Tuesday, April 04, 2006

டைனமோ எழுப்பிய சலனம்.

இன்று இத்தளத்தைப் பார்க்கக் கிடைத்தது.

திரைப்படம் சார்ந்த முக்கியமானதொரு முயற்சி.
"நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்" என்ற மகுட வாக்கியத்தோடு வரும் இத்தளம் ஈழத்துத் திரைக்கலையை முதன்மைப்படுத்துகிறது.

பல நேர்காணல்கள், பட விமர்சனங்கள், கட்டுரைகள் என்பவற்றோடு திரைச் செய்திகளும் வருகின்றன.
தயாரிப்பிலுள்ள படங்கள் பற்றிய முன்னோட்டங்களையும் தருகிறார்கள்.
முக்கியமான விதயம், இதில் சில குறும்படங்களைப் பார்க்கக்கூடியவாறு தரவேற்றியுள்ளார்கள்.

அதில் அழுத்தம் என்றொரு படம். இப்பதிவு இப்படம் பற்றிய கருத்தன்று.
படத்தைப்பார்த்து நீங்களே அனுமானித்துக்கொள்ளுங்கள்.

இப்படத்தில் வரும் டைனமோ சம்பந்தப்பட்ட காட்சிகள் என் விடலைப்பருவத்தை நினைக்க வைத்தன. அப்போது யாழ்ப்பாணத்தில் மின்சாரமேயில்லை. மின்கலங்களுமில்லை. ஆனாலும் தவறாது வெரித்தாஸ், பி.பி.சி போன்ற பன்னாட்டுச் செய்திகளையும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தானச் செய்தியையும் (பெரும்பாலும் நகைச்சுவைக்காகத்தான்) இந்திய வானொலிச் செய்திகளையும் கேட்போம். முக்கியமாக 'புலிகளின் குரல்' முழு நிகழ்ச்சியையும் கேட்போம்.

எல்லாத்துக்கும் எமக்குள்ள வசதி சைக்கிள் டைனமோதான். (அப்போது சைக்கிள் களவைவிட டைனமோக்கள் மட்டும் களவு போவது அதிகம்) பெரும்பாலான வீடுகளில் டைனமோ இருந்தது. டைனமோ இருக்கும் வீடுகளில் மட்டும்தான் வானொலி வேலை செய்யும் என்ற நிலைதான் அப்போது. நானறிய எங்கள் ஊரிலேயே டைனமோவைத் தனித்து வாங்க முடியாது என்பதால் சைக்கிள் வாங்கியவருண்டு.

சைக்கிளைக் கவிழ்த்து வைத்துக் கையாற் சுற்றியோ அதன்மீது ஏறி இருந்து மிதித்தோ வானொலி கேட்போம். சிலர் பாதையிற் செல்லும்போதுகூட டைனமோவிலிருந்து வானொலி கேட்டுக்கொண்டே செல்வார்கள்.

இக்குறும்படத்தில் வரும் பெடியன் போலத்தான் நானும் வானொலியைக் காதில் வைத்துக்கொண்டு சைக்கிளை மிதித்துக்கொண்டிருப்பேன். (உண்மையில் அப்போது திரைப்பாடல்கள் மீதிருந்த வெறி இப்போதில்லை.) ஒலிநாடாக்களைப் போட்டுக் கேட்கும்போது, மிதிப்பது அல்லது சுற்றுவது வேகம் குறைந்தால் ஒலி இழுபட்டுத் தேய்ந்து கேட்கும். சில நேரம் எரிச்சல் வரும். சிலநேரம் பிறரை எரிச்சற்படுத்துவதில் மகிழ்ச்சி வரும்.

95 வரை யாழ்ப்பாணத்தில் இருந்தவர்க்கும் அதன்பின் வன்னியிலிருந்தவர்க்கும் சைக்கிள் டைனமோ மிகப்பெரிய வரப்பிரசாதம். என் வாழ்க்கையில் பல ஆண்டுகள் இந்த சைக்கிள் டைனமோவின் ஆதிக்கத்துள்தான் கழிந்திருக்கிறது. இன்றைய மேற்குலக வாழ்வில் தொலைக்காட்சியோ இணையமோ என் மீது செலுத்தும் செல்வாக்கைவிட சைக்கிள் டைனமோ என்மெல் செலுத்திய செல்வாக்கு பல மடங்கு அதிகம். அன்றைய பொழுதில் "டைனமோ கண்டுபிடிச்சவன் கடவுள் மாதிரி' என்று சிலர் சொல்லிக் கொள்வார்கள். எனக்கு இன்றும் கடவுள்களில் ஒருவர்தான்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"டைனமோ எழுப்பிய சலனம்." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (04 April, 2006 01:41) : 

எழுதிக்கொள்வது: Yogan

Good post. Keep it up.

2.8 4.4.2006

 

said ... (04 April, 2006 09:09) : 

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி யோகன்.

 

said ... (04 April, 2006 14:41) : 

வசந்தன்

சுவையான உங்கள் நினைவுகளையும் மீட்டிருக்கின்றீர்கள்,எனக்கும் உங்கள் அனுபவம் தான்.

கானா பிரபா

 

said ... (04 April, 2006 16:28) : 

சைக்கிள் டைனமோவை தனியாக கழட்டி.. பிரத்தியேகமாக ஒரு பொறி செய்து.. (நூல் நுற்பதுமாதிரியான ஒரு சாமான்.. காந்தி கூட வைச்சு கையால் சுத்துவாரே.. ராட்டை எண்டு நினைக்கிறன்.. ) அதைப் பயன்படுத்தினோம். வீட்டினுள்ளே அதற்கென தனியான ஒரு இடம் இருந்தது. பக்கத்தில் கதிரைர போட்டமர்ந்து சுற்றுவோம். ஆயினும் வன்னியில் பற்றரி பாவிக்க தொடங்கியாச்சு.. சந்தைகளில் இந்திய பற்றரிகள் கிடைத்தனவே.. :)

 

said ... (05 April, 2006 00:36) : 

கானாபிரபா,
வருகைக்கு நன்றி.

சயந்தன்,
நீர் செய்த பொறி நானும் செய்திருக்கிறன். ஆனா சைக்கிள் உழக்கிறது போல வராது.
(உழக்கு - உளக்கு எது சரி?)

ஒரு சோடி பற்றறி 230 ரூபா வித்தகாலமிருக்கு வன்னியில (1999). இந்திய பற்றறிகள், பெற்றோல் எல்லாம் வந்தது உண்மைதான். அது நிரந்தரமில்லை. நிரந்தரமானது டைனமோதான்.

 

said ... (29 September, 2006 10:22) : 

Well done!
[url=http://tdtswjmf.com/yirt/dvlu.html]My homepage[/url] | [url=http://sbiuhvih.com/lmxb/tvcu.html]Cool site[/url]

 

post a comment

© 2006  Thur Broeders

________________