Sunday, May 21, 2006

வயிறு குலுங்கச் சிரித்தேன்.

இன்று மெல்பேணில் நிகழ்வொன்று நடந்தது. முடிந்து வந்த வேகத்திலேயே இப்பதிவு வருகிறது.

'ஈழமுரசு' பத்திரிகை நிதியத்துக்காக நடத்தப்பட்ட நகைச்சுவை நிகழ்ச்சியது. ஏற்கனவே சிலநாட்களாக "இவர்கள் புலிகளுக்குத்தான் காசு சேர்க்கிறார்கள். அரசாங்கமே! என்ன பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறீர்கள்?" என்று மற்றவர்கள் தங்கள் கடமையைச் சரிவர செய்துகொண்டிருந்தார்கள்.

இன்று அந்நிகழ்வு நடந்தது. சுமார் நான்கு மணித்தியாலங்கள் நடந்த நிகழ்ச்சி. எனக்கு ஆச்சரியம். இப்படியொரு நிகழ்வை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பொறுக்கி, எஸ்.வி சேகர், லியோனி பாணிகள் கலந்து ஒரு கசாயம் தருவார்கள் என்று நினைத்தேன். வழக்கமாக நகைச்சுவையென்றவுடன் எங்கட சனத்துக்கு எங்கட கதைவசனங்கள் ஞாபகம் வராது. இலங்கை வானனொலி முதல், எங்கட சனத்தின்ர பட்டிமன்றம், நாடகங்கள் என்று எடுத்துக்கொண்டால் எம்மவரின் இயல்பான கதை அவற்றில் தொலைந்துவிடும்.
என்ன கூத்து நடந்தாலும் இடைவேளை வரையாவது இருந்து பார்க்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டுதான் சென்றேன்.

ஆனால் முழு நிகழ்ச்சியும் முடியும் வரை என்னால் ஒன்றிக்க முடிந்தது. என் முழுப் புலனையும் மேடையிற் செலுத்த முடிந்தது. நிகழ்வின் முதல் அங்கமே அசத்தல்தான். அதுவே சொல்லிவிட்டது நான் முடியும்வரை இருக்கவேண்டுமென்பதை. அதுமட்டுமன்றி எதிர்பாராத மகிழ்ச்சி. நீண்ட நாட்களின் பின் மனத்துக்கு நிறைவான, இங்கிதமான மேடைநிகழ்வொன்றைப் பார்த்தேன். எங்கள் மக்களின் நிகழ்வுகள், இயல்புகள், குணங்கள், மொழிநடை, உச்சரிப்பு, சொற்பாவனை, என்று நான் எதிர்பார்த்தவை அப்படியே வந்திருந்தன. எந்தப் படியெடுப்புமில்லை, எந்தத் தழுவலுமில்லை, வேறு யாரினதும் தாக்கமுமில்லை. உலகம் முழுதும் தன் வலிய கரங்களை நீட்டும் தமிழ்த்தொலைக்காட்சிகளிலும் தமிழ்ச்சினிமாவிலும் அள்ளுண்டு போகாமலிருந்த படைப்பு இது. எனவே எனக்கு 'பேச்சந்தோசம்'.

சினிமாப்படங்கள் பார்க்கும்போது நண்பர்களுள் குறைவாகச் சிரிப்பவன் நானாகத்தான் இருப்பேன். தமிழ்ச்சினிமாவில் இயல்பான நகைச்சுவை- அதாவது நான் ரசிக்கும் நகைச்சுவையென்பது பெரும்பாலும் 'நகைச்சுவை நடிகர்கள்' என்ற பெயரில் குப்பை கொட்டுபவர்களிடமிருந்து வருபவையல்ல. அவர்களின் காட்சிகளில் பெரும்பாலும் அருவருப்படைந்த சம்பவங்களே அதிகமென்று நினைக்கிறேன். நான் சிரித்தவை கூட, 'இவர் நகைச்சுவை நடிகரென்ற படியால் இவர் வரும் காட்சிக்குச் சிரிக்க வேண்டும்' என்ற மறைமுகத் தூண்டலாற்கூட இருக்கலாம்.

ஆனால் இன்று நான் மனதாரச் சிரித்தேன். ஒரு நாடகம் என்ற தோற்றப்பாடில்லாமல் இயல்பாகவே அமைந்த சம்பவங்கள். துணுக்குத் தோரணங்களாகக் கோர்க்கப்பட்டவையல்ல.
இந்த நிகழ்வைப்பற்றி அதிகம் புகழ்வதாகத் தெரியலாம். ஆனால் என் நிலை இதுதான்.
எங்கள் இரசனை வலியவற்றால் தீர்மானிக்கப்பட்டது. இவ்வளவு கால அனுபவத்தில் நகைச்சுவையென்று எடுத்தால் பெரும்பாலும் எனக்கு அன்னியமான ஒரு வடிவத்தையே இரசிக்கவேண்டிய நிலை. அது தமிழ்ச்சினிமாவாகவோ,லியோனி பட்டிமன்றமாகவோ எஸ்.வி சேகரின் நாடகமாகவோ இருந்தன/இருக்கின்றன. இன்றுவரை ஓர் அன்னியத்தன்மையுடன்தான் அவற்றை இரசித்து வந்திருக்கிறேன். பதினொரு வயதில் செங்கை ஆழியானின் 'முற்றத்து ஒற்றைப்பனை' படித்தபோது ஏற்பட்ட பரவசம் இன்றுவரை வேறெந்தப் புத்தகத்திலும் வந்ததில்லை. வானொலியை எடுத்துக்கொண்டால் 'புலிகளின் குரல்' பெரும்பாலும் நான் நினைத்த தனித்தன்மையுடன் இயங்கியது. அதில் தமிழ்க்கவி, யோகேந்திர நாதன், அமரர் விஸ்வா போன்றவர்களின் உரையாடல்கள் முக்கியமானவை. இலங்கை வானொலியில் டவுட்டு கணேசன் போல சில நிகழ்ச்சிகளையும் குறிப்பிட வேண்டும். மற்றும்படி ஈழத்தவரின் முயற்சிகள்கூட வலியவற்றைப் படியெடுத்துத் தருவதாகவே இருந்தன. அதே துணுக்குகளைக் கோர்த்துத் தருவார்கள்.

இந்த நிலையில், நிர்ப்பந்திக்கப்பட்ட இரசனைக்குள்ளிருந்து விரும்பிய இரசனை கிடைக்கப்பெற்ற மகிழ்ச்சிதான் இப்பதிவு.

இனி நடந்த நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பற்றிய சிறு அறிமுகம்.

மொத்தமாக ஐந்து நிகழ்வுகள் நடந்தன.

முதலாவது:
முதலாவது நிகழ்வே அமர்க்களமாக இருந்தது. இலவசமாக திருமண சேவை நடத்தும் தம்பதியரைச் செவ்வி காணுகிறது தொலைக்காட்சியொன்று. தொலைக்காட்சி அறிவிப்பாளராக வந்தவர் இன்னும் கொஞ்சம் நன்றாகச் செய்திருக்கலாமோ என்று தோன்றியது. ஆனால் அது ஏனைய மூவரையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போதே அவ்வாறு தெரிகிறது. மேலும் மற்றவர்கள் இயல்பான பேச்சுத்தமிழில் சரளமாகக் கதைக்கும்போது, அறிவிப்பாளரும் அந்த நிலைக்கு வந்துவிடவேண்டுமென்று நினைக்கிறேன். அப்போதும் அறிவிப்புச் செய்யும் பாணியிற் கதைத்துக்கொண்டிருப்பது ஒட்டவில்லை.

முதலில் தம்பதியர் இருவரும்தான் கதைக்கின்றனர். இன்று திருமணப்பேச்சில், திருமணங்களில், திருமணத்தின் பின் நடக்கும் சம்பவங்களை மிகமிகச் சுவையாகச் சொன்னார்கள். அவை வெறுமனே சம்பவங்களைத் தொகுத்து வழங்கியது போன்று தென்படவில்லை. வசனங்களை மனனம் செய்து ஒப்புவிக்கவில்லை. பெற்றோரின் கூத்துக்கள், எப்படி இளைஞர்களை திருமணப்பேச்சுக்கு ஒத்துக்கொள்ள வைக்கிறார்கள், இளைஞர்கள் ஏன் ஒத்துக்கொள்கிறார்கள், பெற்றோர் போடும் நிபந்தனைகள் என்ன? குறிப்புக்கள், சாதகங்களின் விளையாட்டுக்கள் என்று பலவிசயங்கள் வந்தன.
பெற்றோர், மாப்பிள்ளை, பெண் என்று எல்லோரும் தோல்நிறம் பற்றிப் போடும் நிபந்தனைகளைக் கையாள சாத்தியமான அனைத்து நிறங்களுமடங்கிய நிற அட்டவணையும் அவற்றுக்கான தொடர் எண்களும் கொடுக்கப்பட்ட ஓர் அட்டையை வடிவமைத்து வைத்திருக்கிறார்கள். மற்றத் தரகர்களுக்கும் அதை சிபாரிசு செய்கிறார்கள்.
இப்படி சுவாரசியமாகச் செல்கையில், இளைஞர் தரப்பிலிருந்து ஒருவரையும் செவ்விக்கு அழைக்கிறார்கள். வந்தவர் 42 வயதானவர். ஏறத்தாழ 15 வருடங்களாகப் பெண் பார்ககிறார். அவர் வந்தபின் நிகழ்வு இன்னும் களைகட்டியது. அவர் ஏற்கனவே வந்திருந்த தம்பதியரிடம்தான் 15 வருடங்களின் முன் திருமணப் பேச்சுக்கு வந்தவர்.
அவர் போட்ட முதல் நிபந்தனை தனக்கு உயரான பெண் வேண்டுமென்பது. அனால் அவர் சரியான கட்டை.
"டேய் உனக்கென்ன கோதாரிக்கு உயரமான பெட்டை? உன்ர உயரத்துக்கேற்ற மாதிரியிருந்தாச் சரிதானே?"
"என்னண்ணை விசர்க்கதை கதைக்கிறியள்?' உங்கட பரம்பரை மட்டும் ஒரேயளவா இருக்க, நாங்கள் மட்டும் குட்டை குட்டையாப் போறதோ? ஒரு பலன்ஸ் பண்ணி உயத்துவமெண்டா விழல்கதை கதைக்கிறியள்?"
எண்டுவார்.

பெயர் சுருக்கிறது, மாத்துறது எண்டது தொடக்கம் ஆயிரம் டொலர் குடுத்து குறிப்பையே மாத்துறது வரைக்கும் நிறைய விசயங்கள் கதைக்கப்பட்டன.

இந்நாடகத்திலிருந்து நான் சில விசயங்களை அறிந்தேன்.
**குஜராத்திப் பெண்கள் நன்றாகவே ஒஸ்ரேலியாவிலுள்ள ஈழ இளைஞர்களை அலைக்கழிககிறார்கள்;-)
இவற்றைவிட Coffee Shop நடைமுறை, மேலும் சில சிறப்புச் சொற்கள் என்பவற்றை அறிந்தேன்.

*********************************************
இரண்டாவது:

விபத்திற் கொல்லப்பட்டு பேயுலகம் வந்துவிட்ட ஒருவரும் அவரது நண்பரான இன்னொரு பேயும் பூமிக்குச் சென்று தங்கள் வீட்டைப் பார்க்கின்றனர். சொத்துக்கு நடக்கும் பிரச்சினைகள்தான் அடிப்படை. எப்படி சுத்திவளைச்சுக் கதைக்கிறது, எப்படி பொறுப்பையும் செலவையும இன்னொருவர் தலையில் சுமத்துவது என்று உரையாடல் நடக்கும். இறுதியில் தாய்க்கும் மகளுக்குமே சண்டை வந்துவிடும்.

நான் இரசித்தது அந்த மொழிநடைதான்.
பேயுலகத்தில் நடக்கும் கதையில் இயல்பாக பல கதைகள் வந்துபோகின்றன. வாயிற்காப்போன் முந்தி யாழ்ப்பாணக் கச்சேரியில் வேலை செய்த ஒருவரென்று சொல்லி ஒரு நக்கல். இடையில் எலும்பு முறிவுக்கு ஒட்டகப்புலத்தான் பற்றிய கதையொன்று. (நீண்ட நாட்களின்பின் ஒட்டகப்புலத்தையும் மூளாயையும் நினைத்துப்பார்த்தேன்.)
சொத்துச் சேர்த்து, கஞ்சத்தனமாக எதையும் அனுபவிக்காமல் இருப்பவர்களைப் பற்றியும் நல்ல நக்கல்.

***********************************************
மூன்றாவது:
இதைத் தவித்திருக்கலாம், அல்லது வேறு வழியில் முயற்சித்திருக்கலாமென்பது தான் என்னுடைய கருத்து.
நிகழ்வுகளுக்கு இடம்பிடிப்பதில் எங்கள் மக்களின் செயல்களை நக்கலடிப்பது இதன் முதற்பகுதி. அதற்குள் பக்கத்துணையாக நிறைய நக்கல்கள். உணவுப்பொருட்களோ குடிநீர் வகைகளோ எதுவுமே அனுமதிக்கப்படாத கூடத்துக்குள் பெண்கள் எப்படி அவற்றைக் கடத்தி வருகிறார்கள் என்று மேடையில் நிகழ்வு போகின்றது. உண்மையில் எனக்குப்பின் வரிசையில் பெண்ணொருத்தி இடைவேளையில் வாங்கிய ஏதோவொன்றைத் தின்றுகொண்டிருக்கிறார்.

சனிக்கிழமையில் இலவசமாகத் தமிழ் சொல்லிக்கொடுக்கும் தமிழ்ப்பள்ளிகளில் ஆசிரியர்களின் நிலை பற்றியும், எங்கள் பெற்றோரின் நிலை பற்றியும் அடுத்த பகுதி. அதில் பெற்றோரின் கூத்துக்கள் அப்படியே அச்சொட்டாகப் பொருந்திப் போகும். நாடகத்தில் தன்னுடைய பிள்ளையைச் சாமரம் வீச விட்டதுக்காக வாத்திக்கு அடி. தன்ர பிள்ளையை விடவும் கறுப்பான இன்னொரு பிள்ளைக்கு மயில் வேடம் கொடுத்துவிட்டு, தன் பிள்ளைக்குக் காக வேடம் கொடுத்ததுக்கு தமிழ்வாத்திக்கு போண்டா எறி. தமிழ் கதைக்கத் தெரிந்தவர்களைத்தான் அந்தந்தப் பாத்திரத்துக்கு விடலாம், கதைக்கத் தெரியாதவர்களை சாமரம் வீசத்தான் விடலாம் என்று வாத்தியார் விளக்கம் கொடுத்த உடனே, இராமனாக நடித்த பிள்ளை வாத்தியாரின் ஏதோவொரு உறவுக்காறன் என்று துப்பறிந்து அதைப் பெரிய பிரச்சினையாக்குவது. யாழ்ப்பாணத்தில் சிறுவயதில் இப்படி நிறையக் கூத்துக்கள் பார்த்திருக்கிறேன். தாய்தேப்பனுக்குப் பயந்தே தேவையில்லாமல் நாடகத்தில ஒரு துணைப்பாத்திரம் உருவாக்கி அதில் பிள்ளையை நடிக்கவைப்பார்கள்.

ஏனைய நிகழ்வுகளோடு ஒப்பிடும்போது இது அலுப்புத்தட்டும் நிகழ்வு. இதே பிரச்சினைகளை வேறொரு பாணியில் தர முயலலாம். மேலும் இதில் நீதிபதியாக வருபவர் தமிழகத்திலிருந்து சிறப்பாக வருகை தருபவர் என்று சொல்லிச் செய்தார்கள். இது ஏன் என்று தெரியவில்லை. அதைவிட முக்கியகுறை, நீதிபதியின் உரையாடல். ஈழத்தவர்களுக்குத் தமிழகத்தமிழ்நடையை ஒப்புவிப்பது அப்படியொன்றும் பெரிய பிரச்சினையாக நான் நினைக்கவில்லை. ஆனால் இந்நாடகத்தில் வந்த நீதிபதி சரியான முறையில் தமிழக உரையாடலைக் கொண்டுவரவில்லை. பல நேரங்களில் சிங்களவன் தமிழ்கதைப்பதைப் போன்றிருந்தது. (ஆனால் நிகழ்வின் மற்றைய நிகழ்ச்சிகளுடன் ஒப்பிட்டுத்தான் இதைத் தரமற்றது என்கிறேன். மற்றும்படி சராசரித் தமிழ் நிகழ்ச்சிகளைக் கருத்திற்கொண்டால் இது சிறப்பான நிகழ்ச்சிதான்.)
**********************************************
நான்காவது:
மிகச்சிறிய நிகழ்வு. ஆனால் தொடங்கியது முதல் முடியும்வரை ஒரே சிரிப்புத்தான். நடிப்பு அருமையோ அருமை.
தகப்பன் பிள்ளைக்கு ஆத்திச்சூடி சொல்லிக்கொடுப்பதுதான் நிகழ்வு. 'அறம் செய விரும்பு' என்று தொடங்கி ஒவ்வொன்றுக்கும் பொருள்
சொல்லிக்கொடுத்துக் கொண்டு வருவார். அதே நேரத்தில் இடையில் குறுக்கிடும் சிலவற்றால் தான் சொல்லிக்கொடுப்பதற்கு எதிர்மறையானவற்றைச் செய்து கொண்டிருக்கிறார். ஒருகட்டத்தில் 'ஆறுவது சினம்' என்பதைத் திருப்பச் திருப்பச் சொல்ல வைத்து பிள்ளையை இம்சைப்படுத்துகிறார் தகப்பன். இறுதியில் கடும் கோபத்துடன், அடியும் போடுகிறார்.
"ஓடு. போய் கொம்மாவிட்ட படி"
உரத்த குரலில் கத்திக் கலைக்கிறார். ஓடிப்போகும் சிறுமி
'ஊக்கமது கைவிடேல்' என்று அழுதழுது தகப்பனுக்குச் சொல்லிவிட்டுப் போவாள். சற்றுமுன்தான் அதற்கான விளக்கத்தைச் சிறுமிக்குச் சொல்லிக்கொடுத்திருந்தார் தகப்பன்.

காட்சி தொடங்கும்போது மிக அன்பாக, சிநேகமாக இருந்து சிறுமியை அணுகும் தகப்பன் இறுதியில் கடும் சினத்தோடும் ஆத்திரத்தோடும் கண்மண் தெரியாமல் கத்துவதுவரை இயல்பாகச் செல்கிறது காட்சி. எந்தச் செயற்கைத் தனமுமில்லை. தகப்பனின் இந்த மாற்றம் சொற்ப நேரத்துள் நடக்கிறது என்றாலும் எந்த முறிவுமில்லாமல் இறுதியான ஆத்திரக்கட்டத்தை அடைகிறார். அவரை அந்த நிலைக்கு இட்டுச் சென்ற சம்பவங்கள் எங்கள் வாழ்வில் நாளாந்தம் நடப்பவை.
இவற்றுக்கிடையில் மனைவிக்கும் இவருக்குமிடையில் நடக்கும் உரையாடல்கள் சுவாரசியமானவை.

*************************************************
ஐந்தாவது:
இறுதி நிகழ்ச்சி.
நிகழ்வின் உச்சக்கட்டமும் இதுதான்.
ஏற்கனவே போதுமடா சாமி என்ற அளவுக்குச் சிரித்துக்களித்திருந்த
எங்களுக்கு எல்லாவற்றையும் திரட்டி ஒரேயடியாக தீத்தி விட்டது போலிருந்தது இறுதி நிகழ்வு.

நோயாளியான ஒருவரைப் பார்ப்பதற்குச் செல்கிறார்கள் முதிய தம்பதியினர் இருவர். கூடவே அவர்களது பேரனும்.
அவர்கள் செல்லும் நேரம், நோயாளி மிகுந்த களைப்புக்குள்ளாகி ஓய்வெடுக்கவென ஆயத்தமாகும் நேரம். மனைவியும் கூடவே இருக்கிறார். அப்போது சலம் கழிக்கவென ஆயத்தமாகும்நேரம்தான் இத்தம்பதியினர் வருகின்றனர். நோயாளிக்கு ஏற்கனவே இத்தம்பதியைப்பற்றித் தெரியும். தப்புவதற்காக உடனே நித்திரை போல காட்டிக்கொண்டு படுத்திருக்கிறார். மனைவிதான் கதைக்கிறார். அவர்களை அனுப்ப எவ்வளவோ முயன்றும் கிழடுகள் நகர்வதாக இல்லை. ஒருகட்டத்தில், தான் இவர்களுடன் கதைத்து அனுப்பினால்தான் போவார்கள் என்ற நிலையில் நித்திரை விழித்துக் கதைக்கிறார் நோயாளி. பலனில்லை. கிழடுகள் போவதாக இல்லை. மாறாக விடுவதாகவும் இல்லை. ஊர்ப்புதினமெல்லாம் கதைக்கிறார்கள். அதற்குள் அவர்களுடன் வந்த பேரன் நிறையவே படுத்திவிட்டான் நோயாளியை. நோயாளியால் சலத்தையும் பொறுக்க முடியவில்லை, இவர்களின் இம்சையையும் பொறுக்க முடியவில்லை.
இறுதியில் கையெடுத்துக் கும்பிட்டு போய்த்தொலையுங்கள் என்று விரட்டிவிடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்.

இறுதிவரை விழுந்துவிழுந்து சிரிக்கவைத்த நிகழ்வு. எங்கள் கிழடுகளைக் கண்முன்னே அப்படியே கொண்டுவந்திருந்தார்கள்.
"எடி புஸ்பம்! ஐயோ, என்ர குஞ்சு" என்றபடி வந்து கட்டிப்பிடித்துவிட்டு தொடங்குகிறது கிழடுகளின் கூத்து.
"உவள் சிவமலரின்ர பிள்ளைப் பெத்துக்கு வந்தனாங்கள். அஞ்சாம் பேறு மூண்டாம் வார்ட்டு" என்று கதை தொடக்குபவர்களிடம், தனக்குச் சிவமலரைத் தெரியாது என்கிறார் மனைவி.
"இதென்ன கோதாரி! டங்டினோ சிவத்தாரின்ர மோள் சிவமலரைத் தெரியாதாம். சிவமலர், நேசமலர், பாசமலர் எண்டு மூண்டு சகோதரிகள்" என்று புராணத்தைத் தொடங்குகிறார் கிழவி. எப்படி கலைத்துவிடலாம் என்று இருக்கும் மனைவிக்கு மேலும் மேலும் சிக்கல்தான்.
நெடுக ஆக்கள் வந்து பாக்கிறதால ஒரேகரைச்சல் என்று சொல்லும் நோயாளிக்கும் மனைவிக்கும்
"ஏன்? ஒருத்தரையும் விடவேண்டாமெண்டு நேர்சிட்ட சொல்லிறதுதானே?
அவையள் சொல்லாட்டியும் நீங்களாவது வாறவைக்குச் சொல்லிறதுதானே? எங்கட சனம் மூளையில்லாத சனம். நெத்தியில அடிச்ச மாதிரி சொல்ல வேணும்
" என்று கிழவி சொல்லுவா.
'அப்படிச் சொல்லியும் அதுகளுக்கு விளங்குதில்லையணை' என்றவுடன்
"உங்களுக்குச் சொல்லிற வல்லமையில்லை. என்னட்ட விடுங்கோ நான் நாக்கப்பிடுங்கிற மாதிரிச் சொல்லிறன்" என்று கிழவி சொல்லுவா.

ஒருகட்டத்தில் பெண்வைத்தியர் வந்து நோயாளியைப் பார்வையிடுவா. இளம்பெண் வைத்தியர். நல்ல நிறம்.
உடனே கிழவி, கிழவரைப் பக்கத்தில் அழைத்து,
"ஏனப்பா, உவள் கலியாணம் கட்டிப்போட்டாளோ எண்டு விசாரிச்சுச் சொல்லுங்கோ"
என்று இரகசியமாய்ச் சொல்ல கிழவரும் விசாரிச்சுச் சொல்லுவார்.

பிறகு கிழவரிட்ட தன்ரை திட்டத்தை விளங்கப்படுத்துவா.
"உவன் சின்ராசன்ரை பெடியனுக்கு உவளைப் பேசிப்பாத்தா என்ன? நல்ல எடுப்பாவும் உயரமாவும் நிறமாவும இருக்கிறார். பெடியனும் உப்பிடியொருத்தியத்தானே தேடிக்கொண்டு திரிஞ்சவன்?"
இந்த இடம்தான் நான் அதிகமாக இரசித்த இடம்.
எங்கள் பெண்கள் எல்லோரிடமும் இருக்கும் பொதுவான குணமிது.
கிழவர் தொடர்கிறார்.
"அது சரிதான். ஆனா அவள் வெள்ளைக்காரி மாதிரியும் தெரியேல. எங்கட ஆக்கள் மாதிரியும தெரியேலயே?"
"உவள் குசராத்திக்காரி தான். அதுக்கென்ன? உவளவையள் தானே இப்ப எங்கட பெடியளுக்குக் கனவுக்கன்னியள்?"
பிறகு அவளின் பெயரட்டையில் இருக்கும் அவளது பெயரைப் பார்த்துச் சொல்லும்படி கிழவருக்கு கட்டளை வருகிறது. அந்தப் பெயரை அறிய கிழவரின் ஆடும் விளையாட்டும், அதுசரிவராமல் கிழவியிடம் கிழி வாங்குவதும் சுவாரசியம். ஒருகடத்தில், தனக்குத் தமிழ் புரிந்துகொள்ள முடியுமென்று அப்பெண் சொல்லிவிடுவாள்.
அதன்பிறகு நிலைமை தலைகீழ். அவளது குடும்பம் இலங்கையைச் சேர்ந்தது என்று தெரிந்தபிறகு வழமையான புத்தி வந்துவிட கிழடுகள் தொடர்கின்றன.
"அப்ப நீங்கள் யாழ்ப்பாணமோ? யாழ்ப்பாணத்தில எந்த இடம்?" என்று தொடங்குகிறார்கள். வழமையான "இடம் கேட்டலின்" அரசியல் தொடங்குகிறது.

கிழவனும் கிழவியும் சபையோரைப் பிரட்டியெடுத்தார்கள். அறளை பெயர்ந்த கிழடுகளின் சாகசங்கள் அருமை.
கிழவனாக வந்தவர் மருத்துவர் ஜெயமோகன். நல்ல உன்னிப்பாக் கவனிச்சிருக்கிறார். கதை ஒரு கட்டத்துக்குப் போக திரும்பவும் முதலிலிருந்து,
'அப்ப உமக்கு சிவமலரைத் தெரியாதோ?' என்று தொடங்கும். தள்ளாடும் நடை, இருக்கும்போது, எழும்பும்போது என்று அத்தனையும் அப்படியே முதியவர்களைப் பிரதிபலித்தது. ஒரு கட்டத்தில் சலம்கழிக்க நோயாளி சென்றவுடன் அவரின் இருக்கையில் இருந்துவிட்ட கிழவரை திரும்பி வந்த நோயாளி எழும்பச் சொல்லுவார். கிழவர் கேட்காத மாதிரி இருப்பார். பின்பும் கட்டாயப்படுத்த, நீர் கொஞ்சம் காலாற நடவும், நெடுக இருந்து என்ன கண்டீர் என்பார். அதற்கும் மறுத்து எழும்பச் சொன்னபோது,
'இஞ்ச பிள்ளை, என்னை எழும்பட்டுமாம்' என்று மனைவியிடம் செர்ல்வார். பின் எழும்பும்போது, அதுவரை உசாராகவே இருந்தவருக்குத் திடீரென்று புது வியாதிகள் வந்துவிடும். பல்லெல்லாம் கிட்டியடிக்கும். கதிரையிலிருந்து எழும்ப முடியாமல் தள்ளாடியபடியிருப்பார். பிறகு மற்றவர்களின் கைத்தாங்கலோடு எழுந்துநின்று நாரியைப்பிடிப்பார்.
இக்காட்சியும் பாத்திரமும் நான் நிறையத்தரம் நேரில் அனுபவித்தவை. அப்படியே மனக்கண்முன் வந்தன.
*****************************************
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், மிகமிக அருமையான, இனிமையான நிகழ்வாக இருந்தது. நடிகர்கள் அனைவரும் மிகச்சிறப்பாகச் செய்தனர். குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவர்கள் மூன்று பேர்.
சாமினி (இவர் ஜெயமோகனின் தங்கையென்று கானாபிரபா சொல்கிறார்.)
மருத்துவர் ஜெயமோகன்
பெயர் தெரியாத மற்றொருவர் (இறுதியில் நோயாளியாக வந்தவர், முதலாவதில் தரகராக வந்தவர்)

நிகழ்வுகளின் இடையில் எத்தடங்கலுமில்லை. யாரும் வசனங்கள் பாடமாக்கி மறந்ததாகவுமில்லை. இவர்கள் அடுத்தமுறை இதே நாடகம்போடும்போது இதே வசனங்களை அப்படியே ஒப்புவிக்கப்போவதில்லை. அதாவது மனனம் பண்ணி இவர்கள் நாடகம் போடவில்லையென்பது தெளிவு. அதுதான் இப்படியான நாடகங்களின் பலம். எனக்குப் பிடித்ததும் இதுதான். கதைப்பவர்கள் அந்த இடத்தில் இயல்பாகக் கதைக்க வேண்டும். நகைச்சுவையென்பது சொல்லப்படும் விசயத்தில் மட்டும் தங்கியில்லை. அதைவிடவும் சொல்லப்படும் முறையில்தான் பெருமளவு தங்கியுள்ளது. மொழிப்பாவனைதான் முக்கியம்.


வந்தவுடன் பதிகிறேன். பதிவைத் திருப்பிப் பார்க்கவில்லை. அதிகம் அலட்டினோனோ என்று தோன்றுகிறது.


இந்நிகழ்வைக் குறுவட்டாக வெளியிடவிருப்பதாகச் சொல்கிறார்கள். எதிர்பார்க்கிறேன்.


_____________________________________________

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"வயிறு குலுங்கச் சிரித்தேன்." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (21 May, 2006 03:46) : 

வசந்தன்,
வந்த வேகத்தில் பதிந்ததால் கொஞ்சம் அலட்டல் போல தான் தெரியும்.
நாளை கண்விழித்தும் இதே மாதிரி தோன்றினால் அது உண்மையிலேயே நல்ல பகடி என்று கொள்ளலாம்.

 

said ... (21 May, 2006 04:05) : 

வசந்தன்!

நானும் இன்று நல்லதொரு நம்மவர் நிகழ்வில் பங்குகொண்டபின் பேச்சந்தோசத்தில வந்து பாத்தா உங்கட இந்தப்பதிவு. பதிவு பற்றி பிறகு சொல்லிறன். ஆனா எங்கட ஆக்கள் நல்லாச் செய்யினமென்டத நினைக்கச் சந்தோசமா இருக்கு.
நான் பாத்த நிகழ்ச்சி பற்றின பதிவ கெதியில தாறன்.

 

said ... (21 May, 2006 05:19) : 

//ஆனால் இன்று நான் மனதாரச் சிரித்தேன். ஒரு நாடகம் என்ற தோற்றப்பாடில்லாமல் இயல்பாகவே அமைந்த சம்பவங்கள். துணுக்குத் தோரணங்களாகக் கோர்க்கப்பட்டவையல்ல.
இந்த நிகழ்வைப்பற்றி அதிகம் புகழ்வதாகத் தெரியலாம். ஆனால் என் நிலை இதுதான்.//


தமிழ்த் தொ.காட்சியில்(ரீ.ரீ.என்.); நையாண்டி மேளமென்றொரு நிகழ்வு நடைபெறும்.அதற்கு நாங்கள் பெரும் விசிறிகள்!அதைப் போன்றுதாம் இதுவும் இருக்கிறது.எனவே நீங்கள் அகம் மகிழ்ந்து,சிரிப்பது நியாயமே!


//ஓடிப்போகும் சிறுமி 'ஊக்கமது கைவிடேல்' என்று அழுதழுது தகப்பனுக்குச் சொல்லவிட்டுப் போகும். //இவ்விடத்தில் நானும் விழுந்து,விழுந்து சிரித்தேன்!-அது உங்கள் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி!

சுருங்கக் கூறின் நல்லதொரு பதிவு!

வாழ்த்துக்கள்!

 

said ... (21 May, 2006 06:55) : 

எழுதிக்கொள்வது: துளசி கோபால்

நல்ல பகிடியப்பா. இங்கேயும் இது போல் ஒன்றைப்
போடத்தான் வேணும்.சிரிச்சு ரொம்ப நாளாச்சு.


9.10 21.5.2006

 

said ... (21 May, 2006 09:09) : 

வணக்கம் வசந்தன்

நீங்கள் குறிப்பிடும் நாடகக்கலைஞர்கள் கடும் 2 மாதங்களுக்கு மேல் கடும் பயிற்சியில் தம்மை ஈடுபடுத்தி நடித்தவர்கள். மருத்துவர் ஜெயமோகன் அவர்கள் தன் வேலைப்பணிகள் மத்தியிலும் தானே பிரதியெழுதி இவர்களித்தயார் படுத்தியவர். நாடகத்தில் முக்கிய மாத்திரங்களில் வந்த ஷாமினி அவர் சகோதரி. ஷாமினி அவர்கள் இலங்கை வானொலியின் "தணியாத தாகம்" நாடகத்தில் முக்கிய பாத்திரம் ஏற்றவர். கடுமையான பயிற்சியும் நல்ல சொந்த சரக்கில் பிரதியுமிருந்தால் இப்படியான நல்ல ப்டைப்புக்கள் வருவதில் வியப்பேதுமில்லை. இன்னொரு பெருமை முக்கிய நடிகர்கள் எமது வானொலி அறிவிப்பாளர்கள்.

ஒரு கேள்வி
உந்த உடம்பை வச்சுக்கொண்டோ வயுறு குலுங்கச்சிரிச்சனீர்? பக்கத்து சீற் என்ன வெறுமையாகவா இருந்தது:-)

 

said ... (21 May, 2006 12:26) : 

உங்கள் தாக்கத்தை நன்றாக வடித்துள்ளீர்கள். வந்த வேகத்தில் பதிந்ததால் உங்கள் மனநிலையை படம் பிடித்துள்ளது. நம் சுற்றம் செயிக்கும்போது ஏற்படும் 'பேச்சந்தோசம்' தனிதான். ந்ங்களுக்கும் அந்த குறுவட்டை வாங்கவேண்டும் என்று தூண்டுகிறது.

 

said ... (21 May, 2006 14:02) : 

டாக்குத்தர் ஜெயமோகனும் அவற்றை சகோதரி ஷாமினி ஸ்ரோரரும் சேர்ந்தால் கேட்க வேண்டுமோ? இங்கை சிட்னியில அடுத்தடுத்த கிழமை ரெண்டு தரம் போட்டவை. ரெண்டு தரமும் டிக்கட் இல்லாமல் சனம் திரும்பிப் போனதுகள். போன வருசம் அவையளின்ர நாடகங்கள் டீவீடீ யிலை வந்தது. எல்லாம் முடிஞ்சுதெண்டு கேள்வி.

உங்கட வேகமான விமரிசனத்தைப் பார்த்து பேய்ச்சந்தோஷம்.

 

said ... (21 May, 2006 19:01) : 

கார்த்திக் வேலு,
மலைநாடான்,
சிறிரங்கன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சிறிரங்கன்,
நானும் நையாண்டி மேளத்தின் இரசிகன். இப்போது பார்க்க முடிவதில்லை.
அதைவிட 'படலை படலை' நிகழ்ச்சிக்கும் இரசிகன்.
இவைபற்றி ஏற்கனவே ஒருபதிவில் எழுதியுள்ளேன்.

 

said ... (21 May, 2006 19:05) : 

துளசி கோபால்,
வருகைக்கு நன்றி.
உங்கட இடத்தில நாடகம் போடடாலும் எங்களைப் போல இதை முழுமையாக இரசிக்க முடியாதென்று நினைக்கிறேன். உங்களுக்கு நிறைய விசயங்கள் புரியாமலேயிருக்கும். முக்கியமாக மொழி.

 

said ... (21 May, 2006 19:14) : 

கானா பிரபா,
வருகைக்கு நன்றி.
//நல்ல சொந்த சரக்கில் பிரதியுமிருந்தால் இப்படியான நல்ல ப்டைப்புக்கள் வருவதில் வியப்பேதுமில்லை//
சொந்தச்சரக்கு தான் முக்கியம்.
அதில நடிச்ச ஆக்களின்ர பெயர்ப்பட்டியல் தெரிஞ்சா ஒருக்கா இணைச்சு விடுமன். எனக்கு கடசியா ஆக்களை அறிமுகப்படுத்தேக்க ஞாபகம் இருந்த ரெண்டு பேரைத்தான் குறிப்பிட்டிருபக்கிறன்.
அதுசரி, குசராத்திக் காரியளின்ர கதை உண்மைதானோ?
நீங்கள்தான் சொல்ல வேணும். தெரியாட்டி ஆரேன் **இளந்தாரியளக் கேட்டுச் சொல்லுங்கோ.
என்ர உடம்பு பற்றின உங்கட கதை வெறும் கட்டுக்கதை. அதவிட என்ர உடம்பை நீங்கள் எங்கயும் பாத்திருக்கச் சந்தர்ப்பமுமில்லை.
****************இலங்கை வானொலியில கிழவிப் பாத்தரத்துக்கு நெடுக ஒராள் வாறவ. பேர் தெரியுமோ? சோதியோ என்னவோ. எனக்கு அவவின்ர கதை நல்லாப் பிடிக்கும்.

 

said ... (21 May, 2006 19:20) : 

மணியன், கனகு
வருகைக்கு நன்றி.

கனகு இஞ்சையும் ரிக்கெட் இல்லாமல் பிரச்சினைதான். தாங்கள் பெரிசா எதிர்பாக்கேலயாம் எண்டு பதில் சொல்லிச் சமாளிச்சினம்.

குசராத்திக் காரியள் பற்றி கானாவிட்ட கேள்வி தான் உங்களிட்டயும்;-)

 

said ... (21 May, 2006 20:44) : 

வணக்கம் வசந்தன்

சிட்னியில் இருமுறையும் அந்த நாடகத்தை நான் தவறவிட்டுவிட்டேன், எனவே நடித்தவர்களின் பாத்திரப்பங்களிப்புத் தெரியாது. பொறுங்கோ விசாரிச்சுப் பாக்கிறன்.

அந்தக் கிழவி ஏ.எம்.சி.ஜெகஜோதி என்று நினைக்கிறேன்.

 

said ... (21 May, 2006 22:55) : 

/குசராத்திக் காரியளின்ர கதை உண்மைதானோ?/

நெற்றிலை நாலைஞ்சு இளவட்டங்களுக்கு ஒண்டா கலியாணம் கட்டிவைப்பமெண்டு (ஒண்டையில்லை, ஒண்டாய்) நினைச்சுக்கொண்டிருக்கிறன். இப்போதைக்கு மூண்டு பேர் முதல் பச்சிலை (பட்டியிலை எண்டு வாசிக்கவும்) வருகினம். வசந்தன் (வேணுமெண்டால், சயந்தனுக்குங்கூட), டிசே, கார்த்திக்குராமாசு. வயசுக்கோளாறுகளடாப்பா.

 

said ... (21 May, 2006 23:06) : 

நீங்கள் சயந்தனின்ர குடும்பத்தில வேண்டாத சண்டையள மூட்ட முற்படுறியள். உது வேண்டாம். எங்களோட என்னத்தையும் றாத்துங்கோ. சயந்தன விட்டிடுங்கோ. இப்ப உங்கட பின்னூட்டத்துக்கே அங்க என்ன பிரளயம் நடக்கப்போகுதோ தெரியேல.

 

said ... (21 May, 2006 23:09) : 

/இப்ப உங்கட பின்னூட்டத்துக்கே அங்க என்ன பிரளயம் நடக்கப்போகுதோ தெரியேல/

ஏதோ எங்களால சமூகத்துக்கான குடும்பத்துக்குள்ளை குழப்பம் பண்ணுற வேலை

 

said ... (21 May, 2006 23:11) : 

பெயரிலியண்ணை (பெயரிலிக்கு பிறகென்ன அண்ணை, அக்கா எண்டுகொண்டு?),
எல்லாம் ஒரு பொது அறிவை வளத்துக் கொள்ளிறதுக்குத்தான். ஒஸ்ரேலியாவில இருந்துகொண்டு, உந்த விசயங்களை நாடகம் மூலம் தான் தெரியவேண்டிய நிலையில நாங்கள் கிடக்கிறம். உது எவ்வளவு பெரிய இழுக்கு?
அதுதான் ஒருக்கா உறுதிப்படுத்துவம் எண்டு பாத்தன். அல்லது நாடகக்காரர் சும்மா வண்டில் விடுகினமோ எண்டும் உறுதிப்படுத்த வேணுமெல்லோ.
வேற வேற நாடகங்களில நாலைஞ்சு முறை உந்த குசராத்திக் காரியள் பற்றி வருது. எண்டபடியா விசயம் சீரியசானதெண்டு விளங்குது.

 

said ... (21 May, 2006 23:12) : 

/இப்ப உங்கட பின்னூட்டத்துக்கே அங்க என்ன பிரளயம் நடக்கப்போகுதோ தெரியேல/

ஏதோ எங்களால சமூகத்துக்கான குடும்பத்துக்குள்ளை குழப்பம் பண்ணுற வேலை

 

said ... (21 May, 2006 23:13) : 

அண்ணை,
மேல வந்த பின்னூட்டம் உங்கட மற்றப் பேரால வந்திட்டுது. நான்தான் மாத்திப் போட்டிருக்கு.
புதுசா வாற ஆக்களுக்குக் குழப்பமாப் போடுமெண்டதாலதான் மாத்தினனான்.

 

said ... (22 May, 2006 00:00) : 

உமக்கு எழுதுவமெண்டிருந்தனான்; நீரே மாத்திப்போட்டீர் (பாம்பின் கால் பாம்புதான் அறியுமெண்டுறீரோ? ;-))அது என்ரை மற்றப்பேரில்லை; ஆரோ பொதுவிலல இருக்கட்டுமெண்டு தந்தது. அங்காலை இலையைப் போட்ட கையோட இங்கால பின்னூட்டத்தைப் போட்டதால வந்த வினை. உபகாரம்

 

said ... (22 May, 2006 18:36) : 

உப்பிடி யாழ் மண் வாசணை கமண நகைச்சுவை விடுறதுக்கு..அந்த கால இலங்கை வானொலி புகழ்.. அப்புக்குட்டி ராஜகோபாலும்...வரணியூரான் கணேசபிள்ளையும் கை தேர்ந்தவர்கள்....நல்லொரு பதிவு நன்றி...

 

said ... (22 May, 2006 19:25) : 

அந்த நிகழ்ச்சி பற்றிய உங்கள் கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி வசந்தன்.

 

said ... (22 May, 2006 23:45) : 

சின்னக்குட்டி,
சந்திரவதனா,
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

 

said ... (24 May, 2006 07:52) : 

எழுதிக்கொள்வது: Nadakan

திரமான நல்ல நாடகம்.இதை வேரு நாடுகலில் இருக்கும் எஙடை ஆட்கலும் பார்க்க ஒரு சந்தர்பம் கிடைத்தால் நல்லது. யாரும் உதவலாமா?

7.57 24.5.2006

 

said ... (24 May, 2006 10:21) : 

எழுதிக்கொள்வது: Hasan

The person who acted on the patient role was Rajan Dharmarajah

10.46 24.5.2006

 

said ... (25 May, 2006 15:59) : 

நாடகன்,
வருகைக்கு நன்றி.

Hasan,
தகவலுக்கு நன்றி.

 

said ... (27 August, 2006 08:03) : 

இப்படிப்பட்ட நாடகங்களின் பிரதிகள் கிடைக்க யாரை அணுகவேண்டும் எனத் தெரிவித்தால் நண்றியுடையவனாக இருப்பேன்! குறிப்பாக அந்த ஆத்திச்சூடி நாடகம்.
அல்லது இதன் வீடியோ படிவம் கிடைப்பினும் சம்மதமே!
நன்றி!

 

post a comment

© 2006  Thur Broeders

________________