வாழேக்க சந்தியாப்பிள்ளை.
"எனக்குத் தெரியுமே வாழேக்க சந்தியாப்பிள்ளையெண்டு" எண்டு ஒரு சொலவடை எங்கட ஊரில சொல்லப்பட்டது. இதில 'வாழேக்க' எண்டா 'வாழைக்குள்' எண்டு கருத்துப்படும். சிலவிசயங்கள் திடீரெண்டு அதிகளவில பாவிக்கப்பட்டு பிறகு அமந்துபோகும். அதுமாதிரித்தான் உந்த 'வாழேக்க சந்தியாப்பிள்ளை'க் கதையும் எங்கட ஊரில இருந்தாப்போல அதிகளவில பேச்சுக்களில வந்துது. நான் இந்தச் சொல்லாட்சியைக் கேள்விப்பட்ட காலத்தையொட்டி நடந்த சம்பவத்தைக் கொண்டு, அதுதான் இதுக்கு மூலம் எண்டு நினைச்சுக்கொண்டிருந்தன். பிறகுதான் அது பிழையெண்டு விளங்கீச்சு. எங்கட குறிச்சியில உண்மையிலயே 'சந்தியாப்பிள்ளை' எண்டு ஒருத்தர் இருந்தவர். நல்ல உயரம். கொஞ்சம் வசதியான ஆக்கள். ரெண்டு லொறி வைச்சிருந்தவை. அந்தக்காலத்தில (தொன்னூறாமாண்டுத் தொடக்கம்) லொறியை வைச்சு ஒரு இழவு வருமானமுமெடுக்க ஏலாதெண்டாலும் அவையின்ர வசதியையும் பெருமையையும் சொல்ல இந்த ரெண்டு லொறியளும் பயன்பட்டன. அந்த நேரத்தில நாலைஞ்சு பிளாஸ்டிக் படகுகள் வச்சிருந்தார். ஆள் கடலுக்க இறங்கிறேல. ஆக்களை வைச்சுத் தொழில் செய்வார். அதில ரெண்டு படகுகளை வைச்சு "சுமக்ளிங்" செய்தார். 'கடத்தல்' எண்டதை நாங்கள் நாகரீகமா 'சுமக்ளிங்' எண்டுதான் சொல்லுவம். கடத்தல் எண்டா ஏதோ குற்றம் செய்யிறமாதிரியொரு உணர்வு வாறதால ஒருத்தரும் அதைப்பாவிக்கிறேல. எல்லாரும் சொல்லுறது சுமக்ளிங்தான். எங்கட சனத்திட்ட அதுவோர் அங்கீகரிக்கப்பட்ட தொழில்தான். இந்தியாவிலயிருந்து சாமான் கொண்டுவாறதுதான் உந்தச் சுமக்ளிங். இஞ்சையிருந்து போகேக்க தேங்காயெண்ணையும் 'லக்ஸ்' சோப்பும் கொண்டு போவினம். அங்கயிருந்து வரேக்க பலவிதமான சாமானுகள் - செத்தல் மிளகாய், நல்லெண்ணெய், உடுபுடவையள், வெள்ளி-அலுமினியப் பாத்திரங்கள் எண்டு கனக்கச் சாமான் வகையள் வரும். முக்கியமான சாமானுகள் பெற்றோலும் பற்றறியும் தான். ஒரு படகு ஒழுங்காப் போயத் திரும்பி வந்தா 'அந்தமாதிரி'த்தான். வந்தா மலை. ஆனா போனா மயிரில்லை; உயிர். ஓம். இடையில நேவிக்காரன் கண்டா பரலோகம்தான். அம்பதில ஒருத்தர்தான் உயிரோட பிடிபட்டுச் சிறைக்குப் போறது. மிச்செல்லாருக்கும் நேரடியாச் சூடுதான். சிலர்மட்டும் படகு தாண்டுபோக நீந்திக் கரைசேந்திருக்கினம். சரிசரி... பழயபடி சந்தியாப்பிள்ளைக்கே வாறன். அவரொரு வாழைத்தோட்டம் வச்சிருந்தார். எங்கட குறிச்சிக்குள்ள வாழை சரிவராது. ஒருவித கறையான் தரை. ஆனாலும் மனுசி பிள்ளையளிட்ட பேச்சும் ஊராரி்ட்ட நக்கலும் வாங்கிக்கொண்டு அந்தாள் பிடிவாதமா அந்த வாழைத்தோட்டம் வச்சிருந்தார். சிலவழிச்சதில அரவாசியெண்டாலும் அதுக்குள்ளால எடுத்தாரோ எண்டது ஐமிச்சம்தான். எண்டாலும் அக்கம்பக்கத்துச் செத்தவீட்டுக்கோ விசேசங்களுக்கோ வாழை பிரட்டிறதுக்கு அந்தத் தோட்டம் உதவினதெண்டதைச் சொல்ல மறக்கக்கூடாது. சின்னனில 'வாழ்க்கைத் திறன்' பாடத்துக்காக கட்டாயம் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வாழைக்கிழங்கு கொண்டு வரவேணுமெண்டு கட்டாயப்படுத்தப்பட்டபோது எனக்குக் கைகுடுத்ததும் அந்தத் தோட்டம்தான். அவரின்ர தோட்டத்துக்கு ரெண்டு வெறும்வளவுகள் தள்ளி 'கோட்டாச்சி வளவு' எண்டு சொல்லி ஒண்டிருக்கு. அத முந்திப் பராமரிச்ச கிழவிக்குத்தான் 'கோட்டாச்சி' எண்டு செல்லப்பேராம். எதுக்கெடுத்தாலும் அக்கம்பக்கதாரோட சண்டைபிடிக்கிறதும் கோட்டுக்கு(நீதிமன்றம்)ப் போறதும்தான் மனுசியின்ர வேலையாம். எண்பதுகிளின்ர தொடக்கத்தில தன்ர தொன்னூறாவது வயசில செத்துப்போச்சாம் மனுசி. இப்ப அந்தக் காணியைப் பாக்கிறது அவவின்ர பேத்திதான். அந்த வளவுக்க பெரிய பிலாமரங்கள் மூண்டோ நாலோ நிக்குது. அப்ப பழக்காலம்தான். 'செத்தல் அருளன்' எண்டு ஒருத்தரும் இன்னொராளும் (இவரின்ர பேர் சரியா ஞாபகமில்லை.)அந்த வளவுக்க இருந்த பிலாப்பழத்துக்குக் குறிவச்சிட்டினம். என்னைவிட அஞ்சோ ஆறோ வயசுதான் கூட. இதில செத்தல் அருளன் எண்டு ஏன் பேர் வந்ததெண்டு சரியாத் தெரியாது. ஆனா எங்கட குறிச்சிக்குள்ள ரெண்டு அருளன்கள் இருக்கிறபடியா, ஒல்லியாயிருக்கிற இவரை 'செத்தல்' எண்டதைச் சேத்துச் சொல்லுறது எண்டுதான் நான் நினைக்கிறேன். ஒரு ஞாயிற்றுக்கிழமை எல்லாரும் பூசைக்குப் போக, ரெண்டு பேரும் சேந்து அடிமரத்திலயிருக்கிற ரெண்டு பெரிய பிலாக்காயள வெட்டிப்போட்டினம். வெட்டிப்போட்டு நேரடியா ஒழுங்கைக்குள்ளால கொண்டுவரேலாது எண்டபடியா நேர சந்தியாப்பிள்ளயரின்ர வாழைத்தோட்டத்துக்க வந்து அங்க ஓரிடத்தில ஒழிச்சு வைச்சிட்டு ஓடியந்திட்டினம். இருட்டின பிறகுபோய் தூக்கிக்கொண்டு வாறதுதான் திட்டம். அவைக்கு ஏற்ற மாதிரியே அப்ப அடிச்ச காத்தில (சோளகமெண்டு நினைக்கிறன்) கொஞ்ச வாழையள் பிரண்டுபோய் தோட்டம் துப்பரவாக்காமல் சருகுகளோட அப்பிடியே கிடந்தது. பகலில கட்டிவைக்கப்பட்டு இரவில மட்டும் அவிட்டுவிடுற சந்தியாப்பிள்ளையாரின்ர நாய் இரவு நேரம் வாழைத்தோட்டப் பக்கம்தான் நிக்குமெண்டது ஆருக்குத்தெரியும்? ரெண்டு மூண்டு இரவுகள் முயற்சித்தும் அவையளால தோட்டத்துக்க இறங்க ஏலாமப்போச்சு. அதுக்குள்ள "மச்சான், இப்படியொண்டு செய்தனாங்கள். இப்ப எடுக்க ஏலாமக்கிடக்கு" எண்டு அவையளின்ர நண்பர்கள் சிலரிட்ட சொல்லியாச்சு. கடசியா, இரவில எடுக்கிறது சரிவராது, பகலிலயே எடுப்பம் எண்டு திட்டம் போட்டாச்சு. அதாவது, வீட்டில ஆக்களில்லாத பகல்நேரம் தோட்டத்துக்க இறங்கி பழத்தை வெட்ட ஏலுமெண்டா ரெண்டு மூண்டு துண்டாக்கி உரைப்பையுக்க போட்டுக்கொண்டு வாறதுதான் திட்டம். ஒருத்தரை முன்னுக்கனுப்பிப் பாத்திருக்கினம். அவரும் சந்தியாப்பிள்ளையார் சைக்கிளில எங்கயோ வெளிக்கிட்டிட்டார் எண்டு வந்து சொன்ன உடன நாலுபேர் சேந்து போயிருக்கினம். மூண்டுபேர்தான் வளவுக்க இறங்கினவை. ரெண்டுபேர் ஒருபழத்தை உரைப்பையுக்க போட்டு மற்ற வளவுக்க வச்சிட்டு அடுத்த பழத்தைத் தூக்க வந்தினம். அப்பதான் பாத்தா, செத்தல் அருளனின்ர வாயைப் பொத்தினபடி சந்தியாப்பிள்ளையார்! மற்ற ரெண்டுபேரும் தப்பியோடீட்டாங்கள் எண்டாலும் சந்தியாப்பிள்ளையார் ஆக்களைப் பாத்திட்டார். அருளனை வைச்சுக்கொண்டு அருளனின்ர தாய்தேப்பனுக்குத் தூது அனுப்பினார். அதோட தப்பியோடின மற்ற ரெண்டு பேரின்ர தாய்தேப்பனுக்கும்தான். நாங்கள் பள்ளிக்கூடம் விட்டு வாற நேரம்தான் இந்தக்கூத்து நடந்தது. தன்ர வாழைக்குலைய வெட்டத்தான் உவங்கள் வந்தவங்களெண்டு சந்தியாப்பிள்ளை தீர்மானிச்சுப்போட்டார். அருளனிட்ட விசாரிக்கக்கூட இல்லை. சந்தியாப்பிள்ளையாரின்ர மனுசி பெடியளுக்கு ஆதரவாக் கதைச்சா. "உதையென்னத்துக்கப்பா பெரிய பிரச்சினையாக்கிறியள்? உந்த வயசில பெடியள் உப்பிடி ஏதாவது செய்யிறதுதானே? சும்மா பேசிப்போட்டு விடுங்கோ. எதுக்கு ஊரைக்கூட்டி ஆர்ப்பாட்டம்?" சந்தியாப்பிள்ளையார் விட்ட பாடில்லை. "நீ பேசாமல் கிட. உப்பிடியே விட்டா நாளைக்கு தோட்டத்துக்க முழுக்குலையும் களவுபோகும்." "சும்மா போங்கப்பா. உதுக்க எங்க ஆமான குலைதள்ளுது? உவங்களும் மோட்டுச் சாம்பிராணியள் வேற இடம் கிடைக்காமல் உதுக்க என்ன கிடக்கெண்டு வந்தவங்கள்?" செத்தல் அருளனின்ர தாய்தான் வந்தவ. தப்பியோடின ஒருத்தரைக்கூட்டிக்கொண்டு அவரின்ர தகப்பன் வந்தார். சந்தியாப்பிள்ளையாரின்ர முறைப்பாட்டைக் கேட்டுட்டு அந்த இடத்திலயே வேலியில நிண்ட வாதனாராணியில தடியொண்டு பிடுங்கி மேனுக்குச் சாத்தினார். அப்பதான் பெடியன் என்னத்துக்கு வந்ததெண்ட உண்மையச் சொன்னான். தன்ர குலையக் களவெடுக்க வராததையிட்டு சந்தியாப்பிள்ளையின்ர முகத்தில சந்தோசம்தான் வந்திருக்க வேணும். ஆனா அவரின்ர முகம் வாடினமாதிரிக்கிடந்திச்சு. அதுக்குக் காரணம் அவரின்ர மனுசியின்ர முகத்தில வந்த நக்கல் சிரிப்பாய்த்தான் இருக்கும். அதுவரை வயசுக்கு வராததாலோ என்னவோ உப்பிடி ஒரு காரியத்திலும் ஈடுபட்டிருக்காத நானும் என்ர சகாக்களும் இந்தச் சம்பவத்துக்குப்பிறகுதான் காரியத்தில் இறங்கினோம். முதலில, பக்கத்து ஊரிலியிருந்து பள்ளிக்கூடத்தால வரேக்க குரோட்டன் புடுங்கிறதில தொடங்கி, பப்பாக்காய் எண்டு வளந்து, பிலாக்காய்க்கு வாற நேரத்தில அறுவாங்கள் ஊரைவிட்டே துரத்திப்போட்டாங்கள். *************************** இந்தச் சம்பவம் நடந்த காலகட்டத்திலதான் நானும் "வாழேக்க சந்தியாப்பிள்ளை" கதை கேள்விப்பட்டேன். அதால அந்தச் சம்பவத்திலயிருந்துதான் உது வந்ததா நினைச்சுக்கொண்டிருந்தன். இடப்பெயர்வுகளால வேறவேற இடங்களிலயும் ரெணடொருதரம் உதைக் கேள்விப்படேக்கதான் அந்தச் சம்பவத்துக்கும் இதுக்கும் சம்பந்தமில்லையெண்டது விளங்கீச்சு. கிட்டடியிலயும் ஆற்றயோ ஒரு பதிவில ஆரோ ஒருத்தர் பின்னூட்டத்தில உந்த 'வாழேக்க சந்தியாப்பிள்ளை'க் கதை சொல்லியிருந்த ஞாபகம். (ஆரப்பா அது. கனகசிறீதரன்?). உண்மையில உந்தச் சொல்லாடல் பிறந்த கதை தெரியுமோ? உது பற்றி மேலதிகமா விவரம் தெரிஞ்ச ஆக்கள் சொல்லுங்கோ. ************************** எங்கட ஊரிலயே உருவாகி அங்கயே சிலகாலம் சொல்லப்பட்ட ஒரு சொல்லாடல் பற்றி அடுத்த பதிவில எழுதிறன். "அருளம்மான் ஆமை காவின மாதிரி" ஆ!!! சொல்ல மறந்து போனன். இண்டைய நாளை புத்தாண்டு தினமாக நினைக்கிற எல்லாருக்கும் என்ர வாழ்த்து |
"வாழேக்க சந்தியாப்பிள்ளை." இற்குரிய பின்னூட்டங்கள்
வாழாமப்போகேக்கை சந்திச்சபிள்ளையோ?
எழுதிக்கொள்வது: kulakaddan
எங்க ஊரிலை உந்த சொல்லு பாவனையில் இல்லை. அதன் காரணம் உமக்கௌ புரியும் எண்டு நினைக்கிறன்.
நல்ல சுவாரசியமான பதிவு
எங்களோட படிச்ச பொடியளும் உந்த வேலையள் நல்லா செய்வாங்கள்.அதிகமா போறதில்லை .
ஒருமுறை பெருநெல்லிகாய் புடுங்க எங்கட பள்ளிகூட வாத்தியாரின் காணிக்கு போய் பிடிபாட்டு போனாங்கள். நாங்கள் நினைச்சம் பள்ளிகூடம் வரை விளக்கம் வரும் எண்டு அப்படி ஏதும் வரேல்லை.
புதுவருட வாழ்த்துக்கள்
8.7 14.4.2006
வாங்கோ குழைக்காட்டான்,
உங்கட ஊரில இது இல்லாததுக்கான காரணம் எனக்குச் சரியாப்பிடிபடேல.
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
அநாமதேய அன்பரே,
வருகைக்கு நன்றி.
//கிட்டடியிலயும் ஆற்றயோ ஒரு பதிவில ஆரோ ஒருத்தர் பின்னூட்டத்தில உந்த 'வாழேக்க சந்தியாப்பிள்ளை'க் கதை சொல்லியிருந்த ஞாபகம்//
அது நானில்லையப்பு. தீவார் சொன்னவர் 'சந்தியாப்பிள்ளை வேலிக்கை' எண்டு:)