சனத்தொகை பெருக்குவோம்.
சுனாமி அவலங்கள் முழுவதும், ஏன் முதற்கட்டம் கூடத் தீர்க்கப்படாத நிலையில் எதிர்காலத்தில் எழப்போகும் மிகமுக்கிய பிரச்சினையைப் பற்றிப் பேசப் போகிறேன். இச்சுனாமி ஒப்பீட்டளவயில் மிகஅதிகமான தமிழர்களைக் காவு கொண்டுள்ளது. இலங்கையிற் பாதிக்குட்பட்டதிற் பெரும்பகுதி தமிழர் தாயகப் பகுதியேயாகும். (இலங்கைக் கடற்கரையில் மூன்றில் இரண்டு பகுதி தமிழர் தாயகப் பகுதியிலேயே உள்ளது) இது போலவே தமிழகத்திலும் ஏராளமான தமிழர்கள் இறந்துள்ளார்கள். இந்நிலையில் நான் இனி கதைக்கப்போவது ஈழத்தமிழர் பற்றியே. ஏனெனில் சனத்தொகை விடயத்தில் தமிழகத் தமிழர்கள் இந்திய நிலைப்பாட்டிலிருந்து மாறப் போவதில்லை. அதற்கான தேவையும் அவர்களுக்கு இல்லை. (அதாவது சனத்தொகை அடிப்படையில் தமது இருப்பை நிச்சயப்படுத்தல்) ஆனால் ஈழத்தமிழரின் நிலை முற்றிலும் வேறானது. அவர்களின் இருப்பு அவர்களின் எண்ணிக்கையிற் பெருமளவு தங்கியுள்ளது, முக்கியமாக அவர்களின் சொந்த நகரங்களில். இப்போது நடக்கும் பாராளுமன்ற அரசியலில் இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். கடந்த தேர்தலில் ஏறத்தாள தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒரே கட்சிக்கு வாக்களித்தும் கூட வெறும் 22 பாராளுமன்ற ஆசனங்களே தமிழர் தேசியக்கூட்டமைப்புக்குக் கிடைத்தன. 100 சதவிகித வாக்குகள் இக்கட்சிக்குக் கிடைத்திருந்தாற் கூட மேலும் ஒன்றோ இரண்டோ ஆசனங்கள் மட்டுமே கிடைத்திருக்கும். 225 ஆசனங்களைக்கொண்ட சிறிலங்காப் பாராளுமன்றத்தில் இத்தொகை 10 வீதம் கூட இல்லை. உண்மையில் பாராளுமன்றத்தில் காத்திரமான தாக்கம் எதையுமே ஏற்படுத்த முடியாத எண்ணிக்கைதான் இது. இதுதான் இன்றைய தமிழரின் பாராளுமன்ற அரசியல் நிலை. திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மூலம் ஆட்சியாளர்கள் தாம் நினைத்தவற்றிற் பெருமளவு சாதித்துவிட்டார்கள். எனவே தமிழர் தாயகத்தில் தமிழரின் சனத்தொகை வீழ்ச்சியென்பது அவர்களுக்கு மிகப்பெரும் பின்னடைவு என்பது வெள்ளிடை மலை. ஏற்கெனவே தமிழரின் இனப்பரம்பல் போரினால் மிகப்பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இதிற் பெரும்பங்கு இளைய சமுதாயமேயாகும். யுத்த வன்முறையிற் கொல்லப்பட்டவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு மடிந்தோரும் பெருமளவில் இளையோரே. இக்காரணத்தாற் சனத்தொகைப் பெருக்கத்தில் ஏற்பட்ட பெரும் வீழ்ச்சி, தற்போது ஏற்பட்ட இச்சுனாமி அனர்த்தத்தால் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இறந்த மக்களின் தொகை ஒருபுறமிருக்க இறந்த இளந்தலைமுறையைப் பற்றி யோசிக்கையில் மிகப்பெரும் சவாலொன்று எம்முன் எழுந்து நிற்கிறது. ஏராளமான குழந்தைகளும் சிறுவர்களும் இறந்துள்ளார்கள். சிலவருடங்களின் பின் ஏற்படப்போகும் வெற்றிடமொன்று பயமுறுத்துகிறது. இப்போதுள்ள பிறப்புவீதம் சில வருடங்களில் இன்னும் சடுதியாக வீழும் என்றே தோன்றுகிறது. இந்நிலையில் ஈழத்தமிழினம் என்ன செய்யப் போகின்றது? அவர்களுக்கு நாம் என்ன செய்யப்போகின்றோம்? இந்நேரத்தில் வெறும் பொருளுதவியால் மட்டும் அங்குள்ளவர்களுக்கு உதவிசெய்தாற் போதாது. (இனி நான் சொல்லப்போவது முட்டாள்தனமாகவும் நகைப்புக்கிடமாகவும் சிலருக்குத் தோன்றலாம்) இயன்றவரை சனத்தொகைப் பெருக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். ஈழத்தில் எவ்வளவு தூரம் இது சாத்தியமென்று தெரியவில்லை. வசதி படைத்தவர்கள் இதிற் கவனமெடுக்க வேண்டும். குறிப்பாகப் புலம் பெயர்ந்த குடும்பங்கள், ஆழிப்பேரலையாற் கொல்லப்பட்ட மக்களின் பேரால் ஒரு குழந்தையாவது பெற்றுக்கொள்ள முன்வர வேண்டும். (ஏற்கெனவே நீங்கள் திட்டமிட்டிருந்ததை விட). இன்றைய நிலையில் ஈழம் வெறும் பொருளை மட்டுமன்று, ஒரு நேரத்தில் திரும்பிவரும் பெரும் மக்கட்கூட்டத்தையும் புலம் பெயர்ந்தவர்களிடம் எதிர்பார்த்திருக்கிறது. இக்கருத்து பல மட்டங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டும். பலருக்கு இதில் உடன்பாடின்மை இருக்கலாம். எப்படியாயினும் உங்கள் கருத்தை இதிற் பதியவும். அல்லது உங்கள் வலைப்பக்கத்திலாவது பதியவும். தமிழகத்தைப் பற்றிக் கூறாமைக்கு ஏற்கெனவே காரணம் கூறி விட்டேன். ஆறு கோடிப் பேரில் இறந்தவர்களின் வீதம் மிகச்சொற்பமே. ஆனால் சில இலட்சங்களே உள்ள ஈழத்தவர்களில் இத்தொகை பெரும் விழுக்காடாகும். முல்லைத்தீவில் இறந்தவர்களின் தொகை அம்மாவட்ட சனத்தொகையில் 3.5 வீதம் எனக்கூறப்படுகிறது. என்னடா இவன் இந்தச் சோகத்தில் வெறும் எண்ணிக்கையையும் வீதத்தையும் பற்றிக் கதைத்துக்கொண்டிருக்கிறானென்று யாரும் சண்டைக்கு வராதீர்கள். நான் சொல்ல எடுத்துக்கொண்ட விடயம் அப்படி. கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்த்து... ஆ.வசந்தன். Labels: ஈழ அரசியல், விவாதம் |
"சனத்தொகை பெருக்குவோம்." இற்குரிய பின்னூட்டங்கள்
அன்பின் வசந்தன்,
நான் தமிழகத்தவனாகையால் ரொம்பவும் விஷயத்தினுள் போகவில்லை. நீங்கள் சொல்வது போல ஒரு பிரச்சனை இருக்கிறது. அது குறித்து யோசிப்பது அவசியம் என்றாலும், உங்கள் தீர்வில் வேறு சில பிரச்சனைகள் இருக்கிறது. அதாவது ஈழத்தில் நீங்கள் வலியுறுத்தும் ஜனத்தொகை பெருக்குவது ஒவ்வொருவருக்கும், அதுவும் இந்த பேரழிவுக்கு பின், பொருளாதார பிரச்சனையாகும். புலம் பெயர்ந்தவர்களிடத்தில், 'ஒரு நேரத்தில் திரும்பிவரும் பெரும் மக்கட்கூட்டத்தையும்' எதிர்பார்ப்பது சாத்தியமானதாக தெரியவில்லை. அந்த ஒரு நேரம் எப்போது வரும் என்பதெல்லாம் இருக்கட்டும், இப்படி கூட்டான ஒரு யோசனைக்கு மக்கள் கூட்டமே உடன்படுவது, அப்படி திரும்பி வருவது எல்லாம் யூதர்கள் போன்ற ஒரு உட்புரிதல் உள்ள சமூகத்திலேயே சாத்தியம். ஆங்காங்கே சில ஈழதமிழர்கள் 'நாங்கள் யூதர்கள் போல' என்று சொல்வதை காற்றின் போக்கில் கேட்டிருக்கிறேன்.கொஞ்சம் பயமாகவும் இருக்கும், என்றாலும் ஈழசமுதாயம் யூதசமுதாயம் போன்றது அல்ல என்றே தோன்றுகிரது.