Monday, August 29, 2005

ஆதித்தனார் புத்தக வெளியீடு

இன்று மெல்பேணில் தமிழர் தந்தை ஆதித்தனார் பற்றி சாமி அவர்கள் (ராணி இதழின் ஆசிரியர்) புத்தக வெளியீடு நடைபெற்றது.
மாலை 5.00 மணியளவில் தொடங்கிய இவ்விழாவுக்கு அப்புத்தகத்தை வெளயிடும் புரவலர் அப்துல் அயூப் அவர்கள் வந்திருந்தார். (இவர் மாயவரத்துக்காரர். இவர் பற்றி பதிவின் இறுதியில்).
சுந்தரேசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதலில் ஈகைச்சுடரேற்றல் (இப்படித்தான் அறிவிக்கப்பட்டது) நடைபெற்றது. ஆதித்தனாரின் படத்துக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது. பின் உலகத் தமிழர் பண் இசைக்கப்பட்டது.

சுந்தரேசன் பேசுகிறார். முருகபூபதி, பொன்.சத்தியநாதன், அயூப்.

பின் சுந்தரேசன் அவர்களின் தலைமையுரையைத் தொடர்ந்து ஆதித்தனார் பற்றிய சுருக்கமான குறிப்புக்கள் வழங்கப்பட்டன. பின் பாடுமீன் சிறிஸ்கந்தராசா உரையாற்றினார். அதைத் தொடர்ந்து லெ.முருகபூபதி அவர்கள் புத்தகம் பற்றிய கருத்துரையை வழங்கினார். அதைத் தொடர்ந்து புத்தகம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

புரவலர் அயூப் அவர்கள் வெளியிட மருத்துவர் பொன். சத்தியநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து இன்னுமொரு நூலும் வெளியிடப்பட்டது. தினமணி ஆசிரியராகவிருந்த ஐ.சண்முகநாதன் எழுதிய 'உலக வரலாறு.' புத்தகமது. திருமதி பாலம் லட்சுமணன் அவர்கள் வெளியிட்டு அப்புத்தகம் பற்றிய சிறப்புரையையும் ஆற்றினார். அதன் பின் வெளியீட்டாளர் அயூப் அவர்கள் பேச வந்தார்.

பாலம் லட்சுமணன், சத்தியநாதன், அயூப்.

ஏறக்குறைய அரைமணி நேரம் பேசியிருப்பார். சுவாரசியமான பேச்சு. அவர் ஒரு தொழிலதிபரும்கூட. மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். (மாயவரத்தான் இப்புத்தக வெளியீடு பற்றிப் பதிவிட்டதுக்கும் இதுக்கும் தொடர்பிருக்கமோ?) மாணிக்க வியாபாரி. ‘நம்ம ஊரு சேதி’ என்ற பத்திரிகையை 12 வருடங்களாக நடத்தி வருகிறார். அதைவிட மூன்று கல்லூரிகளையும் நடத்தி வருகிறார். வானவில் ஒலிபரப்பு என்ற ஒலிபரப்பையும் நடத்திவருகிறார். இதைவிட சில புத்தகங்களையும் எழுதியுள்ளார். பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் இவரது ஒரு புத்தகத்துக்காக முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

நிகழ்வுக்கு வந்திருந்தவர்கள் குஞ்சு குருமனுகளையும் சேர்த்து மொத்தம் 28 பேர்தான். அதைப்பற்றிச் சொல்லும்போது இவர்கள் ஒவ்வொருவரும் ஆயிரக்கணக்கானவர்களுக்குச் சமன் என்றார். (நான் வலைப்பதிவதனால் சிலருக்கு இச்செய்தி போய்ச்சேர்கிறதென்பதை அறிந்திருந்தாரோ என்னவோ) ஆதித்தனார் பற்றி, பத்திரிகை நடத்துவதன் சிரமங்கள் பற்றி, பெரியார் பற்றிப் பேசினார்.
பெரியார் சிந்திக்க வைத்தார், ஆதித்தனார் வாசிக்க வைத்தார் என்றார். இன்றும் வந்துகொண்டிருக்கும் கன்னித்தீவு தொடரைப் பற்றிச் சொன்னார். வாசிப்புலகில் தினத்தந்தியின் பங்களிப்பைச் சொன்னார். அரசியலில் தினத்தந்தியின் பங்களிப்பைச் சொன்னார். தாய்மொழிக்கல்வியின் அவசியத்தை அருமையாகத் தெளிவுபடுத்தினார். மேலும் பகுதிநேர வேலை செய்துகொண்டு உயர்தர மாணவர்கள் படிக்கவேண்டிய அவசியத்தை எமது நாடுகளிலும் ஏற்படுத்துவதன் அவசியத்தைச் சொன்னார். இப்படிப் பலவிடயங்களை சுவாரசியமாகச் சொன்னவர், அடிக்கடி இப்படி நிகழ்வுகளை நடத்தவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

அத்தோடு நிகழ்வு நடந்த அரங்கத்தையும் அதன்நேர்த்தியையும் புகழ்ந்து தள்ளியவர், இதுபோன்றதொரு அரங்கத்தை தான் மயிலாடுதுறையில் நிறுவவேண்டுமென்ற அவா தனக்கு இப்போது ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் அதைச் செய்வேன் என்றும் சொன்னார். லெ. முருகபூபதி பேசியபோது ஒரு வேண்டுகோள் விடுத்தார். ஆதித்தனாரின் வாழ்க்கையை ஒரு ஆவணப்படமாக வெளிக்கொணர வேண்டுமென்று. அதை ஏற்றுக்கொண்ட அயூப் அவர்கள், காமராஜ் படத்தைப்பற்றிச் சொன்னார். அப்படியொரு படம் வெளிவந்ததே தனக்குத் தெரியாதென்றும். தற்செயலாக ஒரு இறுவட்டில் கண்டுகொண்டேன் என்றும், அதைப் பார்த்தபோது இவ்வளவு அருமையான முயற்சி சரியான விளம்பரமின்றி அமுக்கப்பட்டதாகத் தான் கருதியதாகச் சொன்னார். காமராஜர் தந்த இலவசக்கல்வியால் தான் இவ்வளவுதூரம் வந்தேனென்றும் இல்லாவிட்டால் நிலமை வேறாகத்தான் இருந்திருக்குமென்றும் நன்றியோடு காமராஜரை நினைவுகூர்ந்தார்.

நன்றியுரை: சுஜாதா.

விழா முடிய சிலர் உடனேயே வெளியேறினார்கள். மீதியாயிருந்த 15 பேர் பக்கத்திலிருந்த ஓர் உணவு விடுதிக்குச் சென்று இராப்போசனம் உட்கொண்டோம். பின் இனிதே விடைபெற்றோம்.


விழாவுக்கு மக்கள் குறைவாக வந்ததுக்கு பல்வேறு காரணங்களுண்டு. பத்திரிகையில் மட்டுமே விளம்பரம் கொடுத்திருந்தார்கள். நூல் வெளியீட்டுவிழாவுக்குப் பொதுவாக மக்கள் குறைவாகத்தான் வருவார்கள். அதுவும் எழுதியவர் கலந்துகொள்ளாத ஒரு நிகழ்வு. மேலும் தமிழகத்தோடு சம்பந்தப்பட்டதாகவே இந்நிகழ்வு கருதப்பட்டிருக்கக்கூடும். (ஆனால் பங்குகொண்டவர்கள் பேசியவர்களில் நால்வரைத் தவிர மிகுதியானவர்கள் ஈழத்தமிழர்களே) பலருக்கு ஆதித்தனார் யார் என்பதே தெரியாது. அத்தோடு இயல்பாகவே தமிழ்ச் சங்கங்களுக்குள்ளும் (பெரீஈஈய சங்கங்கள். நாலுபேர் சேந்தா ஒரு சங்கம்) அமைப்புகளுக்குள்ளும் இயல்பாக இருக்கும் குழு மனப்பான்மையும் காரணம். சாதாரணமானவர்கள் வராதது பிரச்சினையில்லை. இலக்கியத்துடன் தொடர்புள்ளவர்கள் எழுத்தாளர்கள், (இதற்குள் முற்போக்கு எழுத்தாளர்கள் என்றும் அவர்களின் அமைப்புக்குப்பேர்) கூட தெரிந்தும் வராமலிந்தது வருந்தத்தக்கது. ஆனால் விசாரித்த அளவில் இது ஆண்டுக்கணக்காக நடக்கும் பனிப்போர் என்று புரிந்தது. அவன் போகும் நிகழ்வுக்கு நான் வரமாட்டேன் எனச் சொல்லித்திரிவது சர்வசாதாரணம்.

வந்திருந்த கூட்டம்.

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"ஆதித்தனார் புத்தக வெளியீடு" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (29 August, 2005 01:01) : 

எழுதிக்கொள்வது: mayavaraththAn

யப்பா.. இவ்வளவு விரைவாக புகைப்படங்களுடன் ஒரு பதிவா? சூப்பர் தான்!

/வானவில் ஒலிபரப்பு../

அது ஒளிபரப்பு சார்..

22.26 28.8.2005

 

said ... (29 August, 2005 07:00) : 

காமராஜர் தந்த இலவசக்கல்வியால் தான் இவ்வளவுதூரம் வந்தேனென்றும் இல்லாவிட்டால் நிலமை வேறாகத்தான் இருந்திருக்குமென்றும் நன்றியோடு காமராஜரை நினைவுகூர்ந்தார்.
!!!!!????

 

said ... (30 August, 2005 17:35) : 

மாவரத்தான்,
தவறைச் சுட்டியதற்கு நன்றி.
ஒலிபரப்பு என்பதைப்போல்தான் காதில் விழுந்தது.
அதுசரி, அயுப் அவர்களைத் தெரியுமா? பழக்கமா? 'எங்க ஊரு சேதி' எப்படி? ஒன்றும் சொல்லவி;ல்லையே?

அநாமதேயமே,
நீங்கள் என்ன கேட்கிறீர்களென்று புரியவில்லை. அந்தப் பத்தியில் எதாவது புரியாமலிருக்கிறதா?

 

post a comment

© 2006  Thur Broeders

________________