சன் ரீவி கவியரங்கம்.
கலைஞர் தலைமையில் சித்திரைத் திருநாட் கவியரங்கமொன்று சன்-ரீவியில் ஒளிபரப்பானதைப் பார்க்கும் பாக்கியம் பெற்றேன். ஏனைய நான்கு கவிஞர்கள், பா.விஜய், அப்துல் ரகுமான், வைரமுத்து, வாலி. இவர்களில் வாலியிருந்தது எனக்கு முதலில் ஆச்சரியம். வாலியைத் தவிர மீதி மூவரும் கலைஞர் பக்தர்கள். வாலியோ மேடையில் எல்லார்க்கும் பக்தர். 82 ஐ நெருங்கிக்கொண்டிருக்கும் கலைஞர். திடகாத்திரமாக இருப்பதாகவே பட்டது. கலைஞரின் தலைமைத் தொகுதி முடிந்ததும் முதலில் வந்தவர் பா.விஜய். கலைஞர் கையால் பட்டம் வாங்கியவர். அவர் வாய்திறந்து சரியாக பன்னிரண்டு நிமிடங்களின்பின் 'தலைப்புக்கு வருகிறேன்' என்று அறிவித்தார். அதுவரை அந்தப்பன்னிரண்டு நிமிடங்களும் கூட்டம் கைதட்டிக்கொண்டேயிருந்தது. "சிறுவயதில், பிரம்மாஸ்திரத்தைத் தொலைத்ததுக்கே கலங்காதவர் நீங்கள். பம்பரத்தைத் தொலைத்ததுக்கா கலங்கப் போகிறீர்கள்?" என்பது போன்றுதான் அந்தப்பன்னிரண்டு நிமிடங்களும் கழிந்தன. ஆனாலும் தலைப்புக்குள் வந்தபின் அவர் மரபிலே பாடிய சிலவரிகள் பிடித்திருந்தன. அடுத்து வந்தவர் கவிக்கோ. கலைஞர் ஆலாபனை முடித்தபின் அவர் சொன்ன வரிகளில் தொன்னூறு வீதமானவை ஏற்கனவே கவியரங்கங்களில் அவராற் சொல்லப்பட்ட அதே வரிகள். நான் பார்த்தவரையில் உலகத்தமிழர் பேரமைப்புக் கவியரங்கத்துக்காக அவர் பாவித்த அதே கவிதையட்டைகளைத் தூக்கிக்கொண்டுவந்திருந்தார் போலிருந்தது. மிகுதி பத்துவீதம்கூட வை.கோவையும் ஜெயலலிதாவையும் பற்றித்தான் இருந்தன. எனக்கு மிகிமிக ஏமாற்றமளித்தவர் கவிக்கோதான். அவருக்கு வந்த தலைப்பு "தமிழர் விழிப்பு". தமிழ் அல்லது தமிழர் என்று ஒரு சொல் வந்துவிட்டால் கவிக்கோ கவியரங்கத்துக்கென்று எதுவுமே ஆயத்தப்படுத்தத் தேவையில்லை. ஏற்கனவே கிடக்கும் அட்டைகளில் சிலவற்றைத் தூக்கியந்தாற் போதும். (ஆனாலும் உலகத்தமிழர் பேரமைப்புக் கவியரங்கத்தில் இருந்த கைநடுக்கம் இப்போது இல்லைப்போலத் தெரிகிறது) அடுத்து வந்தவர் கவிப்பேரரசு. ஆச்சரியமாக, கலைஞரைத் வாழ்த்த மற்றவர்களை விடக் குறைவான நேரமெடுத்துக் கொண்டார். அதுமட்டுமன்றி தலைப்புக்குள் கவிதை வடித்த ஒரேயொருவர் அவர்மட்டும்தான். கிடைத்த தலைப்பு, "இளைஞர் விழிப்பு". கவியரசருக்குக் கேட்க வேண்டுமா? மனிதர் பொழிந்து தள்ளிவிட்டார். கடைசியாக வந்தவர், வாலி. அறிமுகப்படுத்தும் போது கலைஞர், "மூட நம்பிக்கைகளை ஒழித்து, பகுத்தறிவைப் பரப்பிக் கவிதை பொழிக" என்று வாலியை அழைத்தார். வாலியின் கவியரங்கக் கவிதைகளின் எதுகை, மோனை, சிலேடைகளுக்கு நான் எப்போதும் இரசிகன். வாலிக்குக் கிடைத்தது "கலையின் விழிப்பு" கலைஞர் வாழ்த்து எது, கலைவிழிப்பு எது என்று பிரித்தறிய முடியாவண்ணம் தொடக்கம் முதல் முடிவுவரை வாலியின் கவிதையிருந்தது. சிக்கிச் சிதறிய சினிமாவைக் கலைஞர்தான் வந்து காத்தார், நடுத்தெருவில் முக்கி முனகிய (இவை வாலியின் சொற்கள்) மூன்று தமிழையும் கலைஞர் வந்துதான் கரையேற்றினார், இன்னும் என்னென்னவெல்லாமோ செய்தார் என்று வாலியின் கவிதை விரிந்தது. "சேது சமுத்திரத்துக்கு நீ கண்ட தீர்வைக்கோ... உன் தீர்க்க தரிசனப் பார்வைக்கோ...." இன்னும் சில 'வைக்கோ' என்று முடியும்படியான சில வரிகளின்பின் "ஈடாகுமா ஓர் வைக்கோ?" என்றார். கூட்டம் துள்ளிக் குதித்தது. மீண்டும் படிக்கும்படி வந்த கூச்சல்களுக்குள் வாலி மீண்டும் அவ்வரிகளைப் படித்தார். "பம்பரம் விட்ட பயல்களையெல்லாம்" என்று தொடங்கி ஏதோ சொன்னார். "மேயில் உனக்குச் சிம்மாசனம்" என்றார். தொடர்ந்து, "அம்மாசனத்தை வெல்லுமோ அம்மா சனம்?" என்றார். கூட்டம் அதிகம் இரசித்ததும் வாலியின் வரிகளைத்தான் என்று நினைக்கிறேன். முடிவில் கலைஞரின் வசனங்கள். "எனது எழுபது வருட அரசியலுக்கு மதிப்புத்தர வேண்டாம். தமிழுக்காகத் தண்டவாளத்தில் தலைவைத்ததுக்கு மதிப்புத்தர வேண்டாம். என் இலக்கியப் பணிகளுக்கு மதிப்புத்தர வேண்டாம்." என்று தொடர்ந்து பலசாதனைகளைச் சொல்லி அவற்றுக்கு மதிப்புத்தர வேண்டாம்" என்றுவி்ட்டு இறுதியில் "இந்த வயதில் என் உழைப்புக்கு மதிப்புத்தரக் கூடாதா? என் வயதுக்கு மதிப்புத் தரக்கூடதா?" என்று கேட்டு முடித்தார். மக்களை உருக்கும் பச்சாத்தாப வசனங்களோடு கவியரங்கம் இனிதே நிறைவுற்றது. ********************** வைரமுத்துவின் கவிதையைவிடுத்து மற்றவர்களின் கவிதைகளைக் கேட்கும்போது எனக்கு வந்த கேள்வி இதுதான். "பேசாமல் 'கலைஞர் புகழ்மாலை' என்றே நிகழ்ச்சியை வைத்திருக்கலாம். எதற்கு 'தமிழர் விழிப்பு', 'தமிழ் விழிப்பு', 'கலை விழிப்பு' என்று வைப்பான்?" ********************* இதற்கு அடுத்ததாக நான் பார்த்த, மாணிக்க விநாயம் தலைமையில் கானா உலகநாதன், புஸ்பவனம் குப்புசாமித் தம்பதிகள் உட்பட இன்னும் சிலர் கலந்து கலக்கிய பாட்டுக் கச்சேரியை மிகவும் இரசித்தேன். |
"சன் ரீவி கவியரங்கம்." இற்குரிய பின்னூட்டங்கள்
ம்.. பேசாமல் தேர்தல் பிரசாரம் என்று சொல்லியிருக்கலாம். ஆனாலும் வைரமுத்து ஓர் இடத்தில் கலைஞரைப் பார்த்து.. செம்மொழி ஆன போது எல்லோரும் சேர்ந்து உன் கைகளுக்கு முத்தமிட முடிவெடுத்தோம். ஆனாலும்.. நீ ஆட்சியில் அமர்ந்து கிலோ அரிசியை 2 ரூபாயென கையெழுத்திடு அப்போது மொத்தமாய் வந்து முத்தமிடுவோம்.. என்றார்..
அட.. ஆப்பு...
மற்றும் படி.. நிகழ்ச்சியை முழுமையாக பார்க்கவில்லை.. ஏனெனில்..விஜய் ரிவியில் ஷ்ரேயாவுடன் ஒரு நாள் நிகழச்சி போய்க்கொண்டிருந்தது.. ஹிஹி
உண்மைதான். கலைந்ர் கருணாநிதியின் துதி பாட ஒரு கவியரங்கு. அதிமுகவில் காலில் விழுகிறார்கள் என்றால், இங்கு துதிப்பாடல் பாடுகிறார்கள். துதிப்பதில் முதல் பரிசு பா.விஜய்க்கு. ஆஸ்தான அர்ச்சகர் எனப்பட்டம் தரலாம். ஆனாலும் அந்த மரபுக்கவிதைப்பகுதி அருமை. கலைந்ர் அப்துல் ரஹ்மானை அறிமுகப்படுத்துகையில் கவிதைக்காகவோ தமிழுக்காகவோ முதன்மைப்படுத்தாது இஸ்லாமியர் என முதன்மைப்படுத்தியதற்குத் தமிழ்நாட்டில் மதச்சார்பின்மை என்று பெயர். வைணவம் தாண்டி தமிழுக்காகப் பாடுபட்டவராக கருணாநிதியை வாலி சொல்ல, கவிதைக்காக அல்லாமல் வைணவராகவே கருணாநிதி அவரது முன்னுரையில் வாலியைப் பார்த்ததற்கு தமிழத்தில் சமூக நீதி என்று பெயர். வைரமுத்து மட்டுமே (பெரும்பாலும்) கொடுத்த தலைப்பில் நன்றாகவே கவிதை சொன்னார். மற்றபடி மேடைப்பேச்சை ஒடித்து எழுதி கவிதையெனப் பேசினார் கலைந்ர் கருணாநிதி. கலைந்ர்தானே கவிந்ர் அல்லவே என்பதால் கண்டு கொள்ளவேண்டாம்.
சிலர் சன் டிவிக்கும் சேர்த்து துதி பாடினார்கள். அட தேவுடா என்று தோன்றியது.
வாலி, பொடிப்பயலை எல்லாம் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தாய் என இருமுறை சொன்னது, கருணாநிதியைப் புகழ்வதுபோல் இகழ்வதாயிருந்தது. தயாநிதிக்கு கட்டாயம் கடுப்பு ஏறி இருக்கும்.
முக்கியமான ஒன்று. கேமெரா சுழன்று சுழன்று தேடியும் கைதட்டியவர்கள் வெகு சிலரே. வைகோவை திட்டும்போது மட்டும் நல்ல கைதட்டல். கவிதைக்காக அல்லாமல் கட்சிக்காக வந்தவரே அதிகம் எனத்தெரிந்தது.
அது சரி டி.வியை ஏன் இலங்கைத்தமிழர்கள் ரி.வி. என்கிறீர்கள்? Television-தானே Relevision- அல்லவே.
//அது சரி டி.வியை ஏன் இலங்கைத்தமிழர்கள் ரி.வி. என்கிறீர்கள்? Television-தானே Relevision- அல்லவே. //
ஏற்கனவே பல இடங்களில் சொல்லியாயிற்று.
சரி.. எதங்காக டி வி.. என்கிறீர்கள்.. delivision என்பதை எப்படி சொல்வீர்கள்..
ஜெயலலிதாவை இலக்கியம் தெரியாதவர்கள் புகழ்கிறார்கள். இங்கு கருணாநிதியை இலக்கியம் தெரிந்தவர்கள் புகழ்கிறார்கள். இந்த விஷயத்தில் அவ்வளவுதான் வேறுபாடு.
எழுதிக்கொள்வது: johan- paris
"சன்" ல் ;நீங்கள் ஏதோ தேடியுள்ளீர்கள்;அதுவும் தேர்தல் நேரத்தில், அப்துல் ரகுமானுக்கு கவிக்கோ என்ன? அடிப்படையில் கொடுத்தார்கள் என்பது கேள்வியாகவே உள்ளது. வந்தோர் எல்லோருமே! கருணாநிதியின் தொண்டரடிப் பொடிகள், இவர்களிடம் கவிதையை எதிர்பார்க்க முடியுமா?
ஆனாலும் பதவி முட்கிரீடம் எனும் கருணாநிதியின் பிச்சை எடுத்தலுக்கு நிகரான,கையேந்தல் இவ்வயதில் மிக அதிகம் எல்லாம் படித்த கருணாநிதி "ஆசையறுமின் ;ஈசனோடாயினும்" படிக்கவில்லையோ? அவரது பதவி வெறி அப்பட்டமாகத்
தெரிகிறது. நாளை ஜெயலலிதா; முதலமைச்சர் பதவி இவருக்கு என்றால்;"அன்புச் சகோதரியே -என்
என்பில் ஒருத்தியே!!! என கவிதை "முரசொலி" யில் எழுதிவிடுக் கூட்டுச்சேருவார் போலுள்ளது. பதவி ஆசை அவரை ரொம்பத்தான் ,படுத்துது.
யோகன்
பாரிஸ்
10.46 15.4.2006
சயந்தன்,
அப்ப நீரும் உதுகள் பாத்திருக்கிறீர்.
உம்மைக் காப்பாற்றிய விஜய் ரீவிக்கு ஒரு நன்றி.
அருணகிரி,
வாலி ஓரிடத்தில்,
"கறுப்புத்துண்டு சிலவேளை அழுக்காகலாம் - ஆனால்
மஞ்சட்துண்டு ஒருக்காலும் அழுக்காகாது"
என்றார். கவனித்தீர்களா?
மஞ்சட்துண்டு போட்ட கருணாநிதிக்கு அது உவகையளிக்கலாம். ஆனால் மஞ்சட்துண்டு கலைஞரை மட்டுமா குறிக்கிறது?
கறுப்புத்துண்டு வை.கோவை மட்டுமா குறிக்கிறது? இன்றும் பெரியாரின் சீடரென்று உண்மையாக இருக்கும் யாராவது பாயப்போகிறார்கள்.
எல்லோரும் இலவசத் தொலைக்காட்சியை ஒதுக்கிவிட்டு, இரண்டு ரூபாய் அரிசியை மட்டும் தூக்கிக்கொண்டு கவிதை வடித்தார்கள்.
**************
அருணகிரி, நீங்கள் புதுசோ?
இதுபற்றி ஏற்கனவே ஒரு பதிவு எழுதியுள்ளேன். தனியே 'ர','ற','ட' வித்தியாசங்களை வைத்து வேறும் பலபதிவுகளில் விவாதம் நடந்துள்ளது.
இப்போதைக்குச் சுருக்கமாகச் சொல்லக்கூடியது இதுதான்.
நாங்கள் 'ர' உச்சரிப்பதில்தான் உங்களிடமிருந்து வித்தியாசப்படுகிறோம். அதாவது தமிழ் உச்சரிப்புத்தான் வித்தியாசம். அந்த 'ர' உச்சரிப்பு ஆங்கிலத்தில் 'T'என்ற உச்சரிப்பையொத்ததால் ரீவி, ரின், ரிக்கெட் என்று எழுதுகிறோம்.
நான் வலைப்பதிய வந்தபின்தான் ஈழத்தமிழர் முழுவருமே இப்படி உச்சரிப்பதில்லையென்று கண்டுகொண்டேன். இதை யாழ்ப்பாண உச்சரிப்பு என்றுவேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.
கருணாநிதியின் தலைமையில் ஓர் கவியரங்கம்
காக்கைகளின் கத்தலும்
ஜால்ராக்களின் சத்தமும்
எதிர்பார்த்த ஒன்றுதான்
ஏமாறத்தேவையில்லை!
இராகவன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. கவியரங்கம் ஒரு பரப்புரைக்கூட்டமோ என்று ஐயுறுமளவுக்கு இருந்தது குறித்தே என்பதிவு.
யோகன் பாரீஸ்,
அப்துல் ரகுமானுக்கு யார் பட்டம் கொடுத்தார்களோ தெரியாது. ஆனால் நான் மதிக்கும் மிகமிக முக்கியமான கவிஞர் அவர். கவிக்கோ அவருக்குப் பொருத்தமானதே. பிறமொழிகளிலிருந்துகூட அருமையான இலக்கியங்களை எங்களுக்குத் தந்துள்ளார்.
ஜெயக்குமார்,
வருகைக்கு நன்றி.
என்பதிவு கலைஞர் எதிர்ப்பாளருக்கு நல்லதொரு களமாகப் போய்விடும்போலுள்ளதே;-(
கவிக்கோ அப்துல் ரகுமானை நானும் மதிக்கிறேன். அவருடைய சில படைப்புகளை நானும் படித்துள்ளேன். அப்துல் ரகுமான், ந.காமராசன், காளிமுத்து போன்றோர் நான் படித்த மதுரை தியாகராசர் கலைக்கல்லூரியில் படித்தவர்கள் தான். ஆனால் கருணாநிதி முன்னால் மட்டும் காக்கையாகி விடுகிறார்களே அது ஏன் என்றுதான் எனக்கு புரியவில்லை.
அட போங்கப்பா!... அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.
வசந்தன்,
தேர்தல் நேரத்தில், சன் தொலைகாட்சியில், கலைஞர் முன்னிலையில் நடத்தப்படும் கவியரங்கம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
மற்றபடி கலைஞர் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது தலைமை தாங்கி நடத்திய கவியரங்கங்களை வானொலியில் கேட்டிருக்கிறேன். வேறெந்த கல்லூரிப் பேராசியர் நடத்தும் கவியரங்கத்தைப் போலவே சிறப்பாக இருக்கும்.
அப்துல் ரகுமானின் திமுக/கலைஞர் ஆதரவு (ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும்) நீண்டகாலமாக தொடர்வது. மாணவப் பருவத்தில் அவரை வைத்து கூட்டம் நடத்தியிருக்கிறேன். தனிப்பட்ட முறையில் அவர் வீட்டிலும் இருமுறை சந்தித்திருக்கிறேன். எந்தவித அலட்டலுமில்லாத மிகவும் நல்ல மனிதர். 'நான் கவிக்கோ நீ பொடியன்' என்பது போன்று ஆணமில்லாது சரிசமமாக வைத்து கதைக்கக்கூடியவர். கவிஞர் என்ற அளவிலும் ஜனரஞ்சகக் பத்திரிகை, சிறு இலக்கியப் பத்திரிகைகள் என்ற இரு உலகங்களுக்கும் பாலமாக இருந்தார் எனலாம்.
அப்துல் ரகுமான், கவிதை, தேர்தல் என்று கதைத்துக்கொண்டிருப்பதால், அப்துல் ரகுமானின் தேர்தல் கவிதையை பதிவு செய்வது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
புறத்திணைச் சுயம்வர மண்டபத்தில்
போலி நளன்களின் கூட்டம்
கையில் மாலையுடன்
குருட்டுத் தமயந்தி
(நேயர் விருப்பம், அன்னம் பதிப்பகம்)
எழுதிக்கொள்வது: chameleon - பச்சோந்தி
// வாலியைத் தவிர மீதி மூவரும் கலைஞர் பக்தர்கள். வாலியோ மேடையில் எல்லார்க்கும் பக்தர்.//
நல்ல ஒரு வரி விமரிசனம்.
:)
2.26 16.4.2006
சுந்தரமூர்த்தி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கவிக்கோவின் நீண்டகால திமுக/முக சார்பு எனக்கு நன்கு தெரியும். கலைஞருக்கென்றே தனிக்கவிதைத் தொகுதி வெளியிட்டவர்.
எவரினதும் சார்பு நிலைப்பாடுகள் எனக்குப் பிரச்சினையில்லை. கவியரங்கத்தில் ஏதாவது இருக்குமென்று நினைத்த எனக்கு வந்த ஏமாற்றமே என் பதிவின் தொனி.
சன்ரீவியில் கவியரங்கம் செய்யும் போது விரும்பியோ விரும்பாமலோ சிலவற்றைச் செய்யும் நிர்ப்பந்தம் இவர்களுக்குண்டு. வை.கோ வசை அவற்றிலொன்று.
பொருத்தமான கவிதைக்கும் நன்றி.
பச்சோந்தி,
உங்கள் வருகைக்கு நன்றி.
"அருணகிரி, நீங்கள் புதுசோ?"
ஆமாம் வசந்தன். இப்போதுதான் நீங்கள் சொன்ன லிங்க்கைப்படித்துவிட்டு இதன் முழு விவரமும் அறிந்தேன்; பின்னூட்டமும் போட்டுள்ளேன். நன்றி. உங்கள் தமிழறிவுக்கு என் மரியாதை மிகுந்த வணக்கங்கள்.
"delivision என்பதை எப்படி சொல்வீர்கள்"
அனானி அவர்களே, இப்போதுதான் வசந்தனது விளக்கம் படித்து விவரம் புரிந்தேன். ஆனாலும் உங்கள் பதிலில் எள்ளல் உள்ளதால் அதே பாணியில் பதில்:
Gun, கண் இவற்றை எப்படி வேறுபடுத்தி எழுதுவீர்கள்?
Boy, பாய் இரண்டிற்கும் ஒலி வித்தியாசம் காட்ட வேறு ஏதும் உயிர்மெய் உபயோகிக்கிறீர்களோ?
தர்மம், தாய் இரு சொற்களுக்கும் உள்ள உச்சரிப்பு வேறுபாட்டை வரி வடிவில் எழுதுகையில் எங்கனம் வேறுபடுத்திக் காட்டுகிறீர்கள்?
அய்யா, விவரம் தெரியாததால் தெரிந்து கொள்ளவே எழுதினேன். மீண்டும் சொல்கிறேன். உங்கள் எள்ளல் பதிலுக்கு அதே பாணியில் பதில் சொல்லவே இப்படிப்பட்ட கேள்விகள் கேட்டேன். உங்கள் வழக்கு மொழியைக் கிண்டல் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை.
"என்பதிவு கலைஞர் எதிர்ப்பாளருக்கு நல்லதொரு களமாகப் போய்விடும்போலுள்ளதே;-("
ஓ, உண்மையைப் பதியுமுன் கலைஞர் ஆதரவா, எதிர்ப்பா என்ற binary test செய்துதான் பதிவை வெளியிட வேண்டுமா? எதற்கு வம்பு, வைகோவையும், ஜெயையும் திட்டி ஒரு பதிவு போட்டு விடுங்கள். ஓ, மறந்து விட்டேன், முக, ஜெஜெ-யை விமர்சித்து விட்டு, விஜயகாந்தை விட்டு விட்டால், விஜயகாந்த் ஆதரவாளர்களுக்கு நல்லதொரு களமாகப் போய்விடும் அபாயம் உள்ளது. எனவே விஜயகாந்தையும் ஒரு பிடி பிடியுங்கள். வலைப்பூவில் உள்ளதை உள்ளபடி சொல்வதில் எவ்வளவு சிக்கல்கள் உள்ளன என இப்போதுதான் புரிகிறது.
அருணகிரி,
கருத்துக்கு நன்றி.
அனானியின் கேள்வியைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
ஆங்கிலச் சொற்களைத் தமிழில் எழுதுவதை வைத்து விவாதிப்பதைவிட தமிழ் உச்சரிப்புக்களிலுள்ள வித்தியாசங்களை வைத்து விவாதித்தால் ஓரளவு பயன்படக்கூடும்.
தமிழின் 'ழ'கரத்துக்கு zh பாவிப்பதையிட்டு கடுமையான விமர்சனமிருந்தாலும் அதைப்பற்றி ஒரு பதிவு எழுதவே யோசிக்கிறேன்.
உங்களுக்கு அந்தப் பதிவிலேயே பதிலளிக்கிறேன்.
"ஆங்கிலச் சொற்களைத் தமிழில் எழுதுவதை வைத்து விவாதிப்பதைவிட தமிழ் உச்சரிப்புக்களிலுள்ள வித்தியாசங்களை வைத்து விவாதித்தால் ஓரளவு பயன்படக்கூடும்".
Television என்பதிலிருந்து தொடங்கியதால் ஆங்கிலச்சொல்லை உதாரணமாக்கினேன். நீங்கள் சொல்வதுபோல் தமிழ் உச்சரிப்புக்களிலுள்ள வித்தியாசங்களை வைத்தும் சொல்லலாம்.
"தமிழின் 'ழ'கரத்துக்கு zh பாவிப்பதையிட்டு கடுமையான விமர்சனமிருந்தாலும் அதைப்பற்றி ஒரு பதிவு எழுதவே யோசிக்கிறேன்".
நல்ல point.
"உங்களுக்கு அந்தப் பதிவிலேயே பதிலளிக்கிறேன்".
உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்கிறேன்.