Wednesday, June 21, 2006

பேசாலைப் படுகொலை பற்றி மன்னார் ஆயர்

மன்னார் பேசாலை தேவாலயம் மீதான சிறிலங்கா கடற்படையின் அட்டூழியத் தாக்குதல் குறித்து வத்திக்கானுக்கு மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அடிகளார் கடிதம் அனுப்பியுள்ளார்.


அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கையின் மிகப் பெரிய தேவாலயங்களில் ஒன்றான மன்னார் விக்டோரி தேவாலயத்தில் சிறிலங்கா கடற்படையினரது தாக்குதலில் அப்பாவி மக்கள் இரத்தம் சிந்தியுள்ளமையால் தேவாலயத்தின் புனிதம் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் கொல்லப்பட்ட ஆறு பொதுமக்களின் சடலங்களை எரியூட்டிவிட்டு வந்திருகிறேன்.

உள்ளுர் மக்கள் சிறிலங்கா கடற்படையினரால் அச்சமடைந்த நிலையில் உள்ளனர்.

பேசாலையில் உள்ள 7 ஆயிரம் மக்கள் தங்களை இந்தியாவுக்கோ அல்லது விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்கோ அனுமதிக்குமாறு கெஞ்சுகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளால் இத்தேவாலயம் தாக்கப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் பொய்யான தகவலைப் பரப்பி வாருகிறது.

பேசாலையில் உள்ள சிறிலங்கா கடற்படையினரும் சிறிலங்கா காவல்துறையினருமே இத்தாக்குதலை நடத்தினர்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்தோரை காப்பாற்றவும் அவர்களை நோயாளர் காவு வண்டியில் கொண்டு செல்லவும் என்னை சிறிலங்கா இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை.

உள்ளுர் சிறிலங்கா இராணுவ தளபதியை அழைத்து பேசாலையில் உள்ள 7 ஆயிரம் மக்களை சந்திக்க செய்தோம். பேசாலையில் உள்ள கடற்படையினரது கொடுமைகள் குறித்து அந்த மக்கள் கதறியழுத நிலையில் தகவல்களைத் தெரிவித்தனர்.

தங்களை விடுதலைப் புலிகளின் பகுதிக்கோ அல்லது தமிழ்நாட்டுக்கோ செல்வதைத் தடுக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டனர்.

இல்லையெனில் சிறிலங்கா கடற்படையினரால் நாங்கள் அனைவரும் ஒருநாள் கொல்லப்பட்டு விடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

புனித வழிபாட்டு இடமான தேவாலயம் கூட எங்களுக்குப் பாதுகாப்பிலாமல் ஆகிவிட்டது. ஆகையால் அப்பாவி மக்களாகிய நாங்கள் எங்கே போவோம் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்பாவி மக்களுக்கு உள்ளுர் இராணுவத் தளபதி உத்தரவாதம் அளித்த போதும் இத்தகைய உத்திரவாதங்கள் தங்களுக்கு பலமுறை அளிக்கப்பட்டுவிட்டதகவும் இந்த வார்த்தைகள் எல்லாம் நீரின் மேல் எழுதியவை என்றும் மக்கள் குமுறினர்.

பேசாலை கடலில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மோதலின் போது வங்காலைபாடில் மீனவர்கள் குடியிருப்புக்களையும் மீன்பிடி உபகரணங்களையும் கடற்படையினர் எரித்து சாம்பலாக்கினர்.

மேலும் காட்டாஸ்பத்திரி கடற்கரையில் மீன்பிடித்துவிட்டு வந்து கொண்டிருந்த ஆறு மீனவர்களை மண்டியிடச் செய்து அவர்களின் வாயில் துப்பாக்கியை நுழைத்து சுட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் இறந்துள்ளனர். அவர்களின் கைகளில் அடையாள அட்டைகளை பிடித்தபடியே அவர்கள் இறந்துள்ளனர். கடற்படையினரிடமிருந்து தப்பி ஓட முயன்ற இருவர் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர்.

பேசாலை பகுதியில் சிறிலங்கா கடற்படையினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பல வீடுகள் சேதமடைந்தன. விக்டோரி தேவாலயத்தின் சுவர்களிலும் அந்த சுவடுகள் உள்ளன.

காற்சட்டை அணிந்து இரு உந்துருகளில் வந்த 4 பேர் தேவாலயத்தின் மீது கைக் குண்டுகளை வீசினர். 6 ஆயிரம் மக்கள் உள்ளே இருந்த நிலையில் துப்பாக்கிச் சூடுகளை நடத்தினர். உள்ளே இருந்த மக்கள் கதவுகளையும் சன்னல்களையும் மூடிக் கொண்டனர்.

இதில் பெரும் தொகையிலான பொதுமக்கள் படுகாயமடைந்தனர். தேவாலயத்தில் இருந்த புனித வளனார் விக்டோரி சிலையும் சேதமடைந்துவிட்டது.

கடற்படையினரில் ஒருவர் சன்னலைத் திறந்து உள்ளே கைக்குண்டை வீசினார். இதில் பெருந்தொகையான மக்கள் காயமடைந்துள்ளனர் என்று அந்தக் கடிதத்தில் இராயப்பு யோசப் அடிகளார் தெரிவித்துள்ளார்.
___________________
நன்றி: புதினம்.
******************************
முன்பு 1995 யூலையில் நவாலித் தேவாலயத்தில் நூற்றுக்குமதிகமானவர்கள் ஒரேயடியாகப் படுகொலை செய்யப்பட்டபோது சிலர் "இதோட எங்களுக்கு விடிவுகாலம் வந்திடும். வத்திக்கானும் உலகமும் தலையிட்டு பிரச்சினையைத் தீர்த்துவைக்கும்" என்று கதைத்துக் கொண்டதைக் கேட்ட ஞாபகம் வந்துதொலைக்கிறது.

ஆனாலும் இப்படி முறையிட வேண்டியது மிக அவசியம். நீதி கிடைக்குமென்றில்லை. ஆனால் குருநகர் யாகப்பர், நவாலி பேதுரு, வவுனிக்குளத் தேவாலயம், மடுத் தேவாலயம், இன்னபிற இந்துத் தலங்கள் என்பவற்றின்மேல் "மக்களைக் கொல்லும் நோக்குடன்" மட்டுமே குண்டுபோட்டு நூற்றுக்கணக்கிற் கொலை செய்யப்பட்ட சம்பவங்களைத் தெரியாதமாதிரியிருந்துகொண்டு, "சிறிலங்காவின் சுதந்திரதினக் கொண்டாட்டத்தை எதிர்க்கும் நோக்குடன் மட்டும்" நடத்தப்பட்ட தலதா மாளிகைக் குண்டுவெடிப்புக்கு ஒப்பாரி வைத்துப் புலம்பிய (கத்தோலிக்க) மதத்தலைமைகளுக்குத் தெரியப்படுத்தவாவது இப்படி எழுதிக்கொண்டிருப்பது அவசியம்.


_____________________________________________

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"பேசாலைப் படுகொலை பற்றி மன்னார் ஆயர்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (27 June, 2006 09:54) : 

பதிவு செய்தமைக்கு நன்றி.

 

said ... (03 July, 2006 10:31) : 

எழுதிக்கொள்வது: kumar

இங்கே பாருங்க

8.54 3.7.2006

 

post a comment

© 2006  Thur Broeders

________________