Friday, July 01, 2005

புலம்பெயர்ந்தோர் நாடு மீளல்

வணக்கம்!
ஷ்ரேயாவின் பதிவில் புலம்பெயர்ந்தோர் நாடு மீளல் என்பது பற்றிக் கேள்வி எழுந்துள்ளது. எதிர்பார்த்தது போலவே அதுபற்றிக் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் எழவில்லை. சில கருத்துக்கள் மட்டுமே வந்தன. இங்கே நான் என்னுடைய கருத்தைச் சொல்கிறேன்.

தமிழர்க்கான புலம்பெயர்வென்பது மிக நீண்ட வரலாற்றைக் கொண்டதோடு எங்கிருந்து புலம்பெயர்ந்தார்கள் என்பதும் முக்கியமானது. இங்கே கருத்திலெடுப்பது, ஈழத்தைப் பற்றியும், போர் தொடங்கிய பின் நடைபெற்ற புலம்பெயர்தலைப்பற்றியுமே.

நடுத்தர வயதுடைய ஒரு பரம்பரையில் (பெரும்பாலும் இளைய பருவத்தில் புலம்பெயர்ந்தவர்கள்) திரும்பிச் செல்லல் பற்றிய அவா ஓரளவு இருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் தம் நெருங்கிய உறவுகளை ஈழத்திற் கொண்டிருப்பவர்கள். முற்றுமுழுதாக சொந்தங்களோடு புலம் வந்துவிட்டவர்களில் நாடு மீளல் பற்றிய எண்ணத்திலிருப்போர் குறைவுதான். மேலும் அவர்களால் தனித்து முடிவெடுக்க முடியாது, அவர்களின் சொந்தங்களில் முடிபுகளிலும் தங்கியுள்ளவர்கள். இத்தகைய சிலரைச் சந்தித்த அனுபவமுண்டு.
“திரும்பிப்போறதெண்டா எல்லாரும் போனாத்தானே நல்லம். அண்ணா, தங்கச்சியாக்கள் இல்லயெண்டா போயும் என்ன பிரியோசனம்?” என்ற கதைகளுண்டு.

மிக முதியவர்களிற்கூட திரும்பிப்போகும் எண்ணம் எதிர்பார்த்ததைவிடக் குறைவு தான். ‘அங்கதான் சாக வேணும்’ என்ற ஒரு விருப்பத்தோடிருக்கும் சிலருண்டு. இப்படி அடம்பிடித்துப் போன ஒரு மூதாட்டி வலிகாமத்தில் சொந்த ஊரிற்கூட இருக்க முடியாமல் (அவர்களின் இடம் உயர்பாதுகாப்பு வலையத்துள் வருகிறபடியால் அங்கு வசிக்க முடியாது. ஏன் வீட்டைப் போய்ப் பார்க்கக்கூட முடியாது.) நல்லூரில் தெரிந்தவர்கள் வீட்டில் வாழ்க்கையைக் கழிக்கிறார்.

வெளிநாட்டில் பிறந்த மிக இளந்தலைமுறையைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையிலலை. ஷ்ரேயா சொல்வதைப் போல ஆச்சரியப்படும் வகையில் ஈழம் திரும்ப வேண்டுமென்ற அவாவுடனிருக்கும் இளையவரையும் பார்த்திருக்கிறேன். சிறிதுகாலத்தின்பின் இது மாற்றமடையலாம். ஈழம் சென்று திரும்பும் போது ஓரளவுக்குச் சரியான முடிபை எடுப்பார்கள். நேரிற் சென்றுவரும்போது சரியான ஒரு பார்வையைப் பெறுவார்கள். அவ்வாறு வந்து சென்ற பலரில் மாற்றங்கள் இருக்கிறது.
அதாவது ஈழம் திரும்புதல் பற்றிய உறுதியான முடிபு இல்லாவிட்டாலும், இதுதான் தம் தாயகம் என்பதிலோ, நம்மைப் பெரிதும் நம்பித்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்பதிலோ எந்தத் தயக்கமும் இல்லாத ஒரு தெளிவு அவர்களிடம் உண்டு.

ஆனால் ஒரு விதயம் மிகத் தெளிவானது. ஏதோவொரு முறையில் ஈழத்துடனான புலம் பெயர்ந்தவர்களின் தொடர்பு நீடிக்கும். பெருமளவானோர் நிரந்தரமாக நாடு திரும்ப மாட்டார்கள். ஆனால் அடிக்கடி ஊர் சென்று வருவார்கள். (பெரும்பான்மை தமது பணமதிப்பைக் காட்டுவதற்காக என்றும் எடுத்துக் கொள்ளலாம்.) கோயில் திருவிழாக்களில் பங்கெடுப்பார்கள். தேர் செய்து கொடுப்பார்கள். பாடசாலைக் கட்டடங்கள் கட்டிக் கொடுப்பார்கள். பலர் வெளிநாட்டில் இருந்துகொண்டே ஊரில் குறிப்பிட்டளவு செல்வாக்கையும் கட்டுப்பாட்டையும் கொண்டிருப்பர்.
-----------------------------------------------------

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் (இது வெள்ளையரின் ஆட்சிக்காலத்தில்) மூன்றாம் தலைமுறையை மலேசியாவில் சந்தித்திருந்தேன். சிலகாலப் பழக்கமுமுண்டு. யாழ்ப்பாணத்தின் உடுவில், அரியாலை போன்ற அவர்களின் முப்பாட்டனது ஊர்களின் பெயர்களையும் உறவுமறையைக் குறிக்கும் நாலைந்து சொற்களையும் தவிர, தமிழில் வார்த்தைகள் தெரிந்திருக்கவில்லை. மூதாட்டியொருத்தி தமிழ் புரியக்கூடிதாகவும், ஓரளவு தமிழ் கதைக்கக் கூடிய நிலையிலும் இருந்தா.

சிறுவர்களுக்கு, தமிழ் சுத்தமாக வராது. ஆனால் உடுவிலும் அரியாலையும், யாழ்ப்பாணமும் தங்கள் இடம் எனச் சொல்லிக்கொடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக் குடியுரிமையும் பெற்றுள்ள அக்குடும்பம், ஏதோவொரு வகையில் தாம் யாழ்ப்பாணத்தவர் என்று தம்மை அடையாளப்படுத்துவதில் விருப்பமாயிருந்தது. யுத்த நிறுத்தத்தின் பின் மிகமிகத் தூரத்து வழிச் சொந்தம் ஒன்றைச் சிங்கப்பூரில் சந்தித்ததைச் சொல்லும்போது அவர்களின் உணர்ச்சிகள் வித்தியாசமானது. அப்போதுதான் புதிதாக நாலைந்து கடிதப்போக்குவரத்தும் ஏற்படுத்தியிருந்தார்கள். எம்மைக் கண்டால் விழுந்துவிழுந்து கதைப்பார்கள். எங்களைத் தமிழிலேயே கதைக்கச் சொல்வார்கள். இடையே பலசொற்களைப் பொறுக்கிக்கொள்வார்கள். தம் பாட்டன் இச்சொற்களைப் பாவித்ததாக ஞாபகத்திலிருந்து சொல்வார்கள். “வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா, துட்டுக்கு ரெண்டு கொட்டைப் பாக்கு” என்பதை ஞாபத்திலிருந்து எடுத்து வட்டுக்கோட்டைக்கு விளக்கம் கேட்டார்கள். அராலிக்குப் பக்கத்தில தான் என்றபின் பதிவேட்டில் குறித்துக்கொண்டார்கள், போகும்போது வட்டுக்கோட்டைக்கும் போக வேண்டுமாம்.

யாழ்ப்பாணம் பற்றிய ஓர் ஏக்கம் அவர்களிடம் இருந்துகொண்டிருக்கிறது. உண்மையில் தாய் நாடு பற்றின குழப்பம் அவர்களிடம் நிரம்பவே இருக்கிறது. இங்கிலாந்துக் குடியுரிமை பெற்ற பிள்ளைகளால் அதைச் சொல்ல முடியவில்லை. மலேசியாவிலிருக்கும் தாய் தந்தையால் மலேசியாவையும் சொல்ல முடியவில்லை. அக்குடும்பம் ஈழம் திரும்புவதைப்பற்றி நினைத்தும் பார்க்க முடியாது. ஆனால் குறைந்த பட்சம் கடிதத்தொடர்புக்காவது சில அறிமுகங்களை யாழ்ப்பாணத்திலிருந்து தேடுகிறது அக்குடும்பம். தம் முப்பாட்டன் வழிச் சொந்தங்கள் இன்னும் உடுவிலிலும், அராலியிலும் இருப்பார்கள் என்றும், ஒருமுறை நேரே போய் அவர்களின் தொடர்பை ஏற்படுத்த வேண்டுமென்றும் ஆவலாயிருக்கிறது.

இதுதான் நான் சொன்ன தொடர்பு. ஏதோவொரு வழியில் பெரும்பான்மையானோர் தாயகத்துடன் தமது தொடர்பைப் பேண விரும்புவர். உளமார்ந்த நேசிப்பாகவும் இருக்கலாம்; வெளிநாட்டில் காட்ட முடியாத பணத்திமிரைக் காட்டவும், பெற முடியாத மரியாதையையும் உபசரிப்பையும் பெறவும் தாயகத்தைப் பாவிக்கலாம்.

என்ன இருந்தாலும் காலம் செல்லச்செல்ல, தாயகம் நோக்கிய கவர்ச்சியும் குறைந்துகொண்டே செல்லும். போராட்டம் நீடிப்பதும் ஆபத்தானது. இப்போது புலத்தில் உழைக்கும் தலைமுறை நேரடியாக யுத்தத்தினாற் பாதிக்கப்பட்டது. ஆனால் அது ஓய்வு பெறும் காலம் வரும்போது, போராட்டத்துக்கான பொருள் வழங்கலிற் பெரும் தொய்வு ஏற்படுமென்றே படுகிறது. முற்றாக நிறுத்தப்படாவிட்டாலும் பெரும் தொய்வொன்று வரும். அதற்குமுதல் ஏதாவது முடிவு கண்டால்தான் உண்டு.

(ஏதோ எழுதப் புறப்பட்டு எங்கோ வந்துவிட்டதுபோல் உள்ளது. திருத்தம் செய்ய எண்ணமில்லை.)

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"புலம்பெயர்ந்தோர் நாடு மீளல்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (01 July, 2005 23:53) : 

சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். பலரும் இதைப்பற்றி பதிவிற்கு (அப்பதிவு அந்தப்பெண் அப்படிக் கதைத்தாவே என்ற கொதியில் போட்டது!) பின்னூட்டமாக விளக்கமாகக் கதைப்பார்கள் என்றே நானும் எதிர்பார்த்தேன். ஒருவேளை சனி ஞாயிறுகளில் கதைக்கக்கூடும்... அல்லது இங்கே தன்னும் விவாதம் தொடர்ந்தால் மகிழ்வேன்.

முகமூடி கேட்ட கேள்வி இன்னும் உறுத்துகிறது. உறுத்தல் தொடரும் என்றே நினைக்கிறேன். :o\

 

said ... (02 July, 2005 00:35) : 

வசந்தன், நன்றாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.

 

said ... (02 July, 2005 02:53) : 

நன்றி வசந்தன்... இந்த கேள்வி எனக்கு வந்ததற்கு காரணம் தேர்ந்தெடுத்தலுக்கும் கட்டாயத்துக்கும் உள்ள வித்தியாசத்தை உணரவே... பொருளீட்டவென வெளிநாடு செல்வோர் தாமாக சிந்தித்து விருப்பப்பட்டு செல்கின்றனர்... ஆனாலும் பல சமயம் தாய்மண்ணின் ஏக்கம் வருவதுண்டு. அது சமயம், சூழ்நிலை கருதி, வீடு திரும்ப வரும் எண்ணத்தை அடக்க பிரயத்தனப்படவேண்டியிருக்கும்... ஆனால் கட்டாயத்தினால் புலம் பெயர்ந்தோர், அந்த கட்டாயத்திற்காகவே புதியதொரு வாழ்க்கை சூழலை பழக்கப்ப்டுத்திக்கொண்டோர் சூழ்நிலை அமையும் போது - இப்பொழுது நிலையே வேறு, புதிய மேற்குலகம் அறிமுகப்படுத்திய "மேம்பட்ட" வாழ்க்கைக்கு பழகிய சூழலில் - என்ன நினைப்பர் என்பதுதான்...

// போராட்டம் நீடிப்பதும் ஆபத்தானது. இப்போது புலத்தில் உழைக்கும் தலைமுறை நேரடியாக யுத்தத்தினாற் பாதிக்கப்பட்டது. ஆனால் அது ஓய்வு பெறும் காலம் வரும்போது, போராட்டத்துக்கான பொருள் வழங்கலிற் பெரும் தொய்வு ஏற்படுமென்றே படுகிறது. முற்றாக நிறுத்தப்படாவிட்டாலும் பெரும் தொய்வொன்று வரும். // இதே கேள்வியை வேறொரு பதிவில் நான் கேட்பதாக இருந்தேன்... ஆனால் நான் கேட்டால் அது வேறு விதமாக பார்க்கப்டலாம் என்று நான் நினைத்ததால் கேட்கவில்லை... ஆரம்பித்த பொழுது இருந்த போராட்ட வீரியம் அடுத்த தலைமுறையினரிடம் அதே அளவு உள்ளதா? (களத்தில் இருப்பவரிடம்... வெளியிலிருந்து ஆதரவு தருபவர்களிடம் அல்ல) நீங்கள் கேட்ட இந்த கேள்விக்கு வரும் பதில்களை அறிந்து கொள்ள நானும் ஆவலாயுள்ளேன்.

 

said ... (02 July, 2005 08:14) : 

"(ஏதோ எழுதப் புறப்பட்டு எங்கோ வந்துவிட்டதுபோல் உள்ளது. திருத்தம் செய்ய எண்ணமில்லை.)"

சரியாக, தெளிவாகவே எழுதியிருக்கிறீர்கள்.

புலம்பெயர்ந்தவர்களின் மூன்றாம் தலைமுறையினர் மற்றும் அதற்குப் பின் வருபவர்கள் பற்றிக் கூறும் போது
"உளமார்ந்த நேசிப்பாகவும் இருக்கலாம்; வெளிநாட்டில் காட்ட முடியாத பணத்திமிரைக் காட்டவும், பெற முடியாத மரியாதையையும் உபசரிப்பையும் பெறவும் தாயகத்தைப் பாவிக்கலாம்" என்பதில்.... என்னைப்பொறுத்தவரையில் அது இனந்தெரியாத ஒரு நேசிப்பாக, வேர்கள் தேடும் உளமார்ந்த தேடலாக, தமது வளரும் சந்ததிக்கு தம் முன்னோர் பற்றின அறிவு, வரலாறு என்பனவற்றை கற்றுக்கொடுக்கும் ஆவலாக, கடமையாக அமையுமே தவிர "பணத்திமிராக" அமையாது.

 

said ... (02 July, 2005 08:32) : 

எழுதிக்கொள்வது: kulakaddan

வசந்தன் நல்ல பதிவு.


1.0 2.7.2005

 

said ... (02 July, 2005 08:39) : 

வசந்தன்,வணக்கம்!நல்ல மதிப்பீடு. பல தரவுகளைச் சொல்லிச் செல்கிறீர்கள்.நமது ஏக்கம்-கனவு யாவுமே பிறந்து,தவழ்ந்த மண்ணைச் சுற்றியேதாமிருக்கும்.இதையின்னும் அந்நியதேசத்து சமூக நெருக்கடிகள் மெருக்கூட்டி நம்மைத் தாயகத்தைநோக்கித் தள்ளியபடியேதாம் இருக்கும். எது எப்படியோ பதிவில் சுட்டிய யாவும் நேர்த்தியானது.

 

said ... (02 July, 2005 12:16) : 

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.


ஊர்திரும்பலில் செல்வாக்குச் செலுத்தும் முக்கிய காரணி வேலை வாய்ப்பு. திடீரென அவர்களுக்கிருக்கும் திறமைக்கு வேலை தேட முடியாது. அவர்கள் இங்குப்பார்த்த வேலைகள் அனைத்தும் தாயகத்தில் சாத்தியமேயில்லை. குறிப்பாக அறிவியல் தொழில்நுட்பத்தில்.

எல்லோரும் திரும்புவதை எதிர்பார்க்க முடியாது. ஆனால் அறிவியல் தொழிநுட்ப அறிவுகளும் மூளைப்பலமும் தாயகத்துக்குப் புலம்பெயர்ந்தோரிடமிருந்தே கிடைக்க வேண்டும். ஏதோவொரு வகையில் தாயகத்துக்கு அவர்களின் பங்களிப்பு இருக்க வேண்டுமென்பதே இப்போதைய எதிர்பார்ப்பு. போராட்டத்துக்கான பொருள்வழங்கலில் எற்படப்போகும் தொய்வென்பது பயங்கரமான உண்மை.


பெயரிலி!
நல்ல படமொன்று போட்டிருக்கிறியள்.

 

said ... (02 July, 2005 13:02) : 

போராட்டம், போர் என்பதை விட்டுவிட்டு இலங்கைத் தமிழர்கள் என்று இல்லாமல் பொதுவாகப் புலம் பெயர்ந்தவர்கள் என்று படித்தால் நீங்கள் சொல்வது அத்தனையும் பல வகையான Diaspora வுக்குப் பொருந்தும். கிராமங்களிலிருந்து அடுத்த தலைமுறைகள் கொஞ்சம் கொஞ்சமாக சென்னைக்கும்,பின்னர் டில்லி, மும்பாய் என்று வட இந்தியாவிற்கு ( இப்போது உலகெங்கும்) என்று புலம் பெயர்ந்த பலருக்கும் நீங்கள் சொன்ன வரிகள் பொருந்தும். என் தாத்தாக்கள் திருச்சி அருகே இருக்கும் எங்கள் கிராமத்தைப் பற்றி நிறைய பேசுவார்கள். ஒரு தாத்தா அந்தக் காலத்தில் தான் ஓய்வு பெற்றபின் கிராமத்தில் போய் இருக்க வேண்டும் என்று இருந்தார். இன்றும் என் உறவினர்கள் பலர் கிராமத்துக்குப் போகலாமா என்று அவ்வப்போது யோசனை ( யோசனை மட்டும்தான் :-) ) செய்கிறார்கள். இன்று கிராமத்தில் குடும்பத்தின் எந்தத் தலைமுறையும் இல்லை. எல்லோரும் சென்னையில்/ வட இந்தியாவில் / வெளிநாடுகளில். சென்ற வருடம் கிராமத்துக் கோவிலைப் புதுப்பிக்க முடிவு செய்தபோது கிராமத்திலிருந்து புலம் பெயர்ந்த பலகுடும்பங்கள் ஆர்வமாக பங்கு கொண்டனர். "நம்ம ஊராச்சே" என்ற ஊர் விசுவாசம்.

அன்று கிராமம்; இன்று நாடு. அதுதான் வித்தியாசம். மற்றபடி புலன் பெயர்ந்தவர்கள் மனோபாவமும், சங்கடங்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். - அதாவது புலன் பெயர்ந்த முதல் இரண்டு தலைமுறை வரையிலாவது. மூன்றாவது தலைமுறையில் மாற்று புலத்தில் வேர் நன்றாகவே பிடித்துக் கொண்டுவிடும்.

ஷ்ரேயா, வசந்த், சுவாரசியமான விஷயத்தை சுவாரசியமாக அலசியிருக்கிறீர்கள் இருவரும்.

 

said ... (02 July, 2005 23:30) : 

வசந்தன் நல்ல பதிவு. கட்டயமாகவோ., பொருள் நிமித்தமோ. புலம் பெயர்வுக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் பிறந்த மண்மீது கொள்ளும் பாசம் நம் தாய்மீது கொள்வது. ஷ்ரேயா குறிப்பிட்ட பெண் மணிக்கும் அத்தைகய பரிவு நிச்சயம் இருக்கும். எல்லாம் 'பந்தா'வுக்காக பேசுவது. மூன்றாம் தலைமுறைக்கு முந்திய தலைமுறைகளினும், அதிகம் தாய் நாட்டு ஏக்கம் இருக்கும் என்பது என் கருத்து. பொருள் நிமித்தம் பெயர்ந்தோரில் பெரும்பான்மை தாய் நாட்டிற்கு திரும்பிப் போவதையே முடிவாகக் கொண்டிருக்கின்றனர், நான் அறிந்தவரை., சில புத்திசாலிகளைத் தவிர.

 

said ... (21 July, 2005 00:53) : 

எழுதிக்கொள்வது: ghhgg

fdfdfd

17.22 20.7.2005

 

said ... (01 July, 2007 21:31) : 

வசந்தன்!
உங்கள் கணிப்புத் தான் சரி.
பலர் போகப்போறோம் போகப்போறோம், என்பார்கள்.
ஆனால் பிரச்சனை தீர்ந்தாலும் போகமாட்டார்கள்.
நாலு பேருக்கு முன் நாமும் நாட்டுப்பற்றாளராகக் காட்டுவோம்.
எனும் நப்பாசை.

 

post a comment

© 2006  Thur Broeders

________________