னாலுள்ள அரசியலும்தான்.

0.57 7.7.2006

 

said ... (10 July, 2006 03:02) : 

பட விமர்சனம் நல்லா இருக்கு.

எனக்கு விவேக் முன்பு பிடித்திருந்தது. பிறகு நீங்கள் குறிப்பிடுமாப்போல அருவருப்புத்தான் அவரது நகைச்சுவையாகிவிட்டது. முன்பு மணிவண்ணனுக்கும் அப்படித்தானே (ஆரம்பத்தில் பறவாயில்லாமல் இருந்தது; அல்லது பின்பு போல இல்லை).

 

said ... (10 July, 2006 03:07) : 

எழுதிக்கொள்வது: kajan

இப்படி படங்கள் வருவது சாத்தியம் இல்லை. இது விதி விளக்கு மட்டுமே.

21.57 17.7.2006

 

said ... (10 July, 2006 03:33) : 

உங்கள் விமர்சனம் தராசின் முள்போல் நடுநிலையோடு உள்ளது. விமர்சனம் படத்தைப் பார்க்க ஆவலைத்தூண்டுகிறது.

 

said ... (10 July, 2006 04:26) : 

/என் கணிப்பில் நகைச்சுவைக்கென்று தனியாக நடித்தவர்களில் நாகேசுக்கு அடுத்ததாக வடிவேலுவைச் சொல்லலாமென்றாலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர் எனக்கு அருவருப்பையும் அயர்ச்சியையுமே தந்தார்/

வசந்தன்!
வடிவேல்பற்றி என்னுடைய கருத்துக்களும் இதே.
உங்கள் பதிவு படம் பார்பதற்கான ஆவலைத் தூண்டியுள்ளது.
நன்றி!

 

said ... (10 July, 2006 12:42) : 

ஆஹா நீங்களுமோ அண்ணை
கெளம்பீட்டாங்கய்யா.....

 

said ... (10 July, 2006 14:47) : 

வடிவேலுவுக்கே உரிய வீராப்பு பேசும் ராஜா வேடத்தில், அவர் ஜோலிப்பார் என்பது எதிர்பார்த்ததே !! ஆபாச நகைச்சுவைக் காட்சிகளைக் குறைத்தால் வடிவேலுவுக்கு வளமான எதிர்காலம் உண்டு..

****

மேலும் கதாநாயகனாக வலம் வருவது, வடிவேலுக்கு இப்படமே முதல் என்றாலும், ஏற்கனவே பல படங்களில் (இரண்டாம் கதாநாயகனாக) தன் நகைச்சுவையால் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார் (வின்னர்)..

****

தைரியமாக நகைச்சுவைக் களத்தை தேர்ந்தெடுத்த டைரக்டர் சிம்புதேவனையும், புரடியூசர் ஷங்கரையும் பாரட்ட வேண்டும் !!

 

said ... (10 July, 2006 14:49) : 

எழுதிக்கொள்வது: லக்கிலுக்

விமர்சனம் சூப்பர்... உங்கள் அளவுக்கு இல்லையென்றாலும், எனக்குத் தெரிந்த அளவுக்கு சுமாராக விமர்சனம் செய்திருக்கிறென்... இங்கே பார்க்கவும் : http://madippakkam.blogspot.com/2006/07/23_10.html

10.45 10.7.2006

 

said ... (10 July, 2006 15:02) : 

எழுதிக்கொள்வது: முத்து(தமிழினி)

http://muthuvintamil.blogspot.com/2005/12/blog-post_17.html

இத படிங்க..தொடர்புடைய சுட்டி

11.6 10.7.2006

 

said ... (10 July, 2006 16:46) : 

வசந்தன்,

ஆக்லாந்தில் இந்தப் படம் தியேட்டரில் போடறாங்க. ஆனா நமக்கு வாய்ப்பு இல்லை.
சிடி வரணும். வந்துரும்.

 

said ... (10 July, 2006 17:38) : 

வசந்தன், ஒரு நகைச்சுவைப் படம் என்பதே அரிது என்றாகி விட்ட நிலையில், நீங்கள் சொல்வது போல இம்முயற்சி வரவேற்கத்தக்கதே. அதிலும் குறிப்பாக வரலாற்றுப் பின்னணி வேறு. ஏன் இப்பொழுதெல்லாம் அந்த வகையில் படம் எடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்றே தெரியவில்லை. தமிழில் ஒழுங்காகப் பேச வேண்டியிருக்கும் என்ற எண்ணமோ என்னமோ!

வடிவேலு ஒரு சிறந்த நடிகர் என்பதில் ஐயமில்லை. நகைச்சுவை என்ற தரம் அந்த அளவிற்கு இறங்கியிருப்பதால் அவரும் இறங்க வேண்டியிருந்தது என நினைக்கிறேன். அதே போலத்தான் செந்திலும். அவரும் நல்ல குணச்சித்திர நடிகர்தான். கவுண்டமணி கூட ஐ லவ் இண்டியா என்ற மட்டமான படத்தில் நம்மை ஒரு காட்சியில் கண்கலங்க வைப்பார். விவேக் பெரும்பாலும் இமிடேட்டிங்கில் போய் விடுவதால் அவரைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. கண்டிப்பாகக் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு நடிகர் சார்லி.

நானும் இந்தப் படம் பார்க்கப் போகிறேன். பார்த்து விட்டு என்னுடைய கருத்துகளையும் சொல்கிறேன்.

 

said ... (10 July, 2006 19:03) : 

எழுதிக்கொள்வது: manasu

படத்தை பற்றிய நல்ல விமர்சனம் வசந்தன்.

13.27 10.7.2006

 

said ... (10 July, 2006 19:12) : 

உங்கள் பதிவு படம் பார்க்க வேண்டுமென்ற ஆவலை ஏற்படுத்தியுள்ளது... நாகே ஸை போன்று நகைச்சுவையில் அவருடைய டைமிங்..போன்று இன்னும் ஒருவரை காணவில்ல.. ஆனால் வடிவேலு நல்ல டைரக்டர் கள் அமைந்தால் அவரை வடிவாக செழுமை படுத்தலாம்

 

said ... (10 July, 2006 21:17) : 

வசந்தன் !
கசட் வரட்டும் பாத்திட்டுச் சொல்லுறன்!
யோகன் பாரிஸ்

 

said ... (10 July, 2006 23:27) : 

//கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் வெற்றி பெறாதது தமிழ்ச்சினிமாவின் சறுக்கலே. கமலின் சறுக்கலன்று//
வசந்தன் சாரி. எனக்கும் மும்பை எக்ஸ்பிரஸ் பிடித்தமான ஒரு படம் தான். அதற்காக அந்தப் படல் வெற்றிபெறவில்லை என்பதற்காக தமிழ்ச்சினிமாவை குறை சொல்லக்கூடாது இல்லையா? Consumer is always right என்பது ஒரு வணிகத்தில் தாரக மந்திரம்.

 

said ... (10 July, 2006 23:33) : 

வசந்தன்,

மறந்து விட்டேனே. உங்கள் விமரிசனம் நன்று.

ஆனால், சென்னையில் இருந்து கொண்டு முதல் நாள் காட்சி பார்க்க முடியவில்லை. :(

 

said ... (10 July, 2006 23:40) : 

பின்னூட்டமளித்த ஜிம்மி, பாலாஜி பாரி, ஈழநாதன், பொடிச்சி, கஜன்
ஆகியோருக்கு நன்றி.

அக்காமாலா(கொக்கக் கோலா)கப்சி(பெப்சி)
எனக்கும் பிடித்திருந்தது.
பொடிச்சி, உங்களுக்கு இருந்தளவுக்கு எனக்கு விவேக் குறித்து கருத்து இருந்ததில்லை.

 

said ... (10 July, 2006 23:45) : 

கஜன், கலையரசன், மலைநாடான்,
வருகைக்கு நன்றி.

முதலில் ஒன்றைச் சொல்கிறேன். இது விமர்சனமன்று. விமர்சனமென்றால் கட்டாயம் முழுக்கதையையும் சொல்லியாக வேண்டுமென்ற புரிதல் தமிழ்த்திரையுலக விமர்சன உலகில் வந்துவிட்டது. பத்திரிகைகள் தொடக்கம் பெரும்பாலான வலைப்பதிவுகள் வரை அதுதான் நிலைப்பாடாக உள்ளது. எனவே எனது பதிவு விமர்சனமன்று.

படம் பார்க்கச் செல்பவர்களுக்கு என்னால் சொல்லக்கூடிய ஒரேயொரு முக்கிய அறிவி்ப்பு என்னவென்றால், படம் பார்க்கும்வரை தயவு செய்து விமர்சனங்களைப் படிக்காதீர்கள். நான் பலமுறை நேரில் அனுபவப்பட்டவன். விமர்சனங்கள் தவறாகச் சொல்லப்படுகின்றன என்று சொல்லவில்லை. விமர்சனத்தில் கதையை முழுவதும் படித்துவிட்டு படம்பார்ப்பதில் உள்ள சிக்கல்களை நிறையவே அனுபவித்தவன் நான். முக்கியமாக நகைச்சுவைப் படங்கள் மட்டில் (கமலின் முப்பாய் எக்ஸ்பிரஸ் முக்கியமானது) நன்றாக அனுபவப்பட்டுள்ளேன். இந்தமுறை எதையும் வாசிக்கமுன்பே படத்துக்கு முந்திக்கொண்டது என் பாக்கியம்.

 

said ... (11 July, 2006 00:17) : 

வசந்தன், படம் பற்றிய குறிப்பு(க்)களுக்கு நன்றி.
.......
'...இம்சை அரசன்'.... படம் வெளிவந்த சமயம், வடிவேல் கனடாவில் நிகழ்வுகள் செய்து கலக்கிக்கொண்டிருந்தார் என்று கேள்விப்பட்டிருந்தேன். ஒரு நகைச்சுவை நடிகர் நடித்த படம் வெற்றிகரமாய் ஓடினால் நல்ல விசயமாய்த்தானிருக்கும். இரண்டு வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டில் நின்றபோது விவேக் கதாநாயகனாய் நடிக்கும் 'சொல்லி அடிப்பேன்' (?) போஸ்டர்களை சுவர்களில் பார்த்திருக்கின்றேன். படம் வெளிவந்துவிட்டதா என்று தெரியவில்லை. ஆனால் வடிவேல் இந்தப்படம் வெளிவந்து வெற்றி பெற்றால் என்ன அல்லது இல்லாவிட்டால் என்ன தொடர்ந்து இப்படியான முழுநீளப்படத்தில் நடிக்கமாட்டேன் என்று எங்கையோ கூறியதாய் நினைவு.
......
சரி, சயந்தனும் உமது தொல்லை தாஙகமுடியாது தன் வழி தனி வழி என்று போய்விட்டார். நீர் இனி தலை வால்களின் முதல் ஷோக்களைப் பார்த்து அவர்களையும் திரையில் இருந்து விரைவில் துரத்தும் :-).

 

said ... (11 July, 2006 13:28) : 

கானா பிரபா
வருகைக்கு நன்றி. வழமையாக நான் படங்கள் பற்றி எழுதுவதில்லை. இந்தமுறை எழுதவேணும்போல இருந்தது. அவ்வளவுதான்.

சோம்பேறிப் பையன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 

said ... (11 July, 2006 15:28) : 

லக்கி லுக்,
வருகைக்கு நன்றி.

உங்கள் 'விமர்சனம்' பார்த்தேன்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வையுண்டு. என்பார்வையில் இப்படியான 'விமர்சனங்களை' எழுதுவதையும் வாசிப்பதையும் முற்றாகத் தவிர்க்கவே விரும்புகிறேன். என்வரையில் இவ்வகை எழுத்துக்கள் தவறென்றே சொல்வேன். பிரச்சினை இதுதான். முழுக்கதையையும் சொல்லிவைப்பது. அதை வெகுசனப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் கூடச் செய்கின்றன.
முழுமையாகக் கதையை அலசி ஒரு விமர்சனம் எழுதலாம். (சாரு புதுப்பேட்டைக்குச் செய்தது போல்கூட செய்யலாம்) குறைந்தபட்சம் இருமாதங்களாவது பொறுத்து அதன்பின் அப்படியான விமர்சனத்தைச் செய்யலாம். படம் வெளியான அன்றே செய்வது ஏற்புடையதன்று. ஓர் இரசிகனாக கதையை முழுதாகத் தெரிந்துகொண்டு படம்பார்ப்பதைத் தவிர்க்க நினைக்கிறேன். பல அனுபவங்களுண்டு.
மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் கமல் செவிடாக நடிக்கிறார் என்பதே தெரியாமல் படம் பார்த்த நண்பனுக்குப் பக்கத்தில், கதையைத் தெரிந்துகொண்டு படம் பார்த்த அனுபவம் உடையவன் நான். அப்படத்தில் அவனடைந்த அனுபவங்கள், இரசனைகள் என்னால் அடைய முடியாதவை. அந்தப்படத்தில் மட்டுமே அவனையும் என்னையும் ஒப்பிட்டு, கதை தெரிந்துகொண்டு படம் பார்ப்பதிலுள்ள சிக்கலை எதிர்கொண்ட பல இடங்களைக் கண்டுபிடித்தேன்.
வைத்தியசாலையில் கமல் செவிட்டு மெஷினைக் காதில் மாட்டும்போதுதான் அவருக்குக் காது கேட்காது என்பதை அறிந்த நண்பன் அடைந்த அனுபவம், இதையெல்லாம் முன்பே தெரிந்து வைத்திருந்த எனக்குக் கிடைக்காது. அப்போது தான் முன்பு பசுபதி திட்டம் விளங்கப்படுத்தியதை நினைத்து விழுந்துவிழுந்து சிரிக்கும் அவனுடன் சேர்ந்து என்னால் சிரிக்க முடியாது. இப்படியான அதிர்ச்சிகள் ஓர் இரசிகனுக்குச் சுவாரசியமானவை. படம் முடிந்தபின்னும் தொடர்ந்து படம் பற்றிய தேடலொன்று மனதுக்குள் நடந்துகொண்டிருக்கும். இரண்டாம், மூன்றாம் தடவைகளும் அதே படத்துக்கு அவன் போவான். ஒவ்வொரு முறையும் புதிய இரசனைகளோடு படத்தைப் புரிந்துகொள்வான். (இன்னும் அதிகம் இதுபற்றி எழுதலாம். ஒரு பின்னூட்டத்தில் இவை அதிகம்தான்)

இதனால்தானோ என்னவோ நான் விமர்சனமென்று எதையும் எழுதுவதில்லை. நான் நினைப்பதைப் போல் எழுதமுடியாமலேயே போகலாம். இந்தப் பதிவில் இயன்றவரை, புதிதாகப் படம் பார்ப்பவரைக் குழப்பாத வகையில் எழுதியுள்ளேன். இதிற்கூட 'Brave heart' மெல் கிப்சனைச் சொல்லும் வசனம் பற்றி எழுதியிருக்க வேண்டாமென்று இப்போது யோசிக்கிறேன்.
ஒரு படத்தைத் திரையங்கில் பார்ப்பதென்று முடிவெடுத்துவிட்டால் அதற்குரிய விமர்சனமாக எழுதப்படும் எந்த ஆக்கத்தையும் பார்க்கக்கூடாது என்று முடிவெடுத்துள்ளேன். நான் எழுதிய பதிவுகூட விமர்சனமாகவன்றி ஒரு சிபாரிசாகவே பார்க்கப்படும் என்ற நம்பிக்கையில்தான் எழுதினேன். (ஆனா பலர் விமர்சனம் என்ற சொல்லைப்பாவித்து என்னைக் கேலி செய்துவிட்டார்கள் ;-(

இது எனது கருத்து மட்டுமே. இதைச் சரியாக எடுத்துக்கொள்வீர்களென்று நினைக்கிறேன். சிலவேளை முன்பே கதைதெரிந்து கொண்டு படம் பார்ப்பதின் சிக்கலை நான் மட்டுமே அதீதமாக எதிர்கொள்கிறேனோ என்னவோ?

_______________________________________
முத்து,
உங்கள் பதிவை முன்பே வாசித்துவிட்டேனே..
வருகைக்கு நன்றி.

 

said ... (11 July, 2006 16:15) : 

துளசி கோபால்,
வருகைக்கு நன்றி.

இராகவன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இப்படத்தின் பின் மாற்றம் வருகிறதா பார்ப்போம்.

மனசு, சின்னக்குட்டி, யோகன்,

வருகைக்கு நன்றி.

 

said ... (11 July, 2006 18:03) : 

You should have written about Nagesh too. He acted in this film.

 

said ... (12 July, 2006 13:06) : 

வருகைக்கு நன்றி சீனு,
//Consumer is always right என்பது ஒரு வணிகத்தில் தாரக மந்திரம். //
இருக்கலாம். ஆனால் எப்போதும் சரியென்று என்னால் சொல்ல முடியாது. நுகர்வோர் எதை உடுத்தவேண்டும், எதைப்பாவிக்க வேண்டும் எதைத் தின்ன வேண்டும் என்பவற்றைத் தீர்மானிப்பவற்றில் பெரும்பங்கு உற்பத்தியாளரையும் விளம்பரதாரரையுமே சாருமென்று நான் நினைக்கிறேன்.
கமல்கூட ஒரு கூட்டத்தில் இதையே சொல்லியிருக்கிறார். "எதை உடுத்த வேண்டுமென்று உடை தயாரிக்கும் நிறுவனம் தீர்மானிக்கும்போது, மக்கள் எதைப்பார்க்க வேண்டுமென்று படம் கொடுக்கும் நாங்களேன் தீர்மானிக்கக்கூடாது?" என்று கேள்வி கேட்டார்.
சரி, அதைவிடுவோம். அன்பே சிவம் வந்து இரண்டு வருடங்களின் பின் அண்மையில் வலைப்பதிவில் அதற்கு நடந்த ஆலாபனைகளைப் பார்த்திருப்பீர்களே? நுகர்வோர் அப்போது தவறாக இருந்து இப்போது சரியாக வந்தார்களா? அல்லது மாறி நடந்ததா? இருந்து பாருங்கள், கொஞ்சக் காலத்தின்பின் மும்பை எக்ஸ்பிரசுக்கும் இப்படி நடக்கலாம். நுகர்வோர் எப்போதும் சரியாக இருந்தால், குணா, மகாநதிகளைப் பற்றி எவரும் சிலாகித்துப் பேசக்கூடாது.

 

said ... (12 July, 2006 22:53) : 

எழுதிக்கொள்வது: செந்தழல் ரவி

நல்ல விமரிசனம்...அரு

15.37 12.7.2006

 

said ... (13 July, 2006 00:02) : 

வசந்தன் சார்,

அருமையான விமர்சனம். படம் பார்க்க ஆவல் தூண்டுது.

 

said ... (13 July, 2006 00:29) : 

எழுதிக்கொள்வது: Kuddimani

வசந்தன் அண்ணா உங்கள் விமர்சனம் நல்லாயிருக்கு. நானும் அடுத்த கிழமை பார்க்கபோகவேணும்

11.39 1.6.2004

 

said ... (13 July, 2006 01:32) : 

அந்த ஆரம்ப நேரத்தில் தொடர்ச்சியாக வந்த மூன்று பாடல்கள் அயர்ச்சியை தந்தன , தவிர்த்திருக்கலாம் . அந்த பாடல் வந்தபோது அரங்கத்திற்க்கு எவ்வளவு வேகமாக வந்தார்களோ அதே வேகத்தில் பல வேர் வெளியேறி புகைக்க சென்றனர் .
படமும் உங்கள் விமர்சனமும் அருமை.
வாழ்துக்கள்

 

said ... (13 July, 2006 02:00) : 

////////
நுகர்வோர் எதை உடுத்தவேண்டும், எதைப்பாவிக்க வேண்டும் எதைத் தின்ன வேண்டும் என்பவற்றைத் தீர்மானிப்பவற்றில் பெரும்பங்கு உற்பத்தியாளரையும் விளம்பரதாரரையுமே சாருமென்று நான் நினைக்கிறேன்.
////////
இல்லை வசந்தன். விளம்பரதாரரை சாரும் என்றால், கடைசியில் அது சரியா அல்லது தவறா என்பது நுகர்வோர் கையில் தானே உள்ளது? final decider consumers தானே. அதனால் தான் சொல்கிறேன், நுகர்வோர் நிராகரித்துவிட்டால் அடுத்த முறை அதே product வருமா?

உற்பத்தியாளரும் விளம்பரதாரரும் "நுகர்வோர் ஏற்றுக்கொள்வார்" என யூகிக்க மட்டுமே முடியும். தீர்மாணிப்பவர் நுகர்வோர்.

///சரி, அதைவிடுவோம். அன்பே சிவம் வந்து இரண்டு வருடங்களின் பின் அண்மையில் வலைப்பதிவில் அதற்கு நடந்த ஆலாபனைகளைப் பார்த்திருப்பீர்களே? நுகர்வோர் அப்போது தவறாக இருந்து இப்போது சரியாக வந்தார்களா? ///
நல்ல கேள்வி. சமீபத்தில் "சித்திரம் பேசுதடி" படம் வந்தது. முதல் வாரம் கூட்டமே இல்லை. ஆனால், படம் நன்றாக இருப்பதாக பார்த்தவர்கள் கூறியதால், அந்தப் படத்தை re-release செய்தார்கள் (அதிக விளம்பரங்களுடன்). பின் அந்தப் படம் ஓடியது. இதுவே தான் "சேது" படத்திற்க்கும். ஆனால், "அன்பே சிவம்" ஓடவில்லை என்றதும் கமல் ஒழுங்காக விளம்பரம் செய்திருந்தால் படம் வெற்றி பெற்றிருக்கும். அதாவது, படம் நன்றாக இருந்தால் மட்டும் போறாது. மக்களை அந்தப் படத்திற்கு இழுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

//இருந்து பாருங்கள், கொஞ்சக் காலத்தின்பின் மும்பை எக்ஸ்பிரசுக்கும் இப்படி நடக்கலாம்.//
நிச்சயம் நடக்கும். படம் வெற்றி பெருவதற்கு அந்தந்த காலகட்டங்களும் முக்கியம். (இப்படியும் எடுத்துக் கொள்ளலாம், கமல் 10 வருடம் advanced என்று).

(ரொம்ப தர்க்கம் பண்ணுறேனோ?)

 

said ... (13 July, 2006 21:45) : 

ஜூலியன்,
ஆம் நாகேசும் நடித்தார். அவருடன் மனோரமா, இளவரசு, மனோபாலா, முத்துக்காளை, தேஜாசிறி, மோனிகா, நந்திதா போன்ற நடிகர் நடிகையரும் நடித்தனர்.
பெயர்களைக் குறிப்பிடாமைக்கு வருந்துகிறேன் ;-)
___________________
செந்தழல் ரவி,
அரைகுறையான பின்னூட்டத்துக்கு நன்றி;-)
___________________
பரஞ்சோதி,
நன்றி.

 

said ... (13 July, 2006 21:51) : 

குட்டிமணி,
வருகைக்கு நன்றி.
_______________________
தமிழ் தீவிரவாதி,
நீங்கள் தமிழ்"த்" தீவிரவாதியாக இருந்தால் சரி.
தமிழைத் தீவிரவாதி ஆக்கிவிடாதீர்கள்.

பொதுவாகப் பாடல்கள் மட்டில் என் கருத்து எதிர்மாறானது தான். பாடல்கள் இல்லாமல் தான் படமெடுக்க வேண்டுமென்று சட்டம் போட்டால் நிபந்தனையின்றி என் முழு ஆதரவுண்டு. 'எப்போது பாடல் இல்லாமல் படமெடுக்கத் தொடங்குகிறார்களோ அன்றுதான் தமிழ்ச்சினிமாவுக்கு விடிவுகாலம்' என்று இன்றும் சொல்லி வருகிறேன்.
அந்தளவுக்கு பாடற்காட்சிகளில் ஆத்திரம் கொண்டவன் நான். இருந்தபோதும் நீண்டகாலத்தின்பின் படத்தில் பாடற்காட்சிகளை இரசித்தேன் என்றால் அது இம்சைஅரசனில்தான். இதிற்கூட பாடற்காட்சிகளை நிறுத்திவிட்டுப் படம் வந்தாலும் எனக்குச் சரிதான். அப்படி வந்தால் இன்னும் சுவாரசியமாக இருக்குமென்றுதான் நினைக்கிறேன்.

 

said ... (13 July, 2006 21:54) : 

சினு,
அப்பிடியெண்டுறியள்?
கமலின் பத்துவருட advanced பற்றி சுந்தரும் எழுதியிருந்தார்.
நீங்கள் அதிகம் கதைக்கவில்லையே?

 

said ... (14 July, 2006 08:42) : 

http://video.google.com/videoplay?docid=4413202459678535244

 

said ... (15 July, 2006 01:00) : 

//கமலின் பத்துவருட advanced பற்றி சுந்தரும் எழுதியிருந்தார்.
நீங்கள் அதிகம் கதைக்கவில்லையே?//
ஆஹா, எனக்குத் தெரியவில்லையே? உரல் கிடைக்குமா?

அப்புறம் "அப்பிடியெண்டுறியள்?" என்றால் "அப்படீன்னு சொல்றீங்க?" தானே??? (என்ன பன்னுறது, சென்னையிலெ இருக்கோமே!!)

 

said ... (15 July, 2006 01:52) : 

சீனு,

"பாடும் நிலா பாலு" சுந்தர், மாகாநதிப் பாடல் கொடுத்த பதிவில் ஒரு பின்னூட்டத்தில் இதைச் சொல்லியிருந்தார்.
இதில் எட்டாவது பின்னூட்டம் பாருங்கள்.

//அப்புறம் "அப்பிடியெண்டுறியள்?" என்றால் "அப்படீன்னு சொல்றீங்க?" தானே??? (என்ன பன்னுறது, சென்னையிலெ இருக்கோமே!!)//

அதேதான்.

 

said ... (23 July, 2006 18:11) : 

எழுதிக்கொள்வது: jana

என்ன படமா அது பப்படம்.வடிவேலு(விவேக்குடன் ஒப்பிடமுடியாதவர்)பழைய MGR கதையை அப்படியே காப்பிஅடித்து அதற்கு முதல்வன் வெல்லத்தை சும்ம அள்ளிபோட்டு தந்திருக்கிறார்

18.26 23.7.2006

 

said ... (05 August, 2006 13:58) : 

எழுதிக்கொள்வது: thuyawan

வசந்தன்
விமர்சனங்கள் சிறப்பானது. ஆனால் எனக்கு விவேக்கை விட வடிவேலுவைத் தான் பிடித்திருக்கின்றது. உண்மையில் நகைச்சுவைக்கு ஒதுக்கும் நேரத்தை தான் தத்துவம் கூறுவதாக விவேக் நினைத்து புலம்புவது தான் மிச்சம்! அதுவும்இ பல படங்களில் இரட்டை அர்ரத்ம சகிக்க முடியாது. மேலும் விவேக்கின் நகைச்சுவை என்பது வெறுமனே அந்தக் காலப்பகுதியோடு சரி! அது பொதுவாக அரசியல் நிலைகளை வைத்து நக்கலாக இருப்பது. ஆனால் வடிவேலிவின் காலத்திற்கும் எடுபடுபவை!

பெண் வேடம் இட்ட என்று சொல்கின்ற நீங்கள் சொன்ன காட்சிகள் எனக்கு பார்க்க கிடைக்கவில்லை. அது எந்தப் படத்தைச் சுட்டுச் சொல்கின்றீர்கள் என அறிந்து கொள்ள முடியுமா?

9.45 5.8.2006

 

said ... (01 September, 2006 22:37) : 

//சரி, சயந்தனும் உமது தொல்லை தாஙகமுடியாது தன் வழி தனி வழி என்று போய்விட்டார்//

நாம் எங்கேயும் போய் விடவில்லை என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். எந்த வேளையிலும் வெளியே வருவதற்கான நிலையில் தான் உள்ளே விரும்பி இருக்கின்றோம்

 

post a comment

© 2006  Thur Broeders

________________