ஆதி மனிதர்களாய்...
வணக்கம். புதுவருடத்திற் காலடியெடுத்து வைத்துள்ளோம். வழமைபோல் வாழ்த்துச் சொல்ல முடியவில்லை. இருண்ட ஓர் ஆண்டாகவே நமக்குத் தொடங்கியுள்ளது. புறக்கணிக்கப்பட்ட பிரதேசங்கள் பற்றிய தகவல்கள் படிப்படியாக ஊடகங்களில் இடம்பெறத் தொடங்கியுள்ளன. சுனாமியின் அலைகள் கரையைத் தாக்கும் காட்சிகளைப் பார்க்கும்போது “The day after tomorrow” எனும் படத்தின் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. அப்படத்தில் அலைகள் ஆர்ப்பரித்து ஊருக்குட் புகும்போது மக்கள் பதறியடித்து ஓடுவது கண்ணுக்குள் நிற்கிறது. அக்காட்சியைப் போலவே நிஜமாக நடந்துள்ளது. படப்பிடிப்பின்போது அப்படத்தின் இயக்குநர் சொன்னதாக அறிந்தேன், “இவையெல்லாம் நிஜமாக நடப்பதற்குள் படத்தை முடித்து விடவேண்டும்.” நிற்க, இவ்வனர்த்தம் மக்களை எங்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது? இலங்கையின் வடக்குக் கிழக்கைப் பொறுத்தவரை அவர்கள் யுத்த அனர்த்தங்களின் போதுகூட இப்படி இடிந்து போய்விடவில்லை. சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து ஓடியபோதுகூட வாழ்க்கை அவர்களுக்குச் சூனியமாய்த் தெரியவில்லை. குண்டுவீச்சு விமானங்கள் பேரிரைச்சலோடு வானில் வட்டமடிக்கும் போதுகூட அதை வேடிக்கை பார்த்திருக்கும் சிறுவர்களையும் குழந்தைகளையும் பார்த்திருக்கிறேன். “இப்பிடிச் சுத்தினால் எப்பிடி அடிப்பான், இப்பிடிக் குத்தினால் எங்க போடுவான்” என்றெல்லாம் அவர்களுக்குத் தெரிந்திருந்தன. ஆனால் சுனாமியின் தாக்கம்?... இன்று நீரைக்கண்டாலே அலறியடித்தோடும் தன்மை; இயற்கையின் முன் மிரண்டு பயந்து ஒடுங்கிப் போகும் மனோநிலை; கிட்டத்தட்ட ஆதிமனித இனம் போல் ஆகிவிட்டோம். எனக்கென்னவோ சரிபோலவும் தோன்றுகிறது. பேசாமல் எல்லா சாமிகளையும் ஒருபுறம் வைத்துவிட்டு, வான் நெருப்பு கடல் காற்று என நாம் பயப்படுவற்றையே கடவுளாக்கி வழிபடவேண்டியது தான், அந்த ஆதிமனிதர்கள் போல. Labels: செய்தி, மக்கள் துயர் |
"ஆதி மனிதர்களாய்..." இற்குரிய பின்னூட்டங்கள்