Tuesday, July 05, 2005

இறுமாப்பின் இமயம்.

யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச் சம்பவமொன்றுதான் இது.

விடுதலைப்புலிகளின் கொள்கைகள் பற்றி விமர்சனங்களும் சர்ச்சைகளும் ஆச்சரியங்களும் உண்டு. எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை இயக்கம் தொடங்கப்பட்ட காலம் முதலே மிக இறுக்கமாகக் கடைப்பிடித்து வருபவர்கள் அவர்கள். ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் சயனைட் வில்லைகள் இருக்கும். இச்சம்பவமும் எதிரியிடம் பிடிபடும் சந்தர்ப்பமொன்றின்போது நடந்ததுதான்.

1997 ஆனி மாதம் மட்டக்களப்பிலிருந்து வன்னி நோக்கி இருபடகுகளில் சில போராளிகள் வருகிறார்கள். இரவுப்பயணம். கடும் சண்டைக்குரிய ஆயத்தங்களேதுமற்ற சாதாரண பயணம். எப்படியோ திருகோணமலையை நெருங்கியபோது எதிரியின் விசைப்படகின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். படகு சேதமடைகிறது. கடலிற்குதித்து நீந்தத் தொடங்குகின்றனர். எல்லோரும் பிரிந்துவிட்டனர். அதில் ஒருவன் தான் பாலன். கடற்கரும்புலி அணியைச் சேர்ந்தவன் தான் பாலன்.

இரவிரவாக நீண்டதூரம் நீந்தி "இறக்க கண்டி" எனுமிடத்திற் கரைசேர்கிறான் பாலன். விடிந்துவிட்டது. கரையில் சோர்வினால் மயங்கிப்போன நிலையில் சிலரால் காட்டிக்கொடுக்கப்பட்டு இராணுவத்தாற் கைதாகிறான்.

இராணுவ முகாமில் கண்விழித்த பாலனுக்கு அப்போதுதான் தாம் கைதுசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கழுத்தில் குப்பியில்லை.
இனி சித்திரவதை செய்யப்படப்போவது உறுதி. அதில் இரகசியங்கள் காப்பாற்றப்பட வேண்டுமே. அதுவும் பாலன் கடற்கரும்புலி அணியாதலால் நிறைய விசயங்கள் தெரிந்திருந்தான். தன்னை மாய்த்துக்கொள்ள ஏதும் கிடைக்குமா என்று முயன்றான். கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் குப்புறக் கிடத்தப்பட்டிருந்தான். இன்னும் சிறிது நேரத்தில் ‘விசாரணை’ தொடங்கப் போகிறது. எதுவும் செய்ய முடியாத நிலை. அந்த நேரத்தில் தான் அசாதாரணமான முடிவையெடுத்தான். தன் நாக்கை வெளித்தள்ளி பற்களால் இறுக கடித்தபடி தலையை உயர்த்தி தன் நாடியை ஓங்கித் தரையில் அடித்தான். நாக்குத் துண்டானது. சித்திரவதையின் போது தன்னால் உண்மைகள் வெளிவரக்கூடாதென்பதற்காகத் தன் நாக்கைத் தானே துண்டித்தான்.

மீண்டும் மயங்கிய அவன் கண்விழித்தபோது இராணுவ மருத்துவமனையிற் கிடத்தப்பட்டிருந்தான். தனக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை அறிந்த பாலன் அடுத்த கட்டத்தை யோசித்தான். எப்படியும் தன்னை மாய்த்துக்கொள்ள வேண்டுமென்பதிலேயே குறியாயிருந்தான். ஏனெனில் தன்னிடமிருந்து போகப்போகும் விவரங்கள் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் பயங்கரமானவையென்பதை நன்கு அறிந்திருந்தான். முயற்சித்து முயற்சித்து இறுதியில் அந்த முடிவையெடுத்தான். நினைத்தும் பார்க்க முடியாதது அது. தன் தலையை அந்த இரும்புக்கட்டிலில் மோதி மோதி மண்டையுடைந்து இறந்துபோனான்.

ஒரு மோதலுக்குப்பின்னும் சாகும்வரை தொடர்ந்து தன் தலையைக் கட்டிலின்மேல் மோதுமளவுக்கு அவனுக்குத் துணிவும் வைராக்கியமும் இருந்தது, ஒரு துளி நீர் கூட வாயில் வைக்காமல் 12 நாட்கள் இருந்து அணுவணுவாகச் தன்னைத்தானே சாகடித்த திலீபனைப் போல. (பாலனது இயற்பெயர்கூட திலீபன் தான்.)

கரும்புலிகள் நாளான இன்று நூற்றுக்கணக்கான சரித்தரங்களில் ஒன்றான கரும்புலி கப்டன் பாலனையும் அவனது இந்நெஞ்சையுருக்கும் சம்பவத்தையும் பகிர்ந்து கொள்கிறேன். அதேநேரம் இதுவரை வீரச்சாவடைந்த 265 கரும்புலிகளுக்கும் வெளிவராமல் உறங்கும் ஏனையவர்க்கும் இதய அஞ்சலிகள்.



கடற்கரும்புலி கப்டன் பாலன்
சோமசுந்தரம் திலீபன்.
மட்டக்களப்பு.

பட உதவி: தமிழ்மறவன் இணையத்தளம்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"இறுமாப்பின் இமயம்." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (05 July, 2005 20:54) : 

This comment has been removed by a blog administrator.

 

said ... (05 July, 2005 23:52) : 

எழுதிக்கொள்வது: uNmai viLambi

சுத்த முட்டாள் தனமாக உள்ளது. பாவம் அந்த பாலனின் குடும்பம் தான். எந்த அளவுக்கு மூளைச்சலவை செய்யப் பட்டிருந்தால் இப்படி செய்திருப்பன் அந்தப் பேதை?

16.18 5.7.2005

 

said ... (09 July, 2005 14:29) : 

எழுதிக்கொள்வது: ஈழநாதன்

மூளை இருப்பவனைத் தானே மூளைச்சலவை செய்யலாம்.

12.57 9.7.2005

 

post a comment

© 2006  Thur Broeders

________________