Saturday, May 06, 2006

தேவனின் ராஜ்யம்

மதம் பற்றி இக்கிழமை நட்சத்திரமான முத்துவின் பதிவில் ஏதோ போய்க்கொண்டிருக்கிறது. இறுதியாக கிறித்தவம் பற்றியும் போய்க்கொண்டிருக்கிறது. நல்ல விதயம். வரவேற்கத்தக்கது. (ஆனால் பின்னூட்டங்களின் எண்ணிக்கை ஓரளவுக்கு மேலே போய்விட்டால் பிறகு சரிப்பட்டு வராது. எங்கே தொடங்கியது, எங்கே போகிறது, யார் என்ன சொன்னார், என்றெல்லாம் இடையிலேயே மறந்துவிடும்.)

மதம் பற்றி எனக்குக் காட்டமான விமர்சனமுண்டு. குறிப்பாக ஈழப்போராட்டத்தில் மதங்களின் செல்வாக்கு மட்டுப்படுத்தப்படாவிட்டால் ஏற்படும் ஆபத்து மிகப்பெரியது. இன்றைக்கு போராட்டம் எதிர்நோக்கும் சவால்களில் முக்கியமான ஒன்று மதங்கள் பக்கமிருந்து வருவது. புலிகளின் கட்டுப்பாடற்ற பகுதிகளில் இன்றைக்கு நாளொரு புதுச் சபைகள் முளைத்துக்கொண்டிருப்பதும், அவைகளின் முழுக்கட்டுப்பாடும் வெளிச்சக்திகளிடமிருப்பதும் கவலையோடு பார்க்கப்பட வேண்டியவை. இதுபற்றி அதிகம் சொல்லாமல், குறிப்பிட்ட அனுபவமொன்றை மட்டும் சொல்வதே இப்பதிவு.

முல்லைத்தீவு மாவட்டத்துக்கான முதன்மை வைத்தியசாலை புதுக்குடியிருப்பில்தான் அப்போது இயங்கிவந்தது. (தரைமட்டமான முல்லைத்தீவு வைத்தியசாலை நீண்டகாலத்தின்பின் திருத்தப்பட்டு இப்போது இயங்கி வருகிறது. யுத்த நேரத்தில் புதுக்குடியிருப்புத்தான் முதன்மையாக இருந்தது). நிரந்தர மின்சார வசதிகளோ இரத்த சேமிப்பு வசதிகளோ முழுமையான வைத்திய வசதிகளோ இன்றித்தான் அவ்வைத்தியசாலை இயங்கிவந்தது. ஆனாலும் மருத்துவத்துக்கான மக்களின் ஒரே நம்பிக்கை அதுதான்.

ஒருநாள், பேறுகாலம் நெருங்கிய நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணொருத்தி அனுமதிக்கப்படுகிறாள். முதற்பிரசவம். குழந்தைப்பேற்றின் போது, நிலைமை கடுமையாகி, தாய் ஆபத்தான நிலையை அடைகிறாள். அப்போது தாய்க்கு இரத்தம் ஏற்றவென்று ஆயத்தம் செய்கின்றனர். அங்கிருந்தவர்களிடம் இரத்தம் தரும்படி தாதியர் கேட்டபோது சிலர் முன்வந்தனர். (வன்னியில் இரத்தம் வழங்குவது பெரிய விசயமில்லை. சாதாரணமானதுதான். இதுபற்றி பிறகு எழுத எண்ணம்) அந்தநேரம்தான் வந்தது வில்லங்கம். அதுவும் கணவன் வடிவில்.

அங்குக் காத்திருந்த கணவன், உடனே குறுக்கிட்டு, அவளுக்கு இரத்தம் ஏற்றக்கூடாதென்று தடுக்கிறான். அனைவருக்கும் திகைப்பு. ஆனாலும் கணவன் உறுதியாக மறுக்கிறான். என்ன காரணம் என்று அறிய முற்பட்டவர்களுக்கு அவன் சொன்ன பதில்,
"ஒருவனின் இரத்தத்தை அவளுக்கு ஏற்றினால், அவனோடு அவள் விபச்சாரம் செய்தவளாகக் கருதப்படுவாளாம்".
யார் சொன்னது? என்று கேட்டால் 'கர்த்தர் சொல்லியிருக்கிறாராம்'.

அங்கு நின்றவர்கள் எடுத்துச் சொல்லியும் அவன் விடுவதாயில்லை. இதற்கிடையில் அங்கு நின்ற தாதியொருத்தி, தானே இரத்தம் கொடுப்பதாகச் சொல்லிவிட்டு 'இப்ப பிரச்சினையில்லைத்தானே?' என்று கேட்கிறார். இப்போது அவனால் பதில் சொல்ல முடியவில்லை. ஆனால் உடனே தன்னுடன் நின்ற சின்னப்பெடியன் ஒருவனை எங்கோ கலைத்துவிடுகிறான்.

போனபெடியன் ஐந்து நிமிடத்துக்குள் சிலரை அழைத்துவந்தான். வந்தவரில் ஒருவர் போதகராம். வந்த வேகத்திலேயே குய்யோ முறையோ என்று கத்துகிறார். பெண்ணொருத்தி இரத்தம் கொடுப்பதும்கூட தடை செய்யப்பட்டது என்று சொல்கிறார். 'ராஜாதி ராஜன், தேவாதி தேவன்' என்றெல்லாம் ஏதோ சொல்லிக் கூவுகிறார்.அதற்குப்பிறகு கணவன் இன்னும் ஆக்ரோசமாக எதிர்க்கிறான்.

அவர்களைப் பொருட்படுத்தாது பெண்ணைக் காப்பாற்றுவதென்று முடிவெடுத்துச் செயற்படப் புறப்பட்டபோது கைகலப்பு வரை வந்துவிட்டது. போதகர் ஒரு கும்பலோடு வந்தது இன்னும் நிலைமையை மோசமாக்கியது.

அதற்குள் வந்துவிட்ட காவல்துறையும் அங்கிருந்தவர்களும் அடிபோட்டு அடக்கி முடித்துச் சிகிச்சையளித்தாலும் பயனற்றுப்போய்விட்டது. ஏறத்தாழ இருபது நிமிட அமளிதுமளிக்குள் அப்பெண் இறந்துவிட்டாள்.

கணவன், போதகர் ஆகியோரின் மதப்பிரிவையும் சொல்லிவிடுகிறேன். "அப்போஸ்தலிக்க சபை".

**************************************
சரியான நேரத்தில் இரத்தம் வழங்கப்பட்டிருந்தால் அப்பெண் தப்பியிருப்பாளா இல்லையா என்பது இங்கு முக்கியமில்லை. அந்த நேரத்தில் வன்னியில் மருத்துவ வசதியில்லாமல் சாவென்பது பெரிய விசயமேயில்லை. 'பத்தோடு பதினொண்டு, அத்தோடு இதுவுமொண்டு' என்று கணக்கைச் சேர்த்திருக்க வேண்டியதுதான்.
ஆனால் இரத்தம் ஏற்றவிடாமல் தடுப்பதற்கு இப்படியொரு காரணம் சொல்லி ஒரு கூட்டமே-குறிப்பாக கணவனே வரிந்து கட்டி நின்றதை எவ்வகையில் எடுத்துக்கொள்வது?

இப்படி வேறு இடங்களில் அடிக்கடி நடக்கக்கூடும். அது அவ்வளவு ஆச்சரியத்துக்குரியதுமன்று. ஆனால் வன்னியில் இப்படியொரு சம்பவம் நடந்தது உண்மையில் ஆச்சரியம்தான். இந்தக்கதை வாய்வழி பரவியபோதுகூட அக்கம்பக்கத்து ஊர்க்காரர் நம்பவேயில்லை. பின் புலிகளின்குரல் வானொலியில் விவரமாய்ச் சொல்லப்பட்டபின்தான் நம்பத்தலைப்பட்டார்கள். அங்கு தனிப்பட்ட மதநம்பிக்கை, கணவன் மனைவி பிரச்சினை என்றெல்லாம் சொல்லி இப்படி கூத்தாடும் சூழ்நிலை இருக்கவில்லை. காவல்துறை வந்துதான் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற நிலைகூட இல்லை. ஏனைய இடங்களில் இருப்பது போன்று, அது மற்றவன் பிரச்சினை; ஏன் தலையிடுவான்? என்ற மனப்பான்மை ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தது. (மற்றவனின் பிரச்சினையில் மூக்கை நுழைத்து விடுப்புப் பார்க்கும் குணமும் இதற்கு முக்கிய காரணம்). அவன் யாரோ நான் யாரோ என்ற நகர்ப்புறச் சிந்தனை அறவேயில்லை.
ஆனாலும் இப்படியொரு சம்பவம் நடந்தேவிட்டது.

கைது செய்யப்பட்ட போதகருக்கும் கணவனுக்கும் என்ன தண்டனை கிடைத்தது என்று தெரியவில்லை.
***************************************
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்பின் யாழ்ப்பாணம் போனேன். நாங்கள் 95 இல் வெளிக்கிடும்போது விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் மட்டுமேயிருந்த சபைகள், இன்று வகைதொகையின்றிப் பெருகிவிட்டன. (யாருக்காவது கிறிஸ்தவத்தில் எத்தனை பிரிவுகள் இருக்கின்றனவென்று எண்ணிக்கை தெரியுமா?) வாயிலே நுழையாத பல பெயர்கள்.

***************************************
எங்கட நண்பர் கும்பலில கரன் எண்டு ஒருத்தர் இருந்தவர். என்னைவிட ரெண்டு வயசு அதிகம். கராத்தே பழகப்போறது, மிருதங்கம் பழகப்போறது எண்டு துடியாட்டமானவர். நண்பர்கள் வட்டத்தில நல்ல முசுப்பாத்தியான ஆள். ஒருகட்டத்தில அவருக்குப் புது வசனங்கள் சொல்லிற பழக்கம் வந்துது. ஆராவது எரிச்சலில இருந்தா,
'நீ பூமியிலே கஸ்டப்பட்டாலும் தேவனின் ராஜ்ஜியத்திலே சந்தோசமாயிருப்பாய். ராஜாதி ராஜன் உன்னைப் போஜிப்பார்.' என்றவாறான வசனங்கள் வரும்.

கொஞ்ச நாளில் இவை அதிகமாக பலருக்கு எரிச்சல் அதிகரித்தது தான் மிச்சம். ஆள் எங்கேயும் செபக்கூட்டங்களுக்குப் போறாராரோ எண்டு ஐமிச்சம் வந்திட்டுது.

ஒருநாள் பின்னேரம் நேர கேட்டினம்.
"நீ உவங்கள் அல்லேலுயாக் காரரின்ர கூட்டங்களுக்குப் போறனியோ?'
'சீச்சி. எனக்கென்ன வேற வேலையில்லையே?'
'அப்ப உந்த வசனங்கள எங்க பொறுக்கினனீ?'
'உது அண்டைக்குப் பரிஸ்டர் ஆஸ்பத்திரியில சொன்னதுகள்'
எல்லாரும் சுதாரிச்சு விசயத்தைக் கேட்டபோது, நான் மேற்சொன்ன, வைத்திசாலையில் பெண்ணிறந்த சம்பவம்தான் அது எண்டு விளங்கீச்சு. அந்த நேரத்தில, போதகர் அப்பெண் பற்றியும் அவளின்ர சாவு பற்றியும் மற்றாக்களுக்கு விளங்கப்படுத்தேக்க சொன்ன வசனங்களில சிலதைத்தான் உவர் பொறுக்கிவைச்சிருந்திருககிறார்.

'அப்ப நீ அங்க நிண்டனியோ?'
'பின்ன?'
அந்த நேரம் இவர் என்னெண்டு அங்க இருந்தவர் எண்டு விசாரிச்சதில, சுகமில்லாமல் இருந்த பெரியம்மாவையோ ஆரையோ பாக்கப்போன இடத்தில அவசரமா இரத்தம் தேவையெண்டு கேள்விப்பட்டுப் போயிருக்கிறார். இவரின்ர குறூப் சரிவராது எண்டுபோட்டு, சரிவந்த இன்னொருத்தரிலயிருந்து இரத்தம் எடுக்க வெளிக்கிடேக்கதான் புருசன் காரனிண்ட தாண்டவம் தொடங்கியிருக்கு. இவரும் முழுப்பிரச்சினையும் முடியுமட்டும் அங்க நிண்டு, எல்லாம் முடியத்தான் வெளிக்கிட்டு வந்திருக்கிறார்.

அதை இவ்வளவுநாளும் தெரியப்படுத்தாமலிருந்தது போலவே தொடர்ந்தும் இருந்திருக்கலாம். அண்டைக்கு அவரின்ர நாக்கில சனி.
அவர் கதை சொல்லி முடிய, நாங்கள் ஓர் ஒதுக்குப்புறமான இடத்துக்கு வந்திட்டம்.
"மண்ணாங்கட்டி!
உவ்வளவையும் பாத்துக்கொண்டு நிண்டிட்டு இஞ்ச வந்து கதை சொல்லிறியோ?
பிறகென்ன கோதாரிக்கு கராட்டி கிராட்டி எண்டு ஊர் மேயிறாய்?

கும்பலில் மூத்த ஒருவர் கரனைப் பிடிச்சு மணலுக்க அமத்தி மொத்தத் தொடங்கிறார். கூடவே மற்றவர்களும் சேர்ந்து கொள்கிறார்கள். ஏதோ என்னாலான பங்களிப்பாக ரெண்டு குத்து விட்டேன். எல்லாம் முடிந்தபோது மறக்காமல் "தேவனின் ராஜ்ய' வசனத்தை கரனுக்குச் சொன்னேன்.
அண்டைக்குப்பிறகு அவர் அப்பிடி வசனங்கள் கதைச்சு நான் கேட்டதில்லை.
****************************

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"தேவனின் ராஜ்யம்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (06 May, 2006 00:49) : 

அடக் கோடுமையே..

 

said ... (06 May, 2006 01:44) : 

இந்தக்கொடுமை பெருங்கொடுமை. தேவன் திரும்ப உயிர்த்தெழுந்தால், உப்பிடியான ஆக்களைப் போட்டுத் தள்ள ஏகேயோடதான் கல்வாரி மலைக்குகைக்குள்ளையிருந்து வெளிய வருவான்

 

said ... (06 May, 2006 01:57) : 

உந்த பல் தேசியகம்பனிகள் தான் புதுசு புதுசா கிறிஸ்தவ பிரிவுகளை உருவாக்கி விடுறான்களென்று யாரோ சொன்னது ஞாபகம்......சனத்தை யாதார்த்தமாக சிந்திக்க விடக்கூடாது என்பதி்ல் குறியாயிருக்கினம்

 

said ... (06 May, 2006 02:02) : 

எல்லா இடங்களிலும் மதம் என்று குருட்டு தனமாக மக்கள் பேச ஆரம்பித்தாலே அது பிரச்சனையை தான் கொண்டுவரும். முளையிலேயே கிள்ளிஎறிவது நன்று. கட்டுப்படுத்தாவிட்டால் போராட்டம் நடக்கும் ஈழத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும், முதலுக்கே ( போராட்டத்தையே) மோசம் பண்ணகூடிய ஆற்றல் இதற்கு உண்டு.
ஈழம் கிடைத்தபின் ஈழ ஆட்சியாளர்கள் சந்திக்க போகும் மிக முக்கியமான பிரச்சனை மதம் என்பது என் எண்ணம்.

 

said ... (06 May, 2006 03:09) : 

எழுதிக்கொள்வது: நந்தன் | nandhan

அட கடவுளே. மக்களை முட்டாளாக்கும் எதுவும் மதமல்ல. உண்மையாய் சொல்ல வேண்டுமெனில் கடவுள் என்ற கொள்கையே, இப்படி மக்களை முட்டாளாக்க தான் கொண்டுவரப் பட்டதோ என தோன்றுகிறது.

13.30 5.5.2006

 

said ... (06 May, 2006 03:16) : 

yehovites என்று ஒரு குருப்; அவர்கள் இதேமாதிரி ரத்தம் கொடுப்பதோ பெறுவதோ தவறு என்கிறார்கள்.

பொதுவாக என்னிடம் கடவுள் பற்றிப் பேசுபவர்களிடம் எனக்குக் கோபம் வருவதில்லை.
ஆனால் இந்த குருப் ஆள் ஒருத்தர் என் வீட்டுப் பக்கம். சென்ற வாரம் பார்த்தபோது அவர் பேசியது கேட்டு கோபம் வந்தது. மஹாஜன் இறந்தது ரத்தம் கொடுக்கப்பட்டதால்தான்; internet நாங்க பார்க்க மாட்டோம் ஏனெனில் அது சாத்தான்...காது கொடுத்து கேட்கமுடியவில்லை.

 

said ... (06 May, 2006 16:54) : 

பாத்து தருமி ..உங்கள் கிட்டப் பேசிட்டு போனதாலத்தான் காச்சல் கீச்சல் வந்துடுத்துன்னு சொல்லப்போறாங்க ..நீங்க சாத்தான் தானே..

எங்க ஊரில சாத்தா கோவில்ன்னு பலரின் குல தேவக் கோவிலைச் சொல்லுவோம் ..சின்ன்ப் பிள்ளையில் சாத்தான் சொல்லுகிறப் போதல்லாம் சாத்தாக் சாமியைத்தான் சொல்லுறாங்கன்னு நான் நினைத்துண்டு..

//அட கடவுளே. மக்களை முட்டாளாக்கும் எதுவும் மதமல்ல. உண்மையாய் சொல்ல வேண்டுமெனில் கடவுள் என்ற கொள்கையே, இப்படி மக்களை முட்டாளாக்க தான் கொண்டுவரப் பட்டதோ என தோன்றுகிறது//
சரிதான் நந்தன் ..மதங்கள் சரியென்றால் அது இந்த பிரபஞ்ச விதிகளை சரியாகச் சொல்லியிருக்க வேண்டும் ...பூமி உருண்டையின்னு எந்த மதம் சொல்லுச்சு ..உலகம் பத்தியே தெரியாத மதங்கள் அறிவியல் பூர்வமானதுன்னு ஒரு குரூப் அப்பப்பம் புழுகு மூட்டையை அவிழ்த்துவிடும் ..மதம் என்னு சொல்லிட்டாலே அதில் அறிவு கொண்டுக் கேள்விக் கேட்கக் கூடாது ..

 

said ... (06 May, 2006 17:09) : 

கொடுமையிலும் கொடுமை!

"பிதாவே! இவர்கள் செய்வது என்னவென்று தெரிந்தே செய்கிறார்கள்.இவர்களை மன்னியாதையும்"

 

said ... (07 May, 2006 12:21) : 

கருத்துச் சொன்ன அனைவருக்கும் நன்றி.

சின்னக்குட்டி, நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். ஏனெண்டா எந்தவொரு அடிப்படையுமில்லாமல் சகட்டுமேனிக்குப் புதுப்புதுப் பெயருகளில சபைகள் முளைக்குது. முழுக்க முழுக்க வெளிநாட்டவரின்ர கட்டுப்பாட்டுக்குள்ளதான் இதுகள் நடக்குது.

கிறிஸ்தவம் உடைந்தபோது அது தேவையான, முற்போக்கான முயற்சியாகவே இருந்ததாக நினைக்கிறேன். அந்தப்பிரிவினைதான் இன்று கத்தோலிக்கம் தன்னை ஓரளவாவது விமர்சனத்துக்குட்படுத்தி மாற்றங்களைச் செய்யத் தூண்டியதாயிருக்கலாம்.

இன்றும் ஒப்பீட்டளவில் கத்தோலிக்கம் பரவாயில்லை என்ற நிலைதான். அடுத்து தென்னிந்தியத் திருச்சபை மீதும் எனக்கு மதிப்புண்டு. குறைந்தபட்சம் கத்தோலிக்கத்துக்கும் தென்னிந்தியத் திருச்சபைக்கும் மதத்துக்கு வெளியே பொது வேலைத்திட்டங்களாவது இருக்கின்றன.

மற்றவற்றில் பெரும்பாலானவை எந்தவிதத்திலும் சமூகத்தைப் பற்றிய சிந்தனையற்றவை. போர் நடக்கும் பூமியில் அதன் சுவடுகளே சம்பந்தப்படாமல் ஒரு கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருப்பவை. மக்களையும் அந்த மாயாஜாலத்துள் வைத்திருக்க முயல்பவை.

அவர்களுக்குக் கொட்டும் பணம் நிச்சயமாக கவனிக்கப்பட வேண்டியவை.

அரசசார்பற்ற வெளிநாநாட்டுச் சேவை நிறுவனங்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசமில்லை. எல்லாம் ஒரே நிகழ்ச்சித் திட்டம்தான்.

 

said ... (09 May, 2006 11:01) : 

அந்தக் கணவன் & பாதிரியார் மேல் கொலைக்குற்றம் சுமத்தியிருக்க முடியாதா? வாசிக்க வாசிக்க பத்திக் கொண்டு வந்துது!

 

said ... (09 May, 2006 21:03) : 

மதத்தை மிக அதிகமாக நம்பி தன்னை இழந்து நிற்கும் காட்டுமிராண்டிகள் இந்த உலகின் இன்னும் இருக்கிறார்கள்,

என்பதற்கு தேவன் ஏசு அனுப்பிய தூதர்கள் அவர்கள். இவர்கள் எப்போது திருந்துவார்களோ!

 

said ... (13 May, 2006 10:55) : 

ஷ்ரேயா,
அவர் மேல என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டதெண்டு தெரியேல.
என்னைப பொறுத்தவரை அக்கணவன் வெறும் கருவிதான்.

சுகுமாரன்.
வருகைக்கு நன்றி.

 

said ... (13 May, 2006 17:22) : 

//ஏன் தலையிடுவான்? என்ற மனப்பான்மை ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தது. (மற்றவனின் பிரச்சினையில் மூக்கை நுழைத்து விடுப்புப் பார்க்கும் குணமும் இதற்கு முக்கிய காரணம்). //

:-)) நல்ல நக்கல்.
அந்த பெண் பாவம். மற்றும் படி மதத்தை பற்றி விமர்சிக்கும் அளவு நான்பெரியவனில்லை. ;-))

 

post a comment

© 2006  Thur Broeders

________________