Sunday, July 09, 2006

நவாலியில் நரபலி

இன்று ஓர் இனஅழிப்பு நடவடிக்கையின் பதினோராம் அண்டு நினைவு.
நூற்றைம்பது வரையான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டும் மேலும் ஏராளமானோர் காயப்பட்டும் போகுமாறு நடத்தப்பட்ட ஒரு தாக்குதலின் நினைவுநாள். இது பதினொரு வருடங்களுக்கு முந்திய நாளின் நினைவு மீட்டல்.

சிறிலங்கா இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றவென பெரிய ஆயத்தங்களைச் செய்தது. 3 மாதங்களுக்கு முன் தொடங்கியிருந்த மூன்றாம் கட்ட ஈழப்போரில் புலிகளின் கை ஓங்கியிருந்தது. கடலில் கடற்கலங்களை அழித்திருந்தனர் புலிகள். இரு விமானங்களை அடுத்தடுத்த நாட்களில் சுட்டு வீழ்த்தியிருந்தனர். மண்டைதீவு இராணுவத்தளம் மீது தாக்குதல் நடத்தி பெரிய இழப்பை இராணுவத்துக்கு ஏற்படுத்தியிருந்தனர். (அதையடுத்து மணலாற்றில் மிகப்பெரும் தாக்குதலொன்றைச் செய்ய திட்டமிட்டிருந்தனர். அரசும் அதை அறிந்திருந்தது.)
இந்நிலையில் யாழ்ப்பாணத்தை முற்றாகக் கைப்பற்ற அரசு திட்டம் போட்டிருந்தது. அதன் முதற்கட்டமாக வலிகாமத்தின் முக்கிய பகுதிகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் திட்டம் தான் 'முன்னேறிப் பாய்தல்' என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை.

பெருமளவு எறிகணை வீச்சுடன் இந்நடவடிக்கை தொடங்கப்பட்டபோது ஆயிரக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்தனர். யாழ்ப்பாணத்தின் முக்கிய பட்டினமான மானிப்பாயிலும் அதற்கடுத்த கிராமமான நவாலியிலும் பெருமளவு மக்கள் வந்து சேர்ந்தனர். பொதுவாகவே பாடசாலைகளிலும் தேவாலயங்களிலும்தான் மக்கள் தஞ்சமடைவர். அதேபோல் நவாலியிலுள்ள கத்தோலிக்கத் தேவாலயமான புனித பேதுருவானவர் கோயிலில் பெருமளவு மக்கள் தஞ்சமடைந்தனர். இராணுவம் சில இடங்களைக் கைப்பற்றியிருந்தது. இராணுவம் முன்னேறிய பகுதியிலிருந்து நீண்டதூரத்தில்தான் நவாலியுள்ளது.

09.07.1995 அன்றுதான் அந்தக் கரியநாள்.
பகல் வேளையில் நவாலி புனித பேதுருவானர் தேவாலயம் மீது சிறிலங்கா விமானப்படையின் 'புக்காரா' விமானம் குண்டுகளை வீசியது. இலக்குத் தப்பவில்லை. சரியாகவே குண்டுகளை வீசியது. ஒரு கணத்தில் எல்லாமே முடிந்துவிட்டன.

தேவாலயமும் அதனுள் தஞ்சமடைந்திருந்த மக்களும் சிதறடிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களை யாழ்ப்பாண நகருக்குக் கொண்டு செல்ல வேண்டும். போதுமான வாகனங்கள்கூட இல்லை.
அன்றிரவு எடுக்கப்பட்ட கொல்லப்பட்டோர் கணக்கெடுப்பு 100 ஐத்தாண்டிவிட்டது. போகப்போக அவை அதிகரித்துச் சென்றன.
இதில் இறப்பு விவரங்கள் சரியாகத் தொகுக்கப்படாமைக்கு முக்கிய காரணம், தாக்குதலுக்குள்ளானோர் இடம்பெயர்ந்தவர்கள் என்பதே.

பெருமளவான உடல்கள் முழுமையாக எடுக்கப்படவில்லை. சதைத்துண்டுகள்தாம் பொறுக்கப்பட்டன. அத்தேவாலயத்தில் தங்கியிருந்த முழுப்பேரின் விவரமும் தொகுத்து முடிக்கப்பட்டிருக்கவில்லை. விவரத்தொகுப்பில் ஈடுபட்டிருந்த நான்கு கிராமசேவையாளர்களும் அத்தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர்.

இரண்டு கிழமைகள் வரை பொறுத்து, காணாமல் போனவர்களின் விவரங்கள் இந்தப் படுகொலை விவரத்தில் சேர்க்கப்பட்டன. இறுதிக்கணக்காக 140 பேர் மரணம் என்று வந்தாக நினைக்கிறேன்.

யாழ். போதனா வைத்தியசாலையில் மருத்துவர்கள், தாதியர்கள் அனைவரும் அயராது பாடுபட்டனர். குறைந்த வசதிகள், மருந்துகளோடு அவர்கள் அயராது போராடினர். இரத்தச் சேமிப்பென்பது அப்போது முழுமையாக இல்லை. நிரந்தர மின்சார வசதியில்லை. மக்கள் இரத்தம் கொடுத்தனர்.
யாழ்குடாநாடு பெரும் அவலத்தைச் சுமந்து நின்றது. ஒருபக்கம் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இடப்பெயர்வும் அவர்களின் பராமரிப்பும். இன்னொரு பக்கம் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட, காயமடைந்த கொடுமை.
அதைவிட முன்னேறிய இராணுவத்தை எதிர்கொள்ளவும் குடாநாடு தன்னைத் தயார்ப்படுத்த வேண்டியிருந்தது.பதினொரு வருடங்களின்முன் இந்நாளிற் கொல்லப்பட்டவர்களுக்கு எமது அஞ்சலி.
____________________________________________________________
இன்று பத்துபேர் கொல்லப்பட்டாலும் குறைந்தபட்சம் பன்னாட்டுச் செய்திகளில் வருமளவுக்காவது எமது பிரச்சினை சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அன்று நிலைமை அப்படியில்லை.
நவாலிப் படுகொலையோடு பலர் நம்பிக்கை கொண்டிருந்தனர். "சர்வதேசம் தலையிட்டு இதற்கொரு முடிவு கிடைக்கும், வத்திக்கான் இதைச் சும்மா விடாது" என்று பலர் பேசி்க்கொண்டனர்.
தேவாலயப் படுகொலைகள் என்று எடுத்துக்கொண்டால், நாவலிதான் முதலாவது அன்று.
நவாலிதான் இறுதியானதும் அன்று. அதற்கு முன்னும் பின்னும் தேவாலயப்படுகொலைகள் சிங்கள அரசால் நடத்தப்பட்டன. (இந்த வரிசையில் இந்துக்கோயில் மீதான தாக்குதல்களும் அதிகம்.) ஆனாலும் வத்திக்கானால் ஏதும் செய்ய முடிந்ததில்லை (முனைந்ததில்லை என்றுகூடச் சொல்லலாம்).

பொதுப்பார்வைக்கு கத்தோலிக்க பீடத்தின் கீழ்மட்டம் வடக்கு கிழக்கில் புலிச்சார்பு நிலையாகவே வெளித்தெரிகிறது. அதில் உண்மையில்லாமல் இல்லை. கட்டாய இராணுவப் பயிற்சியை முதன்முதலில் (தொன்னூறுகளின் இறுதியில்) வலியுறுத்தியது தொடக்கம் நிறையவுண்டு. இராணுவத்தினர் கோயிலைச் சுற்றிக் காவல் நிற்க, இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதியில் நடத்தப்பட்ட ஒரு திருப்பலியின் மன்றாட்டு நேரத்தில் 'எங்கள் பகைவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும். எங்கள் விடுதலைக்குப் போராடும் போராளிகள் வெற்றியடைய வேண்டும். நாங்கள் விடுவிக்கப்பட வேண்டும்.' என்று திருப்பலி ஒப்புக்கொடுத்த குருவானவர் பகிரங்கமாக மன்றாடும் அளவுக்கு நிலைமை இருந்தது. (பூசை முடியமுன்னமே அரைவாசிச் சனம் வீடு வந்தது தனிக்கதை)
ஒரு குருவானர் தனது பங்குத்தளத்தில் தலைவர் பிரபாகரனின் படத்தை முன்னறையில் மாட்டி வைத்திருந்ததை எதிர்த்தும் அதை உடனடியாக நீக்கவும் மேலிடம் உத்தரவு போட்டதை உறுதியாக எதிர்த்து, இறுதியில் அவர்கள் பேசாமலேயே விடுமளவுக்கு நிலைமை இருந்தது.

இவற்றுக்கான மூல காரணிகளில் நாவலிப்படுகொலை போன்றவையும் அடக்கம். நான் அறிந்தவரையில் சிலரின் நிலைப்பாடு மாற்றத்துக்குக் காரணம் நவாலிப் படுகொலையும் அதைத்தொடர்ந்து நடந்தவையும். எமது பிரச்சினைக்கு மற்றவர்களிடம் தீர்வுக்குப் போவது மட்டில் தம்மளவிலேயே நம்பிக்கையற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமது தலைமைப் பீடங்கள் மட்டிற்கூட வெளிப்படையான நம்பிக்கை வைக்குமளவில் அவர்கள் இல்லை. இன்று இலங்கையிலுள்ள கத்தோலிக்க ஆயர்களை எடுத்துக்கொண்டாற்கூட தனித்தீவுகளாகச் செயற்படும் நிலையைக் காணலாம்.

மிக அண்மையில் நடந்த பேசாலைத் தேவாலயம் மீதான தாக்குதல் வரை வரலாறு தொடர்கிறது.


_____________________________________________

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"நவாலியில் நரபலி" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (09 July, 2006 13:16) : 

இந்தக் கொடுமைகள் இன்னும் முற்றுப்புள்ளியில்லாமல் நீண்டுபோவது இன்னும் எங்கள் தலைவிதி.

 

said ... (09 July, 2006 17:52) : 

கொல்லப்பட்டவர்களுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலி. விண்ணாணமாகிய எனது பதிவையும் பாருங்கள்:
vinnaanam.blogspot.com/2006/07/blog-post.html

 

said ... (09 July, 2006 23:18) : 

புலிகள் செய்த தகிடுத்தனங்களில் இதுவும் சர்வதேச ஊடகங்களுக்காக
புலிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டு (நவாலி தேவாலயத்திற்குள் பதுங்கி
இருக்கிறோம் என்று இராணுவத்துக்கு தகவல் புலிகளாலயே தெரிவிக்கப்பட்டு) இலங்கை இராணுவம் செய்த படுகொலை
இதற்கு புலிகளும் பொறுப்பு. என்றோ ஒரு நாள் உண்மைகள்
வெளியே வரும் அண்ணே.

 

said ... (10 July, 2006 00:52) : 

மறக்க முடியாத கொடுமைகள்.
பகிர்ந்ததற்கு நன்றி.

 

post a comment

© 2006  Thur Broeders

________________